• Thu. Sep 21st, 2023

கும்பம் தாளித்தல் !

ByGouthama Siddarthan

Aug 13, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

 

சென்னையில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கிறது, ஆகவே, பொதுமக்கள் அனைவரும்,சென்னையிலிருந்து வருபவர்கள் யாரையும் ஊருக்குள் அனுமதிக்கக்கூடாது, மீறி அனுமதித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இது கலெக்டர் உத்தரவு என்று ஒரு காணொளி தண்டோரா செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

தமிழக அரசு, இப்படி ஒரு அவசர சட்டத்தை சமீபத்தில் அமலுக்குக் கொண்டு வந்ததா? அல்லது, தொற்று பரவுவதை மனதில் கொண்டு, அந்தந்த மாவட்ட அதிகாரிகளே அதற்கேற்ற வகையில் கட்டுப்பாடுகளை விதித்து நடந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்களா என்பது விளங்கவில்லை.

இருந்தாலும், “சென்னையில் இருந்து வருபவர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது’ என்று சொல்வது மிகவும் தவறான ஒரு போக்கு. சென்னையில் இருப்பவர்களை மனரீதியாக உருக்குலைத்துப்போடும் தன்மை கொண்டது இது. ஏற்கனவே சென்னை வாழ் மக்கள் உளவியல் ரீதியாக கடும் மன உளைச்சலில் உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை மேலும் உருக்குலைக்கும் விதமாகத்தான் இதுபோன்ற உத்தரவுகள் கொடூரமாக சிரிக்கின்றன. சென்னையில் இருப்பவர்கள் அனைவரும் நோய்த் தொற்றாளர்கள் என்பது போன்ற மிக மிக கொடூரமான பார்வை இதுபோன்ற செய்திகளில் ஊடாடுகிறது.

இந்தப்பேரிடர் காலத்தில், மிகவும் மோசமான பல்வேறு நிகழ்வுகளின் பதிவுகளை சமூக ஊடகங்களில் மௌன சாட்சிகளாக கையறு நிலையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அல்லது, சாமானியர்களான நாம் அந்த அவலத்தை கடக்கும் வழியாக, காமெடியர்களாக மாறி, மீம்கள் போட்டு தாண்டிப்போகிறோம்.

கொரோனா தொற்று உலகம் முழுக்க பெரும் சூறைக்காற்றாக சுழன்றடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கிற கொடூரமான இந்தக்காலகட்டத்தில், உலகம் முழுக்க மீள் வாசிப்பு செய்யப்படும் ஆல்பர்ட் காம்யூவின் “தி பிளேக்” நாவல், தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மரணவாதையை, பக்கங்கள்தோறும் சுழட்டுகிறது. மனிதத்தின் அடிப்படையான உணர்வுகளுக்கும் மரணத்தின் கொடுங்கரங்களின் நசுக்கல்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தடுமாறும் அறம், அதிகாரம், நேசம், வன்மம், மனிதாபிமானம், கையறுநிலை, சூழ்ச்சி, அரசியல்… என பல்வேறு பரிமாணங்களை முன்வைக்கிறது.

1849 – 50 களில் பிரெஞ்சு அல்ஜீரிய நகரமான ஒரான் என்னும் நகரத்தில் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொண்ட பிளேக் என்னும் கொடுமையான தொற்று நோய் பரவிய நிகழ்வை, தான் வாழ்ந்த சமகாலத்திய (1940) நிகழ்வாக மாற்றி எழுதினார் காம்யூ.

