• Thu. Sep 21st, 2023

Writing Degree 98.4

ByGouthama Siddarthan

Aug 13, 2022
  • கௌதம சித்தார்த்தன் 

 

(Writing Degree 98.4 என்னும் தலைப்பில், கொரோனா காலத்தில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் ஒரு சிறு வெளியீடாக இணையத்தில் வெளியிட்டேன். அந்த வெளியீட்டிற்கு எழுதப்பட்ட முன்னுரை.)

 

 

 

….கொள்ளை நோயின் கிருமி மரணம் அடைவதில்லை என்பது மட்டுமல்ல, அது மறையவும் செய்யாது. என்றென்றும் அது பெட்டி படுக்கைகளிலும் துணிமணிகளிலும் பத்து ஆண்டுகளானாலும் உறங்கிக் கொண்டிருக்கும். அது அறைகளிலும் நிலவறைகளிலும் கைக்குட்டைகளிலும் ஏடுகளிலும் குவியல்களிலும் பொறுமையாகக் காத்துக்கொண்டிருக்கும். ஒருநாள் அது வெளிவரலாம். மனிதர்களின் கேட்டிற்காகவோ அல்லது அவர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகவோ, கொள்ளை நோய் தன் எலிகளை, விழித்தெழச் செய்யும். அவற்றை மகிழ்ச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்திற்குப் போய் உயிர் விட விரட்டி அனுப்பும்.
– ஆல்பெர்ட் காம்யு வின் The Plague நாவலின் இறுதி வரிகள்.

 

 

கொரோனா காலத் தமிழ்ச் சூழலின் வரலாற்றுச் சாட்சியமாக இந்தக் கவிதைகளை இங்கு முன் வைக்கிறேன்.

கடந்த காலத்தின் எல்லையற்ற பக்கங்களில், ஒவ்வொரு காலகட்டத்திலும், கொரோனா போன்ற ஒரு தொற்று நோய் மனித சமூகத்தை சர்வ நாசமும் அச்சுறுத்தலும் செய்து கொண்டே வந்திருக்கிறது வரலாறு நெடிகிலும். அவைகளை வாழும் சாட்சியமாக நின்று, கதைகளாக, கவிதைகளாக, காவியங்களாக, கலை இலக்கியங்களாக படைத்து வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யும் மகத்தான மானிட புருஷர்களாக கலைஞர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வெனிஸ் நகரத்தில் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கும் காலரா தொற்று குறித்து எழுதும் தாமஸ் மன், அந்த நகரத்தின் ஆன்மாவை முன்வைக்கிறான்.

ஜோஸ் சரமாகோ தனது Blindness நாவலில், விவரிக்கும் ஒரு காட்சி, திடீரென பரவிய மனிதர்களைக் குருடாக்கும் தொற்றினால் பாதித்தவர்கள், கடவுளை ஜெபிப்பதற்காக ஆலயத்திற்குள் நுழைவார்கள். சிலுவையில் அறையப்பட்ட ஏசு சிலையின் கண்கள் வெண்துணியால் கட்டப்பட்டிருக்கும். அதுமட்டுமல்லாது, அங்கிருந்த அனைத்து சிலைகளும் கண்கள் கட்டப்பட்டிருக்கும். கடவுள்களும் குருடாகி விட்டனரா? தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத இவர்கள் மக்களை எங்ஙனம் காப்பார்கள் ? இப்படிப் பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறார் சரமாகோ.

இதே காட்சி, எங்கள் நாட்டிலும் நடந்தேறியது. ஒரு கோவில் ஒன்றில், இந்துக்களின் பிரதான தெய்வமாக விளங்கும் எல்லாம் வல்ல சிவனின் உருவகமான சிவலிங்கத்திற்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்த நிகழ்வு, சரமாகோவின் நாவலை அமரத்துவம் மிக்கதான படைப்பாக மாற்றியது. இவையெல்லாமே வரலாற்று சாட்சியங்களாக காலத்தின் பக்கங்களில் பதியப்பட வேண்டிய ஆவணங்கள்!

