• Thu. Sep 21st, 2023

ஸ்பானிஷ் பத்தி : இரு கடிதங்கள்!

ByGouthama Siddarthan

Aug 6, 2022

 

அன்புள்ள கௌதம்,

என் பெயர் அகிலன் மருதமுத்து, கோவை.
IT துறையில் இருக்கிறேன்.

நான் இப்பொழுது சமீப காலமாகத்தான், இலக்கிய கதைகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களது டி ஹேஷ் குறியீடு சம்பந்தமான கட்டுரைகள் மீது அதிக ஆர்வமேற்பட்டு உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அந்த வகையில், வாழ்வின் மரணமும் மரணத்தின் வாழ்வும் என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் டி ஹேஷ் சம்பந்தமாக எனக்கு நிறைய கேள்விகள் உண்டு. அதை பிறகு கேட்கிறேன். இப்போது, உங்கள் சர்வதேச மொழிகளில் எழுதும் பத்திகள் மீது ஆர்வம் ஏற்பட்டு அதை படிக்கிறேன்.

மிகவும் பாராட்டுக்குரியது,  தொடர்ந்து பத்திகளை படிக்க ஆவலாய் உள்ளேன்.

நம் உலகளவில் செம்மொழியான தமிழ் மொழியின் பாரம்பரியத்தையும், தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், மொழி வளர்ச்சி, வாழ்வியல் சிந்தனைகளையும், சமூகவியல் சிந்தனைகளையும் உலக மக்களிடம் எடுத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தும் உங்கள் தலைசிறந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள். வணக்கத்தையும் சொல்லிக் கொள்கிறேன்.

நேற்று நீங்கள் எழுதிய பத்தியில், என் பாடல் உனக்கு கேட்கிறதா சக் – மூல்?  அதில், வரும் பாட்டப்பன் என்னும் ஒரு மழை தெய்வத்தை புத்தனாக உருவகிக்கிறீர்கள். நம் நாட்டுப்புற சிறுதெய்வங்கள் சார்ந்த மூலத்தில் பௌத்தத்தின் வேர்கள் இருப்பதாக உணர்கிறீர்களா?

அந்தக் கதை எங்கு கிடைக்கும்? அதை நீங்கள் உங்கள் வலைதளத்தில் வெளியிட முடியுமா?

உங்கள் எழுத்தின் மீது பெரும் ஆர்வத்தில் உள்ள வாசகன்
அகிலன்

***

அன்புள்ள கௌதம சித்தார்த்தன்,

உங்கள் கதைகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்று எழுதிய ஸ்பானிஷ் பத்தி கட்டுரையில், பாட்டப்பன் என்னும்  மழை தெய்வம் குறித்து எழுதியிருந்தீர்கள். அதைப் படிக்க ஆவல்.

அதேபோல, கட்டுரை பற்றிய உங்கள் குறிப்பில்,  ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த  Godwin Onasedu என்கிற Rainmaker ஒருவர் இருப்பதாகவும், அவர் பாட்டுப் பாடினால் மழை வரும் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். இதெல்லாமே பகுத்தறிவுக்கு ஒவ்வாதவையாக இருக்கிறது, இது குறித்து விளக்க முடியுமா?

செந்தமிழ்ச் செல்வன்

****

அன்புள்ள அகிலன்,

டி ஹேஷ் குறியீடு பற்றிய விஷயங்களை நீங்கள் பேசுவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

ஒரு தமிழன் உலகளவில், எவரும் செய்யாத ஒரு தொழில்நுட்பமும் சமூகப் பண்பாடும் இணைந்த ஒரு விஷயத்தை உருவாக்கியிருக்கிறான். ஆனால், அதற்கு, தமிழ்ச் சூழலிலிருந்து எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லை. இது காலங்காலமாக புதிய சிந்தனை சார்ந்த படைப்பாளர்களுக்கு நம் தமிழ்கூறும் நல்லுலகில் நடந்து கொண்டேயிருக்கும் நிலைதான் என்றாலும், நான் மிகவும் எதிர்பார்த்தேன்.

பரவாயில்லை. நான் இப்போது அந்த எதிர்பார்ப்புகளிலிருந்தெல்லாம் மீண்டு விட்டேன்.

என் விரக்தியையும், கொந்தளிப்புகளையும் ஆற்றுப்படுத்தியது என் எழுத்து மனநிலைதான்.

இருக்கட்டும்.

உங்கள்  கேள்விமுக்கியமானது. நாட்டுப்புற சிறுதெய்வங்களின் மூலத்தில் பௌத்தத்தின் வேர்கள் இருக்கின்றனவா என்கிறீர்கள். இது குறித்து தொடர்ச்சியாக வருகின்ற என் பத்திகளில் விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு சுருக்கமாகச் சொல்லலாம். கடந்த 25 – 30 வருடங்களாக நாட்டுப்புற சிறுதெய்வங்களின் தொன்மமும், தன்மையும், அவைகளின் உருவாக்கமும் அவைகளுக்குள் உள்ள பல்வேறு மரிமாணங்களில் ஒரு பரிமாணம், பௌத்தத் தன்மையை உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதையும் கலாபூர்வமாக என் எழுத்தில் கட்டுரைகளாகவும், புனைவுகளாகவும் சொல்லி வருகிறேன்.

