• Wed. Nov 29th, 2023

ஹெராக்ளிட்டஸ் நதிக்கரையில்… ஒரு கடிதம் 

ByGouthama Siddarthan

Jul 30, 2022
  • யாழிசை முருகன்

 

அன்புள்ள ஆசிரியர்க்கு,

ஹெராக்ளிட்டஸ் நதிக்கரையில், செழித்து வளர்ந்திருந்தது காட்டுப் புல்! என்ற கட்டுரையை வாசித்தேன் மிக அற்புதமான கட்டுரை.

ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது இப்படியான, விளக்கமான அடிக்குறிப்புகள் ஏதும் இல்லாமலேயே அதன் ஆன்மாவை வாசகனுக்கு உணர்த்த வேண்டும். மேலும், மூலத்தை பெரிதும் சேதப்படுத்தாமல், அதன் உள்ளடக்கத்தை, கவிதையின் மையத்தை, மொழிபெயர்க்கும் மொழியின் வனப்புடன் இணைந்து செயல்படும் விதமாக மொழியாக்க மொழியின் அழகியலோடு முன்வைக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர். ஆசிரியர் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களையும் கவிதையில் உள்ள நுணுக்கங்களை சொல்கிறார்.

புல்
– கார்ல் சாண்ட்பர்க்

ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள்
திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள்
எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல்

கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாகக் குவியுங்கள்
இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாகக் குமியுங்கள்
திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள்.

காலம், ஆண்டுகளாய் நகர,
கால்களில் குத்தும் புற்களைக் காட்டி பயணிகள் வழிகாட்டியிடம் கேட்கிறார்கள்:
இது என்ன இடம்?
நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம்?

நான் புல்.
ஊசி முனைகளாக நீள்கின்றன என் தழல்கள்.

-தமிழில் : கௌதம சித்தார்த்தன்

Carl Sandburg’s “Grass” கவிதை, போருக்கு எதிரான உலகப்புகழ்பெற்ற இக்கவிதை, இரண்டாம் உலகப் போரில் வதை முகாம்கள் செயல்பட்ட விதத்தையும், வரலாற்றை வாழ்க்கையின் புதிய அடுக்குகளுக்கு அடியில் துளிர்க்கும் தன்மையையும் முன்வைக்கிற நேர்த்தியை காலுக்கு அடியில் குத்தும் புல்லின் குத்தலில் காட்சிப்படுத்தியிருக்கும் அழகியல் கொண்டது.

புல் பற்றிய படிமத்தை, முற்றிலும் எதிரான பார்வையில் தனக்குள் வைத்திருக்கிறது கவிதை. “புல் செயல்படும் தன்மை” என்பது எல்லாவற்றையும் மூடி மறைப்பதல்ல, மாறாக, எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துவது என்கிற பார்வையை முன்வைத்து, புல் என்பதை ஒரு மெட்டாபர் ஆக மாற்றிப் போடுகிறார் சாண்ட்பர்க்.

உலகில் எங்கெங்கெல்லாம், விடுதலைப் போர்களும், வதைமுகாம்களின் படுகொலைகளும் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் கார்ல் சாண்ட்பர்க்கின் இந்தக்கவிதை உயிர்த்தெழுந்துகொண்டே இருக்கும் அமரத்துவம் பெற்றது.

புற்கள் ஒவ்வொரு காலத்திலும் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அதே புற்கள் அல்ல. ஒவ்வொரு காலத்திலும் அறுவடைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன, அறுவடைப் பெண்கள் பாடல் பாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால், அதே அறுவடை அல்ல.

இந்தப் படிமம் குறித்து, ஹெராக்ளிட்டஸ் காலத்திற்கு முந்தைய காலத்தில் (கி.மு.300 – கி.பி.200) வாழ்ந்த தமிழ்க்கவி சொல்வதைக் பொருத்தியுள்ளார் ஆசிரியர்.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!(புறநானூறு.பாடல்.112.)

பாரி மகளிரும், வெண்ணிலாவை ஒரு மெட்டாபர் ஆக மாற்றியிருக்கிறார். அந்த மெட்டாபர், தமிழ் கலாச்சாரத்தின் வாழ்வியலோடு ரத்தமும் சதையுமாக பின்னிப் பிணைந்தது. அதாவது, பூரணமான வெண்ணிலாவைப் பார்க்கும்போதெல்லாம், போர் பற்றிய நினைவுகள் அலையடிக்கின்றன கவிஞருக்கு. அதாவது வெண்மை நிறம் கொண்ட வெண்ணிலா! கொடூரமான போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மரணமுறுவார்கள்.

போர் குறித்த கொடுங்கனவுகள், சாண்ட்பர்க்குக்கு, காலில் குத்தும் Grass என்றால், வேர்ட்ஸ் வொர்த்க்கு, ஒரு பெண்ணின் மொழியறியாத துயரமான பாடலின் தொனி, தமிழின் பாரிமகளிருக்கோ, பூரணச் சந்திரமுகம் கொண்ட வெண்ணிலா!

ஹெராக்ளிட்டஸின் ஆற்றில் குதித்தால் ஒவ்வொரு முறை மூழ்கி எழும்போதும், வேறு ஒரு மனிதனாக எழுவதுபோல் ஒவ்வொரு முறையும் கவிதையை ஆழ்ந்து வாசிக்கும்போது கவிதையின் பல்வேறு பரிமாணங்கள் புலப்பட ஆரம்பிக்கும். கவிதையை எவ்வாறு மொழிபெயர்க்க வேண்டும் அதில் உள்ள சாரத்தை எப்படி அறியவேண்டும்.உலக கவியை தமிழ் கவியோடு ஒப்புமை படுத்தியவிதம் ஒவ்வொன்றிலும் புதுமை காட்டுகிறார் ஆசிரியர் கௌதம சித்தார்த்தன். அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
யாழிசை முருகன்

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page