• Sun. Sep 17th, 2023

பாட்டப்பன்

ByGouthama Siddarthan

Aug 6, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

ஊரெங்கும் வெக்கையடித்துக் கொண்டிருந்தது. மழை மாரி பொய்த்துப் பல வருடங்கள் கழிந்ததில் காடுகரைகள் வெம்பிக் கிடந்தன. பச்சையெல்லாம் கருகிப்போய் வெயில் காந்திய சருகுகளின் சரசரப்பில் திசைகள் அதிர்கின்றன. வானத்தை முட்டுகிற உயரத்தில் மிடுக்காய் உட்கார்ந்திருந்த பாட்டப்பனின் கருத்த திரேகத்தில் பட்டு அனலோடியது பொழுது.

கோயில் பாழடைந்து கிடந்தது. முன்வாசலில் நட்டு வைத்திருந்த வேல்கம்புகள் துருப்பிடித்துப் போய் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தன. உட்புறச் சுவர்கள் இடிந்து, புதர் மண்டிப்போய் புழுக்கை நாற்றம் புழுங்க, இருளண்டிய உட்பிரகாரத்தில் மினுக்கிட்டாம் பூச்சியாய்த் தூண்டாமணி எரிந்து கொண்டிருந்தது. அசைந்தாடும் அதன் மினுக்கல் பாட்டப்ப சாமியின் மீது பட்டுப் பட்டு விலக, சாமியின் கண்ணடக்கம் கண் சிமிட்டி ஒளிர்ந்தது. சாமிக்கு மேலே அரிஅரியாய்க் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்த தானிய மணிகள் பழுப்பேறி மக்கிப் போயிருந்தன. இருளினூடே சார்த்தி வைக்கப் பட்டிருந்தன கொடுவாள்கள்.

பூசாரியின் மணிச்சத்தம் திடுமென ஒலிக்க வௌவால்கள் சிறகடித்துப் பறந்த படபடப்பில் தனது கவனம் கலைந்து கை குவித்தான் தங்கராசு. பூசாரியின் லாவகமான கையசைப்பில் மணியின் வெண்கல நாவுகள் ஒரு லய ஒழுங்கில் அசைய, ஒருவித சாந்தம் சுதி கூடியது. பிரகாரம் முழுக்க அதன் சுவை எழும்பி வெக்கையைத் தணித்தது. ராகமெனக் கூடி அவனை முழுவதும் ஆக்ரமித்தது. இது எந்நேரம்வரை நீடித்ததோ, சட்டென ஒலியலைகள் நின்றுபோக, கண்களைத் திறந்தான். எதிரே கற்பூரத் தட்டை நீட்டிக் கொண்டிருந்தார் பூசாரி. காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த தீபத்தின்மேல் பவ்வியமாய்க் கைகளைக் குவித்தான்.

திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டே பூசாரியிடம் பேச்சுக் கொடுத்தான் அவன், “ஏம் பூசாரி… வெயில் என்ன இந்தப்போடு போடுது… இந்த வருசமும் மழை பேயாதாட்ட இருக்கே…”

“எப்படித் தம்பி பேயும்..? பாட்டப்பன் மனசு குளுந்தாத்தான் மழை பேயும்”

“என்ன சொல்றீங்க பூசாரி?”

“ஆமாப்பா, பாட்டப்பனுக்குப் பொங்கல் வெச்சாத்தா மழை பேயும்”.

“அதானே பாத்தேன்… உங்க சோலியைத்தானே பாக்கறீங்க..?” என்றான் கிண்டலாக.

“அதில்லே தம்பி… பாட்டப்பன் வரலாறு அப்பிடி…”

“அப்பிடியா… அப்பிடின்னா பொங்கல் வெச்சிடறதுதானே…?”

“அது அவ்வளவு சுலபமில்லை… ஏதாச்சும் ஒரு ஆட்டுப்பட்டியிலே போயி ஒரு ஆட்டைத் திருடீட்டி வந்துதான் பொங்கல் வெக்கோணும்…”

“என்ன… திருடீட்டா…?”

“ம். அதுவும் கருத்த ஆட்டைத்தான் கொண்டார வேணும்…”

“அதென்ன கருத்தாடு…?”

“பாட்டப்பனுக்குப் புடிச்சது கருத்தாடுதான்… அதனாலே…”

“ஓஹோ..”

“அதுமட்டுமில்லப்பா… ஆட்டை வெட்டி நாங்களா வெச்சுக்கப் போறோம்..?”

“பின்னே..?”

“பூசாரி தன்னோட கண்ணைக் கட்டிக்கிட்டு ஆட்டை வெட்டி ஆத்திலே உட்டுற வேணும்… வெச்சிக்கப்படாது…”

“அடடே… நல்லகதையா இருக்கே… சொல்லுங்க பூசாரி… இது எதனாலேன்னு…”

பூசாரி வெளித் திண்ணையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தார். அவருக்கு நேர் எதிரே வானத்தை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பாட்டப்பனின் உருவத்தைக் கண்கொட்டாமல் பார்த்தார். வெயில் சூடேறிக்கொண்டிருந்தது.

***

அப்பா அம்மா வைத்த பெயர் வேறாக இருந்தாலும் பாட்டுச்சாமி என்கிற பெயராலேயே அந்தச் சுற்று வட்டாரத்தில் அவன் வலம் வந்தான். அவனிடம் செம்பிளி ஆட்டின் வீச்சத்தையும் மீறிப் பாட்டின் வாசனை கமகமப்பதனால் வந்த காரணப் பெயர் அது. அதிகாலையில் படுக்கையை விட்டு எழும்போதே ராகத்தை நீட்டிக்கொண்டுதான் எழுவான். குடிசையின் எரவானத்தின் கீழ் தொங்கிக் கொண்டிருக்கும் பஞ்சாரம் கரகரவெனச் சுழல பச்சைக்கிளி ‘கிக்கீ’ எனக் கூடப் பாடும். அதைச் செல்லமாகத் தட்டிவிட்டு, குளிரில் விறைத்தபடி படுத்துக் கிடக்கும் அம்மாசிக் கிழவனை எழுப்பாமல் ஆட்டுக் கிடைக்கு நடப்பான்.

தலைவேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு பட்டியில் நுழைந்து, முதலில் மூச்கைச் சுண்டி வாசனை பார்ப்பான். ஏதாவது ஆடு கழிந்திருக்கிறதா என்ற நோட்டத்தில் புழுக்கையின் வாசனை மாறியடிக்கும். ஆடுகளை ஓரங்கட்டி, சுத்தமாகக் கூட்டி ஆட்டுப் புழுக்கைகளை அள்ளுவான். கழிந்திருக்கிற ஆட்டை வெளியே இழுத்து வந்து அம்மாசிக் கிழவனை எழுப்புவான். அசதியுடன் எழும் கிழவன் கண்களைப் புறங்கையால் துடைத்து விட்டுக் கொண்டே வயல்கரைக்குப் போய்ச் சில தழைகளைப் பறித்து உள்ளங்கையால் நிமிண்டிக் கொண்டே வருவான். அம்மிக் கல்லில் வைத்து நன்றாக அரைக்க, பாட்டுச்சாமி ஆட்டின் கால்களைப் பிணைத்துப் படுக்க வைப்பான். ஆட்டின் கத்தலைப் பாட்டுச்சாமியின் ராகம் அடக்கும். மருந்தைத் தண்ணீரில் கலந்து கொட்டத்தில் ஊற்றுவார்கள். தண்ணீர்த் தொட்டிக்கு இழுத்துப் போய்க் கழிச்சலைச் சுத்தமாகக் கழுவி விட்டு, வேப்ப மர நிழலிலேயே கட்டி வைத்து விடுவான்.

