• Thu. Sep 21st, 2023

பொம்மக்கா

ByGouthama Siddarthan

Aug 3, 2022
  • கௌதம சித்தார்த்தன் 

 

பச்சை மண் வாசம் அடித்தது. தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருக்கும்   போல. வானம் முட்டாக்குப் போட்டது போல வெளிச்சம் மங்கி விசுவிசென்று சாரக் காத்து விசும்பியது. “இன்னிக்கு மழை பேஞ்சா நல்லது” என்றாள் திம்முப் பாட்டி.

அக்காவுக்குக் குழந்தை பிறந்திருந்தது. ஏழாம் நாள் தண்ணியூத்தும் ‘பிள்ளைத் தேவம்’ என்ற சடங்கு வைத்திருந்தார்கள். சாங்கியம் செய்ய வந்திருந்த தாசரி, சாப்பிடாமல் ஒருசந்தி இருந்ததில், பசி வயிற்றைக் கவ்விக் கொண்டிருக்கும் போல, வெரசலாகக் காரியங்களை முடுக்கிக் கொண்டிருந்தார்.

நான் கொண்டு வந்து கொடுத்த பசுங்கோமியத்தை, வீட்டுக்குள்ளும், அக்காவும் குழந்தையும் படுத்திருந்த திண்ணையிலும் தெளித்து விட்டு வந்த தாசரி, கம்மஞ்சக்கை வேண்டுமென்றார்.

இப்பொழுதெல்லாம் கம்மம் பயிர் அருகிக்கொண்டு வருவதால், ஒரு  வாரத்துக்கு முன்பே தேடிப்  பிடித்துக்  கொண்டு வந்து வைத்திருந்தாள் அம்மா. அதை வாங்கிக் கொண்டு பொங்கச் சோற்றை உருண்டைகளாகப் பிசைந்தார். நுரை ததும்பிக் கொண்டிருந்த பால் சொம்பில், கம்மஞ் சக்கையை நனைத்து நனைத்து,   அக்காவும் குழந்தையும் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் மூன்று கோடுகள் இழுத்தார். சிமெண்ட் தரையில் இழைந்து அந்தப் பால்கோடுகள் பளிச்சென்று தெரிந்தன. கோடுகளின் இடைவெளியில் சோற்று உருண்டைகளை எடுத்து வைத்தார்.

திண்ணையில் கோடிட்டிருந்த அழகையும், சோற்று உருண்டைகளையும் எண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, திண்ணையில் மறைப்புக் கட்டியிருந்த தென்னந்தடுக்கின் மீது பட்டென்று ஒரு கல் வந்து விழுந்தது. நான் விலுக்கிட்டு நிற்க, “உங்கப்பம் புத்தியும் உட்டு, உங்கம்மா புத்தியும் உட்டு, எம்புத்தியே புடிச்சிக்கோ…” என்று சொல்லும் குரல் கேட்டது, அவசரமாக வெளிக்கடையில் போய்ப் பார்த்தேன்.

தலையில் வல்லவட்டுக் கட்டுடன், சரிகை வேட்டியும் சட்டையும் அணிந்து ஆம்பளைபோல வேசங்கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் ஒரு சிறுமி. மறுபடியும் அதே சொல்லைச் சொல்லிக் கொண்டே கல்லை வீசியவள், மூன்று முறை செய்து விட்டு ஓடிப் போய்விட்டாள்.

எனக்கு அந்தச் சிறுமியின் வேசமும், செய்கையும் மிகவும் பிடித்துப் போனது. அது பற்றி அக்காவிடம் பேச்சுக் கொடுத்து விசாரித்தேன், பாட்டியிருந்த பக்கம் சைகை காட்டி அனுப்பி விட்டாள்.

இடித்துக் கொண்டிருந்த வெத்திலையை எடுத்து வாயில் அதக்கிக் கொண்டு காலை நீட்டிக் தூண்மீது சாய்ந்து உட்கார்ந்தாள் பாட்டி. “இதெல்லா இந்தக் காலத்திலே யார் கேக்கறாங்க… ம்… நீயாவது கேக்கறியே சாமி…” என்று பெருமூச்சு விட்டாள். அருகில் உட்கார்ந்து என் மேலை வாஞ்சையாக நீவியவள், “யாரு வந்து கல்லு போட்டதுன்னு தெரியுமா…?” என்று கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தாள். அவளது கண்களில் இருந்து சுருக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டே இருந்தது.

****

குதிரைவாலிக் கருதுகள் தலை சுழித்தாடிக் கொண்டிருந்தன. ஏத்தல்  இறைத்துக் கொண்டிருந்தாள் பொம்மக்கா.  தொலைமேட்டிலிருந்து சரிவாக இறங்கும் வாரியில் கவலை மாடுகளை ஓட்டி, ஓட்டத்தின் போக்கில் டக்கென வடக்கயிற்றில் ஏறி உட்கார்ந்து   கொள்ளும்   வாகில்   உருளைகள்   கீறிச்சிட்டன. பறி மேலே  வந்து  தண்ணியைக்  கொட்டும்போது  கை  வாய்க்காலில் பாய்ந்தோடும் அலையடிப்பு, மடைமாறிக் கொண்டிருந்த அவளது மகனைச் சுதாரிக்க வைத்தது. அம்மா   ஏத்தல்   ஓட்டும்   அழகில் ஆழ்ந்து போய் மம்முட்டியை வீசிக் கொண்டிருந்தான்.

பறி கிணற்றுக்குள் இறங்கும்போது வால்கயிற்றைச் சுண்ட, ஏத்தல் வண்டி நின்று கிறீச்சிட்டது. மாடுகள் மெதுவாகப் பின்னோக்கி வந்தன. வெறுமையாய் இருந்த பக்கத்து வாரியில் அவளது கண்கள் அளைந்தன. மலைமாட்டுக்கு சீக்கு வராதிருந்திருந்தால், இன்னொரு ஏத்தல் பூட்டியிருக்கலாம். பழைய சோத்து நேரத்துக்கெல்லாம் வயல் முழுக்கத் தண்ணி பாஞ்சிருக்கும். மாட்டை மாத்திட்டு வர பண்ணாடியும் ஆள்காரனும் மாட்டுச் சந்தைக்குப் போயிருக்கிறார்கள். இனி பொழுதைத் தலையில் போட்டுத்தான் வருவார்கள்.

அவருக்குப் பாதிப்பொழுது இப்படியும், ஞாயத்திலும் சீர்சிறப்பிலும் கழிந்து விடுவதால், பண்ணையத்தைக் கருத்தாகக் கவனித்துக் கொள்பவள் பொம்மக்காதான். இத்தனைக்கும் அவள் காடுகரைகளின் நிழலில்கூட ஒதுங்கியவளில்லை.

அவளது அய்யா ஊர் ஊருக்கும் பஞ்ச பாண்டவர் கதை சொல்கிறவர். “பள்ளையா கதையென்றால் கொல்லையா இருக்கும் கூட்டம்” அவரது கை சப்ளாக் கட்டைகளை அடிக்கும் இசைச் சுதியில் அந்த ஊரும் கோயில் மண்டபமும் குமிந்திருக்கும் கூட்டமும் மறைந்து மறைந்து, அத்தினாபுரத்தின் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நெட்டாப்பாய் எழுந்து நிற்கும். கதைத் தளத்துக்கே கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும் அவரது கதை சொல்கிற நேர்த்தியில், ஏற்ற இறக்கங்களோடு குரலெடுத்துச் சொல்லும்போது, பாண்டவமாரும் துரியோதனமாரும் கண் முன்னால் குதியாளம் போடுவார்கள். அதன் விறுவிறுப்புக் குறையாமல் கதை நடத்திச் செல்லும் வித்தையில், சனங்கள் சொக்கிப்போய் நிற்பார்கள்.

அய்யா கதை சொல்லப் போகும்போதெல்லாம், பொம்மக்காவும் கூடக் கிளம்பிவிடுவாள். அம்மா எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், அய்யாவின் தோளில் ஏறிக்கொண்டு புதுப்புது ஊர்களின் அழகையும், செம்மண் குடுசுகளின் நெகு நெகுப்பையும், பசேலெனச் சிரிக்கும் வெள்ளாமைக் காடுகளையும், பண்டச் சந்தையில் பரப்பி வைத்திருக்கும் பண்டங்களையும், வில்வண்டி மாடுகளின் கழுத்தில் ஒயிலாய்  ஒலிக்கும் சலங்கைச்  சத்தத்தையும் ஆசை தீரப் பார்த்துக் கொண்டே போவாள்.

இரவு கோயில் மண்டபத்தில் உட்கார்ந்து அய்யா கதை சொல்ல ஆரம்பித்தால் விடிய விடியத் தூங்காமல் கதைக்குள் புகுந்து அரண்மனையிலும், அரச சபையிலும், காடு மலை வனாந்திரமெங்கும் சுற்றிக் கொண்டிருப்பாள். அவளது கால் தடம், ஆதிபருவத்திலிருந்து சொர்க்கலோகம் வரை பதிந்தெழுந்தபோது, கதைச் சொல் அவளுக்குள் கம்மங் கருதுகளைப் போலப் பூட்டை வாங்கியிருந்தது.

ஒரே வேகமாகக் கதை சொல்லிக் கொண்டு வரும் அய்யா, ஒரு சில இடங்களில் தடுமாறும்போது, கதையின் நூலை எடுத்துக் கொடுப்பாள்  பொம்மக்கா.  அவளை  வாஞ்சையுடன்  நீவிவிடும் போக்கில், சப்ளாக் கட்டைகள் மெய்மறந்து அடிக்கும்.

அவர் தலையில் நரை ஏற ஏற கதை சொல்வதில் இளைப்பு வாங்கியது. அந்தப் பொழுதுகளில் அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்து அவ்வப்போது கதை சொல்ல ஆரம்பித்தவள், கொஞ்சம் கொஞ்சமாக அவரது சப்ளாக் கட்டைகளையும் வாங்கிக் கொண்டாள்.

“நீ ஊர் சுத்தறது போதாதுன்னு வயசுக்கு வந்த ஒரு கொமுறிய ஊர் ஊராப் போயி கதை சொல்ல வெக்கறியே… வெக்கமாயில்லே… அவளை யாரு வந்து இனிமே கண்ணாலங் கட்டுவா…” என்று கடுங்கோபத்துடன் கத்தினாள் அம்மா. அவள் ஆரியம் அரைத்துக் கொண்டிருந்த கல்லிலிருந்து விசையுடன் சிதறியது ஆரிய மாவு.

