- கிளப் டேவிடோவ்
(இந்தப் பத்தியை முதன் முதலாக தனது இதழில் வெளியிட்டு, அதற்கு இதழாசிரியர் எழுதிய முன்னுரை.)
இன்று முதல், Перемены – “மாற்றங்கள்” – என்னும் நம் இதழில், இந்திய கவிஞரும் எழுத்தாளருமான கௌதம சித்தார்த்தனின் தொடர் கட்டுரைகளை பத்தியாக வெளியிடத் தொடங்குகிறது, இந்தப் பத்தி எழுத்து ரஷ்ய இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அவரைப்பற்றிச் சொன்னால், ஒரு தமிழ் கவிஞர் என்று சொல்வது மிகவும் துல்லியமாக இருக்கும் – தமிழர்கள் இந்திய மக்களின் குடும்பத்திற்குள் ஒரு சிறப்பு தேசம், அவர்களின் சொந்த சிறப்பு பாரம்பரியக் கலாச்சாரம் கொண்ட மக்கள். தமிழ்நாடு தென்னிந்தியாவில் உள்ள ஒரு மாநிலம். இங்குதான் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றனர். ஆன்மிக அற்புதங்களினூடே கலந்திருக்கும் ஆழ்நிலை மாயவாதத்திலிருந்து பிரிக்க முடியாத கவித்துவம் நிரம்பிய இடம் இது. இவ்வளவு சிறப்புகளும் சுவையும் கொண்ட இடம். அற்புதங்கள் நிரம்பிய மற்றும் உண்மையான அன்பு மற்றும் சத்தியத்தின் மீதான அன்பு ஆகியவற்றால் நிறைவுற்ற இடம்.
நான் இந்தியாவில் இருந்த தருணத்தில், தற்காலத் தமிழ்க் கவிஞர் கௌதமாவிடமிருந்து, மாற்றம் இதழுக்காக தொடர் பத்திகளை வெளியிடும் திட்டத்துடன் எனக்கு ஒரு செய்தி வந்தது.
ஒருகணம், அதை என்னால் நம்ப முடியவில்லை!
இது ஒருவித இலக்கியப் புரளியாக இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது. அந்த முழு கதையும் மிகவும் நம்பமுடியாததாக இருந்தது. மாஸ்கோவின் இலக்கியவாதிகளில் ஒருவர், இந்தியா மீதான எனது ஆர்வத்தைப் பற்றி அறிந்து, என்னை ஏமாற்ற முடிவு செய்தாரா? மற்றபடி… இந்தத்திட்டம் மிக அற்புதமாகத் தெரிகிறது. இருப்பினும், இந்தியா புகழ் பெற்ற நம்பமுடியாத அதிசயங்களில் கிட்டத்தட்ட 80% தமிழ்நாடு ஒரு மாநிலம் என்பதை நான் மறக்கவில்லை.
அத்தகைய எண்ணங்களுடன், எனக்கு அனுப்பப்பட்ட பத்தியைத் திறந்து, கௌதமாவின் இந்த முதல் (இன்று வெளியிடப்பட்ட) கட்டுரையின் சில வாக்கியங்களைப் படித்த பிறகு, இதுபோன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதை உடனடியாக உணர்ந்தேன். ஒரு அதிநவீன சிந்தனையாளர் கூட , இவ்வளவு துல்லியமான மற்றும் எளிமையான விதத்தில், அதே நேரத்தில் ஆழமான மற்றும் புத்திசாலித்தனமான, உள்ளுணர்வு சார்ந்த ஆய்வுக் கண்ணோட்டத்தில், கவித்துவத்தின் அழகியலை, ரஷ்யமொழியின் ஆன்ம தரிசனமாக சிருஷ்டித்துவிட முடியாது.
அப்படி அழகு, காதல், மரணம் பற்றி எழுத உண்மையான தமிழனால் மட்டுமே முடியும். ரமண மகரிஷி, வள்ளலார் ராமலிங்கர் போன்ற ஆன்மாக்களை உலகுக்கு வழங்கிய மண்ணிலிருந்து வந்த அந்த எழுத்து, ரஷ்ய நிலத்தின் தாய்ப் பாலுடன், அந்த மகத்தான மக்களின் உணர்வை உறிஞ்சி, அன்பு கெழுமிய மொழியில் அமைந்திருந்தது அது!
இந்த பத்தியின் முடிவில் நீங்கள் காணும் ‘பசியின் தெய்வம் நல்லதங்காள்’ பற்றிய அற்புதமான கதை, இறுதியாக அதன் காவிய தரிசனம் முடியும்போது, ரஷ்ய மற்றும் தமிழ் உள்ளங்களுக்கு இடையே நேரடி பரிமாற்றத்தை உருவாக்குகிறது. அதற்காக நான் கௌதம சித்தார்த்தனுக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்ய மொழியில் இந்த அற்புதமான திட்டத்தை உருவாக்க, கௌதம சித்தார்த்தனின் எழுத்துக்களை ஆங்கிலத்திலிருந்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துத் தந்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நிகோலாய் ஸ்வியாகின்ட்சேவுக்கும் சிறப்பு நன்றி.
எனவே, “டான் நதியின் மேலே பறக்கிறது ஆலா!” என்ற பத்தியின் முதல் நெடுவரிசையைப் படியுங்கள், இது மெரினா ஸ்வெட்டேவாவைப் பற்றியது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
***
கிளப் டேவிடோவ் ‘மாற்றங்கள்’ என்னும் ரஷ்ய மொழி இதழின் ஆசிரியர். தற்போது மாஸ்கோவில் வசிக்கிறார்.