• Tue. Jun 6th, 2023

நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு

ByGouthama Siddarthan

Jul 30, 2022
  • கௌதம சித்தார்த்தன் 

 

முடிவற்று நீளமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் உட்கார்ந்திருந்தவனின் முகத்தில் அடித்தது மழை. ஜன்னலுக்கு வெளியே விரையும் இருளில் மழைத்தாரைகள் ஒழுக, அந்தப் பெட்டியில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. குளிரின் வசவசப்பு கன்னத்தை நிமிண்ட, அவன் ஆசுவாசமாய் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினான்.

கண்களுக்கு மேலே திரைந்திருந்த காலத்தின் நினைவுகளிலிருந்து எழுகிறது அந்த முகம். அவனது கனவுகளின் அற்புதத்தில் முடிவற்றுச் சுழலும் முகம். ஆனால், இந்த முகம் இப்போது எப்படியிருக்கும்? குழந்தைமை கவிந்த முகத்தின் பச்சை நரம்புகள் நிறம் மாறிப் போயிருக்கும். முயல் குட்டியின் காதுகளாய் அசையும் சடைப் பின்னல்கள் ஒற்றைக் கருநாகமாய் தலையிலிருந்து இறங்குமோ? கண் சிமிட்டல்களின் படபடப்பில் நாணம் கனிந்திருக்கும். இளம் பருவத்துத் தோழி, எது மாறிப் போயிருந்தாலும் உன் நித்யத்துவமான முகம் மட்டும் மாறுவதற்கில்லை…

மேலும் கீழும் அசைகிறது மாட்டுவண்டியின் நுகத்தடி. அதன் இருபக்க முனைகளிலும் அவனும் அவளும் உட்கார்ந்திருக்க ‘ஏத்தலாந்தொட்டி’ விளையாட்டு ஆரம்பமாகிறது. சிறுவன் கீழே போக, மேலே வருகிறாள் சிறுமி. அவன் மேலே வர, அவள் கீழே…

ஏலேலாந்தொட்டி ஏத்தலாந்தொட்டி
ஏலேலாந்தொட்டி எறக்கலாந்தொட்டி
எம்பக்கம் ஒசந்தா எம்பொழுது ஓடுது
உம்பக்கம் ஒசந்தா உம்பொழுது ஓடுது….

அவன் திரும்பிக் கொண்டிருந்தான், அவனது இளம் பிராயத்திற்கும் பால்யகாலத் தோழியின் விளையாட்டிற்கும் மற்றும் ஒளிந்து திரியும் எழுத்துக்களுக்கும்.

வேலியோரப் படப்புகளில் சுளித்தோடுகிறது செம்பகக் கொடி. அதன் பச்சைக் சாறு பொங்கும் மாயமையின் வினோதம் அவன் பிஞ்சுக் கரங்களைக் கொத்துகிறது. கைகளை எட்டிப்போட்டு அந்தக் கொழுந்தைக் கிள்ளியெடுக்க, பச்சை நரம்புகளில் துளிர்க்கிறது ஈரமுத்து. சிந்தாமல் எடுத்து அந்தச் சிறுமியின் கையில் எழுதுகிறான் அவன். சற்றைக்கெல்லாம் சூட்சுமமாய் மறைந்து போகிறது ஈரச்சாற்றின் தடயம். அவன் குமிழியிடும் உற்சாகத்துடன் தனது எச்சிலைத் தொட்டு, எழுதிய அவள் கையின் மேல் துடைத்தால் பளிச்சென்று புலப்படும், ரகசிய எழுத்துக்கள்.

இத்தனை வருட கால இடைவெளியின் நீட்சியில் தன்னை அவள் மறந்திருப்பாளோ? மழை வழியும் இருளில் துளிர்த்த மின்னற்கோடுகள் அவன் முகத்தைக் கிழித்தன. கண்களில் வழிந்தது ரகசிய எழுத்துக்களின் ஆநந்தம். இன்னும் அந்த செம்பகக் கொடிச் சாற்றின் வீரியம் இருக்குமா?

அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த கிழவியின் வறட்டு இருமல் ரயில் சத்தத்தையும் மீறி ஒலித்தது. முகத்தின் தாடை நரம்புகள் வெடிக்க கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, அது ஒரு தொடர்ச்சியான இருமல். தொண்டைக்குள் தகரம் தேய்ந்து உராயும் ஓசையை ஜன்னல் வழியாக வெளியே துப்பிவிட்டு அவனைப் பார்த்தாள். தும்பைப் பூவாய் நரைத்த சிகை ரயிலின் காற்றலைக்கு ஏற்ப படபடத்து அசைந்தது. வயோதிகத்தின் விலக்க முடியாத போர்வையை அணிந்திருப்பவள்போல தனது இருண்ட துவாலையை நெகிழ விட்டுக்கொண்டு புன்முறுவல் பூத்தாள் முதியவள்.

முதுமையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அம்மாவின் முகம் செதில் செதிலாக உதிர்கிறது. பிரம்மாண்டமான மதிற்சுவர்களின் இடுக்குகளில் மாட்டிக்கொண்டது அவளின் நிழல். வயதின் முதிர்ச்சி அவளைக் கவ்விக் குதறுகையில் யயாதியைப்போல சிரித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. அவரது கருத்த நுனி மீசையில் திறந்து கொள்ளும் நகைப்பு, நுகத்தடியின் வினோதமான ஆட்டத்தில் க்றீச்சிடுகிறது. அது ஒரு விந்தையான தாலாட்டு. காலுக்குக் கீழே விலகிப் போகிறது நிலம். அந்தர வெளியில் அசைகிறது உடல். மௌனத்தை உடைத்துக்கொண்டு உயர எழும்புகிறது காற்று. ஆகாசமும் பூமியும் மாறிமாறிக் கண்களில் நிறைகின்றன. நிகழ்காலமும் இறந்த காலமும் அசைந்து அசைந்து காட்சிகள் மறைந்து, காலத்தின் நடுவே அவர்கள் வீற்றிருந்த அற்புதம் ஆடிக் கொண்டிருக்கிறது.

அவன் கால்களில் உறுத்தியது ரயிலின் குலுங்கல். தடக் தடக் ஓசை இருப்புக் கொள்ளாமல் உடம்பெங்கும் அனத்தியது. மின் விசிறியில் அலைவுபட்ட கூதல் காற்றின் மணம் அவனுக்குள் விறைக்க புகை பிடிப்பது குறித்து யோசித்தான். எதிர் இருக்கையின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கைகளை நீட்டிச் சிரித்தது. கண்களின் பிஞ்சுக் குவடுகளில் சிந்திய அழகு ரம்மியமான சுவாசத்தைப் பரப்பியது அவனுக்குள். அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கைகளை நீட்டி அவன்மேல் சரிந்தது குழந்தை. கண்ணாடி வளையல்களின் கிணுகிணுப்பில் சட்டென அவளைத் தூக்கியபோது உடம்பெங்கும் கிளும்பல் அதிர்ந்தது. குழந்தையின் செய்கையில் பெற்றோர் சற்றே பதறி ஆசுவாசமாய் சிரித்தனர். “யாரிடமும் கூச்சமில்லாமல் வந்திடுவா தம்பி…” புன்முறுவலித்தார் அவர். குழந்தை அவன் முகமெங்கும் அளைந்து தாவிச் சிரிக்க, அவளது கண்களின் பச்சை வெட்டில் அகப்பட்டுக் கிடந்தபோது, சிறுநீர் கழித்திருந்தது குழந்தை. “அடடா.. ஸாரி…ஸாரி…” பதற்றத்துடன் குழந்தையை தூக்கிக் கொண்டவர் நீட்டிய கைக்குட்டையை நிராகரித்து தன்னுடையதை உபயோகித்தான். தொடைகளில் சில்லென்ற ஈரம் பரவி வெளியில் அலைந்தது.

