- நேர்காணல் : டொமினிகோ அட்டியன்ஸ்
ஹலோ கௌதமா, என்னுடைய நிலத்திற்கு உங்களை வரவேற்கிறேன். முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள். நீங்கள் யார்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? முக்கியமாக நீங்கள் ஏன் எழுத்தாளராக வருவதற்கு முடிவு செய்தீர்கள்?
இடாலோ கால்வினோவின் நிலத்திலிருந்து என்னை வரவேற்று என் எழுத்துக்களைக் கொண்டாடும் உங்களுக்கும், இத்தாலிய SF வாசகர்களுக்கும் முதலில் தமிழ் மொழி சார்பாக நன்றி. என்னைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், முதன்மையாக நான் ஒரு Fiction Writer. கடந்த 30 வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் எழுதிக்கொண்டிருப்பவன். இதுவரை என் நூல்கள் 5 சிறுகதை தொகுப்புகள், 9 கட்டுரை தொகுப்புகள், 1 கவிதை தொகுப்பு என 15 நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. இதில் SF விமர்சன நூலான ” Political travails of Time travel ” இத்தாலி உட்பட உலகின் பலமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு SF வாசகர்கள், விமர்சகர்கள் இடையே பெருமளவில் கவனம் பெற்று வருகிறது. கவிதைகளும் தற்போது பல மொழிகளில் மொழியாக்கமாகி வெளிவந்துள்ளன.
எனக்கு ஆரம்பத்திலிருந்தே சர்வதேச இலக்கியங்களின் மீது தீராதமோகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், ஆங்கிலத்தில் எழுதுவதற்கான போதிய பயிற்சி இல்லாததால் மொழிபெயர்ப்புகளையே நாடவேண்டியிருந்தது. பல நாடுகளின் இலக்கியங்களை தேடித்தேடி படிப்பேன். சர்வதேச இலக்கியப் போக்குகளின் தன்மை என் எழுத்தில் தீவிரமாக ஊடுருவிற்று. அப்படியாக என்னை தீவிரமாக பாதித்தவர் இடாலோ கால்வினோ! அவரது நாவல்களை வெறிபிடித்தவன் போல படித்தேன். குளிர்கால இரவில் ஒரு பயணியை படித்துவிட்டு, அவர் எழுதிய 21 அத்தியாயத்திற்கு அடுத்தபடியாக நான் ஒரு அத்தியாயம் (22 வது அத்தியாயம் ), எழுதினேன் (தமிழில்). நண்பர்கள் பெரிதும் பாராட்டினார்.
ஆனால், நான் ஆங்கிலத்தில் எழுதுவதற்கான தருணம் வாய்க்கவில்லை. மேலும், பெரிய இலக்கிய ஆளுமைகள் செயல்பட்ட ஆங்கில தளத்தில், போதிய மொழிப்பயிற்சி இல்லாத நான், என்ன செய்துவிட முடியும் என்ற தயக்கம்.
என் தயக்கத்தை முதன்முதலில் உடைத்தவர் என் மொழிபெயர்ப்பாளர் மஹாரதி! தீவிர உலக இலக்கிய வாசிப்பு கொண்டவர்! என் எழுத்தில் உள்ள சர்வதேசத் தன்மையை உணர்ந்து என்னை உற்சாகப் படுத்தினார். முதலில் nonfiction எழுதுங்கள், பிறகு Fiction எழுதலாம் என்று உசுப்பேற்றினார்.
