• Thu. Sep 21st, 2023

ஆழ்வாரும் நரியும் : ஒரு கடிதம்!

ByGouthama Siddarthan

Aug 1, 2022
  • டிம் ஜே மேயர்ஸ்

 

2013 இல் எழுதப்பட்ட ஆழ்வாரும் நரியும் என்ற என் கட்டுரை நாட்டுப்புறக் கதைகள் மற்றும் தொன்மங்கள் பற்றியது. பண்டைய தமிழ்ச் சூழலில் புழக்கத்திலிருந்த ஒரு கதை, ஹைக்கூ கவிதை வடிவத்தின் தந்தையான பாஷோ விடம் உருப்பெறும்  விதத்தையும், ஜப்பானிய கலாச்சாரத்தில் இதே போன்ற ஒரு கதை உருவாக்கம் நிகழ்ந்துள்ள சாத்தியத்தையும் முன்வைத்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.  இதில், டிம் ஜே மேயர்ஸின் 2 தொகுப்புகளில் வந்துள்ள கதைகளை முன்வைத்து சர்வதேச மொழிகளின் நாட்டுப்புறக் கூறுகளில் உருவாக்கம் கொள்ளும் சொல்கதை மரபையும் தமிழ் நாட்டுப்புறவியல்மரபையும் இணைக்கும் தருணத்தை உருவாக்குகிறது.

கட்டுரை எழுதப்பட்டது: அக்டோபர், 2013.
வெளிவந்தது : மார்ச் 2014 (தீராநதி)

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது: செப்டம்பர் 2016
ஆங்கில இணைய இதழில் வெளிவந்தது ஜனவரி 2017

டிம் மேயர்ஸுக்கு அனுப்பியது : ஆகஸ்ட், 2018
டிம் மேயர்ஸ் பதில் எழுதியது செப்டம்பர், 2018

டிம் மேயர்ஸ் தற்கால கவனம் பெற்ற ஆங்கில எழுத்தாளர், நாட்டுப்புறக்கதைகள் சேகரிப்பாளர், கதைசொல்லி மற்றும் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஆவார்.  முதன்மையாக அவர், ஒரு குழந்தைகள் கதை சொல்லி!  புகழ் பெற்ற  சிறந்த குழந்தைகள் இதழ்களில் கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.  குழந்தை நூல்களுக்கான நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாளர் பட்டியலில் இவரது பெயர் முதன்மை பெற்றுக்கொண்டே இருக்கும். Basho and the Fox,  Basho and the River Stones உட்பட இவரது பல நூல்கள் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளன..

 

*****

 

அன்புள்ள கெளதமா,

நீண்ட காலம் எடுத்துக் கொண்டதற்கு மீண்டும் ஒருமுறை மன்னிக்கவும்! இன்றுதான் இந்த காலாண்டில் என்னுடைய முதல் வகுப்பு என்பதால் ஆண்டில் பரபரப்பாக நாட்கள் ஓடும் காலமிது. ஆனால் உங்களிடம் பேசுவதற்கு எப்போதுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதலாவதாக, உங்கள் கட்டுரையை முழுமையாகவே ரசித்து அனுபவித்தேன். ஒரு தமிழரின் பார்வையில் இவற்றையெல்லாம் பற்றி கேள்விப்படும் போது அருமையாக உள்ளது. மேலும் உங்களுக்கு ஓர் உறுதி அளிக்கிறேன், தமிழின் பூர்வீக இலக்கியமானது மேற்கத்திய மாதிரிகளால் சூழப்பட்டு தேங்கிவிடுவதையோ பின்னிழுக்கப்படுவதையோ பெரும்பான்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் பல அமெரிக்க எழுத்தாளர்கள் விரும்புவதில்லை. எனவே நீங்கள் அந்த அரணை தக்கவைத்துக் கொள்வதை சிறப்பான விஷயமாகவே நினைக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அனைத்து கோணங்களிலும் கலாச்சார பரிமாற்றங்களுக்கு நான் ஆதரவானவனே. ஆனால் என்னைப் பொறுத்தவரை இதன் சிறப்பான விளைவு என்பது கலாச்சாரக் கூறுகளின் ஒன்றிணைதலாக இருக்குமே ஒழிய நீங்கள் விவரிப்பது போன்ற பின்நவீனத்துவத்தின் ஆதிக்கமாக இருக்காது. நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்வதற்குத் தான் எவ்வளவு இருக்கிறது! இப்படியிருக்க, பின்நவீனத்துவத்தில் எனக்கு பிடித்த கூறுகள் பல இருப்பினும் உவப்பில்லாத சிலதும் இருக்கவே செய்கின்றன.

