• Thu. Sep 21st, 2023

சீற்றம் கொண்ட பாம்பும், ஜின்க்கோ இலைகளின் கிளர்ச்சியும்

ByGouthama Siddarthan

Aug 10, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

(இத்தாலி மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)

 

சமீபத்தில், நியூயார்க்கர் இதழில் நான் படித்த, அமெரிக்க எழுத்தாளரான Kristen Roupenian எழுதிய Cat person என்னும் கதை, என் ஆண்குறியை நாகப் பாம்பு போல சீற்றம் கொள்ளச் செய்து விட்டது. பாம்பு என்பது எங்கள் இந்திய மரபில் பாலியல் அடையாளம் என்பது போன்ற மேலோட்டமான படிமங்களை உலகம் முழுக்க உருவாக்கி வைத்திருக்கிறது பாப்புலர் கலாச்சாரம். ஆனால், உண்மையில் அது எங்கள் நாட்டுப்புற மரபில் வரும் அறச் சீற்றம் கொண்ட தெய்வம்.

ஆகவே இந்த இடத்தில் “பாம்பு” என்றதும், García Márquez – ன் One Hundred Years of Solitude நாவலில் வரும், ஜோஸ் அர்க்காடியோவின் பிரம்மாண்டமான “மிருகத்தை”ப் பரிதாபகரமாகப் பார்த்து, “மகனே, கடவுள் உன்னை இப்படியே வைத்துக் காப்பாற்றட்டும் “* என்று உணர்ச்சிபொங்கச் சொல்லும் ஜிப்ஸிப் பெண்ணின் சொற்கள் ஞாபகம் வந்தால் நீங்கள் நம் ஆள்!

வாருங்கள், பாம்பைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு நியூயார்க்கருக்குள் நுழைவோம்.

ஒரு உலகப் புகழ்பெற்ற பத்திரிகை.. அந்த பத்திரிகையில் படைப்பு வெளிவருவதே வாழ்வின் லட்சியமாக ஏங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச இளம் எழுத்தாளர்களின் தீராக் கனவு.. சர்வதேச இலக்கிய போக்கையே தீர்மானிக்கின்ற இலக்கிய அதிகார மையம்.. இன்னபிற.. இன்னபிற.. வல்லமைகள் கொண்ட ஒரு இலக்கிய பத்திரிகையில் வெளிவந்திருந்தது அந்தக் கதை. கதை வெளிவந்த காலகட்டத்தில் மில்லியன் பில்லியன் மக்கள் படித்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். “கடந்த நாட்களில் Paper Magazine – ல் வெளிவந்த Kim Kardashian நிர்வாணப் படங்களுக்காக இணையப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போன சூழலை மீண்டும் நிகழ்த்தியது..” என்று அந்தச் சூழல் குறித்து ஒரு விமர்சகர் வர்ணிக்கிறார்..

இந்தப் பின்னணியில் இக்கதையை படித்து ஏமாந்து போனேன். அந்தக்கதை, ஒரு மசாலா பத்திரிகையில் வந்திருக்க வேண்டிய மிக மிக மேலோட்டமான கதை. எந்த விதமான இலக்கியத் தன்மையுமின்றி, கலை நுட்பங்களுமின்றி open narrative பாணியில் அமைந்திருந்த மிகச் சாதாரணமான கதை.

ஒரு ஆணும் பெண்ணும் டேட்டிங் செய்வது பற்றியதுதான் கதை. அதன் களத்தை நவீனப்படுத்த செல்பேசியில் Text செய்வது பற்றிய போக்கில் கதையை வெகுஜன சுவாரஸ்யத்துடன் நகர்த்துகிறார் ஆசிரியர். பாலியல் சம்பாஷணைகள் கொண்ட Texting அது. அந்த Sexting -ல் எந்த விதமான புதுமையோ, பாலியல் அரசியல் நுட்பங்களோ, நவீனத் தன்மைகளோ இல்லை.

