- கௌதம சித்தார்த்தன்
1
சமீபத்தில் சென்னையில் நடந்த சிறுவர்களுக் கான கதை சொல்லும் நிகழ்வுக்குப் போயிருந் தேன். நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு மேலை நாட்டைச் சேர்ந்த கதை சொல்லி, தங்களது மரபு சார்ந்த ஐரோப்பியத்தன்மை கொண்ட கதைகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழின் மரபார்ந்த சூழலை முன்னிறுத்திப் பேசும் நாட்டுப்புறக் கதைகளாகவோ, உருவகக் கதைகளாகவோ, தொன்மங்களாகவோ எதுவும் இல்லை. முழுக்க முழுக்க ஐரோப்பிய நாட்டுப்புற மரபின் உள்ளார்ந்த கதை சொல்லல்களே பெரிதும் வெளிப்பட்டன.
பொதுவாகவே இதுபோன்ற மேலை நாட்டுக் கதை மொழியை, ‘அக்கரைப் பச்சை’யின் ஈர்ப் புடன் தொடர்ந்து ஆராதித்துக் கொண்டே வந்திருக்கிறோம். நம்முடைய தொன்மையான தமிழ் மரபில் உள்ள கதைக் கூறுகளைக் கண்டு கொள்ளாமல் மேலைநாட்டு இலக்கியங்களையும் செயல்பாடுகளையும் வானளாவப் புகழ்ந்து கொண்டே வந்திருக்கிறோம். இந்தப் போக்கு முழுக்க முழுக்க பின் நவீன எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து தான் தோன்றுகிறது.
1980களுக்கு முந்திய தலைமுறையினரான கி.ரா., மு.சுயம்புலிங்கம், பூமணி, பா.செயப்-பிரகாசம், வண்ணநிலவன், இராசேந்திர சோழன், பிரபஞ்சன் போன்றவர்களிட மிருந்து தோன்றிய ‘கரிசல் எழுத்து’ தமிழின் நவீன எழுத்து தளத்தை தமிழின் முக்கியமான அடையாளமாக மாற்றியது.
அதன்பிறகு வந்த அடுத்த தலைமுறையினர் முழுக்க முழுக்க மேலைநாட்டுக் கதை சொல்லும் உத்திகளில் கவனம் செலுத்தினர். அந்தக் கட்டத்தில் தமிழில் பரபரப்பாக அறிமுகமான ‘பின் நவீனத்துவம்’ என்னும் மேலைநாட்டுக் கோட்பாட்டை விமர்சகர்களும், படைப்பாளி களும் தங்கள் சௌகரியத்திற்கேற்ப புரிந்து கொண்டு தலைசுற்றியாடினார்கள். தமிழ் மரபைப் பற்றியோ, தமிழின் கதைக் கூறுகளைப் பற்றியோ பேசுவது பரிதாபமான விஷயமாக மாறியது. தமிழின் செழுமையான மரபில் ஒன்றுமேயில்லாதது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி-னார்கள். ஒரு படைப்பாளி, அந்தக்கால கட்டத்தில் இயங்க வேண்டுமென்றால் முழு முற்றாக இந்தப் பின் நவீனத்துவ அலையில் ஐக்கியமாகிவிட வேண்டும் (புரிந்தாலும், புரியாவிட்டாலும்) என்ற நிலை பலமாக வேரூன்றியது.
அந்தக் கட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸின் மேஜிக்கல் ரியலிஸம் போன்ற பார்வைகள் தமிழின் நாட்டுப்புற இலக்கியங்களில் இருக்-கின்றன என்று நான் சுட்டிக்காட்டியபோது, ‘நாட்டுப்புறத்தான்’ என்று பின் நவீனத்துவத் திலகங்களால் எள்ளி நகையாடப் பட்டேன்.
ஆனாலும், அந்தப் பின்நவீனத்துவச் சூழலில் நவீன தமிழ் இலக்கிய வெளிக்கு அறிமுகமான ஒருசில நல்ல அம்சங்களையும் குறிப்பிட வேண்டும். மரபார்ந்த கதை சொல்லலிலிருந்து விலகி புதிய கதை சொல்லும் உத்திகள் (narration) பல்வேறுவிதமான வடிவங்களில் அறிமுகமாயின. கதையை எழுதி முடித்தவுடன் கட்டமையும் ஒரு கதைப் பிரதி (Text) என்பது அதுவரையிலும் எல்லோரும் அறிந்த ஒரு சாதாரண விஷயம். ஆனால், பின் நவீனத்துவப் பார்வை என்பது அதை வேறுவிதமாக மாற்றியது. அதாவது, கட்டமைந்துள்ள கதைப் பிரதிக்கு வெளியே இன்னொரு கதையைக் கட்டமைக்கும் புதிய பார்வையை (Invisible Text) உருவாக்கியது. இப் பார்வைகள் லத்தீனமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவின. அழகியலாக நகரும் அக்கதைகளின் உள் மடிப்பு களில் Inner text ஆக விரிபடும் கதைகளின் அரசியல் திறப்பு, மிக மிக முக்கியமானதும், புத்தம் புதிய பார்வைகளைக் கொண்டதுமானது.
மார்க்வெஸின், ‘நீரைப் போன்றது ஒளி’ என்ற கதையை முன்வைத்து இதை விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு விடுமுறை நாளில் குழந்தைகள் தங்களது மாடி வீட்டில் விளையாடுகிறார்கள். அந்த மாடி வீட்டில் படகுச் சவாரி செய்ய விரும்புகிறார்கள். படகுச் சவாரி செய்ய நீர்நிலை வேண்டுமே… அதற்காக மேஜிக்கல் ரியலிஸத் தன்மையுடன் ஒரு காரியம் செய்கிறார்கள். அந்த மாடி வீட்டில் உள்ள மின்சார விளக்கின் கண்ணாடி உருண்டையை உடைக்கிறார்கள். அப்பொழுது ஒரு அற்புதம் நிகழ்கிறது. உடைத்த மின் விளக்கிலிருந்து சிந்தும் ஒளி, நீராக மாறி அந்த அறையெங்கும் பரவுகிறது. மாடி வீடு முழுக்க நீரோட்டம் நிரம்பி நீச்சல் குளம் போல வழிகிறது. குழந்தைகள் உற்சாகத்துடன் அதில் படகுச் சவாரி செய்கிறார்கள். சந்தோஷத் துடிப்பில் மீன்களுடன் மீன்களாக நீந்தி விளையாடுகிறார்கள். சற்றைக்கெல்லாம் அந்த ஒளிவெள்ளம் பாய்ந்தோடி வீடு முழுக்க வெள்ளம் நிரம்பி வழிந்து அந்த நகரையே மூழ் கடிக்கும் Fantasy நிகழ்கிறது.
