- கௌதம சித்தார்த்தன்
இசை பல்கிப் பெருகுகிறது என் நிலமெங்கிலும்
வரலாற்றின் மறைக்கப்பட்ட கனவில் வெடித்தெழுகிறது ஆதிப்பறை
என் முப்பாட்டனின் விலா எலும்புகள் கொண்டு வாசிக்கிறேன்
அஞ்சாம் கொட்டுத் தாளத்தை.
அதிர்கிறது நிலம், உதிர்கிறது கனவு
கம்மங்கருதாடிய வயல் வெளிகளினூடே
எழுகிறது உன் முகம், ஒரு காவியமாய்
அஞ்சாம் கொட்டிலிருந்து மூணாம் கொட்டுக்கு மாறுகிறது தாளம்.
உன் வெள்ளிக் கொலுசின் விசுவிசுப்பு
என் பறைக்குச்சியில் போதமேற்ற
கம்மந்தணுப்பின் தணுமை இசைகொட்டி இறங்க,
தலை துளும்பிச் சிரிக்கும் கருதுகளின் மீதேறி
என்னிடம் வருகிறாய் : “எங்கேடா என் நிலம்?”
சுட்டெரிக்கும் சூரியக்கருதுகள் ஒருகணம், திகைத்து நிற்க,
கம்மங்காடு பெரும் நடனவெளியாக மாறுகிறது
அருவாள் முனையில் காலூன்றி எழுந்த
கம்பந்தட்டுகளின் ஒயிலாட்டத்தில் விருத்தங்கள் அறுபட,
என் முறுக்கேறிய உடலின் அடவுகள் ஆதி முத்திரையாக விரிபட,
தலைதிமிர்த்தாடும் தாளமாக,
காலத்தின் கண்காணாப்பொழுதொன்றில் எரிந்து கொண்டிருக்கும்
கருத்த இசையின் நாவுகளாக
செந்தூளியாய் கொட்டிக் களிக்கிறது துடி.
நம் உடல்கள் பின்னிப் பிணைந்து ஆதிப் பெயலாக மாறுகின்றன.