- உக்குவளை அக்ரம்
கெளதம சித்தார்த்தன் தோழரின் வலைத்தளத்தில் ‘பேயாச்சி ‘ என்ற சுவராஸ்யம் மிக்க கட்டுரையை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமை வாசிப்பின் வேறு தளத்திற்கும் அதன் வசீகரமிக்க எழுத்தோவியத்திற்குள்ளும் கட்டுண்டு போனது மனசு.
சொல்லில் விபரிக்கும் பேயாச்சி புதிய அனுபவத்தையும் சிந்தனை கிளர்ச்சியையும் தோற்றுவித்தது. கிராமங்களில் கோலோச்சும் நம்பிக்கை சம்பிரதாயங்கள் கலையிலக்கியத்தில் எவ்வாறான அழகியலையும், அதன் பேசுபொருள் வியாபகம் கொள்கிறது என்பதற்கு இக்கட்டுரை சுட்டும் தரவுகள் நெகிழ்ச்சி மிக்க தடத்தின் பயணங்களாக எனக்குள் சுழல்கின்றன.
ஒவ்வொரு மதக்குழுமத்திலும் பேய்கள், ஜின், சைத்தான், ஆவி என்பன பற்றிய மயக்கங்கள் சுழல்கின்றன.இவை பொய்யா! உண்மையா? என்ற பதப்படுத்தலையும் தாண்டி அதன் சுவராஸ்யம் நம்மைத் திளைக்கச் செய்யும் காட்சிகளாக ஊடக வழி நம்மை மிரட்டுகின்றன.
மூட நம்பிக்கை.பொய், ஏமாற்று போன்றவற்றால் பேயாச்சியை நிராகரித்து வருகிறோம் அல்லது நவீன விஞ்ஞான மனப்பான்மை,விரிவடையும் மருத்துவம் அதன் ஆய்வின் வலியாக நிராகரிக்கும் மனவல்லமையைப் பெறுகிறோம்.
இஸ்லாமிய சமூக பரப்பில் ஜின், சைத்தான் என்ற பொருட்கோடலின் ஊசலாட்டம் அதன் மருத்துவப் பார்வை வன்மையாக மறுக்கப்படுகிறது. ஹராம், ஷிர்க், மூடக்கொள்கை என்ற கோதாவில். ஆயினும் இறைவன் மனிதனையும் ஜின்னையும் தன்னை வணங்குவதற்காகவே படைத்தான் என்கிறான்.
எடுத்தெறியப்பட்ட அல்லது விரட்டப்பட்ட சைத்தானின் கெடுதியிலிருந்து பாதுகாப்பு பெறுங்கள். என்றும், சைத்தான் உங்கள் நாடி நரம்புகளில் புகுபவனாகவே இருக்கிறான்.என்பதன் வாயிலாக ஒரு கெடுதி படைக்கப்பட்டு நம்மிடையே உலவுவதாகப் புலப்படுகின்றது. அது நமக்கு தீங்கு, பிரச்சினை கொடுப்பவையாகவே உள்ளதாகவும் தெளிவாக்கப்படுகிறது.
மாற்றினம் பேய், பிசாசு, ஆவி, ரத்தக்காட்டேரி,பரிசுத்த ஆவி, போன்ற ஒப்பீடே சைத்தானும், கெட்ட ஜின்னுமாகும்.
படைத்தவன் இருப்பதாக அதன் கெடுதியிலிருந்து, பாதுகாப்பு பெறுங்கள் என்று உபதேசிக்கும் போது, நாம் அதனை பொய், புரட்டு, மூட நம்பிக்கை, ஷிர்க் என்று புறம் தள்ளுகிறோமா..? அதனைப் பற்றிய ஆய்வு தேடலின்றி மிக எளிதாக ஷிர்க் என்று நகர்ந்து விடும் மனப்பான்மையில் மிதக்கிறோம்.
இவ்வாறான ஓர் தோற்றப்பாட்டை தோழர் கெளதம சித்தார்த்தனின் பேயாச்சியை வாசித்த போது என்னுள் தோன்றிய மயக்கமாக நீள்கிறது.
தேடலும் ஆய்வும் நம்மை ஆராதித்துக் கொண்டே இருக்கிறது.நாம் எலி வளைக்குள் புகுந்தவர்களாக உலகை வெறிக்கிறோம். இருப்பு – இல்லாமைக்குமான இடைவெளியை அறிதலின்றி மறுப்பதன் ஊடாக ஞான சூன்யம் பெறுகிறோமா என்ற கிளர்த்தலை இக்கட்டுரைஏற்படுத்தி நகர்கிறது.
அன்புடன்
உக்குவளை அக்ரம்