அப்படி எழுதப்பட்ட கட்டுரைதான் ‘A Show on Future Weapons: Discovering hidden politics’ . இது டிஸ்கவரி சேனல் நடத்தும் Future Weapons பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை. இது உலகின் புகழ்பெற்ற பாப்புலர் பத்திரிகையான Truth out இதழில் வெளிவந்தது எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி தொடர்ந்து, இந்தக்கட்டுரை 100 க்கும் மேற்பட்ட இணைய இதழ்களில் Share செய்யப்பட்டு உலகம் முழுக்க வைரலாகப் பரவியதில், என் உடல்முழுக்க விர்ர் என்று ஜுரம் ஏறியது. சம்பந்தப்பட்ட டிஸ்கவரி சேனல் இது சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட links – ஐ dissable செய்து வைக்குமளவிற்கு புகழ் அடைந்தது கட்டுரை.உலகளாவிய முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும், ஊடகவியலாளர்கள், போர் எதிர்ப்பாளர்கள், அமைதிப் போராளிகள், மனித உரிமையாளர்கள், கலை இலக்கியவாதிகள் என, எவருக்குமே இந்த ‘Future Weapons’ நிகழ்ச்சியில் உள் மடிப்புகளாக சொருகி வைக்கப்பட்டிருக்கும் நுண்ணரசியல் உணராமல், ஒரு சாதாரண எளியவனான நான் அதை உணர்ந்து முன்வைக்கிறேன் என்றால், சர்வதேச அரங்கில் நான் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன என்று உற்சாகம் அடைந்தேன்.ஆனால், நான் செய்த பெரிய தவறு என்னவென்றால், அந்தக் கட்டுரையை மேலும் பல இணைய இதழ்களுக்கு அனுப்பி வைத்ததுதான். இது Truth out க்கு பிடிக்கவில்லை. ஆகையால் அதன் பிறகு எந்தக் கட்டுரையையும் அவர்கள் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள்.
அதன்பிறகு நான் தீவிரமாக எழுதிய சர்வதேச விஷயங்கள் எதுவும் பெரிய இதழ்களில் வெளிவரவில்லை. பெரிதும் எதிர்பார்த்த Nobel Prize Politics கட்டுரை ரஷ்யாவின் புகழ்பெற்ற pravda இதழில் வந்தது ஒரு சிறு ஆறுதல்!
உலகமே கொண்டாடிய டிஸ்கவரி சேனல் கட்டுரை குறித்தோ, அதன் வைரல் குறித்தோ என் தாய்த்தமிழ் ஊடகங்களில் ஒரு சிறு அளவில் நான்குவரிச் செய்தி கூட வராமல் போனது பெரும் Irony!.
இந்த இடத்தில் எங்கள் தமிழ்ச் சூழல் குறித்து சுருக்கமாக. தமிழ் சினிமாவில் கதை வசனம் எழுதுபவர்களைத்தான் சிறந்த எழுத்தாளன் என்று கொண்டாடும் போக்கு கொண்டது எங்கள் தமிழ்ச் சூழல். பாப்புலர் பத்திரிகைகள், இலக்கிய பத்திரிகைகள் எல்லாமே இந்தவிஷயத்தில் ஒன்றுதான். மேலும், மேலோட்டமான பார்வை. குறுங்குழுவாதம் கொண்ட அருவருப்பான போக்குகள் இலக்கிய இதழ்களில் முதன்மையாக இருக்கிறது. இந்தச் சூழலில் ஒட்டாமல் தீவிர இலக்கியப் பார்வையுடன் தனித்து செயல்படும் நான், தமிழ் ஊடகங்களைக் கண்டுகொள்வதில்லை!
உங்கள் எழுத்து பின்னணி சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் sci-fi விமர்சன நூல் வெளி வந்து சிறு கவனம் பெற்றிருக்கிறது. எவ்வாறு sci-fi தளத்தை நோக்கி நகர்ந்தீர்கள்? Sci-fi என்றால் உங்கள் பார்வையில் என்ன?
நான் மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவன். என் அப்பா புராணக் கதை சொல்லி ! இந்தியப்புராணங்கள் மட்டுமல்லாது நாட்டுப்புறக் கதைகளையும் சுவாரஸ்யமாகச் சொல்பவர். அவரது நாட்டுப்புறக் கதைகளில் அதிகமாக speculative தன்மை இருக்கும். எங்கள் தோட்டங்களில் வெள்ளரிப்பழம் திருடித் தின்ன வரும் நரியைத் தடுக்க அதன் திசையில் மூன்று கூழாங் கற்களை எடுத்து வீசிவிட்டால் போதும் என்று கதை சொல்வார். கதை கேட்கும் சின்னப்பையனான நான், “அந்தக் கற்களில் எங்கள் நாய் சின்னசைஸில் போய் உட்கார்ந்து கொண்டு காவல் காக்கும்” என்று நினைத்துக் கொள்வேன். அவரது கதைகள் என் சின்ன வயது பிரபஞ்சத்துள் பல்வேறு விதமான காட்சிகளை உருவாக்கி கொண்டே இருக்கும்.