உலகத்திலேயே 2 வது இடத்தில் இருக்கிறது என்று புள்ளி விபரங்கள் சொல்லப்படும் எங்கள் இந்தியப்பெருநாட்டின் ஒரு எளிய பிரஜை நான். பல்வேறு மொழிகள் பேசும் மக்களாகவும், பல மாநிலங்களாகவும் பிரிந்து கிடக்கும் எங்கள் இந்திய நாட்டு நிலவியலை சுருக்கமாக பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலமும் தங்களது தாய் மொழியை முன்னிறுத்தி செயல்படும் போக்கில், கடைக்கோடியில் ஒதுக்கப்பட்ட மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு என்னும் மாநிலத்தின், மிகவும் சிறுபான்மை கொண்ட மக்கள் பேசும் தமிழ்மொழியில் எழுதும் எழுத்தாளன். எங்கள் தமிழ் மொழி உலகின் ஆதி மொழி என்றும், செம்மொழி என்றும், திராவிட மொழி என்ற பெருமை இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்களது மொழியை உயர்த்தி மற்ற மொழிகளை அலட்சியப்படுத்தியே செயல்படுவார்கள் என்பது உள்ளரசியல்.

இந்தப்பெருமை மிகு தமிழ்நாடு, இந்தியாவின் தொற்று புள்ளிவிபர பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கிறது என்பது மேலும் ஒரு பெருமை!

கொரோனா அலை முதன்முதலாக அடிக்கத் துவங்கிய போது பெருமளவில், அச்சத்துடனும், கட்டுப்பாடுகளுடனும் மக்கள் இருந்தனர். ஆனால், புள்ளி விபரங்கள் ஆயிரங்களையும் பத்தாயிரங்களையும் தாண்டியபோது, தொற்று பற்றிய விழிப்புணர்வை அலட்சியம் செய்ய ஆரம்பித்தனர்.

முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பெருமளவில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் தமிழர்கள் என்று இந்திய புள்ளிவிபரம் சொல்கிறது. முழுக்க முழுக்க கொரோனாவைக் கலாய்த்து மீம்ஸ் போடுவதுதான் இந்த தொற்று பற்றிய விழிப்புணர்வு என்பதுபோல கிண்டலும் கேலியுமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியின் வெகுஜன சினிமாவில் வரும் காமெடி நடிகரான வடிவேல் என்பவரின் சினிமா ஸ்டில்களை எடுத்து மீம்ஸ்களாக போடுவது வெகுஜன மக்கள் மட்டுமல்ல, இலக்கியம் படைப்பதாகச் சொல்லும் எழுத்தாளர்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு கவிஞர், முகநூலில் கொரோனா பற்றி, அன்றாடம் செய்தி நிகழ்வுகளை, ஒரு கவிதை போல, வாக்கியங்களை ஒடித்து ஒடித்துப் போட்டு ‘தினமும் ஒரு கவிதை’ என்று வெற்றிகரமாக 168 வது கவிதை ஓடிக் கொண்டிருக்கிறது. கலைகளின் ராணி என்று அழைக்கப்படும் கவிதையை, முகநூல் ஸ்டேட்டஸ் ஆக்கிவிட்ட பரிதாபம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழில் செயல்படும் செய்தி பத்திரிக்கைகள் மற்றும் வெகுஜன இதழ்கள், நவீன இலக்கியம் குறித்த பிரக்ஞையற்றவை. அவ்வப்போது, தங்களுக்கும் நவீன இலக்கியம் தெரியும் என்கிற போக்கில் இலக்கியப் போலிகளையே நவீன இலக்கியமாக முன்னிறுத்துகின்றன. இணையமும், சமூக ஊடகங்களும் பெருத்துப் போய் விட்ட சூழலில் நவீன இலக்கியம் குறித்து அக்கறை கொண்ட சிறு இலக்கியப்பத்திரிகைகள் மறைந்து மாய்ந்து விட்டன. முகநூலில் ID இருக்கும் அனைவருமே கவிஞர்கள் என்றாகிவிட்ட பிறகு, நவீன இலக்கியம் என்ற பதம் அர்த்தமிழந்து போய்விட்டது. எல்லாமே நவீன இலக்கியம்தான். அன்றாட மசாலா செய்திகளும், நுனிப்புல் ரசனைகளும், தட்டையான வாழ்வியல் அனுபவங்களும் பேரிலக்கியங்கள்!

பொதுவாகவே, வெகுஜன தமிழ் கலாச்சார சூழலும் வாழ்வியலும், சாதியையும் சினிமாவையும் மையமாக வைத்தே செயல்படுபவை. அதிலும் சமூக ஊடகங்களும், இணைய வளர்ச்சியும் பெருகி விட்ட தற்காலச் சூழலில் சாதிபற்றிய கருத்துக்களே முதன்மையாக முன்னிறுத்தப்படுகின்றன.

