- கௌதம சித்தார்த்தன்
புதிர் போடும் பெண்ணே! மரணத்தின் வாசலில் உருப்பெறும் உன் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை விடவும் உன் கதைமொழியின் புதிர்க்கட்டங்களில் மாட்டிக்கொள்ளவேவிரும்புகிறேன் நான். மரணத்தை தள்ளிப்போடும் இந்த அபாயமான போட்டியில் கதைக்கு வெளியேதான் இருக்கிறது புதிர்.
உலகப்புகழ்பெற்ற புராண இலக்கியமான 1001 அரேபிய இரவுகளில், கதைசொல்லியான ஷெகர்ஜாத், தீராத கதைகளைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். அவளது மொழிநடை விரிந்துவிரிந்து பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. விரிந்து பரவும் அந்தக்கதைகளுக்கு வெளியே முற்றிலும் புதிதான இன்னொரு கதை சுழன்று கொண்டிருக்கிறது.அது கதைசொல்லியின் மரணத்தைத் தள்ளிப் போடும் கதை.
எழுத்தின் பரிமாணங்கள் Cube விளையாட்டின் சுழல் அடுக்குகளைப் போல எழுத்துக்கு வெளியே ஒரு பரிமாணத்தை உருவாக்குகின்றன. கதைசொல்லி தனது எழுத்தில் கட்டமைக்கும் படிமம்,குறியீடு, உருவகம் முதலியவற்றின் அற்புதார்த்தம் கதைக்கு வெளியே மறைந்துள்ள கதையை கட்டமைத்து எழுப்புகிறது.
லத்தீனமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ்ஸின் ‘நீரைப்போன்றது ஒளி’ என்ற கதையில் இந்த நுட்பமான கட்டமைப்பை அவதானிக்கலாம்:
விடுமுறை நாளில் குழந்தைகள் தங்களது மாடி வீட்டில் ‘நீர் விளையாட்டு’ விளையாட விரும்புகிறார்கள். அதற்குத் தண்ணீர் நிரம்பிய நீர்நிலை வேண்டுமே.. அதற்காக மேஜிக்கல் ரியலிஸத்தன்மையுடன் ஒரு காரியம் செய்கிறார்கள். அந்த மாடி வீட்டில் உள்ள மின்சார விளக்கின் கண்ணாடி உருண்டையை உடைக்கிறார்கள். அதன் வழியாக ஒரு அற்புதம் நிகழ்கிறது. அந்தஉடைந்த மின் விளக்கிலிருந்து சிந்தும் ஒளி, நீராக மாறி அந்த அறையெங்கும் பரவுகிறது. மாடி வீடு முழுக்க நீரோட்டம் நிரம்பி நீச்சல் குளம் போல வழிகிறது. குழந்தைகள் உற்சாகத்துடன்அதில் குதித்து நீர்விளையாட்டு விளையாடுகிறார்கள். சற்றைக்கெல்லாம் அந்த ஒளிவெள்ளம் பாய்ந்தோடி வீடு முழுக்க வெள்ளம் நிரம்பி வழிந்து அந்த நகரையே மூழ்கடிக்கிறது.
இது ஒரு அழகியல் தன்மையுடன் கட்டமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான Fantasy யான கதைப்பிரதியாக இருந்தாலும், வெறும் வினோதமான காட்சி அமைப்புக்காக இந்த மாய யதார்த்தத்தைஉருவாக்கவில்லை மார்க்வெஸ். இந்த மிகச்சிறிய கதையை நுட்பமாக அவதானிக்கும்போது, இந்தக் கதைப் பிரதிக்கு வெளியே இன்னொரு கதைப்பிரதி Invisible Text ஆகக் கட்டமைகிறசாராம்சத்தைக் கவனியுங்கள்.
செவ்விந்தியப் பழங்குடிமக்களின் நிலங்களை அழித்து, அவர்களது வாழ்வியலைச் சிதைத்து, அவர்களது கனிமவளங்களைச் சுரண்டி உருவான அமெரிக்க ஏகாதிபத்திய வரலாறு குறித்து நாம்அறிவோம். சியாட்டில் என்கிற அந்தப் பழங்குடிமக்களின் தலைவன், அந்த ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எழுதிய கடிதம், ஒரு கதைப்பிரதியாக அந்த நிலமெங்கும் சுழன்று கொண்டிருக்கிறது.
அந்தப்பிரதியின் ஜீவன்தான் மார்க்வெஸ்ஸின் இந்தப்பிரதி.