“தேய், கதை சொல்றதுங்கறது தெய்வ வாக்குக்குச் சமானம்… அது அவளுக்கு வாய்ச்சிருக்கு. அது எவ்வளவு பெரிய காரியம்… கதை கேக்கறவங்களுக்கு மோச்சம் கெடைக்கற தெய்வக் காரியத்தைத்தானே எம்பொண்ணு பண்றா… அதை நெனச்சி பெருமைப்படுவியா… தாம்தூம்னு குதிச்சிட்டு…”

“சாமீ… மல்லக்கா… இதுக்கொரு நல்ல புத்தியைத் தர மாட்டியா…” என்று வேண்டிக் கொண்டே கைமாற்றிப் போட்டாள். ஆரியக்கல் வெடுக்வெடுக்கென்று சுற்ற ஆரம்பித்தது.

அவள் கதை சொல்லும் விதமே புதுமையாக இருந்தது. பாண்டவமாரைப்  பற்றிச்  சொல்லும்போது  எவ்வளவு கருத்தாகக் குரலெடுத்துச் சொல்கிறாளோ, அதே பாவனையிலேயே  துரியோதனமாரைப் பற்றியும் சொல்லுவாள். அபிமன்னனைக் கொல்லும் காட்சியில் எந்த உணர்ச்சி வேகத்தில் சப்ளாக் கட்டைகள் சத்தம் போடுமோ, அந்தச் சுதி சற்றும் மாறாமல் பீமசேனன் துரியோதனனின் தொடையைப் பிளக்கும் காட்சியிலும் ஒலிக்கும்.

காலங்காலமாய் கேட்டு வந்த கதையை, மந்திரக்காரக் கிட்ணனும், தந்திரக்காரச் சகுனியும் விளையாடும் பதினெட்டாங் கரமென மண்டையை நோண்டுகிற மாதிரி வேறு விதமான பார்வையில் சொல்லவே, நிலை குலைந்து போனார்கள் சனங்கள். கதையின் ஒத்தையடிப் பாதையிலேயே பயணம் போவதை விடுத்துப் பல்வேறு வழித்தடங்களைப் போட்டுக் கொடுத்தபோது, பாண்டவ துரியோதனர்களின் மனசுக்குள் பயணம் போக ஆரம்பித்தார்கள். அந்தச் சொல்லோட்டம் மங்காமல், சுழட்டிப் போட்ட உழவில் விதைப்பண்டமாய் முளை விட்டிருக்கும் சனங்களின் மனசு.

அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மர், வாழ்க்கையின் தரும ஞாயங்களுக்கான விடைகளைச் சொல்லும்போது, கைகொட்டிச் சிரிக்கிறாள் பாஞ்சாலி. “ஒரு தீட்டான பொம்பளையை சபை நடுவே துகிலுரியறபோது கைகட்டிட்டு இருந்தவரா தரும ஞாயங்களுக்கான விடையைச் சொல்றது…” என்ற சொல்லை நைசாகக் கதையில் சொருகுகிறாள் பொம்மக்கா. பெண்டுகள் ஆரவாரத்துடன் சிரிக்க, அதுவரை சொல்லி வந்த அறத்துக்கும் அதிகாரத்துக்குமான பார்வையைத் தலைகீழாய்ப் புரட்டிப் போடுகிறாள்.

‘எந்தளவுக்கு வில் வளைந்து கொடுக்குதோ, அந்தளவுக்கு விசை வெகுதூரம் பாயும்’ என்று புதிர் போடுகிறாள். அர்ச்சுனனுக்காகக் காட்டு வேடனிடம் கட்டை விரலைக் குருதட்சணையாக வாங்கிய ‘ஞாயம்’, போர்க்களத்தில் விதியின் விளையாட்டென அர்ச்சுனன் கட்டைவிரல் சுண்டும் குருதட்சணையில் தீர்கிறது.

அவளது கதைச்சொல் முப்பத்திரண்டு ஊர்களையும் தாண்டி பக்கத்து நாடுகளில் ஒலிக்க ஆரம்பித்தது. கதை கேட்க வண்டி கட்டிக் கொண்டு, பல நாடுகளிலிருந்தும் சனங்கள் வர ஆரம்பித்தார்கள். அவளது கதைகளும் கதையோடு கதையாக உள்குத்தாக வைக்கும் அவளது புதிர்களும் காடுகரைகளில் மேய்ச்சல் நிலங்களில், பண்டச் சந்தைகளில் செலையோடியது.

விசத்தடாகத்தில் தண்ணீர் குடிக்க வரும் தருமனிடம் யமதர்மன் கேட்கும் கேள்விகளுக்குள், தீராத  ஊர் ஞாயங்களைப் புதிராக வைக்கிறாள். அந்தப் புதிர் விடுவிக்கும் போது பட்டக்காரர்களின் கட்டில்களில் ஒட்டறை அடைகிறது.

“அம்மிணி… இந்த மாதிரியெல்லாம் இட்டுக்கட்டிக் கதை சொல்றது தெய்வக் குத்தமில்லையா…?” என்று பதட்டத்துடன் இடையில் புகுந்தார் அய்யா.

“அய்யா… கதைங்கறதே சூதுவாதுகளை எடுத்துச் சொல்லி சனங்களை நல்வழிப்படுத்தறதுக்கான சொல்லுதானய்யா..” என்று சிரித்தாள்.

கலியன் பொறந்துட்டான் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்றதை விட்டு ‘கலியன்’ங்கற உருவத்தைச் சனங்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியது நம்முடைய பொறுப்பில்லையா? என்று கேட்டாள்.

காலங்காலமாய் தன்போலக் கதைசொல்லிகள் தங்களது சொந்தப் பண்டத்தையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறார்கள். ‘கிட்ண உபதேசத்தை’ எடுத்துக் கொண்டால், போர்க் களத்தில், ஆள் அம்புடன் அக்குரோணிச் சேனைகள் நின்றிருக்கின்றன. அப்போது பார்த்து, ‘போர் வேண்டாம்’ என அர்ச்சுனன் மறுக்க, மாயக் கிட்ணன் அவனுக்கு உபதேசம் செய்கிறானே… அதைக் குனுப்பமாகப் பாருங்கள்.

கண்ணிமைப் பொழுதுக்குள் போர் மூளும் பதட்டமான அந்தச் சூழ்நிலையில், பல பொழுதுகள் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான் கிட்ணன். அதெப்படி முடியும்? அதுதான் கதை சொல்லியின் விளையாட்டு. அங்குள்ள போர்வீரர்களுக்குக் கண்சிமிட்டும் காலம், கிட்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும்  மட்டும் பல பொழுதுகளாக மாறுகிறது. அந்தக் கால விளையாட்டை முன்வைத்து சனங்களுக்குத் தரும ஞாயங்களை உபதேசிக்கிறான் கதைசொல்லி… என்று சொல்லச் சொல்ல வாயடைத்துப் போய் நிற்கிறார் அய்யா.

ஒரு சில ஊர்களில் ‘ராம லச்சுமணங்கதை’ சொல்லச் சொல்லும்போது, அவளது கதையோட்டம் மடையுடைந்த வெள்ளமாய்ப் பொங்கிப் பிரவாகமெடுக்கும்; ராம லச்சுமணங்கதையை  ‘சீத்தாதேவி  கதை’  என்றுதான்  சொல்வாள் அவள். தங்களுடைய சாதி வழமொறையில் உள்ள கற்பு நிலைக்கும், சீத்தாதேவியின் கற்பு நிலைக்கும் உள்ள உறவை எண்ணி மருகுவாள்.

வேறு சாதிக்காரர்களோடு புழங்கிய பெண்களை ‘சாதி விலக்கம்’ செய்து விடுவார்கள் தங்களது சாதிக்காரர்கள். ஆண்களை மன்னித்து சாணித் தொட்டியில் முங்கி எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கள்ளப்பேச்சை மறைத்தால் வயிறு வீங்கிச் செத்துப்போவார்கள் என்ற அய்தீகத்தினால் யாரும் மறைப்பதில்லை. அதில் வீண் பழிபாவம் போடுபவர்களும் உண்டு. பெண், தான் சாதி கெட்டவள் அல்ல  என்பதை நிரூபிக்க,  பச்சை  மண் கலயத்தில் கேத்தம்மா கோயிலுக்குத் தண்ணீர் எடுத்துவர வேண்டும்; கலயம் கரையாமல், தண்ணீர் ஒழுகாமல் முழுசாக வந்துவிட்டால் பெண் பத்தினிதான். இல்லையெனில் சாதி விலக்கம்தான்.

சீத்தாதேவிக்கு நெருப்புப் பரீட்சை. தங்களுக்கு நீர்ப் பரீட்சை.

சீத்தாதேவி அக்கினிக் குண்டத்தில் உட்காரும்போது சப்ளாக் கட்டைகள் ஆவேசமாய்த் துடிக்க, சீமைப்பட்டக்காரரின் சொல்லைப் போல அவளது கதைச்சொல், ராமனை இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு நிற்கவைக்கும் வல்லமையைச் செய்யும்.

சீமைப்பட்டம் என்பது ஏழு நாடுகளுக்கும் முதன்மையான பட்டம். வல்லவட்டமும், வலங்காரக் கங்கணமும், வெண்கொற்றக் குடையும் கொண்ட ஊரதிகாரம், நாட்டதிகாரம், சீமையதிகாரம் என மூன்று பட்டம் அடங்கியது.

உள்ளூரில் நடக்கும் சண்டை சச்சரவுகள், எணைப் பொலித் தகராறு, கணவன் மனைவி  சங்கடங்களைத் தீர்த்துவைக்கும் ஒரு பட்டம் கட்டியவர் ஊர்ப்பட்டக்காரர்.

எல்லா ஊர்களும் அடங்கிய நாட்டில் நடக்கும், கள்ளச்சொல், கருத்துச்சொல், பங்காளிச் சொல், பகையாளிச் சொல், உறவுச்சொல், ஊமைச்சொல், சாமிச்சொல் போன்ற பேச்சுகளை வெட்டி விடுதலுக்கும், சொல்வாக்குச் சொல்லுதலுக்குமான இரண்டு பட்டம் கட்டியவர் நாட்டுப் பட்டக்காரர்.

