- கௌதம சித்தார்த்தன்
இத்தாலிய மொழியில் எழுதும் பத்தி
(கடந்த வாரம் வந்திருந்த கட்டுரையில் நான் எழுதியிருந்த Klingons மொழி பற்றிய கருத்திற்கு, தற்கால விஞ்ஞான புனைகதை எழுத்தாளரும், விஞ்ஞான புனைவுகளுக்காக உலகளவில் வழங்கப்படும் நெபுலா விருது பெற்றவரும், உளவியலாளருமான திரு. லாரன்ஸ் எம். சோஹன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்திருந்தார் : “I’m sorry you find birthday greetings in Klingon to be annoying. No one seems to care that the same phrase “Happy birthday” is repeated to people on their birthdays, so why should the same phrase in Klingon (which literally translates as “Enjoy your birthday!”) be problematic.”
அவருடைய கருத்தை மதிக்கிறோம். மிக்க நன்றி.)
கடந்த வாரம் வெளிவந்திருந்த கட்டுரையில் வண்ணார் சமூகம் குறித்து எழுதியிருந்த பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. அவர்களது வாழ்நிலை குறித்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று விஞ்ஞான புனைகதை எழுத்தாளரும் விமர்சகருமான மஸிமோ ஸூமேர் எழுதியிருந்தார்.
உலக இலக்கியத்திற்கு ஒப்பான ஒரு காட்சியை அறிமுகப்படுத்தக்கூடிய அற்புதமான தருணம் கிடைத்தது என்று எழுத அமர்ந்தபோது, Valentine’s Day கொண்டாட்டங்கள் திசை திருப்பி விட்டன. அதிலும் இத்தாலியில் இந்த “La Festa degli Innamorati” விழாவில் கொண்டாடும் வினோதமான முறை எனக்குள் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
இத்தாலிய எழுத்தாளர் Federico Moccia வின் “Ho voglio di te” நூலில் உருவகப்படுத்தியிருந்த “இரு பூட்டுகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து பூட்டுப் போட்டு விட்டு, சாவிகளை ஆற்றில் வீசியெறிந்து விடும்” metaphor எனக்குள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாலி முழுக்க கம்பங்களிலும், பாலங்களிலும், ஆற்றின் கரைகளிலும் பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி ஒரு காவிய கணமாக என் கண்ணில் மின்னலடிக்கிறது.
அந்த மின்னற் பொழுதின் தூரம், நான் சின்னஞ் சிறுவனாக இருந்த காலங்களில் எங்கள் ஊரில் நிகழ்ந்த, அற்புதமான ஒரு காவிய கணத்திற்குள் என்னை நெட்டித் தள்ளுகிறது. காடுகளில் சடைசடையாக படர்ந்திருக்கும் குமிட்டி காய்களின் மஞ்சள் நிறம் என் கண்களில் குளிர்கால வெயிலை அழைத்து வருகிறது.
புகழ்பெற்ற இத்தாலியக் கவி ஆளுமை ஸீசரே பவேஸ் – ன் “We do not remember days, we remember moments.” என்னும் சொற்கள் எனக்குள் பெரும் அதிர்வுகளாக மாறி,
இந்தக் குமிட்டிக் காய், என் பதின் பருவ வாழ்நிலைக் காலத்தில் ஒரு காவியக் காயாக மாறிய வரலாற்றின் தருணங்களை உங்களிடையே பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றன. ஓ கடவுளே, என் சொற்களின் வீச்சு, “lucchetti metaphor” இல் மூழ்கியிருக்கும், இத்தாலியின் Tiber River – மீது அலைமேடுகளை உண்டாக்கும் வல்லமையைத் தருவாயாக!
எங்கள் தமிழ்நாட்டில் Valentine’s Day கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. சென்னை போன்ற நகரங்களில் ஒரு சிறு சலசலப்பு. அவ்வளவுதான்.
காதலர் தினம் என்று அடையாளப்படுத்தப்படும் இந்தக் கொண்டாட்டத்தை, தமிழின் பாரம்பரியமான விழாவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தை பொங்கல் விழாவின், நான்காவது நாளை “காணும் பொங்கல் நாள்” என்ற பெயரில் கொண்டாடுவோம்.
