- கௌதம சித்தார்த்தன்
****
முத்தம்
“ஆலா ஆலா.. பூப்போடு” என்று பாடுகிறாள் மரினா ஸ்வெட்டேவா, அவளது கைகள் வானைநோக்கி உயருகின்றன. அன்னா அக்மதோவாவும் தனது கைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு ஆடுகிறாள். அவர்களது கரங்கள் டான் நதியின் மேலாகப் பறக்கும் ஆலா பறவையின் நிழலில் அலைவுறுகின்றன. இருவரது கைவிரல் நகங்களிலும் வெண் பூக்கள் விழுந்திருக்கின்றன. ஸ்வெட்டேவா, “Your name is a bird in my hand” என்று குதூகலத்துடன் பாடுகிறாள். ஆனால் அக்மதோவாவோ, “I Don’t Like Flowers…” என்று பாடுகிறாள். சட்டென அவளது கை விரல் நகத்திலிருந்த வெண்பூக்கள் உதிர்கின்றன நட்சத்திரங்களைப்போல.
ஆலா என்பது உயர உயரப்பறக்கும் எங்கள் நாட்டின் அதிர்ஷ்டப் பறவை. எங்கள் சின்னஞ்சிறு வயதில் குதூகலமாய் நாங்கள் விளையாடும் விளையாட்டில் பங்கு பெரும் தோழி. ஆகாயத்தில் அவை எங்களின் தலைக்கு மேலே பறந்து போகும்போது, “ஆலா ஆலா.. பூப்போடு” என்று பாடிக்கொண்டே நாங்கள் கைகளை அவைகளுக்கு நேராக நீட்டுவோம். சற்றைக்கெல்லாம், எங்கள் கை நகங்களில் வெண்ணிற வடிவில் பூ தோன்றியிருக்கும். அது அதிர்ஷ்டப்பூ! பூ விழுந்தவர்களின் குடும்பத்தில் சந்தோஷமும் செல்வச் செழிப்பும் பெருகும் என்பது எங்கள் தமிழ் பண்பாட்டின் தொன்மையான ஐதீகம்!
ஆலா என்பது என் nostalgia! அது டான் நதியின் மேலாகப் பறக்கிறது! றெக்கைககளைக் கடைந்து கடைந்து செல்லும் அதன் அசைப்பில் காலம் ஒரு Kreutzer Sonata வின் லாவகத்துடன் இசைகிறது.
ஓ, எங்கள் எந்தையே , அமைதிமிகு டான்நதியே !
அமைதியான நீ இப்பொழுது ஏன் கலங்கி ஓடுகிறாய்?
நான் கலங்காமல் அமைதி கொள்வதெங்கனம்?
எனது அலைக்கரங்களிலே வெள்ளிமீன்கள் துள்ளிப்பாய்கின்றன.
நான் கலங்காமல் அமைதி கொள்வதெங்கனம்?
பழம்பெரும் கொஸாக்கியப் பாடல் ஒலிக்கிறது.
ரஷ்ய சமூகத்தின் வளர்ச்சியையும், சிதைவையும், துயரம், ஆனந்தம், நம்பிக்கை, விரக்தி.. போன்ற பல்வேறு பரிமாணங்களையும் ஒரு இலக்கிய சாட்சியமாக பார்த்தபடி ஓடிக்கொண்டிருக்கும் டான் நதியின் அலைமேடுகளில், மிகயீல் ஸோலக்கோவ் – ன் ஆன்மா அசைகிறது.