ஏழு நாடுகள் அடங்கிய சீமையில் நடக்கும் சாதி விலக்கம் செய்தல், சீர்சிறப்பு, பட்டங்கட்டுதல், கொத்துக்காரரை நியமித்தலுக்குமான மூன்று பட்டம் கட்டியவர் சீமைப் பட்டக்காரர்.

அந்தச் சமயத்தில்தான் ராசிபுர நாட்டுக்கு ஞாயம் பேச வந்தார் சீமைப் பட்டக்காரர் சென்னய்யா.

அது ஒரு மொட மசுரு புடிச்ச ஞாயம். மொண்ணையன் தனது மனைவியை ரெண்டு பொதி ஆரியத்துக்கு வில்லை வீட்டு மல்லப்பனின் பண்ணையத்தில் வைத்து விட்டான். அவளைப் பெண்டாளத் துரத்தும் மல்லப்பனிடமிருந்து தப்பி ராவோடு ராவாக சாமையான் வீட்டுக்கு ஓடிப் போய்விட்டாள் அவள். மல்லப்பனின் ஆள்கள் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து ஞாயத்தில் நிறுத்தி விட்டார்கள்.

“புருசஞ் சொல்லை மீறிட்டுக் கண்டவன் ஊட்டுக்குப் போன பொம்பளைய சாதிய உட்டுத் தள்ளிவெக்கோணும்..” என்று எகிறிக்குதித்தான் மொண்ணையன்.

“புருசங்காரன்  பண்ணையத்துக்குப் போச்சொன்னாப் போவலாம்… படுக்கைக்குப் போச்சொன்னா… அதா என் அத்தை மவன் ஊட்டுலே அடைக்கலம் பூந்தே… நா ஒண்ணும் சாதி கெட்டுப் போவுலே…” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதாள் மொண்ணையன் மனைவி.

“இதை இப்பிடியே உட்டா நம்ப சாதிக் கட்டுப்பாடு வளமொறை அழிஞ்சி போயிரும். எனக்கு ரண்டு பொதி ஆரியம்  வந்து சேரோணும்…  இல்லாட்டி,  அந்தப்  புள்ளே  வந்து  சேரோணும்… அவ்ளவ்தான்…” என்று பம்பினான் மல்லப்பன்.

ஞாயம்   சொல்லச்   சொல்ல   வயிற்றுவலியின்   வேதனையில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள் மொண்ணையன் மனைவி. சுற்றியிருந்த ஒருசிலபேர், “ஞாயத்திலிருந்து தப்பறதுக்காகப் பசப்பறா பாரு” என்று குசலம் மூட்டினார்கள்.

இந்த ஞாயத்தின் போக்கு கப்பென்று எல்லா ஊர்களையும் பற்றிக்கொண்டு பக்கத்து நாடுகளுக்கும் பரவிவிட்டது. இதை எப்படித்  ர்க்கப் போகிறார் என்று ஏழு நாட்டாரும் குனுப்பமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சீமைப்பட்டக்காரர், மிகவும் பதனத்துடன் கண்ணுங் கருத்துமாய் ஞாயம் நடத்தினார்.

மூணு  பொழுதாகியும்   தீர்ந்தபாடில்லை. அன்றைய பொழுது ஊர்க்காரர்கள் சீக்கிரமே வேலைகளை முடித்துக் கொண்டு பக்கத்து ஊருக்குப் போகும் பதட்டத்தை சீமைப்பட்டக்காரர் பார்த்தார்.  பொம்மக்காவின் கதைகளைப் பற்றி அவரும் கேள்விப்பட்டிருக்கிறார்தான். இப்பொழுது பக்கத்திலேயே என்றதும் மனசும் கால்களும் பரபரத்தன. அவரது கண் சைகையைப் புரிந்து கொண்ட ஆள்காரன் உடனே வண்டி கட்டினான்.

**

“பாண்டவர்   கதையில   முக்கியமான   காட்சியமாக   மூணு காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பித்தாள் பொம்மக்கா. அவளுக்கு எதிரில் குழுமியிருந்த கூட்டத்தினூடே பட்டக்காரர் கட்டிலில் உட்கார்ந்திருந்த சீமைப்பட்டக்காரர் அவளைக் குனுப்பமாகப் பார்த்தார்.

இரண்டு கடையும் தொங்கும் தூண்டாமணி விளக்கின் அஞ்சுமுக வெளிச்சம், அந்த மேடையைப் பீடமாக்கிக் கொண்டிருந்தது. மண்டப மேடையில் நடுவாந்தரமாகத் தோரணையுடன் உட்கார்ந்திருக்கும் அவளது கண்களில் சுடர் விட்டெரியும் சோதி அசைந்து அசைந்து கூரான மூக்கில் குத்தியிருந்த சிவப்புக் கல்லில் மின்ன, நெற்றிப் பொட்டுத் துலங்க, வடிவான முக லட்சணத்தில் சொலிசொலித்தாள் பொம்மக்கா.

‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது.

இன்னொரு காட்சியமான ‘விசத் தடாகத்தில்’ தண்ணித் தா கத்துக்கு   வரும்   தரு மனிடத்தில்   எமதர்மரா ஜனா னவன், மனுச  வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை விடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை, ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாகச் சாலடிக்கிறது.

மூணாவது காட்சியமானது, ‘பாஞ்சாலி துகிலுரிதல்’; இதில் மனுசனுக்கும் விலங்குக்கும் இடையில் தூரியாடும் ஞாயங்களும், நெறிமுறைகளும் மனுச உடம்புமேல் தாக்கும் வன்மமாக, மேலெங்கும் அடித்துப் போட்ட வாதையில் வலி கூட்டும்… என்று சொல்லச் சொல்ல சீமைப்பட்டக்காரர் ஒரேயடியாக வியந்து போனார். இது போன்ற கதைச் சொல்லை இதுவரை கண்டதுமில்லை கேட்டதுமில்லையென்று தலைகாணி மேல் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தவர், எழுந்து வாயில் அடக்கி வைத்திருந்த தாம்புலத்தை எச்சில் சட்டியில் ஓசைப்படாமல் துப்பி வாய் கொப்புளித்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

இந்தப் பொழுது பாஞ்சாலி துகிலுரியற காட்சியத்தைப் பார்க்கலாமென்று சொல்லத் தொடங்கினாள் பொம்மக்கா.

தீட்டிலிருக்கிறாள் பாஞ்சாலி. தருமன் பகடையாடுகிறான் என்ற சேதி கேட்டவுடன் முட்டு வீட்டிலிருக்கும் அவளது அடிவயிறு சுரீலென்றது. நாடு, நகரம், செல்வம், மக்கள் என்று ஒவ்வொருவராய் பணயம் வைத்துத் தோற்றுக் கொண்டே வர, அவளது வயிறெங்கும் வெட்டி வெட்டி இழுக்கிறது வலி. சூதின் சுழல் பாதையில் மாட்டிக் கொண்டவளாய், மேலெங்கும் ரணவேதனை பிசைய, குறுக்கும் நெடுக்கும் கோடு கிழித்த பகடைக் காய்களின் மீது குருதித்தாரை ஒழுக ஓடுகிறாள்.

குதிரைகளின் குளம்படி ஓசை அத்தினாபுரத்தின் பூமியெங்கும் துரத்த, தீட்டு வீட்டுக்கு வெளியே வந்து நிற்கிறது தேர்.

ஏ தேரோட்டியே, சபையில் போய்ச்சொல்… குடும்ப பந்தம்ங்கிறது என்ன தெரியுமா…?

புருசனோட சுக துக்கங்கள்லே பங்கெடுக்கறவ பொண்டாட்டி. அவனோட வம்சத்தை விருத்தி செய்ற நல்ல தாரமா, பண்ணையத்தைக் கட்டிக் காப்பாத்தற தாயா, அவனுக்குப் புத்திமதி சொல்லி, நல்வழிப்படுத்தற தாதியா இருந்து பணிவிடை செய்கிறவள்.

பொண்டாட்டியைக் கண் கலங்காம வெச்சிக் காப்பாத்தறவன் புருசன். அவமேல தீராத அன்பு காட்டி அவளோட ஆசையறிந்து அதைப்  பூர்த்தி செய்ற கணவனா,   கடைசி வரைக்கும் கஞ்சித் தண்ணி ஊத்திக் காப்பாத்தற தனயனா இருந்து, அவளை ஆண்டு கொண்டிருக்கிறவன்.

இதிலே எங்கே வந்திச்சி பணயம்…?

ஒரு தந்தையானவன் தன்னோட மகளை ஒருத்தன் கையிலே புடிச்சிக் குடுக்கும்போது, ரெண்டு பேரும் ஒத்துமையா ஆந்து நேந்து பதனமா பண்ணையத்தை நடத்துங்கன்னுதான் சொல்றாரேயொழிய, அவளைப் பணயம் வெக்கவோ, வித்துத் திங்கவோ சொல்லலே. மனுசங்களாப் பொறந்த யாரையும், விக்கறதுக்கும் வாங்கறதுக்கும் கெழக்கு முகமாயிருந்து மேக்கு முகமாப் போறானே… சூரிய பகவான்… அவனுக்கு மட்டுந்தான் அதிகாரமிருக்குது… வேற யாருக்குமில்லை… அப்பிடி நடந்தாச் செல்லாது… போய்ச்  சொல்… போ… என்று அவனை முடுக்கினாள் பாஞ்சாலி.

உற்சாகத்தில் குமிந்திருந்த பெண்டுகள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சீமைப்பட்டக்காரருக்கு உடம்பெங்கும் விறுவிறுவென்று ரத்த ஓட்டம் ஏறியது. அந்தப் பொழுது அவர் மண்டையை இடித்துக் கொண்டிருந்த ஞாயம்  தீர்ந்து போய்விட்டது. எதிரிலிருப்பவள் சாதாரணப் பெண்ணல்ல என்பதைச் சடுதியில் உணர்ந்து கொண்டவர், கட்டிலின் நுனிக்கு நகர்ந்து உட்கார்ந்தார்.

