- கௌதம சித்தார்த்தன்
பிரெஞ்சு மொழியாக்கம் : நிஸா பீமன்
****
வெயிலும், வெயில் சார்ந்த இடமும்!
நிலாவில் முதல் காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னதை நான் சற்றே மாற்றிச் சொல்கிறேன் : “எனக்கு இது ஒரு சிறு காலடி வைத்தல் தான். ஆனால் தமிழ் மொழிக்கு இது மிகப்பெரிய பாய்ச்சல்”
பிரெஞ்சு இலக்கிய வாசகர்களே!
சூரியனின் பிரம்மாண்டமான நிழலாய் அசையும் வெயில் எனக்கு மிகமிகப் பிடிக்கும். உடலெங்கும் அணைந்து பிணைந்து ஒரு தீப்பிழம்பு போல உக்கிரத்துடன் என்னுள் இறங்கும் அதன் மஞ்சள் கதிர்களின் வெம்மையில் தாபித்துக் கிடப்பேன்.
தீக் கங்குகள் உதிரும் அந்த வாகையின் அனைத்துப் பாதைகளும் என்னை ஒரேபாதையை நோக்கியே கொண்டு போயின. அது சூரியப்பாதை ! உலகின் அனைத்து கலை இலக்கியங்களின் திசையைத் தீர்மானிக்க வல்ல மாபெரும் ஆற்றல் கொண்ட பிரெஞ்சு இலக்கியம். புதிய புதிய சிந்தனைகள், புதிய இலக்கியக் கோட்பாடுகள், கதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடகம், ஓவியம், திரைப்படம், தத்துவம்.. என்று கலை இலக்கியத்தின் பல துறைகளிலும் நவ நவீனத்துவப் பார்வைகளை தோற்றுவித்து உலகின் முன்னோடியாக விளங்கிய பிரெஞ்சு இலக்கியத்தின் சூரியப் பாதை, வெயிலின் கானலில் ஆழ்ந்து கிடந்த என்னை வசீகரித்ததில் வியப்பென்ன?
ஒரு வண்ணத்துப் பூச்சியாக அந்த சூரியப்பாதையினூடே Dada, Surrealism, Symbolism, Avant-garde, Oulipo, Nouveau Roman, Postmodernism.. என்று புதிய புதிய பரிமாணங்கள் தோறும் பறந்து திரிந்திருக்கிறேன், இரவு பகலற்ற இன்மையில் ஓயாது மலர்கின்ற தீ மலரின் தீஞ்சுவையை ரசித்திருக்கிறேன்.
அப்போதெல்லாம், இந்த வெயில் நிலத்தில் நானும் என்காலடிகளைப் பதித்து நடை பயில்வேன் என்று கற்பனை செய்து கூடப்பார்த்ததில்லை.
கடவுளே! நான் வெயிலைக் கனவு காண்கிறேனா? அல்லது வெயில்தான் என்னைக் கனவு காண்கிறதா? Zhuangzi க்கே வெளிச்சம்!
சார்லஸ் போதலேர் -ன் ‘Come! Come voyage in dream, beyond the known, beyond the possible!’ வாசகத்திற்கேற்ப அபரிமிதமான கலை வேட்கையும், உலகின் மகத்தான கலை இலக்கியங்களையும், நவ நவீனத்துவ தத்துவப் பார்வைகளையும் கொண்ட மண்ணின் வாசகர்களோடு மாதம் தோறும் உரையாடும் ஒரு அற்புதமான வாய்ப்பை எனக்குத் தந்த இதழ் ஆசிரியருக்கும் குழுவினருக்கும் 2000 ஆண்டு தொன்மை மிகுந்த தமிழ் மொழியின் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
எங்கள் தொன்மையான தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், மொழிவளர்ச்சி, வாழ்வியல் அம்சங்களுக்கும், ஓயாத தத்துவத் தேடல் கொண்ட பிரெஞ்சு மண்ணுக்கும் உள்ள உறவை முன்வைத்து இவைகளினூடாக எல்லைகளற்று விரியும் சர்வதேச இலக்கிய நீரோட்டத்தை இணைத்து ஒரு புத்தம் புதிய பார்வையை உங்களிடையே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்!
