• Tue. Jun 6th, 2023

சாத்தாவு

ByGouthama Siddarthan

Aug 13, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

மறுபடியும் நான் அதைப் பார்த்தேன். அறையில் ரீங்காரமிட்டுச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த நிழலின் சிறகடிப்பை. அது ஒரு சிறிய வண்டு. நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மேலே வாசிக்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்த அதன் ஓசை தலையில் கிர்ரென்று எகிறியது. சரேலென்று எனக்குள் பொங்கிய ஆவேசத்தில் அதன்மீது புத்தகத்தை வீசியடித்தேன். குறி தவறிப் பரண்மீது பட்டுஅதிலிருந்த பழம்பொருட்கள் சிதறி விழுந்ததில் செம்பழுப்பு நிறத்தில் கூழாங்கற்கள் உருண்டோடின.

இறந்த காலத்தின் புழுதி, நிகழ்காலத்தில் இணையும் காட்சியாக, அறை முழுவதும் எதிரொலித்தது. ஓரிரு நிமிஷங்கள் திகைத்துப் போய் நின்றவன், மெல்லச் சுதாரித்துக் கொண்டே அந்தக் காலத்தினூடே நடந்து போனேன். கால்களில் தட்டுப் பட்டன கூழாங்கற்கள். மெதுவாக அவைகளைப் பொறுக்கியெடுத்தேன். அந்தக் கற்களின் ஈரம் என் உள்ளங்கைக்குள் பாய்ந்தது. அந்தக் கணத்தில் ஒரு நூற்றாண்டு கால வமிசாவளியின் நாடித் துடிப்பு எனக்குள் ஓடிக் களித்தது.

ஆற்றாமை ததும்பும் கற்களின் அமானுஷ்யமான மௌனத்தைக் கைகளுக்குள் இறுக்கிக் கொண்டேன். அவை என் கைகளில் மேலும் கீழும் குலுங்க ஆரம்பித்தன. உள்ளங்கைக் குழிவிலிருந்து எம்பிக் குலுங்கும் மெல்லிய அசைவில் கற்கள் சுழன்று சுழன்று குறி சொல்லும் சங்கேத மொழியாக மாறி, கோடுகளில் சுழித்தோடுகிறது. என் மூதாதை முத்தேழ் நாய்க்கனின் மக்கிய வாசனை அறையெங்கும் புழுதி பரப்புகிறது.

கூழாங்கற்களின் நெகுநெகுப்பும் குளுமையும் உள்ளங்கையில் படுவதும் எழுவதுமான கணங்களில் காலம் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. கற்கள் கையில் படும்போது ஏற்படுகின்ற தொடு உணர்ச்சி கரத்தை முன்னோக்கி உந்த, வெற்று வெளியில் பட்டுத் திரும்பும் கற்கள் இப்போது வேறு விதமாய் இருக்கின்றன. கற்களின் சுழற்சி எனக்கு முன்னால் உயர்ந்து எழும்புகையில், நான் எதிரில் உட்கார்ந்திருந்தும் வெகு தொலைவிலிருக்கிறேன். எழும்புதலும் வீழ்தலுமான இடைவெளியின் தூரம் ஒரு அங்குலமேயிருந்தாலும் காலத்தினூடே தாவிய முடிவற்ற பாய்ச்சலின் நெடுந்தொலைவில் பயணம் போகின்றன. காலவெளியில் சுழல்கின்றன கற்கள்…

 

***

 

ராசா, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஏன்று இந்த ஏழு கூழாங்கற்களைப் பரப்பிக் கல்குறி கட்டுகிறார் முத்தேழ். ஏழு முத்துக்களை வைத்து மனித வாழ்வின் தீர்க்க தரிசனங்களைக் கணிப்பதால், வம்சாவளி முழுக்க முத்தேழு என்ற பட்டம் தொடர்ந்து வருவதை அவரது கையில் குலுங்கிய கற்கள் சொல்லின. பல்வேறு வர்ண வடிவங்களில் உள்ள அக்கற்களைக் குலுக்கி ‘ப’ வடிவத்தைப் பக்கவாட்டில் திருப்பி வைத்தாற்போல மூன்று கோடுகளாய் வைக்கிறார்… கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று நிலைகளில் ஓடிக் கணிக்கும் அவை. மனிதனுக்கும் காலத்துக்குமான தாத்பரியத்தைக் கொண்டு சிருஷ்டித்த அந்தக் குறியீட்டு மொழியின் நம்பிக்கையில் மனித வாழ்நிலையின் தரிசனம் தெரிகிறது. குறியீடுகளின் நகர்வுகளில் தெரியும் தீர்வுகளில் மனிதன் ஆசுவாசப்படவும், எழுச்சி பெற்று எழுந்து நிற்கவுமான பிரசன்னம் அது.