எனவே தமிழ் இலக்கிய மதிப்பீடுகளை வலியுறுத்தும் வகையில் நீங்கள் தொடர்ந்து வரும் முன்னெடுப்பிற்கு வாழ்த்துக்கள். இது சிறப்பானது என்று நினைக்கிறேன். சில அறிவுஜீவிகள் சமகால போக்குகளால் பாதிப்படைந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான் இல்லையா? இதுமாதிரியான விஷயங்களை கடந்துவிட்டவர்களாக அவர்களை எப்போது நீங்கள் கருதுவீர்கள்.

தமிழ் நாட்டார் மரபு பற்றி எதிர்மறையாகச் சொல்லப்படும் எதுகுறித்தும் நிச்சயம் துரதிர்ஷ்டவசமானதாகவே நான் உணர்கிறேன். ஒரு தகுதிவாய்ந்த கதைசொல்லியாகிய நான், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டார் கதையாடல்களை கற்றுக் கொள்வதற்காகவே வாழ்கிறேன் – ஏனெனில் அது மிகவும் வலிமையானது என்பதை அறிவேன். இச்சமயத்தில் நீங்கள் இரண்டு பக்கமும் எதிர்ப்பை சந்திக்க வேண்டிவருமென்பதை என்னால் உணர முடிகிறது: பின்நவீனத்துவமாக இல்லாத அனைத்தையும் நிராகரிக்கும் தமிழ் எழுத்தாளர்கள் ஒருபக்கம் – நாட்டார் இலக்கியம் பண்படாதது அல்லது பழைய பாணியானது என்பது போன்ற விமர்சனங்களை வைப்பவர்கள் இன்னொரு பக்கம். அடடா, உண்மையிலிருந்து எதுவும் வெகுதூரம் விலகிவிடமுடியாது இல்லையா?

உண்மையில் என் எதிர்பார்ப்பு என்னவென்றால், தமிழ் நாட்டார் கதைகளின் ஆங்கிலத் தொகுப்பு ஏதேனும் நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?

The Name of the Rose நாவலை முன்வைத்து வாதாடப்படுவது போல தீவிர இலக்கியத்திற்கும் மற்றும் பல இலக்கிய வகைமைகளுக்கும் இடையே உள்ள போலியான பிரிவினைகளுக்கு எதிரான உங்கள் கருத்தும் எனக்குப் பிடித்திருந்தது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நாமிருவரும் ஒத்த நிலையில் உள்ளோம்! இலக்கிய வகைமைகளையும் அதன் கூறுகளையும் ஏற்றுக் கொள்ளும் பெரியதொரு மனநிலை மாற்றத்தை ஆங்கிலம் பேசும் உலகம் அடைந்து வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது Leguin மற்றும் George Saunders போன்றோரின் வெற்றியிலிருந்தே சாத்தியமானது – நீங்கள் George Saunders இன் Lincoln in the Bardo வை வாசித்துள்ளீர்களா? அமெரிக்க வரலாற்றை திபெத்திய பெளத்தத்தின் விண்ணுலக வாழ்வோடு இணைக்கும் ஒரு நாவல் – அதுவும் ஒரு பேய்க்கதையாகத் துவங்கும் நாவல்! மேலும் இதற்கு அனைத்து வகையான அங்ககாரங்களும் கிடைக்கிறது. பின்நவீனத்துவச் சிந்தனைகளில் ஒன்றான உயர் ரசனை / வெகுஜன ரசனையிடையே உள்ள பிரிவினையை மறுக்கும் இந்த முழுமைவாத நோக்கானது உண்மையில் நான் முன்னிறுத்தக்கூடிய ஒன்று.