கண்முன்னால், தினமும் ஆயிரக்கணக்கானோர் தொற்றினால் பீடிக்கப்படுவதும் நூற்றுக்கணக்கானோர் மரணிப்பதுமான சூழலில், பெரிதாக தொற்று நோயை கண்டுகொள்ளவில்லை. அந்த சமயத்தில், சாதி ஏற்றத்தாழ்வுகளுடன் காதலித்த காதல் ஜோடியை படுகொலை செய்த சம்பவம், பெருமளவில் மிகவும் உக்கிரமாக களமாடின.

இந்த தொற்று காலத்தில், மிகவும் கொடூரமான நிகழ்வு என்பது, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்த மக்கள், இந்தத் தொற்றினால் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். ஊரடங்கு போட்டதும் நகரங்களின் வாயில்கள் சாத்தப்பட்டு எல்லாப் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன. இந்த மக்கள் பெரும் பீதியுடன், 2000 கிலோமீட்டர்களுக்கும் அப்பாலிருக்கிற தங்கள் மாநிலங்களுக்கு நடைபயணமாகவே, தங்களது பிள்ளைகளையம், வாழ்வியல் பொருட்களையும் சுமந்துகொண்டு கால்நடைகளாகவே, நடந்து போனார்கள். இதில், தலைக்கு மேல் கொளுத்தும் வெயிலின் உக்கிரம் தாங்காமல், வயதானவர்களும், பெண்களுமாக நிறைய பேர் சுருண்டு விழுந்து செத்துப் போனார்கள். அதுமட்டுமல்லாது, தங்களது ஊருக்குப் போகும் வழியாக ரயில் தண்டவாளங்களின் வழியாக நடந்து போனபோது, எதிரில் வந்த ரயில் மோதி, பரிதாபமாக பல மக்கள் இறந்து போன துயரத்தை, முடிவிலியாய் நீண்டு செல்லும் தண்டவாளக் கம்பிகள் என்றாவது ஒருநாள் கவிதையாய் எழுதும்.

சொந்த மாநிலத்திலேயே மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டத்திற்குப் போவதற்குத் தடை செய்யப்பட்டு விட்ட சூழல் – மேற்கொண்டு போகவேண்டுமானால், E Pass வாங்கிக்கொண்டுதான் போகவேண்டும் என்பதெல்லாம், காம்யுவின் The Plague நாவல் படிக்காத வெகுஜன தமிழ் மக்களுக்கு கற்பனை செய்ய முடியாத விஷயம், அந்த E Pass வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதான் வாங்கவேண்டும் என்பதை Plague நாவல் படிக்காமலேயே நடைமுறைப்படுத்தியது தமிழனின் கூரிய நுண்ணறிவு ஸ்தானம்.

இந்த E Pass வாங்காமல், பல்வேறு விதமான திருட்டுத்தனங்களில் செய்த பயண சாகசங்களை “பயண மஹாத்மியம்” ஆகத்தான் எழுதவேண்டும். ஆனால், இதற்குமேல்தான் இருக்கிறது பிரச்சினை. ஆம், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து யார்வந்தாலும், எங்கள் ஊருக்குள் விடமாட்டோம் என்று ஒவ்வொரு சிறுசிறு நகரங்களிலும், ஊர்களிலும் இருந்த மக்கள் ஆக்ரோஷமாக எதிர்ப்புகளையும், தடைகளையும் போட்டார்கள். அந்தக் கட்டத்தில், பல்வேறு ஊர்களில் நடந்த ” கும்பம் தாளித்தல்” என்னும் ஒரு சடங்கு, தற்கால Lévi-Straussians க்கு ஒரு பெரும் ஆய்வேடு submit செய்யும் அளவுக்கு விஷய கணம் பொருந்தியது.

இது போன்ற தொற்று காலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Boccaccio வின் The Decameron கதைகளில் வரும் வினோத கோதிக் தன்மைகளை விடவும் சுவராஸ்யமான தன்மை கொண்டது ” கும்பம் தாளித்தல்”!

