- தமிழில் : கௌதம சித்தார்த்தன்
*மரம்
நான் அசையாமல் நின்று மரங்களின் நடுவே ஒரு மரமாக இருந்தேன்,
டாப்னே உருமாறிய லாரல் மரக்கிளையின் வில்லசைவில்,
முன்பு புலனாகாத விஷயங்களின் சத்தியம் தரிசிக்கிறது
மேலும் ஒரு முதிர் தம்பதியரின் கடவுள் தரிசனம்
நீண்ட எல்ம் மற்றும் ஓக் மரங்களாக வளர்கின்றன.
கடவுள்களை மன்றாடி வேண்டும் கிளைகளில்
அவர்களது திறந்த இதயங்களின் சந்திப்புக்கான
அதிசயங்களை நிகழ்த்த வேண்டும்
இன்னும் அந்த மரங்களின் நடுவே ஒரு மரமாக இருந்தேன்
நான் புரிந்துகொண்ட பல புதிய விஷயங்கள்
முன்னர், என் தலையில் மிலேச்சமாகத் தோன்றின.
* இந்தக்கவிதையின் தொன்மம் பண்டைய கிரேக்க புராணிகங்களிலிருந்து வந்த அப்பல்லோவும் டாப்னேவும் என்ற கதையிலிருந்து கட்டமைக்கப்பட்டது. அப்பல்லோவும் டாப்னேவும் கதையை சுருக்கமாக பார்க்கலாம். அப்பல்லோ, க்யூபிட் என்னும் மன்மதனை அவமதித்ததற்குப் பழிவாங்கும் விதமாக, மன்மதன் அப்பல்லோவை தனது காதல் அம்புகளில் ஒன்றை அவன் மீது எய்து, காதல் தாபத்தை அவனுள் தூண்டிவிடுகிறார். அதன் பின்னர் அவனது காதலி டாப்னே மீது, காதலன் மீது வெறுப்பைத் தூண்டும் அம்பு ஒன்றை எய்து, வெறுப்பை அவளுள் தூண்டுகிறார். அதன் விளைவாக, அப்பல்லோவை டாப்னே வெறுக்க, அப்பல்லோ காதல் தாபத்தில் அவளைப் பின்தொடர, அவனிடமிருந்து டாப்னே தப்பி ஓடுகிறாள் . அவள் ஓடும்போது அவளுக்கு உதவும்படி கடவுள்களை வேண்டிக்கொள்கிறாள். அப்பல்லோ அவளை அழைத்துச் செல்ல முடியாதபடி அவளை ஒரு லாரல் மரமாக மாற்றுகிறார்கள் கடவுளர்கள்.
இது, கிரேக்க ஹெலனிய கால மற்றும் ரோமானிய எழுத்தாளர்களால் விரிவான ஒரு செவ்வியல் வடிவத்தில் மீண்டும் சொல்லப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் உலகப் புகழ் பெற்ற ரோமக் கவிஞரான ஓவிட் எழுதிய Metamorphoses என்னும் அமர காவியம்தான் இந்தத்தொன்மத்தை மறுமலர்ச்சியாக உலகமெங்கிலும் மாற்றியது.
மனிதர்களைமரங்களாக மாற்றுவது பற்றிய இரண்டு பிரபலமான புராதன புராணக் கதைகளில்,அப்பல்லோவும் டாப்னேவும் போல, அதே Metamorphoses ல் வரும், திரேசிய ஏழை தம்பதிகளான பிலேமோனும் பாசிஸும் கதை. இத்தம்பதிகளின் வீட்டுக்கு வரும் கடவுளருக்கு நல்ல விருந்தோம்பல் செய்ததன் பலனாக, அவர்களின் புகழ் நிலைக்க, அவர்களை ஓக் மற்றும் லிண்டன் (எல்ம்) மரங்களாக மாற்றுகின்றனர் கடவுள்கள். இந்தத் தொன்மங்களை நவீன வாழ்வில் பொருத்திப் பார்க்கிறார் எஸ்ரா பவுண்ட்.
**************
சிறுமி
மரம் என் கைகளில் நுழைந்துள்ளது,
அதன் உயிர்ச்சாறு என் கரங்களுள் ஊடுருவுகிறது,
மரம் என் மார்பில் செழித்து வளர்கிறது –
கீழ்நோக்கி,
கிளைகள் என்னைப் பிளந்து ஆயுதங்களாய் வளர்கின்றன.
நீங்கள் மரம்,
நீங்கள் பாசி,
அவைகளுக்கு மேலே காற்றாய் சுழலும் ஊதா நிறம் நீங்கள்.
நீங்கள் ஓங்கி உயர்ந்த ஒரு குழந்தை
இதெல்லாம் உலக நீரோட்டத்தில் மிலேச்சம்.
***********
பிரான்செஸ்கா
நீ இரவில் இருந்து வெளியே வந்தாய்
உன் கைகளில் மலர்கள் இருந்தன,
இப்போது நீ வெளியே வருகிறாய்,
ஜனங்களின் அசூயைகளிலிருந்தும்
உன் பற்றிய பேச்சின் இடர்பாடுகளிலிருந்தும்.
முக்கியமான விஷயங்களின் மையமாக உன்னைக் கண்ணுற்ற நான்
சாதாரண இடங்களில்
அவர்கள் உன் பெயரை குறித்தபோது கோபமாக இருந்தது
நளிர் காற்று என் மனதை நனைக்க வேண்டுமென விரும்புகிறேன்,
உலகம் ஒரு இறந்த இலையாக உலர வேண்டும்,
அல்லது ஒரு டேன்டேலியன் விதைக்காய் போல வெடித்துச் சிதறவேண்டும்
நான் உன்னை மீண்டும் கண்டுபிடிப்பதற்காக,
தனியாக.
******************
ஓவியம் : Henri Gaudier-Brzeska