முதல் கிடைமட்டக் கோட்டில் மூன்று கற்களும், அதிலிருந்து கீழிறங்கும் நேர்கோட்டில் இரண்டு கற்களும், மூன்றாவதான கிடைமட்டக் கோட்டில் இரண்டு கற்களுமாக வீடு கட்டும்போது சச்சதுரமாக அடைபடாமல் பொக்கை வாயாய்த் திறந்து கிடக்கிறது நாலாவது கோடு. இந்தக் கல்குறி அமைப்பை, குறி கேட்பவனின் சாதிக்கேற்ப வலங்கை வழக்காகவும் இடங்கை வழக்காகவும் பொக்கைவாய் வரும்படி வீடு கட்டிக் குறி சொல்லும்போது புலனாகாத அவ்வொற்றைக் கோட்டில் நான்கு வர்ணங்களின் நிறங்கள் பிரிகின்றன. சாதீயத்தின் அடைபட முடியாத பொக்கைவாய், காலங்களற்றுச் சிரிக்கிறது.

முத்தேழ் கற்களைக் குலுக்கும்போது குறி கேட்பவன் தனக்குப் பிடித்தமான ஒரு கல்லை மனசுக்குள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர் குறிக் கற்களைக் கட்டியதும், தான் குறித்து வைத்திருந்த கல்லை வெற்றிலைக் காம்பினால் தொடுவான் குறிகேட்பவன். கையளவு நம்பிக்கையில் விரியும் விசுவரூபக் குறியீடுகளை உசாவிக் குறி சொல்லுகிறார் முத்தேழ்.

கோடுகளின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கான பயணம். மனித மனத்தின் நாபிக் கொடியிலிருந்து நம்பிக்கையின் மூச்சுக் குழலுக்கு, அபத்தத்தின் ஆறுதலிலிருந்து நிசத்தின் தரிசனத்திற்கு மற்றும் கடவுளிலிருந்து மனிதனுக்கு. அந்த அகண்ட பரப்பு முழுமைக்கும் படர்ந்து விரிகிற முத்தேழ் நாய்க்கரின் வாக்கு வன்மை என்பது அவருடையதல்ல. அவருடைய குருதி நாளங்களில் உறைந்திருக்கிற வம்சாவளியின் வாக்குப் பலிதம். குறிசொல்லி என்கிற ஒரு கோட்டையும் குறி கேட்பவன் என்கிற மற்றொரு கோட்டையும் இணைக்கும் செங்குத்தான நேர்கோடாய் இருபத்திநாலு நாட்டு மக்களும் திரண்டு அவரது கையில் கட்டிய கங்கணப்பலிதம்.

முத்தேழ் நாய்க்கரின் சொல் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பெரும் நிலைகளில் பயத்தையும் துக்கத்தையும் துடைத்துக் போடுவதைச் சகிக்க முடியாமல் உறுமித் திரிகின்றன பில்லி சூனியங்கள். தங்களது பிராந்தியத்தை அடித்து நொறுக்குவதை இனியும் பொறுக்காமல் வெந்து சுழல்கிறது சூறைக்காத்து. தன் சிக்குப் பிடித்த தலையில் ஈறுகோளியில் ஈர்க்கிக் கொண்டே உதிர்ந்த முடியைச் சுழட்டி வீசுகிறது செந்தூலி.

சூன்யத்தின் இருட்குகையில் உயிர் பிடித்து வரும் குட்டிச் சாத்தானே அது ஏன அறிந்துகொண்ட முத்தேழின் கங்கணம் இறுகுகிறது. அவர் மீது வந்து மோதுகிற சூன்யவார்த்தைகளைத் திருகி இலந்தை முள்ளின் கூர்மையில் மாட்டினார். குருதி கிழிந்த வார்த்தைகள் இலந்தைப் பழத்தில் செந்நிறமாகப் பாய்ந்து சொலித்தன. துளிர்த்துப் பசும் நிறமாகின. உதிரும் இலைகளில் பழுப்பாகின. படிமைகளாகின. நிலப்பகுதி யெங்கும் கெக்கலி கொட்டிச் சிரித்தன. கங்கணக் காப்புக்கும் கத்தாளைப் பூக்களுக்குமிடையே தடுமாறுகிறது சொல். தலை சுற்றி விழுந்த சொற்களைக் கொத்திக் கொண்டு பறந்து போயின காக்கைகள்.