இந்த இடத்தில் எங்கள் தமிழில் porn genres கதைகள் எழுதும் மூன்றாந்தர எழுத்தாளர் சரோஜாதேவி என்பவரின் எழுத்துக்களை படிக்கும்போது என்னமாதிரியான உடல் மாற்றங்கள் ஏற்படுமோ அது போன்ற தன்மையே ஞாபகம் வருகிறது. ஒரு மூன்றாந்தர எழுத்தாளரின் எழுத்து முறையை இங்கு இணைவைத்து பேசுவது சரியல்ல என்றாலும் அவரது ஞாபகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. கூடவே, porn தன்மை கொண்ட கொச்சையான மொழியில் நவீன இலக்கியப் பார்வையை உருவாக்கிய Georges Bataille – ன் Story of the Eye நூலின் பக்கங்கள் படபடக்கின்றன!

புனைவு இலக்கியம் பெருமளவில் textulaity மற்றும் innertextuality என்றெல்லாம் புதிர்த் தன்மையுடன் சுழன்றாடிக்கொண்டிருக்கும் தற்கால சர்வதேச புனைவுச் சூழலில் இப்படி ஒரு தட்டையான கதைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது எதற்காக? வெகுஜனத் தன்மையை நோக்கி எல்லா கலைகளையும் நகர்த்தும் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் வளர்ச்சியில் நியூயார்க்கரும் வெகுஜனமயமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது, அக்கதையின் வருகை. கதையை எழுதிய பெண்மணிக்கு இதுதான் முதல் பிரசுரம்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்தடுத்த தலைமுறை களம் இறங்கிக் கொண்டேயிருக்கும் என்பது நியதி. தற்பொழுது அடுத்த இளம் தலைமுறை சர்வதேச இலக்கிய அரங்குகளில் கால்பதித்திருக்கிறது. இந்த இளம் தலைமுறையிலிருந்து ஒரு புத்தம் புதிய இலக்கியச் செயல்பாடுகளும், எழுத்துமுறைகளும், பெரியளவில் வெளிவரவில்லையே என்று ஏங்குகிறேன்.

இணைய வளர்ச்சி என்பது கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெருமளவில் அசுர வளர்ச்சியாக வளர்ந்திருக்கிறது. ஆனால், இணைய வளர்ச்சி ஏதுமில்லாத சூழலில் 1960 கள் தொடங்கி 2000 கள் வரை பல்வேறு மொழிகளின் கலை இலக்கியத் துறைகளில் பெரும் வளர்ச்சி நிகழ்ந்தது. ஓவியத்தில், எழுத்துத்துறைகளில், சிந்தனைத் துறைகளில், திரைத் துறைகளில் என்று விரிவாகச் சொல்லலாம். avant garde போன்ற சோதனை முயற்சிகள் உலகின் எல்லா மொழிகளிலும் பல்வேறு பார்வைகளில் எழுத்தை நவீனப்படுத்தி புதுமையான பார்வையை உருவாக்கிக் கொண்டே இருந்தன. ஓவியத்தில் நிகழ்ந்த பல்வேறு இஸங்களின் புதுமையான பார்வை சமீபகால இணைய வளர்ச்சியில் பெரிதாக துளிர்க்கவே இல்லை.

தற்கால எழுத்துச் செயல்பாட்டில் இருக்கும் “பெரும்பான்மையானவர்கள்” கடந்தகால இலக்கியங்கள் எதையும் படிக்காமல், நுட்பங்களை உணராமல் வெறுமனே முகநூல் செயல்பாடுகளையும், இணையத்தில் கொட்டிக் கிடக்கும் மேலோட்டமான வாசிப்புகளையும் மட்டுமே அவதானித்துவிட்டு எழுதுகிறார்களோ என்று ஐயமுறவைக்கிறது இந்தக் கதை.

எவ்வித தரிசனங்களும் அற்ற போக்கில் நகரும் இதன் யதார்த்த தளம், வெகுஜனக் கண்ணோட்டத்தின் ஒற்றைப்பரிமாணத்தை மட்டுமே ஆராய்கிறது. இன்றைய மனித வாழ்வு ஒற்றைப் பரிமாணத்தில் தட்டையாய் நெளிவதல்ல. அது பல்வேறு பரிமாணங்களில் கிளை வெட்டித் தாவும் எல்லைகளற்ற நீட்சியில் விரிந்து பரவுகிற பெருவெடிப்பு.