1947 ல் பிரெஞ்சிலும், 48 ல் ஆங்கிலத்திலும் வெளிவந்த இந்த நாவலை உலகமே கொண்டாடிக் களித்தது. தற்போது தமிழ்நாடு என்னும் நம் சிறுபகுதி உட்பட உலகம் முழுமைக்கும் நடந்து கொண்டிருக்கும் ஊரடங்கு, அப்போதைய பிளேக் காலகட்டத்தில் எவ்வாறு நிகழ்ந்தது, இதை எவ்வாறு மக்கள் எதிர்கொண்டனர், இப்பொழுது பெரும் பிரச்சினைக்குள்ளாகியிருக்கும், “ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்குப் போகும் வழி முறைகள் ” குறித்தெல்லாம் விரிவான காட்சிகளை முன்வைக்கிறார் ஆசிரியர். தற்போது நிகழ்வது போலவே, ஈ பாஸ் முறை, அப்பொழுதும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு போவதென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதிக்கடிதம் பெற்றே போகவேண்டும்.

நாவலில் முக்கியமான ஒரு நிகழ்வைப் பாருங்கள் : பாரிஸில் தன் காதலியை விட்டுவிட்டு செய்தி சேகரிக்க அந்த நகருக்கு வந்த பாரிஸ் பத்திரிகையாளனான ரேமாண்ட் ராம்பேர், இந்த கோரண்டைனில் மாட்டிக் கொள்கிறான். ஊர் திரும்ப வழிதெரியாது திகைத்து, அரசுத்துறையில் அனுமதி வாங்குவதற்காக, டாக்டர் பெர்னார்ட் ரியோ விடம் மருத்துவச் சான்று கேட்கிறான். அவர் மறுத்துவிடுகிறார். அதன்பிறகு ராம்பேர், சில இடைத்தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து அந்த ஊரிலிருந்து தான் தப்பிக்க செய்யும் முயற்சிகள், ஒரு கட்டத்தில் முயற்சி வெற்றியடையும் சூழல், ஆனால், அதை நிராகரித்து விடும் அவனது காருண்யம்… ஒரானிலேயே தங்கி மக்கள் சேவையில் ஈடுபடும் அந்தப் பத்திரிகையாளனிடம் நெகிழும் சகமனிதன் மீதான நேசிப்பு என்பது, தமிழின் செம்மாந்த மரபில் தோன்றிய சங்கக்கவிஞன் கணியன் பூங்குன்றனின் நேசிப்பு.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சக மனிதனை நேசிக்கச் சொன்ன அவனது வார்த்தைகளில் மலர்ந்து வந்த மரபு, கண்முன்னாலேயே சரியும் சூழலை இப்பேரிடர் நிகழ்த்துகிறதோ என்று சஞ்சலப் படுத்துகிறது என் சென்னை நண்பர்கள் தொலைபேசியில் பகிர்ந்து கொண்ட செய்திகள்.

‘ஊரிலிருக்கும் உறவினர்கள், “இங்கு வர வேண்டாம். வந்தால் போலீஸ் உன்னைப் பிடித்துக் கொண்டு போவது மட்டுமல்லாது, எங்களையும் பிடித்துக் கொண்டு போய்விடும்..” என்று சொல்வதாக வருந்துகிறார் ஒரு நண்பர்.

இதைவிட இன்னொரு நண்பர் சொன்னது உயிரைத் தின்னும் அவலம். ” நீங்கள் சென்னையிலோ அல்லது வேறெங்கிலுமோ, இடம், சொத்து எதுவும் வாங்கிப் போட்டிருக்கிறீர்களா? வெளியே யாருக்காவது கடன் தந்திருக்கிறீர்களா? உங்கள் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு? அதை யாருடைய பெயருக்கு கார்டியன் நியமித்துள்ளீர்கள்? நீங்களும் உங்களது குடும்பமும் போய்விட்டால், எதுவும் தெரியாமல் போய்விடும், எல்லாவற்றையும் சொல்லுங்கள்..” என்று பங்காளிகள் தொலைபேசியில் அன்பாகக் கேட்கிறார்களாம்…

“எங்கள் ஊரில் ஏற்கனவே என்னை சாதிய வன்மத்துடன் எதிர்கொள்வார்கள். இப்பொழுது இதுவும் சேர்ந்து கொண்டது..” என்று உளைச்சல் படுகிறார் இன்னொரு நண்பர்.