ஆனால், அதன்பிறகு, எங்கள் தமிழில் செயல்பட்டுக் கொண்டிருந்த யதார்த்தவாத அரசியல் கோட்பாட்டாளர்கள் தொடர்பினால் அந்த பிரபஞ்சத்தையே உதறிவிட்டு யதார்த்தவாதத்தில் கவனம் செலுத்தினேன். எந்தவிதமான பரிமாணங்களுமற்ற தட்டையான அந்தப் பார்வை எனக்கு சற்றைக்கெல்லாம் போரடித்துவிட்டது. காரணம் : கார்ஸியா மார்க்வெஸ் ! அவரது One Hundred Years of Solitude எனக்குள் பல சாளரங்களை திறந்துவிட்டது.
என் அப்பா, எட்டுக் கற்களை வைத்து குறிசொல்லும் நாட்டுப்புறக் குறிசொல்லும் மாந்தீரிகர். முத்தேழ் என்ற பெயர் கொண்ட இந்த முறை, டேரட் கார்டுகளை போன்ற ஒரு குறிசொல்லும் முறை. யதார்த்தவாதக் கோட்பாட்டின் ஆழ்ந்த தாக்கத்தினால், இந்த அற்புதமான மரபை மூடநம்பிக்கை என்று கிண்டலடிக்க வைத்த என்னை Magical speculative ஐ நோக்கி மீட்டெடுத்ததில் முக்கியமான பங்கு மார்க்வெஸுக்கு உண்டு.
மேலும், அந்தக்கட்டத்தில் நான் தேடிதேடிப் பார்த்த 2001: A Space Odyssey Close Encounters of the Third Kind, Star wars போன்ற Sci-fi ஹாலிவுட் சினிமாக்கள் என் சிந்தனைப்போக்கை Sci-fi தளத்தை நோக்கி திசை திருப்பின. அதிலும் எங்கள் சிறிய நகரத்தில் Sci-fi Action படங்கள்தான் நிறைய பார்ப்பதற்கு கிடைத்தன. அதில் மிகவும் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியது Tron என்கிற படம். இன்னும் நிறைய சொல்லலாம். ஒருகட்டத்தில் பாப்புலர் Sci-fi பார்வையிலிருந்து சீரியஸ் Sci-fi பார்வையை நோக்கி நகர்த்திய முக்கியமான படம் Andrei Tarkovsky யின் Solaris! அந்தக்கட்டத்தில்தான் அறிமுகமாகியது Back to the Future படம். அதனுடைய Trilogy DVD களை வாங்கி பைத்தியம் பிடித்தவன் போல திரும்பத் திரும்பப் பார்த்தேன்.
என் அப்பா எனக்குச் சொன்ன புராணக்கதைகளில் புஸ்பக விமானத்திலேறி மூன்று உலகங்களுக்கும் பயணம் போகும் தேவ குமாரனின் Travel -ம், Robert Zemeckis நிகழ்த்திய Time travel – ம், எனக்குள் பல்வேறு பரிமாணங்களை நிகழ்த்தின. Time travel என்கிற concept மீது எல்லையற்ற பைத்தியமானேன்.
அந்தக்கட்டத்தில் நான் எழுதிய சிறு கதை “Traveling Trees” . ஒரு குறிப்பிட்டவகை இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் போவதற்கு மரங்களில் பயணம் செய்வார்கள். அதாவது, ஒரு இடத்தில உள்ள ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த ஒரு மரத்தில் நுழைந்து மற்றொரு இடத்தில உள்ள மரத்தின் வழியாக வெளியே வருவார்கள். இந்த பயணத்தில் நடக்கும் குளறுபடிகளை வைத்து எழுதியிருந்தேன். என் நண்பர் சிங்காரவேலன் அதைப் படித்துவிட்டு “அஸிமோவ் கதையைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது” என்றார். நான் தலை சுற்றி ஆடிவிட்டேன்.
தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச Sci-fi எழுத்துக்கள் குறித்த ஆர்வத்தில் அந்தச் சிறுகதையை எடுத்து நாவலாக விரித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்!
புனைவு மற்றும் கட்டுரைகள் எழுதுவதற்கு உங்களுக்கு inspiration ஆக இருக்கும் எழுத்தாளர்கள் யார்?
முதன்மையாக போர்ஹேஸ்! மற்றும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்தான்! லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் வெடிப்புக்கும், எங்கள் நாட்டுப்புறக் கதைகளின் சுழற்சிக்கும் ஒரு ஒத்த தன்மை இருப்பதை உணர்ந்தேன். ஆக, என் ஆதர்சமாக லத்தீன் அமெரிக்க எழுத்துக்களை வரித்துக் கொண்டேன்!
மற்றபடி nonfiction பற்றி சொல்ல வேண்டுமானால், நிறைய இருக்கிறது.
கடந்த 20 வருடங்களில் பின்நவீனத்துவ அலை வெடித்துக் கிளம்பி உலகம் முழுக்க உள்ள ஒவ்வொரு மொழியையும் பாதித்தது. வழக்கம்போல தமிழ் மொழியையும். ஆனால், தமிழில் பின்நவீனத்துவக் கோட்பாடுகள் தப்பும் தவறுமாகவே அறிமுகமாயின. எளிய வாசகனை பயமுறுத்தல், யாருக்கும் புரிபடாமல் எழுதுதல், சமூகப் பிரக்ஞையற்று கைக்கு வந்ததை எழுதுதல் என்று auto fiction, meta fiction, collage fiction என்று தாங்கள் புரிந்து கொண்டதை வைத்து கண்டமேனிக்கு ஆளாளுக்கு அள்ளிவிட்டார்கள். தமிழில் “பின்நவீனத்துவம்” என்ற கோட்பாடு, பெரும் குழப்பமாக செயல்பட்டது. இதை சரிசெய்ய வேண்டி, பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின் மூலப் படைப்புகளை தமிழில் கொண்டுவரவேண்டும் என்று நான் களத்தில் இறங்கினேன்.
Ferdinand de Saussure லிருந்து, Lévi-Strauss, Barthes, Derrida, Foucault, Lacan, Baudrillard.. என்று 50 பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களின், தங்களது சிந்தனைப்பார்வைகளை முன்வைக்கும் கோட்பாட்டுக் கட்டுரைகளை தொகுத்தேன். அந்தக்கட்டத்தில் என் சிந்தனையோட்டம் முழுக்க பின்நவீனத்துவக் கோட்பாட்டின் பார்வை வெகு ஆழமாக இறங்கியது. என் பார்வைகள் பல்வேறு பரிமாணங்களில் மலர்ச்சியடைந்தன. அதுவும், Deleuze – Guattari யின் Rhizome பெருமளவில் பாதித்தது.
இந்த ரசாயன மாற்றத்தில்தான் சமூகம் மற்றும் கலை இலக்கியம் சார்ந்த nonfictions எழுத ஆரம்பித்தேன்.
உங்களுடைய புதிய கட்டுரை யான “Political travails of Time travel ” என்கிற கட்டுரையை எதற்காக எழுத முடிவு செய்தீர்கள்? எது இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது?
பொதுவாகவே உலகம் முழுக்க பெருமளவில் காலங்காலமாக வரலாற்றுத் திரிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் இந்த வேலையை மதங்கள் செய்து கொண்டிருந்தன. தற்போது அதிகாரத்தில் உள்ள அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன.
இந்தத் திரிப்புகள் மூலம் பல்லாயிரம் வருட வரலாறுகள் தலைகீழாகத் திரிந்து, எதிர்வரும் இளம் தலைமுறைக்கு போலியான வரலாறுகளே நிஜ வரலாறுகளாக போய்ச் சேரும் அபாயம் உருவாகிறது! தமிழின் தொன்மையான வரலாற்றில் சமணர்கள் என்னும் ஒரு தொல்குழுவினரை மத நிந்தனை செய்ததாக கழுவிலேற்றப்பட்டது வரலாறு! (கழு என்பது ஒருவகை மரணதண்டனை கருவி. ஒரு நபரை கூரிய ஈட்டி போன்ற ஆயுதம் கொண்ட நாற்காலியில் அமரவைத்து இயக்கினால், அது நபரின் புட்டத்தை துளைத்து வாய்வழியாக வெளியேறி நிற்கும் ஈட்டி போன்ற கருவி.) சமீபத்தில் ஒரு ஆய்வாளர், அப்படி ஒரு விஷயமே நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று வாதம் செய்தார்.