“வலியாகப்பட்டது அடிவயிற்றிலிருந்து நகர்ந்து நகர்ந்து உடல் முழுக்கத் தீயாய் மண்ட, வாதையுடன் இழுத்துப் போகிறார்கள் பாஞ்சாலியை. சபை நடுவே வெடிக்கிறது வலி. பொழுது காறி உமிழ்ந்த தாம்பூலச் சாறில் வழிகிறது செக்கர் வானம். குருதித்தாரை ஒழுக நிற்கும் பெண் உடம்பைக் குரூரமாய் ரசிக்க ஆண்கள் செயல்பட்டபோது, அவளது அடிவயிற்றில் மூண்டது அக்கினி.

அணையாத அந்த நெருப்புதான், இன்னும்   பெண்டுகளின் தீட்டுப் பொழுதுகளில் வலியாய்த் தொடர்கிறது. பெண் உடலின் பாதைகளில் ஒழுகிக் கிடக்கிறது வலி…”

பெண்கள் குலவையடித்தும் கும்மி கொட்டியும் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

பட்டக்காரர் அந்தப் பொழுதில் தீர்மானித்தார், பொம்மக்காவைத் தனது மருமகளாக ஏற்றுக்கொள்வதென்று.

**

ஊர்க்கோயில் மண்டபங்களெல்லாம் வெறிச்சென்றிருந்தன. ‘மழை மாரியில்லாத பூமியைப்போல கதைச் சொல் இல்லாத நாட்டுச்   சனம்’   என்று   செலவாந்தரம்   சொன்னார்கள்.   கதைச் சொல்லை நாடெல்லாம் சுதியேற்றும் சப்ளாக் கட்டைகள் சீமைப் பட்டக்காரரின் அட்டாழி ஏறிக்கொண்டன.

காலையில் எழுந்ததும் எருமை மாடுகளில் பால் பீய்ச்சி, தயிர் கடைந்து வெண்ணை உருட்டுவதற்கும், பண்ணையத் தாள்களுக்கும் சேர்த்தி சாமையும் கம்மங்களியும் கிண்டிப் போடுவதற்கும், காடுகரைகளில் வேலையாள்களை விட்டு வேலை வாங்குவதற்கும், அவ்வப்போது ஏத்தல் இறைப்பதற்கும், சாயங்காலம் மாடுகளுக்குப் பருத்திக் கொட்டை ஆட்டி ஊற்றுவதற்கும் பொழுது பத்தாமல் இருக்கும்போது, கதை சொல்ல ஏது நேரம்?

பொம்மக்கா கதை சொல்வதை நிறுத்திக் கொண்ட பிறகு ஞாயங்கள்  பெருகின. அவளது  மாமனார் ஞாயத்துக்குப் போகும்போதெல்லாம், அவளிடம் நுணுக்கமாக வாதித்து விட்டுத்தான் போவார். ஓரொரு முறை வாதங்கள் இரண்டு மூணு பொழுதுகள் கூடத் தொடரும். ஞாயம் முடிந்து ஊர் திரும்பும்போது, அவரது நரைத்த மீசை கெம்பீரமாய் விரைப்புடன் நின்றிருக்கும். முகமெங்கும் பூரிப்புடன், வல்லவட்டத்தில் ஆடும் சுங்கு சந்தோஷத்தில் குதியாளம் போட வலங்காரமாய் அசையும் கங்கணம் தோரணையாய்க் கண் சிமிட்ட, கை கால் கழுவ தண்ணி கொண்டு வந்து தரும் மருமகளை அன்பு தழும்பப் பார்ப்பார்.

பொம்மக்காளின் உடல் முழுக்கப் பொங்கிக் கொண்டிருந்த கதைச் சொல் வெளியே வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது கொஞ்சகாலம். பிறகு மெல்ல மெல்ல வேறு வடிவம் எடுக்க ஆரம்பித்தது. கதைச் சொல், புதிர்ச்சொல்லாக உருமாறவே, காடு கரைகள், கோயில் மண்டபங்களாகிப் போயின. காட்டில் வேலை செய்யும் வேலையாள்களின் கைகளுக்குக் களைப்பு ஏற்படாவண்ணம், அழிப்பாங்கதைகள் போட ஆரம்பித்தாள். விடுவிக்கும் சொற்களை நோக்கி விசையேறும் கைகளில், விறுவிறுப்பாய் நடக்கும் வேலைகள். அவளது புதிர்ச் சொல்லின் சுழியில் மாட்டிக் கொண்ட வித்தையில், கண்மூடிக் கண்திறக்கும் பொழுது போலக் களைப்பில்லாமல் காணாது போயிருக்கும் காலம்.

மாமனாருக்குப் பிறகு அவளது புருசன் அப்பையாவுக்குப் பட்டம் கட்டினார்கள். அவர் வாப்பாடு தெரியாதவர்.

பண்டம், பருத்தி எடைபோடும் சேடக்கோலில் ‘வாய்’ பார்த்துச் சொல்வதுதான் வாப்பாடு. கொஞ்சம் ஏமாந்தாலும் வியாபாரி ஏமாற்றி   விடுவான்.   ஆடுமாடுகளுக்கு   ஒடை   தட்டும்   ஒடைக் கோல்களின் ஒரு கோலை சேடக்கோலாகப் பயன் படுத்துவார்கள். அந்தக்கோலின் ஒரு பக்க நுனியின் அடியில் கொக்கியை மாட்டி, பருத்தி  பண்டங்களை  எடைபோட  வேண்டும்.  அதே  நுனியின் மேலில் ‘வாய் அறுப்புகள்’ இருக்கும். அந்த அறுப்பில் கயிற்றைக் கட்டித் தூக்கிப் பிடித்தால், சேடக்கோலின மறுபக்க நுனி கிடைமட்டத்தில்  நேராக  நிற்க  வேண்டும்.  கீழே சாய்ந்தாலும், மேலே போனாலும், நேராக நிற்கும்வரை ஒவ்வொரு அறுப்பாக நகர்த்திப் பிடிக்க வேண்டும். ஒரு வாய் ஒரு மனுவு. பன்னெண்டு வாய் ஒரு பொதி… என்று வாப்பாடு போடுவதற்கு அந்த முப்பத்திரண்டு ஊரிலும் ஆள் இல்லை.

ஒரு பொழுது, சாளையில் பருத்தி அம்பாரமாய்க் கிடக்க, வியாபாரியும் வந்து காத்திருக்க, வாப்பாடு தெரிந்த ஆள் பக்கத்து நாட்டிலிருந்து வரவில்லை. காத்திருந்து காத்திருந்து அப்பையாவின் மோவாய்க் கட்டையில் மயிர் வளர்ந்ததுதான் மிச்சம். மெதுவாக பொம்மக்கா எழுந்து போய் சேடக்கோலைத் தூக்கிக் குனுப்பமாகப் பார்க்க ஆரம்பித்தாள். அப்பையாவின் முகத்தில் அந்திவெயில் எரிச்சலுடன் சுணங்கியது.

அப்பையாவுக்கு பொம்மக்காளின் கீர்த்தி முதலிலிருந்தே பிடிக்கவில்லை. அவள்மேல் வீசும் துளசி வாசனை வாந்தியெடுப்பதாக  இருந்தது.  ஊர்க்காரர்கள்,  அவளைப்  பற்றிப் பெருமை பேசும்போதெல்லாம், சுருக்கென்று மட்டந்தட்டுவார். அவரது காதில் மின்னும் சிகப்புக்கல் கடுக்கன் சிம்பிக்கொண்டு நிற்கும். இரவில் அவள் கால் அமுக்கி விடும்போதுதான், அந்தச் சுரவை வாங்கும். வெளியே ஞாய நடத்தைக்குப் போகும்போது அவளிடம் வாதித்து விட்டுத்தான் போவார். ஆனால் அதற்கு நேர்மாறாக ஞாயம் சொல்லிவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரும்புவார். கூட வரும் சீமைப்பட்டக்குடை சொங்கிப் போயிருக்கும்.

தனது சொல்லைச் சனங்களின் தலையில் சும்மாடு கூட்டினார். எதிர்ச்சொல் வந்தால் ‘குத்தம்’ வாங்கினார். எட்டு நாடுகளிலும், ‘அப்பையா ஞாயம் குப்பையா’ என்ற செலவாந்தரம் பெருகியது. அவரது வம்ச கீர்த்தியின் தாச்சணத்திற்குக் கட்டுப்பட்டு சங்கடத்துடன் நெளிந்தார்கள் ஊர்க்காரர்கள். தாம்புக் கண்ணியில்லாமல் தாம்படிக்கும் மாப்பிள்ளையின் வேட்டியெல்லாம் மாட்டுச்சாணியடித்திருக்க, ஓடி ஓடித் தாம்போட்டும் வல்லமையைச் சனங்கள் பொச்சில் சிரித்தார்கள்.

தனது கணவனின் இந்தப் போக்குக்குத் தான் காரணமாகி விட்டோமோ என்று அவருக்கு யோசனை சொல்வதை நிறுத்திக் கொண்டு, காடுகரைகளில் கதியாகக் கிடந்தாள் பொம்மக்கா.

**

தாசப்பன் தலை வழியக் குளித்துக்கொண்டு பூசை செய்வதற்கான காரியங்களில் ஈடுபட்டிருந்தான். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கேத்தம்மா கோயிலுக்கு தாசப்பன்தான் பூசை செய்வான். நேமநெறை தவறாதிருந்து சங்கு சேகண்டி எடுக்க வேண்டும். அதிகாலையில் வலம்புரியாய்  எழும்பும்  சங்குத்  சத்தம்  அந்தக்  காஞ்சிக்கோயில் நாட்டின் பன்னிரண்டு ஊர்களையும் எழுப்பி விடும். கேத்தம்மாவின் உயிர்த் துடிப்பெல்லாம் காற்றாக மாற அந்தப் பகுதி முழுக்க அலையடிக்கும் பரவசத்தில் சனங்கள் கைதூக்கிச் சேவிப்பார்கள்.

இன்னும் வானம் வெளுக்கவில்லை. அவனது மனைவி மாத்தாயி சாமக் கோழிக்கு எழுந்து வீடு பெருக்கி, பசுஞ்சாணியில் மொழுகி, அவனுக்குத் தண்ணி காய  வைத்து விட்டுத்  தீர்த்தம் எடுத்துவர ஆத்துக்குப் போய்விட்டாள். கட்டுத் தரையிலிருந்த மாட்டுக்குக் கம்மந்தட்டு உருவிக் கொண்டு வந்து போட்டான். கட்டியிருந்த கன்றுக்குட்டி வாலைத் தூக்கிக் கொண்டு குதித்தது.