செம்மணி வளையல் ஓசை கேட்க ஆரம்பிக்கிறது. என் பால்ய பருவத்தில் அந்த டான் நதியின் யதார்த்த வாதத்தில் எவ்வளவு ஆனந்தமாக மூழ்கி முக்குளித்திருக்கிறேன். எத்தனை எத்தனை அற்புதங்களை, ஆனந்தமான தருணங்களை அனுபவித்திருக்கிறேன். இரவுகள் வெண்ணிறமாக மாறும் அற்புதத்தை நிகழ்த்தும் அந்த சூதாடியின் வலிப்பு நோய் என்னைப் பற்றிப் படர்ந்த அந்தப் படலத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். இந்தியாவின் சிறுமாநிலத்தில் புழக்கத்தில் இருக்கும் உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழ், 1950 களிலிருந்து 90 கள் வரை 40 ஆண்டுகளாக, ருஷ்ய இலக்கியம் தோற்றுவித்த யதார்த்தவாதப் போக்கில் கட்டுண்டு கிடந்ததை, ருஷ்ய வாசகா, உன்னையல்லாது நான் யாரிடம் பகிர முடியும்? தனது இலக்கியப் போக்கின் முன்னோடிகளாக, டால்ஸ்டாயையும், செக்காவையும், துர்க்கனேவையும், கார்க்கியையும் வரித்திருந்த எங்கள் யதார்த்தவாத இலக்கியப்போக்கில், அந்த பிரம்மாண்டமான டான் நதியில் நான் நீந்திக் களித்த அற்புதத்தை, நான் எந்த வடிவில் வெளிப்படுத்துவது?
20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகின் மகத்தான கலை இலக்கியங்களை, சர்வதேச இலக்கிய உலகிற்கு கொடுத்து, உலகின் அனைத்து மொழிகளையும் தனது இலக்கியபார்வைகளால் ஈர்த்து, உலக இலக்கியங்களின் முன்னோடியாக முன்னத்தி ஏர் பிடித்து உழுது சென்ற படைப்பாளர்களின் மண்ணில் மாதம் தோறும் உரையாடும் ஒரு அற்புதமான வாய்ப்பை எனக்குத் தந்த இதழ் ஆசிரியருக்கும் குழுவினருக்கும் 2000 ஆண்டு தொன்மை மிகுந்த தமிழ் மொழியின் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
ஒவ்வொரு முறை மூழ்கும்போதும் டான் நதி முத்துச் சிப்பிகளையும், கிளிஞ்சல்களையும், சங்குகளையும், பவளமணிகளையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தது.
இப்பொழுதும் அவை இருக்கும்தானே.. “நீங்கள் முதல் முறை நீராடிய அதே நதியில், மறுமுறை நீராடும்போது அதே நதியல்ல..” என்கிறான் தத்துவவாதி ஹெராக்ளிட்டஸ். அப்படியானால், அன்னா கரினினா மறைந்து போய்விட்டாளா? என்ன ஆனார்கள் கரமசோவ் சகோதரர்கள்?, பஸாரோவ்-ஐ நான் பார்க்க முடியாதா? கண்தெரியாத இசைஞனின் இசையை கேட்க முடியாதா? Backbone Flute -ன் ராகம்? கூழாங்கற்களைக் கூட காணமுடியாதா?
எல்லாமே காலவெள்ளத்தில் நகர்ந்து போயிருக்குமா?
ஆனால் ஒன்று, நிச்சயமாக மரினா ஸ்வெட்டேவாவை காண்பேன். அவள்,கடலலையின் நுரை, கடலின் நேற்ரோற்றில் பெயர் சூட்டப்பட்டவள், பாறைகளில் மோதிக் சிதறி ஒவ்வொரு காலையிலும் புதிதாய்ப் பிறப்பவன், கடலில் எம்பிப் பறக்கும் நுரை. என் கைகளில் சிறகடிக்கும் ஒரு பறவையாக அவளது பெயரைப் பிடித்து வைத்திருக்கிறேன்.
அவளை நிச்சயமாகக் காண்பேன். மேலும், மரினா ஸ்வெட்டேவாவை முத்தமிட விரும்புகிறேன்.
ஆம் !
அவளது “A kiss on the forehead” என்கிற கவிதையை 20 வருடங்களுக்கு முன்பான என் பதின்பருவத்தில் படித்து உடலெங்கும் உன்மத்தமேகி என் நிலக்காடுகளில் அலைந்து திரிந்தேன். அந்தக்கவிதை என் புலனில் பல்வேறு காட்சிகளை, surreal – ஆக நிகழ்த்திக் காட்டியது. இன்னும் சொல்லப்போனால், அதுநாள்வரை ரஷ்ய யதார்த்தவாதத்தின் முழுமையான பிடியிலிருந்த என்னை surreal – ஐ நோக்கி மீட்டெடுத்த கவிதை என்று அதனைச் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாது முதன்முதலாக, எனக்குள் விமர்சனப் பார்வையின் தீர்க்கமான கிரணங்களை மெல்ல மெல்ல ஒளி பாய்ச்சியதும் அதுதான்.
