• Wed. Nov 29th, 2023

அயிரையிலிருந்து ஆக்ஸோலோடில் க்கு

ByGouthama Siddarthan

Aug 4, 2022
  • கௌதம சித்தார்த்தன்
இதுதான் முதன் முதலாக, ஸ்பானிஷில் வெளிவந்த என் பத்தியின் முதல் அத்தியாயம்.
பத்தியின் தலைப்பு: அயிரையிலிருந்து ஆக்ஸோலோடில்க்கு
அத்தியாயத்தின் தலைப்பு: கௌதம் மற்றும் நான்
என் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் : மஹாரதி
ஸ்பானிஷ் மொழியாக்கம் : என்றிக் சோளினாஸ்

****

 

கௌதம் மற்றும் நான்

 

லத்தீன் அமெரிக்க வாசகர்களே!

எங்கள் நாட்டில் எவருக்குமே கிட்டியிராத ஒரு மகத்தான பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒரே நீரோட்டமாய் போய்க் கொண்டிருந்த உலக இலக்கியத்தின் போக்கையே தங்களது நிலத்தை நோக்கி திசை திருப்பிய லத்தீன் அமெரிக்க BOOM – அலையடிப்பு என் தமிழ் நிலமெங்கும் கரைபுரண்டோடியபோது, ஒரு அயிரை மீனாக மாறி, சுழன்று சுழன்று ஓடும் அதன் மந்திரச் சுழிப்புகளில் மூழ்கி முக்குளித்திருக்கிறேன்.

இப்போது அயிரையிலிருந்து Axolotl ஆக!

உலகின் தொன்மையான கலாச்சாரமும், Boom காலகட்டத்திலிருந்து Post boom க்கு வளர்ச்சியடைந்துள்ள தனித்துவமான கலை ரசனையும் கொண்ட மண்ணின் வாசகர்களோடு மாதம் தோறும் உரையாடும் ஒரு அற்புதமான வாய்ப்பை எனக்குத் தந்த இதழ் ஆசிரியருக்கும் குழுவினருக்கும் 2000 ஆண்டு தொன்மை மிகுந்த தமிழ் மொழியின் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

எங்கள் தொன்மையான தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், மொழிவளர்ச்சி, வாழ்வியல் அம்சங்களுக்கும், தொன்மையான லத்தீன் அமெரிக்க மண்ணுக்கும் உள்ள உறவை முன்வைத்து இவைகளினூடாக எல்லைகளற்று விரியும் சர்வதேச இலக்கிய நீரோட்டத்தை இணைத்து ஒரு புத்தம் புதிய பார்வையை உங்களிடையே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்!

மாற்று மொழியின் தரமான இலக்கியக் கூறுகளை அங்கீகரிக்கும் அற்புதமான மனப்பான்மை கொண்ட இளம் தலைமுறையை ஸ்பானிய மண்ணில் உருவாக்கிய ஸ்பானிஷ் இலக்கிய ஆளுமைகளுக்கும், என் ஆதர்சமான போர்ஹேஸுக்கும் இந்த coloumn – ஐ சமர்ப்பணம் செய்கிறேன்!

இணைய வளர்ச்சியடையாத 1980 -90 காலகட்டத்தில், லத்தீன் அமெரிக்க புத்தகங்கள் எங்கிருந்தாலும் சோற்று மூட்டையைக் கட்டிக்கொண்டு அங்கு பயணம் போவதே என் வாழ்நாள் பயணங்களாக இருந்தன. ஸ்ரீரங்கம் டி.கண்ணனிடம் வாங்கிய போர்ஹேஸ் ஐ, ஸ்ரீரங்கத்தின் கோயில் பிரகாரத்தின் தூணில் சாய்ந்துகொண்டு படித்தபோது சட்டென கோயில் பிரகாரம் ஒரு labyrinth ஆக மாறிய கதையை ஸ்பானிஷ் வாசகா, உன்னிடம்தானே பகிர்ந்து கொள்ள முடியும்…

நான் முழுக்க முழுக்க லத்தீன் அமெரிக்க இலக்கியம் படித்து வளர்ந்தவன். உலக இலக்கியத்தின் போக்கையே மாற்றி அமைத்த போர்ஹேஸ், ருல்போ, புயண்டஸ், மார்க்வேஸ், நெருடா, ஆகிய இலக்கிய ஆளுமைகள் எழுதிய மண்ணில் என் எழுத்துக்கள் வருவது எனக்கு ஜென்ம முக்தி!