தற்கால வாழ்வின் ஆண் – பெண் உறவுகளின் குரூர யதார்த்தத்தை வாசகனின் குறியை விறைக்கவைக்கும் கிளுகிளுப்பிலேயே நகரும் இதன் தளம், தற்கால நவீனத்துவ வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை முன்வைக்காமல் போனது பெரும் துரதிர்ஷ்டம்!

பாலியல் உறவை, இரு உடல்கள் இணை சேரும் கிளுகிளுப்புக் கிளர்ச்சியாக மட்டுமே, முன்வைக்காது, அதன் வேறு பரிமாணங்களுக்கு போயிருக்க வேண்டும்.

மீண்டும் கார்ஸியா மார்க்வெஸின் One Hundred Years of Solitude! :

பெற்றோர் பேச்சைக் கேட்காத ஜோஸ் அர்க்காடியோ, அந்த ஜிப்ஸிப் பெண்ணுடன் கலவி செய்யும் சூழலை மார்க்வெஸ் கட்டமைத்திருப்பதைக் கவனியுங்கள்!

பெற்றோர்களுக்கு கீழ்ப்படிய மறுத்ததால் பாம்பாகப் போகுமாறு சபிக்கப்பட்டவனின் சோகக் காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்த ஒரு ஜிப்ஸி நாடக நிகழ்வில் அந்த ஜிப்ஸிப் பெண்ணை சந்திக்கிறான்,

“பார்க்கக்கூடாத ஒன்றைப் பார்த்து விட்டதால் நூற்றைம்பது வருஷங்கள் வரை தினசரி இரவு சமயத்தில் தலை வெட்டுப்படுமாறு சபிக்கப்பட்ட பெண்ணின் சிரச்சேத காட்சியை”க் காண விரும்பாத ஜோஸ் அர்க்காடியோவும் ஜிப்ஸிப் பெண்ணும் ஒரு கூடாரத்திற்குச் சென்று அங்கே முத்தமிட்டுக் கொண்டே பதற்றத்துடன் உடைகளைக் கழற்றுகிறார்கள்.

இந்த “சாபம் பெற்ற பாம்பு மனிதன்” என்னும் படிமம் கலவியின் கிளுகிளுப்பை இலக்கியத் தரமானதாக மாற்றி வேறு வேறு பரிமாணங்களுக்கு நகர்த்துகிறது.

இன்னொரு text ஐயும் இங்கு பார்க்கலாம்.

புகழ்பெற்ற நவீன இலக்கிய பத்திரிகையான Granta, 1993 ஆம் ஆண்டு தனது 43 வது இதழை Best of Young British Novelists Fiction என்னும் தலைப்பில் சிறப்பிதழாக வெளியிட்டது. அதில் Jeanette Winterson எழுதிய கதையான ‘The Poetics of Sex’ கதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்! அவ்வளவு அற்புதமான கதைப்பிரதி அது. கதை, கதைவரிகளுக்குள் சுழன்றிருக்கும் கவித்துவம், கதைப் பிரதிக்குள் மறைந்திருக்கும் பாலியலின் அரசியல் மற்றும் பெண் உடலின்அரசியல், post modern narration என்று நவீனத்தின் உச்சம் தொடும் அபாரமான கதைப்பிரதி அது.

வாழ்வின் யதார்த்தங்கள் ஒரு நவீன கதைக்குள் வரும்போது அவை புத்தம்புதிய காட்சிகளாக உருமாறும் தருணங்கள் நிகழ வேண்டும். அப்படியான யதார்த்தமற்ற யதார்த்தத்தை – நவீனத்துவமான எழுத்தை – காலங்காலமாக எழுதியாகி விட்டது. இன்னமும் அதேபாணியைத்தான் பின்தொடர வேண்டுமா? என்று நீங்கள் அலுத்துக் கொண்டால்.. அதற்கொரு மாற்று அல்லது வளர்ச்சி என்பது Cat person கதை போன்ற தட்டையான பாணியல்ல.