அதற்குள் அவர்களிருவருக்கும் பண்ணாடி வீட்டிலிருந்து கம்மங்கஞ்சி வந்து காத்திருக்கும். வேப்பங் குச்சியை ஒடித்துப் பல் துலக்கி கை கால் சுத்தம் செய்யும்போது கத்திரிக்காய் வாசனை தூக்கும்.

கஞ்சி குடித்து விட்டுப் பச்சைக்கிளிக்குக் கொய்யாப்பழம் எடுத்துப் பிய்த்துப் போடுவான். கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி விட்டு நிமிர்ந்தால், இருவருக்கும் தூக்குப்போசியில் கஞ்சி ஊற்றி எடுத்துக் கொண்டு சல்லக் கொக்கியைத் தூக்கிக் கொள்வான் அம்மாசி. படலைத் திறந்து அப்படியே மேய்ச்சல் நிலத்திற்குள் ஆடுகளை ஓட்டி விட்டால் குதியாளம் போட்டுக் கொண்டு ஓடும். அவனுக்குள் அதுவரை முணங்கிக் கொண்டிருந்த ராகம் ‘தன்னானே’ பாட்டாக அலையடித்து வீசும்.

சேற்று வயலில் காலாடி, நாற்று நடும் பெண்டுகளைப் பாட்டு எட்டும். அதுவரை மந்தமாயிருந்த அவர்களின் கை விசை ஒருவித லய அசைவில் துரிதமடையும். ஏர் ஓட்டுபவனின் சாட்டைக் குச்சிக்கு வேலையில்லாமல், தலையை அசைத்துக் கொண்டே உழவு மாடுகள் பரம்படிக்கும். ஏத்தல் இறைக்கும் உருளை கிறீச்சிடும் சத்தம், பாட்டுக்குப் பின்னணியாக இழையும். தூரத்தே ஆடு மேய்க்கும் சிறுவர்களின் ‘புள்ளுக்கோல்’ விளையாட்டில் பறந்து வரும் சந்தோசத்தை, ஆட்டம் பாட்டமாகக் கொண்டாடும்.

அம்மாசிக் கிழவன் சல்லக்கொக்கியில் கோவைத்தழை பறித்துப்போட, கோவைப் பழங்களைப் பதனமாகப் பறித்து நடுச்சுமையில் வைத்துப் பொத்தி சுமையாகக் கட்டிக் கொள்வான் பாட்டுச்சாமி.

மதிய வெயிலில் குடைவேல மரத்தின் கீழ் உட்கார்ந்து முள் வாங்கி விடப் பாட்டுச்சாமியிடம் காலை நீட்டுவான் கிழவன். வலி தெரியாது முட்களை நோண்டி எடுப்பதற்தாகத் தன்னானே ராகத்தைச் சுதி மாற்றிப் பாடுவான் பாட்டுச்சாமி. கிழவன் வலி தெரியாது கிறங்கி நிற்க, காடுகரையெல்லாம் சொக்கும். கண்ணி வாய்க்கால் கரையின் ஆல விழுதில் தொங்கும் தொட்டில் சீலையில் அழுது கொண்டிருக்கும் பச்சைக் குழந்தையின் அழுகுரல் அப்படியே நின்று போகும். வெயில் தாழ தண்ணி பாய்ச்சுபவனின் கருத்த முகத்தில் சந்தோசத்தை மடைமாற்றும்.

கருக்கலில் கிடைக்குத் திரும்பிப் பட்டியடைக்கும்போது விளக்குக் கொளுத்துவான் கிழவன். கிளி ரெக்கைகளைப் பதட்டமாய் அடித்துக் கொண்டு ‘கீக்கி’ எனக் கத்தும். கோவைத்தழைச் சுமையை அவிழ்த்து, பழங்களை எடுத்துப் பஞ்சாரத்துக்குள் போடுவான்.

இரவு சாப்பிட்டு விட்டு நிலா வெளிச்சத்தில் தென்னந்தடுக்குகள் பின்னுவார்கள். கிளிதான் அவனுக்கு முதலில் பாட்டெடுத்துக் கொடுக்கும். ஓயாமல் குரைத்துக் கொண்டேயிருக்கும் நாய்களை அதட்டிவிட்டுப் பாட்டெடுத்துக் பாடினால் இரவில் களத்து மேட்டில் படுத்திருக்கும் சுருட்டைக் கிழவனின் சலங்கைகள் பொதிந்த காவல்தடி கிலுங்கலுடன் ஆடிக் குலுங்கும். வீட்டுக்கு வெளியே கம்மங்குச்சிலில் பயந்தபடி படுத்திருக்கும் சமைந்த சிறுமியின் புதுக்கால் கொலுசுகளில் ராகமிசைக்கும்.

இப்படிப் பாட்டும் பஞ்சாரமும், பச்சைக் கிளியுமாக இருந்த பாட்டுச்சாமியின் வாழ்வை மடை மாற்றி விட்டவள்தான் பூவா.

பண்ணாடியின் ஒரே பெண்ணான பூவாத்தாதான் பாட்டுச்சாமியின் சேக்காளி. அவனது தன்னானே பாட்டு என்றால் அவளுக்கு உயிர். அவனுக்கும் அவளைப் பார்த்தால் முகமெங்கும் புதுப்புது ராகங்கள் துள்ளும். மனசைக் கவரும் ஒயிலான மெட்டுகளில் அந்தப் பொழுதை மேலும் அழகாக்குவான்.

காலையில் கஞ்சி கொண்டு வந்து கொடுத்து விட்டு அவன் ஆடுகளோடு பேசும் அழகைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவனோடு பதிலுக்குப் பேசுகிறாற்போல ஆடுகள் தலையைத் தலையை ஆட்டும்போது காதுகள் டப்டப் என்று அடித்துக் கொள்ளும் லாவகத்தை வைத்து அவர்களது பேச்சோட்டம் போய்க்கொண்டேயிருக்கும் நுட்பத்தில் வியந்துபோய் நிற்பாள் பூவா. ‘கீக்கி’ என்று ஓயாமல் அவளை அழைக்கும் பச்சைக் கிளியுடன் கொஞ்சி விளையாடுவாள். அவர்கள் ஆடு முடுக்கிக் கொண்டு போன பிறகு வீடு திரும்புவாள். வீட்டில் கொஞ்ச நேரம் அருக்காணியுடன் அஞ்சாங்கல் விளையாடி விட்டு, பாட்டுச்சாமி கொடுத்த களி மண்ணில் பொம்மைகள் செய்வாள்.

ஒருவழியாய் சாயங்காலம் ஆனதும், தன் வீட்டோரத்தில் உள்ள வேப்பமரத்தில் ஏறி, கொண்டையத்தில் போய் உட்கார்ந்து கொண்டு அவனது பாட்டுச்சத்தம் வருதா எனக் காத்திருப்பாள். சற்றைக்கெல்லாம் அலையலையாக வேப்பமரத்தின் கிளைகளில் வந்து மோதும் ராகம். அந்திப் பொழுது அதன் சுதியில் மங்கி வெம்மை தணிந்து மயங்கி நிற்கும் அழகில், தூரியில் வைத்து ஆட்டுவதுபோல அவளது கிளை அசைந்து கொடுக்கும் சுகம். கரும் பச்சையாய் இருக்கும் வேப்ப இலைகள் மெல்ல நிறம் மாறி வெளிர் மஞ்சளாகும். அவளது பாட்டு முடியும் தருணம் வேப்பங்காய்களெல்லாம் பொன்மஞ்சளாய் மாறிப் பழுத்திருக்கும். பூவா ஒரு வேப்பம் பழத்தைப் பறித்து வாயில் போட… அதுபோன்ற தித்திப்பை அவள் வேறு எந்த நாளும் சுவைத்ததில்லை.

