- கௌதம சித்தார்த்தன்
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் ஃபுயண்டஸ் தனது எழுதும் முறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்:
“நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12.30 வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச் செல்வேன். திரும்பி மதிய உணவு; மதியத்தில் வாசிப்பு; அதன் பின் அடுத்த நாள் எழுத வேண்டியதை முன் வைத்து நடக்கத் தொடங்குவேன். எழுத உட்கார்வதற்கு முன்பாக தலைக்குள் என் புத்தகத்தை நான் இப்போது எழுதிக் கொள்ளவேண்டும். இங்கு பிரின்ஸைட்டனில் நடந்து செல்வதை ஒரு முக்கோண வடிவத்தில் பின்பற்றுகிறேன்: மெர்சர் தெருவிலுள்ள ஐன்ஸ்டைனின் வீட்டுக்குச் செல்வேன். அங்கிருந்து திரும்பி ஸ்டாக்டன் தெருவிலுள்ள தாமஸ் மன்னின் வீடு; பின் அங்கிருந்து ஈவ்லின் பகுதியிலுள்ள ஹெர்மன் பிராக் வீடு. இந்த மூன்று இடங்களுக்கும் சென்ற பிறகு வீட்டுக்குத் திரும்புவேன். அதற்குள்ளாக, ஒரு நாளைக்கான 6 அல்லது 7 பக்கங்களை மனதளவில் எழுதி முடித்திருப்பேன்.” (<http://www.theparisreview.org/interviews/3195/the-art-of-fiction-no-68-carlos-fuentes>)
90 டிகிரிக் கோணத்தில் திரும்பும் இந்த முக்கோண நடை, அந்த டிகிரிக் கோணத்தில் தலை திரும்பியிருக்கும் அஸ்டெக்குகளின் மழைத்தெய்வமான ‘சக் மூலிடம்’ அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. இந்தத் தொன்மத்தின் வழியாகத் திறந்துகொள்கிறது நவீனமும் புராணிகமும் இணைந்த அவருக்கே உரித்தான அவரது கதைத் திறப்பு. (<http://web.mit.edu/jikatz/www/ChacMool.pdf>)
தனது பெண் பாத்திரங்கள் பற்றிய விமர்சனம் ஒன்றிற்கு,
“அஸ்டெக்-இல் ஆண் கடவுளர்கள் எல்லாம் காற்று, நீர், யுத்தம் என்று ஒரே அம்சத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஆனால் பெண் கடவுளர்கள் இரட்டை மனப் போக்கினராகப் புனிதத்தையும் அசிங்கத்தையும், இரவையும், பகலையும், காதலையும், குரோதத்தையும், பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு, ஒரு உணர்வு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு அவர்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அஸ்டெக் உலகில் அதுதான் அவர்களின் பாவம்.’ என்று பேசுகிறார்.
அந்தப் பாவத்தின் சாபத்தையும் பாவத்தின் வரத்தையும் அவரது நடைவழியில் உருக்கொள்ளும் எழுத்துக்கள் கட்டமைக்கின்றன.
என்னுடைய எழுதும் முறை என்பது முற்றிலும் புதிய வழிகளைக் கொண்டது. அநேகமாக அதை புதிர் வழிச்சுழலுக்கு இணையாக உருவகம் கொள்ளலாம். எனக்கு சிறுவயதிலிருந்தே புதிர்கள் மிகவும் பிடிக்கும். என் அப்பா தனது புதிர்கதைகளை உணவோடு பிசைந்து கவளமாக உருட்டி உருட்டி எனக்கு ஊட்டுவார். அவை என் உடல் முழுக்க குருதியாக சுழித்தோடிக் கொண்டிருக்கின்றன. எழுத்தில் மட்டுமல்லாது என் வாழ்க்கையிலும் அதனோடு விளையாடிக் கொண்டே இருப்பேன். எனக்கு மிகவும் அனுக்கமான எழுத்தாளராக போர்ஹேஸ் மாறிப்போயிருப்பதென்பது தற்செயலானது அல்ல.
காலையில் எழுந்தவுடன் மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்து முடித்து விட்டு, இல்லாள் கொடுக்கும் கேழ்வரகுக்கூழ் சாப்பிட்டு விட்டு எங்கள் விவசாய வயலை நோக்கி நடக்கத் தொடங்குவேன்.