இப்படியான வேலைகளை அரசு அதிகார பிரக்ஞை கொண்டவர்கள் தங்களது கலை இலக்கியம் சார்ந்த பார்வையில் புராணிகத் தன்மையுடன் மிக நேர்த்தியாகச் செய்து கொண்டிருக்கின்றனர்! நாட்டார் மரபுகளின் தொன்மங்களிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் இரண்டறக்கலந்திருக்கும் சமூகத்தை தனது கைப்பிடிக்குள் கொண்டுவரும் அரசியலாக இந்தத் திரிப்பு வேலைகள் செயல்படுவதை, புராணிகத்திற்கும் நிஜத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கும் மானுடவியல் ஆய்வாளரான லெவி ஸ்ட்ராஸின் பார்வையின் மூலம் நுட்பமாக உணரலாம்.
இங்கு எங்கள் நாட்டில் செழுமை மிக்க நாட்டார் மரபுகளும், பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரங்களும் அதிகாரத்திற்கு எதிரானவை! ஆனால், அந்த நாட்டார் வழக்காற்றியலின் பன்முகத்தன்மையை எவ்வாறெல்லாம் திரித்து தங்களது அதிகாரம் சார்ந்த மத பிம்பத்தோடு பொருத்தி, அதன் தன்மையை தங்களுக்குள் கபளீகரம் செய்து கொண்டார்கள் என்பதை கட்டுரைகளில் சொல்லவேண்டும் என்று nonfictions -ல் கவனம் கொண்டேன்.
எங்களது சுதந்திரமான நாட்டுப்புற சிறு தெய்வங்கள் அதிகார மதம் சார்ந்த பெரும் தெய்வங்களுக்குள் திரிந்தன. நாட்டார் மரபு சார்ந்த பல்வேறு இறை பிம்பங்கள், தங்களது அதிகார மத பிம்பங்களாக திரிந்து கொண்டே இருக்கின்ற துயரம் ஒரு நாட்டுப்புறத்தானான எனக்கு பெரும் அறச் சீற்றத்தை ஏற்படுத்தியது.
இதன் நீட்சியாக இந்திய அடையாளங்களில் முக்கியமான காளியை இங்கு நினைவு கூறலாம். நாக்கை நீட்டிக் காட்டும் இந்த ஆவேச உருவகம் குறித்து பல்வேறு தத்துவக் கருத்தாடல்கள் இந்தியா முழுவதும் வேரூன்றியுள்ளன. வங்க இலக்கியங்களில் எண்ணற்ற படிமங்களாக விரிபடும் காளியின் நாக்கு அந்த மண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறது. காளியின் நாக்கு என்பது ‘மெய்துணிவின் சின்னம்’ என்று வியக்கிறார் புராணவியல் அறிஞரான தேவ்தத் பட்நாயக். ‘வெறும் ஆவேசமாக மட்டுமே பார்க்காமல், இயற்கையுடன் இணைந்து வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் எதிர்கொள்ளும் மெய்துணிவாகக் கொள்ளலாம்’ என்கிறார் அவர் (கல்கத்தாவுக்கு வந்திருந்த Günter Grass, ‘நாக்கை நீட்டிக் காட்டு’ என்ற உருவக ரீதியான பொருள் கொண்ட தலைப்பிலேயே அந்த நகரத்தின் சமூகச்சூழல் குறித்து எழுதியிருக்கிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.) இந்த ஆவேசம் மிக்க நாட்டார் உருவகத்தை திரிக்கும் போக்கை, Times of India (11.11.15) நாளிதழில் South Kolkata breaks away from tradition என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு செய்தி உணர்த்துகிறது. இதுவரை மண்ணின் மரபான காளி தெய்வத்தை பூஜை செய்துவந்த தன்மை மாறி, கல்கத்தாவின் தெற்குப் பகுதியில் ‘சாமுண்டா’ என்னும் சாந்தமான தெய்வத்தை இந்தவருடம் புதியதாக பூஜை செய்யும் போக்கு ஆரம்பித்திருக்கிறது என்கிறது அச்செய்தி. வங்காள மண்ணின் பண்பாட்டு அடையாளமான காளி என்னும் நாட்டார் வடிவத்தின் நாக்கு, இனி மெல்ல மெல்ல சாமுண்டீஸ்வரியின் பெருந்தெய்வ அம்சத்தில் உள்ளடங்கிப் போகும். இப்படிப் பல்வேறு விஷயங்களை சொல்லலாம்.