விடிகாலையில் முகம் தெரிவதற்கு முன்னமேயே, ஆத்துக்குப் போய்விடுவாள்  மாத்தாயி.  வழித்தடத்தில்  உள்ள கோம்புத் தேக்கத்தில்   களிமண்   கூட்டி   எடுத்துப்   பிசைந்து   கலயமாகப் பிடிப்பாள். கற்பு  நிறையாக இருக்கும் அவளது கைகள், திரண்டிருக்கும் மண் கவளத்தை வாகாக உருட்ட உருட்ட, மண், கலயமாக  மாறிப்போகும்.  அதைத்  தூக்கிக் கொண்டு ஆத்துக்குப் போய்த் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வரும் அழகை, தலை சுழித்தோடும் ஆத்து நீரின் சலம்பல் வாய் மூடிக்கொண்டு பார்க்கும்.

அந்தத் தீர்த்தக் குடம் வந்த பிறகுதான் பூசை செய்ய வேண்டும். இன்னும் வந்தபாடில்லை. மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. ஒரு பொழுதும் இதுபோல நேரம் கடந்ததில்லை. அசம்பாவமா ஏதாச்சும் நடந்திருக்குமோ எனக் கலவரத்துடன் வீட்டுக்கும், வெளிக்கடைக்கும் நடந்து கொண்டிருந்தான் தாசப்பன்.

கன்றுக்குட்டி பசி பொறுக்க மாட்டாமல் கத்தியது. அவள் எப்பவுமே இந்நேரம் பால் பீய்ச்சி விட்டுக் கன்றை அவிழ்த்து விட்டிருப்பாள். வழித்தடத்தில் மந்தைக்குப் போகிறவர்கள் அசைந்து கொண்டிருந்தார்கள். அவளை மட்டும் காணோம். பதட்டத்துடன் பரபரக்கும் கால்களைத் கட்டுப்படுத்திக் கொண்டான். தீர்த்தக் குடம் கொண்டு வருவதை அவன் போய்ப் பார்க்கக் கூடாது.

என்ன மாய்மாலம் நடந்ததோ, மாத்தாயியின் கைகளில் பச்சை மண் பிசுபிசுத்துக் கொண்டேயிருந்தது. கைகளும், மனசும் நடுங்க நடுங்க, கேத்தம்மாவை நினைத்துக் கொண்டு மண் கவளத்தை உருட்டிக் கொண்டேயிருந்தாள். கலயம் சேருவதுபோல சேர்ந்து, விசுக்கென்று புண்டு விழுந்தது. கைவிரல்களெல்லாம் பிய்ந்து போக, களிமண்ணைப் பிசைந்து கொண்டேயிருந்தாள். பச்சென்று விடிந்து விட்டது.

வெறுங்கைகளைப் பிசைந்து கொண்டவனாய், தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பி அம்மாவைப் போய்ப் பார்த்து வரச் சொன்னான். கண்களைத் துடைத்துக் கொண்டே பையன் வெளியில் நடக்க, தாசப்பன் வீட்டுக்குள் நுழைந்து பதட்டத்துடன் சாமியை வேண்டினான்.

மெல்லத் தலைகாட்டிய ஒரு சிலர், கவலையுடன் சொங்கியிருந்த அவனது முகக் கு றிப்பையுணர்ந்து ஆத்துப்பக்கம் நடக்க ஆரம்பித்தார்கள்.

கோம்புத் தேக்கம் முழுக்க ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் குமிந்து கொண்டேயிருந்தது. மாத்தாயி வெறுமையாய் மண்ணைப் பிசைந்து கொண்டிருக்க, அவள் தலை வழிய இறங்கிய ஈரம் வறண்டு போயிருந்தது. சுற்றியிருந்து பெண்களின் முகத்தில் வேதனை அப்பிக் கொள்ள அந்த இடமே சவக்களை கட்டியிருந்தது. சனங்கள்  குசுகுசுப்புடன்  தீர்த்தக் குடத்தின் நேமநெறைகளைப் பற்றிக் கதைக்க ஆரம்பித்தார்கள்.

‘மாத்தாயி அவுசாரம் போய்விட்டதால்தான் தீர்த்தக் குடம் கொண்டுவர முடியவில்லையென்றும், அவளை சாதியை விட்டுத் தள்ளி வைக்க வேண்டுமென்றும்’  ஞாயம் கூட்டப் போனான் தாசப்பன்.

**

சிலுப்பிக் கொண்டிருந்த மோரில் வெண்ணைக் குட்டானை ஒதுக்கி விட்டு, தாசப்பனுக்கு ஒரு சொப்பு மோர் ஊற்றித் தந்தாள் பொம்மக்கா. திண்ணையில் பவ்வியமாக உட்கார்ந்து அப்பையாவிடம் சொல்லும் ஞாயத்தைக் குனுப்பமாய்க் கேட்டுக்கொண்டே மோர் சிலுப்பும் சிலுக்காணி சுத்தியது. நுரை கட்டிப் பொங்கிக் கொண்டிருந்த வெண்ணைத் திமில்களை வழித்துக் குண்டாவில் சேர்த்துக் கொண்டிருந்தாள். தொண்டுப் பட்டியிலிருந்த நாய் தாசப்பனைச் சுற்றிக் குரைத்தது. அதை அதட்டி விட்டு, வெண்ணைக் குண்டாவை உருட்டி எடுக்க ஆரம்பித்தாள். உருட்ட உருட்ட நுரைகள் உடைந்து வெண்ணை திரளும் வாகில், பச்சைமண், கலயமாகச் சேர்ந்து கொண்டேயிருந்தது.

தாசப்பன் போனபிறகு அப்பையா அதுபற்றி எதுவும் பேசாமல் கம்மங்கஞ்சி குடித்து விட்டுத் தோட்டம் போய் விட்டார். அவளும் ஆள்காரர்களுக்கு கஞ்சிச்சட்டியை எடுத்துக் கொண்டு நடந்தாள். தோட்டத்தில் ஆரியத் தாளறுப்பு மும்மரமாய் நடந்து கொண்டிருந்தது. வரப்பு மேட்டு நிழலில் உட்கார்ந்தவளிடம் ஆரியத்தாளைக் கொண்டு வந்து, ‘இனிச்சுக் கெடக்கு’ தெனக் கொடுத்தான் அவளது மகன். தோவைகளை உரித்து விட்டு மெதுவாகச் சப்பினாள். சப்பென்றிருந்தது.

மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சாலையின் வேப்பமர நிழலில் கட்டிலைப் போட்டபோது, அவளிடம் மெதுவாக ஆரம்பித்தார். “பொம்மு… மாத்தாயி ஞாயத்தைக் கேட்டியா…?”

“ம்” கொட்டியவாறே வெத்திலை மடித்துக் கொண்டிருந்தாள் அவள்.   விசயத்தைச்   சொல்லிவிட்டு,  “இதுக்கு என்ன பண்றது சொல்லு பாக்கலாம்…?” என்றார்.

“நீங்க என்ன முடிவு பண்ணீங்க…?” என்று வெத்திலையை நீட்டினாள்.

“நாஞ் சொல்றது இருக்கட்டும்… நீதாம் பெரிய மதியூக மந்திரியாச்சே… நீ சொல்லு பாக்கலாம்…” என்று வக்கணையாகச் சிரித்தார்.

அவளுக்குள் பொங்கிய எரிச்சலைத் தள்ளிவிட்டு பதனமாக மெல்லிய குரலெடுத்துப் பேசியவள், “ஏ… தாசப்பன் அவுசாரம் போயிருந்தாலும் பச்சை மண் கலயமாகாதில்லே…” என்று மெல்ல இழுத்தாள்.

“எதூ…”

“ம். தாசப்பனையும் வெசாரிக்க வேணுமில்லே…”

“அதெப்படி ஞாயம்?”

“ஆமா, மாத்தாயி மண் கலயமெடுக்கறது அவளுக்காக மட்டுமல்லே, அவனுக்கும் சேத்தித்தானே…”

“அது நம்ப வழமொறையிலியே இல்லே… பச்சைப் பானையிலே தண்ணி கொண்டுவர்ரவ பொம்பளைதா… தண்ணி கசிஞ்சி போச்சின்னா அவளை சாதிய உட்டுத் தள்ளித்தான் வெக்கோணும்…” இருவரும் காரசாரமாக வாதித்துக் கொண்டார்கள்.

“ஒரு பொம்பளை கிட்டப்போயி ரோசனை கேட்டா இப்பிடித்தா இருக்கும்…  சும்மாவா  செலவாந்தரம்  சொன்னாங்க…  ‘பெம்புத்தி பிம்புத்தி’ன்னு…” என்று வெத்திலை எச்சிலை புளிச்சென்று துப்பினார்.

அவளுக்குள் கொதி போட்டெழுந்தது கோபம். “அந்தச் செலவாந்தரத்துக்கு அர்த்தம் அப்பிடியில்லீங்க… ஒரு காரியத்திலே பெம்புத்தியை நம்புனா அதனோட நெறை கொறை அப்பத்தெரியாது. பல பொழுது கழிஞ்சி, பின்னாடி தான் தெரியுங்கறதுதான்…” என்று அவள் சாந்தமாகப் பதில் சொல்லவே, விருட்டென்று கட்டிலை விட்டு எழுந்து போனார் மூன்று பட்டம் கட்டிய சீமைப்பட்டக்காரர்.

அவள் மதியத்துக்கு மேல் எங்கும் போகாமல் வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தாள். அவளுடைய முகத்தில் நெற்றிச் சுருக்கங்கள் சுருண்டு கொண்டேயிருந்தன.  வண்ணாத்தி வல்லவட்டம்  கொண்டு வந்து கொடுத்து விட்டு ‘கம்மங்கஞ்சி ஊத்துங்க சாமி’ என்ற போதுதான் சுற்றிலும் நோட்டம் விட்டாள்.

கணவனுக்கு முகவேலை செய்து கொண்டிருந்தான் அம்பட்டன். ஆள்காரன் வண்டியைத் துடைத்துச் சக்கரத்துக்குக் கொட்டைமுத்து எண்ணை போட்டுக் கொண்டிருந்தான். இன்றிரவு ஞாயத்துக்குப் போவதற்கான வேலைகள் சரூராக நடந்து கொண்டிருந்தன.