மாற்று மொழியின் தரமான இலக்கியக் கூறுகளை அங்கீகரிக்கும் அற்புதமான மனப்பான்மை கொண்ட இளம் தலைமுறையை பிரெஞ்சு மண்ணில் உருவாக்கிய பிரெஞ்சு இலக்கிய ஆளுமைகளுக்கு இந்த coloumn – ஐ சமர்ப்பணம் செய்கிறேன்!
இந்த column, தொன்மையான தமிழ் கலாச்சாரத்திற்கும், புதுமையான பிரெஞ்சு இலக்கியத்திற்கும் ஒரு பெரிய உறவுப் பாலமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
*****
எங்களது தமிழின் 2000 வருட தொன்மையான சங்க இலக்கிய மரபின் நீட்சியில் காலூன்றி இந்த வெயில் நிலத்தில் கால் பதிக்கிறேன்.
1980களின் துவக்க காலங்களில் எனக்கு அறிமுகமானது The Stranger. அதற்கு முன்னால் Balzac – ம், Maupassant, Baudelaire, Rimbaud, Zola, André Gide and The great Marquis de Sade என்று பல பிரெஞ்சு ஆளுமைகள் அறிமுகமாகியிருந்தாலும் பிரஞ்சு மொழிமீது ஒரு எல்லையற்ற வசீகர ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் ஆல்பர்ட் காம்யு! உலகம் முழுக்க (அல்லது எங்கள் தமிழில்) மகத்தான இலக்கியங்கள் என்ற சிறப்புடன் வலம் வந்து கொண்டிருந்த ரஷ்ய இலக்கியங்களின் தாக்கத்தில், முக்கியமாக தாஸ்தாவ்ஸ்கியும், செகாவ் வும், டால்ஸ்டாயும் உருவாக்கியிருந்த வாசக கலை ரசனையில் ஒரு சிறு கல்!
நீரோடையில் கல்லை விட்டெறிந்து வளையங்களைச் சுழலவிடும் போது நீரின் சுழற்சிக்கும், தெளிந்த நீரோடையாய் மிதக்கும் நீரின் சுழற்சிக்கும் இடையே உள்ள உருமாற்றம், உடனே புலப்படுவதில்லை. காலங்காலமாய் சலித்துப் போன பிரதிகளில் சுழல்கின்றன இந்த வளையங்கள்.
இந்த இடத்தில் அப்போதைய எங்கள் தமிழின் நவீன இலக்கியச் சூழல் குறித்து சுருக்கமாக: சற்றேறக்குறைய 300 பேர் மட்டுமே புனிதமான இலக்கியப் பார்வையுடன் செயல்படும் சிற்றிலக்கிய தளம். மார்க்ஸியப் பார்வை என்பது வரட்டுத்தனம் கொண்டதாகவும், புரட்சி, போராட்டம் என்பது கேலிக்குரிய சொல்லாகவும் தீவிர இலக்கிய தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இணைய தொழில் நுட்பம் இல்லாதசூழல். மொழிபெயர்ப்பாளர்கள் காட்டும் உலகமே சர்வதேச இலக்கிய பார்வை!
எல்லாவற்றையும் விட்டேத்தியாக எடுத்துக் கொள்ளும் அப்போதைய ஹிப்பி கலாச்சாரமும், வேலைவாய்ப்பற்ற சூழல் உருவாக்கிய வாழ்வின் மீதான அவநம்பிக்கையும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த தருணத்தில் தமிழில் அறிமுகமாகியது இந்த நாவல். இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம் கொடுக்கும் நீண்ட முன்னுரையில் கூட, ‘அந்நியன் என்பவன் யார்? அந்நியன் என்னும் மனநிலை என்பது என்ன?’ என்பது போன்ற விஷயங்களே வருகின்றன. ஒரே ஒரு வார்த்தை கூட இந்த நாவலின் மையஉயிரோட்டமான அல்ஜீரிய விடுதலைப் போராட்டங்களைப் பற்றி இல்லை.
