- கௌதம சித்தார்த்தன்
(ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்த என் பத்தியின் அடுத்த அத்தியாயம்)
நேற்று ஒரு கனவு.
அமைதியே உருவான ஒரு புத்த விகாரை. உட்புறமாக உள்ள வராண்டாவின் இருபுறமும் தாவரங்களின் நீள் கிளைகள், சிள்வண்டுகளின் ரீங்கரிப்பில் ஆழ்ந்து கிடக்க, பச்சையத்தின் குளிர்ச்சியில் உடலேகி, நடந்து போய்க் கொண்டிருக்கிறேன் நான்.
வெண் சுவர்களின் அந்தகாரத்தில் பட்டு ஈரத்தின் சிலிர்ப்பை கசிய விட்டுக் கொண்டிருந்தது புல்லாங்குழலின் அற்புத இசை. அதன் ஆழ்ந்த விகசிப்பு ததும்பித் ததும்பி என் மனதெங்கும் பொங்கி வழிகிறது.
எனக்கு முன்னால் கருணையே வடிவான புத்தாவின் ஒளிச் சிற்பம். அதற்கு முன்னால் ஒருகணம் மயங்கிப்போய் நிற்கிறேன். குழலின் ஈரப்பதம் இசைத்துணுக்காய் என் உடலெங்கும் சொட்டுகிறது. எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு புறா மரக்கிளையில் அமர, அந்த தாவரத்தின் நீள் கிளைகள் மேலும் கீழுமாக அசைகின்றன. அந்த அசையாட்டத்தில், சட்டென அந்த இடம் நளிர்ந்து போக, சடுதியில் காலடியில் சூழ்ந்து கொண்டது ஈரப் பிசுபிசுப்பு.
புறாக்களின் சிறகடிப்பில் இசைச்சுரம் மாறி ஒலிக்கிறது. அந்த மெல்லிய இசையின் தாளம், சுருதி மாறி அந்த மண்டபச்சுவர்களில் பட்டு, எதிரொலிக்கிறது. குழலின் இசை மெதுவாக மங்கித் தேய, பொங்கிப் பிரவகிக்கும் நீரோசையின் ரிதமான துள்ளலில் பறையின் இசைச்சுரம் மேலெழும்புகிறது. எனக்கு எதிரில் தனது சரீரத்தைச் சாய்த்தபடி படுத்திருக்கிற பிரம்மாண்டமான அந்தச் சிலை, இப்பொழுது, 90 டிகிரிக் கோணத்தில் தலை திரும்பியபடி சாய்ந்து அமர்ந்திருக்கும் ‘சக் மூல் ’ ஆக மாறியிருக்கிறது. என் உடலெங்கும் சிலீரிட்டடிக்கிறது நீர்மம்.
திடுமென ஒரு பெரும் பிரளயம் என்னை அடித்துக் கொண்டு போனது. பொங்கிப் பெருகிய அந்த நதியின் சுழற்சியில் என் ஆகிருதி புரண்டு புரண்டோடியது. ஜலம் என் உடம்பெங்கும் புகுந்து என்னுள் கலந்தது. அதன் அலை இரைச்சல் பறையோசையாய் ஒலிக்க, நதியின் பிரவாகம் மார்பை அளைந்து கொண்டு ஓடியது. ஒரு பெரும் நீர்நிலையில் மூழ்கி எழுந்து கொண்டிருக்கிறேன்.
மரக்கிளையின் மீது அமர்ந்திருந்த புறா ஒன்று சிறகடித்துக் கொண்டு மேலே எழ, அந்த மரக்கிளை மேலும் கீழுமாக அசைகிறது. அந்தக் கிளையின் அசைதலுக்கேற்ப நான் முங்கி முங்கி எழுகிறேன்.
நதியில் மூழ்கும்போது நதியின் நீரோட்டம் கண்களில் நிறைகிறது. நீர் நிறைந்தபோது காட்சிகள் மங்குகின்றன. புறா மங்குகிறது. அசையும் மரக்கிளைகள் மங்குகின்றன. இசையும் பறையிசை மங்குகிறது. முழங்காலை மடக்கி சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் சக் மூலின் தேஜஸ் மங்குகிறது. மங்கி மங்கி சர்வமும் நீர்மம்.