சடக்கென எழுந்து தண்ணி காய வைக்கப் போனாள். காய்ந்த சுள்ளிகள் சடசடவெனப் பற்றிக்கொள்ள அடுப்பு முச்சூடும் நாக்குகள் சுற்றிச் சுற்றி எரிந்தன. அண்டாவில் தண்ணி ஆவிபிடிக்க ஆரம்பித்தது.

கீழே எரிந்து கொண்டிருக்கிறது நெருப்பு. மேலே தளும்பிக் கொண்டிருக்கிறது நீர். நேற்று, இன் று,  நாளை என்ற மூன்று பொழுதுகளையும் அடுப்பாகக் கூட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறாள் பொம்மக்கா.

தகதகவென எரிகிறது தீ.  சீத்தாதேவியின் உடம்பெங்கும்  தீக்கொழுந்துகள் அசைகின்றன. அசைந்து அசைந்து அவளைச் சூழ்ந்து கொள்ள, தண்ணீர் பீய்ச்சியடிக்கிறது. சட்டென சீத்தாதேவி, பச்சை மண்பானையில் தண்ணீர் சுமக்கும் மாத்தாயியாக மாறிப் போகிறாள். தீயில் இறங்கும்போது சீத்தாதேவியாகவும், தண்ணீரில் மூழ்கும்போது மாத்தாயியாகவும் மாறி விடுகிற அற்புதமான நிகழ்வு அது. நீர்ப் பரீட்சையும் நெருப்புப் பரீட்சையும் ஒரே கோடாக உருமாறும் அழகில், சீத்தாதேவியும் மாத்தாயியும் கால ஓட்டத்தின் ஒரே கிளையில் சந்தித்துக் கொள்ள, காலம் உறைந்து நிற்கும் அபூர்வக் காட்சியை உருவாக்கிப் பார்க்கிறாள் பொம்மக்கா.

நீர்  பொங்கி வழிந்து  தீயை அணைக்கவும், பொம்மக்கா நிலைக்கு  வந்தாள்.  அவள் முகமெங்கும்  தீர்க்கதரிசனத்தின் மலர்ச்சியோடியிருந்தது.

சற்றைக்கெல்லாம் அப்பையா குளித்து முடித்துத் தலை துவட்டிக் கொண்டிருந்தபோது, மெதுவாக வந்து கூப்பிட்டாள் பொம்மக்கா. “ஏனுங்க,  குத்திப்  போடறதுக்குக்  கம்பு  தீந்துபோச்சு.. சித்தே குதிர்லே எறங்கி எடுத்துப் போடுங்க..”

“பொழுதாய்டிச்சே…   ஞாயத்துக்கு  வேற  போவேணும்… உம்மவனைக் கூப்புட்டு எடுத்துக்கோ…” என்றார் அவர்.

“அவ இனி வந்து தண்ணி வாத்துட்டு எறங்கி எடுக்கறதுக்குள்ளே… வெடிஞ்சது பொழப்பு… நீங்கதா தண்ணி வாத்துட்டிங்கல்லே, எடுத்துக் குடுத்துட்டுப் போங்க…”

“இவ ஒருத்தி எங்காச்சிம் போற போதுதா எதுக்காலே வந்து நிப்பா…” என்று எகத்தாளம் பேசிவிட்டு ஏணியைக் குதிர் மேல் சாய்த்து குதிருக்குள் இறங்கினார்.

அவளும் பின்னாடியே ஏறிக் குதிர்வாயில் போய் உட்கார்ந்து கொண்டவள்,   அவருடன்   பேச்சுக்   கொடுக்க   ஆரம்பித்தாள். “ஆமா, எதுக்காலே யார் யாரெல்லாம் வரப்படாது… குறுக்கே யார் யாரெல்லாம் போகக் கூடாதுன்னு தெரியுமா உங்களுக்கு…?”

“எல்லாம் எனக்குத் தெரியும்…” சுரீலென்று கோபம் வந்தது அவருக்கு.

“செரி செரி, நா ஒரு புதிர் போடறேன். விடுவிச்சிட்டு மேலே வாங்க…” என்றாள் சாவகாசமாய்.

சீமைப்பட்டக்காரருக்குப் பகீரென்றது.

குதிர் கோயிலுக்கு ஒப்பானது. குளித்து விட்டுத்தான் அதற்குள் இறங்க வேண்டும். களஞ்சியத்துக்குள் நுழைந்து வருபவன் யாரென்று   அறிய,   குதிருக்குள்  இறங்கியவனிடம் வெளியே இருப்பவன் புதிர்  போட்டால்,  அதை  விடுவித்து விட்டுத்தான் மேலே வர வேண்டும். விடுவிக்காமல் மேலே வந்து விட்டால் தவசக் குதிர்  என்றைக்குமே நிரம்பாது.  இதனாலேயே,  யாரும் குதிருக்குள் இறங்கத் துணிய மாட்டார்கள்.

இந்த அய்தீகத்தின் கயிறைக் கையில் எடுத்துக் கொண்டு சுருக்குப் போட ஆரம்பித்தாள் பொம்மக்கா. அவருக்கு உடம்பு முழுவதும் திகுதிகுவென எரிந்தது. குதிருக்குள் நின்று கொண்டு தலையைத் தூக்கி அவளை முறைத்துப் பார்த்தார்.

“செரி,  நம்ம ரண்டு  பேருக்கும் ஒரு   போட்டி…   நீ போடற புதிரை நான் விடுவிச்சிட்டு மேல வந்துட்டா, நீ குதிருக்குள்ளே போயிடணும்… சம்மதமா…?” என்று பற்களை நறநறத்தார்.

அவள் தலையை ஆட்டிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு பொழுது கடவுளுக்குச் சாகாவரம் கொண்ட நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அதை ஒரு பூலோகவாசிக்குக் கொடுக்கலாமென முடிவு செய்து   பூலோகம் வந்த கடவுள், மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார்.  நாட்டையும்  மக்களையும் எவ்விதக் குறையுமில்லாமல் காப்பாற்றி பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் ராசா. மதிநுட்பம் சொல்லிக் கொடுக்கும் மந்திரி. நாட்டு மக்களில் ஒருவரான ஒரு குடிமகன். மூவரையும் அழைத்து, ‘உங்களில் யார் பரிபூரணமாக்  குளிச்சிட்டு  ஆன்ம  சுத்தியோடு  முதலில் வந்து சேருகிறார்களோ, அவனுக்குத்தான் கனி’ என்று சொல்லி விட்டார்.

ராசா உடனே பாராசாரிக் குதிரையில் ஏறிக் கடிவாளத்தைச் சொடுக்க, காற்றாய்க் கடுகியது சவாரி. குடிமகன் வேட்டியை உருட்டிக் கட்டிக் கொண்டு ஏரிக்கரையை நோக்கி ஓட்டம் பிடிக்க, மந்திரியானவன் ஏதோ சிந்தனையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

நுரை தள்ளிக் கொண்டு வந்த குதிரை அரண்மனையை அடைய, ஒரே பாய்ச்சலில் அந்தப்புரம் போய் தாமரைத் தடாகத்தில் குதிக்க, பணிப்பெண்கள் அதிசீக்கிரமே சாந்தும் சவ்வாதும் பூசிக் கொளுவ, ராணி அகிற்புகை பிடிக்க, சடுதியில் மறுபடியும் குதிரை மீதேறிக் கடிவாளத்தைச் சொடுக்கிக் கண்ணிமைக்கும் பொழுதில் கடவுளிடம் போய்ச் சேர்ந்தான் ராசா.

குடிமகன் ஓட்டமும் நடையுமாக ஏரிக்கரை போய்ச் சேர்ந்தபோது, தண்ணீர் எடுக்க வந்த பெண் ஒருத்தியை முதலை இழுத்துப் போவதைப் பார்த்தான். கத்தியை எடுத்து ஒரே வீச்சில் முதலையை இரண்டு  துண்டமாக்கி  அவளைக்  காப்பாற்ற  அதற்குள்  வெயில் உச்சிக்கு வந்துவிட்டது. ஏரி முழுக்க ரத்த வெள்ளம் மிதங்கியது. ரத்தச் சகதி தெளிந்த பிறகு குளிக்கலாமென மரநிழலில் களைப்பில் உட்கார்ந்தவன், அப்படியே தூங்கிப்போய் எழுந்து பார்த்தால், இருட்டுக் கட்டியிருந்தது. அவசரமாக ஏரியில் முங்கி விட்டு எழுந்தால் மேலெங்கும் ரத்தவாடை அடித்தது. ஈரத்துணியோடு நடந்தால் காத்துக் கறுப்பு அடித்து விடும் என்று பயந்து, வழியில் உள்ள கோயில் மண்டபத்தில் படுத்திருந்து விட்டு, விடிகாலையில் எழுந்து, பொழுது ஏறுவதற்குள் கடவுளிடம் போய்ச் சேர்ந்தான்.

மந்திரி ஆற்றுக்குப் போகும் வழியில் பயிர்ப் பச்சையெல்லாம் வதங்கிக்  கிடந்ததைப்  பார்த்தான்.  வானம்  பார்த்த  பூமியில் குதிரைவாலியும், சாமையும், தினையும் சொங்கிப்  போயிருந்தன. மனசுக்குள் வாப்பாடு போட்டுக் கொண்டே ஆற்றங்கரைக்கு வந்து நின்று தலை துளும்பிக் கொண்டோடும் வெள்ளத்தை ஒரு பொழுது பார்த்தான். திரும்பி அரண்மனை போய் ஆள்களைக் கூட்டி வந்து, ஆற்றுத் தண்ணீரை வெள்ளாமை பூமிக்குத் திருப்பிவிட, கால்வாய் வெட்டச் சொல்லி வேலை நடத்த ஆரம்பித்தான். அவனது காக்காத் தலை நாரையாக மாறும் பொழுதுவரை வேலை நடந்தது. பல காலங்கள் நடந்து முடிந்த பிறகு, ஆசுவாசமாக ஆற்றில் இறங்கி முங்கினான். மேலெங்கும் அடிக்கும்  மண்வாசம்  ராமல் உடல் தளர்ந்து போய்க் கடவுளிடம் சேர்ந்தான்.

ஆனால், அதென்ன மாயக் கூத்தோ… கடவுளிடம் மூவரும் ஒரே சமயத்தில்தான் போய்ச் சேர்ந்தார்கள்.

அப்படின்னா, கடவுள் இவர்களில் யாருக்கு அந்த நெல்லிக்கனியைக் கொடுக்கறது ஞாயம்? விடுவியுங்க பாக்கலாம்.

