• Thu. Sep 21st, 2023

விஞ்ஞானப் புனைவு இரவில் ஒரு பயணி

ByGouthama Siddarthan

Jul 28, 2022

 

(இந்த புகைப்படம் “குளிர்கால இரவில் ஒரு பயணி நட்சத்திரக் கூட்டங்களால் வழிநடத்தப்பட்டால்..” என்கிற இத்தாலிய நாடகத்தில் வரும் ஒரு காட்சி. (புகைப்படம் : Manuela Giusto) இந்த நாடகம் இடாலோ கால்வினோவின் புகழ்பெற்ற நாவலான, “குளிர்கால இரவில் ஒரு பயணி” கதையைத் தழுவி நிகழ்த்தப்பட்ட நாடகம். இதை தற்கால நவீன நாடக இயக்குனர் சில்வியோ பெரோனி இயக்கினார்.  (இந்த நாவலை தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் : சா. தேவதாஸ். வெளியீடு : உன்னதம் பதிப்பகம்)

இந்தப் படைப்பு, இத்தாலிய மொழியில் நான் எழுதிக்கொண்டிருக்கும் பத்தியின் ஒரு அத்தியாயம். இதை ஒரு creative nonfiction என்று சொல்லலாம். ஆனால், இது, creative nonfiction என்னும் தன்மையிலிருந்து மீறி, ஒரு fiction தன்மை கொண்ட science fiction ஆக மாறியிருக்கிறது என்று இத்தாலிய விமர்சகர் சல்வடோர் மார்ஃபெல்லா பாராட்டுகிறார்.

இந்த படைப்பை, கால்வினோவின்  “குளிர்கால இரவில் ஒரு பயணி” நாவலை வாசித்திருக்கும் வாசகர்கள் மிகவும், கொண்டாட்டத்துடன் எதிர் கொள்வார்கள்.

பிடிக்காதவர்களுக்கு சுருக்கமாக, இடாலோ கால்வினோ எழுதிய “குளிர்கால இரவில் ஒரு பயணி” என்னும் நாவலை வாங்கிச் செல்வதற்காக, புத்தக விற்பனையகத்திற்கு ஒரு வாசகன் வருவான். அப்பொழுது லுட்மில்லா என்கிற வாசகியும் அதே நாவலை வாங்குவதற்காக அங்கு வருவாள். அந்த நாவல் வினோதமான சம்பவங்களை எல்லாம் ஏற்படுத்தும். அந்த வினோதமான பின்நவீனத்துவக் கூறுகளில் இருவரும் இணைந்து பயணம் செய்வார்கள். அந்த எல்லையற்ற பயணத்தின் பின்நவீனத்துவ தரிசனமே அந்த நாவல்.)

************

விஞ்ஞானப் புனைவு இரவில் ஒரு பயணி
– கௌதம சித்தார்த்தன் 

காலப்பயண அரசியல் என்னும் எனது நூல், இத்தாலிய  மொழியில் (இத்தாலிய மொழியாக்கம் : டேவிட் மனா) வெளிவந்ததும், முதன்முதலில் அதை இத்தாலிய வாசகர்களுக்கு சிறப்பாக அறிமுகப்படுத்தியவர் டொமினிகோ அட்டியன்ஸ்.  அவரது அறிமுகத்திற்குப் பிறகு பரவலான கவனம் பெற்றது நூல். அதே வீச்சில் தற்கால விஞ்ஞானப்புனைவு எழுத்தாளர் வின்சென்ஸோ பரோன் லுமேகா எழுதிய சிறந்த விமர்சனக் கட்டுரை இத்தாலிய வாசகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து விமர்சகர்களான, ஃபேப்ரிஜியோ போர்கியோ, மாசிமோ லூசியானி எனச் சூடு பிடித்தது. அதிலும் முக்கியமானது, இத்தாலியின் முக்கியமான விஞ்ஞானப் புனைவு விமர்சகராகப் போற்றப்படும், கார்மைன் ட்ரேன்னி யின் விமர்சனம் இந்த நூலை உச்சத்துக்கு கொண்டு போனது.

இந்தப் பரபரப்பில், ஸ்பானிஷிலிருந்து என் மெயிலுக்கு பல கடிதங்கள் வந்து கொண்டே இருந்தன. அதில் முக்கியமான கடிதம் ராபர்டோ பவுரா உடையது. : “கட்டுரையின் பார்வை தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும், இந்த கட்டுரையை ஏன் அதற்குள் நூலாக வெளியிட்டீர்கள்? ஐரோப்பிய ஆங்கிலப்பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றில் இது வெளிவந்திருந்தால் சர்வதேச அளவில் பெருமளவில் ரீச் ஆகியிருக்கும்..” என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த நூலில் ஆங்கிலத்தில் உள்ள  ரே பிராட்பரி, ஆல்ஃபிரட் பெஸ்டர் கதைகளை இத்தாலியில் மொழியாக்கம் செய்து இத்தாலியில் உள்ள ஒரு பதிப்பக வாயிலாக பிரெஷ் ஆக மீண்டும் வெளியிடுங்கள் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி!