ஜென்ம முக்தி என்பது எங்கள் வேதங்களும் இதிகாசங்களும் முன்னிறுத்தும் வாழ்வியல் கோட்பாடு! மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட கோட்பாடு அது! உயிர் என்னும் ஆன்மா என்றும் அழியாதது. ஒரு மானிட உயிரானது, இறந்ததும், மீண்டும் வேறொரு உயிராக உருவாகி மீண்டும் பிறக்கிறது. “புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..” என்று ‘பஜகோவிந்தம்’ என்னும் எங்கள் பக்தி ஸ்லோகம் சொல்கிறது.

மனித ஆன்மா, ஒவ்வொரு பிறவியிலும் தான் செய்யும் தீய செயல்களுக்கேற்ப அதற்குரிய தண்டனைகளை, அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவித்து முடிக்கும்வரை, பிறவி தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதை கர்ம வினை என்று சொல்வார்கள். நற்செயல்களில் ஈடுபட்டால், ஜீவன் முக்தியடைந்து கடவுளிடம் சேர்ந்து விடும்.

உயர்ந்த மலைகளில் ஒளிந்தாலும், கடலின் ஆழத்தில் பதுங்கினாலும், பூர்வ ஜென்ம கர்மங்களிலிருந்து ஒரு மனிதன் தப்பிக்கவே முடியாது என்று சொல்கிறது எங்கள் கருட புராணம்.

இதை எங்கள் கி.மு 4 ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞரான திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்னும் கவிதைப்பாடலில் “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார், இறைவன் அடிசேரா தார்.” என்று அவதானிக்கிறார்! ஒன்றரை அடிகள் மட்டுமே கொண்ட இந்த கவிதைப்பாடல் ஜப்பானிய ஜென் கவிதைகளின் தோற்றம் கொண்டவை!

எனக்கு யதார்த்தத்தில், இது போன்ற கருத்துகளில் ஆர்வமில்லாவிட்டாலும் கூட, இவைகள் மீது பெரிதும் ஆர்வத்தை ஊட்டியது லத்தீன் அமெரிக்க மாந்திரீக யதார்த்தம்.

சாபம் பெற்ற Buendía family யில் பிறக்கும் குழந்தை பன்றியின் வாலுடன் பிறப்பதும், செத்துப்போன comala என்னும் நிலத்தில் பேய்கள் உலவுவதுமான மாந்திரீக யதார்த்தத்தின் தொப்புள் கொடி பந்தம் கொண்டது எங்கள் நிலமும்தான்!

இந்த ஜீவன் முக்தி என்னும் தத்துவத் தேட்டத்தை ஒரு சுவாரஸ்யமான கதையாடலாக மாற்றி விளையாடிய போர்ஹேஸின் The other என்னும் சிறுகதை என் ரத்தஓட்டத்தில் உடையாத ஒரு குமிழியாக மிதந்துகொண்டே இருக்கிறது. இந்தியத் தொன்மங்களிலும், தத்துவங்களிலும் போர்ஹேஸுக்கு பெரும் மயக்கம் இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திய இக்கதை, நான் முதன்முதலாக வாசித்தது.

பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் உள்ள ஒரு போர்ஹேஸும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் உள்ள இன்னொரு போர்ஹேஸுமாக சந்தித்துக் கொள்ளும் சுவாரஸ்யமான காலவிளையாட்டை விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளி அது! labyrinth ன் மாயச் சுழல்வுகளுக்குள் நிகழ்த்தும் தத்துவ தரிசனம்!

கதையின் நாயகன், தன்னை மீண்டும் பார்க்கும் தத்துவம் கலந்த தன்மையை மிக அற்புதமான சுவாரஸ்யமான படைப்பாக நிகழ்த்தியிருப்பதைக் கண்டு பிரமித்துப் போனேன். ஒரு தத்துவத் தேட்டத்தை சுவாரஸ்யமான இலக்கியமாக மாற்றும் வல்லமை கொண்டவர் உலகளவில் போர்ஹேஸ் தவிர யாருமில்லை!