பாட்டுச்சாமி அவளுக்காக மேய்ச்சல் நிலத்தில் காடை முட்டைகள் தேடி எடுப்பான். கோணப் புளியம்பழம், இலந்தப்பழம், கத்தாளைப் பழமென முள் பழங்களைச் சிரமப்பட்டுக் கொண்டு வருவான். கிழவனிடம் சொல்லிச் சந்தையில் பட்டுநூல் வாங்கி வந்து கட்டம் கட்டமாகச் சுருக்குப் பை பின்னித் தந்தான். காக்காய்ப் பொன்னை அவள் முகத்தில் பூசிவிட்டான். வெயிலில் அவள் முகம் மினுக்கியது.

அவளும் வீட்டிற்குத் தெரியாமல் சீனிக்கிழங்கு, பனங்கிழங்கு, பணியாரம் என்று கொண்டு வந்து தருவாள். ஏதாவது ஒருநாள் மேய்ச்சல் நிலத்திற்கே அவள் வந்து விட்டால், நுங்கு வெட்டித் தருவான். நல்ல மொட்டை வெய்யில் இதமாகக் தொண்டைக் குழிக்குள் இறங்கும்.

இந்தச் சிறுசுகளின் நட்பு பண்ணாடிச்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுருக்குப் பையைப் பிடுங்கித் தலையைச் சுற்றி வீசியெறிந்தாள். ‘ஆளுக்காரப் பையனோட உனக்கென்ன சேர்க்கை?’ என்று கண்டித்தாள். இருந்தும் பாட்டுச்சாமியின் ராக மெட்டுக் கேட்காமல் பூவா ஒரு நாழிகையும் இருக்க முடியாது என்றாகிப் போச்சு. ஆற்றுத் தண்ணீரில் தலைகீழாய் ‘சொருல்’ அடித்துக் காட்டினான். ஆற்றங்கரை மணலில் கிளிஞ்சல் பொறுக்கி, சீழ்க்கை அடிக்கக் கற்றுக் கொடுத்தான்.

அன்று மேய்ச்சலிலிருந்து திரும்புகையில் அவளுக்குப் பொன்னாம்பூச்சி பிடித்து வந்திருந்தான். விடிய விடியத் தூங்காமல் அந்தப் பூச்சிக்குக் கோணப்புளியந் தழையைப் போட்டுக் கொண்டு ஓலைப் பெட்டியில் பதனமாக வைத்திருந்தான். காலையில் அவள் வந்ததும் ஓடிப் போய் அதை எடுத்துக் காட்டினான். அவளுடைய முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி பொங்கியது. அதன் கழுத்தில் கட்டியிருந்த நூலைப் பிடித்துக்கொண்டு கரகரவெனச் சுழட்ட, பொன்னாங்கண்ணி சிறகடித்துச் சுற்றியது. அதன் ரெக்கை வர்ணங்கள் அதிகாலைச் சூரிய வெளிச்சத்தில் பட்டு, பொன்னாய் மின்னின. பாட்டுச்சாமி உற்சாகமாய் சுழட்டிக் கொண்டே பூவாவைப் பார்த்தான். அவள் முகம் சொங்கிப்போயிருந்தது.

“ஏம் பூவா பிடிக்கலையா…?”

“ம்… இதைவிட்டுற மாட்டியா…? பாவமாயிருக்குது…”

அடுத்த கணமே அந்த நூலை அறுத்தெறிந்து பொன்னாங்கண்ணியை அவளது உள்ளங்கையில் வைத்தான். அவள் கைகள் நடுங்கியவாறு வாங்கிய பொன்னாம்பூச்சியை பூ பூ என்று ஊத, அது சிறகு பரத்தி மெல்லப் பறந்து சென்றது. அதைப் பிடிப்பதற்குக் கோணப் புளிய மரத்தின் முட்கள் குத்தி ரத்தம் வழிய எவ்வளவு பாடுபட்டிருப்பான். ஆனாலும் அதைப் பிடிக்கும்போது கிடைத்த சந்தோசத்தை விடவும் பல மடங்கு சந்தோசம், இப்பொழுது கிடைத்தது.

‘கீக்கீ…கீக்கீ’… என்றது பச்சைக் கிளி. பூவா திரும்பி அதைப் பார்த்தாள். அது படபடவென்று றெக்கையடித்துக் கொண்டு மேலும் கீழும் அலைந்தது. அவள் திரும்பிப் பாட்டுச்சாமியைப் பார்த்தாள். அவளது கண்கள் அவனது கண்களுக்குள் போய்க்கொண்டிருந்தன.

“எனக்கு அந்தப் பச்சைக்கிளியைக் குடுப்பியா?”

“ம்… இந்தா…” என்றவன் சட்டெனப் பஞ்சாரத்தின் கொக்கியை விலக்கி எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கியவள் அவனை உறுத்துப் பார்த்தாள். அவன் எதுவும் தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பஞ்சாரத்தின் சிறுகதவைத் திறந்து கிளியை வெளியே விட்டாள். றெக்கைகளை அடித்துக் கொண்டு சந்தோசமாய்க் கீக்கீ எனக் குரலெழுப்பியவாறு வானில் சுதந்திரமாய் மிதந்து பறந்தது. பூவா முகத்தில்தான் எத்தனை பூரிப்பு. பாட்டுச்சாமியால் அதைத் தாங்க முடியவில்லை. பொங்கி வரும் அலையைப் போல் மெட்டெடுத்துத் தன்னானே பாடினான். பூவா குதியாளம் போட்டுக்கொண்டு ஓடினாள்.

****

அம்மாசிக் கிழவன் ஆட்டுக்குச் சொக்குப்பாடம் போட்டுக் கொண்டிருந்த ஒரு நாள், “உனக்குப் புடிச்ச ஆடு எது?” என்று கேட்டான் பாட்டுச்சாமி.

அவள் எப்போதோ தீர்மானித்து வைத்தவள் போல் ஒரு கருத்த ஆட்டைப் போய்க் கட்டிக் கொண்டாள்.

“ஏன் இது உனக்குப் புடிச்சிருக்கு?”

“இது உம்மாரியே இருக்கு…” என்று கலகலவெனச் சிரித்தாள் பூவா.

அன்றிலிருந்து அவன் அந்தக் கருத்த செம்பிலிக்கடாவை அடிப்பதே இல்லை. அவ்வப்போது முடியைச் சிக்கெடுத்து, நீட்டிக் கொண்டிருக்கும் குளாம்புகளைக் கச்சிதமாக வெட்டிக் குளுப்பாட்டி விடுவான். கொம்புகளுக்குச் சாயம் பூசினான். கிளிஞ்சல் கோர்த்து மாலை பின்னிப் போட்டான். மேய்ச்சல் நிலத்தில் கிடைக்காத மலைக்கிளுவந்தழை, நரிப்பயிறு, சீனிக்கொடி என்று அரிய தீவனங்களைச் சேகரித்து வந்து சோக்காக வைத்திருந்தான். அந்த ஆட்டைப் பார்க்கும்போது கண்ணாடி முன் தன்னையே பார்ப்பது போலத் தடவிக் கொடுப்பான். அப்போது அவனது உடம்பெங்கும் ஜிலீர் என்று பாட்டு புரண்டு புரண்டோடும்.

