• Thu. Sep 21st, 2023

சொலிப்சிஸம் – தலித்தியம் – பெண்ணியம் : ஒரு கடிதம்

ByGouthama Siddarthan

Aug 8, 2022

 

முத்துக் குமாரசாமி MKS
ஈரோடு.

அன்புள்ள கௌதம்,
“சொலிப்சிஸம்” என்னும் ஒரு இலக்கியக் கோட்பாட்டை மிக சிறப்பாக விளக்கமாக விளக்கியுள்ளீர்கள்.  இதை தமிழுக்கு புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். சிறப்பு. ஐரோப்பிய கவிஞர்களுள் மிகச் சிறந்தவரான தெட் ஹ்யூஸின் கவிதையை எடுத்து வைத்து சாதாரண வாசகனும் புரியும்படி சொல்லியிருப்பது உங்களுக்கேயான தனித்துவம்.

உங்களது கதையான “எப்படிச் சொல்வது முதல் காதலை? “ என்ற கதையை சொலிப்சிஸத்துக்கு எடுத்துக் காட்டாக நான் புரிந்து கொள்ளலாமா? ஏனெனில், அது போன்ற கூறுகள் அந்தக் கதையின் உள்ளடுக்குகளில் இருப்பது போல உணர்கிறேன். விளக்கமாகச் சொல்ல முடியுமா?

*****

ஒரு நல்ல உரையாடலை துவக்கி வைத்ததற்கு நன்றி முத்துக் குமாரசாமி,

கதையின் உள்ளடக்கம், நமது தமிழக கிராமங்களில் “வேட்டை வலம்” என்ற பெயரில் நடக்கும் உற்சவம் பற்றியது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் கிராமங்களை சுற்றியுள்ள காடுகளில் முயல் வேட்டையாடும் திருவிழா அது. அதைக் குறித்த விரிவான பின்புலக் கட்டமைப்புடனும், காட்சிகளுடனும் கதை நகர்கிறது. அதில் கலந்து கொள்ளும் ஒரு இளைஞனும், இளைஞியும் காதல் வயப்படும் காட்சிகளின் அழகியல் தன்மையும், வேட்டைக்காட்டின் உயிர்ச் சக்தி கொண்ட சூழலியலும் கட்டமைக்கப்பட்டு, காட்டிற்கும் மனிதனுக்குமான உறவின் தாத்பர்யம் ஒரு காட்சியாக, கவிதைக்கணமாக, கதையாக மாறி நிற்கிறது.

இந்தக்கதையை முன்வைத்து, உங்களது கேள்வியின் மையத்தை இப்படி உணர்கிறேன் :  “அதாவது முயல் வேட்டை நடக்கும் கதைக்களனில், முழுக்க, முழுக்க அதன் அழகியல் பற்றியே கட்டமைத்துள்ளேன் என்றும், தெட் ஹியூஸ் செய்த அதே பார்வையை, ஆதிக்க சமூகத்தினரான வேட்டைக்காரர்களின் வீர தீர சாகசங்களையும், வேட்டை வெளியின் ஆதிக்க மனோ நிலையையும் ஒரு உயர்வு நவிற்சியில் கட்டமைத்துள்ளேன் என்பதாகவும்” நீங்கள் உணர்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

தெட் ஹ்யூஸ் முன்வைக்கும் ‘வேட்டை’ வேறு, என் கதைக்களம் கட்டமைத்துள்ள ‘வேட்டை’ வேறு என்பதை ஒரு நுட்பமான வாசிப்பில் உணரலாம். ஏகாதிபத்திய தன்மை கொண்ட ஒரு ஆதிக்க சக்தியின் அந்தரப் பார்வையை முன்வைப்பது ஹ்யூஸ். என்பார்வை என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம் :