Double என்னும் doppelgänger என்கிற ஒரு இலக்கியக் கோட்பாட்டு வகை, உலகம் முழுக்க பெரும் பிரபல்யம் பெற்றது. தன்னுடைய இன்னொரு உருவத்தை, Double -ஐ நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ளும் சுவாரஸ்யம் மிகுந்த ஒரு கலை இலக்கியக் கோட்பாட்டு உத்திமுறை. Robert Louis Stevenson’s Dr. Jekyll and Mr. Hyde நாவல் இந்த வகைக் கதையாடல்களில் பிரசித்தம் பெற்றது. தலை சிறந்த மாஸ்டர்களின் பெரும்பாலான கவிதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியிருப்பார்கள். கதைகளில் தாஸ்தாவ்ஸ்கியிலிருந்து நபக்கோவ் வரை பலரும் இந்த வகையைத் தொட்டிருக்கிறார்கள்.

இந்த Double குறித்து இன்னொன்றும் சொல்வார்கள்: நீங்கள் உங்களது Double ஐ சந்தித்து விட்டால் உங்களது அந்திமக்காலம் வந்துவிட்டது என்று ஒரு நம்பிக்கை உண்டு! இந்த ஐரோப்பியப் பார்வையை முன்வைத்தே பெரும்பாலான விமர்சகர்கள் இந்தக்கதை குறித்து எழுதியிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான பார்வை!

இந்த doppelgänger என்கிற சுவாரஸ்யமான கதைப்பார்வை அல்ல போர்ஹேஸுடையது, மகத்தான இந்திய தத்துவதரிசனம்! அவர் இந்தக் கதைக்கு The Double என்று தலைப்பு கொடுக்கவில்லை, மாறாக, The other!

இதை புரிந்து கொள்ள வேண்டுமெனில், அவருடைய இன்னொரு கதையான The Secret Miracle -க்குள் நுழைய வேண்டும்.

கவிஞன் ஒருவனுக்கு தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி மரணதண்டனை கொடுத்து விடுகிறார்கள். கவிஞனின் இறுதி ஆசை, தான் வெகுநாட்களாக எழுதிக் கொண்டிருக்கும் காவியத்தை எழுதி முடித்துவிட்டால் போதுமானது. ஆனால் அதற்கு முன்பே அவனுக்குத் தண்டனை முடிவாகிறது. இன்னமும் எழுதி முடிக்கப்படாத தனது காவியத்தை எழுதி முடிக்க வேண்டுமென்ற தகிப்புணர்வுகளுடன் கொலைக் களத்தில் நிற்கிறான் கலைஞன்.

இநத யதார்த்த வெளியைச் சுழற்றிப் போடுகிறான் போர்ஹேஸ். கவிஞன் கொலைக்களத்தில் மண்டியிட்டு நிற்க, அவனை நோக்கி துப்பாக்கி நீட்டப்படுகிறது. இன்னும் தனது காவியத்தை எழுதி முடிக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் ஆத்மார்த்தமாகக் கடவுளை வேண்டுகிறான். துப்பாக்கியிலிருந்து அவனை நோக்கிச் சீறிப் பாய்ந்து வரும் தோட்டா சமைந்து போகிறது ஒருகணம். பிரபஞ்சமெங்கும் காலம் சமைந்துபோக கலைஞனுக்கான காலவெளி தீராத பக்கங்களை அவன் முன்னே விரிக்கிறது. அந்த ஒருகணம் காலங்களற்று விரிகிறது. அந்த நீண்ட காலங்களற்ற காலத்தில் தனது உன்னதமான காவியத்தை எழுதி முடிக்கிறான் கவிஞன்.

இது ஒரு மாபெரும் இந்திய தத்துவ தரிசனம்!

இந்திய புராணிகமான மகாபாரதத்தில் வரும் “பகவத் கீதை” எனும் தத்துவ உரையாடல் நிகழ்வை போர்ஹேஸின் கதை தரிசனப்படுத்துகிறது.