மற்றொரு நண்பர், “எங்கள் ஊருக்குள் சென்னைக்காரர்கள் யாரும் வரக்கூடாது.. என்று ஊர்க் கட்டுப்பாடு போட்டிருக்கிறது” என்கிறார்.

என் பால்ய வயதில் நான் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நடந்த, “கும்பம் தாளித்தல்” என்னும் ஒரு சடங்கு நிகழ்வு ஞாபகம் வருகிறது.

தங்களது ஊருக்குஅம்மை, காலரா, பேதி போன்ற கொள்ளை நோய்கள் வராமல் தடுப்பதற்காக “கும்பம் தாளித்தல்” என்னும் ஒரு சடங்கை செய்வார்கள் ஊர்மக்கள். அதாவது, பயன்பாடில்லாமல் உடைந்து கிடக்கும் ஆட்டுக்கல் (உரல்), அம்மிக்கல், உலக்கை, முறம், விளக்குமாறு… போன்றவைகளை ஒரு வண்டியில் போட்டு ஏற்றிக் கொண்டு மேளதாளத்துடன் சாவுக்கோட்டு அடித்துக் கொண்டு ஊர்வலமாகக் கொண்டு போவார்கள். ஊர்வலத்தின் முன்னால் அந்தக் கிராமப் பூசாரி வாய்க்கட்டு கட்டிக்கொண்டு, மணியடித்துக்கொண்டே நடக்க, ஆண்களும் பெண்களும் குலவை கொட்டிக்கொண்டே பின்னால் போக, ஊர்வலம் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நிற்கும். உடனே அந்த வீட்டிலுள்ள சிதிலமடைந்த பழைய பொருட்களைக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுவார்கள். அந்த ஊர்முழுக்க இந்த ஊர்வலம் சுற்றி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே உள்ள எல்லைப்பகுதியில் கொண்டுபோய் பூஜை செய்து பொருட்களைக் கொட்டிவிட்டு ஊர் திரும்புவார்கள். இதனால், கொள்ளை நோய்களை ஊருக்கு வெளியே விரட்டி விட்டதாகவும், இனி எல்லை தாண்டி ஊருக்குள் வராது என்பதாகவும் கிராமத்து ஐதீகம்.

“உன்னையெல்லாம் கும்பம் தாளிச்சுடணும்..” என்கிற சொலவடையின் உட்கரு இதுதான்.

இந்த “கும்பம் தாளித்தல்” சடங்கில் பல வடிவேல் காமெடிகள் நடக்கும். இந்தப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஊருக்கு வெளியே போகும் ஊர்வலத்தை தங்களது கிராமத்து எல்லைகளில் கொட்டுவதற்கு அடுத்த கிராமத்துக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கும்பலாகத் திரண்டு வந்து தங்களது வீடுகளில் இருந்த சாமான்களையெல்லாம் ஏற்றி குலவை கொட்டிக்கொண்டே தங்களது கிராமத்து எல்லைகளைக் கடந்து அடுத்த எல்லையில் விடுவார்கள். இப்படியே ஊர்வலம் போய்க்கொண்டே இருக்கும். யாரும் இல்லாத ஒரு தருணம் பார்த்து, ஆளரவமற்ற ஒரு எல்லையில் சடாரென அந்தப்பொருட்களையெல்லாம் கொட்டி விட்டு ஒரே ஓட்டமாய் தங்களது ஊருக்கு வந்து விடுவார்கள். அதன்பிறகு, கும்பம் தாளித்துக் கொட்டப்பட்ட அந்த எல்லைப்பகுதிக்காரர்கள், இதேபோல பூஜை புனஸ்காரங்கள் செய்து, அந்தப்பொருட்களை தங்களது வண்டியில் ஏற்றிக் கொண்டு வேறு எல்லைகளில் கொண்டுபோய்க் கொட்டுவார்கள் என்பது பிளாக் காமெடி.