சூனியத்தால் கட்டப்பட்டுவிட்ட முத்தேழ் நாய்க்கரின் குறிக்கற்கள் ஜடமாய் வீழ்ந்து கிடக்கின்றன. அவரது உடலெங்கும் சூழந்து இரத்த ஓட்டத்தில் பாய்ந்து கொத்திக் கொத்திப் பிடுங்கும் ஒலிச் சுருள்வாள். கங்கணக் காப்பில் சுருளும் மூதாதைகளின் முன்டாசுச் சுங்கு அசைந்து அசைந்து எழும்பும் போது தசைகள்தோறும் விம்முகின்ற வலி மார்புக் கூட்டில் வலிக்கிறது. கபாலமெங்கும் சுழன்றடிக்கும் சூறாவளியின் குரல்கற்றை ஜாலம் கானகத்தின் பசுமையைக் கிழிப்பதில் மும்முரம் கொள்கிறது.

காட்டின் துடிதுடிப்பு. சூரிய ஒளியின் மஞ்சள் கதிர்களில் நுழைந்த பருந்துகளின் சிறகடிக்கும் நிழல். மண்ணைக் கீறியெடுத்துப் போடும் ஏர்மேழியில் வாகாய்த் திரும்பும் திரடு கட்டிய கரங்களெல்லாம் இப்போது எங்கே? உன் கல்லெல்லாம் எங்கே போச்சு? கத்தாழங்காட்டுக்கு. உன் சொல்லெல்லாம் எங்கே போச்சு? செந்தூளங்குழிக்கு. முஷ்டியை இறுக்கிக் கங்கணக் கரத்தை உயர்த்தி நேருக்கு நேராய் அறைகூவல் விடுத்தார் முத்தேழ்.

“சாத்தாவூ…”

அது ஒரு மாயாஜாலத்தின் சிலிர்ப்பு. அந்த அழைப்பானது செய்வினையின் அனைத்துக் கட்டுகளையும் சிதறடித்து இருட்சுவரில் பதுங்கியிருந்த குரலின் செவி நாளங்களில் அறைந்து தள்ளியது. மறுகணம், கண் முன்னே நீண்டு படுத்திருந்த செம்மண் பாதை மறைகிறது. கம்மந் தட்டுக்களால் வேயப்பட்ட குச்சுகளும், வெயிலின் வேனலும் மறைகின்றன. ஆற்றின் தெளிந்த ஸ்படிகம், நிலத்தின் உருவம் எல்லாமே மறைந்து பிரம்மாண்டமாய் எழுகின்றன குறிக்கற்களின் புதிர்க் கட்டங்கள்.

எதிரில் நின்றிருக்கிறதா அது? காற்றுச் சூறையில் தன் இயக்கத்தைச் சுருட்டிக் கொண்டு வெற்று வெளியில் பிணையப்பட்டிருந்த உடலமாக எதிரில் முன்னேறிய சாத்தாவின் குரல் இருளில் முடையப்பட்டிருந்தது. சட்டென்று முத்தேழின் கங்கணக் கையில் பாய்ந்து சதைக் கூழாக உருக்கியெடுக்க ஆரம்பித்தது. தன் பலங்கொண்ட மட்டும் திமிறியெடுத்தார் முத்தேழ். தூசுகளை வளையமிட்டுக் கொண்டே முன்னும் பின்னும் நகர்ந்த அதன் வாசனையை உறிஞ்சியவாறே கத்தினார் முத்தேழ்.

“சாத்தாவு… நீ ஏன் என்னிடம் வம்புக்கு வருகிறாய்…?”

ஒரு நீண்ட கனைப்பொலி எழும்புகிறது சாத்தாவிடமிருந்து. இருட்குரலின் ஓலி சீரற்ற அசைவில் சீரான ஒலிச்சேர்க்கையில் வெடித்தது.