உடம்பெங்கும் அடர்ந்து இறங்கும் குளிர்ச்சி கனலாக மாறுகிறது. நதியில் மூழ்கும்போது உடலெங்கும் சுட்டெரிக்கும் அனலாய் காந்தும் வெப்பம், மேலெழும் போது நளிராய் குளிர்ந்து அடர்கிறது ஈரம். ஒவ்வொரு முறை மூழ்கும் போதும் சுட்டெரிக்கும் அனலாக மாறி, எழும்போது குளிர்ச்சியூட்டும் ஈரமாக மாறி விடுகிற அபூர்வ நிகழ்வு அது. நெருப்புக்கும் நீர்மத்துக்குமான ஜீவ மரணப் போராட்டமாக அந்த முங்கல் இருந்தது. பறவையின் ஆக்கிரமிப்பிலிருந்து பன்றியின் மனோநிலைக்கு வருகிற முங்கல் அது.
நதி சிரிக்கிறது.
நான் கண்களைத் திறந்த பொழுது, எதிரிலிருந்த சக் – மூலின் பிரம்மாண்டம் மறைந்துபோய், எளிமையான உருவத்துடன், தலைப்பாகை கட்டிக் கொண்டு, நீண்ட வெளுத்த தாடியுடன் நீர்க்கடவுளான பாட்டப்பன், நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் அற்புதமான காட்சி நிறைந்திருந்தது.
அவரது உதடுகள் மழைப் பாடலின் ஒருசொல்லை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.
நான் அவரை நோக்கிப் பேசுகிறேன்.
நான் : அன்புள்ள பாட்டப்பா, நதியின் பிரவாகத்தில் மூழ்கிப் போகாமல் தப்பிப்பது எப்படி? நான் தொடர்ந்து மூழ்கிக் கொண்டேயிருப்பதால் களைத்துப்போய் வந்திருக்கிறேன். இந்த இயக்கத்தை நிறுத்த வேண்டும். எனக்கு ஆசுவாசம் வேண்டும். எப்படி என் ஓட்டத்தை நிறுத்துவது?
அவர் கண்களைத் திறந்து என்னை உறுத்துப் பார்க்கிறார்.
பாட்டப்பன் : ஓட்டத்தை நிறுத்தாதே.. நீந்தியே கழியணும் நதி.. யாராலும் அந்த ஓட்டத்தை நிறுத்த முடியாது.. அவரவர்க்கான ஓட்டத்தை ஓடித்தான் தீரவேண்டும்..
ஓடிக் கொண்டிருக்கிறது நதி. முங்கி எழுந்து கொண்டிருக்கிறது மீன். ஓடிக் கொண்டிருக்கின்றன கடிகாரத்தின் முட்கள்.. பறவை வந்து அமரும்போது, அசைந்தாடும் மரத்தின் கிளை, அப்பறவை எழுந்து சென்றவுடன், அசையும் இசைவு அதே அசைவல்ல. வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில் அசைவுபடும் காற்று புல்லாங்குழலில் இசைவு படும் அதே காற்றல்ல…. மூழ்கும்போது கனலும் நீர்மம், எழும்போது நளிரும் குளிர்ச்சியின் நதியோட்டத்தில் அலைவுபடுவது நீயல்ல, உன் உடலல்ல. நதியில் நழுவும் ஒரு கூழாங்கல்!
அவர் பேசப்பேச, அவரது வெண்கலக்குரல் அந்த விகாரையின் மண்டபங்களில் பட்டு ரிதமான பறை இசைவெளியாக மலர்கின்றது.
***
வெகுநாட்களுக்குப் பிறகு என் சொந்த கிராமத்துக்குப் போயிருந்தேன். வெறுமையாய் கிடந்த என் நிலத்தின் வறண்ட மண்ணில் கால்கள் பதியப் பதிய நடந்தேன். இந்த வருடம் மழை பொய்த்துவிட்டதால் பயிர்ச் சாகுபடி எதுவுமின்றி தாகித்துக் கிடந்தது மண். கிணற்றில் நீர் அதலபாதாளத்திற்கு இறங்கியிருந்தது. ‘இனிமேல் குறுவை சாகுபடியாக சோளக்கருது பயிர் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், நாளையிலிருந்து ஏரோட்டம் ஆரம்பிப்பதாகவும்’ சொன்னார் நிலத்தின் பணியாளர். சோளக்கருது வெள்ளாமைக்கு பெரிதாக தண்ணீர்வரத்து தேவை இல்லை. மாதத்திற்கு 3 முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. நீர் அதிகம் உறிஞ்சாத கருதுகள் ருசியாய் இனித்துக் கிடக்கும்.