இது ஒரு அழகியல் தன்மையுடன் கட்டமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான பேண்டஸியான கதைப்பிரதியாக இருந்தாலும், இந்தக் கதைப் பிரதிக்கு வெளியே இன்னொரு கதைப்பிரதி Invisible Text ஆகக் கட்டமைகிற சாராம்சத்தைக் கவனியுங்கள்.
‘எங்களது அமேஸான் நதியிலிருந்து மின்சாரத்தை அபகரிக்கிறீர்கள். எங்களது இயற்கை வளங்களை நாசமாக்குகிறீர்கள். இப்படி எங்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் நீங்கள் ஒரு தருணத்தில் அவைகளின் சீற்றத்திலேயே அழிந்து போவீர்கள் என்று ஒரு பழங்குடியின் குரல் பிரதிக்கு வெளியே ஒலிக்கிறது.’
இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சங்ககாலத் திணைக் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறும் ‘உள்ளுறை’ ‘இறைச்சி’ போன்ற கருத்துருக்கள் இதுபோன்ற பார்வையைத்தான் முன் வைக்கின்றன. ‘இந்தத் தினைக் கோட்பாட்டை முன்வைத்து உலகளவில் இந்திய விமர்சனக் கோட்பாட்டை உருவாக்கலாம்’ என்கிறார் மலையாள விமர்சகரான அய்யப்ப பணிக்கர்.
(ஆனால், தமிழில் பின் நவீனத்துவக் கோட்பாட்டை முன்வைத்து அதிமேதாவிகள் அழிச்சாட்டியம் செய்ததும் அதனால் அடுத்து வந்த ஒரு தலைமுறையினருக்கே அதன் பேரில் தீராத வெறுப்பு வந்ததும் தனிக்கதை.)
அன்றைய 1980கள் காலகட்டங்களுக்கு முன்புவரை வளர்ந்து வந்த தலைமுறையினர் தங்களது சிறுபிராயங்களில் தங்களது வீட்டில் உள்ள தாத்தா பாட்டியினர் கதை சொல்ல, அந்த உலகத்தில் கைகோர்த்துக் கொண்டு திரிந்தவர்கள். நவீனத்துவம், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம் என்று காலங்கள் நகர நகர, தாத்தா பாட்டிகளை முதியோர் இல்லங்களில் ஒழித்துக் கட்டிய பிறகு தோன்றிய அடுத்த தலைமுறைக் குழந்தைகள், கதைகள் தெரியாத அனாதைகளாக்கப்பட்டார்கள்.
தாங்கள் கற்கும் ஆங்கிலக் கல்வி நூல்களில் வரும் கதைகள் மட்டுமே அன்னியோன்யமாயின. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் வரும் சித்திரக் கதைகளே ஆதர்ஸமாகின. ஃபேஸ்புக்கும் டிவிட்டரும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் வடிவமைக்கும் பின் நவீனத்துவம் தாண்டிய இந்தக் காலச் சூழலில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல கார்ப்பரேட் கம்பெனிகள் முன் வருகின்றன. ஆம். சென்னையில் இது ஒரு புதிய வணிகம்.
குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல பிரபலமான ஐரோப்பியக் கதை சொல்லிகள் வருகிறார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கதை கேட்க வரும் சிறுவர்களுக்கு மிகப் பெரிய கணிசமான தொகை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இந்த நிகழ்வுகள் சென்னையில் மிகுந்த பிரபலம். ஆகவே முன்பதிவு அவசியம். இல்லையெனில் இடம் கிடைக்காது.
இதுபோன்ற சூழலில் வளரும் குழந்தைகள் தமிழ் மரபிலிருந்து முழு முற்றாக விலகுகின்றன. அதுமட்டுமல்லாது, ஒரு நீண்ட விரிவான தேடல் மனப்பான்மையைக் குறுக்குகின்றன. படாடோப மான போக்குகளில் கட்டமைக்கப் பெறும் இத்தகைய போக்குகள் உலகளவிலான ஒரு சீரிய தரமான இலக்கியப் பிரதியை நோக்கி நகர்த்துவதில்லை. எளிதில் கிடைக்கும் பெஸ்ட் செல்லிங் வகையறாவை நோக்கிப் போவதற்கான வாய்ப்புகளே இன்றைக்கு அதிகம். தீவிர இலக்கிய வாசிப்பையும் பெஸ்ட் செல்லிங் வாசிப்பையும் தரம் பிரித்துப் பார்க்கும்படியான வாசக விமர்சனக் கண்ணோட்டம் புலனாகாமலேயே போய்விடுகிறது.