அந்தக்கதையை மீண்டும் ஒரு முறை நுட்பமாக அவதானியுங்கள் : ஒரு கிராமியம் சார்ந்த  தொன்மையான விழாவான “முயல் வேட்டை” உற்சவம் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் கிராமங்களை சுற்றியுள்ள காடுகளில் முயல் வேட்டையாடும் திருவிழா அது. கிராமிய தெய்வங்களின் வழிபாட்டு ரீதியான ஒருவித பாவனைச் சடங்கு என்று இதைக் கருதலாம். இதில் கலந்து கொள்ளும் கிராமிய இளவட்டங்கள் – கிராமிய வாழ்வியல் – விளிம்பு நிலை வேட்டைச் சமூகம் – அதன் மனநிலை – வேட்டை சார்ந்த கிராமிய அழகியல் –  காதல் – வீரம் – நிலவியல் – இந்த வேட்டையில் பெரும் பங்கு வகிக்கும் சாதிப் படிநிலை – வேட்டையில் பங்கெடுக்க அனுமதியற்ற தலித்துகள் – வேட்டையில், தாரை தப்பட்டைகள் கொட்ட மட்டுமே அனுமதிக்கப்பட்ட அவர்களது வாழ்வியல் சூழல்.. என்று விரிந்திருக்கும் கதைக்களன்.

இந்த வேட்டையில் வேட்டையாடப்படுவது, முயலை அல்ல. அல்லது, முயலின் உருவகமான ஆதிக்க சமூகத்தினரால் ஒடுக்கப்படும் சமூக மனித வாழ்வியலை மட்டுமே அல்ல.

சாதியின் எச்சங்கள் இன்னும் கெட்டி தட்டிக் கிடக்கும் கிராமங்களில், ஒரு வேட்டைச் சடங்காக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. வேட்டையில் உயர் சமூகத்தினர் மட்டுமே  கலந்து கொண்டு வேட்டையாட அனுமதி. வேட்டைப்பறை கொட்டி முழக்கிக்கொண்டு போகும் தலித்துகள் வேட்டையை அடிக்கக்கூடாது. இன்னபிற..

சாதிப்படிநிலைகளைப் பொத்திப் பாதுகாத்து வரும் கிராமங்களில் பலமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த ஐதீகத்தை, ஒரு யதார்த்தக் கதையாக மாற்றும்போது, முன்னிலைப்படுத்துவது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக மனிதனின் பார்வையையே.

இந்த நிகழ்வில் ஒரு பார்வையாளனாகக் கலந்து கொள்ளும் ஒரு தலித் இளைஞன், இந்தக் கருத்தோட்டத்தை கதையாகச் சொல்கிறான் என்று வைத்துக் கொண்டால், தற்கால நவீன கதை ஆசிரியன் என்ன மாதிரியான காட்சிப் புலன்களை கட்டமைப்பான் என்பதை இவ்வாறாகப் பார்க்கலாம் :

அந்த வேட்டை சம்பந்தமான நுட்பங்கள், தலித்துகள் அதில் கலந்து கொள்ளக்கூடாது என்னும் தகவல்கள், மருள் வந்து ஆடும் பூசாரியின் பச்சை ரத்தம் குடிக்கும் சடங்குத்தன்மை, கொம்புகளின் முழக்கத்தில் அதிரும் கானகம், இரும்புப் பூண் போட்ட குறுந்தடியின் இலக்கு தவறாத தன்மை, முயல்களின் உறைந்து போன கண்கள்.. என்று புனைவின் யதார்த்தத்துடன் நகர்த்துவான். இறுதி முத்தாய்ப்பாக அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத ஒரு தலித்தின் கையறு நிலையை காவிய சோகமாக முன்வைப்பான். அந்த யதார்த்த சோகத்தை நவீனத்துவப் பார்வையாக அந்தக் கதையாடலில் மாற்றும்போது,

“சட்டென அவன் அந்த அகண்ட வெளியின் தரிசுநிலத்தில் கரம்பைப் புற்களின் ஜிமிக்கிகளில் காதுகளை இடுக்கிக் கொண்டு பறந்தோடி வரும் முயலாக மாறிப்போவான்.”