என் முதல் வாசிப்பில்,
மார்க்ஸ் சொல்லும் அந்நியமாதல் வேறு, காம்யு சொல்வது வேறு என்பதை வாஸ்தவமாக உணர்ந்து கொண்டேன். யதார்த்த மனித வாழ்வியலில் மனிதன் என்பவன் யார்? அவனுக்கான உற்பத்திப்பொருள் அந்நியமாகிறது. வாழ்வு அந்நியமாகிறது, இந்த நீட்சியில் மனிதன் அந்நியமாகிறான். இந்த நிலை அவலமானது, இது மாறவேண்டும்.. என்கிறார் மார்க்ஸ்.
ஆனால், ஒரு மனிதன் தனக்குள்ளிருந்து அந்நியமாவது என்பதை மாபெரும் தத்துவ நீட்சியாக முன்வைக்கிறார் காம்யு. அதை ஒரு கலைப் படைப்பாக உருவாக்கி இந்த நிலையைக் கொண்டாடுகிறார்.
ஆக, வாசிப்பின் பார்வையை யதார்த்த தளத்திலிருந்து, யதார்த்தமற்ற யதார்த்தத்திற்கு நகர்த்த வேண்டியிருந்தது.
புதிய வாசிப்பில், நாவல் பிரதிக்குள் பல்வேறு பரிமாணங்கள் Intertextuality ஆக பொதிந்திருப்பதை தரிசித்தேன். இந்த Intertextuality என்கிற சொல்லாடல் குறித்த அர்த்தங்கள் அதற்குப் பிறகான காலங்களில்தான் எனக்கு பரிச்சயம் என்றாலும், நாவலுக்குள் பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன என்கிற ஒரு பார்வை எனக்குள் உருவாகியது.
நாவலை தீவிரமாக வாசித்தேன்.. ஒவ்வொரு முறையும் தீவிரமான தேடலில் கிடைக்கும் புதிய புதிய பார்வைகளை முன்வைத்து பித்துப் பிடித்தவன் போல தீராது வாசித்துக்கொண்டே இருந்தேன்.
காம்யு சொல்வது மனிதன் தனக்குத்தானே அன்னியமாகிப் போகும் வெறும் அபத்த வாழ்வியலின் தரிசனம் மட்டுமல்ல, அது ஒரு யதார்த்த மனிதனுக்கும் அன்னியனுக்குமான தார்மிகமான போராட்டம். நம்பிக்கைக்கும் அபத்தத்திற்குமிடையில் ஊசலாடும் வாழ்வின் தரிசனம் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்தக் கிளையோட்டம், உலகின் கவனம் பெற்ற இந்திய தத்துவ ஞானியான ஜித்து கிருஷ்ண மூர்த்தியின் Freedom from the Known ஐ அறிமுகப்படுத்தியது.
இந்த வாசிப்புக் கட்டத்தில், எனக்கு அறிமுகமான Beat Generation படைப்பாளிகளான Allen Ginsberg, William S. Burroughs மற்றும் Jack Kerouac ஆகியோர் உருவாக்கிய Jack Kerouac School of Disembodied Poetics என்ற தத்துவப் பார்வை முக்கியமானது. Disembodied Poetics என்றால் Body யை Dis செய்தல் அதாவது கவித்துவ ரீதியாக, உடலைக் கலைத்துப் போடுதல்; தாங்கள் செயல்படுகின்ற உடல்மொழியைக் கலைத்துப்போடுதல் என்று இதன் மூலக்கூறுகள் பற்றி சுருக்கமாக விளங்கிக்கொண்ட தருணங்களையும் இங்கு ஞாபகம் கொள்ளவேண்டும்.
