• Thu. Sep 21st, 2023

ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா?

ByGouthama Siddarthan

Aug 9, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

(இந்தக்கட்டுரை இத்தாலி மொழியில் வெளிவரும் என் பத்தியில் வெளி வந்த ஒரு அத்தியாயம்.)

 

சமீப காலங்களில் Speculative Fiction என்னும் எழுத்து வகைகளின் உருவாக்கத்தில் உலகம் முழுவதிலும் பெரும் வசீகரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பரபரப்பான வசீகரம், வெகுஜனத் தன்மை உருவாக்கி வைத்திருக்கும் ஜனரஞ்சகமான திரில் தன்மை! (popular legal thrillers) மற்றும் திகில் தன்மையை நோக்கி எளிதில் வீழ்ந்துவிடும் அபாயமே பெரிதும் செயல்படுகிறது. இந்தவகை எழுத்தின் தீவிரத் தன்மையை மலினமாக நீர்த்துப் போக வைக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இந்த வகை எழுத்தின் அடிநாதமாய் இயங்கும், ஜனரஞ்சகமான திகில் தன்மை! இந்த திகில் தன்மையில் பல்வேறு வகைமைகள் உருவாகியிருந்தாலும் பெரிதும் அடிகோலுபவை மூன்றாந்தர போக்குகள்தான் மற்றும், பாப்புலர் திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் மலினத்தன்மை! மேலும், தற்போதைய தொலைக் காட்சித் தொடர்களின் popular legal thrillers கட்டமைக்கும் மலினமான ரசனை! இது பெரும்பாலும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

திரைப்படம் அல்லது எழுத்து போன்ற ஊடகங்களின் வழியே விரியும் திகில் காட்சி அமைப்புகளை, பயமுறுத்துகின்ற காட்சி பிம்பங்களாகவே முன்வைக்கும் மேம்போக்கான மனநிலைகளை உருவாக்கி வைத்திருக்கின்றன இந்த வகைமைகள். முதலில், காட்சிகளைவிடவும், காட்சிகள் உருவாக்கும் உணர்வுகளே முக்கியமானவை என்பதை வாசகனும் படைப்பாளியும் புரிந்து கொள்ளும்பொழுதுதான், மலினத் தன்மைக்கும், கலைத்தன்மைக்கும் இடையே உள்ள இடைவெளியை உணர்ந்து கொள்ள முடியும்.

கலைத்தன்மை என்னும் உணர்வுகளின் அடியாழங்களுக்குள் சென்று அந்தக் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். திகில் (horror) என்பது, திரைப்படம் நம் முன் தட்டையாக வைக்கும் காட்சி ரூபங்கள் மட்டுமே அல்ல. அவை நமக்குள் உருவாக்கும் அந்த கண நேர உணர்வுகள் மட்டுமே திகில் அல்ல. அவை இரண்டாந்தர மூன்றாந்தர மலினமான மசாலா குப்பைகளின் கண நேர கிளர்ச்சி.

பொதுவாகவே, திகில் திரைப்படங்களின் தர மதிப்பீடுகளை உலக கலைதிரைப்படங்களின் தர மதிப்பீடுகளுடன் இணைத்துப் பார்ப்பதில்லை. திகில் திரைப்படங்களை இரண்டாந்தர மூன்றாந்தர திரைப்படங்களாகத்தான் திரைப்பட விமர்சகர்கள் கணித்து வந்தனர். இந்தப்பார்வையை உடைத்தெறிந்து திகிலின் அழகியலை கலைத்தரமாக மாற்றியவர் என்று மெக்ஸிக இயக்குனர் Guillermo del Toro -வைக் குறிப்பிடலாம். “பார்வையாளனை திகிலடையச் செய்வதைவிட திகிலின் அழகியலை முன்வைப்பதே என் சினிமா’ என்று சொல்லும் அவரது அற்புதமான திகில் அழகியல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இவரது சமீபத்தில் வெளி வந்த படமான The Shape of Water இந்த வகையின் உச்சம்!

அதேபோல Bram Stoker -ன் Dracula -கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Werner Herzog – ன் Nosferatu the Vampyre திரைப்படம் உலகத்தரம் கொண்ட திகில் வகை திரைப்படம். திகில் திரைப்படங்கள் கலைப்படங்கள் அல்ல என்று எழுதிய விமர்சகர்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிட்டார் “Count Dracula” வாக நடித்த Klaus Kinski!.

