• Thu. Sep 21st, 2023

வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு….

ByGouthama Siddarthan

Aug 2, 2022
  • கௌதம சித்தார்த்தன்

 

அமரந்தாவும் நானும், அதிகாலை நடை செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்த உஷைப் பொழுது, என் பயணத்தை அடியோடு திசை மாற்றிய நாள்.

நானும் அவளும் வீட்டின் வெளிக் கதவைத் திறந்தோம், பளீரென்று என் கண்களில் வெட்டியது வெண்ணிற வெறுமை! ஒரு கணம் ஒன்றும் விளங்கவில்லை. அதிகாலைப் பனி வெளியெங்கும் கப்பிக் கிடக்கிறது என்று நினைத்தேன். கடவுளே! கண்களை அழுந்தத் தேய்த்துவிட்டு சுற்றிலும் பார்த்தேன். சுற்றுப்புற வெளியெங்கும் மறைந்து வெள்ளியடித்த நீண்ட சுவர்கள்போல வெண்மை, வெண்மை மற்றும் வெறுமை. திகைத்து நின்ற என் தோளைத் தட்டிய அமரா, நடக்கச் சொன்னாள்.

நான் நடக்க நடக்க வெண்ணிற வெளி விரிந்து கொண்டே போனது. நாங்கள் தினமும் பார்க்கும் எந்தக்காட்சியும் இல்லை. நீண்ட அசுத்தமான சாலைகள், கான்கிரீட் கட்டிடங்கள் , மரம், செடிகள், தெருநாய்கள், பறவைகளின் கீச்சொலி, வாகனங்களின் இரைச்சல், அதிகாலை நடையாளர்களின் இயக்கம் எதுவுமின்றி, நானும் அமராவும் பின்னே வெறுமையும்.

என் திகைத்த நடையினூடே அக்கணம் சிறகடித்து உள்ளே நுழைந்தது சிறு மஞ்சள் வண்ணத்துப் பூச்சி! அமரா, கைகளை நீட்டி அதைப் பிடிக்க முயல, அது விலகி சிறகடிக்க அந்த வெண்ணிற கேன்வாஸில் ஒரு ஓவியக் கீற்றலைப்போல அதைத் துரத்தினோம்.

அக்கணம், எனக்குள் சுவாங்ஸியின் கவிதை வரிகள் முகில்த்தன. “நான் வண்ணத்துப் பூச்சியைக் கனவு காண்கிறேனா? அல்லது வண்ணத்துப் பூச்சி என்னைக் கனவு காண்கிறதா? ”

சமீப காலமாகவே ஒரு பெரும் வெறுமை என்னை விழுங்கிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், சிறு, பெரு, நடு பத்திரிக்கைகள் என எல்லோரையும் பகைத்துக் கொண்டாயிற்று. தனிமை, கனத்த இருளாய் என் மேலோங்கும் பரவி மூழ்கடித்தது சூன்யத்தின் வெறுமை. கை விரல்கள் பரபரக்கின்றன எழுதுவதற்கு. மனசோ பெரும் விரக்தியிலும் கசப்புணர்வுகளிலும் ஊறிக்கிடக்கிறது. என் எழுத்தை பிரசுரிப்பது எந்தப் பத்திரிகை? நண்பர்கள் என்று யாரும் இல்லை. திரும்பிய புறமெங்கினும் நட்பு முகமூடியணிந்த துரோகிகள், பகைவர்கள். வஞ்சகம், அழித்தொழிப்பு.

எழுதுவதை நிறுத்தி 3 வருடங்கள் ஆயிற்று.

மீண்டும் உன்னதம் இதழை ஆரம்பித்து செயல்படலாம் என்று இறங்கினால் பெரும் மனச் சோர்வு கப்புகிறது.

சரி நீ தீவிரமாக பழையபடி எழுதுகிறாய் என்றே வைத்துக் கொள்வோம். அதை யார் வெளியிடுவார்கள்? நீதான் எல்லோரையும் பகைத்துக் கொண்டாயிற்றே.. என்று எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்த வெண்கலக் குரலில், ஒரு குறுக்கு வெட்டு அவ்வப்பொழுது விழும்.

