- கண்ணன் ராமசாமி
திரு கௌதம சித்தார்த்தன் அவர்களின் கதையை இன்று வாசித்தேன். இந்தக்கதையை நான் ஏற்கனவே ஒரு முறை அவரது சிறுகதைத் தொகுப்பில் வாசித்து, என் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளேன்.
ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது, பாதையில் கடக்கும் சிறு சிறு கிராமங்களின் இயற்கை அழகை ரசித்தபடி போகும் ஜன்னலோர பயணம் போல் இருந்தது அச்சிறுகதை. அவரின் சொல்லாடல், கதையின் உட்கரு பற்றி பேச வேண்டும் போலிருந்தது. அதற்காக எழுதுகிறேன்.
நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு! மேலோட்டப் பார்வையில் முகத்தை மட்டுமே பார்க்காத அவருடைய கண், உதட்டின் மேலுள்ள மீசையின் நுனியில் இருந்து தொடங்குகிறது அவதானிப்பை.
கண்களுக்கு மேலே ‘திரைந்திருந்த’….என்ற வரியைப் படிக்கும் போது corrugated என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழாக்கம் இது தான் என்பதை பல நாள் தேடலில் கிடைக்காமல் இன்று கண்டு கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். corrugated எனும் சொல்லை, கடலில் மடிப்புகளுகளோடு பொருத்திப் பார்ப்பார்கள். அது போல இவர் நினைவுகளை கடலாக, அதிலிருந்து எழுகிறது முகம் என்கிறார்.
அடுத்ததாக ஏலேலாந்தொட்டி நாட்டுப்புறப் பாடல். இந்தக் கதையின் தொடக்கமே இந்தப் பாடலை மையமாக வைத்தே வருகிறது. இந்த நாட்டுப்புறப் பாடல், பல நாள் கழித்து தோழியை சந்திக்கச் செல்லும் இளைஞனை பற்றியதே.
அவளை பற்றிய அவனது நினைவுகள் எத்தனை ஆணித்தரமாக பதிந்திருக்கிறது என்பதை மேற்படி விவரிக்கிறார். அவளுடன் இருந்த நாட்களின் நினைவுகள் நிழலாக அசையவில்லை அவனது மனதில். அவன் கிள்ளிய போது செடியின் தண்டிலிருந்து பொங்கி வெளிவந்த பச்சை சாறு கூட அவனுக்கு நினைவில் இருக்கிறது.
இதை உடனேயே நாம் அறிந்து கொள்ள அடுத்த பத்தியிலேயே, நினைவுகளின் ஆழத்தை பச்சை சாரின் வீரியத்தோடு ஒப்பிட்டு, இத்தகைய ஆழ்ந்த நினைவு அவளுக்கும் இருக்குமா என்று ஏங்குகிறான். இருக்கை மற்றொரு நிலைக்கு மாறுகிறது.
“தொண்டைக்குள் தகரம் தேய்ந்து உராயும் ஓசையை ஜன்னல் வழியாக வெளியே துப்பிவிட்டு…”
“வயோதிகத்தின் விலக்க முடியாத போர்வையை அணிந்திருப்பவள்போல தனது இருண்ட துவாலையை நெகிழ விட்டுக்கொண்டு புன்முறுவல் பூத்தாள்…”
என்று முதுமையை தகர ஒலியுடன், போர்வையுடன், பொருத்தி வர்ணிக்கிறார். இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு, துவாலை என்றால் Towel என்று தெரியும்?
அதோடு நில்லாமல்,
“வயதின் முதிர்ச்சி அவளைக் கவ்விக் குதறுகையில் யயாதியைப்போல சிரித்துக் கொண்டிருக்கிறார் அப்பா”
என்று சொல்லி இளமையை இழந்து, வயோதிகச் சாபம் பெற்ற யயாதி மன்னனையும் பொருத்தமான இடத்தில் உட்படுத்திப் பேசுகிறார். யயாதி மன்னனின் பிள்ளையான யதுவின் சந்ததிகளே யாதவர்கள். கிருஷ்ணன் பிறந்த குலம் இது தான். யயாதி பெற்ற சாபத்தை ஏற்ற சர்மித்தையின் மகனான புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்களும் கவுரவர்களும். ஒரு வார்த்தைக்குள் எத்தகைய பெரிய இதிகாசம் அடங்கி இருக்கிறது பாருங்கள்!