நடக்க நடக்க நான் எழுத வேண்டிய சொற்கள் குதியாட்டம் போட்டுக் கொண்டு என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கும். அப்படியே நடந்து எங்கள் தோட்டத்திற்கு வந்து சேருவேன். வயல் வெளி முழுக்க குறுக்கும் நெடுக்குமாக வரப்புகள் நீண்டு கிடக்கும். போர்ஹேஸ் சிறுகதையான ‘The Garden of Forking Paths’ என அதை உருவகப்படுத்திக் கொண்டு அந்த வரப்புப் பாதைகளில் நடக்க ஆரம்பிப்பேன்.
கிளை வெட்டி வெட்டி நீளும் அந்த வயல் வரப்புகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க நடக்க puzzles விளையாட்டின் ஆடுகளமாக மாறியிருக்கும் தோட்டம். அதில் என் கதைச் சொற்கள் புதிர்ப் பாதைகளில் ஓடிக்கொண்டே இருக்கும். நானும் காலமும் ஓடி ஓடிக் கலைத்து காலமற்ற காலத்தில் அந்தச் சொற்களைக் கைப்பற்றுவேன். இப்பொழுது என் கால்கள் வீட்டை நோக்கித் திரும்பும்.
கைப்பற்றிய சொற்களையெல்லாம் கலைத்துப்போட்டு வெள்ளைத்தாளில் ஒரு சீரான லயத்தின் ஒழுங்கசைவில் அவைகளைக் கோர்க்க ஆரம்பிப்பேன். கலைத்துக் கலைத்துப் போட்டு ஆடும் அந்த ஆட்டத்தில் ஒரு பக்கம் அல்லது ஒண்ணரைப் பக்கம் தேறியிருக்கும்.
இப்படியான ஒரு பொழுதில், சுழித்துச் சுழித்தோடிய அந்தப் புதிர்வழியின் கண்ணிகளில் எங்கோ மாட்டிக் கொண்டேன். எங்கெங்கோ கால்களை எட்டிவைத்தும் அதன் சுருக்குகளிலிருந்து மீளமுடியவில்லை. வெளியேறும் வழி தெரியாது திணறித் தடுமாறி திகைந்து நின்றேன் ஒருகணம்.
அக்கணத்தில் என்னைச் சுற்றியிருந்த சொற்கள் சுழன்று விலக, என் அப்பா சொன்ன மயில்ராவணன் கோட்டையின் கதவுகள் உள்ளோடித் திறந்தன.
இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணம் குறித்து இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல்வேறு வகையான நாட்டுப்புறக்கதைகள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் மக்களின் வாய்வழிக்கதைகளாகவே நின்றுவிடுகின்றன. செவ்வியல் நூலாக புழக்கத்திலிருக்கும் ராமாயண நூல் பதிப்பில் இந்த நாட்டுப்புறக்கதைகள் பதிவாவதில்லை.
இந்தக்கதையாடல்களில் மிகமிக முக்கியமானது மயில்ராவணன் கதை.
அயோத்தி நாட்டை ஆண்டுவந்த தசரதராஜனுக்கு ராமன் உட்பட நான்கு மைந்தர்கள். அதில் மூத்தவனான ராமன் ராஜபதவிக்கு வரக்கூடாது என்று, அவனது மாற்றாந்தாயின் சூழ்ச்சியால் காட்டுக்கு வனவாசம் அனுப்பப்படுகிறான். தனது மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன் காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, இலங்கை நாட்டு ராஜாவான ராவணனின் தங்கையுடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக விரோதம் ஏற்படுகிறது. இதனால் ராவணன், ராமனின் மனைவி சீதையைத் தன் நாட்டிற்குத் தூக்கிக் கொண்டு போகிறான். ராமன், ராவணனுடன் போர்புரிந்து அவனைக் கொன்று தனது மனைவியை மீட்டு தனது நாடு திரும்பி அரசாளுகிறான். இது ராமாயணத்தின் செவ்வியல் வடிவக்கதை.