இந்த நிலமே வேண்டாம்.. என்னைக் கண்டுகொள்ளாத இந்த தமிழ் இலக்கியச் சூழலே வேண்டாம்.. சர்வதேச இலக்கியச் சூழலை நோக்கி நகரலாம்.. தமிழ் மொழியைப் பீடித்திருக்கும் கேவலமான இந்த அருவருப்பான சூழல் சர்வதேச இலக்கிய சூழலில் இருக்காது. அங்கு எழுத்தின் சிறப்பு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்ற எண்ணங்கள் எனக்குள் ஓடியதும் ஓராயிரம் வேழங்களின் பலம் திமிர்ந்தெழும்.

வாழ்வின் பெரும் பகுதியை இந்த அருவருப்பான குறுங்குழுவாதங்களில் பலியாக்கிய 50 ஐத் தாண்டிய நிலையில் – எந்த ஒரு இயக்கமோ, நண்பர்களின் உதவியோ இன்றி தனியொரு மனிதனாக, எந்தவிதமான தொடர்புகளுமின்றி சர்வதேச அரங்கில் நுழைவது சாத்தியமா?

இதேபோன்ற ஒரு வெறுமையை உடைத்து கடந்த வருடங்களில் சர்வதேச தளத்திற்குள் மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் நுழைந்தேன். நொட்டை விட்டுக்கொண்டு படித்த New Yorker, Paris Review, Granta.. ஆகிய இதழ்களுக்கு படைப்புகள் அனுப்பினேன். Words Without Borders ஆசிரியர் நட்பாகி நெருக்கமானார். திறந்த மனதுடன் கூடிய உரையாடல்களையும் எதிர் உரையாடல்களையும் நிகழ்த்தினோம். ஒருகட்டத்தில் உரையாடல் முரண்கள் நிரம்பிய விவாதமாக மாறியது.

“உலகின் சிறுசிறு மொழிகளில் எழுதுகிற படைப்பாளிகளையெல்லாம் தேடிப்பிடித்து வெளியிடுகிற நீங்கள், உலகின் பழமையான செம்மொழியான தமிழ் மொழிப் படைப்புகளை இன்றுவரை கண்டுகொள்ளவே இல்லை.. இது என்ன வகை அரசியல்?” என்றேன். அவர் உடனே மாய்ந்து மாய்ந்து விரிவாக கடிதம் எழுதினார். தமிழ்ப் படைப்புகளை தங்கள் இதழ் வெளியிட்டிருப்பதாக லின்க் அனுப்பி வைத்தார். அது தமிழ் எழுத்து குறித்து லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம் என்பவர் எழுதிய கட்டுரை.

நான் அவருக்கு எழுதினேன் : “அன்புள்ள ஆசிரியரே, இது தமிழ் படைப்பு அல்ல. தமிழ் படைப்பு குறித்து ஒருவர் எழுதிய மேலோட்டமான கட்டுரை. அதுவும் இந்த கட்டுரை எழுதியவருக்கும் எங்கள் நிலத்திற்கும் சம்பந்தமில்லை. எங்கோ தொலைவில் இருந்துகொண்டு கேட்டதை வைத்து அள்ளி விட்ட இக்கட்டுரை, தமிழ் நிலத்தின் ஆன்மா அல்ல. எங்கள் நிலத்தில் ரத்தமும் சதையுமாக இருக்கும் ஒருவரால்தான் எங்கள் மொழியின் ஆன்மாவை வெளிப்படுத்த முடியும். இது ஒரு லாபியிங் அவ்வளவுதான்.

உங்கள் தற்கால ஸ்பானிஷ் எழுத்தைப்பற்றி ஸ்பானிஷ் எழுத்தின் பிரதிநிதியாக நான் ஒரு சர்வதேச பத்திரிகையில் எழுதி அதுதான் ஸ்பானிஷ் எழுத்தின் பார்வை என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டிருந்தேன்.

அதன் பிறகு அவரிடமிருந்து பதிலில்லை. உலகின் முதல் 10 இலக்கிய இதழ்களின் தரவரிசையில் வரும் ஆசிரியர், யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாத சர்வதேச நட்பு அந்த நொடியில் முறிந்து போனது.