காலம், ஒரு பறவையின் சாகசத்துடன் பறந்து போன வருடங்கள்… ஞாபக அடுக்குகளில் மிதக்கும் ஒரு குமிழி உடைய, ஆற்று மணல் அவள் கால் தொடைகளில் வழிகிறது. நாலடி தூரத்திற்கு குமியாய் அணைத்துக் கட்டுகிறாள். ரயில்போல மணற்பொதி. ‘முச்சு முச்சுக் கல்லு, முனகாத கல்லு, எதிராளி வந்தா ஏச்சு நிக்கற கல்லு’ என்று ராகம் பாடிக்கொண்டே அணைத்த மணலுக்குள் சின்னக் கல் ஒன்றை மறைத்து வைக்கிறாள். “ம், காட்டு.” அவன் இரண்டு கைகளையும் கோர்த்து மணற் பொதியின் நடுவில் பதிக்கிறான். “ஹ்ஹஹா… ஏமாந்துட்டே” மணற்பொதியின் ஓரத்திலிருந்து கல்லை எடுக்கிறாள். ஆற்றோரத்தின் பனைமர வரிசையில் தொங்கும் தூக்கணாங் குருவிக் கூடுகளில் படுத்துத் தூங்க வேண்டும் என்று சொன்னாள் அவள். அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. உடனே அவளது முகம் ஒரேயடியாய் கூம்பிப்போய் சாரமிழந்துவிட, அவன் அவளை எவ்வளவோ தேற்றிப் பார்த்தான். செய்வதறியாது திகைத்து நின்றவனின் கண்களில் சட்டென அற்புதம் சமைந்தது. அவளை முதுகில் ஏற்றிக் கொண்டு தனது கைகளை ரெக்கைகளாக்கி கடைந்து கடைந்து மேல் நோக்கி எம்ப, சற்றைக்கெல்லாம் அவனும் அவளும் துளியூண்டாக மாறி தூக்கணாங் கூட்டில் முயங்கிக் கொண்டிருந்த கணங்கள்…

முழங்கால் சிராய்ப்புத் தழும்பு மறைந்திருக்குமில்லையா?

எத்தனை விளையாட்டுக்கள் விளையாடியிருந்தாலும் நுகத்தடியின் மாயா ஜால ஆட்டம் மட்டும் அவனது ரத்த ஓட்டத்தில் ஒரு உடையாத குமிழியாக மிதந்து கொண்டேயிருக்கிறது. இருக்கை அசையும்போது காட்சிகள் மாறுகின்றன. கண்களில் அகப்பட்ட உலகம் விலகிப் போய் பிரம்மாண்டமான வெளி விரிகிறது. தலைக்கு மேலே உறையும் காலம், காலடியில் நதி நீராய் சுழித்தோடுகிறது. ஒரு முனையில் வெயிலின் நினைவுகள் சுரீலெனக் கவ்வி இழுக்க, மறு முனையில் படர்கிறது இருளின் மந்தாரம். அவனது இருக்கை முனை மேலே வரவர அவனுக்குள் மாறுதல் நிகழ்வதை உணர்கிறான். அந்தரத்தில் உயர்ந்திருந்தபோது பெரியவனாகிப் போயிருந்தான். சட்டென அவனது முனைதாழ, எதிர்முனை உயர்ந்துகொண்டே வந்தது. சிறுமியாக இருந்தவளின் முகத்தில் பருக்கள் வெடித்தன. கீழே இறங்கும்போது சிறுவனாகவும், மேலே எழும்பும்போது பெரியவனாகவும் மாறிப்போகிற விசித்திரமான விளையாட்டு அது. அவளுக்கும் அவனுக்குமான காலங்காலமான தன்முனைப்புப் போராட்டம் அது.

அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமோ?