இவ்வளவு பீடிகை எதற்கு போடுகிறேன் என்றால், அந்தச் சமயத்தில் எனக்கு வந்த ஒரு கடிதம் பற்றி விரிவாக சொல்வதற்குத்தான்!

ஆம், அது ஒரு வினோதமான மெயில்!  அனுப்பியவர் குறித்து எந்த தடயமும் இல்லாமல் என் மெயிலுக்கு வந்திருந்தது! அப்படியெல்லாம் வருமா? பெரும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் அந்த மெயிலைப்  படித்தேன்!

என்ன சொன்னேன், படித்தேன் என்றா? தப்பு. அந்த மெயில் வினோதமான மொழியில் எழுதப்பட்டிருந்தது. என் உடலெங்கும் உத்வேகமும் பரபரப்பும், பதட்டமும் ஓடிக் களிக்க அது என்ன மொழி என்று கூகுளின் உதவியை நாடினால், திகைக்கிறது கூகுள் !
வினோதமான குறியீடுகளால் எழுதப்பட்டிருந்த அதன் சுழியங்களில் குழம்பிப் போனேன்!

ஒருவேளை, தற்காலத்தில் புகழ் பெற்று வரும் விஞ்ஞானப் புனைவு நாவலாசிரியரான லாரன்ஸ் சோகன் தனது நாவல்களில் கட்டமைக்கும்  klingons என்னும் மொழியாக இருக்குமோ,  Klingonist என்று போற்றப்படும் லாரன்ஸ் சோகன் – இடம்தான் விசாரிக்கவேண்டும். (அவர், முகநூல் நண்பர்களுக்கு klingons மொழியில் எல்லோருக்கும் ஒரே மாதிரி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது, போரடிக்கிறது. எல்லையற்ற மொழிவிளையாட்டின்  லாவகத்துடன் விதவிதமான குறியீடுகளில் வாழ்த்து தெரிவித்தலே தேர்ந்த கலைஞனின் சவால் என்பதை அவரிடம் சொல்ல வேண்டும்!)

மீண்டும் அந்த அனாமதேய மெயிலுக்குத் திரும்புவோம்:

நுட்பமாக அந்த மெயிலை ஆராய்ந்தேன். ஒரு labyrinth போல சுழித்து சுழித்து ஓடும் அந்தக் குறியீட்டுச் சுழியங்களில் மெதுவாக என் காலடிகளை ஊன்றி நடக்க நடக்க உடலெங்கும் ஒரு தீயின் தகிப்பு பற்றிப் படர்ந்து, பெரும் ஆரவாரத்துடன் உள்ளோடித் திறக்கின்றன கதவுகள்!

*********

1990 களில்  If on a winter’s night a traveller – யை படித்துவிட்டு இடாலோ கால்வினோ மீது பைத்தியம் பிடித்து அலைந்தேன். அவருடைய எழுத்துக்களை தேடித் தேடிப் படித்தேன்.  winter’s night  traveller – யை   உருப்போடும் அளவுக்கு பைத்தியமானேன். ஒரு கட்டத்தில் அந்தப் பித்தம் திசை மாறி லுட்மில்லாவைத் தேடி அலைந்தேன். எங்கள் நாட்டின் தெருக்களில் லுட்மில்லாவைப் போன்ற ஒரு இலக்கிய வாசகி கிடைக்க மாட்டாளா என்று அலைந்து திரிந்தேன்!

எங்கள் தமிழ் நவீன இலக்கியக் கூட்டங்களுக்கு 7 பேரிலிருந்து 12 பேர் கலந்து கொள்வார்கள். அத்தனைபேரும் ஆண்கள்! எளிய நவீன தமிழ் இலக்கியப் புத்தக கடைகளில் இலக்கியப் பகுதி வெறிச்சோடிக் கிடக்கும். மூன்றாந்தர பல்ப் நூல்கள் பகுதிதான் கூட்டமாக இருக்கும். எனக்கு லுட்மில்லாதான் வேண்டுமேயொழிய, மன்றோக்கள் அல்ல.

மனம் வெறுத்துப்போனாலும் தேடல் மட்டும் நின்றபாடில்லை. தீராத தேடலில் அலைந்து திரிந்த ஒருநாள், ஆங்கில நூல்கள் விற்பனையகத்தில், கால்வினோவின், Under the Jaguar Sun நூலை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு எதிரில்  If on a winter’s night a traveller  நூலை கையில் வைத்தபடி லுட்மில்லா. ஆம், நான் காலங்காலமாய்த் தேடிய லுட்மில்லா!

