கடந்த 2 நாட்களாக (சனி, ஞாயிறு) ஈரோடு, தமிழ் விக்கி – பெரியசாமி தூரன் விருது நிகழ்வில் கலந்து கொண்டேன். மிகவும் முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வாக அது அமைந்திருந்தது.
முழுக்க முழுக்க புதிய இளைஞர்கள். புத்தம் புதிய அறிமுகமற்ற முகங்கள். இளம் தலைமுறை படைப்பாளிகள். இவர்களில் பல படைப்பாளிகளின் எழுத்துக்களை சமீப காலமாக இணையத்தில் வாசித்திருக்கிறேன். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது.
மிகப்பெரிய அறிவார்ந்த படைப்பாளிகளின் கூட்டத்தை உருவாக்கிய ஜெயமோகனுக்கு மானசீகமாக வணக்கம் தெரிவித்துக் கொண்டேன். பிரமிள், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி என்ற முன்னோடிகளின் ஏர்ச் சாலில், அந்த நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக ஒரு அற்புதமான இயக்கம் உருவாகி வருவதை தரிசித்தபோது ஒரு கணம், அந்த மண்டபம் முழுக்க தமுக்கொலியின் நடன இசைவு பல்கிப் பெருகிய ஆநந்தத்தில் கரைந்தேன்.
அஜிதன், சுனீல் கிருஷ்ணன், சாம்ராஜ், அழிசி ஸ்ரீனிவாசன், மதார், ஆனந்த குமார், ரம்யா, காளி பிரசாத், லோகமாதேவி, கரசூர் பத்மபாரதி… போன்ற இளம் தலைமுறை படைப்பாளர்கள், கடலூர் சீனு, ராஜமாணிக்கம், முருகவேலன்.. போன்ற விமர்சன ஆய்வாளர்கள், விஜய் பாரதி, கதிர்முருகன், விஷ்ணுகுமார், திருமா வளவன், ஆரூரன், அநங்கன், பாரி, மணவாளன், தாமரைக்கண்ணன், கோவர்த்தன்.. இன்னும் பல புதியவர்களை சந்தித்தது பெரும் உற்சாகமாக இருந்தது.
மூத்த படைப்பாளிகள், அ.கா பெருமாள், சோ தர்மன், நாஞ்சில் நாடன், தேவி பாரதி, காலசுப்ரமணியம், மகுடீஸ்வரன், எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், அகரமுதல்வன், ஜீவகரிகாலன், கார்த்திக் புகழேந்தி.. போன்ற நண்பர்களுடன் பேசிக் களித்தது பழைய நினைவுகளைக் கிளர்த்தியது.
அந்த நிகழ்வு மண்டபத்தின் வெளியில், மெல்லிய நிலவொளியில், விடிய விடிய நவீன கவிதைகளின் நுட்பத்தை, கலை இலக்கிய போக்குகளின் மாபெரும் பாய்ச்சலைக் கதைத்தாடிக்கொண்டிருந்த முகமறியாத, அறிமுகமற்ற இளைஞர் குழாமினூடே என்னை இணைத்துக் கொள்கிறேன்.
அன்றொருநாள், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளின் நிலவுப் பொழுதுகளில், புத்தம் புதிய இளைஞர் குழாம்களில் விடிய விடியக் கதைத்தாடிய காலங்களை நிகழ்த்திக் காட்டிய நிலவின், கால வழுவமைதியை ரசித்துக் கொண்டேயிருந்தேன்.
இது குறித்தெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்.
என் குறுநாவல் “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?” நூலை இளம்தலைமுறைக்குக் கையளிக்க வேண்டும் என்பது என் பேராசை. அஜிதன்! இளம் தலைமுறையின் நம்பிக்கையூட்டும் படைப்பாளி! அவர் என் நூலை வெளியிடுவது மிகச் சிறப்பான தருணமாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன்.
அஜிதன் நூலை வெளியிட, ஜெயமோகன் பெற்றுக் கொள்ள..
அது ஒரு மகத்தான கவிதை கணம், கண்ணே!
(இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய ஈரோடு கிருஷ்ணன் அவர்களுக்கு இதயபூர்வமான நன்றி)