கறுப்பு வர்ணமும் சிவப்பு வர்ணமும் இணைந்த குன்றிமணி அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். வெகுநாள் தேடிச் சேகரித்து வைத்து மாலையாகக் கோர்த்துப் பூவாவுக்குத் தந்தான். அதைப் பார்த்ததும் அவளுக்கு ஏகக் கொண்டாட்டம். சிறுசிறு மணிகளாக வர்ணங்கள் மாறிமாறிக் கோர்க்கப்பட்ட குண்டு மணிகளின் ஈரம் உள்ளங்கையில் சுரந்தது. அவள் அதைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, “நல்லாருக்குதா?” என்றாள் ஆனந்தமாக. அவன் மெய்மறந்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவள் அவனது கண்களுக்குள் தனது உருவத்தையும், மாலையின் ஜொலிஜொலிப்பையும் ஆசை தீரப் பார்த்தாள். தன்னையுமறியாது தன்னானே மெட்டை அவளது வாய் முணங்கத் தொடங்கியது. அவன் அதைச் சுதி கூட்டிப் பெருங்குரலெடுத்துப் பாட, மேய்ச்சல் நிலமே செவ்வரியோடியது.

***

தொட்டிக்கட்டு வீட்டின் விளக்குகள் இன்னும் அணையவில்லை. பண்ணாடியின் கண்கள் சிவந்து போயிருந்தன. அவரது மீசை துடித்துக்கொண்டிருந்தது. பண்ணாடிச்சி வெத்திலை மடக்கி அவர் முன் நீட்டினாள், “இத்தச் சோடு கழுதையாவறா… அந்தச் சின்னச்சாதிப் பயனோட போயிச் சுத்தீட்டு வாரா…”

வெத்திலையை வாயில் போட்டு அதக்குகிறார். நெற்றி நரம்புகள் விண்விண்ணென்று புடைக்கின்றன. அவர்களது சிநேகிதத்தை நிகழ்ச்சிவாரியாக விவரிக்கிறாள் பண்ணாடிச்சி. படுக்கை கொள்ளாமல் எழுந்து முன்னும் பின்னும் நடக்கிறார் பண்ணாடி.

“சின்னபுள்ளக தானேன்னு இப்படியே உட்டுட்டா கடைசீல தீம்பு வந்துரும்… அந்த நாயை வேலையை உட்டு முடுக்குங்க…” என்கிறாள் அவள்.

மீசை நுனியில் ரத்தம் சூடேறித் துடிக்க, வாய் முழுக்க வெத்திலை எச்சில் அடங்காமல் தவித்தது. சற்று நேரத்தில் இறுகிப் போயிருந்த அவரது முகத்தில் அம்மைத் தழும்புகளின் விகாரம் இறங்கியது. வெளியில் எழுந்து போய் புளிச் என்று எச்சிலைத் துப்பினார். சொம்பிலிருந்து தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்தார்.

***

ஒரு வாரம் கழித்து ஆட்டுப் பட்டியில் இரண்டு ஆடுகள் திருடு போய்விட்டன. இரவு பட்டியடைக்கும்போது இருந்தவை அதிகாலையில் காணவில்லை. நாலாபுறமும் தேடுவதற்கு ஆட்களை அனுப்பி வைத்து விட்டு அம்மாசிக் கிழவனை ஒரு புடி புடித்தார் பண்ணாடி. பயந்து ஒடுங்கிப் போயிருந்த பாட்டுச்சாமியின் அடிமனசில் அவலம் கசியும் ராகம் ஒன்று சுதி கூடியது.

ஒருவழியாய் ஆடு திருடியவர்களைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள். பாட்டுச்சாமிதான் ‘உள்ளாள்’ என்று அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள். பாட்டுச்சாமியை இழுத்து வந்து சாட்டைவாரில் கை நோகும்வரை வீறினார் பண்ணாடி. “வெளியே போடா சின்னச்சாதி நாயே…” என்று செருப்புக் காலால் உதைக்க, “இல்லீங்க பண்ணாடி… நான் இல்லீங்க பண்ணாடி…” என்று காலைப் பிடித்துக் கொண்டு கதறினான் பாட்டுச்சாமி. செருப்பில் பதிந்திருந்த ஆணிகள் பொச்சாம்பட்டையில் ஏறின. பட்டி ஆடுகள் பாவமாகக் கத்தின.

“உண்ட வீட்டுக்கு ரண்டகம் செய்யற சின்ன சாதிக் கழுதை…” என்று பண்ணாடிச்சியும் திட்டினாள். ஊர்க்காரர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க பட்டிப்படலைப் பிடித்துக் கொண்டு தேம்பியவாறு நடுங்கிக் கொண்டிருந்தான் பாட்டுச்சாமி. கருத்த உடல் முழுக்கத் தாரைதாரையாய் ரத்தம் கன்றிப் போயிருந்தது. அப்பொழுதான் மூச்சுவாங்க ஓடிவந்தாள் பூவா. அவனைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை பொத்துக் கொண்டது. அவனருகில் போய், “ஏம் பாட்டுச்சாமி இப்பிடிச் செஞ்சே…?” என்றாள். “என்னைக் கேட்டிருந்தா அண்ணங்கிட்டே சொல்லி வாங்கிக் குடுத்திருப்பேன்ல்ல…” என்று அழுதாள்.

அதுவரை தேம்பிக் கொண்டிருந்தவனின் அழுகை சட்டென நின்று போனது. எழுந்து அவளை உறுத்துப் பார்த்தான். முகத்தில் ரத்த ஓட்டம் குபீரெனப் பாய்ந்தது. காற்றைப் போலச் சீறிக்கொண்டெழுந்தது ராகம். கண்கள் செஞ்சாந்து பாய்ந்து சிவக்க, அடித்தொண்டையிலிருந்து கம்மிய குரல் மாறி கடுமையான தொனியில் தன்னானே வெடித்தெழுந்தது. ஆவேசக் குரலில் ராகத்தைக் கூட்டிப் பாடிக் கொண்டே வெரசலாக வெளியே நடக்க ஆரம்பித்தான்.

பூவா, “பாட்டுச்சாமி… பாட்டுச்சாமி…” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடிவர, அவன் உக்கிரமாய் சுதியைக் கூட்டிக் கூட்டிக் குரல் கம்ம, காலெட்டி நடந்தான்.

அவனது ராகம் ஆட்டுப்பட்டியைச் சுற்றிச் சுற்றி ஆற்றாமையுடன் பொங்கிக் கொண்டிருந்தது.

***

அடுத்துக் கொஞ்ச நாளில் பூவாத்தாளுக்குக் கல்யாணம் வைத்து விட்டார்கள். பண்ணாடிச்சியின் தம்பிதான் மாப்பிள்ளை. கல்யாண வீட்டில் ஒலித்த மேளத்தையும் மீறிப் பூவாவின் அழுகைதான் ஓங்கிக் கேட்டது. நகை எதுவும் போட மாட்டேனென அழுது முரண்டு பிடித்துக் கொண்டிருந்தாள், “நான் இந்த குண்டுமணியைத்தாம் போட்டுக்குவேன்…” என்று காசுமாலையை வீசி எறிந்தாள்.

