- கௌதம சித்தார்த்தன்
I
இந்தக்கவிதை என்னுடையதல்ல.
டெத் இன் வெனிஸ் எழுதிய தாமஸ் மன்னினுடையதும் அல்ல.
மிக நிச்சயமாக ஆல்பர்ட் காம்யுவுடையதும் அல்ல.
பார்வை தொலைத்த ஜோஸ் சரமாகோ? நெவர்
ஒருவேளை மரியா ஸ்வெட்டேவாவாக இருக்கலாம்.
அல்லது பூட்டிய வீடுகளுக்கு முன் குரல் எழுப்பி
வாங்குவாரற்ற குருவிகளின் பஞ்சாரத்தை சுமந்து செல்லும்
குருவிக்காரனுடையதாய் இருக்கலாம்.
II
கவிதையைக் கவிதை என்று சொல்லாதே
அது ஒரு அடிவயிற்றுப் பசி என்கிறான்
தன் உடலெங்கிலும் சவுக்கால் வீறிக்கொண்டே
மூடிய வீடுகளின் கதவுகளுக்கு முன்
கையேந்தி நிற்கும் கழைக்கூத்தன்.
கதவுகளுக்குப் பின் குரைக்கும் நாய்களின் rabies எச்சில்
தெறிக்கிறது கவிதையெங்கும்.
III
கவிதை என்பது வெட்டிச் சிதைக்கும் கலை அல்ல
பூட்டப்பட்ட பிரம்மாண்டமான வாயில்களின் மீது
சின்னஞ் சிறு முகக்கவசம் அணிந்து
ஒடுங்கி அமர்ந்திருக்கும் போன்ஸாய் மரங்களின் முன்
பூம் பூம் இசை கொட்டி யாசகம் கேட்கிறான் மாட்டுக்காரன்.
மாட்டின் கழுத்து மணிகள் எழுப்பும்
எல்லையற்ற இசைப்பெருவெளியில்
முழங்குகிறது Padme Hum ரிதம்.
அதன் லயத்தில் ஆழ்ந்து மயங்கிய கணம்,
உட் சுருண்டிருந்த கிளைகள் பிளந்து நீண்டு
பிரபஞ்சவெளியெங்கும் அளை பட்டு
நர்த்தனமாடும் இலைகளின் பச்சையத்தில் எழுகிறது
பிரம்மாண்டமான கவிதை வெளி.
IV
நிமிடத்திற்கொருமுறை சானிடைசரில் கை கழுவும்
நிர்க்கதியான வாழ்வில், கவிதையின் நிலை என்ன?
ஜன சஞ்சாரமற்ற மூடப்பட்ட தெருவில்
ஒட்டிய வயிற்றுடன் உடலெங்கும் அழுக்குப் படிந்த
பாசிமணிகள் கூவி விற்கும் பெண்ணின்
முதுகில் தொங்கும் மழலையின் அழுக்குப் புன்னகையில்
மலரும் நறுமணமிக்க பூவுக்கும்
காற்றுப்புகாமல் பூட்டப்பட்ட கதவுகளில், தொலைதூரம் விலகி நின்று,
பதற்றத்துடன் தெளிக்கும் கிருமிநாசினியில்
விரவும் எண்ணெய் பிசுபிசுப்புக்கும் இடையில்
தடுமாறுகிறது கவிதை.
V
ஜன வாசனையற்ற
அடைக்கப்பட்ட கடைத்தெருவில்
அளைவுறும் வெண் தாடியுடன்
தூபப் புகை ஏந்தி நடக்கும் பக்கீரின் கரங்களில்
ஆகாயம் அலைவுபட
சுற்றிச் சுழன்றாடும் சூஃபியாய்
பிரபஞ்சத்தில் மிதக்கிறது தூபப்புகை
அக்கணம்,
தன்னை பிரபஞ்ச விகசிப்பாக மாற்றிப் பார்க்கிறது கவிதை.
VI
கவிதையின் வடிவம் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.