ஒரு முத்தம் என்ன மாதிரியான தோற்ற மயக்கங்களை எல்லாம் ஏற்படுத்துகிறது? ஆனால், ஏழு வரிகளே கொண்ட அந்த சொற்களின் கட்டமைப்பில் ஏதோ ஒரு விஷயம் மிஸ் ஆகிப்போனதாக என் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆம், பெரும் இலக்கியப் பரிச்சயமற்ற அந்த பதின்பருவ நாட்களில் அந்தக்கவிதை எனக்குள் பல்வேறு ரசாயன மாற்றங்களை நிகழ்த்தியது. உருவம், உள்ளடக்கம், உத்தி என்று எழுத்தின் பல்வேறு பரிமாணங்களை நோக்கி என்னைச் சிந்திக்க வைத்தது.
எனக்குள் துருத்தியபடி நிற்கும் இனம்புரியாத ஒன்றைத் தேடி உலகின் பல்வேறு க்ளாஸிக் கவிஞர்களின் கவிதைகளில் அலைந்து திரிந்தேன்.
எட்கர் அலன் போ – வின் “A Dream within a Dream” கவிதையில் “Take this kiss upon the brow” என்கிற படிமத்தை தாண்டி, பாப்லோ நெருடாவின் முத்தங்களை, ஆஸ்கார் ஒயில்டின் குருதி கசிந்த ரோஜாக்களை மற்றும் சேக்ஸ்பியரின் Sonnet – களை, ஒரே எட்டில் தாண்டிக் குதித்து, புஷ்கினின் நாடுகடத்தப்பட்டவர்களோடான முத்தங்களின் கசப்பைச் சுவைத்த கணங்கள், எனக்குள் புதிய விதமான ஒளியைத் தூண்டின.
ஸ்வெட்டேவாவின் இந்தக்கவிதையில் மிஸ் ஆன விஷயம் அந்த கணங்களில் சடுதியில் புலனாகியது :
நெற்றியில் ஒரு முத்தம் – துயரத்தை அழிக்கிறது.
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்.
கண்களில் ஒரு முத்தம் – தூக்கமின்மையைப் போக்குகிறது.
நான் உன் கண்களை முத்தமிடுகிறேன்.
உதடுகளில் ஒரு முத்தம் – தாகத்தைக் குடிக்கிறது .
நான் உன் உதட்டில் முத்தமிடுகிறேன்.
நெற்றியில் ஒரு முத்தம் – நினைவை அழிக்கிறது.
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்.
இந்த எட்டு வரிகளில் கவிதையானது, அதன் அழகியல் கட்டமைப்போடு கச்சிதமாக பொருந்தி வரவில்லை என்பதை உணர்ந்தேன். என் உடலெங்கும் ஒரு வித ஆசுவாசம். தீவிரமான தேடலின் அலைச்சலில் அகப்பட்ட ஆசுவாசம். இறுதி இரண்டு வரிகள் கூறியது கூறலாக மீண்டும் வந்திருப்பது ஒருவித cliche தன்மையின் சலிப்பை ஏற்படுத்தியது. முதல்வரியில் வந்த அதே வாக்கியம், “துயரம்” என்னும் வார்த்தையை ” நினைவு ” என்பதாக மாற்றிப்போட்டு, இறுதி வரியில் தோன்றுவது கவிதையின் ஓட்டத்தோடு பொருந்தவில்லை. அதுமட்டுமல்லாது, இந்தவரிகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகனுக்கு கடைசி இரண்டு வரியில் மிகவும் பிரம்மிக்கத்த தக்கதொரு படிமத்தை கவிஞர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், வாசகமனத்திற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நினைவுகளை அழிக்கும் முத்தத்தை ஒரு கவிஞன் எங்கு தருகிறான் என்பதுதான் மகத்தான கவிமனத்தின் சவால்!
இந்த இடத்தில், மிக மோசமான தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தோழிக்கு இறுதி முத்தம் கொடுத்த தனது அற்புதமான அனுபவத்தை, தனது பிரியமான நண்பனும் கவிஞனுமான போரிஸ் பாஸ்டர் நாக்குக்கு, ஸ்வெட்டேவா எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு பார்க்கலாம்.