இந்த மையக்கதையின் பகுதியில் இணைந்து வரும் நாட்டுபுறக் கதையாடலான ‘மயில்ராவணணின் கோட்டை’க்குள் நுழையுமுன் அவனைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்:
இலங்கை அரசன் ராவணனின் மாற்றாந்தாய்வழி சகோதரனான மயில்ராவணன், பெரும் வல்லமைசாலி. மிகுந்த மதிநுட்பம் கொண்டவன். அவனுக்கு அந்தப்பெயர் அமைந்ததே ஒரு பெரும் அற்புதம்!
இலங்கை அரசனான விஸ்ரவசுக்கு, இரு மனைவிமார்கள். அதில் மூத்தவளின் முதல் மகன் மூத்த ராவணன், இளையவளின் முதல் மகன் இளைய ராவணன். இளரவசர்கள் இருவரும் போர்க்கலைகளை திறம்படக் கற்றுவந்தனர். இளைய ராவணன் வெறுமனே போர்க்கலைகளைக் கற்பதோடு மட்டுமே நிற்காமல், மந்திர தந்திரங்களையும் பயின்று வந்தான். அடுத்த ராஜ பதவிக்கான பட்டம் சூட்டும் முறை வந்த போது, தனக்குத்தான் பட்டம் சூட்டவேண்டும் என்று இருவரும் போட்டியில் இறங்கினார்கள்.
ஆனால் ராஜதர்ம முறைப்படி குலத்தின் மூத்த மகனே ராஜபதவிக்கு உரியவன் என்று மந்திரி பிரதானிகள் சொல்ல, தானும் மூத்த மகன்தான் என்கிறான் இளைய ராவணன். அப்பொழுது ராஜகுரு ‘மயில் குலத்து உரிமை’ என்னும் உவமையை முன்வைத்து விளக்குகிறார்.
மயில் முறை என்பது சூரிய குலத்து உரிமை முறை. மயிலானது முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகள் பொரித்தாலும் முதலாவது பிறந்த குஞ்சுக்கே விரைவில் தோகை வளரும். அதுதான் முதலில் தோகைவிரித்து ஆடத் தொடங்கும். அதன் பிறகே மற்றக்குஞ்சுகள் தோகை விரிக்கும்.
(இந்த உவமை குறித்து 12 ஆம் நூற்றாண்டு தமிழின் செவ்வியல் கவியான கம்பர், ராமாயணத்தில் ராமனின் ராஜபதவி உரிமையை முன்வைத்துப் பாடியிருக்கும் வரிகள் இவை:
வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? – தீயோய்!
தமிழ்க் கவி கம்பன் 12 ஆம் நூற்றாண்டில் சொன்ன முதல் மயில்குஞ்சு பற்றிய கருத்தை, 20 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானபூர்வமாக விளக்கி எழுதியுள்ளது ‘ஸயண்டிபிக் அமரிக்கன்’ பத்திரிகை என்பதுதான் கவியுள்ளத்தின் எல்லையற்ற அற்புதம்!)
ராஜகுரு முன்வைத்த ‘மயில்குலத்து உரிமையை’ செவியுற்ற இளைய ராவணன், ‘இந்த உரிமை எனக்கு மட்டுமே பொருந்தும் என்பதற்கு அடையாளமாக நானே மயிலாக மாறி தோகை விரித்து ஆடுகிறேன் பாருங்கள்..’ என்று சபையினர் முன் தனது மந்திர சக்தியால் மயிலாக மாறி தோகை விரித்தாடினான்.
சபையினர் திகைத்துப்போய் நிற்க, இதை ஒத்துக் கொள்ளமுடியாது என்று அவனை நிராகரித்து பெரிய ராவணனுக்கே முடிசூட்டுகிறார்கள். இளைய ராவணன் கோபித்துக் கொண்டு அங்கிருந்து வேறு ஒரு பகுதிக்குச் சென்று தனக்கான நாட்டை நிர்மாணித்து ஆட்சி புரிகிறான். அன்றிலிருந்து அவன் பெயர் மயில்ராவணன் என்று நிலை பெற்றது.