இதிலும் சாதிய அதிகாரங்களும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன என்பது தனியாக ஒரு பெரும் ஆய்வு செய்ய வேண்டிய அளவிலான விஷயம்.

இதுபோன்ற காலனிய, சாதிய மனோபாவத்தில் இயங்கும் கிராமங்கள் கடந்த 10 – 20 வருடங்களாக அதிலிருந்து சரிந்து தங்களது ஆதிக்க முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், கிராமிய அமைப்பின் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் நகரங்களுக்கு புலம்பெயர்ந்து கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசின் இப்படியான ஒரு போக்கும், கட்டுப்பாடுகளும், நடைமுறைப் படுத்தல்களும் சமூக விழிப்புணர்வு பெற்று வரும் நவீன சமூக அமைப்பில் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். இது ஒரு நவீன தீண்டாமையாக உருமாறும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது இடர்பாடான ஒரு சூழலில் தனது ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும் என்று நினைப்பது உலகக் காவியங்களில் வருகிற நோஸ்டால்ஜியா என்னும் சிறுபருவத்து ஏக்கம். இந்த உணர்வு ரீதியான பயணத்தை நிகழ்த்தும் சாகச நாயகர்கள் காவிய புருஷர்களாக மாறுகிறார்கள். பாக், பீத்தோவன் போன்ற புகழ்பெற்ற இசைமேதைகளின் சுரங்கள் நோஸ்டால்ஜியாவின் தலைசிறந்த படைப்புகள். அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டிருந்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் ஸோல்ஷெனிட்ஸின், கடைசி காலத்தில் தனது ரஷ்ய மண்ணுக்கு திரும்பியபோது, விமானத்தை விட்டு தரையில் கால் வைத்தத்தும், அந்த மண்ணில் புரண்டு புரண்டு கண்ணீர் உகுத்தார். ஆகாசமெங்கும் நிறைந்த அந்த மண் புழுதி மாபெரும் நோஸ்டால்ஜியக் காவியம்.

பிழைப்புக்காக சென்னைக்கு வந்திருந்த ஒரு வடமாநிலத் தொழிலாளி, கொரோனா சூழலால் வேலையில்லாமல் ஊருக்குத் திரும்ப முடியாமல், அரசாங்கம் அமல்படுத்தியிருந்த மிக மோசமான ஊரடங்கில் மாட்டிக்கொண்டு, தனது சிறுவயது மகனுடன் செய்வதறியாது, தன் முதலாளியின் சைக்கிளைத் திருடிக்கொண்டு போகிறார். அப்பொழுது, அவர், ‘தனது திருட்டை மன்னிக்கும்படி, தனது நிலை குறித்து விளக்கி தன் முதலாளிக்கு, எழுதி வைத்து விட்டுப்போன அந்த மன்னிப்புக்கடிதத்தின் உணர்ச்சிமிகு வரிகள்’ நோஸ்டால்ஜியக் காவியம்.

இந்த காவிய உணர்வுகளைத்தான் மிகவும் மொக்கைத்தனமாக பரபரப்பு பிரேக்கிங் நியூஸாக பொதுப்புத்தியில் ஏற்றி வைத்திருக்கின்றன ஊடகங்கள். இது மிகவும் தவறான பார்வை. இங்கே, வேலையின்மையிலும், தங்களது வசிப்பிடத்திற்கு வாடகை, மின்வரி போன்ற மிக அத்தியாவசிய செலவுகளுக்குக்கூட வசதியில்லாத கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், பசி, பட்டினி, தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரக்கூட ஆதரவற்ற கையறு நிலையிலும், இன்னும் எத்தனை நாள் இந்த லாக் டவுன் நீண்டு கொண்டே போகுமோ என்ற விரக்தியிலும்தான் தங்களது சொந்த ஊருக்கும், சாதி சனத்தின் ஆதரவையும் நாடி வருகிறார்கள் மக்கள்.