உடனே மனம் குமைந்து மூலையில் போய் ஒதுங்கிடாமல், இதற்கு ஒரே தீர்வு நாமே ஒரு சர்வதேசபத்திரிகை ஆரம்பிப்பதுதான் என்று பெரும் ஆவேசத்துடன் Alephi என்கிற இணைய இதழைத் துவக்கிச் செயல்பட ஆரம்பித்தேன்.

அப்பொழுது அறிமுகமானவர்தான் ஸ்பானிஷ் விஞ்ஞானப் புனைவு எழுத்தாளர் சால்வடார் பயாரி.

எனக்கு சிறுவயதிலிருந்தே வி.பு. எழுத்துக்கள் மற்றும் திரைப்படங்கள் பிடிக்கும். அதிலும் “காலப்பயணம்” என்னும் தொன்மத்திற்கு நான் அடிமை. உன்னதம் இதழுக்காக காலப்பயணத்தை மையமாகக் கொண்டிருந்த ரே பிராட்பரி மற்றும் ஆல்ப்ரெட் பெஸ்டரின் கதைகளை தேர்வு செய்தபோது அதற்குள் ஒரு சர்வதேச விமர்சனம் இருப்பதை உணர்ந்தேன். அதை முன்வைத்து 2008 ல் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டேன். பெரும் பாராட்டுக்களும் ஆதரவும் கிடைத்தன.

2016 ல் அதை மேலும் “காலப்பயண அரசியல்” என்ற தலைப்பில் செழுமைப்படுத்தினேன். அது தனி நூலளவு நீண்டது. அதை ஆங்கிலத்தில் Political travails of Time travel என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்து சர்வதேசப் பத்திரிகைகளுக்கு அனுப்பியிருந்தேன். “கட்டுரை மிகவும் நீளம், நூலாக வெளியிடுங்கள்” என்றன. கட்டுரையைப் படித்த சல்வடார், “கட்டுரை மிகவும் அற்புதம். நான் ஸ்பானிஷில் மொழிபெயர்க்கிறேன்” என்றார்.

சர்வதேச இலக்கிய தளத்தையே அதகளமாக்கிக் கொண்டிருந்த லத்தீன் அமெரிக்கப் பெருவெடிப்பின் புதிர்வழிச் சுழலுக்குள், இன்று என் சொற்கள்…

என் நவீன இலக்கியப் பார்வைகளைக் கட்டமைத்த போர்ஹேஸ், ஃபுயண்டஸ், கொர்த்தஸார் போன்ற ஆதர்சங்களின் மொழிநிலத்தில் என் சொற்கள்…

பால்வெளியின் புதிர்வழிப்பாதைகளில் எல்லையற்ற ஆநந்தத்துடன் கழிநடம் புரிந்தேன்.

சாதிச்சண்டைக்காக இந்தியத்திருநாடே ஒன்று கூடி சர்வதேச அரங்குகளுக்கு வழியனுப்பிவைத்த வல்லேன் அல்லன். சர்வதேச மீடியாக்களை உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு லாபி செய்து தங்களது குழுக்காரர்களை மாத்திரமே உலக அரங்குகளில் அறிமுகம் செய்வித்த மேனா மினுக்கிகள், பித்தனையும் பிரமீளையும் காவு வாங்கி செல்லப்பாவையும் பரந்தாமனையும் ரத்தம் குடித்து இலக்கிய அறுவடை செய்து கொண்டிருக்கும் இலக்கிய பலிபீடங்கள், இவர்கள் எவரொருவருடைய சிறு உதவியுமின்றி என் எழுத்தின் வீரியத்தை மட்டுமே துணையாகக் கொண்டு தனியொருவனாக சர்வதேச இலக்கிய தளத்திற்குள் நுழைந்தேன். தீவிர இலக்கிய வாசகனே, குறித்து வைத்துக் கொள். இதுதான் தற்கால தமிழின் நவீன இலக்கிய வரலாறு.

