- தமிழில் : கௌதம சித்தார்த்தன்
எனது பள்ளி நோட்டுப் புத்தகங்களில்
என் மேசை மற்றும் மரங்களின் மீது
பனி படர்ந்த மணலில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
நான் படித்த எல்லாப் பக்கங்களிளும்
மற்றும் அனைத்து வெற்றுப் பக்கங்களிலும்
கல், இரத்தம், காகிதம் அல்லது சாம்பலில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
தங்க உருவங்களில்
போர்வீரர்களின் ஆயுதங்கள் மீது
மன்னர்களின் கிரீடத்தில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
காட்டில் மற்றும் பாலைவனத்தில்
கூடுகள் மற்றும் முட்புதர்களில்
என் மழலைப் பருவத்தின் எதிரொலியில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
இரவுகளின் அதிசயங்களில்
வெள்ளை ரொட்டியால் விடிந்த நாட்களில்
திருமணப் பருவங்களில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
என் நீல நிற ஸ்கர்ஃப் களில்
ஈரமான சூரிய ஒளி பரவும் சதுப்பு நிலங்களில்
நிலவொளியின் உயிருள்ள ஏரியில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
அடிவானத்து வயல்களில்
பறவைகளின் சிறகுகளில்
மற்றும் நிழல்கள் அலையும் தொழிற்சாலை மீது
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
விடியலின் ஒவ்வொரு கிரணத்தின் மீது
படகுகளில், கடலில்
*டிமென்டியா மலை மீது
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
மேகங்களின் நுரை மீது
புயலின் வியர்வையில்
சீரான அடர்ந்த மழையில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
ஒளிரும் விண்மீன்களில்
அசையும் மணிகளின் நாவில்
இயற்கையின் உடல் மீது
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
விழித்திருக்கும் பாதைகளில்
தூங்கி வழியும் சாலைகளில்
கூட்டம் நிறைந்த சதுக்கத்தில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
எரியும் விளக்கொளியில்
அணைந்த விளக்கின் சூன்யத்தில்
மறுமலர்ச்சி கொண்டெழும் எண்ணங்களில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
இரண்டாக வெட்டப்பட்ட ஒரு பழத்தில்
என் கண்ணாடி மற்றும் என் அறையில்
என் வெறுமையான படுக்கை மீது
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
நாவைச் சுழட்டிக் கிடைக்கும் என் நாய் மீது
அதன் விரைத்த காதுகளில்
அதன் விகாரமான நகங்களின் பாதங்களில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
என் கதவின் தாழ்ப்பாளில்
அன்றாடம் புழங்கு பொருட்களில்
ஆசீர்வதிக்கப்பட்ட நெருப்போடையில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
தசையின் இணக்கத்தில்
என் நண்பர்களின் நெற்றியில்
நீட்டிய ஒவ்வொரு கையிலும்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
சாளரங்களின்ஆச்சரியத்தில்
உதடுகளின் கவனத்தில்
மௌனத்தின் ஆழத்தில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
என் நொறுங்கிய அறைகளில்
என் மூழ்கிய கலங்கரை விளக்கங்களில்
என் சலிப்பின் சுவர்களில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
முற்றும் துறந்த நிலையில்
வெறுமையின் தனிமையில்
மரணத்தின் படிகளில்
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
மீண்டும் கிடைத்த உடல்நலத்தின் மீது
இதுவரை வந்திராத ஆபத்தின் மீது
நினைவுகள் இல்லாத நம்பிக்கை மீது
நான் உங்கள் பெயரை எழுதுகிறேன்
மற்றும் ஒரு வலிமையான வார்த்தையில்
நான் என் வாழ்க்கையைப் புதுப்பிக்கிறேன்
உங்களை அறியவே நான் பிறந்தேன்
உங்களுக்குப் பெயரிடவும்.
சுதந்திரம்.
*****************
1920 களிலிருந்து 50 கள் வரை உலகத்தையே கலங்கடித்த கலை இலக்கியக் கோட்பாடு சர்ரியலிசம்.
நீரோட்டமாய் உலக அரங்குகளில் வந்து கொண்டிருந்த கலை இலக்கியங்களின் போக்குகளை திசை திருப்பி, தலை கீழாகச் சுழற்றியடித்த மாபெரும் கலை இலக்கியக் கோட்பாடான சர்ரியலிசத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் பால் எலுவார்ட்.