சிறுதெய்வங்கள் குறித்து நான் வெளியிட்ட 8 கதைகள் கொண்ட “பொம்மக்கா” தொகுப்பில் வருகின்ற தெய்வங்கள் பெரும்பாலும் பௌத்தப் பரிமாணங்கள்  கொண்டவை.

பொம்மக்கா பௌத்தப்பரிமாணத்தின் சிகர நிலையென நான் கருதும் மைத்ரேய நிலை பொருந்தியது.

மேலும், முனியப்பன் என்னும் தெய்வநிலையில் பொருந்துவது, ஒரு சிறு பரிமாணம். இவ்வாறாகத்தான்  நான் புனைவுகளையும் அ புனைவுகளையும் ஆய்வு நோக்கில் முன்வைத்து வருகிறேன்.

இந்த நீட்சியின் கொடுமுடியாக பௌத்தத்தின் பெரும்பான்மையான தன்மைகள் கொண்டதாக நான் கருதுவது பாட்டப்பன் தான்.

அந்தக் கதையை இன்று வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்!

 

செந்தமிழ்ச் செல்வன், உங்கள் பார்வை மிக மேலோட்டமாக இருக்கிறது.

இத்துடன் BBC யில் வெளிவந்த அவரைப்பற்றிய ஒரு சிறு காணொளியை இங்கு இணைத்திருக்கிறேன். இதில், ஜிம்பாப்வேயின், காட்வின் ஒனசேடு இசையமைத்துப் பாடப்பாட சற்றைக்கெல்லாம், மழைத்துளிகள் சாரலாக விழுவதைப் பாருங்கள். இது யு டியூபில் வெளிவரும் அனாமதேய காணொளி அல்ல. பிபிசி யினுடையது.

http://fb.watch/eJIAg107ft/

அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான்  இருக்கின்றன. அல்லது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் அவைகளை பொதுப்புத்தி நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும், பகுத்தறிவு அல்லது மூட நம்பிக்கை என்னும் பார்வை மூலம் எதிர்கொள்கிறோம்.

உண்மையில், பகுத்தறிவு என்பது என்ன?எது ஒன்றையும் பகுத்து அறிந்து பார்த்தல். இதைத்தான் கௌதம சொன்னார். ஜே.கி சொன்னார், நம் பெரியாரும் சொன்னார்.  ஆனால், பெரியாரின் சொல்லை பாப்புலர் அரசியலுக்கேற்ற படிமமாக மாற்றிவிட்டோம்.

இப்படியான ஒரு பார்வை எனக்குள் உருவாகததற்கு முன்பு,

என் அப்பா ஒரு நாட்டுப்புறக் குறி சொல்லி! அவரை முன்வைத்து, அவரது 2000 ஆண்டுகால தொன்மங்களை, நம்பிக்கை மரபை, நீட்சியை கிண்டலடித்து  ஒரு கதை எழுதியிருந்தேன்.

அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து, லத்தீன் அமெரிக்காவிலிருந்து மார்க்வெஸ் என்று ஒருவன் வந்து எனக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நம் தொன்மங்களின் வேர்களில் உள்ள அதி அற்புதத்தையும், மனித வாழ்நிலை தரிசனத்தையும் உணர்த்தி, நம் மரபின் வேர்களில் மறைந்துள்ள ஞான மரபை உலகின் ஒப்பற்ற கலை இலக்கியத்தின் கூறுகளாக அவன் முன்வைத்தபோது, எனக்குள் மூன்றாவது கண் திறவுபடுகிறது!

யதார்த்தம் அல்லது யதார்த்தவாதம் என்கிறபெயரில் ரஷ்ய இலக்கியங்களிலிருந்து உருவான பார்வைகளை நம் மண்ணில் பொருத்தி, நம் மண்ணின் அற்புதங்களை இழந்து விட்டோமோ என்று நான் ஏங்கியதுண்டு.

// யதார்த்தம் என்பதற்கு தவறான கருத்துருவத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் அமெரிக்க எழுத்தாளர்கள்.  அரசியல் சாராமல் ஒரு கதையை யதார்த்தமாக சொல்வதுதான் தரமான இலக்கியம் என்பதுபோல கட்டமைத்து வைத்திருக்கும் போக்கில் ஈடுபாடு கொண்டு ‘யதார்த்த இலக்கியம்’  எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளம் எழுத்தாளர்கள். திடீரென்று  இவர்கள் அரசியலால் பாதிக்கப்படும் போது திகைத்துப் போகிறார்கள். யதார்த்தம் மாந்திரீக யதார்த்தமாக  உரு மாறுகிறது. ஆக உருமாற்றத்தை எதிர் கொள்ள வேண்டுமெனில் யதார்த்தத்தின் முழுமையை உணர்ந்திருக்க வேண்டும்.  யதார்த்தம் என்பது அரசியல்…// என்கிறான் உலகப் புகழ் பெற்ற ஜெர்மானிய நாவலாசிரியனான குந்தர் க்ராஸ்,

அப்படியானால், யதார்த்தம் என்பதுதான்  என்ன?

தொடர்ந்து பேசுவோம் நண்பனே…

கௌதம்

 

*****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page