தங்களது ஊருக்கு அம்மை, காலரா, பேதி போன்ற கொள்ளை நோய்கள் வராமல் தடுப்பதற்காக “கும்பம் தாளித்தல்” என்னும் ஒரு சடங்கை செய்வார்கள் ஊர்மக்கள். அதாவது, பயன்பாடில்லாமல் உடைந்து கிடக்கும் வீட்டு உபயோகப் பொருட்களான, ஆட்டுக்கல் (உரல்), அம்மிக்கல், உலக்கை, முறம், விளக்குமாறு… போன்றவைகளை ஒரு வண்டியில் போட்டு ஏற்றிக் கொண்டு மேளதாளத்துடன் சாவுக்கோட்டு அடித்துக் கொண்டு ஊர்வலமாகக் கொண்டு போவார்கள். ஊர்வலத்தின் முன்னால் அந்தக் கிராமப் பூசாரி வாய்க்கட்டு கட்டிக்கொண்டு, மணியடித்துக்கொண்டே நடக்க, ஆண்களும் பெண்களும் குலவை கொட்டிக்கொண்டே பின்னால் போக, ஊர்வலம் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நிற்கும். உடனே அந்த வீட்டிலுள்ள சிதிலமடைந்த பழைய பொருட்களைக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுவார்கள். அந்த ஊர்முழுக்க இந்த ஊர்வலம் சுற்றி பொருட்களை ஏற்றிக்கொண்டு, ஊருக்கு வெளியே உள்ள எல்லைப்பகுதியில் கொண்டுபோய், பூஜை செய்து பொருட்களைக் கொட்டிவிட்டு ஊர் திரும்புவார்கள். இதனால், கொள்ளை நோய்களை ஊருக்கு வெளியே விரட்டி விட்டதாகவும், இனி எல்லை தாண்டி ஊருக்குள் வராது என்பதாகவும் கிராமத்து ஐதீகம்.

இந்த தொன்மையான ஐதீகம், இக்காலத்தில், இன்னும் சற்று வளர்ச்சி யடைந்து, இந்த சிதிலமடைந்த வீட்டுப் பொருட்களுடன் சேர்த்து, “சென்னையிலிருந்து வரும் மனிதன்” என்னும் அடையாளத்துடன் ஒரு வைக்கோல் பொம்மை செய்து இந்தச் சடங்கில் சேர்த்துக் கொண்டார்கள் என்பது postmodern கலாச்சாரத்தில் வருமா என்பதை Slavoj Žižek தான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்லாது, தொற்று பீடித்து இறந்த சடலத்தை எங்கள் பகுதி மயானத்தில் புதைக்கக்கூடாது என்று ஆங்காங்கு பெரும் கலவரங்கள் வெடித்தன. அதன்மூலம், கிருமிகள் பரவிவிடும் என்று மரண பீதியில் இருந்தார்கள் மக்கள். சகமனிதனை வெறுத்தொதுக்கும் கொடூரமான காலத்தில், நேசம் என்பது செத்துப்போய்விட்ட சூழலில், மரினா ஸ்வெட்டேவாவின் முத்தம் கவிதை ஞாபகம் வருகிறது. வறண்டு வெறுமையாகிப்போன இந்தப்பிரபஞ்சம் முழுக்க மீண்டும் நேசத்தை ஊற்றெனப் பெருக்க வைக்கும், ஸ்வெட்டேவா!

அவள், தனது பிரியமான நண்பனும் கவிஞனுமான போரிஸ் பாஸ்டர் நாக்குக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு நினைவு கூரலாம்.

“… நான் அவளருகே அமர்கிறேன். அறையில் உள்ள அனைத்தையும் தூண்டிவிட்டு, நான் அவள் கையைப் பற்றினேன். ஒரு கை ஒரு கைக்காக ஏங்குகிறது (ஒன்று அவளை வாரி எடுக்கும், மற்றொன்று அவளுடைய தலைமுடியைக் கோதுகிறது), நான் என் தலையைக் குவிக்கிறேன்: “மிரியாட்ஸ்.” நான் செய்யும் செயல்பாட்டைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறேன் – அவளுடைய நோய்த்தொற்றின் இதயம் வரை. முழு விழிப்புணர்வுடன்.

போரிஸ்! அந்த அதரங்களின்  எதிர்ப்பு மற்றவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது ஒரு அற்புதம் மிகுந்த வெட்கத்தின் இழைவு. என் முதல் உண்மையான முத்தம்.மேலும், ஒருவேளை, அவளுடைய தாபம். போரிஸ், நான் மரணத்தை முத்தமிட்டேன். வாழ்வின் பெயரால் எல்லாவற்றிற்கும் ஈடு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். வாழ்க்கையே மரணத்தை முத்தமிட்டது. போரிஸ், ஒவ்வொரு முத்தமும் அப்படி இருக்க வேண்டும், வாழ்க்கைக்காக அல்ல, மரணத்திற்காக, மதிப்பு மிக்க செல்வம் பற்றிய முழு விழிப்புணர்வுடன்.”

யதார்த்தத்தில் அவள் நிகழ்த்திய அற்புதத்தை, மரணத்தின் வாழ்வாக மாற்றிப்பார்க்கிறது காலம்.

இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது, உலகப் புகழ்பெற்ற இந்தியத் தத்துவ ஞான நூல்களான உபநிஷத்துக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற கடோப நிஷத்! வாழ்வுக்கும் மரணத்துக்குமான பல்வேறு கேள்விகளை, தத்துவத் தேட்டங்களை, ஞான தரிசனங்களை முன்வைக்கும் மஹாவாக்கியம்!

வேத காலத்தில் வாழ்ந்த வாஜசிரவஸ் என்பவர் பெரும் யாகம் செய்தார். யாகத்தின் விதிப்படி, தனது ஆஸ்தி அனைத்தையும் ஏழைகளுக்கு தானம் செய்து கொண்டிருந்தார். அவரது மகன் நசிகேதன், அவரிடம் சென்று, தந்தையே, என்னை யாருக்கு கொடுக்கப் போகிறீர்கள்? என்று நச்சரித்தபடி கேட்க, கோபமுற்ற தந்தை, ““உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்கிறார்.

தந்தை கோபத்தில் சொல்லி இருந்தாலும், அவர் சொன்னபடி எமனிடம் போக வேண்டும் என்று நசிகேதன் தீர்மானித்து எமலோகம் போகிறான். அங்கு, மூன்று நாட்கள் அவனைக் காத்திருக்க வைத்ததற்காக, மன்னிக்குமாறு கேட்டுக்கொண்ட எமன், அதற்கு பிரதியுபகாரமாக, “உனக்கு மூன்று வரம் தருகிறேன் என்ன வேண்டுமோ கேள்” என்கிறார்.

நசிகேதன் கேட்ட மூன்று வாரங்களில், மற்ற இரண்டும் as usual.

ஆனால், அந்த மூன்றாவது வரம்தான் இந்திய தத்துவ ஞானத்தின் மிக உயர்ந்த கொடுமுடி!

“எமதர்மனே! மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். மரணத்திற்கு அப்பால் மனிதனின் நிலை என்ன? எனில், மரணத்தின் வாழ்வு என்பது என்ன? வாழ்வின் மரணம் என்பது என்ன? இந்தக்கேள்விகளுக்கான பதிலே நீ எனக்குத் தரும் வரம்..” என்கிறான் நசிகேதன்.

எம தர்மன் திகைக்கிறான். “நசிகேதா, வேண்டாம்.. நீ வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள். உனக்கு மரணமில்லா பெருவாழ்வு வேண்டுமா கேள் தருகிறேன். இந்த பூமியில் உள்ள செல்வங்கள், இன்பங்கள், கோடானுகோடி திரவியங்கள் எதுவேண்டுமோ, தருகிறேன். ஆனால், மரண ரகசியத்தை மட்டும் கேட்காதே” என்று நைச்சியமாக இறைஞ்சுகிறேன் எமன்.

ஆனால், நசிகேதனோ, தனக்கு தேவையான வரம் என்பது, தனக்கு இந்த மரணத்தின் புதிர் ரகசியம் தான் தெரிய வேண்டும் என்று உறுதிப்படக் கூறுகிறான்.

அவனது மனவுறுதியைக்கண்டு உளம் நெகிழ்ந்த யம தர்மன், மரணத்தின் நிலையை விளக்குகிறான். இந்த ஞானதரிசனமே கடோபநிஷத்!

படித்து முடித்துவிட்டு கவிதைகளை எழுத ஆரம்பித்த போது, என் உடல் கனல்வது போல உணர்ந்தேன்.

யதார்த்தத்திற்கு fantasy க்கும் இடையில் தடுமாறியபடி எழுந்து, Body Temperature Gun ஐ எடுத்து, என் நெற்றியில் சுட்டேன் : 98.4

 

****

 

1. Lévi-Straussians என்னும் பதம் : Claude Lévi-Strauss என்னும் மானுடவியல், தொன்மவியல் கோட்பாட்டு ஆய்வாளர். அவரது வழி வரும் அவரது சீடர்களான தற்கால ஆய்வாளர்களை அந்தப்பதம் கொண்டு அழைக்கிறேன்.

2. மரினா ஸ்வெட்டேவா, போரிஸ் பாஸ்டர் நாக்குக்கு எழுதிய கடிதம் : தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது நண்பியின், மரண அவஸ்தைகளிலிருந்து விடுபட அவளுக்கு இறுதி முத்தம் கொடுக்கும் மனிதாபிமானத்தை போற்றும் விதமாக அந்தப்பகுதியை அமைத்திருக்கிறேன்.

3. Slavoj Žižek : பின்நவீனத்துவம் சார்ந்த மேலோட்டமான கருத்துக்களை, அரைவேக்காட்டுச் செயல்பாடுகளை கிண்டலடிக்கும் பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்.

 

************

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page