//‘எங்களது அமேஸான் நதியிலிருந்து மின்சாரத்தை அபகரிக்கிறீர்கள். எங்களது இயற்கை வளங்களை நாசமாக்குகிறீர்கள். இப்படி எங்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் நீங்கள், ஒருதருணத்தில் அவைகளின் சீற்றத்திலேயே அழிந்து போவீர்கள்..’ என்று ஒரு பழங்குடியின் குரல் பிரதிக்கு வெளியே ஒலிக்கிறது.//
கதைக்கு வெளியே இன்னொரு கதை செயல்படும் இந்த வகை புதிய எழுத்துக் கூறுகள், நமது செழுமையான சங்க இலக்கிய மரபிலேயே கருக்கொண்டு இருப்பதை அவதானிக்கலாம்.
இதே ‘நீர்விளையாட்டு’ என்னும் கருத்தியலை பரிபாடல் எவ்வாறெல்லாம் கட்டமைக்கிறது என்று பாருங்கள்.
சங்ககாலத் தமிழிலக்கியத்தொகுதியில் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் இலக்கியம், பக்தி இலக்கியத்தன்மையை அறிமுகப்படுத்தியதில் ஒரு முன்னோடி என்று கொள்ளலாம்.ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உருவான தேவாரம், திருவாசகம் மற்றும் பெரிய புராணம் போன்ற பக்தி இலக்கியங்கள் இதனுடைய நீட்சியில் தோன்றியதாக ஆய்வறிஞர்கள்கருத்துரைக்கிறார்கள்.
இந்தப் பாடல் பிரதி குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்தின் தெய்வங்களான செவ்வேள் முருகனையும் திருமாலையும் பற்றிப் பாடப்படும் இறைத் தன்மையுடன், வைகை நதியில் பொங்கிவழிந்தகாதல் களியாட்டங்களைக் கலந்து முன்வைக்கிறது. பெருக்கெடுத்தோடும் வைகை நதியின் நீர்விளையாட்டில் மனித வாழ்வியலின் காதல்களியாட்டங்கள் கொண்டாட்டமாய் நடக்கின்றன.கற்பியல் களவியல் வாழ்வியல் இணைந்த மனிதவாழ்வியலின் தரிசனம், அபாரமாய் வாசகனின் முன் எழும்புகிறது.
மலையிலுள்ள புன்னையும், கரைகளிலுள்ள சுரபுன்னையும், சண்பகமும், வில்வமும், வேங்கை மரமும், காந்தளும், தோன்றியும், நரந்தற்புற்களையும், கொம்புகளாய் விரிந்த பெரிய மரங்களையும் வேரோடு அகழ்ந்தெடுத்தபடி, பெருங்கற்களையும், பருமணலையும் அடித்துக்கொண்டு குண்டுகுழிகளை நிரவியடித்தபடி பாய்ந்து வருகிறது வைகை.
மொட்டவிழ்ந்த பூக்கள், நுகர்ந்து கீழே விழுந்த உதிர்பூக்கள், காய்ந்த சருகுகள் என்று அனைத்தும் சுழன்றோடும் வெள்ளத்தில் அளைகின்றன அதன் அளைதலில், தலைவன் தாம்விரும்பின காதற் பரத்தை, இற்பரத்தை, நரை விராவிய கூந்தலினர் என்று பல பகுதிகளில் பிரிந்து கிடந்த காதலும், காமமும், கள்மயக்கமும் இணைந்து இணைந்து பல்வேறு மலர்களின் உருவகங்களாகச் சுழல்கின்றன. இவைகளை ஒரு சேர இணைக்கிறது வைகை. மேடுபள்ளங்களாய் விரவிக்கிடக்கும் மக்களின் வாழ்வியலை நிரவி சமநிலைப்படுத்துகிறது வைகை என்னும் நதியின் இறைத்தன்மை.
நதியின் பெருவெள்ளம் உருவாகும் தன்மையைப் பாருங்கள்:
யானைகளை வரிசையாக நிறுத்தினாற்போல மேகங்கள் வானத்திலே உருவாகின. அம்மேகங்கள் யானைகளின் கர்ஜனையாய் இடிமுழக்கம் செய்தன. அந்த இடிமுழக்கம் பெருமழையாய் மாறி பெருக்கெடுத்தோடி வெள்ளமாய்ப் பரந்து கூடியது. அதனால் நிலம் மறைவதுபோல நீர் எங்கும் நிறைந்தது.
வைகைநதி என்பது இங்கு வெறும் களியாட்டங்களை இணைக்கும் நீர்விளையாட்டு மட்டுமே அல்ல. அது ஒரு வாழ்வியல் தரிசனம்.