அடுத்த நாள், ஏர்க்காட்டிலிருந்து அரக்கப் பரக்க ஓடிவந்தார் பணியாளர். ஒரு விபரீதமான விஷயம் நடந்திருப்பதாகவும், உடனே வந்தாக வேண்டும் என்று பதட்டத்துடன் என்னை அழைத்தார். புதிரான எண்ணங்களுடன் நிலத்தை நோக்கி துரிதமாக நடந்தேன்.
நிலத்தில் ஒரு உழவு முடிந்து இரண்டாவது உழவுக்கான சால்கள் கிழிக்கும்போதுதான் அந்த வினோதம் நடந்திருக்கிறது.
ஏர்கள் பூட்டிய நிலையில் அப்படியே நிற்க, ஏர் ஓட்டிகள் பதட்டத்துடன் நின்றிருந்தனர். அவர்கள் சுட்டிக் காட்டிய இடத்தில், முன்னத்தி ஏரின் கொழு, ஒரு கருங்கல்லின் அடிப்பாகத்தில் மாட்டி பூமியில் ஆழமாகப் புதைந்து நின்றிருந்தது… இல்லை, அது கல் அல்ல!
அது சாமி சிலை என்று என்று பயபக்தியுடன் தெரிவித்தனர் பணியாளர்கள். அவர்களின் பதட்டம் கலந்த பரபரப்பிலும், எனக்குள் ஒடிக்களித்த அமானுஷ்யமான கதைகளிலும் என் உடலெங்கும் சூடேறிக்கொண்டிருந்தது. அதை வெளியே எடுங்கள் பார்க்கலாம் என்று ஆவல் மீதூரச் சொன்னேன். அவர்கள் பதட்டத்துடன் மறுத்து விட்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு தனது நிலத்தில் இதுபோல நடந்தபோது, அந்த சிலையை எடுத்த தனது தாத்தாவை ‘முனி’ அடித்துவிட்டது என்று ஒரு பணியாளர் சொல்லக் சொல்ல, அவரது ஒரு நூறு வருசத்துச் சொற்கள், கருத்த சாம்பல் திரளாய் மாறி எங்கள் தலைக்கு மேலே உறைந்து நின்றது.
ஆனாலும், நான் விடுவதாக இல்லை. அந்த அமானுஷ்யமான கல்லை வெளியில் எடுக்க மனம் பரபரத்தது. சரி விடுங்கள் நானே எடுக்கிறேன் என்றவாறே, நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து அதை வெளியில் எடுக்க முயற்சி செய்தேன். கூடியிருந்த பணியாளர்கள் பதட்டத்துடன் தடுத்தனர். ‘அதை வெளியில் எடுத்தால் சாமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், அப்படியே நிலத்திலேயே புதைத்து விட்டு விடலாம்’ என்றும் யோசனை தெரிவித்தனர்.
அவர்களை சமாதானப்படுத்தி, மெல்ல அதை வெளியே எடுத்தேன்.
நல்ல மொட்டை வெயிலில், சுடுமணலில் ஆழ்ந்திருந்த அந்தக்கல், சில்லென்று விறுவிறுத்து இருந்ததில் சற்றே ஆச்சரியம் கொண்டேன். அது சாதாரண கருங்கல் போல்தானிருந்தது. ஆனால், மிக நுட்பமாக கூர்ந்து உன்னிப்பாக அதை நோக்கினால் அது கருங்கல்லால் வடிக்கப்பட்ட மிகப்பழமையான சிறிய கற்சிலை என்பது புலப்படும். கிணற்று மேட்டிற்கு எடுத்துவந்து தண்ணீர் ஊற்றிக் கழுவினோம்.
தலையில் தலைப்பாகை கட்டிய நிலையில், வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்தகோலத்தில் ஒரு மனிதத் தோற்றத்தை யூகிக்கும்படியான ஒரு சிலை. இடது கை கீழே இறங்கியிருக்க, உயரே தூக்கிய வலது கையில் ஏதாவது ஆயுதம் இருந்திருக்க வேண்டும். அதன் மார்புப் பகுதியில் ஒரு சில ஆபரணங்கள் பொறிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் போல. சிற்ப நுணுக்கங்கள் எல்லாம் மழுங்கி மொழுமொழுவென்று ஒரு சாதாரண கருங்கல்லின் தோற்ற மயக்கத்தில் இருந்தது. அதனை லேசாக வருடிப் பார்த்தேன். ஒரு கண் சிமிட்டலில் பல நூறு ஆண்டுகள் வந்த உணர்வு எனக்குள் ஓடிக் களித்தது.
