- கௌதம சித்தார்த்தன்
ஏன் அப்படிப்பட்ட முகத்தை என் கண்ணாடி காட்டியது?
கண்ணாடியில் நான் பார்த்த நான், நான் அல்ல
ஓயாமல் அக்கண்ணாடியைக் கொத்திக்கொண்டிருக்கும் மரங்கொத்தியின்
ரிதமான கொத்தலில் ஒரு இசைத்துணுக்கு தோற்றம் கொள்வதை அவதானிக்கிறேன்.
அதை நான் ஏற்கனவே கேட்டு அனுபவித்திருக்கிறேன்.
எங்கே? எப்போது?
என் தலைக்கு மேலாக ரீங்கரித்தபடி சுற்றிய வண்டு ஒன்று.
கண்ணாடிச் சதுரத்தில் பாய்ந்து, என் காதுகளுக்குள் நுழைந்து அதிர்வதை நான் பார்க்கிறேன்..
இசை ஒரு தண்ணீரைப்போல மாறிய எல்லையற்ற குமுக்கலில்
நீந்திக் கொண்டிருக்கும் என்னை வேறொரு நான் என்று கனவு காணாதே என்கிறது
என் முடிக்கற்றைகளை கலைத்துப் போடும் காற்று.
நதி தீரத்தின் அலைமேடுகளில் மீண்டும் என்னைப் பார்க்கிறேன்.
மிக நிச்சயமாக நானல்ல அது.
முடிவாக நான் பார்க்கிறேன், நானற்ற நானை.
நீண்டு கிடந்த நதிக்கரைமணலில் இறைந்து கிடக்கின்றன கிளிஞ்சல்கள்.
கேள் : அவைகளின் சீழ்க்கையை
ஏதோ ஒரு முக்கியமான விருந்தாளியின் வருகைக்கான கட்டியமாக இருக்கிறது அது.
ரத்தம் கக்கிச் சாகும் அந்திச் சூரியனின் நிறமாலையில்
அலர்ந்த மலர்களில் தேன் பருகிக் களிக்கும் வண்ணத்திகளின் நடுவே
நான் அதைப் பார்த்தேன்.
ஒருபோதும் பார்த்திராத மஞ்சள் கோத்தும்பியை நான் பார்த்தேன்.
காலநிறமாற்றத்தில் உடல் கொள்ளும் அதன் ஓயாத பறத்தலில்
மழைநீராய் வழிகின்றது காலம்.
நீர்ச்சிதறல்கள் எளியவையெனினும்
அதன் சிக்கலான ஸ்படிகங்களை உடைத்து உடைத்து அழைத்துச் செல்கிறது
கண்ணாடிகளின் உலகத்திற்கு.
நிறமாலைகள் இசைகின்றன. தீராது ஒளிர்கின்ற எல்லையற்ற கண்ணாடியில்
ஓயாது கொத்திக் கொண்டிருக்கிறது மரங்கொத்தி.
எல்லையற்ற ஸ்படிகப்பரப்பில் என்னை நானே பார்த்துக்கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருப்பது நானா? இன்னொரு நானா?
ஏன் அப்படிப்பட்ட பிம்பம் என் நினைவிலியில் இருக்கின்றது?
*****
இந்தக் கவிதை மஹாரதி அவர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, Timebyrinth என்ற என் கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. மேலும் ஜெர்மன், ரோமானியன், பல்கேரியன் ஆகியமொழிகளில் வெளியான என் கவிதைத் தொகுப்புகளிலும் உள்ளது. ஸ்பானிஷ், ரஷ்யன் மொழிகளின் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.
***************************************