ஒரு கணம் என் சகல இயக்கங்களும் ஸ்தம்பித்து நிற்க, அவள் கண்களும் என் கண்களும் ஒரே நேர்கோட்டுப் பார்வையில் சந்திக்க, “அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்”  என்னும் எங்கள் இதிகாச வரி அங்கு உயிர் பெற்றது. அந்த இடம்  Jaguar Sun – ன் ஒளியில் பளீரெனப் பற்றிப் படர்ந்தது!

அவள் புன்முறுவலுடன் அடுத்த வரிசைக்கு நகர, என் ரத்தஓட்டம் துரிதகதியில் இயங்கியது. அவளிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற பதட்டத்தில் அவளைப் பின்தொடர, அவள் சட்டென நின்று திரும்பி என்னை நோக்க, ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்போடு அசைந்து கொடுத்தன அவளது இமைகள். அலட்சியமாக வகிடு எடுத்துச் சீவியிருந்ததில், இடதுஓர நெற்றியில் அசைந்தாடிக் கொண்டிருந்த முடியின் ஒரு சுருள் கற்றை அசைய,  பூமிப்பந்து 360 டிகிரியில் சுழன்றது.

வெளியே இருந்த ஒரு தேநீர்க்கடையில் தேநீர் பருகியபடி பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம். அவளது பூர்விகம் நான் எதிர்பார்த்தது போலவே இத்தாலி! தமிழ்நாட்டுச் சிற்பங்களைக் காணும் நோக்கில் வந்திருப்பதாகத் தெரிவித்தாள்!  அவளுக்கு தமிழ் தெரியாது. எனக்கு இத்தாலி தெரியாது.  என் ஓட்டை இங்கிலீஷில் நான் தடுமாற, அவள் யூகமாய் புரிந்து கொண்டு ரசிக்க,  அக்கணம், எங்கள் தமிழ்நாட்டு “மொழிவாரி அரசியலை”  அவ்வளவு வெறுத்தேன்!

அவள், தனது பெயரை ஏதோ சொல்ல, நான், அதை கவனிக்காமல், “உங்களை லுட்மில்லா என்று அழைக்கலாமா?” என்றேன்.

அவள் என் முகத்தையே உறுத்துப் பார்த்தவள், புன்முறுவலுடன் தலையை அசைத்தாள்.

தான் ஒரு linguistics student என்றும் அழிந்து கொண்டிருக்கும் மொழிகள் சம்பந்தமாக ஆய்வு செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள். இது போதாதா? “நான் அப்படியான சில மொழிக்கூறுகளை அறிவேன்” என்றேன். அவள் வாதுமை நிறம் கொண்ட தனது விழிகளை ஆர்வத்துடன் எனது விழிகளில் கலந்தாள்.

அக்கணத்தில், நான் இத்தாலியின்  Colosseum  -ன் சுற்றுச் சுவர்களின் எதிரே விரிந்துள்ள பசும் புல் விரிப்பின் ஓரத்தில் ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து, எனது கிதாரை எடுத்து, மீட்ட ஆரம்பிக்கிறேன்!  Thunderstruck notes! வேகம் கூடிக் கூடி கிதார் கம்பிகள் அதிர்கின்றன. எங்கள் செம்மொழி மரபான சங்க இலக்கியத்தின் காதல் செல்வமான  “யாயும் ஞாயும் யாராகியரோ..” என்னும் குறுந்தொகைப்பாடலை Colosseum -ன் தொன்மையான சுவர்களில் அதிர விடுகிறேன். எனது விரல்கள் ஜி கம்பியை சுண்டும் பேரதிர்வு அந்த நிலமெங்கும் அலையோட,  இசையைப்  பிளந்துகொண்டு வருகிறாள் லுட்மில்லா! ஜி கம்பி அறுந்து என் விரல்களெங்கும் ரத்தம் வழிய, இசை மீட்டும் என் கரம் பற்றி ரத்தம் வழியும் எனது விரலை எடுத்து தனது இதழ்களால் கவ்விச் சுவைத்து அவள் முத்தமிட்டபொழுது, நான் சொன்னேன்..

“லுட்மில்லா, ஐ லவ் யூ”

திடுமென ஒலித்த மின்சார ரயிலின் ஹார்ன் சத்தம் தமிழ்நாட்டுக்கு இழுத்து வந்தது.

காலியான தேநீர்க் கோப்பையை நகர்த்தி விட்டு புறப்படுவதற்கு ஆயத்தமானாள் லுட்மில்லா. எனக்குள் பெரும் பதட்டம் தொற்றிக் கொண்டது. “நாம் ஏன் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்ளக்கூடாது?” என்றேன். (“வாசகரே, சலசலக்கும் நச்சுப் பாம்பைப் போல அவளைச் சுற்றி வந்து நீங்கள் குறிவைத்தது இதற்குத்தானே ” என்கிறான் கால்வினோ.)

“உங்களை மீண்டும் எப்படிச் சந்திப்பது? உங்களது தொடர்பு எண் கிடைக்குமா?” அப்போது, உங்களது மொழிக் கூறுகள் சம்பந்தமான ஆய்வுக்கு என்னால் உங்களுக்கு உதவ முடியும் ” என்றேன்.