இலங்கையில் ராவணன் ஒருபிரம்மாண்டமான கோட்டையை நிர்மாணித்தபோது, அதைவிடவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டுமென்று, கட்டிடக்கலைக்கே சவால் விடுமளவுக்கு எவராலும் கற்பனை செய்யமுடியாத பல்வேறு புதிர்வழிகளைக் கொண்ட மயில்ராவணன் கோட்டையை நிர்மாணித்தான்.
அந்தக் கோட்டையின் கற்சுவர்களும் பிரகாரங்களும் அரண்அமைப்புகளும் வாசல்கதவுகளும் எவராலுமே அறிந்து கொள்ளமுடியாதவை. அதற்குள் நீங்கள் நுழைந்து விட்டீர்களானால் வெளியேறும் வழிதெரியாது கற்சுவர்களில் பதித்துள்ள கண்களைப்பறிக்கும் முத்துக்களின் மினுக்கல்களும், நவரத்தினங்களின் மின்னல் வெட்டுகளும் ஒளிக்கத்திகளாய் உங்கள் கண்களைக் கிழித்துவிடும். எந்த வழியில் நுழைந்தாலும் எந்த வழியில் அகழ்ந்தாலும், கால்களுக்குக் கீழே பாதாளம் கிடுகிடுவென ஓடிக் கொண்டேயிருக்கும். நீங்கள் நடக்க நடக்க பிரகாரங்களும் உங்களுடன் சேர்ந்து நடக்க, கள்ளுண்ட மயக்கம் கபாலத்தில் பாய்ந்து, உங்களைப் பைத்தியமாக்கும். ஒரு பெரும் புதிர்வழிச் சுழலில் மாட்டிக் கொண்ட உங்களது உடலும் மனமும் சின்னபின்னமாய்ச் சிதைந்து சடுதியில் மரணம் சூழ்ந்து கொள்ளும். அதோ வாலைத்துவட்டி அடிக்கும் அகழி முதலைகளின் கோரைப்பற்களில் வழியும் எச்சிலின் வாசனையைப் பாருங்கள், ஆகாயத்தை வளைத்திருக்கும் இந்தக் கோட்டை அரண்களின் மீது திரவமாக வழிவதை!
இவ்வளவு கட்டற்ற புதிர்வழிச்சுழல்வுகள் கொண்ட இந்தக் கோட்டையை உடைத்தவன் மனிதன் அல்லன். குரங்கினத்தைச் சேர்ந்த அனுமன் என்பதுதான் புதிர் நிலையின் உச்சம்!
ராவணனிடமிருந்து தனது மனைவியை மீடக அந்தக் காட்டில் ஆட்சி புரிந்து வந்த குரங்குப்படையின் உதவியை நாடுகிறான் ராமன். விலங்கின அம்சத்திலிருந்து மேம்பட்டு மனிதாம்சத்திற்கும் மேலான (Super Human) தெய்வாம்சம் பொருந்தியவனும் பெரும் பலசாலியுமான அனுமனின் உறுதுணை அங்கு கிடைக்கிறது.
ராவணனுக்கும் ராமனுக்குமான போரில், அனுமன் மூலம் இலங்கைப்படைகளை நிர்மூலமாக்குகிறான் ராமன்.
போரின் இறுதிக்கட்டத்தில் சகோதரர்கள், தளபதிகள், வீரர்கள், ரதகஜதுரகபதாதிகள் அனைவரும் அழிந்துபோய் ராவணன் மட்டுமே தனியாளாக நிற்கிறான். அப்பொழுது அவனுக்கு தனது சகோதரஉறவான மயில்ராவணன் நினைவு வருகிறது.
அவனிடம் தனக்கு ஆதரவு கோருகிறான் ராவணன். தனது சகோதரனின் நிலைகண்டு வெகுண்டெழுந்து, ‘நாளை விடியற்காலைக்குள் ராமலட்சுமணர்களை காளிக்கு பலிகொடுக்கிறேன்.. இதில் நான் தோற்றுப் போனால் நானே பலியாகிறேன்..’ என்று சபதமிடுகிறான் மயில்ராவணன்.
அவனது மந்திர தந்திரங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ராமனின் ஆலோசகர்கள், ‘எப்படியாவது அந்த ஒருநாளை மயில்ராவணனிடம் மாட்டிக் கொள்ளாமல் கழித்துவிட்டால் தப்பித்து விடலாம்..’ என்று ஆலோசனை செய்கின்றனர்.