அப்படியே அதற்குள் மயங்கிப் போனேன் சில கணங்கள்.
அதை நான் வீட்டிற்கு எடுத்து வந்து என் அறையில் வைத்தேன். தொன்மையான கதைகளின் பல்வேறு விநோதங்களை மனதில் அசைபோட்டபடி நாற்காலியில் சாய்ந்து கொண்டு அந்த சிற்பத்தையே ஆய்வு செய்தபடி இருந்தேன். அப்பொழுதுதான் கண்களில் பட்டது, அந்த சிற்பத்தின் உயரே தூக்கிய வலது கையில், வளையல் போன்ற உருண்டை வடிவத்தில் ஒரு கங்கணம் போன்ற அமைப்பில் காப்பாகச் சுருண்டிருந்தது. அதன் வினோதமான தன்மை என்னைக் கொழுவி இழுக்க, அதன் அருகில் பாய்ந்து சென்றேன்.
அதன் கையில் அணிந்திருந்தது செம்பு வளையம். ஈரப்பிசுபிசுப்பில் கல்லோடு சேர்ந்து ஒட்டிப்போயிருந்த அந்தக் காப்பு, கல்லில் செதுக்கப்படாமல், தனியாக ஒரு ஆபரணமாக அணிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏதேதோ குறியீடுகள் போன்ற சின்னங்கள் கீறப்பட்டிருந்தன. அதன் குமிழாய்த் திரண்டிருந்த மேல்பகுதியின் நெளிச்சலில் கை வைத்தேன். ஒரு உயிருள்ள ஜீவனைப் போல அதனுள் ஒரு துடிப்பு எழுந்து அடங்கியது போன்ற உணர்வு ஏற்பட, அதைத் திருகினேன், அற்புதம்! அசைந்து கொடுத்தது, அதை மெல்ல நகர்த்தியதில், சிலையின் கையிலிருந்து கழன்று தனியே வந்துவிட்டது.
என் உடலெங்கும் வினோதமான இசைச் சத்தம் கொட்டுவது போன்ற அந்த கணத்தில், அதை அணிந்து பார்க்கவேண்டும் என்ற அவா, அலையலையாக எழுந்து அறையெங்கும் சூறைக்காற்றாய் சுழற்றியடிக்க, அனிச்சையாக என் வலது கையில் அணிந்தேன், அந்தக் கங்கணத்தை!
நான் அணிந்த அக்கணம், என் உடலெங்கும் பற்றிக்கொண்டது பெரு நெருப்பு. சடுதியில் உடலெங்கும் பொசுங்கிப் போவதற்குள் கழற்றியெடுத்தேன்.
கடவுளே, என்ன ஒரு கொடூரமான பஸ்மீகரம்!
உடலெங்கும் வெடவெடத்து நடுங்கியது. அதை சட்டென அந்தச் சிலையின் கையில் அணிவித்தேன்! மெல்ல மெல்ல உடல் நடுக்கம் குறைந்தது.
அது குறித்து ஏதேதோ யோசனைகள் அலையலையாய் எழுந்தன. பணியாளர்களின் பேச்சைமீறியது தவறோ? இந்த சிலையை என்ன செய்வது? இப்படியே சிலமணிநேரங்கள் கழிந்தபோது, மாலை தேநீர் கொண்டுவந்து தந்தார் என் இல்லாள். வெளியே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
அன்று இரவு சரியான மழை. இரவில் பெய்ய ஆரம்பித்த மழை விடியும் வரை கொட்டித் தீர்த்தது. என்னுடைய அறையின் தரையெங்கும் ஈரம் பாவி சுவர்களெங்கும் பரவி ஈரத்தின் பிசு பிசுப்பு கொண்ட குளிர் காற்று என் உடலெங்கும் சுருண்டு நடுக்கிக் கொண்டிருந்தது. இரவு முழுக்க அந்த வினோதமான இசைச் சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது போலிருந்தது. ஒருவேளை உடல் நடுக்கத்தின் ஜுரத்தில், வெறும் பிரமையோ?