உங்கள் கட்டுரையில் என் புத்தகங்களை மேற்கோள் காட்டியது எனக்கு மகிழ்ச்சியும் பெருமைக்குரியதும் ஆகும் – நன்றி! மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன். குறிப்பாக தங்கத்திற்கு மேலாக கவிதைகள்/ கூழாங்கற்களின் மதிப்பை விளக்கும் பகுதியை நீங்கள் தமிழ் சூழலுக்குப் பொருத்திப் பார்த்த விதம். அத்தகைய ’மண்’ சார்ந்த கலாச்சார விழுமியங்களின் மதிப்பு குறித்த பார்வையில் நாமிருவரும் உடன்படவே செய்கிறோம்.

ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. இதுகுறித்து நான் மேலும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த அறிதல் அபாரமாக உள்ளது! என்னுடைய நரி புத்தகங்களுடன் ஒப்பிடும்போது (உங்கள் ஆழ்வார் கதைகளில்) நரிகள் பற்றி வரும் பகுதிகளில் உள்ள தற்செயலான இணைவுகளும் உண்மையில் சுவாரசியமானது.

பிறகு, இறுதியாக  சில சொற்கள்:

— மஹாரதி நன்றாகவே மொழிபெயர்த்துள்ளார். இருந்தும் சிற்சில மாற்றங்கள் சுட்டிக்காட்டலாம். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஆங்கிலத்திற்கு அதற்கே உரிய பேச்சு வழக்கும் சொலவடைகளும் உள்ளன என்பதை நான் அறிவேன், இருப்பினும் ஒரு அமெரிக்கனாக சில விஷயங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. அமெரிக்கர்களுக்கு “Cobblestones” என்றால் என்னவென்று தெரியும், ஆனால் “cobble” என்பதற்கு பாறை அல்லது கல் என்னும் பொருள் சரியாக வரவில்லை. பின்பு என் புத்தகத்தில் உள்ளது “cherries” தான் “sherries” அல்ல. “sherries” என்பது ஒரு மதுபான வகை.

— எனக்கு ஆவலாக உள்ளது, என் நரிக்கதைகளை சொன்ன அந்த கதைசொல்லியின் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதா?

— நீங்கள் அவர்களை சென்னையில் நடைபெற்ற ஒரு கதை சொல்லும் கருத்தரங்கில் வைத்தா சந்தித்தீர்கள்? அங்கிருக்கும் ஒரு பெரிய கதை சொல்லும் மையத்தை நானறிவேன். எரிக்கிடமிருந்து (Eric) எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருவதுண்டு.

— மேலும் இறுதியாக ஒன்று, உங்களுக்கு எவ்வாறு புத்தரின் பெயர் வந்தது? இந்து மதம் புத்தரை ஓர் அவதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளதை நான் வாசித்திருக்கிறேன் – எனினும் நீங்கள் இந்து என்றோ அல்லது வேறு எவ்வாறான யூகங்களுக்கும் நான் செல்லவில்லை. வெறுமனே ஓர் ஆர்வத்தில் கேட்கிறேன்.

உங்களுடன் தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் பதிப்பு வரலாறு மிகவும் ஈர்க்கக் கூடியதாய் உள்ளது!

வாழ்த்துக்களுடன்,
டிம்.

 

தமிழில் : பாரி

(தற்கால  புகழ்பெற்ற கலிபோர்னியா எழுத்தாளர்  டிம்.ஜே.மேயர்ஸ், என் வலைதளத்தில் வந்துள்ள ஆழ்வாரும் நரியும் என்ற என் கட்டுரை பற்றி எழுதி அனுப்பிய ஒரு விரிவான கடிதம்!)

One thought on “ஆழ்வாரும் நரியும் : ஒரு கடிதம்!”
  1. மிகவும் பண்புடன் தனது பதிலை டிம் ஜெ மேயர்ஸ் பதிவிட்டிருக்கிறார். அவரோடு நூறு சதம் என்னால் உடன்பட முடியாமல் போனாலும், அவருடைய தீர்க்கமான கருத்துகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். கலாச்சாரக் கூறுகளின் சங்கமம் எனும் போர்வையில் திமிங்கிலங்கள் சிறு மீன்களை விழுங்கிச் செரித்துக் கொழுப்பதைக் கையறு நிலையில் நாம் பார்த்துப் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து உங்கள் இலக்கியப் பார்வைகள் சர்வதேச கவனம் பெறட்டும் சித்தார்த்தன். அன்பும் வணக்கமும்.

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page