தொடர்ந்து, நினைவுகளின் நிகழ்கால/இறந்தகால மாற்றத்தை விளையாட்டின் மேல்/கீழ் அசைவோடு பொருத்திப் பார்க்கையில், ரயில் வண்டி குலுங்குகிறது. உவமையின் நிகழ்கால பரிணாம வளர்ச்சியாகவும் இதை நாம் தொடர்பு படுத்தி எண்ணலாம்.
பிறகு நிகழ்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் பாலமாய் விளங்கும் பத்தியில், குழந்தையின் கன்னக் குழியை பிஞ்சுக் குவடு (cusp) என்று வர்ணனை செய்வதோடு, அக்குழந்தையின் சிறுநீர் தன்னுடைய தொடையில் வழிகிறது என்பதை கண்டு அவன் தன் தோழியின் தொடையில் வழியும் ஆற்று மண்ணோடு தொடர்பு படுத்தி யோசிக்கிறான். அக்குழந்தையின் சிறிய உடல் அவனை யதார்த்தமாக அவர்கள் இருவரும் குழந்தைகளாக (துளியூண்டாக) மாறி தூக்கணாங்குருவி கூட்டில் நுழைந்த கற்பனைக்குள் பயணிக்க வைக்கிறது. ஆனால், அந்த நினைப்பை தொடர விடாமல் மறுபடியும் மறைந்திருக்கக் கூடிய சிராய்ப்புத் தழும்புகளை பற்றி யோசிக்கத் தூண்டுகிறது மேலும் கீழுமாக, நிகழ்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் மாறி மாறிப் பயணிக்கும் இருக்கை. சிராய்ப்புகள் போலவே நினைவுகளும் மறைந்திருக்கலாம் இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார் மறைமுகமாக.
அந்த இருக்கையின் அசைவில் மாறி மாறி அவளுடைய பச்சை முகமும், பரு வெடித்த முற்றிய முகமும் அவனுக்குள் வந்து மறைகிறது. பரு வெடித்த பெண்ணிற்கு கல்யாணமும் ஆகி இருக்கும் இல்லையா?
அந்த இருக்கையைப் போலவே நிகழ்கால பரிணாம வளர்ச்சிப் பொருளான, ரயிலின் கூவல் அவனை வெறுப்படையச் செய்கிறது. அவளை எதிர்கொள்ளப் போகும் சவாலை இப்படி விவரிக்கிறார்.
கல்மிஷமில்லாத பிஞ்சுப் பருவத்தின் நட்பு, இப்போது முகத்தைப் பிளந்து அரும்பியுள்ள இளம் ரோமத்தின் கூர்மையை எதிர்கொள்ளப் போகிறது.
அவளை சந்திக்கும் போது என்ன பேசுவது என்று யோசிக்கையில், பொதுவான விவரணங்கள் அவனை சலிப்படையச் செய்து, அதற்கும் மேலான அந்த உன்னத (உன்னதம் இதழின் நோக்கம் இது தானோ!) விவரணத்தை நோக்கி செல்கிறான். தன்னை விட்டு தூரப் போய்விட்ட அவளை பற்றி யோசித்துக் கொண்டே இருக்கையில் வானம் துலாம்பரமாக மாறுகிறது.
அவனது நினைவுகளின் கூர்மையால் துருப்பிடித்திருந்த மூளையை, தெளிவாகும் வானம் போல, காலம் துலக்குகிறது என்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். நினைவுகளில் இருந்து நிஜத்திற்கு வருகிறான் இளைஞன். புதியவற்றை காண்கிறான்.
அது வரை நேர்கோட்டில் பறந்த ரயில் வளைந்து வளைந்து முன்னேறுகிறது. இவனும் ரயில் என்ஜினிற்கு பெட்ரோல் போல, தனக்கு ரத்தம் பாய்ச்சப் பட்டதாக உணர்ந்து, குறுக்கும் நெடுக்குமான தெருக்களில் பயணித்து அவளைத் தேடுகிறான்.