உலக இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் புகழ்பெற்ற யுத்த களங்களுக்கெல்லாம் ஈடுஇணையற்ற யுத்தகளமாக விளங்குவது மகாபாரதத்தின் புகழ்பெற்ற “குருட்சேத்திர” யுத்த களம். காரணம், வெறுமனே மனிதஉயிர் குடிக்கும் போர்க்களமாக மட்டுமே இல்லாமல், அறம், வஞ்சகம், சூழ்ச்சி, நியாயம், நீதி, பந்தபாசம், துரோகம், கடமை, மண்ணாசை, பெண்ணாசை.. எனப் பல்வேறு பார்வைகளும், தத்துவ தரிசனங்களும் கட்டமைக்கப்பட்டிருக்கும் களம்.

குருட்சேத்திர யுத்தகளத்தில் பாண்டவ சேனை, கௌரவ சேனை ஆகிய இருதரப்பினரும் ஆள்படை அக்குரோணி சேனைகளாக அணிவகுத்து போருக்கான ஆயத்தத்துடன் நிற்கிறார்கள். அப்பொழுது பாண்டவ சேனையின் நாயகனான அர்ச்சுனன், “இத்தனை மனித உயிர்களைக் கொல்லக் கூடிய இந்த யுத்தம் வேண்டாம்..” என்று ஆயுதங்களை வீசியெறிந்து விட்டு தன் தேரை விட்டு இறங்குகிறான். ஆனால், தேரோட்டியாய் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் அவனைத் தடுத்தாட்கொள்கிறார். நல்லவை, தீயவை என்றால் என்ன, தீய சக்திகள் தலை தூக்கும்போது, அவைகளை அழிப்பதுதான் தர்மம் என்ற தத்துவத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார். இந்துமதத்தில் மிகவும் புகழ்பெற்ற தத்துவமான “பகவத் கீதை” என்னும் இந்த கிருஷ்ண உபதேசம் காலங்களற்று பல மணி நேரங்கள் நீடிக்கிறது.

நுட்பமாகக் கவனியுங்கள்: இருதரப்பிலும் போருக்கு ஆயத்தமாக இருக்கும் பரபரப்பான நொடிப் பொழுதுகளில், பலமணிநேரங்கள் உபதேசிக்கும் பகவத் கீதை எவ்வாறு சாத்தியம்?

இது ஒரு அபூர்வமான தத்துவ தரிசனம்! ஒரு நல்ல விஷயம் செய்யும் பொழுது காலமும் கை கொடுக்கும் என்கிற இந்தியத் தத்துவ தரிசனம்!

காலத்தை Magical realism ஆக இந்தியத் தத்துவ மரபு மாற்றியது என்றால், பௌத்தத் தத்துவ தரிசன மரபு, காலத்தை, metaphor ஆக மாற்றுகிறது.

தாழ்த்தப்பட்ட குலத்தவனான அங்குலி மாலா வுக்கு வேத சாஸ்திரங்கள் கற்றுக் கொள்ள ஆசை. ஆனால், அவன் தாழ்த்தப்பட்டவன் என்கிற காரணத்தினால், வேத சாஸ்திரங்கள் கற்றுத்தர மறுக்கிறார் முனிவர். மனம் வெறுத்துப் போய் பெரும் கோபத்துடன், காட்டுக்குப் போகிறான். அந்த வழியாக வரும் முனிவர்களைக் கொன்று அவர்களது சுண்டு விரல்களை வெட்டி மாலையாக அணிந்து கொண்டு திரிகிறான்.

ஒருநாள் அந்தக் காட்டு வழியாக கௌதமபுத்தர் வருகிறார். அவரைக் கண்டதும் ஆவேசத்துடன் பாய்ந்து கொல்லத் துரத்துகிறான்.

இந்த இடத்தில் கால விளையாட்டைக் கவனியுங்கள்: புத்தர் நின்ற இடத்திலேயே நிற்கிறார். அங்குலி மாலா புத்தரைப் பிடிக்க ஓடிக் கொண்டேயிருக்கிறான். புத்தரின் காலநிலை சமைந்து நிற்கிறது. அங்குலி மாலாவின் காலமோ இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ஓடி ஓடிக் களைத்துப் போனவனாய், “சமணா, ஓடாதே, நில்..” என்கிறான் அங்குலிமாலா.