இது போன்ற கலைத்தரத்தில் ஜப்பானிய நாட்டுப் புறக்கதைகளில் இருந்து உருவாக்கப்பட்ட திகில் திரைப்படமாக Masaki Kobayashi – யின் Kwaidan படம் முக்கியமானது. பொதுவாகவே, தரமான கலை சார்ந்த திகில் திரைப்படங்கள் பெரும்பாலும், தங்களது நிலம் சார்ந்த நாட்டுப்புறக் கதைகளின் வழியாகவே உருவாகின்றன. அப்படியான பின்புலம் இல்லாத வெற்று ஹாலிவுட் தன்மை கொண்ட திகில் திரைப்படங்கள் பாப்புலர் படங்களின் நிலைக்கு தரமிறங்கிவிடுகின்றன.

இந்தப் பார்வையை கலை சார்ந்த எழுத்துத் துறையிலும் அமுல்படுத்தலாம்.

Bram Stoker -ன் Dracula -விலிருந்து, இடாலோ கால்வினோ தொகுத்த இத்தாலிய நாட்டுப்புறக்கதைகள் வரை விரிவான பார்வைகளை முன்வைக்க முடியும். மேலும் கால்வினோ தொகுத்த Fantastic Tales என்னும் தொகுப்பு இந்த வகையில் அதி முக்கியமானது. இதில் இருக்கும் Ivan Turgenev -ன் The Dream கதை அபாரமான திகில் வகை.

டிராகுலாவை விடவும் 100 மடங்கு ரத்தம் குடிக்கும் திகில் தன்மை கொண்டவை எங்கள் தமிழ் நாட்டுப்புறக்கதைகள்.

உதாரணத்திற்கு: பங்காச்சி என்னும் ஒரு வகை வினோதமான பிசாசின் கதையைக் கேளுங்கள். புதிதாக வயசுக்கு வந்திருக்கும் கன்னிப்பெண்கள் முதன்முதலாக புஷ்பிக்கும்போது அவர்களது பெண்குறியிலிருந்து ரத்தத்துடன் “கந்திமா’ என்னும் ஒரு வித வாசனை திரவமும் இணைந்து கசியும் என்றும், அந்த திரவத்தை உறிஞ்சிக் குடிப்பதற்காக, பங்காச்சி, இந்த புஷ்பவதிகளை மயக்கி அழைத்துப் போய் அந்த திரவத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றும், அதற்குப் பிறகு அந்த புஷ்பவதிகள் ரத்தக்கசிவு ஏற்பட்டு செத்துப் போய்விடுவார்கள் என்றும் ஒரு மரபான கதை உண்டு. அந்த புஷ்பவதி பெண்ணுக்கு முதல் ஏழு நாட்கள் மட்டுமே இந்த வாசனை திரவியம் கசியும். மனிதர் எவரும் நுகரமுடியாத அந்த மணத்தை, பங்காச்சியால் மாத்திரமே நுகர முடியும். அது ஒரு அபூர்வமான வாசனை திரவியம்! அந்த வாசனை திரவியத்தை உறிஞ்சி எடுத்து, பதப்படுத்தி, குறிப்பிட்ட பதத்தில் பாடம் செய்து ஆண்கள், தங்களது மேனியில் பூசிக்கொண்டால், அந்த மணத்தின் வசீகரத்தில் அந்த மணத்தை நுகரும் எந்த ஒரு கன்னிப் பெண்ணாக இருப்பினும் அவனது காலடியிலேயே பாலியல் அடிமையாகக் கிடப்பாள். இதை அறிந்த ஒரு மந்திரவாதி அந்த பங்காச்சியை வசீகரித்து இப்படியான புஷ்பவதிகளின் கந்திமாவை உறிஞ்சி எடுத்துவர ஏவுகிறான். இப்படியான பின்னணியில் கதையின் நாயகி பங்காச்சியிடம் மாட்டிக் கொண்டு எப்படி அதிலிருந்து மீண்டாள்? பங்காச்சியை எப்படி தனது கன்னி யோனியிலேயே புதைத்தழித்தாள்? என்பது போன்ற எங்கள் தமிழின் நாட்டுப்புற கதைச் சொற்கள் போடும் திகில் முடிச்சுக்களை அவிழ்க்கும் வல்லமை, ஜெர்மானிய எழுத்தாளர் Patrick Süskind உருவாக்கும் Perfume கதையில் கூட இல்லை என்பது என் கணிப்பு.