“இந்த வௌயாட்டுப் புள்ளக்கிக் கண்ணாலம் பண்ணா அதுக்கென்ன தெரியும்…” என்று உறவுக்காரர்கள் பெருமூச்செறிந்தார்கள். அவளுடைய வயசை வைத்து ‘அவள் விபரம் புரியாமல் மறுக்கிறாள்’ என்று ஊர்க்காரர்கள் நம்பக்கூடிய விதத்தில், பண்ணாடியும் பண்ணாடிச்சியும் அதக்கி, மிரட்டி, கட்டுத்திட்டம் செய்து ஒரு வழியாய்க் கல்யாணத்தை முடித்தார்கள்.

கல்யாணம் முடிந்து புருசன் வீட்டிற்குப் போவதற்கான வேலைகள் அதிகாலையிலிருந்தே நடந்து கொண்டிருந்தன. பூவா திடீரெனப் பெரிய மனுசி போல சாந்தமாகி விட்டாள். கண்கள் தொலைதூரத்தில் தீர்க்கமாய்ப் படிந்திருக்க, முகம் முன்னெப்போதையும்விட அழகாகிப் பொலிவு பெற்றிருந்தது. மடித்துப் பிடித்துக் கட்டியிருந்த கல்யாணச் சேலையில் நின்றெரியும் தீபத்தைப் போலத் துலங்கி நின்றது அவளது கோலம்.

வெளியே ஆயத்தமாயிருந்த மாட்டு வண்டிகளில் உறவுக்காரர்கள் ஏறி உட்கார, அம்மா அழுது கொண்டே பூவாவை வழியனுப்பிக் கொண்டிருந்தாள். பூவா கலங்காமல் அலட்சியமாய் இருப்பது கண்டு அவள் குழந்தைத்தனத்தை எண்ணி ஊர்க்காரப் பெண்டுகள் மேலும் அழுதனர். பூவா எதிலும் ஒட்டாமல் எங்கோ லயித்துக் கிடப்பவள்போல வண்டியின் வில்கம்பியில் முகம் புதைத்து அடிவானைப் பார்த்துக் கொண்டிருக்க, வண்டி நகர்ந்தது.

பரிசல் துறையை அடைந்ததும் எல்லோரும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அதற்குள் பரிசல்காரன் பரிசலை நிலையில் ஊன்றி நிறுத்த, ஆடைகளை நனையாமல் சுருட்டி விட்டுக் கொண்டு பரிசலில் ஏறினார்கள். பூவா பரிசலின் ஓரம் அமர்ந்து ஆற்றைப் பார்த்தாள்.
தண்ணீர் தலை துளும்பிக்கொண்டோடியது. பாட்டுச்சாமியின் ராகம் அவளது நெஞ்சில் அடித்தது. அந்த ஆற்றங்கரையில் கிளிஞ்சல் பொறுக்கி அவளது கையில் வைத்து ஊதிய சீழ்க்கை காதுகளில் ஒலித்தது. நடு ஆற்றில் பரிசக்கோலைப் போட்டு ஊன்றித் தள்ளும்போது தண்ணீரின் சலசலக்கும் ஓசை, சடக்கென எழுந்து ஆற்றில் குதித்தாள் பூவா. பரிசலிலிருந்தவர்கள் விக்கித்துப்போய் நின்றிருக்க, பூவா பிரவாகத்தின் சுழற்சியில் எழுந்து முங்கிக் காணாமல் போனாள். அடுத்த கணமே, பரிசலிலிருந்தவர்களும் கரையோரம் குளித்துக் கொண்டிருந்தவர்களும் ஆற்றில் குதித்துத் தேடினார்கள். நுரையடித்து வரும் வெள்ளத்தில் பூவா போட்டிருந்த கல்யாண மாலைதான் மிதங்கியது.

***

பாட்டுச்சாமி பித்துப் பிடித்தவன்போல, மேய்ச்சல் நிலங்களில் சுற்றிக்கொண்டு, இரவில் கோவில் வாசலில் தூங்கிக் கொண்டு மொட்டை வெயிலில் ஆற்றங்கரை மணலில் படுத்து வெந்து கொண்டிருந்தான். வெம்பலோடியிருந்த பொழுது சாய்ந்து குளுந்த இரவில் ராகமெடுத்துப் பாடுவான். தன் இணையைப் பிரிந்து வாழும் பறவையின் ராச்சோகமாய் அதன் சுதி மேலெழும்பித் துணையை அழைப்பது போலிருக்கும்.

அமாவாசை நெருங்க நெருங்க ராகத்தின் சுதி பல்வேறு ஓலங்களாய்ப் பிளவுபட்டு மனசை ஈர்க்குகளாய்க் கிழித்துப் போடும்.

யாரைத் தனது இதயத்தில் வைத்து ராகம் கட்டிக் கொண்டிருந்தானோ, அவளே அவனைத் ‘திருடன்’ என்று சொல்லிவிட்ட காரணத்தாலோ…

அல்லது,

பூவா ஆற்றில் குதித்துப் போய்விட்ட காரணத்தாலோ….

அமாவாசை இரவில் பட்டியில் புகுந்து கருத்த ஆட்டைத் திருடிக் கொண்டு வருவான். ஆற்றில் கொண்டு போய் நிறுத்தி அதற்குக் குளுப்பாட்டி விட்டு, முடியைச் சிக்கெடுத்துப் பொட்டுப் போட்டு சிங்காரித்து நிறுத்துவான். அதைக் கண் மாறாமல் பார்த்து அதற்குள் தன்னைத் தேடுவான். கட்டிக்கொண்டு நீவுவான். அப்பொழுது ஜிலீர் என்று ராகம் புரண்டு புரண்டோடும்.

மருள் வந்தவன்போல் தன்னானே ராகத்தை ஆக்ரோசமாகப் பாடுவான். பாட்டின் விசை ஏறி மூச்சு இளைப்பு வாங்கும். களிப்பு மிகுதியாகி கண்ணை மூடிக்கொண்டு கொடுவாளை ஓங்கி ஒரே போடு. தன்னுடைய தலை தனியாகத் துண்டாகிப் போய் விழுந்த உணர்வில் மயங்கிக் கரையோரம் விழுவான். அலையடித்தோடும் ஆற்றுநீர் கருத்த ஆட்டின் உடலை உள்வாங்கிச் சாந்தமாகும்.

***

வெயில் மாறியடித்துக்கொண்டிருந்த ஒரு நாளில், ஆற்று நீரின் சலசலப்பில் ஆழ்ந்து மொட்டைச் சாமியார் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அவர் எதிரில் அலர்ந்திருந்த நீல ஊமத்தம் பூவின் இதழ்களில் காலைச் சூரியன் பட்டு வண்ணங்களின் வில் வளைந்து கொண்டிருந்தது. நிறங்களின் தரிசனம் நிஜமா, நிழலா? ஒவ்வொரு தேவையான சில வண்ணங்களை மாத்திரமே அடையாளப்படுத்தும் சூரியனின் தாத்பரியத்தை வியந்துகொண்டே ஆற்றில் முங்கினார்.