“நான் இங்கு சுற்றுலா பயணியாக வந்திருப்பதால், தொடர்பு எண் இல்லை. உங்களது எண் தாருங்கள்.. நான் தொடர்பு கொள்கிறேன்” என்றாள்.  எண் வாங்கியதும் சட்டென விடைபெற்றுக் கொண்டு அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிப் போய்விட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் இருப்புக் கொள்ளவில்லை. அவளது தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தேன். அடுத்தநாளே அவளிடமிருந்து அழைப்பு! மாலை மூன்று மணிக்கு எக்மோர் மியூசியத்தில் சந்திக்கலாம் என.  எனக்குள் மகிழ்ச்சி பீறிட்டடித்தது!

இப்பொழுது வேறொரு பதட்டம் சேர்ந்து கொண்டது. அவள் ஏதோ மொழி ஆராய்ச்சி குறித்து பேசினாளே.. அது சம்பந்தமாக அவளிடம் மிக முக்கியமான சில தரவுகளை எடுத்துக் கொடுத்து இம்ப்ரெஸ் செய்து நட்பை விடாமல் தொடர்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்புடன் தீவிரமான யோசனைத்தேடலில் ஆழ்ந்தேன்.  இதுவரை அவள் கேள்விப்படாத மிகவும் புதுமையான விஷயமாக இருக்க வேண்டும்.

அந்த யோசனையில் கண் சிமிட்டியது  பிரியன் ஆல்டிஸ்  – ன் Confluence கதை.

இதில் வருகின்ற கதை சொல்லும் வடிவம் கதை வடிவமாக இல்லாமல்,  ஒரு புதிய மொழி சம்பந்தமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தரக்கூடிய  அகராதி வடிவத்தில் இருக்கும். அதாவது, வேற்று கிரகம் ஒன்றின் மொழி அகராதியிலிருந்து ஒரு பக்கத்தை முன்வைக்கிறார் ஆல்டிஸ். அந்த ஒரு பக்கத்தைக் கொண்டே  அந்த கிரகத்தின் வாழ்வியலைத் தரிசனம் கொள்ளலாம். முற்றிலும் புதிய மொழி சார்ந்த, கலை,கலாச்சாரம், அரசியல், சமூகம்… அந்த மண்ணின் வெதுவெதுப்பு,  மனித வாழ்வின் இருப்பு.. என அந்த அகராதியின் சொற்களுக்குள் மறைந்திருக்கும் அபாரமான கதைப்பிரதி!

அப்படி ஒரு அபாரமான  விஷயத்தைப் பிடிக்க வேண்டும்.

என் மண்டையெங்கும் ஓடிக்களித்த என்ன ஓட்டங்களில் சரேலென மின்னலாய் இடைவெட்டியது  ஒரு ராக ஆலாபனை!

*******

கழுதையின் மீது அழுக்குத் துணிகளை ஏற்றிக்கொண்டு வரும் என் பால்ய வயதுத் தோழன் மாகாளியின் ராக ஆலாபனை அது!

ஆம், எங்கள் நாட்டில் அழுக்குத் துணிகளை துவைத்து சுத்தம் செய்வதற்கு “வண்ணார்” என்று ஒரு சமூகம் உள்ளது. தற்காலத்தில் “சலவையாளர்கள்” எனப்படும் இவர்களை, “நாட்டு மக்களின் அழுக்கு ஆடைகளை துவைத்து சுத்தம் செய்து தருவது இவர்களது சாதியின் குலத்தொழில்” என்று மதக் கோட்பாடுகளான நான்கு வர்ணபேதங்களை முன்வைத்து காலங்காலமாக பிரித்து வைத்திருக்கும் மிக கேவலமான நடைமுறை எங்கள் நாட்டில் உண்டு. சாதி முறைமைகள்தான் இங்கு பிரதான பங்கு வகிக்கின்றன.
அந்தச் சமூகத்தினர் இன்றளவிலும் கிராமங்களில் சொற்பகூலிக்காக, அழுக்குத் துணிகளை வெளுத்துக் கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.

அந்த சமூகத்து மக்களிடம் ஒரு அபூர்வமான மொழியியல் பார்வை இருக்கிறது. ஊர் மக்களின் ஆடைகளை ஒட்டுமொத்தமாகத் துவைத்து, இன்னார் இன்னார் ஆடைகள் என்று வகை பிரித்து எடுப்பதற்காக, அவர்கள் பல்வேறு விதமான குறியீடுகளை ஆடைகளின் உள்புறத்தில் சிறியளவில் அடையாளமிடுகிறார்கள். இந்தக் குறிகள் “வண்ணாங்குறிகள்” என்று அழைக்கப்படுகிறது.  இந்தக் குறியீடுகளுக்கு என்ன தன்மை, அதன் உருவாக்கத்தின் பின்னணி என்ன என்றெல்லாம் இவை குறித்து ஒரு நீண்ட ஆய்வே செய்யலாம். இந்தக் குறியீடுகளில் ஒரு புதிய மொழியியல் பார்வையும், ஒரு புதிய குறியீட்டியல் தன்மையும் 2000 வருடங்களாக மறைந்து கிடக்கிறது.