மழை விட்டிருந்த காலையில் இளம்வெயில் சுளீரென்று அடித்தும் கூட என் அறையின் ஈரம் காயவில்லை. ஓதம் பாய்ந்து ஈரம் பரவியிருந்த புத்தகங்களை பதனமாக எடுத்து வெளி வாசலில் வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தேன். வெளியே யாரோ அழைக்கும் அரவம் கேட்க, வாசலுக்கு விரைந்தேன்.
வெளியில் நின்றிருந்த அறிமுகமற்ற புதியவர் என்னை உற்றுப் பார்த்தார். அவரது பார்வை என் மேலெங்கும் அளைந்தது. “ஃபிலிபெர்டோ?, ஃபிலிபெர்டோ தானே நீங்கள்? ” என்றார்.
எனக்கு ஒரு சில வினாடிகள் எதுவும் புரியவில்லை.
நான் தலையை ஆட்டினேன். “ஃபிலிபெர்டோவா?, நான் கௌதம சித்தார்த்தன்”
அவர் தனது பார்வையை மாற்றாமல், ஒரு நிமிடம் உறுத்துப் பார்த்துவிட்டு, சட்டென விலகி, வெளியே நடையைக் கட்டினார்.
அவர் என் பார்வையிலிருந்து மறையும்வரை அவரது வெறுமையான செய்கையில் ஆழ்ந்து போய் நின்றிருந்தேன். சட்டென பிரக்ஞை வந்தவனாய். வீட்டிற்குள் திரும்பினேன். அறைக்குத் திரும்பி வந்து பார்க்கையில் அறை, காலமாக மாறியிருந்தது.
என் வலது தொடை வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிக்க, சடக்கென பாய்ந்து, அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
***
எங்கள் தமிழ் நிலத்தின் மழைக் கடவுள் பாட்டப்பன்!
எங்கள் நாட்டுப்புறக் கதையாடலில் சொல்லப்படும், இந்தியப் புராணிகமான மஹாபாரதத்தில் வரும் ஒரு காட்சியை இங்கு முன்வைக்க வேண்டிய கணம் இது!
அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமாவுக்கும், ஒரு கட்டத்தில் வில்வித்தை பயில்வதில் பெரும் போட்டி ஏற்பட்டுவிடுகிறது. தரை மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் வில்வித்தை பயின்று வாகை சூடிய அவர்கள், நீர்மார்க்கமாக அஸ்திரப் பயிற்சி செய்ய விழைகிறார்கள். இப்படியாக நீர்நிலைகளில் அஸ்திரப் பயிற்சி செய்யும் சமயத்தில், இந்திய பெருங்கதையாடலின் மழைக் கடவுளான (Rain God) வருண பகவான், அர்ஜுனனுக்கே பெருமளவில் ஆதரவாக இருக்கிறார். தனது மழைத் தன்மையை அர்ஜுனனுக்கு சாதகமாகப் பெய்வித்து அஸ்வத்தாமாவை தோல்விமுகம் ஏற்படுத்துகிறார். இதனால் கடுங்கோபமடைந்த அஸ்வத்தாமா, தன் தவ வலிமையினால், நீர்ப்பாடலை உருவாக்கி, கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த எளிய மனிதர்களுக்கு அந்தப்பாடலைத் தந்து, நீராம்சம் பொருந்திய கங்கணத்தை அணிவித்து, சிறு சிறு மழைக் கடவுள்களாக (Rain Maker) அவர்களை உருவாக்குகிறான் அஸ்வத்தாமா.
அப்படி உருவாக்கப்பட்ட மழைக் கடவுள்கள் பாட்டுப் பாடினால், மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அந்த அஸ்வத்தாமாவுக்கு பெருமளவில் நீர்நிலை அஸ்திரப்பயிற்சிகளில் உதவி செய்கிறார்கள். அதன்பிறகு, நாட்டுப்புறத்திற்குத் திரும்பிய அவர்கள், மக்களின் மனமும் நிலமும் குளிரும்படி பாட்டுக்களைப் பாடி மழை பெய்வித்தார்கள்.
அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்தான் பாட்டப்பன்! தமிழ் நிலத்தின் chac-mool !