எழுந்தபோது நதியின் நீரோட்டம் மாறியிருந்ததை உணர்ந்தார். அவரது பழுத்துத் தொங்கிய நீளமான காது மடல்களுக்குள் ரீங்காரமிட்டது. பாட்டுச்சாமியின் ராகம். மெல்லிய இழையாய் எழுந்த சோகத்தின் தொனி நதியில் பாய்ந்து அதிர்ந்து, அவருக்குள் உள்முகமாய் நுழைந்தது.

மெல்ல மெல்ல அவரது உடலின் திண்மை வதங்கி, கண்கள் ஒளியிழந்து கைகால்கள் வெட்டையாக, முகம் சாம்பிப் போயிற்று. மெதுவாக ராகத்தின் சுதி தேய்ந்து மங்க, விழிப்பு வந்தவராய்ப் பார்வையை உயர்த்திப் பார்த்தார்.

அவரது கண்களில் எதிர்ப்பட்டது ஊமத்தம்பூ. மலரின் இதழ்கள் தாங்க முடியாச் சோகத்தில் சுருண்டு கூம்பிப் போய்க் கிடந்தது. அந்தக் கணத்தில் அவர் உடல் முழுக்க ஒரு பரவசம் பரவியது. படபடப்புடன் சுற்றிலும் கண்களை ஓட்டினார்.

சற்றுத் தொலைவில் குடைவேல மரத்தின்கீழ் படுத்துக் கிடந்தான் பாட்டுச்சாமி. மார்பை அளைந்தோடும் நதியிலிருந்து எழுந்து, வேட்டியைப் பிழிந்தெடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு அவனை நோக்கி நடந்தார் சாமியார்.

அதன் பிறகு, பாட்டுச்சாமியின் ராகம் அந்தச் சுற்று வட்டாரத்தில் பல வருசங்களாகக் கேட்காமல் போனாலும் அமாவாசை தோறும் கருத்த ஆடு திருட்டுப்போன பேச்சு மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

அவ்வப்போது கோயில்சாட்டுகளில் நடக்கும் கூத்து விசேசங்களில் தன்னானே ராகம் ஒலித்தாலும், பாட்டுச்சாமியின் நாபியிலிருந்து வேர் பிடித்தெழும்பும் அலையலையான ராஜசுதியாக இல்லாமல் மூளியாக அழுது வடிந்து கொண்டிருக்கும்.

***

பல வருசங்கள் கழித்து அந்த பூமியில் மறுபடியும் தன்னானே ராகம் கேட்டது. மனசைச் சுண்டியிழுக்கும் சுதி. அதில்தான் எத்தனை குழைவு, மெட்டின் நுட்பத்தில் தழைக்கும் லயம் ராகத்தின் மிடுக்கில் அழைக்கும் இசைப் பின்னல், வதங்கி வெம்பலோடிய சிறுவனாய்ப் போனவன், சேகுபாய்ந்த வாலிபப் பிராயத்தில் வந்திருந்தார். மழுங்கச் சிரைத்திருந்த தலையும் கருத்த தோலில் அசைந்தாடிய காவியும், உத்திராட்சமும் அவருக்குப் புதுப் பொலிவை ஏற்படுத்தியிருந்தன. அந்தப்பாட்டு இதுவரை கேட்டறியாத ராகத்தில் மிளிர்ந்தது. தலையை ஆட்டியபடி ரசித்துக் கொண்டிருந்த சனக்கூட்டம் சில கணங்களில் பரபரப்புடன் கலைந்தோட, பாம்பு ஒன்று நெளிந்தபடி ராகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்த கூத்து வாத்தியார் ஒருவர், பரபரப்பைக் கட்டுப்படுத்தி உதட்டின் மேல் விரல் வைத்து அந்த இடத்தைச் சாந்தப்படுத்த, இழைந்து குழைந்து கொண்டிருந்த இசையில் மயங்கி நெளிந்தபடி படமெடுத்தாடியது. சனங்கள் பிரமை பிடித்து நிற்க, ராகம் மெதுவாக மங்கி மறைய, பாம்பு புஸ்புஸென்ற இரைச்சலுடன் ஊர்ந்து அங்கிருந்து மறைந்தது.

சனங்கள் பிரமை பிடித்துப்போய்ப் பாட்டுச்சாமியின் காலில் விழுந்து வணங்கத் தலைப்பட்டனர். அவர் பதட்டத்துடன் மறுத்துச் சகசமாய் அவர்களுடன் பேசிக் கொண்டே எழுந்து வெளியே நடந்தார். கூத்துவாத்தியார் பின்தொடர்ந்தார்.

கூத்துவாத்தியார் வீட்டில்தான் இப்போது பாட்டுச்சாமியின் வசிப்பிடம். அவர் பச்சிலைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்து பக்குவம் சொல்ல, கூத்துவாத்தியார் அரைத்துக் கொண்டிருக்கிறார். மருத்துவத்திற்கு வரும் மக்கள் பாட்டுச்சாமிக்குத் தவசம் தருகிறார்கள். மசைபிடித்து அழைத்து வரும் கிறுக்குகளின் கைகால்களில் போட்டுள்ள விலங்குகளை பாட்டுச்சாமியின் தன்னானே ராகம் உடைத்தெறிகிறது.

ஊர்க்காரர்கள் அவரைப் பற்றி நிறையக் கதைகள் சொல்கிறார்கள். ‘ஒரு பாட்டெடுத்துப் பாடினால் தீப்பிடிக்கும். இன்னொரு பாட்டெடுத்துப் பாடினால் மழை பெய்யும்’ என்றெல்லாம் கூத்து வாத்தியார் பேசிய பேச்சுகளும் ஊர்க்காரர்களின் கதைகளும் அந்தச் சுற்றுவட்டாரமெங்கும் தாளம் போட்டன.

இருபத்திநாலு நாட்டு மிராசுக்காரர்களும், பட்டக்காரர்கள், ஊர்ப்பெரியதனக்காரர்கள், கொத்துக்காரர், ஊர்த்தலைவர் என முக்கியம் பெற்ற அனைவரும் கூடிக்கூடிப் பேசினர். “என்னதானிருந்தாரும் சாதியிலே சின்னவன்… அவங்கிட்ட எப்பிடிப் பேசறது…” என்றார் பூந்துறை நாட்டார்.

ஆளாளுக்குத் தங்களது வம்சாவளியின் குலப் பெருமைகளைப் பேச, சாதியின் வேர்களைச் சிலர் உலுக்க, அந்த இடம் கூச்சலும் குழப்பமுமாய்க் களேபரமானது.

“மழெ மாரி இல்லாம காடுகரையெல்லாம் வெந்து கெடக்கு… இதில எங்க வந்திச்சி சாதி… எல்லா மொதல்ல நாம உசுரோட இருந்தாத்தா சாதி…” என்று முடிந்த முடிவாய்ப் பேசினார் காஞ்சிக்கோயில் நாட்டார்.

“அதுமட்டுமில்லே… அவுரு இப்பச் சாதிக்காரனில்லே… சாமியாரு…” என்று மேலும் சமாதானப்படுத்தினார் வடகரை நாட்டார்.

அனைவரும் ஊர்மக்களுடன் புறப்பட்டு அவரது குடிசைக்குப் போய் முறையீடு வைத்தனர். ஊர்ச்சனங்கள் ஆவலாக, “அப்பா… பாட்டப்பா… நீங்க பாட வேணுஞ்சாமி… மழை பேய வேணுஞ்சாமி…” என்று குரல் எழுப்பினார்கள். பாட்டப்பனின் முகத்தில் கருணையின் மலர்ச்சி. யோசனையில் தலையை அசைத்துக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார் பாட்டப்பன்.