“நான் ஓடவில்லை, நீதான் ஓடிக்கொண்டிருக்கிறாய்.. உன் ஓட்டத்தை நிறுத்து” என்கிறார் புத்தர்.

அங்குலி மாலா தனது ஓட்டத்தை நிறுத்த, காலவெளியின் எல்லையற்ற பிரக்ஞை அவனுக்குள் ஊடுருவுகிறது.

இந்த இடத்தில் Back to the Future திரைப்படத்தில் வரும் ஒரு நிகழ்வை இணைத்துப் பார்க்கலாம்.

1985 இல் வசிக்கும் படத்தின் main protagonist ஆன Marty McFly, Time machine ல் ஏறி 1955 க்கு வருகிறான். அங்கு தனது அப்பா அம்மா இருவரும் திருமணமாகாமல், மாணவப் பருவத்தில் இருக்கிறார்கள். அப்பா George McFly, அம்மா Lorraine Baines- ன் பின்னால் காதலுடன் சுற்றுகிறார். George ஐ உதாசீனம் செய்தபடி இருக்கிறார் Lorraine.

அந்தக் கட்டத்தில் அங்குவரும் Marty McFly ஐ பார்த்த Lorraine, அவன் மீது காதல் கொள்கிறாள். Marty பதறிப் போகிறான். அம்மா தன்னைக் காதலித்தால் காலநிலை பிசகிவிடுமே.. Lorraine, George ஐ காதலித்து திருமணம் செய்தால்தான் Martyயே பிறக்கமுடியும். மிகவும் அல்லல் பட்டு தன் அப்பாவை, அம்மா விரும்பிக் காதலிக்கும் தருணங்களை உருவாக்குகிறான் Marty!

இது எப்படி சாத்தியம்? இறந்த காலத்தில் என்ன நிகழ்ந்ததோ, அதுதானே மீண்டும் அதே காலத்தில் நடக்க வேணடும்? இயக்குனர் Robert Zemeckis கதையில் சுவாரஸ்யம் கருதி பெரும் பிசகு செய்துவிட்டார்.. என்று நினைத்தேன்.

“உன் பார்வை முழுக்க இந்திய தத்துவ மரபு சார்ந்தது. இது யூதத் தத்துவ மரபு. இறந்த காலத்தில் என்ன நிகழ்ந்ததோ, அது மீண்டும் அதே காலத்தில் அப்படியேதான் நடக்க வேணடும் என்பதில்லை. மாறாகவும் நடக்கலாம் என்ற யூத மரபு சார்ந்த பார்வை அது” என்று தமிழின் மாபெரும் கவிஞரான பிரமிள் விளக்கினார்.

இப்படியான பல்வேறு மரபுகளின் பார்வைகளிலிருந்துதான் போர்ஹேஸின் கதையை வந்தடைய முடியும்.

இன்னுமொரு உதாரணமாக, எங்கள் நாட்டுப்புறக்கதை ஒன்று இந்த கதையின் உள்ளடுக்குகளை மிக அற்புதமாகத் திறந்து காட்டுகிறது.

இந்திரன் என்னும் வேதகாலத்து மன்னன் ஒருவன், தான் ஜென்ம முக்தி அடைய, சதா கடவுள் நாமத்தை ஜபித்தபடியும், ஆலயங்களை புனரமைத்தபடியும் இருந்து வந்தான். குடிமக்களின் அன்றாட வாழ்வியல் குறித்த திட்டங்களில் கவனம் செலுத்தாததால் நாட்டில் கொலைகொள்ளைகள் அதிகமாகின. இதனால், திருடர்களை அடக்கவேண்டி மாறுவேடத்தில் நகர்வலம் வந்தான்.