எனக்கு சின்ன வயதிலிருந்தே “ஒளிந்து விளையாடும் விளையாட்டு” மிகவும் பிடித்தமானது. என் ஒளி விளையாட்டின் தோழன் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மாகாளி !

ஒளி விளையாட்டில், கண்ணாம்பூச்சியாய் அகல விரித்து வைத்திருக்கும் என் கைகளில், பாட்டுப் பாடியபடி, ஒரு வினோதமான குறியை எழுதுவான் மாகாளி.

*கண்ணாம் கண்ணாம் பூச்சி
கோட்டிலே மறையுது கோழி
ஏட்டிலே மறையுது ஏழி
ஓடிப்போயி  தேடிப்போயி
ஒளிஞ்சிருப்பதை புடிச்சி வா

அவன் பாடப்பாட சக விளையாட்டு தோழர்கள் ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள்! பாட்டை முடித்ததும் அவன் எழுதிய குறிக்கேற்ப நான் தேடிப்போய் ஒளிந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அப்படியான ஒரு ஒளிவிளையாட்டு நாளில்,

ஒளிந்து கொண்டிருக்கும் தோழர்களை தேடித் தேடிச் சலித்துப் போனேன்.  இண்டு இடுக்குகளில் நுழைந்து இறங்கியதில் அரை வட்டமாய் எதிர்ப்பட்டது ஒரு குறுகியவழி. ஒருக்களித்துச் சரிந்த அதன் இடதுபக்கம் நுழைந்து வலப்புறமாய்த் திரும்பி, அந்தப் பகுதியின் கடைக்கோடியில் ஒருக்களித்து மூடியிருந்த கதவின் வழியே தூவானமாய்ச் சிதறிய ஒளியை நோக்கி மெதுவாய் நடந்து, கதவைத் திறந்தேன், கிறீச்சிட்டு எழும்பிய ஒலியில் வௌவால்கள் படபடத்தெழும்பி இருளில் மோதி விழுந்தன. புழுக்கை வாசனை குபீரென்று கவ்வ, அலங்கோலமாய் சரிந்து கிடக்கும் பாழடைந்த அறையில் நின்று கொண்டிருந்த உருவத்தின் மீது ஒரே தாவாகத் தாவிப் பிடித்தேன். அந்த உருவம் அப்படியே சேர்த்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டது. முகத்தில் குபீரென வீசியது மல்லிகை வாசனை. என்னைக் கட்டிப் பிடித்திருந்தவள் ஒளிவிளையாட்டுத் தோழி மல்லி! ஓரிரு நிமிஷங்களுக்கு எனக்கு ஏதுவுமே புரியவில்லை.  “பயந்துட்டியா?’ என்று கிசுகிசுத்தவாறே எனது உடலெங்கும் அளைந்தாள். முகத்தை என் முகத்தோடு சேர்த்து அழுந்தியதில் கமழ்ந்த ஈரம் கிறக்கத்திலாழ்த்தியது.

நான் திக் பிரமையுடன் நின்றிருக்க, அவள் எனது உடலெங்கும் புதுவிதமான விளையாட்டை விளையாடினாள். மல்லிகைப் பூவின் வாசனையும், குளத்துத் துறையில் அலர்ந்திருந்த தாழம் பட்டைகளின் நறுமணமும் பாழடைந்த அறையின் புழுக்கை வாசனையும் கலந்து கலந்து நானும் அவளும் பல்வேறு குறிகளாக மாறி ஒரு புதுமையான விளையாட்டை விளையாட ஆரம்பித்தோம்.

திடீரென ஒருநாள் மல்லி விளையாட்டுக்கு வரவில்லை. வேறு ஊருக்கு புலம் பெயர்ந்துவிட்டார்கள் என்ற தகவலில், அதிர்ந்து போனேன்.

அவளை மீண்டும் அடைவதற்கான ஒரே வழியாக அந்தக் கிளை பிரிந்தோடும் குறிகளின் குறுக்குவெட்டுக் கோடுகளைத் தேர்ந்தெடுத்தேன்! என் உயிர் இயக்கமே அதில்தான் பதுங்கியிருக்கிறதென்பது போல கோடுகளுக்கு மேல் வைத்த குத்துப் புள்ளிகளும், கோடுகளுக்குக் கீழான குத்துப்புள்ளிகளும் கண்சிமிட்டின.