பெஸ்ட் செல்லிங் என்னும் அதிகளவில் விற்பனையாகும் சிறந்த நூல்கள் என்ற படிமத்தை விரிவாகப் பார்க்கலாம்:
சீரிய இலக்கிய ரசனை கொண்ட தரமான எழுத்து, வெகுஜன ரசனை கொண்ட பாபுலர் எழுத்து என்கிற இருவேறு போக்குகள் எல்லா மொழிகளிலும் நிறைந்திருக்கின்றன. சொற்பளவு வாசகர்களைக் கொண்ட சீரிய இலக்கியத் தரம் சற்றே நெகிழ்ந்து வெகுஜனம் கொண்ட பாபுலர் எழுத்து ரசனை சற்றே உயர்ந்து, இந்த இரு போக்குகளும் வெற்றிகரமாக இணையும் சந்திப்பில் ‘பெஸ்ட் செல்லிங்’ என்கிற போக்கு உருவாகிறது. இப்படி தரமான இலக்கிய எழுத்தும் வெகுஜனரசனையும் இணைவது அபூர்வமாகத்தான் நிகழும். இதை சீரியஸான எழுத்தாளர்கள் திட்டமிட்டு உருவாக்குவதில்லை. அவர்களது எழுத்தின் உள்ளடக்கமே அதுபோன்ற ஒரு தளத்தை நோக்கி நகரும். ஆனால் வெகுஜன எழுத்தாளர்கள் இது போன்ற தளத்தை இலக்கு வைத்து செயல்படுவார்கள். பெஸ்ட் செல்லராக மாறினால் தங்களது எழுத்தின் அந்தஸ்து உயரும். ‘தரமான நூல், அதிக விற்பனை’ என்கிற பார்வையை முன்வைத்து இப்படி ஒரு படிமத்தை வியாபாரத் தந்திரமாக உருவாக்குகின்றன புத்தக நிறுவனங்கள்.
வெகுஜன ரசனை கொண்ட திரில்லர் என்னும் குற்றவியல் கதைகளை மிகவும் மேலோட்டமான மொக்கையான வடிவங்களில் எழுதிக் கொண்டிருந்த மர்மக் கதை எழுத்தாளர் களிடமிருந்து முற்றாக விலகி அந்தத் தளத்துக்கு புத்தம் புதிய வேறொரு பார்வையை உருவாக்கியவர் எட்கர் அலென்போ. குற்றவியல் கதைகளில் பெரிதும் இடம்பெறும் சம்பவங் களிலிருந்து விலகி அதன் மன உணர்வுகளையும் நுட்பங்களையும் அற்புதமாக எழுதியவர். அவர் சிறுகதைகளில் செய்ததை, தனது, ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் தாஸ்தயேவ்ஸ்கி செய்த போது அந்த எழுத்துமுறை மிகப் பெருமளவில் பேசப்பட்டு பரபரப்பாக விற்பனையாகின. கொலையாளி யார், கொலை எப்போது நடக்கும் போன்றரீதியில் மர்மமாகக் கட்டமைக்கப்படும் வெகுஜன ரசனையை முழுவதுமாக மாற்றி கொலைகாரனை எடுத்த எடுப்பிலேயே அறிமுகப் படுத்தி, அதற்குள்ளிருக்கும் குற்றத்தின் அழகியலை இலக்கியமாக மாற்றிய முன்னோடிகள் இவர்கள்.
இந்த வகையைப் பின்பற்றி மேலும் தீவிரமாக வெளிவந்த நாவல்களாக, இத்தாலி எழுத்தாளரான உம்பர்டோ ஈகோவின் ‘நேம் ஆப் தி ரோஸ்’ நாவலும், செர்பிய எழுத்தாளரான மிலோரட் பாவிக்கின் ‘டிக்ஸனரி ஆப் கஸார்ஸ்’ என்னும் அகராதி வடிவில் எழுதப்பட்ட நாவலும் மிக முக்கியமானவ.
1980-90களில் இப்படியான தீவிர இலக்கிய எழுத்துக்கள் பெஸ்ட் செல்லராக மாறிய மூன்று நூல்களை இங்கு குறிப்பிடலாம். 1. உம்பர்டோ ஈகோவின், ‘நேம் ஆப் தி ரோஸ் (இத்தாலி-1983) 2. மிலோரட் பாவிக்கின், ‘லேண்ட்ஸ்கேப் பெயிண்டட் வித் டீ’ (செர்பியா-1984) 3. பேட்ரிக் ஸஸ்கின்னின், ‘பெர்ஃப்யூம்’ (ஜெர்மனி-1985). இவை திரில்லர் வகைப்பட்ட உலகின் மர்மங்களையும் துப்பறியும் தன்மைகளையும், அழகியலோடும், நுண்ணுணர்வுகளோடும், வரலாற்றுத் தொன்மங்களோடும், நுட்பமான இலக்கிய ரசனைகளோடும் வெளிப்படுத்தின.
இதில் ‘பெர்ஃப்யூம்’ நாவலை, புகழ்பெற்ற ரன் லோலா ரன் பட இயக்குனரான டாம் டைக்வேர் 2006ல் திரைப்படமாக எடுத்து ஹாலிவுட்டில் பெரிய வெற்றியடைந்தார். அதேபோல ‘நேம் ஆப் தி ரோஸ்’ நாவலை ழான் ழாக் அன்னா என்ற பிரான்ஸ் இயக்குனர் 1986ல் திரைப்படமாக எடுத்து வெற்றியடைந்தார்.
அந்தக் கட்டத்தில் இயங்கிய வெகுஜன ரசனை கொண்ட திரில்லர் எழுத்தாளர்களின் எழுத்து வகையும் வித்தியாசமாகத்தானிருந்தது. அப்போது, பெஸ்ட் செல்லர் இடத்தைப் பிடித்த அமெரிக்க திரில்லர் நாவலாசிரியரான ட்ரவேனியன் என்பவர் எழுதிய ‘ஸிபூமி’ நாவலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடலாம். இது அந்தக் கட்டத்தில் கவிஞர் பிரமிளால் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. ஒரு கொலை திரில்லரை மிக மிக அற்புதமான படிமங்களோடு அழகியலான மொழியமைப்போடு நுட்பமான மர்மக் குறிப்புகளுடன் எழுதியிருப்பார். கூலிக்குக் கொலை செய்யும் நாயகன், ஜென்தத்துவ விசாரங்களில் சொல்லப்படுகின்ற ‘ஸிபூமி’ என்கிற ஒரு தத்துவ வகைப்பாட்டைப் பின்பற்றி அழகியலாகக் கொலைகள் செய்வான். கொலைகளுக்குள் மறைந்திருக்கும் தியான உணர்வுகளை அவ்வளவு நுண்ணுணர்வுகளுடன் விவரித்திருப்பார் ஆசிரியர்.