“பயமும் துணிவும் சேர்ந்ததே உடல்.. மகிழ்ச்சி துக்கத்தின் இணைவில் இயங்குவதே வாழ்வு… இந்தச் சூத்திரத்தை உடைக்கும் சொல்லை என்னால் அனுமதிக்க முடியாது…”

“வாழ்வின் ரகசியம் இவைகளுக்கப்பால்தானே உள்ளது… புலனாகாத அந்தப் புதிரை உடைத்து உடைத்து கடைசிச் சில்லில் பதுங்கியிருக்கும் பெருவெளியைத் தரிசிக்க வைக்கும் காரியத்தை எதிர்க்காதே சாத்தாவு…”

கெண்டை சிலுப்பித் தாவும் கட்டுச் சேவல்களாய் மாறுகின்றனர் இருவரும். மனித மனத்தின் இருண்ட பகுதிகளில் வெளிச்சமிடுகிறது சாத்தாவின் காலடியில் பதுங்கியிருக்கும் கத்திமுனை. கணித சாஸ்திரத்தின் கோடுகளை அழித்தொழிக்கும் வேத மந்திரங்களின் ஓயாத தொணதொணப்பில் உருகத் தொடங்குகிறது முத்தேழின் காலடி வீச்சு.

உலக்கையின் கருத்த நெகுநெகுப்பு முத்தேழின் உடலெங்கும் நீவிவிட்டது. இரும்புப் பூண் அழுந்த தசை நார்களைச் சுண்டியிழுக்கும் அதிர்வு உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை எகிறுகிறது. அவரது உடலெங்கும் மரக்கிளைகள் பிளந்து ஒரு பெரிய விருட்சமாக மாறினார். அவரது அக்குளில் துளைத்திருந்த இலைக் கரங்களின்மீது படபடத்து ரெக்கைகளை விரித்துச் சுழன்றது கழுகு. அதன் ரெக்கைகளின் அனல் கக்கும் வெயிலின் வெம்மை சூடுபரத்தியது.

உதிரத் தொடங்கிய எதிரியின் செதில்களில் மினுமினுத்துச் சொன்னார் முத்தேழ், “எந்தப் புதிர் முடிச்சையும் அவிழ்க்கும் திராணி என் கையில் உண்டு.”

“அப்படியானால் என் புதிரை அவிழ்க்க முடியுமா முத்தேழ்?”

சவாலை ஏற்றுக் கொண்டார் முத்தேழ். தோற்றுப் போகிறவர் எட்டு வருடங்களுக்கு ஜெயிப்பவரிடம் மிகவும் உண்மையுடன் அடிமைச் சேவகம் செய்ய வேண்டும்.

குறுக்கும் நெடுக்கும் வெட்டப்பட்ட கோடுகளில் சுழலும் ஏழுகல் மண்டபங்களின் வழி கால் எட்டிப் போடுகிறார் முத்தேழ். அவரது கையில் குலுங்கும் கற்களில் வாழ்வுக்கும் மரணத்துக்குமான போராட்டம். சாத்தாவின் புதிர்க்கட்டங்கள் வளையங்களாய் இறுக, அதில் தாவி ஏறி, நெகுநெகுப்பும் குளுமையும் உடலில் மாறிப் பாசம் படிந்த வழுக்குப் பாறையின் தலையில் மோதி திருகு வழியாய்ச் சுழலுகின்றன. கானத்தின் மௌனம் பாதவெடிப்புகளில் புகுந்து வழுக்கிவிழும் ஒவ்வொரு கணமும் புதிர்வழிச் சுழலின் மைய விதானத்தில் கேட்கிறது வண்டின் ரீங்காரம். இசைச் சுருளைப் பிடித்துக் கொண்டே கால் மாற்றிப்போட, கற்களின் ரத்த ஓட்டத்தில் மிதந்து உடைகிறது கரகரப்பான சுருதி. முத்தேழ் உன் கங்கணக் கரத்தை வீசு. முதல் வீச்சில் சூன்யத்தின் இருள் விலகட்டும்.

தோற்றுத் தொங்கும் தனது சடைமுடியைக் கொய்து முத்தேழின் முன் நீட்டுகிறது சாத்தாவு. தலை தாழ்ந்து வணங்கிய அதன் பணிவில் முத்தேழ் அதை மெச்சிக் கொண்டார். அதன் முடியை வாங்கி தன் தொடையைக் கிழித்து பத்திரமாய் உட்சொருகி தைத்து வைத்துக் கொண்டவர், சாத்தாவை எந்த ரீதியில் சேவகம் செய்ய அமர்த்துவதென யோசித்தார். அதன் வல்லமையடைந்த ரூபத்தை நிலத்தடி மண்ணைப் புரட்டிப் போடும் ஏர்முனையாக மாற்றினார்.