நானும் மாகாளியும், பள்ளி விடுமுறை நாட்களில், அவனது பெற்றோர் ஆடைகளை துவைத்துக் காயப்போட்டிருக்கும் இடத்திற்குப் போய்  துணிகளை அடையாளக் குறி பார்த்து இனவாரியாகப் பிரித்து அடுக்கும் வேலையை எல்லையற்ற உற்சாகத்துடன் செய்வோம். என் பிரியமான ஒளி விளையாட்டின் சாகசம் நிரம்பிய தேடுகையில் விரியும் வினோதப் பரப்பு. ஆடைகளின் நீல வண்ணக் குறிகளில், இனம் பிரியும் பயணம்  என் உடம்பெங்கும் சூட்டைக் கிளப்பி விட்டதில் கிளைவெட்டி வெட்டிச் சுழல்கின்றன வண்ணாங்குறிகள். குறியீடுகளில் அடைபட்ட ஜனங்களின் துணிகளைப் பிரித்தெடுக்கும் புதிர் விளையாட்டின் சிக்கலான முடிச்சுக்கள் அவிழும் கணங்களில் பீறிடுகின்ற பரவச நிலையை உணரும் போதெல்லாம், பழுப்பு மணம் வீசும் புதிர்வழிச் சுழல்வுகளுக்குள் மல்லியைச் சந்திப்பேன்.
பைத்தியம் பிடித்தவன் போல அந்தக் குறியீடுகளில் அலைந்தேன்.

மாகாளியின் அப்பா  ஒவ்வொரு குறியாக இனம் பிரித்துச் சொல்ல ஆரம்பித்தார். பிரியும் ஒவ்வொரு கோட்டுக்கும் அர்த்தம் சொல்லி மனித முகங்களை – முகங்களுக்குப் பின்னே திரைந்திருக்கும் படிமங்களை – இனங்காட்டினார். புதிர் மொழியாய் உருக்கொள்ளும் அந்த அபூர்வதரிசனம், அற்புதங்கள் நிரம்பிய ஒரு கிரகத்தை எனக்குள் உருவாக்கியது. அதன் புதிர் விளையாட்டின் சவால்களை எதிர்கொள்வதே எனது வாழ்வு ரகசியமென உள்முகமாய் சுழன்றிழுத்துக் கொண்டது அந்த கிரகத்தின் வினோத வெளி.

குறுக்கு வெட்டுக் கோடுகளாய்ச் சுழன்றோடும் குறிகளின் விட்டங்களிலும் சதுரங்களிலும் கால்கள் பதியப் பதிய நடந்து திரிந்தேன். மனித இனத்தின் பாரம்பரியமும் கலாச்சாரமும் குறிக்கோடுகளின் நெளிப்பரப்பில் சுருள்கின்ற அபூர்வ சுழற்சியை, அவர் கோடி காட்டிய கணங்களில் எனது கண் குவடுகள் கிழிபட்டன. ஒரு புத்தம் புதிய மொழியுடன் புதியதொரு கிரகத்தில் நானும் மல்லியும் ஒளிவிளையாட்டு விளையாடித் திரிந்தோம்!

ஆனால், காலஓட்டம் என்னை வேரோடு கிள்ளியெடுத்து வேறொரு யதார்த்தத்திற்கு வீசியது  என் Fantasyயும் ஒளிவிளையாட்டும், மொழிக் குறியீடுகளும், மல்லியும் நெடுந்தூரம் போய்விட்டார்கள். புதிய கிரகத்தில் பாடப்பட்ட குறியீட்டுப்  பாடல்களையும், மல்லியின் நினைவுகளையும் முடிவுறாத ஒளிவிளையாட்டையும் மறந்திருந்த என்னை, மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கும் வழியை அமைத்துத் தந்தவன் இடாலோ கால்வினோ.

The Castle of Crossed Destinies நாவலில் டேரட் கார்டு மூலமாக ஒரு புதிய மொழியை உருவாக்கி உரையாடும் சாத்தியத்தை நிகழ்த்தியிருப்பான் கால்வினோ.

நான் என்  குறியீட்டு மொழியை தரிசிக்க என்னை அழைத்துச் செல்லும் மானசீகப் பயணம் அது. மாகாளியின் அப்பா கிழித்த என் கண் குவடுகள் எகிப்திய Eye of Horus ஆக மாறுகின்றன. கைகளில் அவிழ்கின்றன குறியீடுகள். டேரட் கார்டுகளாக, முத்தேழ் என்னும் குறி சொல்லும் கற்களாக, Aztec sun stone ஆக,  Yoruba Opon Ifá ஆக அலையோடி வருகிறாள் மல்லி என்னும் லுட்மில்லா!

*******

லுட்மில்லாவிடம் இந்தக் குறியீடுகள் குறித்தும் இதற்குள் பொதிந்து கிடைக்கும் மொழியியற் கூறுகள் குறித்தும் பேசியவுடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாய் பாய்ந்து கட்டிப் பிடித்து முத்தம் தந்தாள். கடவுளே.. எதிர்பாராத அதிர்ச்சியில் திகைத்து பரவசப்பட்டுப் போனேன்.