கிராமங்களில் இந்த காணும் பொங்கல் நாள் விழாக்கள் அமர்க்களமாக நடக்கும்!
இந்நாளில் மக்கள் தங்களது மூதாதையர்களின் கோயில் சமாதிக்குச் சென்று வழிபடுவதும், தங்கள் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வதுமாகக் கொண்டாடுவார்கள். எல்லாவற்றையும் விடவும் முக்கியமான விஷயம், எங்கள் கிராமத்து இளைஞர்களும், இளைஞிகளும் எங்கள் ஊருக்கு அருகாமையில் ஓடும் காவிரி ஆற்றில் குமிட்டிக் காய்களை வீசியெறிவார்கள்.
ஆற்றின் அலைமேடுகளில் சுழன்று சுழன்று மிதக்கும் காய்களின் சுழற்சி, இருகரைகளிலும் நின்று ஆரவாரிக்கும் மக்களின் மனதில் புகுந்து கிறக்கத்தை ஏற்படுத்த, பெரும் உற்சாகத்துடன் ஆண்களும், பெண்களும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
இந்த குமுட்டிக் காய்கள் என்பவை நாட்டுப்புறங்களில் உள்ள காடுகளில் விளைந்து கிடக்கும் காய்கள். இவைகளின் ஊண் ஒருவிதத்தில் மருத்துவக் குணம் கொண்டது. கைகால் வலியை போக்கி உற்சாகமூட்டும் நிவாரணி. ஆனால், மக்களிடையே மருத்துவ அடையாளத்தையும் தாண்டி, முன் நிற்பது இதன் காதல் கதை தான் ! .
இந்தக் காணும் பொங்கல் நாளை, எங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். எங்கள் பகுதிகளில் பிரசித்தமானது இந்த “ஆற்றில் குமிட்டிக் காய் வீசுதல்” என்னும் நிகழ்வு. அது ஒரு கிராமத்து காதல் விழா!
என் சின்னஞ்சிறு வயதில் அந்த நிகழ்வை அவ்வளவு பரவசத்துடன் ரசிப்பேன். நுரை சுழித்தோடும் ஆற்றின் அலைமேடுகளில் மிதக்கும் காய்களின் மஞ்சள் நிறத்தில் வெயிலின் கிரணங்கள் பட்டு பொன்னிறமாக ஜொலிக்க, அந்த நீர்நிலையையே தங்கப்பாலமாக மாறிவிடும் பேரழகில் ஊர்மக்களோடு சொக்கிப்போய் நின்றிருப்பேன்.
என் சின்ன வயதுப் பிரபஞ்சத்தில் ஒரு பெரும் புதிரும், அற்புதமுமாக உருக்கொண்ட அந்த நிகழ்வின் தொன்மம் குறித்து எங்கள் கொள்ளுப் பாட்டியிடம் விசாரித்ததில், காதலின் புதிர்வழிப் பாதைகள் கொண்ட நாட்டுப்புற வரலாற்றின் பழமையான நினைவுகளை சொல்லலானார். அவர் சொல்லச் சொல்ல அவரது முகமெங்கும் படர்ந்த மஞ்சள் ஒளி, பூக்களின் மகரந்தம் போல மிளிர்ந்தது.
ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த “காணும் பொங்கல் விழா” எங்கள் பல்வேறு நாட்டுப்புறப் பகுதிகளில் பல்வேறுவிதமான விளையாட்டுக்களாக நிகழ்த்துவார்கள். ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் என்று நடக்கும் இந்த நிகழ்வுகளில் மக்கள் ஆரவாரமாக கலந்து கொண்டு கொண்டாடுவார்கள்.
ஆனால், எங்கள் ஊரில் நடக்கும் ‘இடு பந்து’ (பந்தால் அடிக்கும் விளையாட்டு) விளையாட்டுதான் அந்த சுற்று வட்டாரப் பகுதிகளிலேயே மிகவும் புகழ் பெற்றது. இதில் விளையாடுவதற்காக அருகாமை ஊர்களிலிருந்து ஆண்களும் பெண்களும் கும்பலாக வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த இடு பந்து விளையாட்டில் குமிட்டிக் காயைத்தான் பந்தாக அடித்து விளையாடுவார்கள்.