கடந்த 60 வருடங்களாக சர்வதேச மாபெரும் அறிவுஜீவிகள் எவரும் முன்வைக்காத புதிய விமர்சனப் பார்வையையா, எளிய தமிழ் மொழிப் பின்புலத்திலிருந்து வரும் நான் முன்வைத்துவிடப்போகிறேன்! இருந்தாலும், இதுவரை கவனம்கொள்ளாத தமிழ்ப் பார்வையின் துணை கொண்டு ஒரு சில காட்சிகளை விரித்துக் காட்டுவதே என் தரிசனம்!
எங்கள் சங்க இலக்கிய மரபு என்பது முழுக்க முழுக்க திணை என்று சொல்லப்படும் நிலம் சார்ந்தது. அதாவது, எங்கள் மனித வாழ்வியல் நிலம் பற்றிய பிரக்ஞை கொண்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று 5 வகை திணைகளாக விரிகிறது. இந்த திணை நிலங்களில் காலூன்றி, மாந்தர்கள், தங்கள் வாழ்நிலையை அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்ப ஜீவனித்த வாழ்வியலே, இந்த பழம்பெரும் சங்க இலக்கியங்கள்!
இந்த 5 வகைத் திணைகளின் நில அமைப்பாக, மலையும் மலை சார்ந்த நிலமும் – குறிஞ்சி என்றும், காடும் காடுசார்ந்த நிலம் – முல்லை, வயலும் வயல் சார்ந்த நிலம் – மருதம், கடலும் கடல் சார்ந்த நிலம் – நெய்தல் மற்றும் மணலும் மணல் சார்ந்த நிலம் – பாலை என்று, நிலம் பற்றிய பிரக்ஞை இந்த இலக்கியங்களில் வாழ்வுப் பார்வையாக மலர்கின்றன. மேலும், அந்தந்த நிலத்தின் தன்மைகள் அபாரமான தரிசனப் பின்புலத்தோடு கட்டமைக்கப்படுகின்றன.
இந்த இலக்கியங்களில் முதன்மை பெறும் தலைவன், தலைவி என்னும் பாத்திரங்களை முன்வைத்து, மானுட வாழ்வியலை அழகுற வடிவமைத்திருக்கும் பாங்கில், அந்தந்த நிலத்தின் தன்மைகளைக் கவனியுங்கள்.
குறிஞ்சி – புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ( தலைவனும்,தலைவியும் முயங்கிக் களிக்கும் நிலை), முல்லை – இருத்தலும், இருத்தல் நிமித்தமும், (வாழ்வியலுக்கு பொருள் ஈட்டச் சென்ற தலைவனுக்காக,தலைவி காத்திருத்தல்), மருதம் – ஊடலும், ஊடல் நிமித்தமும்( தலைவன் வேறொரு பெண்ணின் மீது மையல் கொண்டால், தலைவி ஊடல் கொள்ளுதல்), நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும், (கடலில் மீன் பிடிக்கச் சென்ற தலைவனுக்காக, தலைவி காத்திருக்கும் நிலையாமை, இரங்கல் என்று அழைக்கப்படுகிறது) மற்றும் பாலை- பிரிதலும், பிரிதல் நிமித்தமும் (போருக்குச் சென்றுள்ள தலைவனுக்காக, தலைவி காத்திருக்கும் நிலை)
இப்படி நிலம் குறித்த பிரக்ஞையும், அதன் தன்மையும் எழுத்தில் விரிபடும்போது, நிலத்தின் அகமும் புறமும் வேறு வேறு காட்சிகளை நிகழ்த்திக் காட்டுகின்றன.
இப்படியான ஒரு புதிய நிலத்தைத்தான் உருவாக்குகிறார் ஆல்பர்ட் காம்யு!