இந்த இடத்தில் பிரைமோ லெவி யின் Lilith கதை ஞாபகம் வருகிறது. இது போன்ற திரிப்புகளுக்கு எதிராக மறைக்கப்பட்ட விஷயங்களை புலப்படுத்தும் சிறுகதை!
கடவுள் ஆதாமோடு சேர்த்து லிலித்தைப் படைத்தார். கடவுள் தனக்குச் சரிசமம் கொடுக்கவில்லையென்று சண்டையிட்டுக் கொண்டு சாத்தானாக மாறிப் போய்விட்டாள் லிலித். அதன் பிறகுதான் ஏவாளைப் படைத்தார்… என்கிற ரீதியில் நகரும் அக்கதையையும் இங்கு ஒரு எதிர்ப் பார்வையுடன் கணக்கில் கொள்ள வேண்டும்.
இது போன்ற பல்வேறு சிந்தனைகளினூடாகத்தான் என் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.
ஒரு Time travel செய்துதான் இங்கு வரலாற்றில் திரிக்கப்பட்ட விஷயங்களின் நிஜங்களை அறிந்து கொள்ள முடியும் என்று யோசித்திருக்கிறேன், அப்படியான பயணத்தின் மூலமாக இந்த வரலாற்றுத் திரிப்புகளை சரி செய்ய இயலாதா என்று பலநாட்களாக ஏங்கியதன் விளைவுதான் இந்த நூல்…
எதற்காக இந்த இரண்டு கதைகளையும் உங்கள் கட்டுரைக்காக தேர்வு செய்தீர்கள்?
இந்த இரண்டு கதைகளும் Sci-fi கதைகளிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இரண்டையும் ஒரே மூச்சில் படிக்கும்போது அதனுடைய அக தரிசனத்தின் பரிமாணமும், புறத் தோற்றத்தின் தர்க்கமும் வாசகனுக்குள் ஒரு உள்முகப் பயணத்தை உருவாக்கிக் கொடுக்கும்.
பெருவாரியான Sci-fi கதைகளின் அடியோட்டமாக Time travel தான் இருக்கும். H. G. Wells ஆரம்பித்து வைத்த இந்தப் பாரம்பரியம், பல்வேறு பரிமாணங்களில் வேர் விட்டுக் கொண்டிருக்கிறது என்பதை, தொடர்ந்த வாசிப்பு கொண்ட Sci-fi கதைகளின் வாசகன் உணர்ந்து கொள்ள முடியும். Time travel குறித்து எழுதாத Sci-fi எழுத்தாளர்களே இல்லையென்று சொல்லி விடலாம். ஹாலிவுட் Sci-fi திரைப்படங்களில் இந்த Time travel என்கிற விஷயம் க்ளிஷேவாகவே மாறிப் போயிற்று. Robert Zemeckis -ன் Back to the Future – Trilogy இந்த பாணியில் மிக முக்கியமானவை.
பிராட்பரியும் பெஸ்டரும் இதே காலப்பயணம் குறித்த விஷயத்தைத்தான் தங்களது கதைகளில் எடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவை முக்கியம் பெறுவதற்கான காரணம், அதற்குள் chaos theory யை எடுத்து வைத்து தங்களது தனித்துவமான பார்வையை இருவரும் எதிரும் புதிருமாக தர்க்கபூர்வமாக முன்வைக்கிறார்கள்.