திகில் இலக்கியத்தின் பிதாமகனும், இந்த வகைக்கு பெரும் இலக்கியத்தரமான அந்தஸ்தை உருவாக்கியவருமான எட்கர் ஆலன்போ எனக்குள் ஏற்படுத்திய திகிலை இன்று வரை எந்த எழுத்தும் ஏற்படுத்தியதில்லை. அதில் எந்த இடத்திலும் பேய் பிசாசு ஆவிரூபம் வந்து தலை விரித்து ஆடியதில்லை. ஆனால், அந்த எழுத்துக்களின் இடைவெளியில் சில்லிட்டுக் கிடக்கிறது திகில். ஒருவிதத்தில் (என்னுடைய பார்வையில்) கார்லோஸ் ஃபுயண்டஸின் The Doll Queen சிறுகதை திகில் வகையைச் சேர்ந்ததுதான். litrary horror! (இவரது Vlad நாவல் நான் இன்னும் படிக்கவில்லை.) இந்தவகையில் மாப்பசானின் சிலபல கதைகளை முன்வைக்க முடியும்.

Mary Shelley -யின் Frankenstein நாவலை மொழிபெயர்த்தவரும் எங்கள் தமிழ் மொழியின் எழுத்தாளருமான புதுமைப் பித்தன் முன்வைத்த திகில் எழுத்து என்பது ஆலன்போவுக்கு நிகரானது. “first serious novel of Italian science fiction” என்று போற்றப்படும் இத்தாலியின் மகத்தான கலை ஆளுமையான டினோபுசாட்டி யின் எழுத்துக்களில் ஊடாடும் speculative தன்மை கொண்டது.

அவரது பிரும்ம ராக்ஷஸ் என்னும் கதை உலக Gothic வகை எழுத்துக்களோடு வைத்து போற்றப்படுவது. ஆனால், அதற்குப் பிறகு வந்த தற்கால பாப்புலர் மசாலா குப்பை எழுத்துக்காரர்கள், அந்த அற்புதமான எழுத்துப் போக்கை சிதைத்து, சின்னாபின்னமாக்கி குப்பையாக்கி விட்டார்கள்.

இப்படி எழுதும் குப்பைகள்தான் லாபி செய்து உலக வாசகர்களின் பார்வைக்கு வந்து சேருகிறது. தொடர்ச்சியாக நவீன தமிழ் மொழியின் அடையாளம் இப்படியாகத்தான் உலக அரங்குகளில் கட்டமைக்கப்படுகிறது. சர்வதேச இலக்கிய லாபிகளே நவீன தமிழின் அடையாளத்தைத் தீர்மானிக்கின்ற அதிகாரம், ஒரு காவிய அவலம்.

இது ஷேக்ஸ்பியரின் அவலச்சுவைக்கு நிகரானது. மேக்பெத் ஆவிகளின் கூற்றை மெய்ப்பிக்க தொடர்ந்து கொலைகளை நிகழ்த்தும் அதிகார வெறியின் அவலச்சுவை!

மேக்பேத்தின் ஆவிகளை விடவும் எங்கள் நாட்டுப்புறக்கூத்து நிகழ்வில் வரும் வானாசூரன் சண்டையில் வரும் ஆவிகள் மிக பயங்கரமானவை! வானத்தில் பறந்து பறந்து ஆவியாக மாறி போர் வல்லமை பெற்றவன் என்பதால் அவன் வானாசூரன் என்று அழைக்கப்பட்டான். இந்த வானாசூரன்சண்டை நாடகத்தை நிகழ்த்துபவர்களின் உடலில் நிஜமாகவே ஆவிகள் வந்து இறங்கும். வானாசூரனாக்கப்பட்டவன், அர்ஜுனனோடு போர் புரிய தனது பேய், பிசாசுகள், பில்லி, சூனிகள், முனி, ராக்காச்சிகள், கூளி, குல்லிகள் என்று தனது பேய்ப் படைகளை எழுப்புவான் பாருங்கள்… அபாரம்! அந்தப்பூத கணங்களாக நடிக்கும் நடிகர்கள் ஒரு அமானுஷ்யமான சக்திக்கு ஆட்பட்டு நிஜமாகவே பேய்களாக மாறுவார்கள். எந்த சக்தியாலும் அழிக்க முடியாத அந்த கூளிகளை அழிப்பதற்காக அர்ஜுனன் வேடமிட்ட நாயகன் நிஜமாகவே மருள் வந்து ஆடுவான். தனது முன்னோரின் ஆவிகள் அவனது உடலுக்குள் இறங்கி அந்தக் கூளிகளை நிஜமாகவே ரத்தம் கக்க வைப்பான். இந்த மகத்தான நிகழ்வு உருவாக்கிய திகிலின் அழகியலை, எந்த உலக கலை இலக்கியத்தாலும் உருவாக்க முடியாது.