அதற்கு ஒரேவழியாக, ராமலட்சுமணர்களைச் சுற்றி, தனது நீண்ட வாலை சுழட்டி சுழட்டி ஒரு பெரிய கோட்டை அரணாக அமைத்து அதன்மேல் அமர்ந்து காவல் காக்கிறது அனுமன்.
அனுமனை மீறி எவரும் அந்த வால் கோட்டைக்குள் நுழைய முடியாது. உள்ளே நுழைவதற்கான வாசல் அனுமனின் வாய்!
ஆகவே மயில்ராவணன், ராமனின் ஆலோசகனான விபீஷணனின் உருவெடுத்து அனுமனிடம் போய் பேச்சுக் கொடுத்து வாய்வழியாக உள்ளே நுழைந்து விடுகிறான். உறங்கிக் கொண்டிருக்கும் ராமலட்சுமணர்களை இரண்டு சிறு கற்களாக மாற்றி எடுத்து மடியில் கட்டிக் கொண்டு வெளியே வருகிறான்.
அவன் வெளியே வரும்போது ஏதோ ஒரு மாற்றமிருக்கிறது என்பதை உணர்ந்த அனுமன், அவனைப் பிடித்து விசாரிக்கிறது.
விபீஷணனின் உருவில் இருக்கும் மயில்ராவணன், ‘பரவாயில்லையே.. பேஷ்..’ என்று அனுமனைத் தட்டிக் கொடுத்து, ‘ராமலட்சுமணர்கள் படுத்திருக்கும் இடத்தில் இந்தக்கற்கள் கிடந்து அவர்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தன.. அதனால்தான் அவைகளை வெளியில் எடுத்து வந்தேன்..’ என்று தனது மடியில் கட்டியிருந்த இரு கற்களை எடுத்துக் காட்டுகிறான்.
அனுமனும் சமாதானமடைந்து அவனை விடுவித்து விடுகிறது.
அங்கிருந்து சடுதியில் வெளியேறி தன்னுடைய கோட்டைக்குள் அவர்களைக் கொண்டுபோய் சிறை வைத்து விடுகிறான் மயில்ராவணன்.
அதன்பிறகு, தான் மோசம் போனதை அறிந்த அனுமன் தானே போய் ராமலட்சுமணர்களை மீட்டுக் கொண்டுவருவதாக மயில்ராவணன் கோட்டைக்குப் புறப்படுகிறது அனுமன்.
புதிர்வழிச்சுழல்வுகள் நிரம்பிய அந்தக் கோட்டைக்குள்ளே நுழைந்து இலக்கற்று அலைந்து, அரண்களில் மோதித் தெறித்து சுருண்டு வீழ்கிறது. தலையெங்கும் வலிநாக்குகள் பிடுங்க, தாமரையின் பல்வேறு அடுக்குகள் கொண்ட இதழ் நுனிகளில் தாவித்திரிய, அதன் குதிகாலின் நரம்புகளில் புடைத்தெழுந்தது ஒரு சிறு இசைத்துணுக்கு. அதன் முகத்தில் கத்தியால் கோடு கிழித்தது போல ஒரு ஒளிமின்னல் வெட்டியிழுத்தது. அந்த இசைமாற்றத்தில் ஒரு சிறிய வண்டாக மாறி தாமரைத்தண்டின் நுழைவுப்பகுதியில் நுழைந்து பறந்தது அனுமன்.
நாணற்புற்களின் துளைகளில் நுழைந்து ரீங்காரமிசைத்தபடி பறந்த வண்டின் சிறகசைப்பில், தாமரை இதழ்கள் முயங்க, கூம்பிப்போன அதன் விளிம்புகளில் நுழைந்து பறக்கையில், அசைவுபடும் வெளிச்சக் கீற்றுகளின் இடைவெளியில் ஒளியேணியில் ஏறிச் செல்வது போல பறந்து உள்முகமாய்ச் சென்று உட்பிரகாரத்தை அடைந்தது.
உஷைப்பொழுது மெல்ல விடிந்து கொண்டிருந்து. காளிபூஜையை ஆரம்பிப்பதற்காக குளித்துவரப் போயிருந்தான் மயில்ராவணன்.
