- கௌதம சித்தார்த்தன்
மிகவும் வலிமையான அதன்மீது வந்து வந்து மோதித் தட்டாதே
என் பிரியமான வண்ணத்துப் பூச்சியே
உன் உடலம் சிதைவுபடும் சிறகுகள் சேதமாகிவிடும்.
என்னால் கதவைத் திறக்க முடியாது.
வெளிக்காற்றில் விஷக் கிருமி ஊடுருவியிருக்கிறதென
ஓயாமல் தொணதொணக்கின்றன டி வி பெட்டிகள்.
சக மனிதனை நேசிக்காதே என்று சொல்கிறது
அரசு அறிக்கைகள்
இந்தக் களேபரத்தில் கடவுளர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்
இன்னும் எத்தனை நாள்தான்,
8க்கு 12 அடி அறையிலேயே வாசம்?
அந்த அறையை ஓராயிரம் ஆண்டுகளாக சுற்றிவிட்டேன்.
எடுத்து வைக்கும் என் காலடியின் ஒவ்வொரு எட்டிலும்
நிலம் உள்ளடங்கிப் போகிறது
முதல் எட்டை என் நாட்டின் அரசியல் மீது வைக்கும் கணம்,
இரண்டாவது எட்டு மதங்களின் மீது
அடுத்தது புழுத்து நாறிப் போய்க் கிடக்கும் சாதியத்தின் மீது
கொடுக்குகள் முளைத்த சக மனிதன் மீது
அவனை உருவாக்கிய அமைப்புகள் மீது
எழுதப்படாத பக்கங்கள் மீது
எல்லையற்ற காலத்தின் மீது
நாளை விடியும் என்ற நம்பிக்கை மீது
ஒரு துண்டு ஆகாயத்தின் மீது
சூரியன் மீது, நிலவு, நட்சத்திரங்கள், நீர்நிலைகள்,
எல்லைக்கோடுகள் கிழிக்கும் நிலப்பரப்புகள்,
நிலப்பரப்புகளில் வெடிக்கும் போராயுதங்கள்…
என் காலடிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
வண்ணத்தியே, இப்பொழுது நீ வந்திருக்கிறாய்.
என் சாளரத்தின் எதிரில் தாழப் பறக்குமொரு விமானம் போல
உன் நிழல் பிரம்மாண்டம் அடைகிறது.
உன் றெக்கைகள் எல்லையற்ற ஆகாயத்தை சுமந்து நிற்கின்றன.
காலாதி காலமாய் விரியும் அந்த றெக்கைகளில் கால் பதிக்கிறேன்
அற்புதம்!
விரிகிறது என் நிலம்.
நீண்டு கிடக்கும் நீல நிற ஆகாயத்தின் கீழே
மனித சஞ்சாரமற்ற நிலவெளியில் அச்சிறுமியை நான் பார்த்தேன்.
அவளது கரங்களில் பூத்திருந்த மலர் மொக்கையும்.
என் கை பற்றித் தந்த அவளது மலர், பொக்கென வெடிக்கிறது.
அக் கணம், என் காலடியைத் துளைத்துத் துளிர்க்கிறது
எல்லையற்ற விருட்சம்.
************