ஆக, பெஸ்ட் செல்லிங் என்பது தரமான சீரியஸான எழுத்து வகை அல்ல; அதிகமாக விற்பனையாகக் கூடிய சிறந்த நூல். வெகுஜனதளத்தில் தரமான எழுத்தைப் போலத் தோற்ற மயக்கத்தை உருவாக்குவது.
நாம் முன்னர் பார்த்ததுபோல, ‘இன்றைய தமிழ்ச் சூழலில்’ வளருகின்ற ஒரு இளம் தலைமுறை வளர்ந்து நேரடியாக பெஸ்ட் செல்லிங்கில்தான் போய்ச் சேருகிறது. அதுதான் இலக்கியத்தின் உச்சபட்சம் என்று நம்புகிறது. அதற்கப்பால் உள்ள தீவிர இலக்கியத் தேடலை நோக்கி நகர்வதேயில்லை.
ஒரு எளிய கணக்குப்படி, சர்வதேச புத்தக விற்பனையகமான, நுங்கம்பாக்கம் லேண்ட் மார்க் கில், 1980களில், ‘லிட்ரேச்சர்’ புத்தகப்பகுதியில் பல்வேறு தேசங்ளைச் சார்ந்த புதிய புதிய எழுத்தாளர்களின் நூல்கள் வரவு ஆகியிருக்கும். தற்போது அதே பகுதியில் பார்த்தோமெனில் மிக மிகச் சொற்ப அளவிலான எழுத்தாளர்களின் நூல்களே காட்சியளிக்கின்றன. (இணையத்தின் வரவு ஒரு காரணம் என்று தப்பிக்க முடியாது.)
இப்படி மேலோட்டமாக வளர்ந்த கலை இலக்கிய ரசனை கொண்ட இளம் தலைமுறையினர், பொறியியல் போன்ற தொழிற் கல்வி பயின்று ஜே.கே.ரௌலிங், டான்பிரவுன், ஜான்கிறிஸம், ஜெஃப்ரி ஆர்ச்சர் படித்து கார்ப்பரேட்களில் வேலைகளில் அமர்கிறார்கள். ஃபேஸ்புக்கில் தீவிர இலக்கியங்களைக் கலாய்க்கிறார்கள். இன்னும் ஒருபடிமேலே போய் தங்களது பாக்கெட்மணியை இன்வெஸ்ட் செய்து, மொக்கையான திரைப்படங்களை எடுத்து ‘புதிய அலைப் படங்கள்’ என்று ஸ்தாபிக்கிறார்கள். இவர்களையொத்த மனோபாவம் கொண்ட இளம் ஊடகவியலாளர்கள் ‘மாபெரும் டிரெண்ட் செட்டிங்’ என்று கொண்டாடிக் களிக்கிறார்கள்.
இதுபோன்ற தொடர்ச்சியான செயல்பாடுகள் இப்படியான போக்கு தான் தரமான போக்கு என்பது போல ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டமைக்கின்றன.
2
அந்த ஐரோப்பியக் கதை சொல்லி குழந்தைகளுக்கு ஒரு நரிக்கதை சொன்னார்:
ஒரு தந்திரக்கார நரியானது, கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டு போய், செர்ரிப்பழ வியாபாரியிடம் தங்கக்காசுகள் என்று ஏமாற்றிக் கொடுத்து செர்ரிப்பழங்களை வாங்கிச் சென்ற கதை.
எனக்கு பளீரென்று குழந்தைக் கதை சொல்லியான டிம்.ஜே.மேயர்ஸ் என்பவரின் ‘பாஷோவும் நரியும்’ என்ற கதைத் தொகுப்பு ஞாபகம் வந்தது.
ஜப்பானிய ஹைகூ கவிதைகளில் புகழ்பெற்றவரான கவிஞர் மட்சுவோ பாஷோவை முன் வைத்து குழந்தைகளுக்காகச் சொல்லப்பட்ட பல்வேறு விதமான நரிக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஜப்பானியப் பழங்கதை மரபின் பாத்திரமான ‘தந்திரக்கார நரி’ என்கிற படிமத்தின் மூலம் சமூகமதிப்பீடுகளை மறுவிசாரணை செய்கிறார் ஆசிரியர்.
கவிஞர் பாஷோ தனது தோட்டத்தில் செர்ரிப் பழங்களைப் பயிரிட்டு வந்தார். அவைகளை அபகரிக்க நினைத்த தந்திரக்கார நரி ஒன்று யமா புஷி என்ற துறவியாகத் தன்னை மாற்றிக் கொண்டு அவரிடம் சென்றது. வழியில் ஃபுகா ஆற்றில் மின்னிய சில கூழாங்கற்களை எடுத்துத் தனது மந்திரத்தால் தங்கக்காசுகளாக மாற்றிக் கொண்டது. ஜப்பானில் உள்ள நரிகள் எல்லாமே மாய வித்தை தெரிந்தவை. பாஷோவிடம் அந்தக் தங்கக் காசுகளைக் கொடுத்து அனைத்து செர்ரிப் பழங்களையும் வாங்கிக்கொண்டு போய்விட்டது.
அடுத்தநாள் விடிந்து பார்த்தால் அவை கூழாங்கற்களாகியிருந்தன. பாஷோ அசரவில்லை. அவைகளை நுட்பமாக அவதானித்துக் கொண்டிருந்தவரின் மனதில் ஒரு அற்புதமான ஹைகூ உருவானது.
எத்தனை ஆண்டுகள் இக்கூழாங்கற்கள்
அந்நதியை நேசித்திருக்கும்
இன்று அவை கையறு நிலையிலோ!