அடுத்த கணமே, உழவடித்து, விதை விதைத்து, பாத்தி கட்டி, தண்ணி பாய்ச்சி, உழவுப்பரப்பு முழுமைக்கும் தலையசைத்துச் சிரிக்கின்றன தானியங்கள். மனித உடலோ வெறும் சதைப் பிண்டமாக மாறும் அவலத்தை அவதானித்தார் முத்தேழ்.

காற்றாய்ச் சுழன்றடித்து, மழையாய்ப் பொழிந்து, நெருப்பாய் பஸ்மீகரம் செய்யும் மனித சாத்தியமற்ற நிலைகளில் காலாடித் திரிந்தது சாத்தாவு. காலம் தப்புகிற பருவ மாறுதல்களின் அழிவையும், மனித வாழ்வின் சிதைவையும் கண்ணுற்ற முத்தேழ், ஞாலம் நிறைந்த சாத்தாவின் வல்லாண்மையை மானுடத்துக்காய் மாற்றிவிட முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தார்.

சட்டென அவருக்குள் மின்னல் வெட்டியது. இந்த ஞாலத்தில் புதைந்திருக்கும் மாந்திரீகப் பிரக்ஞையைக் குறிசொல்லில் இணைத்து மானுட வாழ்வியலின் தீர்க்கத்தை மீட்டெடுத்தால் என்ன?

சாத்தாவை எட்டாவது கல்லாக மாற்றி கல்குறியமைப்பில் வீடுகட்டி வைத்தார் முத்தேழ். அடுத்த கணமே பொக்கை வாயாய்த் திறந்து கிடந்த கல்குறி அமைப்பு சச்சதுரமாக மாறியது. இடங்கை வலங்கை வழக்காரங்கள் கல்குறி கட்டும்போது திகைத்துக் காணாமல் போயின. காலங்காலமாய் மனிதனால் அழிக்க முடியாத சாதியத்தின் வர்ணபேதங்களை சாத்தாவு அழித்தொழித்தது. அடைப்புக் குழிக்குள் அடைபடாத காரியங்களைக் கைகொள்ள எழும் நாலாவது கோட்டில் நிறபேதங்களை அழிக்கும் எட்டாவது கல்லாக மாறி உட்கார்ந்தது சாத்தாவு. முழுமையடையாத கல்குறிச் சட்டகத்தை மனிதனும் யட்சனும் இணைந்த எதிர் தரிசனத்தில் பூரண முழுமையாக்குகிறது. நான்கு பரிமாணங்களில் சொலிக்கிறது சட்டகம்.

இப்பொழுது அமைப்பின் சதுரப் படிவு குறி கேட்பவனின் மைய அச்சில் நிறபேதம் கொள்ளாமல் செம்புத் தகடுகளில் சுருள்கிறது. குறி கேட்பவனின் குறிக்கல் எட்டாவது கல்லான சாத்தாவாக அமைந்து விட்டால், அவனது வாழ்நிலையை மேம்படுத்தும் முடிகயிறாய்த் திரிகிறது சாத்தாவு. மனித அத்துக்குக் கட்டுப்படாத விசயங்களை சாத்தாவின் ஆற்றல் உள்ளங்கையில் குறுக்குகிறது.

கூழாங்கற்கள் உயர்வதும் எழுவதுமான காலங்களின் நகர்வில் முத்தேழும் சாத்தாவும் சுற்றித் திரிந்தனர். அந்த நிலப் பகுதி முழுவதும் சாத்தாவின்தரிசனத்தில் சூரியனும் சந்திரனும் மாறி மாறி வந்து போயின. ஒரு நீண்ட காற்றடிக் காலத்தின் சாயங்காலப் பொழுதில் வந்து சேர்ந்தான் ஒருவன். கருத்த திரேகமுடைய அவனது திரண்ட உடலில், நீண்ட பிரயாணத்தில் படர்ந்த புழுதி அப்பியிருந்தது.