பிராட்பரியின் உலகம் chaos theory யை அழகியல் பூர்வமாகவும், காலம் பற்றிய ஆழமான விவரிப்புகளுடனும் முன்வைக்கிறது. பெஸ்டரின் உலகமோ, அதற்கு நேரெதிராக மாறுகிறது. தர்க்கபூர்வமான தடுமாற்றத்தையும், காலவெளியின் தரிசனப் பார்வையையும் முன்வைத்து அதைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இரு வேறு கதையாடல்களும் இருவேறு சாத்தியங்களை வாசகனுக்குள் உருவாக்குகின்றன. அதற்குள் அவனை மயக்கிப் போடுகின்றன. இந்த சாத்தியங்களை முன்வைத்து நமது வாழ்வியல் வெளிகளையும் சுழட்டிப் போடுகிறார்கள்.
இவ்வளவு சுவாரஸ்யத்தோடு மட்டுமே இந்தக் கதைகள் நின்று விடுவதில்லை. அதற்கு மேலும் தாண்டி, நமது யதார்த்தக் கட்டமைப்பிற்குள்ளும் இயக்கம் கொள்கின்றன. மதம், தத்துவம் ஆகியவற்றால் உருவகம் செய்யப்பட்டுள்ள காலம் பற்றிய பார்வைகள் மீது புத்தம்புதிய தரிசனங்களை உருவாக்குகின்றன என்பதை, என் நுட்பமான அவதானிப்பில் உணர்ந்தபோது, நான் பேரண்டவெளியில் மிதக்க ஆரம்பித்தேன்.
நல்லது! உங்கள் தமிழ் இலக்கிய சூழலின் இடம் எப்படி இருக்கிறது? குறிப்பாக speculative fiction மற்றும் sci-fi?
தமிழின் நவீன இலக்கியத்தில் sci-fi க்கான தளம் காலியாகவே இருந்து வருகிறது; sci-fi என்பது ஏதோ குழந்தைக் கதைகள் சமாச்சாரம் போலவும், அல்லது பாப்புலரான மசாலா கதைத்தன்மை போலவும் ஆதியிலிருந்தே கட்டமைக்கப்பட்டுவிட்டது. காரணம், எங்கள் தமிழ் மொழியின் கமர்ஷியல் எழுத்தாளர் சுஜாதா என்பவர்தான் ஓயாமல் sci-fi பற்றி பேசி வந்தவர். அதனாலேயே sci-fi துறை என்பது கமர்சியல் எழுத்து என்கிற எண்ணம் தமிழ் நவீன இலக்கியத்தில் படிந்து விட்டது.
அப்படியானால், தேடல் மனப்பான்மையே இல்லையா தமிழ் இலக்கியச் சூழலுக்கு என்று ஒரு கேள்வி உங்களுக்குள் எழும். ஒரு மிகப்பெரிய Irony என்னவென்றால், உலகின் மூத்த மொழி, செம்மொழி என்றெல்லாம் அடையாளப்படுத்தப்படும் தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒரு சிலரைத்தவிர எவர் ஒருவருக்கும் சர்வதேச எழுத்துவகைகளைப் பற்றிய பரிச்சயமோ, ஆழ்ந்த ஞானமோ, தேடலோ, ஈடுபாடோ இல்லை. இதற்கு பெரும்பான்மையான எழுத்தாளர்களுக்கு ஆங்கிலமொழிப் பயிற்சி பெரியளவில் இல்லாமல் போனதும் ஒரு காரணம். மேலும் ஆங்கிலத்தில் எழுதும் நவீன தமிழ் எழுத்தாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். அதனாலேயே சர்வதேச நவீன இலக்கியப் போக்குகளின் தன்மை தமிழுக்கு அப்டேட்டாக அறிமுகம் ஆவதில்லை.
எங்கள் பக்கத்து நாடான சீனாவில் sci-fi துறை பெருமளவில் வளர்ந்து உலக இலக்கிய போக்குகளையே தங்களை நோக்கி திசை திருப்ப வைத்துவிட்ட நிகழ்வு இங்குள்ள பலருக்கும் தெரியாது.