உள்ளே நுழைந்ததும் பதட்டம் கலந்த பரபரப்புடன் ராமலட்சுமணர்களைத் தேடுகிறது அனுமன். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அனுமனுக்குப் புலப்படவில்லை.
அப்பொழுது, தான் காவல் காத்தபோது வெளியில் வந்த விபீஷணன் உருவு கொண்ட மயில்ராவணன் கற்களைக் காட்டிப் பேசிய பேச்சு ஞாபகம் வருகிறது.
பரபரப்புடன் அந்த இருகற்களையும் தேடி அந்த இடம் முழுமைக்கும் தனது கண்களால் அலைபாய விடுகிறது அனுமன்.
அந்தோ பரிதாபம்! அங்கு ஏராளமான கற்கள் சிதறிக் கிடந்தன. கடவுளே இதில் எந்தக் கற்கள் ராமலட்சுமணர்கள்?
ஒருகணம் திகைத்து நிற்கிறது அனுமன்.
வானில் புலரியின் வெளிச்சக் கீற்றுகள் பரவ ஆரம்பித்ததில் மேலும் உடம்பெல்லாம் அனலாகக் கொதிக்க சட்டென்று அனுமனின் அடியாழத்தில் உறைந்து கிடந்த முரண் புதிர் கொண்ட ஒரு காட்சிப்புலம் தோன்றியது.
வானரப்படையைக் கொண்டு இலங்கைக்கு பாலம் கட்டும்போது, பெரிய பெரிய கற்குவியல்களைக் கொண்டு வந்து கடலில் போட்டு அஸ்திவாரத்தை உறுதியாக அமைக்கின்றன வானரங்கள். எதுவும் செய்யாமல் ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கிறது அனுமன். ராமன் அதனிடம் சென்று அதன் முகவாட்டம் குறித்து வினவுகிறான்.
தூரத்தே அசையும் இலங்கைக் கோட்டையைப் பார்த்தபடி, ‘இந்தப் பாலம் பிற்காலத்தில் பெரும் பிரச்னைகளுக்கெல்லாம் தூண்டுகோலாக அமையப் போகிறது என்று என் உள்மனம் சொல்கிறது.’ என்கிறது அனுமன்.
அது மேலும், ‘தீயசக்திகளை எதிர்த்துப் போராடவும், நல்ல சக்திகளுக்கு உறுதுணையாக நிற்கவுமாகச் சொல்லித்தான் என் அன்னை என்னை வளர்த்தெடுத்தார். இப்பொழுது நாம் இறங்கியிருக்கும் இந்தச் செயல்பாடு நல்லதா தீயதா என்று எமக்கு விளங்கவில்லை’ என்று விரக்தியுடன் கொந்தளிக்கும் கடல் அலைகளைப் பார்த்தபடி பேசுகிறது.
அப்பொழுது ஒரு சிறுகல்சிராய் தெறித்து வந்து ராமனின் கையில் விழுந்து நசுக்குகிறது. அவனது சுண்டுவிரல் கிழிந்து குருதி கொப்புளிக்கிறது. சட்டென அனுமன் அந்த விரலை எடுத்து தனது வாயில் வைத்துச் சப்புகிறது.
ராமனின் ருசி அனுமனுக்குள் இறங்குகிறது. அக்கணத்தில், அனுமனின் கருத்தநிறம் பொன்னிறமாக மாற்றம் பெறுகிறது.
கடலலைகள் பெரும் கோஷத்தோடு ஆர்ப்பரிக்கின்றன. அந்த ஆரவாரத்தில் தெரிந்தது ராமனின் வெற்றியா, அனுமனின் வெற்றியா என்பதை அனுமனால் அனுமானிக்கவே முடியவில்லை.
விடைகாணமுடியா அந்தப் புதிரை, தனது வாலுக்குள் சுருட்டி வைக்க வைக்க, புதிர் வழிச்சுழல்வுகளாய் நீண்டு கொண்டே இருந்தது என்பதை ராமாயணத்தின் நுட்பமான வாசிப்பில் உணரமுடியும். ராமாயணத்தை அடையாளப்படுத்தும் புகழ் பெற்ற ஓவியப் படமான ராமலட்சுமணசீதை சகிதம் அதன் காலடியில் வணங்கியபடி இருக்கும் அனுமனின் படத்தில் அதனுடைய வால் ஒரு கேள்விக்குறி போல வளைந்து நிற்கும் காட்சியை (பெரும்பான்மையான எல்லாப் படங்களிலும்) நுட்பமாக அவதானிக்க வேண்டும்.