இந்த முத்தம் Santiago Ramón y Cajal சொல்லும் “protoplasmic kisses” க்கு சற்றும் சளைத்ததல்ல !

அடுத்த சில வாரங்களில் வண்ணார் மொழியில் வருகிற வினோதமான குறியீடுகளை வைத்து இருவரும் ஏறக்குறைய ஒரு மொழியை உருவாக்க ஆரம்பித்தோம். முத்தங்கள் கூடிக்கொண்டே இருந்தன. எங்கள் நாட்டின் இண்டீரியரான கிராமங்களுக்குப் பயணம் போய் அங்குள்ள வண்ணார் பெருமக்களிடம் கலந்து உறவாடினோம். லுட்மில்லா குறிப்புகளாக எடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்தமொழியில் பேச ஆரம்பித்தோம்.  ஆரம்பத்தில் வேடிக்கையாகவும், தட்டுத்ததடுமாறியபடியும் இருந்தாலும், அடுத்த ஒரு மாதத்தில் சரளமாக உரையாட ஆரம்பித்தோம். முத்தங்கள் எல்லை மீறின.

அப்பொழுது ஒரு விஷயத்தை அவதானித்தேன். லுட்மில்லாவின் இதழ்கள் என் அதரங்களைக் கவ்வும்போது, சுவைக்கும் பொழுதும் அதில் ஏதோ ஒரு நெருடல் இருப்பதை உணர்ந்தேன். ஆனால், இன்னதுதான் என்று தெளிவாகப் புரியவில்லை. மேலும் ஒரு வினோதம் நடந்தது :  Enrico Fermi யின் நூலைப் படித்துக் கொண்டிருந்தாள். நான் வியப்புடன் Fermi எல்லாம் பிடிக்குமா? என்றேன். அவள் முகம் பளீரெனச் சிவந்துபோனது.  “Fermi யைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? Fermi paradox பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.”என்றாள். “மேலோட்டமாகத்தான் அறிவேன்.. எனக்கு அதில் பெரிதாக ஆர்வம் இல்லை..” என்று விலகி வந்து விட்டேன்.

ஒருநாள், எங்கள் நாட்டின் அழிந்து போன நகரமான தனுஷ்கோடிக்குப் போயிருந்தோம். மிகக் கோரமான புயலால் மண்ணில் புதைந்து சிதிலமாகிப்போன தனுஷ்கோடியின் கடற்கரை மணலில் கால்கள் பதியப்பதிய நடந்தோம்.

“எங்கள் நாட்டின் Herculaneum – த்தில் இருப்பதுபோல் உணர்கிறேன்” என்றவாறு என் தோளில் முயங்கிச் சாய்ந்தாள். அவளது மார்புப் பகுதி என் விலாவில் அழுந்த, அதன் sister city யான Pompeii – ன் மண் வாசனையும் வீசுகிறது என்று இறுக்கி அணைத்தபடி கவிதை பாடினேன்.

இருவருக்குள்ளும் எழுந்த எரிமலைச் சீற்றத்தால் எங்கள் அறைக்கு விரைந்தோம். பதற்றத்துடன் அவரவர் ஆடைகளைக் கழற்றினோம். அவளது மதர்த்த மார்புகள்  திமிறியெழுந்தன. அவள் மேல் பாய்ந்து இதழ்களைப் பற்றிக் கவ்விச் சுவைத்தேன். அப்பொழுது மீண்டும் அந்த அதிர்ச்சி தாக்கியது.  அவளது இதழ்களைக் கவ்விச் சுவைத்த ருசி, மானுட உடலின் ருசியாக இல்லை,  எனக்குள் சிலீரென அச்சம் பாய்ந்தது. மெல்ல கீழிறங்கி அவளது மார்பில் முகம் புதைத்தேன், ஏதோ ஒன்று அமானுஷ்யமாக  இருப்பது போல் பட்டது. கடவுளே, அவளது இரு மார்பகங்களில் இடது மார்பகத்தில் nipple இல்லாமல் மொழுமொழுவென்று இருந்தது.

தலைகிர்ரென்று சுழல, முழுமையாக நோட்டம் விட்டேன். மதர்த்த மார்புகள்!  “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா ” என்று எங்கள் பட்டினத்தாரின் பாடல்வரிகள் எனக்குள் சுழன்றன.

சட்டென எழுந்து அறையை விட்டு வெளியேறினேன். விபரீதமான எண்ண ஓட்டங்களில் உழன்றபடி தனுஷ்கோடியின் சிதிலங்களுக்கிடையில் அலைந்தேன். செய்வதறியாத நடையில் கால்கள் சலித்தோய்ந்து உடலெங்கும் பயத்தின் இறுக்கத்தில் மெதுவாக அறைக்குத் திரும்பினேன்.