“… நான் அவளருகே அமர்கிறேன். அறையில் உள்ள அனைத்தையும் தூண்டிவிட்டு, நான் அவள் கையைப் பற்றினேன். ஒரு கை ஒரு கைக்காக ஏங்குகிறது (ஒன்று அவளை வாரி எடுக்கும், மற்றொன்று அவளுடைய தலைமுடியைக் கோதுகிறது), நான் என் தலையைக் குவிக்கிறேன்: “மிரியாட்ஸ்.” நான் செய்யும் செயல்பாட்டைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறேன் – அவளுடைய நோய்த்தொற்றின் இதயம் வரை. முழு விழிப்புணர்வுடன்.
போரிஸ்! அந்த அதரங்களின் எதிர்ப்பு மற்றவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது ஒரு அற்புதம் மிகுந்த வெட்கத்தின் இழைவு. என் முதல் உண்மையான முத்தம்.மேலும், ஒருவேளை, அவளுடைய தாபம். போரிஸ், நான் மரணத்தை முத்தமிட்டேன். வாழ்வின் பெயரால் எல்லாவற்றிற்கும் ஈடு செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். வாழ்க்கையே மரணத்தை முத்தமிட்டது. போரிஸ், ஒவ்வொரு முத்தமும் அப்படி இருக்க வேண்டும், வாழ்க்கைக்காக அல்ல, மரணத்திற்காக, மதிப்பு மிக்க செல்வம் பற்றிய முழு விழிப்புணர்வுடன்.”
யதார்த்தத்தில் அவள் நிகழ்த்திய அற்புதத்தை, கவிதையில் நிகழ்த்தாமல் போய்விட்ட தருணங்களை, நுரை கக்கிப் பாய்ந்தோடும் டான் நதிதான் சொல்ல வேண்டும்.
******
இந்த இடத்தில் எங்கள் நாட்டுப்புற தெய்வமான நல்லதங்காள் கதையைச் சொல்லவேண்டும்.
நல்லதங்காள் தனது ஏழு குழந்தைகளுடன் பெரும் வறுமையில் வாழ்ந்து வந்தாள். அவளது கணவனுக்கும் வேலை இல்லை. வறுமை என்றால் சாதாரண வறுமை அல்ல, இளம் பிஞ்சுகளைப் பிடுங்கித் தின்னும் மிகக் கோரமான வறுமை. உலகில் உள்ள அனைத்து நம்பிக்கைகளும் கைவிட்ட வறுமை. இறுதியில் குழந்தைகளோடு தானும் உயிரை மாய்த்துக் கொள்வது என்று முடிவெடுத்து, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, ஒரு பாழ் கிணற்றுக்குப் போகிறாள். தனது பிள்ளைகளை ஒவ்வொன்றாக அந்தக் கிணற்றில் தூக்கிப் போடுகிறாள். ஆனால், அவளது கடைசி மகனான சின்னஞ்சிறு பாலகன் மட்டும் அவளது பிடிக்கு அகப்படாமல் ஓடி ஒளிந்து கொள்கிறான். நல்லதங்காள், ஆற்றாமையுடன் அழுது, அவனைக் கெஞ்சியவாறே, பிடிக்க முயற்சிக்கிறாள். பசியிலும் பஞ்சத்திலும் குன்றிப் போன உடலுடன், ஓடி ஓடிச் சலித்துப் போய் கீழே விழுகிறாள்.
பதறியபடி அம்மாவிடம் ஓடி வருகிறான் பாலகன். “அம்மா நான் இனி ஓடமாட்டேன்” என்று அம்மாவைக் கட்டிக் கொள்கிறான். “அம்மா, கடைசியாக எனக்கு ஒரு முத்தம்கொடு!” என்கிறான்.