அப்பையா திகைத்துப் போனார்.

காலத்தையும், கால மயக்கத்தையும் ஒன்று குழைத்துப் புதிராகச் சுழித்துப் போட்ட முடிச்சில் வசமாகச் சிக்கிக் கொண்டு விட்ட மூன்று பட்டம் வாங்கிய சீமைப்பட்டக்காரரின் முகத்தில் பரிதாபமும் பேதைமையும் எரிச்சலும்   கோபமும்  மண்டியது.

துளசிவாசனை மண்டையைக் குடைந்தது. ‘ஞாயத்துக்குப் பொழுதாகிக் கொண்டிருக்கிறதே’ என்று வெறுங்கைகளைப் பிசைந்தபடி, தவசத்தின் மேல் நின்று கொண்டிருந்தவனிடம், “கண்ணை மூடிட்டு கொஞ்சநேரம் சாந்தமா உக்காந்து ரோசனை பண்ணுங்க, விடை  தெரியும்…”  என்று  பலகைக்  கல்லை நகர்த்தி குதிர்வாயை மூடினாள் அவள்.

“பொம்மு பொம்மு… அதை எதுக்கு மூடறே…?” என்று அவர் சத்தம்போட,

“இருட்டிலேதான் வெளிச்சங் கெடைக்கும்…” என்று சொல்லி விட்டு குதிர் மேலிருந்து கீழே குதித்தாள் பொம்மக்கா.

**

எவ்வளவு நேரம் குதிருக்குள் அடைபட்டுக் கிடந்தாரோ, ராசாவும், மந்திரியும், குடிமகனும் அவரது சிந்தனையோட்டத்தில் புரண்டு புரண்டோடியதில் புதிர்க் கண்ணிகள் விடுபட்டுக் கொண்டேயிருந்தன. தான் கற்ற, கேட்ட அத்தனை வாதங்களையும் முன்னிறுத்தி யோசித்ததில், ஒரு தேர்ந்த சீமைப்பட்டக்காரரின் தீர்க்கத்தில், அந்தப் புதிருக்குள் நெளியும் முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ ஆரம்பித்தன.

மண்டையை இடித்துக் கொண்டிருந்த வலி சட்டென்று காணாமல் போய்விட்டது. அவருக்குள் பொங்கிக் கொண்டிருந்த பதட்டம் தணிந்து உடம்பெங்கும் பிடித்து விட்டது போல ஓர் ஆசுவாசம் தடவிக்  கொடுத்தது.  கூடவே,  ஞாயத்துக்குப் போக வேண்டுமென்ற நினைப்பு சட்டெனத் தலைதூக்க, பாய்ந்தெழுந்து குதிர் வாயைப் பலமாகத் தட்டினார்.

விரல் நொடிக்குள் குதிர் வாய் திறக்க, மேலே நின்றிருந்த பொம்மக்காளின் மீது சர்வ அலட்சியமாய் ஒரு பார்வையை வீசிவிட்டு. “அந்தக் கனியை மந்திரிக்குத்தாங் குடுக்கோணும்…” என்றார் அலட்டலாய்.

பொம்மக்காளின் முகத்தில் எல்லையற்ற சந்தோஷம் பீறிட்டடித்தது. துலாம்பரமான அவள் கண்களில் பெருமிதம் பொங்கச் சீமைப்பட்டக்காரரைப் பார்த்து தலை தாழ்த்தி வணங்கினாள்.

ஆனந்தமாய்த்  தலையை  ஆட்டிக்  கொண்டே,  அவசரகதியில் கூடையில் தவசத்தை வழித்துக் கொடுத்து விட்டு, ஞாயத்துக்குப் போகும் அவசரத்தில் சடுதியாக இறங்கியோடினார் அவர்.

முடியைக் கோதி முடிந்து கொண்டு, கங்கணத்தைத் தேடினார். அதுவேறு ஒரு புரையிலிருந்தது. எடுத்து வலங்காரமாய்ப் போட்டுக் கொண்டு வல்லவட்டம் எடுத்துக் கட்டினார். மடிப்பு மாறி வந்தது. மடிப்பைச் சரிசெய்து கட்டிக் கொண்டு, ஆடைகளை அணிந்த மாத்திரம், அவசரத்துடன் வாசலுக்கு விரைந்தார். இந்நேரம் வண்டி  கட்டிக் கொண்டு  நிற்கும்  ஆள்காரன், மாட்டுக்குப் புண்ணாக்குத் தண்ணி காட்டிக் கொண்டிருந்தான். பொழுது இறங்கிக் கொண்டிருந்தது.

அவருக்கு வந்த  ஆத்திரத்துக்கு அளவேயில்லை.  பட்டக்காரர் வசவு வார்த்தைகள் பேசக் கூடாது. அவனை எரித்து விடுவதுபோல ஆவேசத்துடன் பார்த்தவர், “ஏண்டா, சாயங்காலம் ஞாயத்துக்குப் போவோம்னு தெரியாதா… இன்னும் சாலாக்கம் பண்ணிட்டிருக்கறே…” என்று கோபமாய்க் கத்தினார். அவன் மலங்க மலங்க முழித்துக் கொண்டு சாளையில் தள்ளியிருந்த வண்டியை வெளியே இழுத்தான். நுகத்தடியில் தலையைப் பூட்டிக் கொண்ட மாடுகள் பழகிய தடம்போல, காஞ்சிக்கோயில் நாட்டை நோக்கி ஓடின.

மெல்ல இருட்டுக் கட்டிக் கொண்டிருந்தது. செம்மண் பாதை புழுதி கிளப்பிக் கொண்டு அலுங்காமல் ஓடிய வில்வண்டியில் உட்கார்ந்திருந்த சீமைப்பட்டக்காரர் ஆசுவாசமாய்ச் சாய்ந்திருந்தார். மாத்தாயியின் ஞாயம் அவரது சிந்தனையோட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்க, மாடுகளின் கழுத்துமணி மலங்கிக் கொண்டு அசைய, சில்லாம் பூச்சிகள் ரீங்காரம் பண்ண இருட்டின் சத்தத்திற்குள் முகம் புதைத்தார்.

வண்டி  ஊருக்குள்  நுழைந்ததும்,  ஊர்  எல்லையில் பட்டக் குடையோடு காத்திருக்கும் கொத்துக்காரரைக் காணோம். புறப்படும் போதிருந்த கோபம் மறுபடியும் தலைதூக்கியது. வண்டியோட்டி பதட்டமாய்த் திரும்பி அவரைப் பார்த்தான். இருட்டில் அவரது காதுக்கடுக்கன்  க்கங்காய் மின்னியது. “வண்டியை நேரா சபைக்கு ஓட்டு…” என்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

ஞாயசபை ஒரு ஈ காக்காயின்றி வெறிச்சென்றிருந்தது. அவர் திகைத்துப் போனவராய்ச் சுற்றுமுற்றும் நோட்டம் பார்த்தார். சபையின் விளக்கு மாடத்திலிருந்து   பம் பளிச்செனச் சிரித்தது. வண்டியோட்டி மேற்கொண்டு என்ன செய்வதென்று விளங்காமல், தளைக்கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவரைப் பார்த்து முழித்தான்.

அந்த வெறுமையைப் பிளந்து கொண்டு தூரத்தில் பாட்டுச் சத்தத்தின் சுதி மெதுவாகக் கேட்டது. சுற்றுமுற்றும் பார்த்தவர், வண்டியை அங்கு விடச் சொன்னார்.

அவர்களைச் சுதி நெருங்க நெருங்க, கோயில் மண்டபமும் சுற்று வட்டாரச் சனங்களின் கூட்டமும், கதைசொல்லியும் தெரிந்தனர். வண்டி மண்டபத்தின் முன் வந்து நின்றதும் சனங்கள் எழுந்து வந்து பார்த்தனர். “சீமைப்பட்டக்காரர் வந்திருக்காரு…” என்ற பேரோலி எழுந்தது. கூட்டம் திமுதிமுவென்று அவரைச் சூழ்ந்து கொள்ள, பெண்கள் நின்றவாக்கில் மண்ணில் விழுந்து கும்பிட்டார்கள். ஆண்கள் கை தூக்கிக்கொண்டு சேவித்தார்கள். அப்பையாவுக்கு இது போன்ற மரியாதை ஒருபொழுதும் கிடைத்ததில்லை. தன்மேல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த சனங்களின் அளப்பரிய அன்புக்கு முன்னால் எதுவும் புரியாமல் குழம்பிப் போய் நின்றார்.

முன்வரிசையிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்த கொத்துக்காரர், “அய்யா, சொல்லியனுப்பியிருந்தா நா வந்து நின்னுருப்பேனே… ஏதும் விசேசமுண்டுங்களா…?” என்று இடுப்புக் குறுகினார். பின்னாடியே பதட்டத்துடன் ஊர்ப் பட்டக்காரரும், பாளையத்துக்காரரும் ஓடி வந்தார்கள்.
அப்பையா சனங்களைக் கையமர்த்தி விட்டு, ஊர்ப்பட்டக்காரரிடம் தணிந்த குரலில், “ஏய்யா, இன்னிக்கு ஞாயம் இருக்குதில்லே…?” என்று இழுத்தார்.

“ஞாயமா? அதுதான் நேத்தே முடிஞ்சு போச்சே…” அப்பையா பக்கென்று அவரைப் பார்க்க, “நீங்க நேத்திக்குப் பேசின ஞாயத்திலே சொன்ன மாதிரி ஒரு சொல்லை, ஈரேழு லோகத்திலும் சொன்னதில்லேன்னு சனங்க கொண்டாடறாங்க…” என்று சிரித்தார் கொத்துக்காரர். அவரது வாயெல்லாம் வெத்திலைக் காவி நெறந்து கிடந்தது.

அப்பையாவுக்குக் கைலாகு கொடுத்துக் கூட்டிப்போய் பட்டக்காரர் கட்டிலில் உட்கார வைத்தார்கள்.