தங்களது முன்னோர் ஆவிகள் தங்களது உடலில் வந்து இறங்கும் சடங்குகள் தொல்குடி ஆப்பிரிக்க மரபில் பெரும் திகில் கூட்டுபவை. அந்த அற்புதமான மரபின் வேர்களில் இணைந்து பயணிப்பதுதான் தமிழ் மொழியென்று ஒரு சில தொல்குடிச் சடங்குகளை கண்ணுறும்போது எண்ணிக் கொள்வேன். மனித உடலில் ஆவி வந்து இறங்கும் சடங்குகள் பண்டைய உலக மொழிகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றன. எங்கள் தமிழ் மொழியில் சங்ககாலத்திலிருந்தே இந்த சடங்கு “வேலன் வெறியாட்டு’ என்னும் இறைச் சடங்காக இறைத்தன்மையும் திகில்தன்மையும் இணைந்த அபாரமான திகில் அழகியலை உருவாக்கும் காவியம். பண்டைய கொலம்பிய பூர்வகுடிமரபைச் சார்ந்த வழிபாட்டுச்சடங்கான, அந்தர ஆட்டம் (The Danza de los Voladores ) என்னும் நிகழ்வையும் இங்கு பொருத்திப் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு இனக்குழுவும் முன்னோர்களை தங்களது உடலுக்குள் இறக்கும் சடங்கு, ஒரு மாபெரும் திகில் இலக்கியம்.

இனக்குழு மரபில் வரும் Wole Soyinka – வின் Yoruba சமூக மரபில் வரும் சடங்குகள் போல என்னுடைய இனக்குழு மரபிலும் ஒருசடங்கு உண்டு. முத்தேழ் என்னும் குறிசொல்லும் கற்களில் உள்ள ‘சாத்தாவு’வின் முடியை அறுத்து தனது தொடையைக் கீறி உள்வைத்துத் தைத்திருக்கும் பாரம்பரியத்தில் வந்தவன் நான். வோல் ஸோயிங்காவிடம் பில்லி சூனியங்களை உணர்த்தும் Opon Ifá என்கிற கணிக்கும் தாம்பாளம் (divination tray) இருப்பது போல, “முத்தேழ்’ என்கிற எட்டுக் கற்கள் என்னிடம் உண்டு.

இதுபோன்ற எங்கள் மரபுச் சடங்குகளின்போது உடலெங்கும் இழைந்து, அமானுஷ்யமான உணர்வுகளைத் தோற்றுவிக்கும் எங்கள் மரபுக்கே உரித்தான உடுக்கை என்னும் கருவியின் இசைத் துணுக்குகளை எந்தச் சொற்களாலும் விவரிக்க முடியாது. உடுக்கையின் இசைக் குறிப்புகளை எந்த வடிவத்தில் உங்களிடம் வெளிப்படுத்துவது என்று எண்ணும் கணத்தில்,

சமீபத்தில் பாரிஸ் ரெவியூவில் வந்த அமெரிக்க நாவலாசிரியர் Margot Singer – ன் “Can a Novel Be a Fugue?” என்ற கட்டுரை பளீர் என்று கண்சிமிட்டுகிறது. (https://www.theparisreview.org/blog/2017/07/31/can-a-novel-be-a-fugue/)

“If poetry was a kind of music, I wondered, could a novel be a fugue?’ என்று சொல்கிறார் இவர். மேலும், “In fact, the terminology of the fugue explicitly suggests a narrative: the main theme of the fugue is called its subject, the individual parts are voices, an altered form of the subject presents an answer, and so on. Originally a form of vocal music, early fugues drew on the canzone, a type of Italian lyric poetry or song. If poetry was a kind of music, I wondered, could a novel be a fugue?” என்கிறார்.

fugue என்பது இசைவடிவம் என்பதாக மட்டுமல்லாது பறத்தல், தப்பித்தல், புலம் பெயர்தல், என்று பல்வேறு பொருள் படும் ஒரு சொல். இன்னும் இந்த சொல்லின் வேர்களுக்குப் போனால், metaphorical ஆக ஆழமான அர்த்தப்புலன்கள் தென்படும். அப்படியான கதை மாந்தர்களைக் கொண்ட தனது நாவல் தளத்தின் வடிவமைப்பை, fugue என்னும் இசை வடிவமாக மாற்ற நினைக்கிறார் சிங்கர்.