***
கார்லோஸ் ஃபுயண்டஸின் சக் – மூல் (Chac-Mool) கதை இரண்டாயிரம் வருடங்களாக கட்டமைத்து வந்த தொல் கதை பாணியை தலை கீழாகப் புரட்டிப் போட்ட புரட்சிகர தரிசனம்!
மனிதன், காலங்காலமாக இயற்கையையும் அதன் அமானுஷ்யமான சக்தியையும் அடிமையாக்குவதிலேயே இலக்காக இருந்தான். காலங்காலமான பெருங்கதையாடல்கள் இவ்வாறான கதையாடல்களையே முன்வைத்தன. தொன்மையான கிரேக்க காவியங்களில், கடவுளின் மகத்தான சக்திகளை தனக்கேற்ப வளைத்துக் கொண்டான். இந்திய இதிகாசங்களில் மனிதனின் ஆணைகளை கடவுளர்கள் சிரமேற்கொண்டார்கள். அரேபிய புராணிகங்களில் இயற்கையின் அமானுஷ்யமான சக்திகள் மனிதனுக்கு ஏவல் வேளைகளை முன்னின்று நடத்தின. இந்த பார்வைக்கு, உலகப்புகழ் பெற்ற 1001 அரேபிய இரவுகளில் வரும் அலாவுதீனின் கதை, மிக அழகான சான்று!
அலாவுதீனிடம் அடிமைப்பட்டுப்போன ஜீன் என்னும் பூதம் அவனது ஏவல்வேளைகளை சிரமேற்கொண்டு செய்து முடித்தது. பெருங்கதையாடல்கள் முழுக்க மனிதன் இயற்கையை அடிமையாக்கிய காவியக்கதையாடல்களாக மொழிகள் தோறும் வீங்கிக் கிடக்கின்றன.
இது ஒரு சூழலியல் சார்ந்த ஆதிக்கப் பார்வை! இந்த ஆதிக்கப் பார்வையை முதன்முதலில் உடைத்தது கார்லோஸ் ஃ புயண்டஸின் சக் – மூல் கதை.
இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்னே தான் ஒரு துளியிலும் துளி என்பதை உணர்ந்தவன், அதன் எல்லையற்ற தரிசனத்தைக் கண்டு பயந்து போனான். அதன் விளைவு, இயற்கையை மற்றும் இயற்கையின் சக்திகளை தனக்கு அடிமையாக்க முயன்றான். மாந்திரீகங்களை உருவாக்கினான். தாந்திரீகங்களை நிர்மாணித்தான். தன் மன இயலாமைகளை கதையாடல்களாக மாற்றினான். அதன்மூலம் தனது ego வை திருப்திப்படுத்தும் altar ego வை கதையாடல்களில் கட்டமைத்தான்.
இந்த “இயற்கையை அடிமைப்படுத்தும் மரபு கதை பாணி”க்கு க்கு எதிராக எழுந்தவைதாம் லத்தீன் அமெரிக்க கதைகள். ஸ்பானிஷ் கலாச்சாரம் இயற்கையின் புலனாகா அடையாளத்தை அற்புதமாக முன்வைக்கிறது.
light is like water கதையில், நதியை அடிமையாக்கினால் அது சீற்றம் கொண்டு காவு வாங்கும் என்பது போன்ற பார்வையை மிக ரத்தினச் சுருக்கமாக வனைந்திருப்பார் கார்சியா மார்க்வெஸ். ஃபுயண்டஸின் சக் – மூல் கதைக்கு முன், அவரது, ‘Pantera en jazz’ கதையில் உறுமும் Black panther -ன் உருமலிலிருந்து இந்தப் பார்வையைப் பார்க்கலாம்.
இயற்கையிலிருந்து அந்நியமாகிப் போன நவீன மனிதன் இயற்கையைக் கண்டு பயந்தவண்ணம் இருக்கிறான். ஒரு கட்டத்தில் அதை எதிரியாக கற்பனை செய்து பார்க்கிறான். ஹாலிவுட் திரைப்படங்களில் பலவாறாக இந்த அம்சத்தை சித்தரித்திருக்கின்றன. நீ இயற்கையை ஏதோ ஒருவிதத்தில் அழித்துக்கொண்டிருக்கிறாய் என்கிற சிறுத்தையின் உறுமலே, குற்ற உணர்வாய், இசையாக மாறுகிறது இக்கதையில்.