ஜப்பானியக்கவிதை உலகிற்கு மிகப்பெரும் தங்கப் புதையல் கிடைத்துவிட்டது. ஆம். ஒரு நல்ல கவிதை பணத்தைவிட மேலானது. அது அழிவில்லாதது. தங்கத்தைவிட ஆற்றில் கூழாங்கற்கள் ஏற்படுத்துகிற அன்பும், அழகியலும் அது சார்ந்து வெளிப்படும் அனுபவமும் புதிய பார்வையை உருவாக்கியது. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் பொருளுக்கான உண்மையான மதிப்பு என்பது என்ன என்ற கேள்விக்கு புதிய விடையை அந்தக் கவிதையில் முன் வைத்தார் பாஷோ. உங்கள் வாழ்வில் கூழாங்கற்களும் தங்கமாகலாம்; தங்கமும் கூழாங்கற்களாகலாம்.
ஹைகூவைப் புரிந்துகொள்வதென்பது, செர்ரிப்பழத்தின் ருசியைப் புரிந்துகொள்வது; கூழாங்கற்களின் மதிப்பீடுகளைப் புரிந்து கொள்வது; வாழ்க்கையின் நிஜமான தன்மையைப் புரிந்து கொள்வது.
இதே நூலிலிருந்து ஒருகதையை எடுத்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது வலைப் பகுதியில் மாய்ந்து மாய்ந்து பாராட்டுகிறார். அதைப்பார்க்கலாம்:
பாஷோ செர்ரிப்பழங்களைப் பயிரிட்டு வாழ்ந்து வருகிறார். அருகாமையில் வசிக்கும் நரி ஒன்று பாஷோவுக்குத் தெரியாமல் பழங்களைத் திருடித் தின்கிறது. ஒருநாள் கையும் களவுமாய்ப் பிடித்த பாஷோவிடம் ஒரு பந்தயம் வைக்கிறது நரி.
தனக்குப் பிடித்த மாதிரி ஒரு கவிதையை பாஷோ சொல்லிவிட்டால் போதும், தான் பழங்களைத் திருடித் தின்ன அந்தப் பக்கம் வருவதில்லை என்கிறது. ஆனால், அவர் சொல்லுகின்ற கவிதை தனக்குப் பிடிக்காவிட்டால் பாஷோ தோல்வியடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டு செர்ரிப்பழங்கள் முழுவதையும் தனக்கே தந்துவிட வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறது. அதுமட்டுமல்ல, பாஷோவுக்கு மூன்று வாய்ப்புகள் தருவதாகச் சவால் விடுகிறது!
பாஷோ சவாலை ஏற்றுக் கொள்கிறார்.
அடுத்தநாள் நரி வந்தது. பாஷோ தனது கவிதையைச் சொன்னார்.
நரி, இந்தக் கவிதை பிடிக்கவில்லை என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு செர்ரிப் பழங்களைப் பறித்துக் கொண்டு போனது.
பாஷோ திகைத்துப் போனார்.
இரண்டாவது முறை வந்த நரியிடம் தனது புகழ்பெற்ற கவிதையான,
பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்
என்ற கவிதையைச் சொன்னார்.
இதைக் கேட்ட நரி, சரி, இது கொஞ்சம் பரவாயில்லை; ஆனால், இது எனக்குப் பிடித்தமான கவிதையாக இல்லை என்றவாறு செர்ரிப் பழங்களைப் பறித்துக் கொண்டு விடை பெற்றது.
பாஷோ மாபெரும் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்து போனார். இன்னும் ஒரு வாய்ப்புதானிருக்கிறது. இதில் தோற்றுப் போய்விட்டால் செர்ரிப்பழங்கள் போவது பற்றிக் கவலையில்லை, ஜப்பானின் புகழ் பெற்ற கவிஞன் நரியிடம் தோற்றுப் போனான் என்கிற அவப் பெயர் வந்துவிடுமே என்று கவலையுடன் யோசிக்கத் துவங்கினார்.
அடுத்த நாள் நரி வந்தது. பாஷோகவிதை சொன்னார். நரி, அற்புதம் என்றது. இது ஒரு உன்னதமான கவிதை என்று மயங்கியது. நான் தோற்றுப் போய்விட்டேன், இனிநான் உங்கள் செர்ரிப்பழங்கள் பக்கம் வரவே மாட்டேன் என்று போய்விட்டது.
அப்படி என்ன இருந்தது அந்தக் கவிதையில்?
அந்தக் கவிதையில் நரி ஒரு பாத்திரமாகியிருந்தது. நரியைப் பற்றியதுதான் அக்கவிதை. தன்னைப் பற்றி தான் அறியாத ஒன்றை அடையாளப்படுத்துவதுதான் கவிதையின் வேலை. அதைத்தான் பாஷோவும் செய்திருந்தார் என்று வியந்து வியந்து இந்த மேலை நாட்டுப்புறக் கதையைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் எஸ்.ரா.
இந்த இடத்தில் தொன்மையான தமிழ் மரபில் பிறந்த எனது ஊர்க்காரரான ஆழ்வாரின் ஞாபகம் வருகிறது.
3
புகழ்பெற்ற ஆழ்வார் பாசுரங்கள் போல எங்களூர் ஆழ்வாரின் புதிர்கள் அந்தச் சுற்று வட்டாரப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இதுவரை அவருடைய புதிரை விடுவித்தவர்கள் என்று அந்த வட்டாரத்திலேயே யாருமில்லை. அவர் போட்ட புதிரை யாராலும் விடுவிக்க முடியாது. அவர் புதிர் போட்டுவிட்டுப் போய்விடுவார். அடுத்த நாள் வந்து அதை விடுவிக்கும் வரை, கேட்டவர்கள் அதில் மாட்டியபடி முழித்துக் கொண்டிருப்பார்கள். அந்தளவுக்கு அவரது பேரும் புகழும் ஓங்கியிருந்தது. அவரது புதிர்க் கதைகள் காடு வயல்வெளிகளிலும் கம்மாய்க் கரைகளிலும் சூறைக்காற்றாய்ச் சுழன்றாடிக் கொண்டிருக்கும். வேலையாள்களின் கைகளுக்குக் களைப்பு ஏற்படும்போது அவரது புதிர்கள் விறு விறுப்பாய் வேலை நடத்தும் மேலும், அவரது பெயர்க் காரணம் அமைந்த விதமே ஒரு அலாதியான புதிர்த் தன்மை கொண்டதுதான்.