அது மட்டுமல்லாது, speculative fiction என்கிற இலக்கிய வகை, சரியான அர்த்தத்தில் இன்றுவரை தமிழில் அறிமுகம் ஆகவேயில்லை. நான் நடத்திய உன்னதம் இதழில், சமீபத்தில், தற்கால speculative fiction கதைகள் சிலவற்றை மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தினேன்.
தமிழில் மசாலா தன்மைகள் கொண்ட மூன்றாந்தர வணிக மலினங்களையே speculative fiction என்பதாக உலகளவில் முன்னிறுத்துகிறார்கள்! தொடர்ச்சியாக நவீன தமிழ் மொழியின் அடையாளம் இப்படியாகத்தான் உலக அரங்குகளில் கட்டமைக்கப்படுகிறது.
இங்கு speculative fiction, sci-fi போன்ற Genres குறித்த ஒரு விழிப்புணர்வு அடுத்த தலைமுறையில்தான் உருவாகும் என்பது என் துணிபு !
இந்த பேட்டிக்கு ஒத்துழைத்ததற்கு மிகவும் நன்றி. கடைசியாக வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
Time travel குறித்து உலகிலேயே மாபெரும் விஞ்ஞானிகளும் அறிவு ஜீவிகளும் சொல்லாத ஒரு புதிய விஷயத்தை, உலக இலக்கிய அரங்கில் பெரிதும் கவனம் பெறாத ஒரு எளிய மொழியை ஜீவித்து வரும் நபரால் என்ன புதிதாகச் சொல்லிவிட முடியும் என்று என்னை அலட்சியப்படுத்தாமல், ஒரு சிறு துரும்பிலும் சிறு துகளான என் வருகையை வரவேற்று, என் எழுத்துக்களை வாசிக்க ஆர்வம் கொண்டிருக்கும் சர்வதேச வாசகனுக்கு என் உணர்ச்சி மிகுந்த வணக்கம்.
****
*டொமினிகோ அட்டியன்ஸ் தற்கால இத்தாலிய எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர். மற்றும் பத்திரிகை ஆசிரியர்,
விஞ்ஞானப் புனைவுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவர் இத்தாலிய மொழியில் பல்வேறு கட்டுரைகளும், கதைகளும் எழுதிக்கொண்டிருக்கிறார். 2 விஞ்ஞானப் புனைவு நாவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் ஒரு திரைக்கதை எழுத்தாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
*கௌதம சித்தார்த்தன் தமிழின் நவீன இலக்கியத்தில் புகழ்பெற்ற நவீன சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் ஆவார்.
நவீன தமிழிலக்கிய தளத்தில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமையாக கவனம் பெற்றிருக்கும் இவரது படைப்புகள் இதுவரை தமிழில் 15 நூல்களாக வெளிவந்துள்ளன. மேலும், உலகின் பிரதான 9 மொழிகளில் 10 நூல்களாக மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. (ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, சைனீஸ், ரோமானியன், பல்கேரியன், போர்த்துகீஸ்..)
கடந்த 30 வருடங்களாக தமிழில் எழுதிக்கொண்டிருந்த இவர் தற்போது சர்வதேச மொழிகளில் எழுத ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் சர்வதேச மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, சைனீஸ், ரோமானியன், பல்கேரியன், போர்த்துகீஸ், அரபி, கிரீக், ஹீப்ரு, சிங்களம், ஷோனா போன்ற உலக மொழிகளில் வெளிவந்துள்ளன.
உன்னதம் என்கிற பெயரில் நவீன இலக்கிய இதழ் ஒன்றை ஆசிரியப் பொறுப்பில் இருந்து நடத்துகிறார். இதுவரை 40 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உலக இலக்கிய போக்குகளில் கவனம் செலுத்துகிறது.
தற்போது, உலக இலக்கிய போக்குகளில் கவனம் செலுத்தி, சர்வதேச பத்திரிகைகளான Truth out, California Quarterly, Global research, Global Tamil News and pravda (Russia) போன்ற பல சர்வதேச பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தற்போது, ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய பத்திரிகைகளில் Column எழுதிக் கொண்டிருக்கிறார்.
(இந்த நேர்காணல், மிலேனா என்னும் இத்தாலிய இணைய இதழில்- 2018 டிசம்பர் – வெளிவந்தது)
*************