இதில்நோய்த் தொற்று பரவுகிறது என்பதற்காக பயந்து கொண்டு வருபவர்களின் விழுக்காடு மிகவும் குறைவு. சென்னையிலிருந்து ஊர் திரும்புகிறவர்களை எவ்வளவு கட்டுப்பாடுகள் பரிசோதனைகள் செய்து அனுமதிக்கப்படுகிறது என்பதை சமூக ஊடகங்கள் கண்டனத்தோடும் காமெடியோடும் சொல்கின்றதை ஒருகணம் யோசிக்கவேண்டும். முறையான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு அனுமதி வழங்கும் ஈ பாஸ், அதிலும் போலி ஈ பாஸ்கள் வந்துவிடுகின்றன என்று சுங்கச் சாவடிகளில் பல அடுக்குச் சோதனைகள், பலமுறை உடல் வெப்பப் பரிசோதனைகள், இப்படிப் பல பரீட்சைகளில் தேர்வாகி தங்களது மாவட்டத்துக்குள் நுழையும் நுழைவு வாயிலில் இறுதியாக ஒரு அக்கினிப் பரீட்சை : நோய்த்தொற்று உள்ளதா என்ற முழுமையான மருத்துவப் பரிசோதனை. தேர்வு முடிவு வரும்வரை கும்பலோடு கும்பலாக அருகில் இருக்கும் மண்டபத்தில் காத்திருப்பு. பரீட்சையில் பெயிலானவர்கள் அந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார்கள். பரீட்சையில் பாஸானவர்கள் வீட்டிற்கு வந்தாலும், மீண்டும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளல். இதில் எங்கே அய்யா இருக்கிறது உங்கள் கொரோனா?

இவ்வளவு கட்டுப்பாடுகள், வடிகட்டல்களுக்குப் பிறகும் சென்னைக்காரர்களிடமிருந்துதான் கொரோனா பரவுகிறது என்று வதந்திகள் பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும்.

இவ்வளவு கட்டுப்பாடுகளிலும் சென்னை டூ செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் பதட்டமாய் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் மனநிலை பல்வேறு காவியங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

“நாவல் என்பது ஒரு நெடுஞ்சாலையில் நகரும் கண்ணாடி” என்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஸ்டெந்தால் – ன் படிமம் எனக்குள் சுழன்று சுழன்று அடிக்கிறது. (19 ஆம் நூற்றாண்டில், யதார்த்தவாதம் என்கிற ஒரு இலக்கியப் பார்வையை உருவாக்கி அது குறித்த விரிவான கோட்பாடுகளை முன் வைத்த யதார்த்தவாதத்தின் தந்தை என்று உலகளவில் போற்றப்படுபவர்) ஒரு நீண்ட கண்ணாடியைப் போல நகர்கிறது அந்தப்பயணம். இந்தப்பயணத்தில் எத்தனை நாவல்கள் ரத்தமும் சதையுமாக துடிக்கின்றன என்பதை பிரக்ஞாபூர்வமாக உணர்கிறேன்.

இந்த இடத்தில் நம் இந்திய இதிகாசமான மஹாபாரதத்தில் வருகிற ஒரு கண்ணாடியை நினைவு கூர்கிறேன் : பாண்டவர்கள் காட்டுக்கு வனவாசம் போகும்போது எந்தப் பகுதிக்கு போவதென்று தெரியாது முழிக்கிறார்கள். தாங்கள் இந்த அஞ்ஞாத வாசத்தை வாழ்ந்து கழிக்கும் நிலம் எது என்று திக்கு தெரியாது திகைக்கும்போது, ஸ்ரீ கிருஷ்ணர், ஒரு கண்ணாடியை அவர்கள் முன் வைக்கிறார்.