உடுக்கையின் அமானுஷ்ய இசைக்குறிப்புகளிலிருந்து எங்கள் மரபின் திகில் இலக்கியம் உருவெடுக்கிறது.

உடுக்கையின் இசைக்குறிப்புகள் சித்தம் குலையவைக்கும் தன்மை (paranoid) கொண்டவை. ஆதி இனக்குழுவின் தொன்மமாக அமானுஷிக்கும் இந்த ஒலிரூபத்தை எங்கள் ஆதியோகி ருத்ரன் இசைக்கிறான். மயானச் சாம்பலை உடலெங்கும் பூசி பேய்களுடன் நடனமாடியபடி இசைக்கும் உடுக்கையின் பித்தமேற்றும் ரசபாவத்தை, நுண்ணுணர்வுகள் கிலியூறும் எழுத்தாக, எலும்புக்குருத்துகள் சில்லிடும் காட்சியாக மாற்றுகிறான் அவன்.

உடுக்கையில் முதன்மையாக நான்கு தாளக்கட்டுகள் இருக்கின்றன. காளி கோயிலுக்கு முன்பு இசைக்கப்படும் தாளவகையை “காளியாய்” என்று சொல்வார்கள். சிறுதெய்வம் பெரு தெய்வம் போன்ற கடவுள் தன்மை கொண்ட நாட்டுப்புறப் பாடல்கள் பாடும்போது இசைக்கப்படும் இசை வடிவம் இது. முன்னோர்களின் வீரதீர பிரதாபத்தை பறைசாற்றும் சமூக மாந்தர்கள் பற்றிய நாட்டுப்புறக்கதைப்பாடல்கள் பாடும்போது, “அருகோரி” என்னும் தாளக்கட்டை நிகழ்த்துவார்கள். குறிசொல்லும் போது கொட்டப்படும் தாளவகையை “நாளி” என்று அழைப்பார்கள். இந்த நாளி என்னும் இசைக்கோர்வை பலதாளவகைகளில் அந்தந்த சூழலுக்கேற்ப பிரியும் இசைப்பிரிகையாகும். ஆனால், முக்கியமாக மனித உடலுக்குள் பேய் வந்து ஆடும்போது, மனித உடலில் இறங்கியுள்ள அந்த ஆவியை ஓட்டும்போது அடிக்கப்படும் “பேயாச்சி’ என்னும் தாளவகைதான் உடுக்கையின் ஆன்மா. இருண்மையான தன்மை கொண்ட இரவு நேர இசையான பேயாச்சி, ராக்காலம் முழுக்க இசைபடும்பொழுது, ஒவ்வொரு சாமமாகக் கடக்கும் போதெல்லாம், அதன் தாளக்கட்டுகள் லாவகமாக மாறுபடும். சாமச்சுருதிகளில் கூட்டும் அமானுஷ்யமான தன்மையில், திகிலும் கிலியும் நிறம் பிரிந்து பிரிந்து ஏற்படுத்தும் சப்தக்கட்டுகள் அந்த இடம் முழுக்க சாம்பலாய்த் திரைந்து நிற்கும்.

ஆக இதுவரை சொல்லப்படாத இந்த இசைக்குறிப்புகள் தான் உலக இசைக்கோளங்களிலிருந்தும், உலக திகில் இலக்கிய வகைமைகளிலிருந்தும் தமிழைத் தனித்து நிற்க வைக்கிறது.

இப்பொழுது மார்கட் சிங்கருக்குள் எழுந்த கேள்வி எனக்குள் வேறு வடிவத்தில் எழுகிறது:

“ஒரு திகில் “பேயாச்சி” ஆக முடியுமா?”

 

**********

 

தமிழ் வாசகருக்கான குறிப்புகள் :

1. இதன் தலைப்பு “ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா?” என்று வைத்திருக்கிறேன்.

அதன் பின்னணி : தற்கால எழுத்தாளர் மார்கட் சிங்கர்,  “Can a Novel Be a Fugue?” என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.  இந்தக் கட்டுரையை உன்னதம் இதழுக்காக  ‘ஒரு நாவல் ஃப்யூகே ஆக முடியுமா?’ என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்து தந்தவர் எத்திராஜ் அகிலன்.  இது உன்னதம் இதழில் வெளிவந்துள்ளது.

