- கௌதம சித்தார்த்தன்
மெல்லிய சாம்பல் புகை கமழ மூன்று கோப்பைகளில் தேநீர் மணக்கிறது.
அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்
காலமும் வெளியுமற்ற ஒரு புதிய திணையில்
ஒரு கோப்பை எனக்கானது.
மற்றொரு கோப்பை உனக்கானது பர்ரா..
‘வெற்றுத் தாளை மேம்படுத்துவதே கவிதை’
என்று சொல்லும் உன் எதிர்க் கவிதைக்கானது.
‘மற்றைநம் காமங்கள் மாற்றேல்’ என்று பிரகடனமிட்ட
ஆண்டாளுக்கானது இன்னொரு கோப்பை.
*அகேசியா மலர்கள் மலர்ந்து விட்டன பர்ரா..
பூக்களின் மணம் தேநீரின் மணத்தோடு இணைந்து கமழ்கின்ற
வாசத்தை அந்த தேநீர் விடுதியின் குளிர் உணர்த்துகிறது.
நளிரின் வெம்மை மாறுகிறது.
சுழன்றடித்தேகுகிறது *முல்லையின் வாசம்
அதோ வந்துவிட்டாள் ஆண்டாள்.
என்சட்டையில் அலர்ந்து நிற்கும் *மைத்ரேய மலர்.
மணந்து ஜாஜ்வலிக்கிறது
தேநீர் இப்பொழுது கதகதப்பான பானகமாக மாறுகிறது.
****
குறிப்புகள் :
அகேசியா: அகேசியா மலர்கள் மலரும் பருவத்தில் மலர்களின் மணத்தை அனுபவித்துக் கொண்டிருந்த தருணத்தில் நிகனோர் பர்ராவின் காதல் முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு அகேசியா பருவத்திலும் பர்ராவுக்கு தன காதலின் நினைவு ஆட்கொள்ளும்.
முல்லை: முல்லை மலர்களைக் காணும்போதெல்லாம், தனது காதலனின் ஞாபகம் வந்துவிடுகிறது ஆண்டாளுக்கு.
மைத்ரேய: எங்கள் காதல், செவ்வியல் நாடகபாணியில் பிரியும் பொழுது, நான் அவளுக்கு அளித்த செவ்வந்திப் பூ என்னும் மைத்ரேய மலர்.
*************
இந்தக் கவிதை மஹாரதி அவர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, Timebyrinth என்ற என் கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. மேலும் ஜெர்மன், ரோமானியன், பல்கேரியன் ஆகியமொழிகளில் வெளியான என் கவிதைத் தொகுப்புகளிலும் உள்ளது. ஸ்பானிஷ், ரஷ்யன் மொழிகளின் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.