ரயிலின் கூவல் மண்டைக்குள் நாராசமாய்ப் பாய்ந்தது. பதட்டத்தின் உச்ச வேகத்தில் கசியும் வேர்வை நாற்றம் அவனுக்குள் புழுங்கியது. கற்பனையில்கூட நினைக்க முடியாத இந்தச் சித்திரவதையின் வெம்மை அவ்வப்போது உயிரைப் பிடுங்கித் தின்னும். இறையுணர்வின் அடி நாதமாய் வாய்விட்டு அரற்றுவான் சமயத்தில். சீறித் தணிகிற மூச்சுக் காற்றின் உஷ்ணத்தில் கால்களில் குமைச்சல் ஏறியதில் எழுந்து கதவருகில் நடந்து போய் கதவைத் திறந்தான். ஈரங்காய்ந்த குளிர் சரேலென அவனைத் தாக்கியது. சிகரெட்டின் ஆசுவாசமான புகை வளையங்கள் வெதுவெதுப்புடன் கரைந்தோடின. திகைக்கும் கால்களின் அந்தர நடையை, வெளியே மினுக்கிட்டான் பூச்சிகள் ஊரும் இருள் துழாவிக் கொண்டிருந்ததை உணர்ந்தான்.

கல்மிஷமில்லாத பிஞ்சுப் பருவத்தின் நட்பு, இப்போது முகத்தைப் பிளந்து அரும்பியுள்ள இளம் ரோமத்தின் கூர்மையை எதிர்கொள்ளப் போகிறது.
அவளைப் பார்த்ததும் என்ன பேசுவது என்று வார்த்தைகளைத் தேடி அலைந்தான். காலங்காலமான தேடலில் மலினமான வரிவடிவங்களும் மொழி வடிவங்களும் முகமெங்கும் மொய்க்கின்றன. அவைகளைக் கலைத்தெறிந்து அந்த உன்னதமான வடிவமற்ற வடிவத்தை யோசிக்கிறான். தங்களைப் பிணைக்கும் உறவின் வேர்களிலிருந்து முகிழ்க்கிறது அந்த வடிவம். அவனது யௌவனத்தை அரித்துத் தின்றுகொண்டிருக்கும் காலத்தின் பக்கங்களிலிருந்து எழுகிறது அந்த உன்னதம்.

அப்பாவுக்குத் திடீரென நகரத்தில் வேலை மாற்றம் கிடைத்து புலம் பெயர்ந்தபோது, அவனது ஏத்தலாந்தொட்டி உயரப் போய்க் கொண்டேயிருந்தது.

கிராமத்து மண்ணும் பச்சை வயல் அழகும் பால்ய சிநேகிதியும் புல்லாங்குழலும் நெடுந்தூரம் போய்விட்டார்கள். புல்லாங்குழலில் எரியூட்டப்பட்ட ஸ்வர வரிசையோடும் அவளது நினைவுகளோடும் முடிவுறாத ஆற்றாமையோடும் போராடிக் கொண்டிருந்த அவனை, அவளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வழியை வார்த்தைக் கூட்டம் அமைத்துத் தந்ததை உணர்ந்தான். அவளின் அற்புதத்தை தரிசிக்க அவளை அழைத்துச் செல்லும் மானசீகப் பயணம் அது. கைகளில் அவிழ்கின்றன வார்த்தைகள். கவிதையாக, குறிப்புகளாக, ஓவியக் கிறுக்கல்களாக அலையோடி வருகிறாள் அவள்.

பெட்டி முழுக்கத் தூங்கி வழிந்து கொண்டிருந்தது தூக்கம். வெளியே மழைவிட்டிருந்த வானம் துலாம்பரமாய்த் தெரிந்தது. ரயிலின் ஓட்டம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதை அவனது உடம்பின் விறுவிறுப்பில் உணர முடிந்தது. கட்டுக் கடங்காத நினைவோட்டத்தின் நீட்டம் சிரசு முழுக்க வெட்டி வெட்டிக் கிளைத்தது. மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்த்தான். காலத்தின் சவால் போல நெளிந்து நெளிந்து ஓடியது ரயில்.