ஓரிடத்தில், ஒருஇளைஞன் திருடர்களோடு வாள்போர் புரிந்து கொண்டிருந்தான். மன்னன், ஆர்வத்துடன் பாய்ந்து சென்று அந்த காட்சியைக் கண்டான். கையில் நீண்டவாட்களுடன் இருந்த 6 திருடர்களை அந்த இளைஞன் ஒருவனே தனது வாளால் மடக்கிக் கொண்டிருந்தான் . அவன் வாள் வீச்சு பிரமிப்பாக இருந்தது. ஆனால், ஒரு வினோதமான கொடுமை என்னவென்றால், அந்த இளைஞன் உடல் முழுக்க பெரிய பெரிய இரும்புக் குண்டுகள் தொங்கிக் கொண்டிருந்தன. தனது வாள்வீச்சுக்கு அவை பெரிதும் இடைஞ்சல் செய்தபோதிலும் வாள்வீசிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவனைத் தாக்கிவிட்டுத் திருடர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். மன்னன் அந்த இளைஞனை பாய்ந்து சென்று தூக்கினான். “அடி பலமாகப் பட்டுவிட்டதா?” என்று கரிசனமாக வினவியவாறு, இரும்புக் குண்டுகள் தொங்கும் உடலை நீவிக்கொண்டே, “இந்த தேவையற்ற இரும்புக் குண்டுகளை முதலில் தூக்கியெறி.. இவைதான் உன் தோல்விக்கு காரணம்..” என்று வாஸ்தவமாகப் பேசினான்.

“முதலில் நீ சுமந்திருக்கும் குண்டுகளைத் தூக்கியெறி.. உன்னை நீயே அறிந்து கொள்வதுதான் ஜீவன் முக்தி” என்றான் அந்த இளைஞன்.

அப்பொழுதுதான் அந்த இளைஞனை முழுமையாகப் பார்த்தான் மன்னன். தான் இளமையான வயதில் இருந்தது போன்ற முகஜாடையுடன் அந்த இளைஞன் இருந்தான்.

திகைப்படைந்த மன்னன், “இளைஞனே நீ யார்?” என்று விசாரித்தபோது, தான், “இந்த நாட்டின் மன்னன் இந்திரன்” என்று அந்த இளைஞன் பதில் சொன்னான்.

இரு இந்திரன்களும் நின்றிருந்த இடத்தில், நிச்சலனமாய் அவர்களுக்கு முன்னால் இருந்த கோயில் குளத்தில், ஒரு இந்திரன் தனது உடலில் சுமந்து கொண்டிருந்த குண்டுகளை விட்டெறிந்தபோது அது கலங்கிய நீரில் பாய்ந்து சுழன்று எங்கோ ஆழத்தில் மறைந்து நீர் வட்டங்களை ஏற்படுத்திய சலனங்களும்,

இரு போர்ஹேஸ்களும் அமர்ந்திருந்த இடத்தில், நிச்சலனமாய் தங்களுக்கு முன்னால் இருந்த நீர்ப்படுகையில், ஒரு போர்ஹேஸ் நாணயத்தை வீசியெறிந்தபோது அது H2o வில் பட்டு எம்பி எம்பி காலப்படுகையில் ஏற்படுத்திய சலனங்களும் தத்துவத் தேடல்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த கதைத்துண்டு ஆதியிலே வேத சாஸ்திரங்களில் இருந்திருக்க வேண்டும், பின்னாளில், சனாதனிகள் வெட்டியெறிந்துவிட்டார்கள் என்று வேதங்களில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் இந்திரன் என்னும் மன்னனின் பெயரை வைத்து யூகிக்க வைக்கிறது. நாட்டுப்புறக் கதை மரபு சார்ந்து நிகழும் இதுபோன்ற தத்துவப் பார்வைகள் குறித்து ஒரு நீண்ட ஆய்வு செய்யும் போது இன்னும் பல பார்வைகள் தரிசனமாகும்.

இப்படி எங்கள் மரபில் மறைந்துபோன, மறைக்கப்பட்ட ஒரு அற்புதமான தத்துவத் தேட்டத்தை தேடிக் கண்டுபிடிக்கும் வழியை அமைத்துக் கொடுத்தவர் போர்ஹேஸ்!

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தத்துவப் பார்வையை வந்தடைந்த இத்தருணங்களில்தான், நான் இன்னொரு கௌதம சித்தார்த்தனைச் சந்திக்க நேர்ந்தது.