தற்கால இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் Kristen Roupenian க்கு ஏற்பட்ட நிகழ்வுகள் உலகில் பல பெண்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுவும் இந்தியா போன்ற மூன்றாம் உலகநாடுகளில் ஜீவிக்கும் பெண் உடல்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் தாக்குதல்கள் பெருமளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த 21 ஆம்நூற்றாண்டில் கலைஇலக்கியத் துறையில் பிரம்மாணடமாக முன் நிற்கும் கேள்வி, “பெண் உடல் என்பது என்ன?”. தற்கால வெகுஜன சமூகம் கட்டமைக்கப்படும் பெண் உடல் பற்றிய பிம்பத்திற்கும், நவீனஇலக்கியப் பார்வை கொண்ட ஒருகலைஞன் உருவாக்கும் பிம்பத்திற்கும் இடையே உள்ள இடைவெளிகளை நிரப்ப வல்லதே narration தான்!

Simone de Beauvoir காலத்து பெண் உடல் என்பது, தற்கால Kristen Roupenian காலத்து பெண் உடலில் எவ்வாறு உருமாற்றம் அடைந்திருக்கிறது என்பதே நவீன இலக்கியத்தின் பரிணாமத்திற்கு வகை செய்யும்!

Granta இதழில் சமீபத்தில் வெளிவந்து சர்வதேச கவனத்தைக் கவர்ந்திருக்கும் பாலியல் தன்மை கொண்ட ஒரு கதை, அமெரிக்க எழுத்தாளரான Carmen Maria Machado எழுதிய The Husband Stitch. கதை அபாரமான இலக்கியத்தன்மை கொண்டதாக என்னை பரவசப்படுத்தியது.

இக்கதையின் தலைப்பான Husband’s Stitch என்பது, குழந்தைப் பேற்றுக்குப் பிறகு உடலுறவுக்கு இணக்கமாக இருக்கவேண்டுமென்பதற்காகப் பெண்ணுறுப்பைத் தைக்கும் கணவனின் குரூரம் என்னும் படிமம். ஆனால், இதுகுறித்து கதையின் எந்த இடத்திலும் ஒரு வார்த்தையும் இல்லை. மாறாக, அவளது கணவனின் ஆதிக்கப் போக்கும் தன்மையும் ஆண் உடலின் ஆதிக்கதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற பார்வை பிரதியில் Inner Text ஆக பதுங்கி இருக்கிறது. கதையின் வார்த்தைகள், உடலின் மூலமாக, இயற்கையாகவும், இயற்கைக்கு அப்பாற்பட்டும், ஆழமாகவும் உண்மையாகவும் வெளிப்படுகிறது. இது உடலின் கதை. பெண் உடலை மீட்டெடுக்கும் பண்பாட்டுக்காக, பண்பாட்டில் எழுதப்பட்ட உடலின் கதை. இன்றைய பெண்ணியத்தின் வழியாக, பெண்கள் வெளிப்படையாக இக்கணத்தில் உடல் அனுபவத்தை மதிக்கும் பரந்த பண்பாட்டு மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்தும் புதிய கதை. இந்நாள் இலக்கியத்தில் ஏற்படும் மாற்றம் இந்த எழுத்தில் வெளிப்படுகிறது. உடலை – சதையை – பெண்ணியப் பார்வையில் மீட்டெடுக்கும் எழுத்து இயக்கம் இது. பெண்ணுடலை மீட்டெடுப்பது அதற்கு ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிற பாதகத்தை மறப்பதாலோ ஒதுக்கிவிடுவதாலோ வருவதல்ல. இக்கதை, பெண்ணுடலை ஆண் தன் இன்பத்திற்காகச் சிதைக்கும் வாதையை அசலாக முன்வைக்கிறது.

ஒருபாலுறவு கதைத்தன்மைக்கு ஏற்றவிதத்தில், Lesbos தீவின் நிலப்பகுதியை முன்வைத்து Sappho வின் உரையாடலைமுன்வைத்து, தனது, ‘The Poetics of Sex’ கதையை நவீன பிரதியாக கட்டமைக்கும் Jeanette Winterson போல,

பண்டைய South Africa வின் Eastern Cape நிலப்பகுதியின் தீராத வெறுமையை Cat person கதை தளத்தில் உலவ விட்டிருக்கலாம். Hottentot Venus எனப்படும் Sarah Baartman – ன் உடலும், அவளது பிரம்மாண்டமான பெண்ணுறுப்பும் அந்த Cat person -ன் நீண்ட நாக்கில் தீராத ஜலமாக வடிவதை புலப்படுத்தியிருக்கலாம்.