தலைவனுக்கோ அது போர்க்களம், தலைவிக்கோ மணலில் எழுதிய தலைவனின் பாவைகளை நிரவி விளையாடும் நீர்விளையாட்டு, இற்பரத்தைக்கோ காமக் களியாட்டம். இப்படிஒவ்வொருவருக்குமான ஆசாபாசங்களையும் லட்சியங்களையும் இணைக்கிறது பெருவெள்ளம்.
தலைவன், தலைவிக்காக வைத்திருந்த சிறந்த மதுவிலே கொஞ்சம் அப்புனலிலே ஊற்றியதில், கிறக்கத்தின் உச்சத்தில் தலைசுழித்தோடுகிறது வைகை. அதன் ஆர்ப்பரிக்கும்அலைக்கரங்களை நோக்கி நடக்கிறாள் தலைவி, தம்தோழியருடன். அவர்களது காதல் மீதூறும் நடையானது, பிடியின் வேட்கையாய் பருமணலில் குழியாய்ப் பதிகிறது. அந்தக்குழியைவைகை மேடாக்கிற்றென துடியை முழக்கினான் துடியன்.
பறைகள் முழங்கின. யாழும் மிடற்றுப்பாடலும் இசைந்தன. சுருதியோடு குழல்கள் ஒலித்தன. முழவுகள் ஆர்த்தன. தலைக்கோல் மகளிரும் பாணரும் ஆடலைத் தொடங்கினர். அந்தக்கொண்டாட்டத்தில் கரையெங்கும் மேவிச் சென்றது நீர்விழவு.
மனிதர்கள் மட்டுமல்லாது, இந்த நீர்விளையாட்டில் கலந்து கொள்ளும் ஆண் யானையான களிறு, தனது பெண்யானையான பிடியின் மீது துதிக்கையால் நீரை உறிஞ்சி வானை நோக்கிப்பிளிறியபடி வீசும்போது நதியின் ஆர்ப்பரிப்பு மேலும் பெருகுகிறது.
மகளிர் கைபோல் குவிந்த காந்தள் முகையும், பாம்புகள் படமெடுத்தாற்போலவும் குடைவிரித்தாற் போலவும் தோற்றம் தரும் காந்தள்மலர்களையும், செடிகொடிகளையும் அலைகளால்தள்ளிக் கொண்டு கரையுடைத்துப் பாய்ந்து வரும்போது, யானைகளுக்காக வெட்டப்பட்டிருந்த குழிகளை மூடி மேவித்தள்ளிக்கொண்டு வரும் புனலின் காட்சியை களிறுகள் கையைத்தூக்கிவிடும் நீரை ஒத்ததாக இருக்கிறது என்கிறார் பாடலாசிரியர் ஆசிரியன் நல்லந்துவனார். (பாடல் -20)
நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து
சுடுமாக் களி றணத்துக் கைவிடு நீர் போலும்
நெடுநீர் மலிபுன னீன் மாடக் கூடற்
கடிமதில் பெய்யும் பொழுது (பரி பாடல் -20)
இப்படி மகளிரும் மைந்தரும் தம்முள் மயங்கும்போது அவர்களது உள்ளத்திலிருந்த நிறையை வைகை மேவுகிறது. பரந்த புனலிலே எல்லாமே சமநிலைப்பட்டது என்கிற பார்வையாகநீர்விளையாட்டை மாற்றுகிறது பாடல் பிரதி. இந்தப்பார்வையே இறைத்தன்மையின் புள்ளியாகக் கட்டமைகிறது.
சரி. இப்போது இந்த Text க்கு வெளியே உள்ள இன்னொரு Invisible Text க்கு வருவோம்.
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்.. (அகநானூறு – 165.)
பெண்யானையும் ஆண்யானையும் சல்லாபத்துடன் காட்டின் வழியே போய்க் கொண்டிருக்கும்போது, சட்டென யானைகளைப் பிடிக்க வெட்டி வைக்கப்பட்டிருக்கும் குழியில் பெண்யானைவிழுந்து விடுகிறது. பயம்பு என்று அழைக்கப்படும் அந்தப் பாழுங்குழியில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பிடியின் நிலையைக் கண்டு பரிதவித்துப்போகிறது களிறு. உடனேமற்ற யானைகளை அழைத்து அதைக் காப்பாற்றும் பொருட்டு, துதிக்கையை வானை நோக்கி உயர்த்தி பெரும் கர்ஜனை செய்கிறது. அதன் கர்ஜனையில் அந்த நிலம் அதிர்வுபட, ஓங்கிஉயர்ந்திருந்த மூங்கில்பயிர்கள் முறிபட்டு வீழ்கின்றன. அந்தக் களிறின் பிளிறலிலிருந்து பீறிடும் கர்ஜனை காதலின் உன்மத்தமாக வானேகுகிறது.