இந்தக்கட்டுரையில் ஜீவன் முக்தி பற்றிய பல்வேறு மதப்பார்வைகளை வைத்திருக்கிறாய். சரி, ஆனால், எங்கே சமூகம் சார்ந்த பார்வை? சமூக வாழ்வியலில் (social being) ஜீவன் முக்தி வகிக்கும் Role என்ன? யதார்த்த மனித வாழ்வியலில் அவனுக்கான உற்பத்திப்பொருள் அந்நியமாகிறது. வாழ்வு அந்நியமாகிறது, அவனுக்கு அவனே அந்நியமாகிறான்.. இக்கணத்தில் அவன் எதிர்பார்க்கும் ஜீவன் முக்தி என்பது என்ன?

ஜீவன் முக்தி என்பது, ஒரு தத்துவமாக, தொன்மமாக, லட்சியமாக, வாழ்வியல் கனவாக, கலைஇலக்கியக் கோட்பாடாக வரித்து வைக்கும் மதப்பார்வைகளைத் தாண்டி,

சமூகப்பார்வையில், ஒரு எளிய மானிடன் ஏங்கும் ஜீவன் முக்தி என்பது இம்மையில் கிடைக்கும் மானுடவிடுதலையா? அல்லது மறுமையில் கிடைக்கும் ஆன்ம விடுதலையா!

என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து விரிவாகப் பேச ஆரம்பித்தான் அந்த இன்னொருவன்.

இந்தப் பக்கங்களை எழுதியவன் நானா என்னுடைய Other ஆ என்று தெரியவில்லை.

 

***

 

வாசகர்களுக்கான குறிப்புகள் :

அயிரையிலிருந்து Axolotl ஆக : அயிரை என்பது நம் மண் சார்ந்த மீன் என்பதை அறிந்திருப்பீர்கள். Axolotl  என்பது மெக்ஸிக மீன், கொர்த்தஸார் Axolotl என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியுள்ளார்.

Buendía family : மார்க்வேஸ் நாவலான one hundred years of solitute – ல் வரும் ஒருபகுதி. பன்றி வாலுடன் ஒரு குழந்தை பிறக்கும்

comala  : ருல்போ நாவலில் வரும் ஒரு செத்துப் போன நகரம். இங்கு பேய்கள் வசிக்கும்.

உயிர் என்னும் ஆன்மா என்றும் அழியாதது : மேலை நாட்டினர் உயிர் என்பதையும் ஆன்மா என்பதையும்  தனித்தனியாக பார்ப்பவர்கள். ஆகவே, அவர்களுக்கு புரியும் விதத்தில் ஆங்கிலத்தில் தெளிவு படுத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பக்கங்களை எழுதியவன் நானா என்னுடைய Other ஆ என்று தெரியவில்லை : போர்ஹேஸ்  எழுதிய ஒரு கதையின் கடைசி வரி.

 

**************

One thought on “அயிரையிலிருந்து ஆக்ஸோலோடில் க்கு”
  1. தொன்மையை ஊடறுத்து நகரும் எழுத்துகள் புதிய ஊற்று சுனைபோன்று, நம்மை பரவசப்படுத்துகின்றன.மேற்கத்தேய நவீன எழுத்து கோடுகளுடன் சமாந்தரமாக விரையும் தமிழ் எழுத்தும் அதற்கான ,அடையாளப்படுத்தல் நேர்த்தியாக கோர்க்கப்பட்டு சுவைகூடும் பத்தி எழுத்து, இவ்வாறான ஒரு பத்திக்கான பரந்த நவீன மேலைத்தேய இலக்கிய பரிச்சயமும் ஆழ்ந்த புலமையும் கடின உழைப்புமின்றி இவ்வாறான ஒரு எழுத்து நடையும் காத்திரமான பொருள்கோடலும் சாத்தியமன்று, அதனை இவ்வெழுத்துகள் வாசகனில் நுகர்ச்சியை தூண்டி நெகிழ்வான பரவசமான வாசிப்பனுபவத்தை தொன்மை நவீன இலக்கியப்போக்குடன் கட்டமைத்து நகரும் உத்தி போற்றுதலுக்குறியது.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page