என்ற முத்தாய்ப்பான கதைவரிகள், நவீனத்துவத்தின் கலை அழகியலை,  நவீன கதையாக்கமாக உருவாக்கியிருக்கும். இது வெறுமனே, யதார்த்தவாதம் சார்ந்த ஒரு அழகியல் நிலை மட்டுமே. இது போன்ற யதார்த்த வாதப் போக்குகள், மொழிநடை சார்ந்த புனைவின் ஓட்டம் அல்லது புனைவின் ஜீவன், இந்தக்கதையில் இயங்கும் ஒரு வரலாற்றுத் தார்மிகத்தை கேள்வி எழுப்பாது. தலித் இளைஞனின் கையறு நிலையின் ஆவேசம், யதார்த்த அழகியலாக மாறி நிற்கும், அல்லது, கதையின் கலைத்தன்மை பிரச்சாரத்தன்மைக்கு உருமாறி கதையின் ஜீவனானது, தட்டையான   சோஷலிச யதார்த்தவாதப் போக்கை நோக்கி நகரும்.

என் கதை தரிசனம், அதுவல்ல :

பெண்கள் இந்த வேட்டையில் கலந்து கொள்ளக் கூடாது, வேட்டை புறப்படுவதற்கு முன், வேட்டைக்காரர்களை உற்சாகப்படுத்த குலவை கொட்டி, உத்வேகப்படுத்துவதற்கு மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்படுவர். அதுவும், வேட்டைக்காரர்கள் குழுமியிருக்கும் மேடையருகில் போகாமல் தள்ளி நின்று குலவை கொட்ட வேண்டும். இதுதான் 2000 வருடங்களாக இன்றளவிலும், நம் சமூகத்தில், அறிவிக்கப்படாமல் கடைப்பிடித்துவரும் பெண் தீண்டாமை. சட்டென நினைவுக்கு வருவது, ஐயப்பன் கோயிலுக்குள் போக அனுமதி இல்லை.. போன்ற விஷயங்கள்.

என் பிரதியில் ஒலிப்பது, பெண் மைய வாதம்! இந்த வேட்டையில் பெண்கள் பங்கு கொள்ள ஒப்பாத ஆணாதிக்க மேலாண்மைக்கான எதிர்க் குரல். மலாலா! பெண் மைய வாதமும், ஒடுக்கப்பட்ட தலித்திய சமூக  மையவாதமும் இணைந்த வரலாற்றுக் குரல்!  இந்தப்பிரபஞ்சம் முழுக்க காலங்காலமாக ஒடுக்கப்பட்டுவரும் பெண் மையக் குரலைத்தான் நான் இதில் ஒலித்திருக்கிறேன். இந்த மலாலா என்னும் பெண், ஆண் வேடமிட்டு, வேட்டையில் கலந்து கொண்டு, 2000 வருட ஐதீகங்களையும், ஆதிக்கங்களையும், கெட்டி தட்டிப்போன சாதிய படிநிலைகளையும், தாத்பர்யங்களையும் ஒரே வீச்சில் வேட்டையாடியிருக்கிறாள் மலாலா. அந்தக் காதல் காட்சிகளை மேலோட்டமான பார்வையில் அணுகும்போது, ஒரு ரொமான்டிக் ஆகத் தோற்றம் தந்தாலும், அவை ரொமாண்டிக் அல்ல. வரலாறு!  காலங்காலமாய் கட்டமைத்து நமக்கு காட்டப்படும் வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள்! ஆணவக் கொலைகள் என்ற பெயரில் இன்றளவிலும் ஆதிக்க சாதிகளின் ஆசியுடன்  நடந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கான வன்மமாக மாறிப்போன கொடூரத்தை, ஒரு அழகியல் ததும்பும் காதலாக எதிர்கொண்ட 2000 வருடங்களுக்கு முந்திய அசல் எதிர் வரலாறு!  ஆணவக் கொலைகளுக்கு எதிரான  ஆவணக் காப்பகம்!

 

கௌதம்.

*****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page