அதாவது பந்து போன்ற உருவம் கொண்ட குமிட்டிக் காயை பெண்கள் ஆண்கள் மீது வீசியடிப்பார்கள். ஆண்கள் அந்த “இடுபந்து”க்கு அகப்படாமல் வளைந்து நெளிந்து தப்பி ஓட வேண்டும். குமரிப் பெண்டுகளிடம் மாட்டிக் கொள்ளும் ஆண்மகன்கள் பந்தடி வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடிப்பார்கள். ஆண்கள் வெற்று மார்புடன்தான் விளையாடுவார்கள். அந்தக் குமிட்டிக் காய் ஒரு ஆண்மகனின் மார்பிலோ, அல்லது முதுகிலோ வேகமாக வந்து அடித்ததும் வெடித்துச் சிதையும். அதற்குள்ளிருக்கும் ஊண், அடிபட்டவரின் உடம்பெங்கும் சாரை சாரையாக வழியும். ஊண் வழியும் உடம்புடன் ஓடும் இளைஞர்களை கேலியும் கிண்டலுமாக ரசிப்பார்கள். இந்த விளையாட்டு ஒரே கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும்.
இந்தக் குமிட்டிக் காய் மேய்ச்சல் நிலங்களில் சடைசடையாக காய்த்துக் கிடக்கும். காணும் பொங்கல் நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே கூடை கூடையாகப் பறித்து வைத்துக் கொள்வார்கள் குமரிப் பெண்கள் .
இந்த இடுபந்து விளையாட்டில் எங்கள் ஊரைச் சேர்ந்த தவசியம்மாதான் வீராங்கனை. தவசியம்மா குமிட்டிக் காயை கையில் எடுத்துக்கொண்டால் அவ்வளவுதான். ஆண்மகன்களை துவம்சம் செய்து விடுவாள். அவளிடம் மாட்டிக் கொள்ளும் ஆண்களின் உடம்பெங்கும் பெருத்த வலியுடன் ஊண் வழியும்.
அப்படியான ஒரு விழாநாளில்தான் வெடித்துப் பரவியது ஒரு விஷயம்.
இத்தனை வருடங்களாக “இடுபந்து” அடிக்கும் தவசியம்மா, வையாபுரி என்பவர் மீது மட்டும் இடுபந்தை அடித்ததில்லை. அதற்கு என்ன காரணம்? வேண்டுமென்றே தவிர்க்கிறாரா? அல்லது வையாபுரி இடுபந்திற்கு லாவகமாகத் தப்பித்து விடும் வீரத்திருமகனா?
இந்த விஷயம் பெரிதாகி இந்த வருடம் தவசியம்மா, வையாபுரி மீது இடுபந்தை அடித்தே தீர வேண்டும் என்று குமரிகள் கோரிக்கை வைத்தனர். அப்படி அடிக்காத பட்சத்தில் அந்த விளையாட்டையே அவமானப் படுத்துகிற மாதிரி இருக்கிறது என்று சொன்னார்கள்.
“அவர்கள் இருவரும் காதலர்களாக இருப்பதால்தான் இப்படி விளையாடுகிறார்கள் ..” என்று அவர்களை பற்றி வழக்கில் உள்ள ரகசியமான கதை ஒன்றையும் இந்த வரலாற்றோடு இணைத்துச் சொன்னாள் பாட்டி.
முன்பு ஒருசமயம், வையாபுரி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்கப் போயிருந்தார். குளித்துக் கொண்டிருந்தபோது, அவர் கட்டியிருந்த கோவணம் (இடுப்புத் துணி) ஆற்றில் நழுவிவிட்டது. பதற்றத்துடன் நீரில் முழுகித் தேடித்தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று விளங்காமல், கலவரத்துடன் நடு ஆற்றின் நீர்ம ஆழங்களுக்குள் முழுகினார். சதுப்பு மணலும், பாசம்படிந்த கிளிஞ்சல்களும், வாரியெடுத்தோடும் ஆற்றின் போக்கையும் கண்டார். நீருக்குள் இறங்கிய ஒளிவற்ற சூரிய ஒளியில் தன் உடலின் நிர்வாணத்தைக் கண்டவர், நீரின் மேற்பரப்புக்கு தலையை உயர்த்தினார். அவர் முகம் முழுவதும் வெட்கம் சூழ்ந்து கொண்டிருந்தது.