பாலியல் கிளர்ச்சியை, நவீன வாசகனுக்குள் ஏற்படுத்துவதென்பது வெறும் தட்டையான மொழியினால் அல்ல என்பதை ஆணித்தரமாகச் சொல்லி, இந்தக் கட்டுரைக்கு முத்தாய்ப்பாக, இடாலோ கால்வினோவின்  If on a winter’s night a traveler நாவலின் “On the carpet of leaves illuminated by the moon” என்னும் உலகப் புகழ்பெற்ற 16 வது அத்தியாயத்தை வைக்கலாம்.

(இந்த அத்தியாயத்தின் கதைத் தளத்தில் கவரப்பட்டு பலரும், இதை, இசைஆல்பமாக வடிவமைத்திருக்கின்றனர். அதில், Peter Söderberg -ன் கிதாரில், John Cage, Compose செய்திருக்கும் ஆல்பத்தின், gingko இலைகளின் மீது பெய்யும் மழைத் துளிகளின் கிளர்ச்சியை ஒரு கணம் அனுபவியுங்கள்.)

இந்த அத்தியாயத்தில், Mr.Okeda அவரது மனைவி Madame Miyagi அவரது இளைய மகள் Makiko மற்றும் கதை சொல்லி ஆகிய நால்வரையும் முன்வைத்து மனிதகுலத்தின் பாலியல் பண்புகளை ஆய்வு செய்கிறார் Calvino.

இந்த நான்கு கதாபாத்திரங்களுடன் gingko இலையையும் ஒரு பாத்திரமாக உருவாக்கி அவர்களுடன் உலவ விடுகிறார் Calvino. அந்தக் கணத்தில் கதை, பாலியல் கிளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களில் நகர்வதை இந்த வாக்கியங்களில் உய்த்துணரலாம்.

*”gingko மரத்தின் இலைகள் கிளைகளிலிருந்து மழைத்துளிகளைப்போல் விழுந்து, புல்வெளியை மஞ்சள் புள்ளிகளாய் நிறைத்தன. ஒவ்வொரு gingko இலையின் கிளர்ச்சியையும் மற்ற இலைகள் தரும் கிளர்ச்சியிலிருந்து பிரித்துப் பார்க்க விரும்புவதாக திரு. ஒகேடாவுடன் கூறினேன், அது சாத்திமானதென திரு. ஒகேடா தெரிவித்தார்.. .”

*”gingko மரத்தினின்றும் ஒருசிறிய மஞ்சள் இலை விழுந்து புல்வெளியில் ஒய்வெடுக்கும்போது, அதனைக் கவனிக்கும்போது உணரும் கிளர்ச்சி, ஒரு மஞ்சள் இலை பற்றியது. இரண்டு இலைகள் விழும்போது, அவை பிரிந்துபோய் உண்டாகும் சுழற்சி, பின் அவை பிரிந்துபோய் பட்டாம் பூச்சிகளை ஒன்றையொன்று துரத்துவது, பிறகு, புல்பரப்பில் படிந்து காற்றில் சுழலும் இலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஒவ்வொன்றுக்கும் உரிய கிளர்ச்சிகள் ஒன்று சேர்ந்து, நிசப்தமான மழைபோன்றதான பொதுக் கிளர்ச்சியை உண்டாக்கும்… ”

*”விளிம்போர வரிகள் கொண்ட சிறு மஞ்சள் விசிறியாக, gingko இலையின் வடிவத்தைத் தியானித்துக்கொண்டிருக்கும்போது, ஒவ்வொரு இலையிலுமான கிளர்ச்சியிலும் ஒவ்வொரு இலைமடலின் கிளர்ச்சியைத் தனித்து வைத்திருப்பதில் நான் வெற்றிபெறக்கூடும்..”