பிழைப்புக்காக நகரத்தில் மாரடிக்கும் நாயகன்
தனது சொந்த ஊரில் செத்துப்போன அம்மாவின் கடைசி முகம் பார்க்க
தனது பெண்டு பிள்ளைகளோடு
இரு சக்கரவாகனத்தில்
வாழ்க்கையையும் சேர்த்து ஏற்றிக்கொண்டு
பிரதான சாலையில் விரையும் கள்ளப் பயணத்தை
கவிதையாக எழுதுகிறது ஈ பாஸ்.
VII
இந்த பின்நவீனத்துவ யுகத்தில்
கவிதை என்பது வரலாற்றை மீளுருவாக்கம் செய்வது என்கிறான் ரோலாண்ட் பார்த்
ஊரடங்கில் பூட்டப்பட்ட பூங்கா வாயிலின் இரும்புக்கிராதிகளை நெகிழ்த்தி
உள்ளே நுழைந்த காதலர்களை
வெட்டப்படாத புற்கள் மண்டிய இருக்கை வரவேற்கிறது
அதில் அமர்ந்து தழுவிக் கொள்ளும் அவர்களது கால்களில்
குத்துகின்றன புற்களின் இணுக்குகள்.
இது என்ன இடம்?
நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? என்று கேட்கிறாள் அவள்.
சேரிகளில், ரயில் தண்டவாளங்களில், ஆற்றங்கரைப் புதர்களில், அடர்காடுகளில்
கொன்று திணித்த காதலர் உடல்களின் குவியல்களை
மறைத்து வளர்கின்றது புல்.
முத்தமிடுவதற்கு வாகாக
முகக் கவசம் நெகிழ்த்தியபோது
அவளது இதழ்களிலிருந்து
விடுதலையாகிப் பறந்த வண்ணத்தி ஒன்று
*கார்ல் சாண்ட்பர்க்கின் கவிதையாக மாறுகிறது.
* “Grass” by Carl Sandburg
VIII
பெற்றோரின் கை பற்றி நடந்த
சின்னஞ்சிறு முகக்கவசம் அணிந்த சிறுமியின்
வெளிர்ந்த கனவுக் கண்களில் கூடு கட்டியிருக்கிறது சிலந்தி
சுவாங் ஸு வின் கனவிலிருந்து தப்பித்த வண்ணத்தி
இப்போது கிருமியாக மாறிவிட்டது
அது, அச்சிறுமியைக் கனவு காணும்போது
பேரிடர் நிரம்பிய இவ் வளி மண்டலம் முழுக்க
விரிகிறது கவிதை.
IX
மீன்களைச் சுமந்து
பூட்டப்பட்ட வீடுகளுக்கு முன் நிற்கும் மீன்காரனின்
நிலை குத்திய கண்களில் அலைபடுகிறது நீர்நிலை
குளத்தில் வீசிய தூண்டில் முள்ளில் மாட்டித் துள்ளுவது
மீனல்ல, மிக நிச்சயமாக தவளையும் அல்ல
நேற்று இன்று நாளை என்கிற காலத்தின் முப்புற வாசலில்
துடி துடிக்கும் கவிதை.
X
இறுக்கமாய் பூட்டப்பட்ட என் கதவின் நிலை மீது
வந்து விழுகிறது ஒரு கல்.
Splash!
நிச்சலனமான நீர்நிலை கலங்க
சுழன்றேகும் நீர்ச்சுழிகளில் சிதையும் சூர்யனில்
உடைகிறது பூட்டப்பட்ட நகரத்தின் சூன்யம்
பாஷோவின் குளத்தில் குதித்த தவளையும்
இந்த நீர்மையில் வந்து விழுந்த கல்லும்
தோற்றிய நீர்ச்சுழிகளை குறுக்கு வெட்டாய் உடைக்கிறேன் நான்
கவிதை எழுதுகிறான் கௌதம சித்தார்த்தன்.
***
*இதில் வருகிற 4 எழுத்தாளர்களும், தொற்று நோய் சம்பந்தமாக நாவல் படைப்புகள் எழுதியவர்கள்.