அறமும்  அதிகாரமும்  சமூகமும்  ஒரே  புள்ளியில்  இணையும் மனித வாழ்வைக் கலைத்துப் போட்டு ஒன்று சேர்த்த மதி நுட்பத்தை வியந்தோதினார் ஊர்ப் பட்டக்காரர். உறவுச் சிக்கல்களில் விழுந்திருக்கும் சுருக்குகளை லாவகமாக அவிழ்த்தெடுத்த யூகத்தை அதிசயம் பேசினார் கொத்துக்காரர். “ஆணும், பெண்ணும் சேர்ந்து அமைவதுதான் குடும்பம். அதில் யார் தப்புச் செய்தாலும் அந்த அமைப்பைப் பாதிக்கும்” என்ற சொல் மூலம் இத்தனை கால வம்ச வழமுறையையே மாற்றிப் போட்டு விட்ட கெட்டிக்காரத்தனத்தை பாளைக்காரயர் பேசப்பேச, அதுவரை விளங்காத சங்கதியின் சூட்சுமம், மெல்ல மெல்ல விடுபடுவது போலத் தோன்றியது அப்பையாவுக்கு.

“நீங்க அப்பிடி ஒரே போடா போட்டதாலதான், தாசப்பன், தான் கொளுந்தியாளைத் தொட்ட வெவகாரத்தைச் சொல்லி ஞாயத்தை ஒத்துக்கிட்டான்… இல்லீன்னா மாத்தாயியல்லே மாட்டியிருப்பா…” என்று அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

பலமான யோசனையில், தான் அணிந்திருக்கும் ஆடைகளை மெதுவாக முகர்ந்து பார்த்தார் அப்பையா. அவர் எதிர்பார்த்தது போலவே, துளசிவாசம் பளீரென்று கண் சிமிட்டியது. பிரமை அடித்துப்   போனவராய்   பதட்டத்துடன்   முகத்தின்   மோவாய்க் கட்டையை   நீவிப்   பார்த்தால், சற்றுமுன் அம்பட்டன்   சிரைத்த நெகுநெகுப்பு மாறாமல் அப்படியே இருக்கிறது. தனது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் இவ்வளவு காரியங்கள் எப்படி நடக்குமென்று குழப்படியுடன் தலை கிறுகிறுவென்று சுற்றியது அவருக்கு.

சட்டென, பொம்மக்கா போட்ட புதிர் அவரது மண்டையில் அலையடித்தது. அந்தப் புதிரோட்டத்தின் சுருக்குகளில் என்றென்றைக்கும் தப்பிக்காது மாட்டிக் கொண்ட தனது ஆகிருதியைத் தள்ளி நின்று பார்த்தார். தன்னையே புதிராக மாற்றிச் சதுராடியிருக்கும் அவளது கால விளையாட்டைக் கண்டு நிலைகுலைந்து போனார். உடம்பின் மயிர்க்கால்களெங்கும் நெட்டுக்குத்தாய் விறைத்து நின்றன.

சுற்றிலும் சனங்கள் தங்களையே பார்த்துக் கொண்டிருக்க கதைசொல்லி   எதுவும்   பேசாது   உட்கார்ந்திருந்தான்.  சூழலை உணர்ந்தவராய், அவனைப் பார்த்துச் சைகை காட்ட, சப்ளாக் கட்டைகள் மகிழ்ச்சியுடன் குதித்தன.

சீமைப்பட்டக்காரருக்கு வந்தனம் சொல்லிப் பாட ஆரம்பித்தான். “அப்பையா ஞாயம் திப்பிய்யா… அதாவது தெய்வ வாக்கு…” என்று அவன் ராகமெடுத்துச் சொல்ல, குலவை போட்டுக் கொண்டாடினார்கள் சனங்கள்.

அவரது கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. மண்வாரித் தூற்றிய மக்கள் கண்ணில் வைத்துப் போற்றுகின்ற காட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்தச் சூத்ரதாரியை உடனே போய்ப் பார்க்க வேண்டும் போல ஒரு வேகம் கட்டுக்கடங்காமல் எழுந்தது. ஓடிப்போய் பொம்மக்காளின் கால்களில் மண்டியிட்டு அழ வேண்டும் போலிருந்தது அவருக்கு. கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமாகக் கொடுக்க வேண்டும். இந்த மூடன் அறியாது செய்த தவறுகளையெல்லாம் மன்னித்துவிடு. அவளது தோளில் விழுந்து கொண்டு தேம்ப வேண்டும். அவளைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டும். அவளது வல்லமை தெரியாத தனது மூடத்தனத்தை புதைத்து விட்டு அவளது கீர்த்தி பாடிக் கொண்டு நாடெல்லாம் சுற்றிவர வேண்டும்.

கதைசொல்லி பெருங்குரலெடுத்துப் பாடுகிறான்.

“ஓ கர்ண மகாராசா… இந்தச் சாகாவரம் கொண்ட கனியைச் சாப்பிடுங்கள் என்று முனிவர் கனியைத் தந்து ஆசீர்வதிக்க, வாங்கி உண்கிறான் கர்ணன். ஆனால், கர்ணனைப் போரில் கொல்லும்போது, அந்தப் பழத்தின் பலன் எங்கே என்று கேட்க வேண்டாம் மகாசனங்களே… ஏனென்றால், சாகாவரம் என்பது இந்த உடம்பு உயிரோடிருப்பதல்ல. நம்முடைய புகழும், கீர்த்தியும், செயல்பாடுகளும் காலங்காலமாய் உயிரோடிருப்பதுதான், அந்தப் பழத்தின் பலன்…” என்று சொல்லிக் கொண்டே போக, அந்தப் பொழுதில்,  புதிரின் இன்னொரு   முடிச்சு   அப்பையாவுக்குள் அவிழ்கிறது.

பதறிப்போனவராய் சடக்கென எழுந்தார் அவர். கட்டில் சடசடத்து ஓசை கூட்ட பதட்டத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “அவசரமாய் ஊருக்குப் போகோணும்… ஒரு காரியத்தை மறந்து விட்டேன்…” என்று போக்குச் சொல்லிவிட்டு வண்டியோட்டியைத் தேடினார். கதையோடு தலையாட்டிக் கொண்டிருந்த வண்டியோட்டி உடனே ஓடிப்போய் வண்டி கட்டினான்.

ஊர்ச்சனங்கள் மிகுந்த மரியாதையுடன் சீமைப் பட்டக்காரரை வழியனுப்பி வைக்க, வண்டியைப் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் ஓடிவர, மாடுகள் வந்த பாதையில் திரும்பி ஓடின.

**

இரவின் அந்தகாரத்துக்குள்ளாக ஓடிக்கொண்டிருந்தது வண்டி. மாட்டின்   கழுத்து   மணிகள்   பதட்டத்துடன்   ஒலிக்க,   வண்டியை இன்னும் வேகமெடுக்கச் சொன்னார் அப்பையா. கால்களும் மனசும் பரக்கப் பரக்க, வல்லவட்டமும் வலங்காரக் கங்கணமும் கிலேசமுற்றுக் கிடக்க, இருப்புக் கொள்ளவில்லை அவருக்கு. சாட்டவார்க்குச்சியின் வீச்சில் மாடுகள் காற்றாய்க் கடுகின. வெறுமையைப் பிசைந்து கொண்டு வழித்தடத்தில் கவிந்திருக்கும் இருட்டையும், வானத்தையும் துழாவினார். மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

முடிவு முதலிலேயே தெரிந்துவிட்ட ஒரு அபாயமான பகடையில் தன்னையே பணயம் வைத்து ஆடியிருக்கிறாள் பொம்மக்கா என்பதை  உணர்ந்து  விட்ட  அப்பையா,  ஆட்டத்துக்கு  வெளியே இருந்த சூட்சுமக் கயிற்றில் தான் மாட்டிக் கொண்ட கோலத்தை எண்ணியெண்ணி மருகினார். இருட்டுக் கூட்டியிருந்த பொழுதைக் கிழித்துக் கொண்டு மாடுகளின் நிதானத்தில் பயணம் ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தது.

விடிகாலையில் வீடு வந்து சேர்ந்தது வண்டி. கட்டுத்தரையில் சாணத்தை மிதித்துக் கொண்டு எருமை மாடுகள் நின்றிருந்தன.

வண்டியிலிருந்து குதித்தோடி வீட்டுக்குள் நுழைந்தார் அப்பையா. மாடத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு, எண்ணை காணாமல் மங்கிக் கொண்டிருக்க, அவரது மகன் கட்டிலில் முடங்கியிருக்க, பொம்மக்காளின் பாய் மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவம் பொம்மக்காளைக் காணோம்.

சட்டென நினைவுக்கு வர, குதிர் மேல் ஏறினார். குதிர் வாய் பலகைக் கல்லால் மூடப்பட்டிருந்தது. பதட்டத்துடன் கைகள் நடுங்க, அதை நகர்த்தினார்.

இருட்டில் தவசத்தோடு தவசமாகக் கிடந்தாள் பொம்மக்கா.

*****

“குதிர்லேயே தெய்வமாயிட்டா பொம்மக்கா… ஞாயத்துக்காக உசுரையே குடுத்த அந்தத் தெய்வத்தோட வம்சம்தான் நாம” என்றாள் பாட்டி.

ஞாயத்தைக் காக்கதற்காகச் சீமைப்பட்டக்காரர் வேசங்கட்டிக் கொண்ட போன அய் கம்தான் ‘புத்திக்கல்லு போடறது’ என்றாள். பிறந்த ஒவ்வொரு குழந்தையும் பொம்மக்காளைப் போல நீதிநெறி முறைகளுடன் வாழவேண்டுமென பொம்மக்காளே வந்து புத்தி சொல்கிற மாதிரிதான் இந்தச் சாங்கியம் என்று வித்தாரமாக விளக்கிச் சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.

வெளியே தூறிக்கொண்டிருந்த மழை பலமாகப் பிடிக்கத் தொடங்கியது.

***************

 

(இலக்கியச் சிந்தனை விருது பெற்ற கதை)

2 thoughts on “பொம்மக்கா”
  1. ஒரு பெரும்புதினத்திற்கான கதைக்களமும் காலமும் விரிந்து திறக்கிற திணை முயங்கும் பெருவாழ்வு பொம்மக்காவினுடையது.

    இதை இன்னும் விரித்து புதினமாக மாற்ற வேண்டும் தோழர்.

  2. நீண்டகாலமாக படிக்க நினைத்த சிறுகதை பொம்மக்கா. இந்த சிறுகதை அற்புதமாக இருக்கிறது. வேறு என்ன சொல்ல, கதை சொன்ன விதமும் கதை சொல்லும் சேதியும் என்றைக்கும் நினைவை விட்டு நீங்காது. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page