பெயர் தெரியாத புலவர் ஒருவர் பாடிய பாடல்தான் இந்தக் காதல்அனல் கொதிக்கும் காட்சி.
இதேபோல, காவன் முல்லைப் பூதனார் எழுதிய அகப் பாடலையும் கேளுங்கள்:
செங்காய் உதிர்த்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சி, கூழார், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
இகழ்ந்தியங்கு இயவின் அகழ்ந்தகுழி செத்து,
இருங்களிற்று இனநிரை தூர்க்கும்
பெருங்கல் அத்தம் விலங்கிய காடே.. (நெடுந்தொகை – 21)
செங்காய்கள் உதிர்ந்த பசிய குலைகளையுடைய ஈந்தின் முதிர்ந்த விதைகள் பரவி கல்லும் முள்ளுமாய்க் கிடக்கிறது அந்த நிலம். அந்த நிலத்தில் தண்ணீருக்காகக் கிணறு தோண்டுவோர்,அந்தக் குழியினுள் நீர் ஊறாமையினால் கைவிட்டுப் போய்விடுகின்றனர். பாழ்பட்டுப்போன வறிய ஆழமான குழி அது. அதை இயவுக்குழி என்று அழைப்பர். அக்குழியை சருகுகளால்மூடிவைத்து யானைகளைப் பிடிக்கப் பயன்படுத்துவர் வேடர்கள். அந்தக் குழியைக் கண்ணுற்ற யானைக்கூட்டம், தம்மை வஞ்சகமாக வீழ்த்தும் பொருட்டு, அகழ்ந்தெடுத்து சருகால் மூடிவைத்த குழி இதுதான் என்று, ஆவேசத்துடன் தங்களது பெருத்த கால்களால் அக்குழியில் மண்ணைத் தள்ளித் தூர்க்கும்..
இப்படி சங்க இலக்கியப்பிரதிகளில் பெரும்பான்மையான பகுதிகளில் ஒரு பொறியைப்போல மறைந்திருக்கும் யானைக்குழிகள் குறித்தும், அவைகளில் மாட்டிக் கொள்ளும் யானைக்கூட்டங்களின் தகிப்பு மிகுந்த கர்ஜனைகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.
கி.பி.2 ஆம் நூற்றாண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு புலவர்களால், பல்வேறு பகுதிகளில் பாடப்பட்ட இந்தப்பாடல், அதன் பிற்காலப் பிரதியான பரிபாடலில் Invisible Text ஆக மாறியிருக்கிறது.
//அகப்பாடலில் வானை நோக்கி துதிக்கையை உயர்த்தி காதலின் தகிப்புடன் பெரும் குரலெடுத்துப் பிளிறிய களிறின் இடிமுழக்கம், பரிபாடலில் கருவாகி பெரும் மழையாகப் பொழிகிறது.காட்டாற்று வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடி, பயம்புகளையும், இயவுக்குழிகளையும் மேவித் தள்ளுகிறது.//
இந்தப் பார்வையில், பரிபாடலின் பிரதிக்கு வெளியே அகப்பாடல் பிரதி Invisible Text ஆகக் கட்டமைந்திருக்கிறது.
இந்த இடத்தில் என் ‘பச்சைப்பறவை’ கதையை முன்வைக்கலாம்.
நாயகன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரில் தொம்பச்சி (Gypsy) போன்ற தோற்றத்துடன் ஒரு புராதனமான கிழவி நின்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்க்கும் கணந்தோறும் பல்வேறு அமானுஷ்யமான காட்சிகள் நிழலாடுகின்றன. மேலே உள்ள கம்பியைப் பிடித்தபடி பயணம் செய்யும் அவளது கையில் ஒரு கழுகுப்பறவை பச்சை குத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பச்சைப்பறவையின் கண்கள் அவன் உடலெங்கும் மேய்கின்றன. பெரும் பீதிகலந்த கலவரத்துடன் வினோதமான எண்ண ஓட்டங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறான். குலுங்கலுடன் நிற்கிறது ரயில். தான் இறங்க வேண்டிய இடம் வந்ததால் அவசரமாக எழுந்து கதவை நோக்கி நடக்கிறான். அப்பொழுது அவனுக்கு எதிரில் நின்றிருக்கும் அந்தக் கிழவியைத் தாண்டிப்போக நேர்கிறது. அவன் நடக்க நடக்க அவள் கைகளில் பச்சையமோடியிருந்த பறவையின் கண்கள் சட்டென ஒளிபெறுகின்றன. அவள் கையைப் பிளந்து கொண்டு நீண்ட அலகு கூர்மைபெற, ரெக்கைகள் அசைந்து எம்பி, பறவையின் முன்பாதிப் பகுதி உயிருடனும், மற்ற பாதி உடலோடு ஒட்டிய பச்சையாகவும் நெளிந்து, கணப்பொழுதில் அவன் கன்னத்தைக் கொத்தியெடுக்கிறது. அவன் பதறிப்போய் கீழே குதிக்க, தீக்கத்தியைச் சொருகிய வலியில் தடதடவெனப் போய்க் கொண்டிருக்கிறது ரயில்.