நாவல் கருக்கொள்ளும் 1940 களில், புதிய புதிய பார்வைகளாலும், தத்துவத் தேட்டங்களாலும், நவீன கதை சொல்லும் உத்திகளாலும், பிரம்மாணடமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிரஞ்சு நிலத்தின் பின்புலத்தில் இருந்து இதை அவதானிக்க வேண்டும்.
அவர் வெறுமனே அந்நியன் என்கிற மனநிலையை மட்டும் உருவாக்கவில்லை, அதற்கு ஒரு ஆழமான அற்புதமான அஸ்திவாரத்தை முற்றிலும்புதிய தரிசனத்துடன் கலாபூர்வமாக உருவாக்குகிறார்!
ஆம், ஒரு கதைப்பிரதியில் மிக மிக முக்கியமான அம்சம், நிலக்காட்சி. கதையின் களம் எங்கு காலூன்றி நிற்கிறது என்ற “இடம்’ பற்றிய பிரக்ஞை, அதுவரை சொல்லப்படாத புதிய எழுத்தின் புத்தம் புதிய பார்வை. இந்த geographical sense – ல் இது வரையிலான நிலம் என்ற யதார்த்தம், metaphor ஆக மாறும் அற்புதத்தை அபாரமாக நிகழ்த்திக் காட்டுகிறார் காம்யு.
தமிழின் தொன்மையான இலக்கியங்களில் விரியும் 5 திணைகளைப் போல, வெயில் என்கிற ஒரு திணையை உருவாக்குகிறார். தான் உருவாக்கி வைத்திருக்கும் “அந்நியமாதல்” என்கிற தத்துவத்தைக் கலையாக மாற்றும்போது, அதற்கேற்றாற்போன்ற ஒரு நிலத்தை – வேனல் பொடியும் மணல்நிலத்தை – முன்வைக்கிறார். ஒரு நூற்றாண்டு வெம்மை மனிதஉடலில் கனன்றெரியும் நிகழ்வை வாசகனுக்கு தரிசனமாக்க வேண்டுமானால், ஏதாவது ஒரு நிலத்தில் இந்த கதை நிகழக் கூடாது. அது சுட்டுக் பொசுக்கும் சூரிய நிலத்தில்தான் நடக்க வேண்டும்!
வெறுமனே ஒரு நிலத்தை மட்டுமே உருவாக்கிவிட்டுவிடாமல், அந்த நிலத்தின் இருப்பிற்கு தார்மிகமான நியாயம் செய்விக்கும் பார்வையில் ஒரு பெரும் தத்துவ தரிசனத்தை அதனுள் வைக்கிறார். அதுதான் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம். சக மனிதர்களின் அன்பு, குரோதமாக மாறிய வரலாற்று மாற்றத்தில் ஒரு மனிதன் தன்னிலிருந்து அந்நியமாக விலகும் போராட்ட தரிசனம்!
இந்த அந்நிய மனநிலைக்கான கதை நடக்கும் திணை “வெயில்”! இந்த நிலத்தின் அமைப்பாக, ‘வெயிலும் வெயில் சார்ந்த இடமும்” என்கிற பார்வையில் அவ்வளவு அற்புதமாகக் கட்டமைக்கிறார். அதன் நீட்சியாக இந்த நிலத்தின் தன்மையை “வெயிலும் வெயில் நிமித்தமும்” என்கிற தத்துவமாக உருவேற்றும்போது நாவல் பிரதி, முழு முற்றாக அதுவரை சொல்லப்படாத நவநவீனத்துவமான பார்வையாக விரிபடுவதை உணரலாம்.
என் வாசிப்புனூடே, கண்காணாச் சுழற்சியின் உள்முகம் நோக்கி ஓடும் நீர்மச் சுழல்வுகளாக நெளியும் இந்த வெயில் காட்சிகளை ஒரு சிறு இலக்கியக் கூட்டத்தில் உரையாடிய தருணங்கள் என் முகத்தில் பொடிகின்றன.
******
கடந்த 1995 ஆம் வருடத்தில் ஒருநாள், எங்கள் நாட்டு Alliance Française லிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.