அவரது இயற்பெயர் யாருக்கும் தெரியாது. அவர் மாட்டுச் சந்தையில் தரகு வேலை பார்ப்பவர். மாட்டுச் சொந்தக்காரரிடம் நைசாகப் பேசியும் மாட்டை வாங்குபவரிடம் உயர்வு நவிற்சிகளைச் சொல்லி உற்சாகப்படுத்தியும் வியாபாரத்தை முடித்துக் கொடுத்து அதற்குரிய தரகு தொகையைப் பெற்றுக் கொள்பவர். சந்தைகளில் இவரைப்போல பல மாட்டுத் தரகர்கள் இருந்த போதிலும் மக்கள் இவரிடம்தான் வருவார்கள். எப்பேர்ப்பட்ட கல்லுளி மங்கனையும் மடக்கி வியாபாரத்தை முடித்துக் கொடுப்பதில் பலே ஆள்.
சந்தையில் வியாபாரத்திற்கென்று ஒரு பாஷை இருக்கிறது.
வாச்சி (1)
வார் (2)
தொழுது (3)
சதுப்பான் (4)
தட்டை (5)
பொருத்து (6)
ஆழி (7)
வழுவு (8)
தாயம் (9)
துருவம் (10)
என்று ஒவ்வொரு எண்ணையும் புதிர் எண்களாக மாற்றி வைத்திருப்பார்கள். இவை அப்படியே இரட்டைப் படைக்கும் பொருந்தும். இது ஒரு வியாபார உத்தி. மாட்டுக்காரனையும் மாடுவாங்குபவனையும் ஒன்றும் புரியாமல் முழிக்கவைத்து, ஏமாற்றி வியாபாரத்தை முடிக்க தரகர்கள் உருவாக்கிய பாஷை.
இதில் ஆழி என்பது (இரட்டைப்படையில்) 70 ரூபாய்; வார் என்பது 2 ரூபாய். இவர் எப்பேர்ப்பட்ட உயர்ஜாதி மாடாக இருந்தாலும் சரி, மாட்டுக்காரனைப் போட்டுக் கசக்கி உருட்டி, அல்லாடவைத்து ‘ஆழி’க்குள் வியாபாரத்தை முடித்து தனக்குக் கமிஷனாக ‘வாரை’ எடுத்துக்கொள்வார். மற்ற எல்லாத் தரகர்களுக்கும் வாச்சி (1) கொடுத்தால் போதும்; ஆனால் இவருக்கு மட்டும் வார் (2) கொடுக்க வேண்டும். ஆனாலும், இவரிடம்தான் வாடிக்கையாளர்கள் மொய்ப்பார்கள். ஏனெனில், இவரிடம் போனால் எப்பேர்ப்பட்ட மாடாக இருந்தாலும், ஆழிவாருக்குள் வியாபாரத்தை முடித்துக் கொடுக்கும் கேரண்டி மிக்கவர். அந்த வியாபார மதிப்பு வெளிச்சந்தையில் வழுவு அல்லது வழுவுத்தட்டைக்கு மதிப்பிடுவார்கள்.
அந்தக் காரணப்பெயர்தான்அவருக்குப்பட்டப் பெயராக மாறி ‘ஆழ்வார்’ என்று மருவியது. இதுதான் அவரது நாமகரணத்தின் ரிஷி மூலம்.
இப்பொழுது ஆழ்வார் சொன்ன நரிக்கதை.
ஆழ்வார் தனது தோட்டத்தில் வெள்ளரிச் செடிகளைப் பயிரிட்டு வந்தார். அவை நல்ல விளைச்சலுடன் வளர்ந்து வெள்ளரிப் பழங்களாகக் கனிந்து இருக்கும் சமயத்தில், ஒருநரி திருடித் தின்று கொண்டிருந்தது. ஆழ்வார் அதை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று சமயம் பார்த்து ஒரு நாளிரவில் தோட்டத்திற்கு வந்து மறைந்திருந்தார். சற்றைக்கெல்லாம் நரி பம்மிக் கொண்டு அங்கு வந்து ஒரு கனிந்த வெள்ளரிப் பழத்தைப் பறிக்க முயல்கையில், தடியை ஓங்கிக்கொண்டு நரியை நோக்கி ஓடினார் ஆழ்வார்.
அப்போது நரி அவரைப் பார்த்துப் பயப்படாமல் சொல்லியது, ‘‘ஆழ்வாரே, என்னை அடிப்பது முறையா?’’
ஆழ்வார் வியப்புடன் தடியைத் தாழ்த்தினார்.
‘‘நீ என் வெள்ளரிப்பழங்களைத் திருடியது மட்டும் முறையா?’’ என்றார்.
‘‘தவறுதான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த உணவு வெள்ளரிப்பழங்கள் தான்.. அதனால் தான் உண்ண வந்தேன்…’’ என்றது நரி.
‘‘அதற்காக என் உழைப்பைத் திருடித் தின்பது தருமமா?’’
‘‘நீ மட்டும் குடியானவர்களின் விலையுயர்ந்த மாட்டை உனது வாய்சாமர்த்தியத்தால் ஆழிவாருக்குள் வாங்கி ஏமாற்றுகிறாயே… அது மட்டும் தருமமா?’’
‘‘அது என் சொல்வித்தை… தொழில் தருமம்…’’
‘‘ஓ.. ஏமாற்றுத்தனத்திற்கு அப்படியொரு பெயர் இருக்கிறதா? சரி அப்படியானால் நாம் ஒரு பந்தயம் வைத்துக் கொள்வோம். நீ தான் சொல்வித்தைக்காரனாயிற்றே… புதிர் போடுவதில் பெரிய வல்லமைசாலி அல்லவா? அப்பேர்ப்பட்ட புதிர் ஒன்றைப் போடு. நான் அதை விடுவித்துக் காட்டுகிறேன். அப்படி விடுவிக்காவிட்டால் என் தோல்வியை ஒப்புக் கொண்டு, நானும் எனது வம்சமும் என்றென்றைக்கும் உனது வெள்ளரிப் பழங்களைத் திருடித் தின்ன வரமாட்டோம். ஆனால், அந்தப் புதிரை நான் விடுவித்துக்காட்டி விட்டால் நீங்களும் உங்கள் வம்சமும் தோல்வியை ஒப்புக்கொண்டு நீங்கள் பயிர் செய்கின்ற வெள்ளரிப் பழங்களை எங்களுக்குத் தந்துவிடவேண்டும். இதுதான் போட்டி… சம்மதமா?’’