அது நம்மை நாமே பார்த்துக் கொள்கிற கண்ணாடி அல்ல. அது விடைகாணா வாழ்வின் ஞான திருஷ்டி.

அந்த நிலைக்கண்ணாடியின் முன் போய் நிற்கிறான் பாண்டவர்களில் மூத்தோனான தருமன். அலையடிக்கும் அந்த ஆடியின் பளபளத்த ஸ்படிகம் சரேலென விலகி, எல்லையற்ற விருட்சங்கள் பல்கிப் பெருகும் பிரம்மாண்டமான ஆரண்யமாக கண்ணாடியில் விரிந்து பரவுகிறது. வெட்டி வெட்டித்தாவும் அந்த விருட்சங்களின் கிளையோட்டத்தில் தனது கண்களை நிலை குத்தியவனாய் ஆழ்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் தருமன். தனது பூர்வாசிரமான சதஸ்ருங்க வனத்தின் வாசனை அவனது நாசியில் ஏறியடிக்கிறது.

அடுத்து பீமனை அழைத்தார் கிருஷ்ணர்.

பீமனுக்கு முன்னாள் அலையடித்தெழுகின்றன நீர்நிலைகள். எல்லையற்ற சமுத்திரம் ஹூங்காரமிடுகிறது. பிரவகித்தோடும் அலைமேடுகள் சங்குகளையும், கிளிஞ்சல்களையும் கரையொதுக்குகின்றன. மொட்டவிழ்ந்த பூக்கள், நுகர்ந்து கீழே விழுந்த உதிர்பூக்கள், காய்ந்த சருகுகள் என்று அனைத்தும் சுழன்றோடும் வெள்ளத்தில் அளைகின்றன. கட்டுக்கடங்காத தன் ஆக்ரோஷமான மன உணர்வுகளை அந்த ஹூங்காரத்தில் பதித்து பார்த்துக் கொண்டிருந்தான் பீமன். சங்கம் அவன் காலடியில் உறுமியது.

அடுத்து வந்த அர்ச்சுனன் கண்களில் நிறைகிறது நீலநிற ஆகாயம். அண்டவெளியெங்கும் சிறகடித்துத் திரியும் பறவைகளின் பதற்றமுறும் றெக்கையடிப்பு வானேகுகிறது. ஒரு பறவையை பின்தொடர்ந்த அர்ச்சுனனின் கண்கள் அந்தப் பறவையின் கண்களில் நிழலாடிய அன்பை அவதானித்து நோக்குகிறான். அவனது அம்பறாத்தூணியில் நிறைந்திருந்த அஸ்திரங்கள் காணாமல் போய்க் கொண்டேயிருக்கின்றன.

நகுலனுக்கு தங்கத்தை உருக்கி வீசினாற்போல கண்ணாடியெங்கிலும் நெருப்பு வளையங்கள் சுழன்று சுழன்று தாவுகின்றன. அஸ்வத்திற்கு நிகரான அப்பாய்ச்சலில் தீப்பிழம்புகள் தனது கால்களில் கவ்வித் தாவுவதை உணர்கிறான் ஸ்யாமள வர்ணன். பிடரி மயிர் அலைபட நுரை கக்கிப் பாயும் மூர்க்கத்தோடு கானகம் முழுவதும் தேடி ஓடி அலைந்து தெரிந்ததில் அகப்பட்டதென்ன?

ஒரு பெரும் சூறைக் காற்று சகாதேவனின் கண்களில் சுழல்கிறது. காற்றின் கனத்த வீச்சில் காலம் சுழல்கிறது, வான்கோள்கள் சுழலுகின்றன. அவனது சுவாச கோசங்களெங்கும் நிரம்பி வழிகிறது சூறாவளி. காற்றே, உன் வலிமையான கரத்தை வீசு. திசை முகட்டிலே கிளைத்தெழும் காலசர்ப்பம் வான்கோள்களை விழுங்கட்டும்.