அப்பொழுது நான் எங்கள் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
ஆல்பர்ட் காம்யு வின் வாழ்க்கை சரிதையை எழுதியவரான ஆலிவர் டோட் (Olivier Todd), தமிழ் நாட்டின் சென்னை நகரத்திற்கு வருவதாகவும், இங்குள்ள தீவிரமான இலக்கியத்தன்மை கொண்ட சிறு பத்திரிகை நடத்தும் எழுத்தாளர்களுடன் சந்தித்து உரையாடவேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருந்திருக்கிறார். அவரது விருப்பத்திற்கிணங்க, எனக்கு அழைப்பு வந்திருக்கிறது.
எல்லையற்ற சந்தோசம் அடைந்தேன், காம்யுவையே சந்திப்பது போன்ற பரபரப்பான பதற்றத்தில் என் உடலெங்கும் விர்ரென்று எகிறியது, வெயிலின் கனல்!
எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு, “The Stranger” நாவலை தமிழ் மொழிபெயர்ப்பில் மீண்டும் வாசித்தேன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னரான வாசிப்பு, இந்தமுறை விமர்சனப்பூர்வமான பரிமாணங்களை முன்வைத்தது.
காம்யு முன்வைக்கும் Existentialism த்திற்கும் சார்த்தர் கனவு கண்ட Existentialism க்கும் பெரும் இடைவெளி இருப்பதை காலம் கடந்து அறிந்த சார்த்தர் முன்வைக்கும் கேள்விகளின் வாஸ்தவமான விவாதங்கள் கண் முன்னே சுழன்றன.
மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீராம், என்னைப் பற்றியும், நான் நடத்தும் உன்னதம் பத்திரிகை பற்றியும் ஆலிவர் டோட் டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மிகவும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார் டோட். உன்னதம் இதழ் குறித்தும், அதன் நோக்கங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டார். காம்யுவிடம் பேசுவதுபோல உணர்ந்தேன். மானசீகமாக அவரது ஆன்மாவைத் தொட்டேன்.
காம்யுவின் எழுத்துக்கள் பற்றி உங்கள் பார்வையைச்சொல்லுங்கள்.. என்றார் டோட்.
இந்தத் தருணத்திற்காகத்தானே காத்திருந்தேன்..
“அந்த பெயரற்ற அராபியனைக் கொன்றதை காம்யு நியாயப்படுத்துகிறாரா?” என்று கேட்டேன்.
“இது ஒரு உலகளாவிய விமர்சனம்..” என்றார். அவரது குரல் சட்டென அசுவாரஸ்யமடைந்து போயிற்று.
நான் பதறிப் போனேன். என் முதல் கேள்வியே சலிப்பை ஏற்படுத்திவிட்டதே.. மேலும் என்னென்னவோ பேசவேண்டும் என்று துடித்தது உள்மனசு. மிகவும் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளாக எடுத்துக் கொள்வாரோ என்று எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டேன்.
“அல்ஜீரியக் கடற்கரையில் மெர்சோ என்னும் அந்நியன், எதிர்கொள்பவன் இன்னொரு பிரெஞ்சுக்காரன் அல்ல. மாறாக, அராபியன்! இது எழுத்தாளன் வலிந்து திணிக்கும் திட்டமிட்ட கதைக்கட்டமைப்பா? ரோலண்ட் பார்த் சொல்லும் Death of the author என்பது இந்தப்பிரதியில் எவ்வாறு செயல்படுகிறது?”
அவர் முகம் மேலும் பொலிவிழந்து போயிற்று. நான் ஒரேயடியாய் உற்சாகமிழந்து போனேன்.
அவர் பதிலேதும் சொல்லாமல் தலையை அசைத்தார். தயக்கத்துடனிருந்த என் முகத்தை உறுத்துப் பார்த்தார்.