அவனது பிஞ்சுக் கண்கள் முழுக்க புதிய ஊர், புதிய மனிதர்கள், புதிய காட்சிகள். காலத்தின் அடர்த்தியில் எல்லாமே சரிகின்றன. வளரிளம் பருவத்தின் அபூர்வம் நிரம்பிய நாட்களில் அவன் கண்டான், தனது கண்களின் ஓரத்தில் அவளின் நினைவுகள் கூடுகட்டிக் கொண்டிருப்பதை. மேலும் கண்டான், தான் ஒரு பெரும் பள்ளத்தில் வீழந்து கிடப்பதையும். வாழ்க்கைக்கும் தனக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவது அவளாகத்தானிருக்க முடியும் என்பதை உணர்ந்தபோது கண்களில் தொங்கின தூக்கணாங் கூடுகள். அவளுக்கும் அவனுக்குமான தாத்பரியத்தின் முடிச்சு பெரியவனாக ஆக இறுகிக்கொண்டே வந்தது. அவன் நண்பர்களுக்கு எழுதும் கடிதத்தில் அவளைப் பற்றி இரண்டு பக்கம் நாசூக்காய் விசாரித்தான். வந்தது ஒற்றை வரி பதில்: ‘அவர்கள் குடும்பத்தோடு வேறு ஊருக்குப் போய்விட்டார்கள்…’

ஒளிந்து கண்டுபிடிக்கும் சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடும் சின்னஞ் சிறுவனாக மாறிப்போனான் சட்டென்று. ஒளி விளையாட்டின் சாகசங்களும் நுணுக்கங்களும் அவன் உள்ளங்கைக்குள் ஊடுருவ, ஏழு சமுத்திரம் தாண்டி வனம் வனாந்திரங்களுக்குப்பால் உள்ள புஷ்பராகப் பொய்கையில் எல்லாம் அலைந்து திரிந்தான். ஒளி விளையாட்டில் அவன் ஒரு நாளும் தோற்றதில்லை. இருப்பிடத்தைக் குறிப்பிட்டு எழுதியிருந்த ஒரு நண்பன், ‘எதற்காக விசாரிக்கிறாய்?’ என்று புருவத்தை உயர்த்தியிருந்தான்.

அதிகாலையைக் கிழித்துக்கொண்டு ஓடிய ரயிலின் இயக்கம் தேய்ந்து ஊர்ந்தது. கால்கள் பதற்றத்துடன் வெளியை நோக்கித் தாவ ரயில் கண்ணியிலிருந்து விடுபட்ட அவனது கால்களில் புது ரத்தம் புரண்டு புரண்டு ஓடியது. பாதங்களின் ஒவ்வொரு எட்டிலும் கால்த்தசைகள் விம்மின. இதுவரை அனுபவித்தறியாத உணர்ச்சிப் பிரவாகத்தின் அலைமேடுகள். எண்ண ஓட்டங்களின் ஆனந்தக்களி அவன் கால்களெங்கும் லயித்தது. எலும்புகள் உடைய நரம்புகள் புடைக்க பாதங்கள் பற்றியெரிய, ரயிலின் பிரம்மாண்டமான சக்கரங்கள் கால்களில் பிளந்தன. அவனுக்குள் என்ஜின் உறுமியது. குறுக்கும் நெடுக்கும் வெட்டப்பட்ட பாதைகள் திகைப்புடன் பின்னோக்கி ஓடின.

ஒரு வழியாய் வீட்டைக் கண்டுபிடித்தபோது அவனை ஒரு அமானுஷ்யமான அமைதி கப்பிக் கொண்டது. படிக்கட்டுகளில் உயர்ந்து கதவைத் தொட்டான்.

மின்சாரம் பாய்ந்திருந்த ஒரு இஸ்திரிப் பெட்டியின் தொடுகையில் நிலை தடுமாற கால்கள் பின்ன தலைகும்மென்று வலித்தது. கதவின் வலிமையான அரண்கள் பிரம்மாண்டமாய் அவன்முன் உயர்ந்து நிற்க, மறுபடியும் கதவைத் தொடும்போது கைவிரல்களின் நடுக்கத்தில் கதவு அதிர்ந்தது. உள்ளே ஒலித்த பேச்சுக் குரலில் பெண்மை. ‘ஹ்ஹோ… இதோ… இதோ…!’ காலங்காலமாய் சேகரித்து வைத்திருந்த வடிவம் மேலும் கீழுமாய் ஓடிக்களிக்க, ரத்த ஓட்டத்தில் மிதந்து கொண்டிருந்த ஒரு குமிழி உடைந்தது.