மயில்ராவணனின் புதிர்கள் எப்படி ஒரு கோட்டைவழியாய் நிர்மாணம் பெற்றதோ, அதே போல அனுமனின் நீண்ட வால் உருவாக்கிய புதிர்வழிகளும் பல்வேறு தரிசனங்களைக் கொண்ட முரண்புதிர்கள்தான்.
ராமனின் சுட்டுவிரலைச் சுவைத்த காட்சிப்புலன் அனுமனின் ஞாபக அடுக்குகளில் வீறிட்டுக் கிளம்பியது.
சட்டென பாய்ந்து போய் அந்த இடம் முழுமைக்கும் சிதறிக்கிடந்த கற்களை எடுத்து வாயில் போட்டு ருசி பார்த்தது அனுமன்.
அதன் வாய்முழுக்க கற்களும், கற்களின் ருசியும் குதம்பியபடி எச்சில் திரவம் நீரோடையாய் வழிய, ஒவ்வொரு கல்லையும் வாயில் போட்டு ருசி பார்த்தபடி அலைந்து கொண்டிருந்தது அது. கல்லின் ருசி அதன் உடலிலும் நாவின் இழைகளிலும் பாய எல்லையற்ற ருசியைத் தேடி அலைந்தது.
குளித்து முடித்து கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் மயில்ராவணன்.
பரபரத்து நெரியும் கணங்களின் விரல் நொடிப்பு திகைய, அதன் நாவின் சுவையிழைகளில் ஏறுகிறது ஒரு எல்லையற்ற ருசி.
அனுமனின் எச்சில் பட்டதும் சரேலென இருகற்களும் மானுட உருக் கொண்டன.
எதிரில் இந்த நிகழ்வைப் பார்த்து பேதலித்துப்போன மயில்ராவணன் திகைத்துத் தடுமாறி நிற்க, அவனது பலவீனமான தருணத்தை சடுதியில் கைப்பற்றி அவனை தனது நீண்ட புதிர்வாலால் கட்டிப் போட்டு, தனது பலம் கொண்ட முஷ்டியால் அவனது உயிர்நிலையால் அடித்துக் கொன்றது.
என் சொற்கள் சமைத்த புதிர்வழிச்சுழல்வில் மாட்டிக் கொண்டிருந்த ஒரு மின்னிமைக்கணத்தில் இந்தக் காட்சிப்புலன்கள் சுழன்றுசுழன்றேகுகின்றன.
என் முன்னால் கண்ணிகளாய்ச் சுழல்வது மயில் ராவணன் கோட்டையா? வாழ்க்கை முழுதும் விடைகாணமுடியாப் புதிரை தனது வாலுக்குள் மறைத்து வைத்திருந்த அனுமனது வாலின் புதிர் வழியா? அன்றி, நிறம் மாறும் எனது சொற்களின் வேற்றுமொழி வாசம் என்னை வசீகரித்து ஆங்கில இலக்கிய தளத்தை நோக்கிய நகர்வில் கட்டமையும் எல்லையற்ற புதிர்வெளியா?
எங்கிருந்தோ ஒரு வண்டின் ரீங்காரம் நாணற்புற்களில் நுழைந்து மொழிகளற்ற இசைவில் கூடுகிறது.
***************
(இந்தப் படைப்பு, இத்தாலிய மொழியில் நான் எழுதிக்கொண்டிருக்கும் பத்தியின் ஒரு அத்தியாயமாக வெளிவந்தது. மற்றும், ஸ்பானிஷ் மொழியில் தனி ஒரு கட்டுரையாக ஒரு இணைய இதழில் வெளியாகியது. இது வெளி வந்து கவனிப்புக்கு உள்ளான பிறகுதான் ஸ்பானிஷ் மொழியில் பத்தி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப்படைப்பின் ஆங்கில மொழியாக்கம் : மஹாரதி)