நண்பர்கள் குளித்து முடித்துக் கரையேறிவிட்டார்கள். வையாபுரி ஆற்றிலேயே நின்றிருந்தார்.
“சீக்கிரமாக குளித்து விட்டு வா போகலாம் ..” என்று கரையிலிருந்த நண்பர்கள் அழைத்தனர்.
வையாபுரி பதற்றத்தை மறைத்துக் கொண்டு, “நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்.. நான் இன்னும் கொஞ்சநேரம் நன்றாகக் குளித்துவிட்டுவருகிறேன்..” என்றார்.
எப்பொழுதும் நண்பர்களோடு இணைபிரியாமல், குலாவிக்கொண்டு வருபவர், இன்றைக்கு, ‘நீங்கள் செல்லுங்கள்.. நான் பிறகு வருகிறேன்’ என்று சொல்கிறார் என்றால், இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நண்பர்கள் சந்தேகப்பட்டார்கள்.
அவர் முகத்தில் தெரிந்த கலவரமும், நடு ஆற்றில் அவர் சங்கடத்துடன் நின்றிருக்கும் தோரணையும் அவர்களது சந்தேகத்தை அதிகப்படுத்த, துழாவித் துழாவி விசாரித்தனர். அவரது இடுப்பு ஆடையை ஆற்றுநீர் அடித்துப்போயிருந்ததும், நடுஆற்றில் நிர்வாணமாக நின்றிருக்கும் நிலையும் ஊர்ஜிதமாகியது.
ஒரு நீண்ட விசிலுடன் நண்பர்கள் அந்த நிகழ்வை ரசிக்க ஆரம்பித்தனர்.
“கரையேறி வா..” என்று வையாபுரியை கிண்டலுடன் அழைத்தார்கள். “என் வேட்டி கரையிலிருக்கிறது. எடுத்துக்கொடுங்கள்..” என்று கெஞ்சினார். நண்பர்கள் மறுத்து விட்டனர்.
அவர் மார்பளவு நீரில் ஆழ்ந்து நடு ஆற்றிலேயே நின்றிருந்தார். சுற்றிலும் ஆண்கள் மட்டுமே நின்றிருந்தாலும், நிர்வாணமாக கரையேறுவதை நினைத்தால் பெரும் வெட்கமாக இருந்தது. வையாபுரி கரை ஏறுவதாக இல்லை. நேரம் போய்க் கொண்டிருந்தது. நண்பர்களும் அந்த இடத்தைவிட்டுப் போவதாக இல்லை. நண்பர்கள் செய்த கேலி கூச்சல்களில் மேலும் சில இளவட்டங்கள் சேர்ந்து கூட்டம் பெரிதாகிக்கொண்டே இருந்தது.
“ஆற்று மீன் கடித்துவிடப்போகிறது.. அதற்கு மருந்து இல்லை… பேசாமல் மேலே ஏறி வா..” என்று கேலிக்கூச்சல்கள் அடங்கவே இல்லை.
அவர் வரமறுத்தார்.
” நீ என்ன பெண்பிள்ளையா? இப்படி வெட்கப்படுகிறாய்? மேலே வா ” என்று அன்புடன் கடிந்து கொண்டார் ஒருவர்.
நிர்வாணத்தில் ஆண் உடலுக்கும் பெண் உடலுக்கும் வேறு வேறு பார்வைகள் இருக்கின்றனவா? நிர்வாணத்தின் மதிப்பீடுகள் என்பவை என்ன? என்றெல்லாம் பல்வேறு எண்ணங்கள் அவருக்குள் எழுந்தன.