உயர்ந்திருந்த நுகத்தடியின் ஒரு முனையில் உருமாறிக் கொண்டிருந்தாள் அவள். அந்தரத்தில் அசைகிறது கால விளையாட்டு. அவள் காலாடப்பட்டு நீர்த்துளிகள் அலையோடும் நீர் நிலை அசைந்த போது தாழ்ந்து, வண்டல் திணிந்த மணற்பாலை தொடுகையில் பின்னோடி, வனப்பு மிகு மருதத்தின் உயர்ந்த கொம்புகளில் தாவி காலவெளியின் பரிமாணம் சுழன்றடித்தேகுகிறது. ஆழமான மடுவில் துடும் என்று ஒலிப்பக் குதித்து அவள் முனை மூழ்கிக் கொண்டே போக, அந்தரத்தில் அசையும் மறுமுனையில் தனது பலமனைத்தையும் ஒன்று திரட்டி அழுத்துகிறான் அவன்.

கதவு திறவுபடுகிறது.

நித்யத்தவம் கவிந்த அதே முகம். வாழ்வின் அர்த்தம் பூரணத்துவமடைந்துவிட்ட உன்னத கணங்கள் அவன் உடம்பெங்கும் ஒளிர்ந்தன. தனது ஜீவித ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் உள்முகம் நோக்கி ஓடினான். கன்னக் கதுப்புகளில் தொங்கிக்கொண்டிருந்த காலம் ஒரு பெரிய சிலந்திப் பூச்சியாக அசைந்தது. மூப்பின் வஞ்சகப்பிடி திகைத்து நிற்க, கடவுளே… ஆரவாரித்தெழுந்த கடலலைகள் சரேலெனத் தாவி அவன் காலடி மணலைக் கவ்வியிழுந்த கணத்தில் கீழே கீழேயென்று விழுந்து கொண்டிருந்தான்.

ரயிலின் காற்றலையில் தகரம் தேய்ந்து உராயும் வறட்டோசை. கிழத்துவம் எய்திய உடல் விலகி தொடைகளில் சில்லென்ற ஈரம் பரவும் கண்ணாடி வளையல்களில் குளுமை. ரயிலின் குலுங்கலில் பழங்கதவு அசைந்தோடி விலக நரையோடி கறுப்பை அழித்திருந்த சிகையில் முயல் குட்டியின் காதுமடல்கள் விரிந்தன. அவன் மேல் சரிந்து விழுந்த பிஞ்சு விரல்களின் ஸ்பரிசம் ரோமக் கண்களை நீவியதில், கூர்மங்கிய கண்களின் கண்ணாடிச் சட்டகங்களில் விழுந்து அழுந்தினான். இடுப்பின் சுருக்கம் விழுந்த மடிப்புகளைக் கொத்தித் தின்று கொண்டிருந்த வெயிலின் நிழல் என்றைக்கும் ஒருக்களித்துச் சாயும் அசைவில், ரயிலின் குலுங்கலுக்கேற்ப தளர்ந்து தொய்ந்து போன முலைகளின் நடுக்கம். சட்டென, வெயில்படாத அவனது நுனி மீசையில் திறந்து கொண்டது நகைப்பு.

அவனது காலடிச் சத்தம் திரும்பி ஒலிக்க, மற்றொரு தெருவில் அதே சத்தத்தை அவன் கேட்க, தூரத்து ரயிலின் சங்கொலி காலங்களற்று அழைத்தது.

 

***

(1995 களில் எழுதப்பட்ட இந்தக் கதை, ஜுலை 6-20, 1996. இந்தியா டுடே இதழில் வெளிவந்தது. இதழின் ஆசிரியராக இருந்த வாஸந்தி அவர்கள், மிக மிக அற்புதமான கதை என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page