அதன் அற்புதமான நீட்சிதான் சக் – மூல் !
இயற்கையின் அமானுஷ்யமான சக்தியை அடிமையாக்க முயலும், நாகரிக மனிதர்களான ஃபிலிபெர்டோக்களை, அழிக்கிறது அது. இயற்கையின் வேட்கை என்பது தணியாத தாகம் கொண்டது. அந்த வேட்கை 2000 ஆண்டுகால தாக வேட்கை! மேஜிக்கல் ரியலிசத்தை உள்வாங்கி புரட்சிகர இசையாக ஒலிக்கும் தொன்மத்தின் விடுதலைப் பாடல்!
தணியாமல் தாகித்துக்கொண்டிருக்கிறது சக் மூலின் தாக வேட்கை. பாட்டப்பனின் பாடல் மழையாய் பெய்கிறது !
***
நான் குறிசொல்லும் பாரம்பரியத்தில் வந்தவன். என் அப்பா எட்டு கூழாங்கற்களை வைத்து நாட்டுப்புறக் குறி சொல்லும் மாந்திரீகர். முத்தேழ் என்ற பெயர் கொண்ட இந்த முறை, டேரட் கார்டுகளை போன்ற ஒரு குறி சொல்லும் முறை. சாபம் என்ற கதையில் இந்தக்குறி சொல்லல் முறையை கிண்டலடித்து, குறி சொல்லும் என் அப்பாவின் அமானுஷ்ய உலகத்தை மூட நம்பிக்கை என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்… அதன்பிறகு, ஐந்து வருடங்களுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் வெடித்தெழுந்தது BOOM! கார்சியா மார்க்வெஸ்ஸின் மாந்திரீக உலகமும், ஜிப்சிகளின் மரபார்ந்த பண்பாடுகளை அற்புதமாகக் கணித்த அவரது பார்வையும் என்னைப் பல்வேறு பரிமாணங்களுக்கு நகர்த்தியது. கார்லோஸ் ஃபுயண்டஸின் சக்-மூலின் இசை இந்த மரபை எனக்குள் மீட்டெடுத்தது.
என் எட்டுத் தலைமுறைக்கு முந்தைய பாட்டனார் முத்தேழ், எட்டு கூழாங்கற்களை வைத்து மனித வாழ்வின் தீர்க்க தரிசனங்களைக் கணித்து, குறிசொல்வதில் விற்பன்னர் ! அப்பொழுது எதிர்ப்பட்டவன்தான் சாத்தாவு! இயற்கையின் அமானுஷ்ய சக்தி!
முத்தேழின் குறி சொல்லும் வாக்கு வன்மையை வெட்டிக் கிழித்துக் கொண்டே இருந்தான் சாத்தாவு. இருவருக்குமான போட்டி யுத்தத்தில் சாத்தாவு தோற்றுப்போக, தோற்றுப் போனவர் ஜெயித்தவருக்கு அடிமையாகவேண்டும் என்கிற விதிமுறையின் பிரகாரம், முத்தேழிடம் தனது முடியை அறுத்துக் கொடுத்து, அடிமையாக ஒப்புக் கொடுக்கிறான் சாத்தாவு. சாத்தாவுவின் முடியை, தனது தொடையைக் கீறி உள்வைத்துத் தைத்திருக்கும் முத்தேழின் பாரம்பரியம் நான்! சாத்தாவு என்னும் இயற்கையின் அபாரமான அமானுஷ்யமான சக்தி எனக்கு அடிமை! பல நூற்றாண்டுகளாக அந்த முடி பல தலைமுறை உடல்களில் மாறிமாறி என் தொடையில் தங்கியிருக்கிறது. நாளை என் மகனின் உடலுக்கு மாறும்! பல நூற்றாண்டு வருடத்து வன்மை அது. அது கிழித்தெறியப்பட வேண்டும்! என் உடலின் மீது கண்காணா விகாரம் பற்றிப் படர, சட்டென அதைத் தூக்கியெறிந்தேன் !
எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, என்தொடை கிழிந்து ரத்தம் கொட்டியது.
இப்பொழுது அந்த உடல் குளிர்ச்சியானதாக மாறுகிறது!
எனக்குள் பொங்கியெழுந்தது பாட்டப்பனின் பாடல்!