வீட்டின் கதவு உயர்ந்திருக்கிறது; அவளுடைய நிலையும் அப்படியே அவனுக்கு. அவள் எங்கோ நுகத்தடியில் மேலே இருக்கிறாள். அவளைத் தொட நினைத்தால், உதறுகிறது; தீப்போல சுடுகிறது. மறு முனையில், மூழ்குகிறாள்; அதைத் தடுக்க இவன் தன் சக்தியை எல்லாம் திரட்டி அவளுடைய முனை மேலே வர அழுத்துகிறான்.
கதவு திறக்கிறது. அவளுடைய உன்னத முகத்தை காண்பதாக என்னும் கணத்தில், மறுபடியும் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் விவரிக்கிறார். அவன் நுனி மீசையில் திறந்து கொண்டது நகைப்பு. முடிவில்லாத தேடலை நோக்கி, காலங்கள் அற்ற ரயிலின் ஓசை அவனை அழைக்கிறது.
இந்தக் கதை நான் படித்த கதைகளில் முக்கியமானது. காரணம், ஒவ்வொரு வரியிலும் உட்கரு பயணிக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் கதை பேசுகிறது. ஒரு அருமையான எழுத்தெ திர்காலத்திற்கு வழி காட்டும் சிறுகதையாக இதை நான் பார்க்கிறேன். கௌதம சித்தார்த்தன் அய்யாவுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.
அன்புடன்
கண்ணன் ராமசாமி
***
அன்புள்ள கண்ணன்
மிக மிக நுட்பமான பார்வை கொண்ட அசலான விமர்சனத்திற்கு நன்றி!
உங்களைப் போன்ற குழு மனப்பான்மையற்ற அசலான பார்வை கொண்ட இளம் படைப்பாளிகள்தான் என் எழுத்தைப்பற்றி புரிந்து கொள்ள முடியும்…
அந்தக்கதையை மேலும் இப்படி ஒரு பார்வையிலும் பார்க்க வேண்டும். அதாவது ஆண்களால் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணுக்கு அதி விரைவில் வயதாகி விடுகிறது. ஆனால், ஆண்களுக்கு மாத்திரம் வயதாவதில்லை. காரணம், பெண்களின் தலையில் எல்லாவிதமான சுமைகளையும் ஏற்றி வைத்திருக்கிறது ஆண் சமூகம். கட்டுப்பாடுகள், கலாச்சாரங்கள், கடமைகள்.. இப்படிப் பல்வேறு அம்சங்களை சுமடேற்றி வைத்திருக்கிறது. அவைகளை அழகுற, பெண்களுக்கு கெளரவம் தருகிறமாதிரி வஞ்சகமாக ஏற்றி வைத்திருக்கிறது.
இந்த பல்வேறு அமசங்களைச் சதா சுமந்து சுமந்து,
காலம் நகரும்போது தனது வாழ்வியலும் நகராமல் அதாவது காலத்தோடு ஒன்றி வாழாமல், காலத்தைத் தாண்டி வாழும் ஜீவிகளாக அவர்கள் மாறிப் போவார்கள். இதை இன்னும் விளக்கமாகச் சொன்னால், காலத்தைத் தாண்டி வாழுதல் என்பது 15 அல்லது 18 வயதில் 50 வயயதுப் பெண்களைப் போல யோசித்தல். அதாவது பெரிய மனுஷியாய் செயல்படுதல். 30 வயதில் தலை எல்லாம் நரைத்து 60 வயதுக்காரியின் எண்ணங்களோடு இருத்தல். அப்படி இருக்கும்போது அந்த வயதான எண்ணங்கள் பெண் உடலையும் வயதான மூப்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. இதுதான் ஆண் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட Irony.
சற்றே யோசித்துப் பாருங்கள் : ஆணான உங்களோடு விளையாடியிருந்த பால்ய பருவத்துத் தோழி நீங்கள் கல்யாண வயதை அடையும் தருணத்தில் இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பார். இதுதான் ஆண் சமூகம் பெண் உடலை ஒடுக்கி வைத்திருக்கும் கால விளையாட்டு (Time Game)….
மற்றபடி, உங்களுடைய புதிய நூல் “ஹமார்ஷியா” வெளிவந்து விட்டதா? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அந்த நூலை வாசிக்க ஆவலோடு உள்ளேன்
அன்புடன்
கௌதம்
***