வைக்கோற்புரி திரித்துக் கொண்டிருந்த முத்தேழ் அவனைப் பார்த்ததும் வெகுநாள் பழகிய சிநேகிதனின் பார்வை அவருக்குள் சரேலென அடித்தது. குறிகேட்க வந்திருப்பான் என்று அவனை உபசரித்துத் திண்ணையில் உட்காரச் சொல்லி விட்டு, குறிக் கற்களை எடுத்து வர வீட்டுக்குள் போனார். தலைவேட்டியில் தூசுகளை தட்டி விட்டுக் கொண்டே, வைக்கோல் சுருணையை வீட்டுக்குள் வைத்து விட்டு ஓலைப்பெட்டியை எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தன கற்கள். அவைகளை எடுத்துக் குலுக்கிக் கொண்டே திண்ணைக்கு வந்தார். அவன் மீது குறுக்கு வெட்டாய் சரிந்திருந்த வெயில்பட்டு உடல் செதில்களாய் மினுமினுத்தது. கல்குறி கட்டுவதற்கு வாகாகத் திண்ணையில் உட்கார்ந்து, கற்களைக் குலுக்க ஆரம்பித்தார் முத்தேழ். அவரது உள்ளங்கைக்குள் குலுங்கிய குறிக்கற்களின் அளவு மாறுபட்டது. அவர் பதற்றத்துடன் கற்களை எண்ணிப் பார்த்தார். ஏழு கற்கள் மட்டுமேயிருந்தன.

எதிரே நிற்கிறது சாத்தாவு. திகைத்துப் போன முத்தேழ் சடுதியில் உணர்ந்து கொண்டார்.

“முத்தேழ் என் காலம் முடிந்தது. நான் போக வேண்டும். என் முடியைக் கொடு.” முடிந்த முடிவாக எதிரொலித்தது எதிரேயிருந்த குரல்.

மார்பு படபடக்கக் கூர்தீட்டிப் பார்க்கும் முத்தேழின் கண்களில் கல்குறி அமைப்பின் சிருஷ்டிகரம் உடைகிறது. காலத்தைத் தாண்டிய பொழுது அவரது முன் தலையில் வெப்பமாய்ச் சுடுகிறது. முழுமையான கல்குறி அமைப்பின் சட்டகம் உடைந்து பொக்கைவாயாய் இளிக்கிறது. சாதீயத்தின் கோரத் தாண்டவம் மூன்று கோடுகளிலும் மாறி மாறி நடக்கிறது. முத்தேழின் தலை முழுக்க வலி முடிச்சுகள் இறுகுகின்றன. அவருக்குள் ஓடிய எண்ண ஓட்டங்களின் இடுக்குகளில் பட்டுப் பட்டுத் தெறித்து வீழ்ந்தவர், ஒரு கணத்தில் பிரகாசமாய் எழுந்து உட்கார்ந்தார். இப்பொழுது அவரது முகமெங்கும் வெற்றிக் களிப்பு சொலித்து நிற்க, சாத்தாவை வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்தார். முடிந்த முடிவாய் தலையாட்டிக் கொண்டு எழுந்து கம்பீரத்துடன் வீட்டுக்குள் நடந்த அவரது கால்களில் இடறியது வைக்கோல் சுருணை.

மெல்ல அதை லாவகமாய் எடுத்துச் சுற்றி விட்டத்தில் வீசினார். கீழ் நோக்கித் தொங்கிய அதன் முனையில் சுருக்கு மாட்டிய நுட்பத்தில், கல்குறி அமைப்பு என்றென்றைக்கும் சிதையாக அற்புதமாய் மாறுகிற அற்புதத்தை நிகழ்த்தினார் முத்தேழ். அந்தரத்தில் அசைபடும் சுருணையின் சுருக்குக் கண்ணியில் தனது தலையை மாட்டிக்கொண்டு சரேலெனத் தொங்கினார் முத்தேழ்.

அந்த அகாலத்தில், காலங்களற்று மாட்டிக்கொண்டது சாத்தாவு.

 

***

 

என் உடம்பெங்கும் ஓடிக்களித்த கூழாங்கற்களின் குளுமை நிகழின் வெய்யிலில் மறையத் தொடங்கியது. உள்ளங்கைக்குள் அடங்கியிருந்த கற்கள் காலங்களற்ற துள்ளலுடன் என்னை அழைத்தன. சாத்தாவை வேண்டிக் கொண்டே ஆசுவாசத்துடன் கற்களைக் குலுக்கி வீடு கட்டத் தொடங்கினேன் சச்சதுரமாய்.

 

***********

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page