நாட்டுப்புறங்களில் கூத்து நிகழ்ச்சியாக நடிக்கப்படும் மகாபாரதப் புராணக்கதைகளில் வரும் “அல்லி அரசாணி மாலை” என்னும் நாடகத்தில், அர்ஜுனன், அல்லியை பார்க்கப்போகும்போது, அவனது இடுப்புத் துணியை புறா ஒன்று கொத்திக்கொண்டு போகும். இந்த செய்கையால் ஒரு கணநேரமே நிர்வாணமாக்கப்பட்ட அர்ஜுனன், மனம் குமைந்து பாடும் பாடல், வையாபுரியின் மண்டையெங்கும் வண்டுபோல ரீங்காரமிட்டது.
‘சரி எப்படியும் மேலே வந்துதானே ஆக வேண்டும், இன்னும் எத்தனை நேரம் இப்படியே நின்றிருப்பாய்?’ என்று சாவகாசமாக ஆற்றோர மரத்து நிழலில் அமர்ந்தனர் நண்பர்கள். உச்சி வெயில் அவரது நடு மண்டையில் சூடேற்றிக்கொண்டேயிருந்தது.
தனது உடல் மீது படரும் வெட்கத்திற்கும், ஆற்றின் மீது சுழலும் துயரதிற்குமான தூரம் நீண்டு கொண்டேயிருந்தது.
இது எந்நேரம் வரை நீடித்ததோ தெரியவில்லை. சட்டென, வையாபுரி பெரும் ஆரவாரத்துடன் கரையேறி வந்தார். இடுப்பில் ஒரு பெரிய சேலைத் துணி!
நண்பர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இது எப்படி ஒரு மாயாஜாலம் நடந்தது?
அது எவருக்குமே தெரியாத பரமரகசியம்,
அந்த ஆற்றங்கரை நிகழ்வை பற்றிக் கேள்விப்பட்டு அங்கு வந்த, தவசியம்மா, நிலைமையை உணர்ந்து, அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளிப்போய் யாருக்கும் தெரியாமல், ஆற்றில் மூழ்கி அடி ஆழத்திலேயே நீந்தி வையாபுரியிடம் சென்று, தனது சேலைத் துணியை தந்துவிட்டு, மீண்டும் அதேபோல நீந்தி வீட்டிற்கு வந்துவிட்டாள்!
(சில வருடங்களுக்கு முன்பு, இடாலோ கால்வினோ வின் “The Adventure of the Bather” கதையைப் படித்தபோது பெரும் அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேரக் கிட்டியது. கடலில் ஆடையிழந்து அவதியுறும் Signora Isotta வின் Adventure – ல் உருப்பெறும் text ம் தவசியம்மாவின் Adventure -ல் உருப்பெறும் text ம் காட்டும் intertextuality என்ன என்று வெகுகாலம் யோசித்திருக்கிறேன்!)
மீண்டும் இடுபந்து விளையாட்டிற்குத் திரும்புவோம் :
அடுத்த வருடம் அந்தப்புகழ் பெற்ற இடுபந்து ஆட்டம் ஆரம்பமானது. ஊர்மக்கள் அனைவரும் சுவாரஸ்யமாக பெரும் ஆர்வத்துடன் அந்த விளையாட்டு நிகழ்வுக்காக காத்திருந்தனர். பெண்கள் குமிட்டிக் காய்களுடன் ஊர் மைதானத்தில் குவிந்திருந்தனர். தவசியம்மா இன்னும் வரவில்லை.
தவசியம்மா வை வெளியூரிலிருந்து வந்து பெண் பார்த்துவிட்டுப் போயிருந்தார்கள். தவசியம்மாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்பது செய்தி. வையாபுரியின் மீது ஆவாரம்பூவை வீசியதாகவும், அவர் பதில் ஒன்றும் பேசாமல் மௌனமாக கடந்து வந்து விட்டார் என்பது இந்த செய்தியின் ஹை லைட்!