அவளைக் காணவில்லை. என்னுடைய பயணப்பை மாத்திரம் அறையில் இருந்தது. அவளுடைய பொருட்கள் எதுவும் இல்லை. படுக்கையின் மீது ஒரு கடிதம் குறியீட்டு எழுத்துக்களில் படபடத்துக் கொண்டிருந்தது.

“உங்கள் புதிய மொழி உருவாக்கத்திற்கு மிகவும் நன்றி. நான் விடைபெறுகிறேன். காலப்பயணங்கள் சாத்தியமாகும் என்றாவது ஒருகாலத்தில், நாம் சந்திப்போம். என் அன்பளிப்பாக Enrico Fermi யின் நூலை தந்துவிட்டுப் போகிறேன். மற்றும்,  உங்களுக்குப் பிடித்தமான பெயரிலேயே கையெழுத்திடுகிறேன் – லுட்மில்லா.”

**********

அதன்பிறகு பைத்தியம்  பிடித்தவன் போல அந்தக் குறியீடுகளில் அலைந்தேன். Fermiயின் நூல் ஒரு நீண்ட பயணத்திற்கு என்னை அழைத்தது. அதன் நீட்சியில், Albert Einstein, Fermi paradox, extraterrestrial life, Civilizations on other planets, Science Fiction, Stephen Hawking, Time travel… என்றெல்லாம் கலவையான பயணத்தில், இன்று உங்கள் முன் column எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அந்த அனாமதேய மெயிலின் வினோதமான குறியீடுகளில் இறுதியாக கையெழுத்திட்டிருக்கும் சுழிப்பிகளில் சுழலும் பெயரை எப்படி மறப்பேன்!

இப்படியெல்லாம் உண்மையில் நடந்ததா, அல்லது புருடா விடுகிறேனா என்பதை “லுட்மில்லா” ஏதாவது ஒரு காலத்தில் வந்து சொல்வாள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்!

*****************

குறிப்புகள் : 

1. “அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” – இந்தியாவின் இதிகாசமான ராமாயணம் – த்தில் கதை நாயகனும் நாயகியும் முதன் முதலாக சந்தித்துக் கொள்ளும் போது வரும் புகழ்பெற்ற வாக்கியம்.

2.  “யாயும் ஞாயும் யாராகியரோ..” –  தமிழ் மொழியின் தொன்மையான சங்க இலக்கிய நூலான குறுந்தொகை நூலில் வரும் பாடல் இது.  நீ யாரோ நான் யாரோ, நீ எந்த நாடோ, நான் எந்த நாடோ, எல்லா பேதங்களையும் களைந்து  இன்று அன்புடைய நெஞ்சங்களாய் ஒன்று சேர்ந்தோம் என்கிறது அப்பாடல்.

3.“protoplasmic kisses”  : The Father Of Modern Neuroscience என்று அழைக்கப்படும் ஸ்பானிஷ் மொழிச் சிந்தனையாளரான Santiago Ramón y Cajal, “ஒவ்வொரு மூளைத்திசுவும் தனக்கான இன்னொரு மூளைத்திசுவைக் கண்டுணர விரும்பும், இந்த வலி தரும் நிகழ்வு ஒரு ப்ரோட்டோபிளாஸ்மா முத்தத்தில் சென்று முடியும் – இது எந்தவொரு காவியக்காதல் கதைக்கும் சளைத்ததல்ல” என்கிறார்.

4. “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா”  – மனித உடல் என்பது  காற்றடைத்த பை என்ற சிந்தனையை முன்வைத்த எங்கள் தமிழ் மரபின் செழுமையான சித்தர் மரபுச் சிந்தனையாளரான பட்டினத்தார் என்பவரின் பாடல்.

*********

மேலும் சில குறிப்புகள் :

மொழிவாரி அரசியல்   –  தமிழ் மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து,  அந்தக்கட்டத்தில் பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் ஆங்கிலம் சரளமாகக் கற்றுக்கொள்ளாமல் போய் விட்ட சூழல்.

Thunderstruck notes  –  இடியின் ஓசையுடனும் வேகத்துடனும் இசைக்கப்படும் இசைக் குறிப்பு

கண்ணாம் கண்ணாம் பூச்சி
*கோட்டிலே மறையுது கோழி
*ஏட்டிலே மறையுது ஏழி
ஓடிப்போயி  தேடிப்போயி
ஒளிஞ்சிருப்பதை புடிச்சி வா

*கோட்டிலே மறையுது கோழி  என்னும் வரியின் அர்த்தம் கோடுகளில் மறைந்திருக்கிறது கோழி

*ஏட்டிலே மறையுது ஏழி  என்னும் வரியின் அர்த்தம் புத்தக ஏடுகளில் மறைந்து நிற்கின்றன ஏழு உலகங்கள் (நம்மை சுற்றிலும் ஏழு உலகங்கள் இருப்பதாக பொதுமக்களால் கருதப்படுகின்றன)

**********************

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page