********
கட்டுரைக்கான குறிப்புகள்:
(இந்த சிறு மழைக் கடவுள் பாரம்பரியம் இன்றும் நாட்டுப்புறங்களில் தொடர்கிறது. எங்கள் நிலத்தில் இன்றளவிலும் ரத்தமும் சதையுமாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த myth ஐ வைத்து ” Rainmaker : Paattappan” என்னும் தலைப்பில் ஒரு கதை எழுதியுள்ளேன். சமீபத்தில் ஜிம்பாப்வே எழுத்தாளர் Tendai Huchu தங்களது நாட்டைச் சேர்ந்த Godwin Onasedu என்னும் Rainmaker குறித்து எழுதியிருந்ததையும் உணரலாம். அந்த மழை மனிதன் ஒரு குறிப்பிட்ட ராகத்துடன் தனது இசைக்கருவியை இசைத்தபடி மழைப் பாட்டுப் பாடினால், உடனே மழை பெய்ய ஆரம்பிக்கிறது. மழை என்றால் பெருமழையல்ல; சன்னதாகத் தூறல். இந்த நிகழ்வை அவர் காணொளியாக வெளியிட்டுள்ளார்.)
***
வாசகருக்கான குறிப்புகள் :
1. சக் மூல் கதை : சக் மூல் பண்டைய ஆஸ்டெக் மக்களின் மழைக்கடவுள். கதையின் ஹீரோ ஃபிலிபெர்டோ (Filiberto), சக் மூல் சிலையை வாங்கிவந்து வீட்டில் வைத்திருக்கிறான். சக் மூல் ஐ அடிமைப்படுத்த நினைக்கிறான். வீடு முழுக்க நீர் பெருகி ஓடுகிறது. தப்பித்து ஓடி கடலில் விழுந்து இறந்து போகிறான். இயற்கையை அடிமைப்படுத்த நினைத்தால் இயற்கை காவு வாங்கிவிடும் என்பது கதையின் நீதி
2. வருண பகவான் : இந்திய பெருங்கதையாடலின் (Grand Narrative) மழைக் கடவுள் (Rain God)
3. பாட்டப்பன் : நாட்டுப்புறக் கதையாடலின் (Folk Narrative) மழைக்கான சிறுதெய்வம் (Rain Maker)
4. பறவையின் ஆக்கிரமிப்பிலிருந்து பன்றியின் மனோநிலைக்கு வருகிற முங்கல் அது. : இந்த வாக்கியத்தை “ஒரு கலைஞனின் (பறவையின்) ஆக்கிரமிப்பிலிருந்து லௌகீக (பன்றியின்) வாழ்க்கைக்கு மாறுகிற நிலை” என்கிற பொருளில் எழுதியுள்ளேன். இந்த இடத்தில், பறவை என்பது, புனிதமானதாகவும், பன்றி என்பது அதற்கு எதிரானதாகவும் கற்பிதம் செய்து வாசிக்கக் கூடாது. இரண்டு உயிரிகளும் மனித வாழ்நிலைகளின் பல்வேறு பரிமாணங்களை முன்னிறுத்தும் உருவகங்களே!
5. தனது ego வை திருப்திப்படுத்தும் altar ego வை கதையாடல்களில் கட்டமைத்தான். இந்த வாக்கியத்தை “தனது சுயத்தை திருப்திப்படுத்துவதற்காக தன்னை ஒரு கதாபாத்திரமாக மாற்றி கதையாடல்களில் கட்டமைத்தான் ” என்கிற பொருளில் எழுதியுள்ளேன்.
6. ஒரு உழவு, இரண்டு உழவு : நிலத்தை பண்படுத்த இரண்டு முறை மேலும் கீழும், குறுக்கும் நெடுக்கும் ஏர் உழுவார்கள்.
****************
ஒரு கட்டுரை ஆரம்ப பகுதிகள் சிறுகதையாக பறந்து சிறகடிக்கிறது.பிற்பகுதிகள் உவமை படுத்தல் வாயிலாக புராண சம்பிரதாயம் ஒப்புவித்த வழக்காறுகளில் நீந்தி முழ்கி பயணிக்கிறது பத்தியின் கருவும், உருவும். நேர்த்தியாக பின்னப்பட்டு நகரும் எழுத்துகள்.தொன்மையின் வாசனை கூறுகளை இலக்கிய பிரதி வாயிலாக நம்மை புதிய தரிசனத்தில் முழ்கடிக்கிறது .வாழ்த்துகள்.