அதன்பிறகு, அவன் கன்னத்தில் ஏற்பட்ட தனது காயத்திற்கு மருந்து தேடிப்போகிறான்..
இது நான் எழுதிய கதை.
இந்தக் கதைக்கு வெளியே வேறொரு கதையிருக்கிறது.
நாட்டார் வழிபாடு சார்ந்த நமது தொன்மையான மரபில் பறவைகளும், விலங்குகளும் நாட்டார் தெய்வங்களாக இருந்தன என்பதை நாம் உணர்வோம். அதன்பிறகு மெல்ல மெல்ல பிராமணியத்தின் கரங்கள் நீண்டு அவைகளைத் தங்களுக்குள் கபளீகரம் செய்தன. திராவிட வழிபாட்டின் பெருமை கொண்ட ஆதிக் கடவுள்களை, தங்களது கற்பனைக் கடவுள்களின் வாகனங்களாய் மாற்றப்பட்ட வேத சாஸ்திரங்கள் நகைத்தன.
//சர்ப்பத்தின் மீது சயனித்திருக்கின்ற விஷ்ணு, கருடன் மீதேறிப் பறந்தார். இனக்குழுக்களுக்கு வலிமையூட்டும் காளை சிவநந்தியாக மாறி கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே நிற்க, வன்மமும் வீரமும் இணைந்த பன்றி வராக வாகனமாகியது. மீன்கன்னியைக் காதலித்து, அவள் கரைக்கு வந்து மானுடப்பிறவியாக மாறுவாள் என அதற்காகவே காத்திருந்து இறுதியில் தானே மீனமாய் மாறிப்போன பூர்வகுடி மீனவனின் அற்புதமான செதில்கள், மச்சக் கண்ணனில் மிளிர்ந்தன.//
இப்படியான கதைகளுக்கு வெளியே உள்ள கதைகள்தான் முக்கியமானவை.
ஒரு எழுத்தாளன் உருவாக்கும் Text வாசகனுக்குள் சுழன்று சுழன்று, காலஓட்டத்தில் மறைந்து கிடக்கும் அல்லது மறைக்கப்பட்டுக் கிடக்கும் Invisible Text ஐ, அவன் கண்முன்னால் விரித்துக் காட்டவேண்டும்.
மார்க்வெஸ்ஸின் பிரதி, மாயயதார்த்தவாதத்தின் கலை அழகியல் சார்ந்து லத்தீன் அமெரிக்க நிலத்தின் ஆன்மாவை எதிரொலிக்கும் அரசியல் பார்வையென்றால், பரிபாடலின் பிரதி, மரபான கலை அழகியல் சார்ந்து தமிழ்நிலத்தின் வாழ்வியலை முன்வைக்கும் யதார்த்தவாத தரிசனம் என்று சொல்லலாம்.
என் பிரதியோ, புதுவகை எழுத்தின் கலை அழகியல் சார்ந்து திராவிட நிலத்தின் அரசியலை மீட்டெடுக்கும் முன்னெடுப்பு.
ஒருகதையின் உள்முகச் சுழற்சியில் கதைக்கு வெளியேதான் இருக்கிறது கதை என்ற புறப்பார்வைக்கும் அகதரிசனத்திற்குமான இணைவில், இரண்டுக்குமான எதிரீட்டை உருவாக்கும்போது, 2000 ஆண்டுகால மரபான எழுத்துவகை புதுவகை எழுத்தாக மறுமலர்ச்சியடைகிறது.
*
(நன்றி : 2015, அக்டோபர், கணையாழி சிறந்த படைப்பிலக்கிய விருதுபெற்ற கட்டுரை)
**
(ஸ்பானிஷ் மொழியில் நான் எழுதும் பத்தி வரிசையில் ஒரு அத்தியாயமாக இக்கட்டுரை மொழியாக்கமாகி வெளிவந்தது)