அன்புள்ள கௌதமா,
மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையை இத்துடன் உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.
நான் முன் கடிதத்தில், நீங்கள் அனுப்பி வைத்த ஆங்கிலப் பதிப்பில் உள்ள ஒரு சில விளக்கங்களைக் கேட்டிருந்ததற்கு, நீங்கள் அனுப்பிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.
உங்கள் கட்டுரை மிக மிக சுவாரஸ்யமானது, மேலும், Doppelgänger கோட்பாடு மிக ஆழமானது மற்றும் விரிந்த தத்துவப் பார்வை கொண்டது. அது குறித்து முன்பு படித்தது, இப்போது நான் கொஞ்சம் படித்து விட்டு வந்து விடுகிறேன்.
பொதுவாக இந்த உருவகத்தைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு மனிதனின் இருவேறு குணங்களைக் குறிக்கும் வகையில், மேலும், ஒரு நபரின் மற்றொரு இரட்டையையும் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது என்று சுருக்கமாக சொல்லலாம். ஆனால், இதற்கு இன்னும் ஆழமான பார்வைகள் உண்டு.
உங்கள் கட்டுரையை நன்றாகப் புரிந்து கொள்வதற்காக, இந்து பிரபஞ்சத்தின் சொற்கள், கருத்துக்கள் மற்றும் யோசனைகளை நான் அசை போட வேண்டியிருந்தது, மேலும் நான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பைச் செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்.
இந்தப் படைப்பு ஸ்பானிஷ் மொழிக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஸ்பானிஷ் மொழியின் சாத்தியத்திற்கேற்ப, ஒரு சில இடங்களில் அதன் வெளிப்பாடுகள் மிக அழகாக வந்துள்ளன.
ஆர்வ மிகுதியில், நான் உங்களை இறுக்க அணைத்துக் கொள்கிறேன், என்றாவது ஒருநாள் சந்திப்போம்,
அன்புடன்
என்றிக்
பி.கு.: என்னிடம் “இரட்டை” சம்பந்தமாக ஒரு கவிதை உள்ளது,
***
அன்புள்ள என்றிக்
என் கனவு நாயகர்கள் போர்ஹேஸ், ருல்ஃபோ, புயண்டஸ், கொர்த்தஸார், பிசார்னிக், லோசா, நெருடா, பாஸ் போன்ற ஸ்பானிஷ் ஆளுமைகள் எழுதிய மொழியில் என் எழுத்து! ஸ்பானிஷ் படிக்க முடியாவிட்டாலும், அந்த எழுத்துக்களின் சுழற்சியினூடே சுழன்று சுழன்று, காலத்தின் எல்லையற்ற திகிரியில் போர்ஹேஸையும், ஃபுயண்டஸையும், கொர்த்தஸாரையும், மார்க்வெஸையும்… ஹோ!, செர்வாண்டிஸையும் சந்தித்தேன். உங்களுக்குத்தெரியுமா, அதில், நான் என் முன்னோர், பேய்மகள் இளவெயினியையும், அள்ளூர் நன்முல்லையையும், கபிலர்களையும், காடற்ற கிழார்களையும் சந்தித்தேன்.
அது ஒரு புதிர் வழிச் சுழல்வு! ஆம், உங்கள் ஸ்பானிஷ் மொழியில் உருவாக்கம் பெற்று இன்றைக்கு உலகம் முழுக்க சுழன்று கொண்டிருக்கும் சொல்லான Labyrinth !
உலகின் தொன்மையான கலாச்சாரமும், Boom காலகட்டத்திலிருந்து Post boom க்கு வளர்ச்சியடைந்துள்ள தனித்துவமான கலை ரசனையும் கொண்ட மண்ணின் வாசகர்களோடு மாதம் தோறும் உரையாடும் ஒரு அற்புதமான வாய்ப்பை எனக்குத் தந்த இதழ் ஆசிரியருக்கும் உங்களுக்கும் 2000 ஆண்டு தொன்மை மிகுந்த தமிழ் மொழியின் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
எங்கள் தொன்மையான தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், மொழிவளர்ச்சி, வாழ்வியல் அம்சங்களுக்கும், தொன்மையான லத்தீன் அமெரிக்க மண்ணுக்கும் உள்ள உறவை முன்வைத்து இவைகளினூடாக எல்லைகளற்று விரியும் சர்வதேச இலக்கிய நீரோட்டத்தை இணைத்து ஒரு புத்தம் புதிய பார்வையை ஸ்பானிஷ் நவீன மொழியினூடே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்!
எம் மண்ணின் மொழியை என் கனவு மொழியில் உருமாற்றி சர்வதேச அரங்கில் பதியச் செய்த உங்களது நட்பு எனக்கு கிடைத்த மகத்தான அற்புதம்.! அலெஹாந்த்ரா பிஸார்னிக்கின் ஒரு கவிதையில் நட்புக்கு இலக்கணமாய் வருகின்ற அற்புத மலர்!
உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!
அன்புடன்
கௌதம்