நல்லதங்காள் உள்ளமெல்லாம் வெந்துபோய், அவனை உச்சி முகர்கிறாள். அவனது பச்சிளம் முகத்தை தாகத்துடன் பார்க்கிறாள். அவளது உடலெங்கும் ஓராயிரம் நெருப்புத் துண்டங்கள் எரிந்து அடங்க, அவனை உச்சி முகர்ந்து வலது கன்னத்தில் முத்தம் கொடுக்கிறாள். (வலது கன்னத்தில் முத்தம் கொடுப்பதென்பது ஆனந்தத்தின் மலர்ச்சி! இடது கன்னத்தில் முத்தம் கொடுப்பதென்பது துயரத்தின் ஆற்றாமை! இவை பண்டைய தமிழின் ஐதீகங்கள்!) தன்னுடைய உள்ளமெங்கும் பொங்கிப் பிரவாகமெடுக்கும் துயரத்தின் ஆற்றாமையைப் புறம்தள்ளி, மரணத்தின் தருவாயில் நிற்கும் தன்மகனுக்கு, தன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனந்தத்தையெல்லாம் ஒன்று கூட்டித் தருகிறாள் நல்ல தங்காள்!
அதன் பிறகு, அந்தப்பாலகனே மகிழ்ச்சியுடன் போய் கிணற்றில் குதிக்கிறான். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிய பிறகு, நல்லதங்காளும் அந்தப் பாழ் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
” பாலகர்கள் ஏழ்வரும் பாழ் கிணற்றினில் வீழ்ந்துவிட
அள்ளி முடித்த கூந்தலை அவிழ்த்துவிட்ட நல்லதங்காள்
மாடப்புறா போல் பாய்ந்து விழுந்தாள் தானும் அதில்
அவளுடைய கூந்தலது அறுபது பாகமது
அறுபது பாக கூந்தல் அலையுது கங்கையிலே..”
என்கிறது எங்கள் புகழ் பெற்ற நாட்டுப்புறப்பாடல்.
எங்கள் தமிழ் நிலத்தின் பஞ்சத்தின் தெய்வமான நல்லதங்காள் வாழ்க்கையை ஒத்தது, ஸ்வெட்டேவாவின் வாழ்க்கை!
கங்கை நதியிலே நல்லதங்காள் கூந்தல் அலைபடுவது போல, டான் நதியிலே அலையடிக்கிறது ஸ்வெட்டேவாவின் கட்டுக்கடங்கா சுருள் முடி! என் 2000 ஆண்டு தமிழ் மொழியின் தொன்மையான மரபில் நின்று, நான் அவளை ரஷ்ய நிலத்தின் பஞ்சத்திற்கான கவித் தெய்வமாக உருவு கொடுக்கிறேன்.!
*********
Surrealism, Magical realism, Postmodernism, Fantastical realism என்று எத்தனை விளையாட்டுக்கள் விளையாடியிருந்தாலும் kolechko – ன் ஆட்டம் மட்டும் எனது நினைவுகளில் ஒரு உடையாத குமிழியாக மிதந்து கொண்டேயிருக்கிறது.
ஓ ஸ்வெட்டேவா, டான் நதியில் ஒரு நுரையாய் குமிழியிட்டுக் கொண்டிருக்கும் கவித் தெய்வமே, மகத்தான நினைவுகளில் மூழ்கிக் கிடைக்கும் என்னை உன் அற்புதத்தால் முத்தமிடு என்று கேட்பேன்.
அவள் என்னை எங்கு முத்தமிட்டாள் என்பதை, டான் நதிக்கு மேலே பறக்கும் ஆலா பறவையே, நீ சொல்லி விடு, ரஷ்ய வாசகனுக்கு…
**********
தமிழ் வாசகருக்கான குறிப்புகள்:
Kreutzer Sonata : டால்ஸ்டாய் நாவல்.
செம்மணி வளையல் : அலெக்சாண்டர் குப்ரின் நாவல்
வெண்ணிற இரவுகள், சூதாடி : தாஸ்தயேவ்ஸ்கி நாவல்கள்
உருவு : உருவாக்குதல், முடிசூட்டுதல்
மரினா ஸ்வெட்டேவா, போரிஸ் பாஸ்டர் நாக்குக்கு எழுதிய கடிதம் : தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது நண்பியின், மரண அவஸ்தைகளிலிருந்து விடுபட அவளுக்கு இறுதி முத்தம் கொடுக்கும் வரலாற்று நிகழ்வு
kolechko : The ringlet என்னும் ரஷ்யாவின் பாரம்பரிய விளையாட்டு. டால்ஸ்டாய் நாவலில் வரும் விளையாட்டு.
*****