இறுதியாய் அந்த மாயக் கண்ணாடி முன் நிற்கிறாள் திரௌபதி : சட்டென எல்லாக் காட்சிகளும் மங்கி வெறுமையாகிறது கண்ணாடி. அதன் ஸ்படிகத்தில் பூசப்பட்ட ரசப்பூச்சு உருகி வழிய வெற்று வெளியாக விரிகிறது கண்ணாடி.

அந்த வெளியெங்கும் இழைகிறது ஒரு லயமான இசை. அந்த இசைச் சுரங்கள் தருமனின் நிலத்தை பிரதிபலிக்கின்றன. பீமனின் நீர்நிலையையும், அர்ச்சுனனின் ஆகாயவெளியையும் அளைகின்றன. நகுலனின் நெருப்பு வர்ணத்தையும், சகாதேவனின் வான்கோள்களின் வளி மண்டலத்தையும் இணைத்து, இணைத்து பஞ்ச பூதங்களின் சுழல்வை அதுவரை கேட்டறியாத இசையாய் உருமாற்றுகின்றன. மாயக்கண்ணாடி மறைந்து மறைந்து சிறகடித்தெழுகிறது கான வெளி.

அந்த உருமாற்றம் என்பது பஞ்ச பூதங்களின் சுழல்வு மாத்திரமல்ல. பஞ்ச பாண்டவர்களின் ஆன்மாவில் கசியும் நோஸ்டால்ஜியா. தங்களது இளம்பிராயத்து வசிப்பிடத்தின் நினைவுகள் பற்றிய ஏக்கத்தை ஒரு தீராத இசையாக மாற்றிப் போடுகிறாள் திரௌபதி.

“ஹே பாண்டவ, பேரிடர் நிரம்பிய காலங்களில், துயர் நிரம்பிய காலங்களில் தனது இளம் பருவத்து ஞாபகங்களுக்குப் போவதென்பது மானுடத்தின் துயர் மிகு ஏக்கம். நீங்கள் பிறந்து வளர்ந்து சுற்றித்திரிந்த வனங்களின் விருட்சங்களையும், அலையடித்துக் கழித்த நீர்நிலைகளையும், சிறகடித்துத் திரிந்த பறவைகளையும், மூங்கிற்புள்ளின் உராய்வுகளில் எழுந்த நெருப்பும், காற்றும் இணைந்த சிந்தனைக் குதிரைகளையும் ஒரு இசைப்பாடலாக மாற்றிக் கொண்டாடுங்கள். வீடு திரும்புதல் என்பது ஆனந்தமயமான ஒரு இசை. அதைத்தான் குறிப்பால் உணர்த்துகிறாள் பாஞ்சாலி..” என்கிறான் கிருஷ்ணன்.

ஆகவே, வீடு திரும்புதலை மிக மோசமான வன்செயல் போலவோ, கொடூரமான கட்டுப்பாடுகள் மிகுந்த மரணப் போராட்டம் போலவோ தமிழக அரசு உருமாற்றுவது மிகவும் வேதனைக்குரியது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் அரசுத்துறையும் இந்த விஷயத்தில் மிகவும் உணர்வு பூர்வமாகச் செயல்படவேண்டும். இப்படி சென்னைக்காரர்களை அனுமதிப்பதன் மூலம் நாடு முழுக்க தொற்று பரவும் என்பது போன்ற ஒரு மிக மோசமான தோற்றத்தை உருவாக்குவது என்பது ஆட்சியாளர்களின் கையறுநிலையைத்தான் குறிக்கும்.

மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட உணர்வு பூர்வமான இந்த விஷயத்தை, சரியான சட்டரீதியான வழிமுறைகளை அமல் செய்து, முறையான கட்டுப்பாடுகள் கொண்டு, ஆரோக்யமான ஒரு நல்ல சூழலை நடைமுறைப்படுத்த வேண்டும்.

***********

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page