காலப்பயணம் குறித்து உலகிலேயே மாபெரும் விஞ்ஞானிகளும் அறிவு ஜீவிகளும் சொல்லாத ஒரு புதிய விஷயத்தை திராவிடக்கலாச்சாரங்களால் துண்டாடப்பட்ட ஒரு பரிதாபமான மொழியை ஜீவித்து வரும் நபரால் என்ன புதிதாகச் சொல்லிவிட முடியும் என்று என்னை அலட்சியப்படுத்தாமல், ஒரு சிறு துரும்பிலும் சிறு துகளான என் வருகையை வரவேற்று, என் எழுத்துக்களை வாசிக்க ஆர்வம் கொண்டிருக்கும் சர்வதேச வாசகனுக்கு என் உணர்ச்சி மிகுந்த வணக்கம்.

அவர் ஒரு வாரத்தில் முடித்து அனுப்பிய ஸ்பானிஷ் மொழியாக்கத்தை நூலாக வடிவமைத்து கிண்டிலில் வெளியிட்டேன். ஸ்பானிஷ் நண்பர்களின் பாராட்டு மின்னஞ்சல்களும், கிண்டிலின் விற்பனைத் தொகையும் உற்சாகமூட்டினாலும், என் விரைவு, ஒரு சர்வதேச ஆங்கில இணைய இதழ் நடத்த பெரும் பொருளாதாரம் தேவைப்படுவதை உணர்ந்து தடைப்பட்டது.

என் எல்லா செயல்பாடுகளும் தேக்கமடைந்து கப்பிய இந்த வெண்ணிற வெறுமையைப் பிளந்துகொண்டு அன்றைக்கு வந்தவன்தான் சாத்தாவு!

எனக்கு சர்வதேச இலக்கியத் தொடர்புகளை அறிமுகப்படுத்தியவன் சாத்தாவுதான். இவன் ஜெர்மன் புகழ்பெற்ற காவியமான பாஸ்ட் – ல் வருகிற மெஃபிஸ்டோபில்! டாக்டர் பாஸ்டை உலகப்புகழ் பெறுகிறவனாக உருவாக்கும் சாத்தான்!

எத்தனை நாளைக்குதான் சென்னை புத்தக கண்காட்சியையே கலக்கிக் கொண்டிருப்பது? கொஞ்சம் புதுமையாக உலகக் கண்காட்சியை கலக்கினால் என்ன? என்று ஆசை மூட்டினான்.. உலகளவில் முக்கியமானது ஜெர்மன் பிராங்பர்ட் கண்காட்சிதான். சரி அங்கு என்னுடைய 10 தொகுப்புகளை ரிலீஸ் செய்வது என்று முடிவுசெய்து களத்தில் இறங்கினேன்.

இதெல்லாம் சாத்தியமா? சாத்தியம் என்றான் சாத்தாவு.

காலப்பயண அரசியல் நூலின் மொழியாக்கம், இத்தாலி, போர்த்துக்கீஸ், சீனா, ஃபிரெஞ்சு என்று மொழிகள் கூடிக்கொண்டேபோயின. சிறுகதைகள் அரபியில் உருமாறிக் கொண்டிருந்தன. இந்த மொழிபெயர்ப்பாளர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். உலகப்புகழ் பெற்ற இலக்கிய படைப்புகளை மொழியாக்கம் செய்தவர்கள்.

ஜெர்மன் புத்தக காட்சியில் ஜெர்மன் மொழியாக்கத்தில் ஒரு கவிதை நூல் வந்தால் சரியாக இருக்கும் என்று உசுப்பேற்றினான் சாத்தாவு. கவிதைகளின் சொற்கள் ஒரு வண்ணத்து பூச்சியின் வசீகரத்தோடும், பசிய புலியின் பாய்ச்சலோடும் தீராத ஊற்றெடுப்பாக எனக்குள் பொங்கி வழிந்தன.

சர்வதேச அரங்கில் வெளியாகும் என் கவிதைகள் பத்தோடு பதினொன்றாக இருப்பதில் உடன்பாடு இல்லை. உலகின் எந்தமொழியிலும் இதுவரை வெளிவந்திராத புத்தம் புதிய பார்வையுடன் இருந்தால் மட்டுமே கவனம் பெறும் என்ற உள்ளுணர்வு எனக்குள் ஒடிக்களிக்க, அற்புதமான தரிசனமாக 7 பகுதிகள் கொண்ட ஒரு காவியமாக உருப்பெற்றது.