(இங்கு நாட்டுப்புற இளைஞர்களால் பெரிதும் ஆராதிக்கும் ஆவாரம் பூ என்னும் மலர் பற்றிய நாட்டுப்புற தொன்மத்தை உங்களுக்கு விளக்கினால் கதையில் மேலும் சுவாரஸ்யம் கூடும்:
இது ஒரு காதல் பூ ! இந்த ஆவாரம் பூவை தங்களுக்குப் பிடித்தமான பெண்கள் மீது ஆண்களும், ஆண்கள் மீது பெண்களும் வீசிக் களிப்பார்கள். அவர்களது காதலை ஏற்றுக் கொள்பவர்கள் தலையில் சூடிக் கொள்ளலாம். மறுதலிப்பவர்கள் பூவைத் தலையைச் சுற்றி வீசிவிடலாம்.)
ஒருவழியாக விளையாட்டு ஆரம்பமாகவும், தவசியம்மா அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. சுரத்தில்லாமல் ஆட்டத்திலிறங்கி ஆடிக்கொண்டிருந்தவள், சட்டென, தீவிரம்பெற்று அபாரமாக விளையாடத் தொடங்கினாள். ஆண்கள் நாலாபுறமும் தறிகெட்டோடினார்கள்.
அந்தக்கணத்தில்தான் அது நிகழ்ந்தது, மைதானத்தின் தென்கோடியில் அசைந்த வையாபுரியைக் கண்ட தவசியம்மா ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவர் மீது காயை வீசியடித்தாள். சற்றும் குறி தவறாமல் வையாபுரியின் மார்பில் வெடித்தது குமிட்டி!
ஊரார் அனைவரும் ஒருகணம் திக்பிரமை பிடித்து நிற்க, வையாபுரியின் மார்பில் ஊண் வழிந்தது.
ஒரு நீண்ட வெறுமையுடன் சுற்றிலும் ஒரு முறை பார்வையைச் சுழலவிட்டவர், சட்டென அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஒரே ஓட்டமாய் ஓடிப்போய் எதிரில் இருந்த ஆற்றில் குதித்தார்.
மின்னற்பொழுதிற்குள் நடந்து விட்ட அந்தக்காட்சியை, மக்கள் அனைவரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.
வையாபுரி மீண்டும் கரை ஏறவே இல்லை.
அதன்பிறகு இன்றுவரை இளைஞர்கள், காணும் பொங்கல் நாளில் குமிட்டிக் காயை எங்கள் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வீசியெறிந்து கொண்டே இருக்கிறார்கள்.
Tiber River – ன் அடியாழத்தில் கிடக்கும் கணக்கற்ற சாவிகளுக்கும், எங்கள் காவிரி ஆற்றின் அலைமேடுகளில் மிதக்கும் குமிட்டிகளுக்கும் இடையே உள்ள intertextuality குறித்து Julia Kristeva தான் சொல்லவேண்டும்.
****************
1. உலகம் முழுவதும் பெரும் கேளிக்கையாகக் கொண்டாடப்படும் காதலர் தினம் இத்தாலியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது, அங்கு, “La Festa degli Innamorati” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. காதலர்களின் பாரம்பரிய விழாவாக அனுஷ்டிக்கும் இந்தக் கொண்டாட்டத்தை இத்தாலியர்கள் ஒரு பெரும் நவீன இலக்கியத் தொன்மமாக உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
ஆம். உலகளவில், கலை இலக்கியங்களின் முடிசூடா அரசாளுமையாக இந்தமொழி, ஓங்கி, விளங்கியதில் வியப்பேதுமில்லை என்பதை இதைப்பற்றிய தொன்மத்தை உணரும்போது உணர்ந்து கொள்ளமுடியும். கலைக்கும் வாழ்வியலுக்குமான இடைவெளியை ஒரு வாழ்வியல் வசீகரமாக நிரப்பும் இத்தாலிய மொழியின் கலை ரசனையை உணரும்போது, அந்த மொழி மீது எல்லையற்ற பிரியம் ஏற்படுகிறது.
முன் காலங்களில் இந்த விழா, மிகவும் சாதாரணத் தன்மையோடு, ஐரோப்பியத் தன்மையோடுதான் கொண்டாடப்பட்டு வந்தது.