நான் தயங்கியவாறே, “எங்களது தமிழின் 2000 வருட தொன்மையான சங்க இலக்கிய மரபின் ஐந்து திணைகளில் காலூன்றி ஆறாவதாக ஒரு திணையை உருவாக்குகிறார்..” என்றேன்.
அவர் தீர்க்கமாக என்னை நோக்கினார். அவரது விழிகள் அகன்றன. முகமெங்கும் சட்டென ஒரு ஆர்வம் மின்னியது.
“அது வெயில் ..” என்றேன்.
அவர் சட்டென மொழிபெயர்ப்பாளரைத் திரும்பிப் பார்க்க, அவர் என் சொற்களை மொழியாக்கம் செய்ய, பெரும் ஆர்வத்துடன், “மேற்கொண்டு சொல்லுங்கள்” என்றார்.
உடலெங்கும் சூழ்ந்திருந்த படபடப்பான மனோநிலையிலும், பதற்றத்தில் எனக்கு சட்டென்று வார்த்தைகள் வரவில்லை. நான் தடுமாற ஆரம்பித்தேன்.
காம்யுவின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு திரைப்படம் ஸ்கிரீனிங் செய்வதற்கான நேரம் ஆகிவிட்டிருந்தது.
“சரி, நேரம் ஆகிவிட்டது, திரைப்படத்தை ஆரம்பிக்கலாம்…” என்றவாறே இருக்கையை விட்டு எழுந்தவர், “சரி, இதை ஒரு கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்..” என்றார். மொழிபெயர்ப்பாளரிடம் திரும்பி, “கட்டுரையை வாங்கி எனக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்.
அதன் பிறகு மாபெரும் விரக்தியில் ஊர் திரும்பினேன். ஏனோ, அந்தக் கட்டுரையை எழுதி அனுப்பவில்லை.
இன்றைக்கு 30 வருடங்கள் கழித்து இதை எழுதுகிறேன். அப்படியான வரலாற்றுத்தருணங்களை எனக்கு ஏற்படுத்தித் தந்த ஆசிரியருக்கு மனப்பூர்வமான நன்றி!
காம்யுவின் கடைசி நூலான The First Man நூல், To you who will never be able to read this book.. என்ற வரிகளுடன் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும்.
திருவாளர் டோட் க்கு இந்தவரிகளை இங்கு சமர்ப்பணம் செய்வது பொருத்தமாக இருக்கும்.
*****
“My basic idea was to start with Albert Camus’s “The Stranger,” to question the work, but to move on from there—to question my own presence in the world, my present and today’s reality… ” என்று நியூயார்க்கர் பேட்டியில் சொல்லும் Kamel Daoud’s The Meursault Investigation நூல் குறித்து இங்கே பதிவு செய்வது காம்யூவுக்குச் செய்யும் எழுத்து தர்மம்!
அந்நியன் மொழியாக்கம் தமிழில் வெளிவந்த 30 வருடங்கள் கழித்து அதே மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தில் இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. இதில் இணைத்திருக்கும் விரிவான பின்னுரையில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது பாராட்டவேண்டிய அம்சம்!
என்னுடைய பல்வேறு கேள்விகளுக்கு இந்த நூலில் விடை கிடைத்தது. உதாரணமாக, துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் சொல்வது போல, “அந்நியனின் பிரெஞ்சு நாயகன் யோசனையின்றி ஓர் அராபியனைக் கொலை செய்வதை, காலனியப்பிரச்சினையாக அல்லது, தத்துவார்த்தைப் பிரச்சினையாக கருதுமாறு காம்யுவைத் தூண்டியது எது?” என்கிற எனக்குமான கேள்விக்கான விடை இந்தப் பிரதியில் கிடைத்தது.
” மெர்சோ (Meursault) என்றால் என்ன? தனிமையில் சாவதா (Meurt seul) ? முட்டாளாகச் சாவதா (Meurt sot) ? ஒருபோதும் சாகாமல் இருப்பதா ( Ne meurt jamais) ? ” என்று கேட்கும் மூஸாவின் கேள்விகள், தீராத அந்தப்பிரதியின் ஆன்மாவை தொட்டுக் காட்டுகின்றன.