அடுத்த நாள். பச்சிலை பறித்துக் கொண்டு வறண்ட ஆற்றங்கரை மணலில் கால்கள் பதியப் பதிய நடந்தார். வெந்து கிடந்த மணல் சூடு உள்ளங்காலில் ஏறியது. குனிந்து கிளிஞ்சல் ஒன்றைப் பொறுக்கியெடுத்தார். பூவாவின் ஞாபகம் அலையடித்தது. காற்றுக் கூட்டி மெதுவாக ஊதினார். சீழ்க்கை ஒலித்தது.

என்ன நினைத்தாரோ, சட்டெனக் கிளிஞ்சலை வீசியெறிந்தார். பொழுது இறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். வானத்தில் மேகத் திட்டுகள் குமிந்திருந்தன. வெம்மையிலும் ஒரு ரம்மியம் அவருக்குள் வீசியது. மெதுவாக மிருதுவான சுதியெடுத்துப் பாட ஆரம்பித்தார் பாட்டப்பன். ராகத்தின் தொடர்ச்சி கூடிக் கூடி மேகங்கள் சூல் கொண்டேயிருந்தன. விடாத கதியில் அமிர்தமாய்க் குரலெடுத்துப் பாடும் விசையில் மேகங்கள் மோதிச் சிதறின. ஊர்ச் சனங்கள் மழைப் பிரவாகத்தில் நனைந்து கொண்டாட்டம் போட, தாகம் தணிந்து பூரித்துச் சிரித்தது பூமி.

****

பாட்டப்பன் இப்பொழுது ஊர்க்காரர்களில் ஒருவராக மாறிக் கொண்டிருந்தார். படிய வாரிவிட்ட தலைமுடியும், வெள்ளை வேட்டியும் துண்டுமாய்த் தும்பைப் பூவாய் சிரித்தார். அந்தச் சுற்றுவட்டாரத்துச் சனங்களுக்கு அவர் தெய்வப் பிறவியாய்த் தோன்றினார்.

சுற்றிலுமுள்ள ஒவ்வொரு ஊரிலும் அவரவர் விருப்பம் போல விழா வேடிக்கைகள் நடந்தாலும் ஏர்நாள் மட்டும் இருபத்திநாலு நாட்டாரும் கூடித்தான் கொண்டாடுவார்கள். கலப்பையை நிலத்தில் பூட்டிச் சாலடிப்பதற்கு முன்பு சாமிக்குப் படையலிடும் நாளாக அதைப் பூசிப்பார்கள்.

விதைப் பண்டம் விதைப்பதற்கு முந்தின நாளில் மல்லக்கா கோயில் முன்பு உள்ள மைதானத்தில் எல்லாக் குடிபடைகளும் திரளுவார்கள். பெண்கள் குலவையிட்டுக் கொண்டு பொங்கல் வைக்க, உழவர்கள் ஏர்மேழியை நிலத்தில் ஊன்றிக் கும்பிடுவார்கள். கோயில் பூசாரி தூபம் காட்டி முதல் பூசை செய்வார். அந்தப் பூசையில் முதல் மரியாதை பாட்டப்பனுக்குத்தான். விடிந்ததும் ஏருக்குப் பொட்டுப் போடுவார்கள். இருபத்தி நாலு நாட்டுப் பட்டக்காரர்களும் வந்து முன்னத்தி ஏர் பிடித்துச் சாலடித்துக் கொடுப்பார்கள்.

அதன் பிறகு அடித்தொண்டையில் ராகமெடுத்துப் பாடுவார் பாட்டப்பன். சற்றைக்கெல்லாம் ஒருழவு மழை கொட்டி காடுகரை நிரம்பும். சனங்கள் ஆட்டம் பாட்டுடன் பாட்டப்பனைச் சுற்றிக் கொண்டு கொண்டாடுவார்கள்.

அந்தப் பிரசித்தி பெற்ற ஏர்நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. பாட்டப்பனுக்கு இந்த முதல் மரியாதை தருவதில் சற்றும் சம்மதமில்லாமல் வெம்பிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

“ஒரு சின்னச் சாதிப் பயலுக்கு இவ்வளவு மரியாதையா?” என்று கொதித்தான் ஒருவன். அவனது சாதிப் பெருமை, புளிப்பு ஏறிய பனங்கள்ளின் வாசனையில் தூக்கியடித்தது.

“நீ உம்னு சொல்லு மாப்ளே… அவனைக் கும்பந் தாளிச்சிறலாம்..” என்றான் மற்றவன்.

கூட்டத்தில் சூடு ஏறிக்கொண்டேயிருக்க, சொப்பில் கள் தீரத் தீர சுரைக் குடுக்கையிலிருந்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான் இன்னொருவன்.

“வேணாம்பா… கொன்னுகின்னு போடாதே… கடைசீல தீம்பாயிடும்…” என்றான் மற்றொருவன்.

“நீ கம்னு இரு மாப்ளே… நாம் பாத்துக்கிறேன்…” என்றவாறு கள் நுரை கம்மிக் கொண்டிருந்த சொப்பை எடுத்து ஒரே மடக்கில் குடித்தான் வேறொருவன்.

மறுபடியும் பாட்டப்பனைத் திட்டிக் கொண்டு கூட்டத்திலிருந்தவர்கள் புலம்ப, ஆவேசமாய்ச் சொப்பை வீசி உடைத்தான் ஒருவன். தனது மீசையில் படிந்திருந்த நுரையைத் துடைத்துக் கொண்டு எழுந்தவன், “டேய்…பங்காளி நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்கடா…” என்றவாறு சுரைக் குடுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியே நடந்தான்.

பாட்டப்பன் ஆற்றங்கரையில் கழுத்தளவு நீரில் நின்று ராகம் பாடிக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தார்கள் அவர்கள். குளித்து விட்டு வேட்டியைப் பிழிந்தெடுத்துக் கொண்டு கரையேறும் வரை காத்திருந்தனர். வெகு மரியாதையுடன் “சாமி… வர்ற ஏர் நாளன்னிக்கு நீங்க பாட வேணுமுங்க… மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட வேணுமுங்க சாமி…” என்று கும்பிட்டார்கள். அவர் எப்போதும் போலத் தலையை அசைத்துக் கொண்டு வேட்டியைக் காயப் போடுவதில் முனைந்தார்.

பேச்சோட பேச்சாக, “சாமி… தெளுவு சாப்பிடுங்க சாமி… ஒடம்புக்கு நல்லது சாமி…” என்று சுரைக் குடுக்கையில் கொண்டு வந்திருந்த பதனீரைச் சொப்பில் ஊற்றித் தந்து உபசரித்தார்கள்.

பாட்டப்பனுக்கு மிகவும் பிடித்தமானது பதனீர். ஆசையாக வாங்கிக் குடித்தவர், எட்டிக்காய் கசப்பில் முகம் சுருங்கிப் போனார்.

“இந்தப் பாம்புக்கால் இட்டேரியிருக்கிற பனைமரத்திலே எறக்கினது இந்தத் தெளுவு… அதென்னமோ தெரியலே சாமி… அந்த மரத்தெளுவு கசப்படிக்குது, ஆனா குடிச்சபெறவு தூக்குது பாருங்க ஒரு தூக்கு..” என்று இளித்தான் ஒருவன்.

