- கௌதம சித்தார்த்தன்
என்னைப் பார்த்துக் கொண்டிருப்பவன்
ஒரு வெருகு பூனையாகத்தானிருக்க வேண்டும்
அதன் கண்களில் காலத்தில் தொலைந்துபோன
ஒரு இரவும் ஒரு பகலும் வேட்கையுடன் மியாவுகிறது
கண்ணாடியாளனையும்
என்னையும்
காலமற்ற ஒரேமாதிரியான தோற்றங்களாக உருவாக்குகிறது காலம்.
இடைவெட்டிக்கிழிக்கும் கண்ணாடியின் ரஸவாதமோ
இருவேறு காலங்களை இழைத்துப் பார்க்கிறது.
அதன் நீண்ட மீசை என் கழுத்தைச் சுருக்கிட்டு இறுக்குகிறது
ரசம் கழன்று விழுந்து நெளிகின்றன குற்றபிம்பங்கள்
அதன் எதிரேயிருக்கிற நான்
காலத்திற்கு அப்பாலான அதனின் பிம்பம்தானென்று
யாரதற்குச் சொல்வது?
என்னைக் கவனித்துக் கொண்டிருப்பதான வெருகு
கண்ணாடியின் ஒரு தாபவேட்டையென்று
எனக்குச் சொல்வதும் யார்?
***
இந்தக் கவிதை மஹாரதி அவர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, Timebyrinth என்ற என் கவிதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. மேலும் ஜெர்மன், ரோமானியன், பல்கேரியன் ஆகியமொழிகளில் வெளியான என் கவிதைத் தொகுப்புகளிலும் உள்ளது. ஸ்பானிஷ், ரஷ்யன் மொழிகளின் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.