அந்த நியூயார்க்கர் பேட்டியில் மேலும் தாவுத் சொல்கிறார். “I wanted to take another look at that strangeness. I’m not responding to Camus—I’m finding my own path through Camus.”
துப்பாக்கி தோட்டாவின் சத்தத்தையும், சார்த்தரின் பியானோ இசையையும், காமெல் தாவுதின் கடலுறை ஒலியையும் கண்களை மூடிக் கேட்டுக் கொண்டிருக்கும்போது அகக்கண்களில் எழுகின்ற மூன்று விதமான மஞ்சள் வண்ணங்களிலும் தோன்றுவது ஒரே வெயில்தானா?
********
தமிழ் வாசகருக்கான குறிப்புகள்:
யுவாங் ஸி (Zhuangzi) : நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தத்துவ ஞானி. இவரது புகழ் பெற்ற தத்துவக் கோட்பாடு. “நான் வண்ணத்துப் பூச்சியைக் கனவு காண்கிறேனா அல்லது வண்ணத்துப் பூச்சி என்னைக் கனவு காண்கிறதா?” என்பது.
மூஸா : தற்கால சர்வதேசக் கவனம் பெற்று வரும் அல்ஜீரிய எழுத்தாளரான காமெல் தாவுத் எழுதியுள்ள நாவலின் நாயகன்.
இந்தக்கதை, ஆல்பெர்ட் காம்யு வின் புகழ்பெற்ற “அந்நியன்” நாவலின் தொடர்ச்சி மற்றும் அற்புதமான எதிர்வினை!
அந்நியன் நாவலில் பெயர்தெரியாத ஒரு அல்ஜீரியனை சுட்டுக் கொன்று விட்டு அதை இலக்கியத்தன்மையோடு (நியாயப்படுத்தி?) எழுதிய விஷயத்தை உலகமே மகத்தான இலக்கியமாகக் கொண்டாடிக்களித்ததை அனைவரும் அறிவோம். ஆனால், அதற்கு எதிராக வேறு ஒரு அறம் சார்ந்த பார்வையை ஒரு அற்புதமான இலக்கியக் காவியமாக முன்வைத்து, ஒரு எதிர்ப்புக்கு குரல் எழுந்தது. அது காமெல் தாவுத்!
“மூசா” என்னும் தலைப்பில் ஒரு நீண்ட சிறுகதையாக தி நியூயார்க்கர் இதழில் எழுதினார் தாவுத். அந்த சிறுகதை உலகளவில் பெரும் பரபரப்பை – கவனத்தை ஏற்படுத்தியது. அந்த கதை தந்த இலக்கிய உத்வேகத்திலும், உற்சாகத்திலும், அதன் நீட்சியாக அந்த கருத்தாக்கத்தை செழுமைப்படுத்தி, அந்தக் கதையை பெரிதாக வளர்த்தெடுத்து நாவலாக மாற்றினார். “The Meursault Investigation ” என்று விரிவான நாவலாக எழுதினார். உலகம் முழுக்க பெரும் கவனத்தையும் புகழையும் ஏற்படுத்தியது. இந்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை கிரியா பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. “மெர்சோ ஒரு மறுவிசாரணை” – தமிழில் வெ.ஸ்ரீராம்.
இந்த நாவலில், ” மெர்சோ (Meursault) என்றால் என்ன? தனிமையில் சாவதா (Meurt seul) ? முட்டாளாகச் சாவதா (Meurt sot) ? ஒருபோதும் சாகாமல் இருப்பதா ( Ne meurt jamais) ? ” Meursault என்கிற வார்த்தையை வைத்துக்கொண்டு வார்த்தை விளையாட்டு விளையாடியிருக்கிறார் காமெல் தாவுத்.
************