Mr.Okeda வின் மனைவி, மற்றும் மகள் உடனான பாலியல் தொடர்பை கதை சொல்லி விவரிக்கும் பாங்கில், மொழியின் சாத்தியங்களை வாசக மனதில் கிளர்ச்சியூட்டும் மகத்தான கலைஞராக மாறுகிறார் கால்வினோ!

*”ஜின்க்கோவுக்குப் பக்கத்தில் திரும்பவும் கடந்துபோகையில், இலைகள் வீழ்வதை தியானிப்பதில் உள்ள அடிப்படை விஷயம், ஒரிலைக்கும் மற்றதுக்குமிடையேயான தூரம், அவற்றைப் பிரிக்கின்ற வெற்றுக் காற்றுதானே தவிர, ஒவ்வொரு இலையையும் தரிசிப்பதல்ல என்று ஒகேடாவுக்குக் கூறினேன்,

*நுட்பமான உணர்வுகளில் இது நிச்சயம் உண்டென ஒகேடா கூறினார்; அவரது பதிலால் மிகவும் திகைப்புற்றேன், ஏனெனில், இலைகளின் மீதான எனது பார்வைகளை அவருக்கு தொடர்புறுத்திக் கொண்டிருக்கையில், அவரது மனைவி மற்றும் மகளின் உடல்களுடனான எனது தொடர்பையே நான் நினைத்திருந்தேன். நுட்பமான உணர்வுகள் குறித்து மிகவும் இயற்கையாகப் பேசுவதை திரு. ஒகேடா தொடர்ந்தார் எனது சொல்லாடலுக்கு வேறு விஷயமேதும் இல்லையென்று புரிந்து கொள்ளப்பட்டதுபோல…”

இந்த அத்தியாயம் எனக்குள் ஏற்படுத்திய பாலியல் கிளர்ச்சியை வேறு எந்த நாவலும் ஏற்படுத்தியதில்லை.

இந்த கணத்தில், இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் / வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக்கட்டுரையில் குறுக்கிடுகிறாள் Ludmilla!

“Dear Reader, நீ தோளில் போட்டுக் கொண்டிருக்கும் சீற்றம் கொண்ட உன் பாம்பின் இந்திய நாட்டுப்புற வடிவம், gingko இலைகளின் கிளர்ச்சியை ஒத்ததா?”

“அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்” என்கிறேன்.

*******
வாசகருக்கான குறிப்புகள்:

*ஜோஸ் அர்க்காடியோவின்…. – இந்த நீண்ட வாக்கியம் நாவலில் ஒரிஜினலாக வரும் வாக்கியம்

*Husband’s Stitch – https://en.wikipedia.org/wiki/Husband_stitch

*இந்த 5 பத்திகளும் கால்வினோ நாவலில் ஒரிஜினலாக வரும் பத்தியின் பகுதிகள்

*ரீடர், லுட்மில்லா – இந்தக்கட்டுரையில் இறுதியில் வருகின்ற ரீடர், லுட்மில்லா என்னும் இருவரும் கால்வினோவின், நாவலில் வரும் கதாபாத்திரங்கள்! ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர்கள் விவாதித்து, விவாதித்து அடுத்த அத்தியாயத்திற்குப் போவார்கள்.

***

(இந்தப் படைப்பு, இத்தாலிய மொழியில் நான் எழுதிக்கொண்டிருக்கும் பத்தியின் ஒரு அத்தியாயமாக வெளிவந்தது. மற்றும், ஸ்பானிஷ் மொழியில் தனி ஒரு கட்டுரையாக ஒரு இணைய இதழில் வெளியாகியது. இது வெளி வந்து கவனிப்புக்கு  உள்ளான பிறகுதான் ஸ்பானிஷ் மொழியில் பத்தி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப்படைப்பின் ஆங்கில மொழியாக்கம் : மஹாரதி)

இந்தக் கட்டுரையில் வரும் இடாலோ கால்வினோவின் If on a winter’s night a traveler என்னும் நாவல், ‘குளிர்கால இரவில் ஒரு பயணி” என்னும் தலைப்பில் சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. இங்கு தமிழில் எடுத்தாளப்பட்டிருக்கும் நாவலின் பத்திகள் அவரது மொழியாக்கம். இந்த நூலை ‘உன்னதம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 

****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page