இதற்கு “காலப்புதிர்வழி” என்று தலைப்பிட்டேன். ஆனால் இந்த கருத்தாடலையும் தாண்டிய ஒரு தொன்மம் இதற்குள் செயல்படுவதை தீவிர வாசகன் அவதானிப்பான்.

ஆங்கில மொழியாக்கத்தில் இந்தக் காவியத்தை Timebyrinth என்று பெயரிட்டேன். அதாவது காலத்தையும் புதிர்ச் சுழல்களையும் (Labyrinth) இணைத்து புதியதாக ஒரு சொல்லை உருவாக்கியிருக்கிறேன். மனிதன் மீதும், மனித வாழ்வியல் மீதும் சுழற்றியடிக்கும் தாக்குதல்களை அடையாளப்படுத்தும் Metaphor ஆக இந்த கவிதையில் செயல்படுகிறது காலம்.

ஆக, காலத்தை மையமாகக் கொண்டு காலத்தையும் புதிர்வழியையும் இணைத்து ஆங்கிலத்தில் இதுவரை கையாளப்படாத ஒரு புதிய சொல்லை உருவாக்கினேன்: “Timebyrinth”

இதனுடைய விரிவான அர்த்தம் Time Labyrinth. இதை கவித்துவமான சொல்லாடலாக Timebyrinth என்று உருவாக்கியுள்ளேன் .

கவிதைகளை ஜெர்மனிலும், பல்கேரியனிலும், ரஷ்யனிலும் மொழிபெயர்த்தார்கள்.

கவிதைகளின் ஜெர்மன் மொழிபெயர்ப்பாளர் ஜெஃப்ரி சி. ஹோவஸ் எழுதிய கடித வரிகள்: “தத்துவப் பார்வைகளிலும், புதிய தரிசனங்களிலும் ஈடுபாடு கொண்டிருக்கும் ஜெர்மன் வாசகர்களிடம் உங்கள் கவிதைகள் என்னவிதமாய் தோற்றமளிக்கும் என்பதைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்! கவிதைகளின் புராண மற்றும் வரலாற்று பின்னணியில் அமைந்துள்ள உங்கள் கவிதைகள் என் மொழிபெயர்ப்புக்கு பெரும் சவாலாக இருக்கின்றன.

நான் “Timebyrinth” பற்றி கேட்க விரும்புகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது!.ஜெர்மனியில் Zeitbyrinth என்று வைத்துள்ளேன். இந்தச் சொல் உங்கள் கவிதையின் அர்த்தத்தில் இன்னும் அதிகம்.”

ஆனால், இவ்வளவு முஸ்தீபுகளுடன் செயல்பட்டும் என்னால் ஜெர்மன் புத்தகக் காட்சிக்கு போகமுடியவில்லை. நான் இதுவரை தனியாக வெளியில் போனதில்லை. வேறு நண்பர்களின் உதவியும் (பணம் அல்ல) கிட்டவில்லை. பெரும் தயக்கமும் கலவரமும் சூழ்ந்து கொண்டது.

சரி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்..

ஒரு வழியாக எட்டு மொழிகளில் நூல்கள் வந்துவிட்டன. அடுத்த 2 நூல்கள் சென்னை புத்தக காட்சிக்குள் வந்துவிடும். என் கவிதைகளின் ரோமானிய மொழியாக்கமும், கிரேக்க மொழியாக்கமும்.

இந்த நிகழ்வுகள் தந்த உற்சாகத்திலும், சாத்தாவுவின் மாந்திரீக யதார்த்தத்திலும் அடுத்து, நாவலில் இறங்கி விட்டேன்..

இப்பொழுது அதிகாலை நடையில் நீள்வது அமரந்தாவின் தோளில் சிறகு பரத்திய வண்ணத்தியின் பன்னிறச் சிறகடிப்பு!

 

(விகடன் தடம் இதழில் வெளிவந்த கட்டுரை. டிசம்பர், 2018)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page