அதன் பிறகு, கடந்த 2000 களில், தற்கால இத்தாலிய எழுத்தாளர் ஃபெடரிகோ மோச்சியா (Federico Moccia : 1963 – ), இவர் எழுதிய, “Ho voglia di te” என்ற நாவல் வெளிவருகிறது. அதில், வருகின்ற அமரத்துவக் காதலன், “தனது காதலின் நினைவாக, இரண்டு பூட்டுகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து பூட்டுப் போட்டு விட்டு, சாவியை ஆற்றில் வீசியெறிந்து விடுகிறான். இத்தாலியின் கலாச்சார சின்னமாக விளங்கும், டைபர் நதி என்னும் அந்த ஆறு, உலகின் நீண்ட ஆறுகளில் மூன்றாவது இடத்திலுள்ளது. இந்த நதியில் அந்தக் காதலன், தனது காதலின் அமரத்துவத்தை உணர்த்துவதற்காக, பூட்டையும் சாவியையும் வீசியெறிந்து விடுகிறான். நாவலில் வரும் இந்த நிகழ்வு, கலை பிரக்ஞையோடு வாழும், இத்தாலிய மக்களுக்கு பெரிதும் பிடித்துப்போய் விடுகிறது. அந்த பூட்டும், சாவியும், இத்தாலிய மக்களுக்கு காதலர்களின் metaphor ஆக மாறுகிறது.
இந்த நாவல், பல கோடி பிரதிகள் விற்பனை ஆகின்றது. திரைப்படங்கள், நவீன நாடகங்கள், தொலைகாட்சி தொடர்கள், கவிதைகள்.. என்று பல வடிவங்களில் இந்த உருவாக்கம், இத்தாலி முழுக்க மனித வாழ்வியலில் ரத்தமும் சதையுமாக ஒன்றறக் கலக்கிறது.
அதுவரை ஐரோப்பியப் பார்வையிலிருந்த காதலர்கள் விழா, அதன்பிறகு, இத்தாலிய மரபாக மாற்றம் கொள்கிறது. ஒரு கலை இலக்கியத் தொன்மத்தை தங்களது வாழ்வியலாக வரித்துக் கொண்டவர்கள், உலக கலை இலக்கியப் பாரம்பரியத்தில் வந்த இந்தப் பெருமை மிகு இத்தாலிய பெருமக்கள்.
ஒவ்வொரு வருடமும், அந்த நாளை, ஒவ்வொரு இத்தாலியரும், தங்களது இளமை வாழ்வில் பின்னிப் பிணைந்த காதல் நிகழ்வுகளையும், இந்த நாவலில் வரும் metaphor ஐயும் இணைத்து ஒரு பெரும் காதலர்களின் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும், தங்களது பெயரையும், தங்களது காதலி – காதலன் – பெயரையும், இரண்டு பூட்டுகளில் எழுதி, அவைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து பூட்டுகளையும் சாவியையும் டைபர் நதியில் வீசிவிடுகிறார்கள். இத்தாலி முழுக்க கம்பங்களிலும், பாலங்களிலும், ஆற்றின் கரைகளிலும் பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி, ஒரு காவியக் காதல் விழா.
2. இடாலோ கால்வினோ வின் “The Adventure of the Bather” கதை குறித்து, சுருக்கமாக : சினோரா இஸோட்டா என்னும் கதையின் நாயகி, தன் விடுமுறையைக் களிக்க ஒரு கடற்கரை பீச்சுக்கு போகிறாள். கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது, துரதிர்ஷ்டவசமாக அவளது ஆடைகளை கடலில் இழந்துவிடுகிறாள். நிர்வாணமாக, கடலின் கழுத்தளவு தண்ணீரில், நின்று கொண்டிருப்பவள் எப்படிக் கரையேறுவது என்று எண்ணமிடுகிறாள். அப்பொழுது, அவளுக்குள் பல்வேறு விதமான எண்ணங்கள் வெட்டி வெட்டி ஒளிர்கின்றன. இதை ஒரு பின்நவீனத்துவக் கதையோட்டத்தின் சாயலில் மிக அற்புதமாக சொல்லியிருப்பார் கால்வினோ.
******************