இந்தக் கட்டுரையில், ஒரு நாவல், ஃப்யூகே என்னும் இசைவடிவம் ஆகமுடியுமா? அப்படி தன் நாவலை இசை வடிவம் ஆக்குவதற்காக அவர் எத்தனித்த முயற்சிகள் பற்றி அந்தக்கட்டுரை சொல்கிறது. நான் அதை வேறு விதத்தில் பொருத்திப் பார்த்திருக்கிறேன் இந்தக் கட்டுரையில். ஒரு திகில் என்கிற அனுபவம், பேயாச்சி என்கிற இசைவடிவத்தின் பயத்தை வாசகமனத்துக்குள் உருவாக்குமா? என்று அலசியிருக்கிறேன். அதனால்தான், கட்டுரைத் தலைப்பை “ஒரு திகில் “பேயாச்சி’ ஆக முடியுமா?” என்று வைத்திருக்கிறேன்.

பேயாச்சி என்பதை பேயம்மா என்று சொல்லலாம். ஆகவே, ஆங்கிலத்தில் Evilma என்று (Can a Horror Be an Evilma?) மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

2. ஜனரஞ்சகமான திரில் தன்மை என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தை = popular legal thrillers என்ற பதத்தில் பயன்படுத்துகிறது உலக இலக்கியம்.

3. “வெறியாட்டு’ குறித்து தொல்காப்பியத்தின் களவியலில் ஒரு துறையே ஒதுக்கியுள்ளார் தொல்காப்பியர். முருகனுக்கு உரித்தான காந்தள் பூவினைச் சூடி ஆடுவது குறித்த ஒரு காட்சி :

”வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்” (தொல். கள)

அகநானூற்றில்,

”சூர்உறை வெற்பன் மார்புறத் தணிதல்
அறிதனள் அல்லல் அன்னை வார்கொல்
………முருகன் ஆர் அணங்கு என்றலின்”  (அகம்.98)

என்னும் பாடலில், தலைவனின் மார்பை அடைந்தால் மட்டுமே  தனக்கு நேர்ந்த துன்பமானது விலகும். இதை அறியாது தன் அன்னையானவள் வெறியாட்டு நடத்த முனைகிறாள். என் வளைகள் கைசேராது கழன்றுவீழும் நிலை கண்டு பதறிய அன்னை, குறிசொல்லும் முதுபெண்டிரை அணுக, அவர்களோ, தங்களது கையில் இருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, ”முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்று கூறினர். இதனை மனதில் கொண்டு அன்னையானவள் வெறியாட்டுக்கு ஆயத்தம் செய்கிறாளென தலைவி கூறுகிறாள்.

சங்க இலக்கிய பிரதிகளில் குறிஞ்சித் திணையில் வெறியாட்டப் பாடல்கள் உள்ளன.  பிற திணைப் பாடல்கள் சிலவற்றில் அவற்றைப் பற்றிய குறிப்புகளாக உள்ளன.  இவைகளில் பெரும்பான்மையான பாடல்கள் தலைவியின் கூற்றாகவோ தோழியின் கூற்றாகவோ அமைந்துள்ளன.  வெறியாட்டம் பற்றிய குறிப்புகள்  ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, மலைபடுகடாம், பட்டினப்பாலை.. மற்றும், சிலப்பதிகாரம், பாண்டிக்கோவை, நம்மாழ்வாரின் திருவிருத்தம், கந்தபுராணம் ஆகியவற்றில் வெறியாட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

4. பண்டைய கொலம்பிய பூர்வகுடிமரபைச் சார்ந்த வழிபாட்டுச்சடங்கான, அந்தர ஆட்டம் என்னும் இந்த நிகழ்வைப்பற்றி என் பல கட்டுரைகளில் துண்டு துண்டாக எழுதியுள்ளேன். The Danza de los Voladores  https://en.wikipedia.org/wiki/Danza_de_los_Voladores

5. ஜெர்மானிய எழுத்தாளர் பாட்ரிக் சஸ்கின் எழுதிய உலகப்புகழ்பெற்ற ஸ்பெகுலேடிவ் திரில்லரான Perfume கதையில், வாசனைதிரவியம் தயாரிக்கும் செய் நுட்பம் தெரிந்த நாயகன், ஒரு குறிப்பிட்ட வாசனை வீசும் இளம்பெண்களைக் கொலை செய்து அவர்களது உடலைப் பதம் செய்து அதிலிருந்து அபூர்வமான மணம் கொண்ட வாசனை திரவியத்தைத் தயாரிப்பான்.

 

*****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page