ஆழ்வார் யோசித்தார். புதிர் போடுவதில் அந்த வட்டாரத்திலேயே புகழ் பெற்ற வல்லமை சாலியான நான், கேவலம் ஒரு நரியுடன் சவாலுக்குச் செல்வதா?
நரி மீண்டும் ஏளனமான குரலில் பேசியது. ‘‘என்னோடு போட்டி போட பயந்து விட்டாய் போலிருக்கிறது. அதனால் உனக்குச் சலுகை தருகிறேன்: அதாவது, உனக்கு ஒரு வாய்ப்பு அல்ல, மூன்று வாய்ப்புகள் தருகிறேன். அதில் ஏதாவது ஒன்றில்கூடவா வீரதீரசூரனான நீ ஜெயிக்க முடியாமல் போய் விடுவாய்….?’’ என்று தனது பற்களைக் காட்டி இளித்தது.
ஆழ்வாருக்குக் கோபம் சுரீலென்று தலைக்கு ஏறியது. நரியின் சவாலை ஏற்றுக்கொண்டார். உடனே நரி அருகாமையில் உள்ள ஆற்றில் மூழ்கி மூன்று கூழாங்கற்களை எடுத்துக் கொடுத்து போட்டிக்கு உறுதி வாங்கிக் கொண்டது.
ஆழ்வார் நரிக்காக என்ன புதிர் போடுவது என்று யோசிக்க ஆரம்பித்தார். மூன்று வாய்ப்புகளை எனக்குத் தருகிறதா? என்ன ஒரு தலைக்கனம்… முதல் வாய்ப்பிலேயே அதை நாக்அவுட் கொடுத்து வீழ்த்த வேண்டும் என்று யோசித்தவர் தனது புகழ்மிக்க கடினமான ஒரு புதிரைத் தேர்ந்தெடுத்தார்.
அடுத்த நாள் இரவு. நரி வந்து சேர்ந்தது. அந்த சுற்று வட்டாரப்பகுதியே கொண்டாடும் ஒரு மகத்தான புதிர் சொல்லியிடம் கேட்கப் போகிறோம் என்ற உணர்வுகள் ஏதுமின்றி கர்வத்துடன் எதிரில் உட்கார்ந்திருந்தது.
ஆழ்வார் தனது கையிலிருந்த மூன்று கூழாங்கற்களைக் குலுக்கியபடி இருந்தவர், ஒரு கூழாங்கல்லை எடுத்து நரியின் மீது வீசினார். அது நரி மீது பட்டு அதன் தலையை உயர்த்தியது.
ஆழ்வார் புதிரைச் சொன்னார்.
கேட்டு முடித்த நரி, இவ்வளவுதானா என்று அலட்சியமாகப் பார்த்தது. எழுந்து உடலை நெளித்தவாறு அந்தப் புதிருக்கான ஒரு விடுவிப்பைச் சொல்லியது. ஆழ்வார் அசந்துபோனார். நரி வாலை நிமிட்டிக் கொண்டு பற்களை இளித்தவாறு, ‘‘சரி… மனதைத் தேற்றிக்கொள்… இன்னும் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. நாளைக்கு வருகிறேன்..’’ என்று சொல்லி விட்டு, அன்றைக்கு அழகாக வெடித்துக் கனிந்திருந்த வெள்ளரிப்பழத்தைப் பறித்துத் தலைமீது வைத்துக் கொண்டு நடையைக் கட்டியது.
ஆழ்வார் அதிர்ச்சியடைந்து போனார். இது எப்படி சாத்தியம்? கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யாராலும் விடுவிக்க முடியாத தனது புகழ் பெற்ற புதிரை விடுவிப்பதென்றால்? ஒருவேளை இந்தப் புதிர் நாட்டுப்புறங்களில் பிரபலமாகிப் பலமுறை பரபரப்பாகப் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டது. இதன் விடை எல்லோரும் அறிந்த ஒன்று. காற்றுவாக்கில் இந்த நரியின் காதுகளுக்கு இந்த விடுவிப்பு போய்ச் சேர்ந்திருக்குமோ…
தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டதை உணர்ந்தார் ஆழ்வார். ஏற்கனவே எல்லோரும் விடை அறிந்த தனது புகழ்பெற்ற புதிரைப் போட்டிருக்கக் கூடாது என்று நொந்து கொண்டார். வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. படுத்தால் தூக்கம் கொள்ளவில்லை.
இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு புத்தம் புதிய புதிரை உருவாக்க வேண்டும்… அவரது கையில் இரண்டு கூழாங்கற்கள் குலுங்கிக் கொண்டேயிருந்தன.
அடுத்த நாள் இரவு.
ஆழ்வாரின்முன் உட்கார்ந்திருந்தது நரி. ஆழ்வார் பதட்டத்துடனும் பரபரப்புடனும் இருந்தார். தனது கையிலிருந்த இரண்டு கூழாங்கற்களில் ஒன்றை அதன்மேல் வீசியடித்தார். நரி தலைதூக்கிப் பார்த்தது.
தான் இரவு பகலாகக் கண்விழித்து உருவாக்கிய அந்தப் புத்தம் புதிய புதிரைச் சொன்னார்.