அவர் ஒரே மூச்சில் குடித்து முடிந்ததும், “இன்னொரு சொப்பு குடியுங்க சாமி…” என்று மறுபடியும் நிரப்பிக் கொடுத்தார்கள். ஒருவழியாய் அஞ்சு சொப்புக் குடித்து விட்டு கிறுகிறுப்புடன் ஆற்றங்கரை மணலில் சாய்ந்தார் பாட்டப்பன். காய்ந்து போயிருந்த அவரது வேட்டி காற்றில் பறந்து அவர்மேல் விழுந்து கப்பியது.

அடுத்த நாளிலிருந்து பாட்டப்பனுக்கு வாயிலும் வயிற்றிலும் போய்க் கொண்டிருந்தது. ‘விஷம் தொட்டிருப்பதற்கான அறிகுறிகள்’ தென்பட்டதால் விஷமுறிவு மூலிகைகளை அரைத்துக் கொடுத்தவாறு பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கூத்து வாத்தியார். உடல் முழுவதும் தீயாய் எரிகிற அனலைப் பனைவிசிறியில் ஆத்தி விடும் துயரத்தில் வாத்தியாரின் முகம் கலங்குகிறது.

படுக்கை ஒவ்வாமல் புரண்டு புரண்டு படுக்கிறார் பாட்டப்பன். “ஒடம்புலே வெஷந் தொட்டதுக்கான விண்ணமில்லே… ஆனா ஒடம்புலே வெஷமிருக்குது… என்னாச்சு அப்பு…” என்று பொங்கித் தேம்புகிறார் கூத்து வாத்தியார். பாட்டப்பன் தலையை அசைத்துக் கொண்டு அவரது அழுகையைத் துடைத்து விடுகிறார்.

இரண்டு நாளாக வயிறு வீக்கம் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. சாப்பிட்டது அப்படியே எதுக்களித்து வருகிறது.

“நாளைக்கு நடக்கும் ஏர்நாளில் நீங்க பாட முடியாது அப்பு… மீறிப் பாடுனா உங்க உசுருக்கே தீம்பாயிரும்” என்று சஞ்சலத்துடன் சொல்கிறார் கூத்து வாத்தியார். பாட்டப்பனின் அடிமனதில் பொங்குகிறது தன்னானே ராகம். அப்படியே கண்களை மூடிக்கொண்டு தலையை ஒரு லயத்தில் அசை போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சேதி கேள்விப்பட்டு ஊர்ச்சனங்கள் திரண்டு வந்து விட்டார்கள். “ஒண்ணுமில்லே வெறும் பேதிதான்” என்று முணங்கினார் பாட்டப்பன். தாங்கள் கொண்டு வந்திருந்த காய்கனிகளையும் தவசங்களையும் பாட்டப்பனின் முன்னாள் வைத்தார்கள். சனங்களின் அளப்பரிய அன்பில் நெகிழ்ந்து போயிருந்த அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு வயதான கிழவி விம்மினாள். “அப்பா… பாட்டப்பா நீ நாளைக்குப் பாட வேணுஞ்சாமி… மழை பேய வேணுஞ்சாமி…” என்றாள் தழுதழுப்புடன். பாட்டப்பனுக்கு நினைவு தெரியாத தனது அம்மா வந்து ஆணையிட்டதாக உடலெங்கும் ஒரு வேகம் பொங்கியது. அறம் பாடும் யதார்த்தம் அவரது உள்முகமாய் ஓடிப் பரவ, கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது.

***

ஏர்நாளுக்கான சபையில் இருபத்தி நாலு நாட்டு மிராசுக்காரர்கள், பட்டக்காரர்கள், ஊர்த் தலைவர்கள், கொத்துக்காரர்கள் என்று எல்லோரும் நிரம்பி வழிந்தனர். பொங்கல் வைத்துக் கொண்டிருந்த பெண்டுகளின் குலவையில் சுதி குறைந்திருந்தது. ஏரும் உழவு மாடுகளும் சுள்ளாப்பில்லாமலிருந்தன. பாட்டப்பன் இன்னும் வரவில்லை.

சனங்களின் முகத்தில் வருத்தம் நிழலாடியது. பாட்டப்பனை அழைத்துவர வடகரை நாட்டாரே போயிருந்தார்.

சற்றைக்கெல்லாம் கூத்து வாத்தியார் கைத்தாங்கலாய்ப் பிடித்துவர, சபைக்குள் நுழைந்தார் பாட்டப்பன். மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க அடுத்த கட்ட வேலைகள் துரிதமாய் நடந்தேறின. பட்டக்காரர்கள் சைகை கொடுக்க, பூசையை ஆரம்பித்தார் பூசாரி. பூசை முடிந்து முதல் மரியாதையைப் பாட்டப்பன் வாங்கிக் கொண்டார்.

மக்களின் நீண்ட ஆரவாரத்துக்கிடையில் மெதுவாக ராகத்தை இழுத்தார். தொண்டை செருமிக் கொண்டது. சட்டெனச் சபையில் அமைதி கப்பிக் கொள்ள, நீண்ட எதிர்பார்ப்பின் பெருமூச்சுகள் சுழல்கின்றன. சில கணங்கள் கண்களை மூடித் தியானித்தார். தூரத்து வானில் நிறைமாத சூலியாய் மேகங்கள் நகர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. இப்பொழுது மெல்லிய குரலில் எழும்பியது பிசிறற்ற மெட்டு, மெல்ல மெல்ல அதன் உச்ச கதி அமிர்தமாய்க் கடைந்து சிலும்ப, மேகங்கள் இடிந்து நொறுங்க விழுகின்ற மழைத்துளிகள் பெரிதாகிக் கல்மாரியாய்ப் பொழிந்தன.

வானத்திலிருந்ததையெல்லாம் கொட்டுகின்ற சீற்றத்தில் அடிக்கும் மழை வெள்ளம் பெருக்கெடுத்தொட, சூறையின் சுழட்டலில் சனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் கோயில் மண்டபத்தில் ஒதுங்க, அந்த ஊரையே துவம்சமாக்கிக் கொண்டிருந்த மழைப் பிரவாகத்தின் நடுவே பாடிக் கொண்டிருந்தார் பாட்டப்பசாமி.

ஆனந்த லயத்தில் ஒரே சீராகப் பாடிக்கொண்டிருந்த பாட்டு, சட்டெனப் பாதியிலேயே நின்று போயிற்று.

****

பூசாரி கதை சொல்லி முடிப்பதற்குள் வானம் கருக்கிட்டிருந்தது. கதை கேட்டுக்கொண்டிருந்த தங்கராசுவின் முகத்தில் துயரமும் ஆவேசமும் தன்னானே ராகமாகப் பொங்கியது. பூசாரியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், ஆட்டுப்பட்டி இருந்த திசையில் கருத்த ஆட்டைத் தேடிப் பம்மியவாறு நடந்தான்.

*****

One thought on “பாட்டப்பன்”
  1. பாட்டப்பன்
    ஆரம்பமும் முடிவும் அழுத்தமானது..கதையோட்டம் சூல் கொண்ட இசை மேகமாக ராக ஸ்வரங்களில் சொற்கள் நடனமாடி புதிய ராகங்களை எழுத்தோவியமாக மனதில் தாளமிடுகிறது.இடையே பாட்டப்பனின் பாத்திரவார்ப்பு சின்னத்தம்பி கதாநாயகனையும், செந்தூரப்பூவே திரைப்பட நாயகனையும் விழித்து தனக்கான பாதையில் விரிந்து முடிகிறது கதை.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page