நரி ஒரு நிமிடம் முழித்தது. அதன் பிறகு அங்குமிங்கும் எழுந்து நடந்தது. ஆழ்வாருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. நரியை வீழ்த்தி விட்டோம் என்ற உணர்வுகள் அவரது உடலெங்கும் ஓடிக் களித்தன. நடந்து கொண்டிருந்த நரி மெல்ல நின்று ஆழ்வாரை உற்றுப் பார்த்தது. அதனுடைய முகத்தின் இறுக்கம் சட்டென விலகி ஏளனமாக மாறியது. கெக்கே கெக்கே எனச் சிரித்தது. டக்கென்று விடையைச் சொல்லி புதிரை விடுவித்தது.
ஆழ்வார் திகைத்துப் போனார்.
‘‘எனக்கு முதலிலேயே தெரியும்.. சும்மா உன்னை மகிழ்விப்பதற்காக, தெரியாததுபோல முழித்தேன்…’’ என்று பற்களை இளித்தவாறு அன்றைக்குப் பழுத்திருந்த வெள்ளரிப் பழத்தை பறித்துத் தோள்மீது வைத்துக் கொண்டு நடந்தது.
‘‘கவலைப்படாதே.. உனக்கு இன்னும் ஒரு கூழாங்கல் பாக்கியிருக்கிறது….’’ என்று சொல்லிவிட்டுச் சென்றது.
ஆழ்வார் தனது உள்ளங்கையில் வெறுமையுடன் குலுங்கும் அந்த ஒற்றைக்
கூழாங்கல்லை வெறித்துப் பார்த்தார். காடுகரையெல்லாம் மனம்போன போக்கில் சுற்றித் திரிந்தார்.
தான் தோற்றுப்போய்விட்டால் என்ன ஆகும் என்று யோசித்தார். தனது வெள்ளரிப் பழங்கள் போவது பற்றிக் கூட கவலையில்லை. அந்தச் சுற்று வட்டாரத்திலேயே இதுவரை யாரும் தோற்கடிக்க முடியாத புகழ்பெற்ற புதிர்க்கதை மன்னன் ஒரு நரியிடம் தோற்றுப் போய்விட்டார் என்கிற அவப் பெயர் ஆகிவிடுமே என்று சஞ்சலமடைந்தார்.
அடுத்த நாளிரவு, அமாவாசை.
நரி சோக்காக உற்சாகத்துடன் வந்திருந்தது. கருத்த இரவில் பளீரிட்ட அதனுடைய பற்கள் ஆனந்தமாக ஜொலித்தன. ஆழ்வாரின் முன் அமர்ந்து தொண்டையைச் செருமியவாறு ‘‘போட்டியை ஆரம்பிக்கலாமா?’’ என்றது.
ஆழ்வார் தனது உள்ளங்கையில் குலுங்கிய கடைசிக் கூழாங்கல்லை நரியின் மீது வீசினார். நரி தலையை உயர்த்திக் கவனித்தது.
ஆழ்வார் புதிரைச் சொன்னார்.
ஒரு நிமிடம் அரண்டுபோனது நரி. மிகமிகத் தந்திரமான புதிர் அது. புதிரின் மையமே நரி தான். நரியின் வாழ்வையும் நரியின் மரணத்தையும் ஒன்று குழைத்துப் புதிராகச் சுழித்துப் போட்ட முடிச்சில் வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டது நரி. அதாவது, புதிரை விடுவித்தால் அந்தப் புதிருக்கு உள்ளே வைத்துள்ள பொறியில் மாட்டிச் செத்துப் போய்விடும். புதிரை விடுவிக்காவிட்டால் ஆழ்வாரிடம் தோற்றுப் போய்விடும்.
தன்னையே புதிராக மாற்றிச் சதுராடியிருக்கும் ஆழ்வாரின் புதிர் விளையாட்டைக் கண்டு நிலைகுலைந்து போனது. அந்தப் புதிரின் சுருக்குக் கண்ணியில் என்றென்றைக்கும் தப்பிக்காது மாட்டிக் கொண்ட தனது உருவத்தைத் தள்ளி நின்று பார்த்தது நரி. உடம்பின் மயிர்க்கால்களெங்கும் நெட்டுக்குத்தாய் நின்றது.
இங்குமங்கும் அலைந்து வெகுநேரம் வரை யோசித்தது. இறுதியில் தலையைத் தொங்கப் போட்டவாறு ஆழ்வாரிடம் வந்தது. தன்னிடமிருந்த மூன்று கூழாங்கற்களையும் அவரிடம் தந்து, ‘‘ஆழ்வார்… நீ ஜெயித்து விட்டாய் …. இனி உங்கள் வெள்ளரிப்பழங்களைத் திருடித் தின்ன நாங்கள் வரமாட்டோம்…’’ என்று சொல்லி விட்டுப் போயே போய்விட்டது.
(இந்தக் கதையின் ஐதீகம்தான், இப்பொழுதும் கிராமங்களில் உள்ள வெள்ளாமைக் காடுகளுக்குள் புகுந்து நரி ஊளையிடும்போது, விவசாயிகள் மூன்று கூழாங்கற்களை எடுத்து அந்தத் திசையில் வீசியெறிவார்கள்.)
அந்தச் சிறுவர் கதைநிகழ்வின் இடைவேளையின் போது குழுமியிருந்த சில சிறுவர்களை ஒன்று திரட்டி இக்கதையைத் தமிழில் சொன்னேன். அவர்கள் மிகவும் உற்சாகமாகி விட்டார்கள்.
‘‘அங்கிள்… அங்கிள்… ஆழ்வார் சொன்ன அந்தப் புதிர் என்ன புதிர்?’’ என்று மொய்த்து விட்டார்கள்.
‘‘நீங்களே அதைக் கண்டு பிடியுங்கள்…. அதுதான் உங்கள் சவால்… கிரியேடிவிட்டி…’’ என்றவாறு நடையைக் கட்டினேன்.
எனக்கென்னவோ மேலைநாட்டு பாஷோ கதையைவிடவும் எமது தமிழ்மரபின் ஆழ்வார் கதைதான் அற்புதமாக இருப்பது போல்படுகிறது.
«««««
(நன்றி: தீராநதி மார்ச் 2014)