• Thu. Sep 21st, 2023

பச்சைக்குதிரையின் ஒளிக்கண்கள்

ByGouthama Siddarthan

Jul 27, 2022
  • முருகவேலன்

கெளதம சித்தார்த்தன் தனது புதுவகை எழுத்து மொழியில் எழுதி இருக்கும் சமகாலக் குறுநாவல் “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?”. பின்நவீன இணையத் தொழில்நுட்பக் களத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் மொழி பொதுவாசகர்களுக்கு ஆனதல்ல. தீவிர வாசகர்கள் வாசித்து விடலாம் என்றாலும், சமகாலத் தொழில்நுட்பப் பின்புலப் பரிச்சயம் கொஞ்சமாவது இருப்பது அவசியம்.

“இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?” குறுநாவலின் தோற்றம் ஒரு அரசியலை வலியுறுத்துவதாகத் தட்டையான வாசிப்பில் புலப்படக் கூடும். மேலை நவீனம் எதிர் கீழை மரபு என்பதாக அவ்வரசியலைக் குறிப்பிடவும் செய்யலாம். அவ்வரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் முகமாகவே கெளதம சித்தார்த்தன் எழுதி இருப்பதாக நிறுவுவதும் சாத்தியம். நாவலின் சம்பவங்களைத் தர்க்கங்களாக அடுக்கி அதன் ’அரசியல் அஜெண்டாவை’(?) அப்பட்டமாக்கி விடுவதும் சுலபம்.

மேற்படியான அவதானம் பிழையா என்றால், இல்லை. ஆனால் அது ஒருவகையான திசை மட்டுமே. அதையே நாவலின் நோக்கம் என்பதாகக் குறுக்கிக் கட்டி உறைய வைத்து விடுவதுதான் ஆபத்து. விமர்சனம், கோட்பாடு, அரசியல் எனும் பெயரில் சமூகவலைதளங்களில் மிகுந்திருக்கும் அரைகுறை மேதாவிகளால் இலக்கியவாதிகளை விட இலக்கியம் அதிகம் மிரண்டு போய் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட திசையின் துவக்கம், பயணம், நிறைவு என்பதான சித்திரத்தை இலக்கியத்துக்குப் பொருத்திப் பார்க்கும் அவலம் இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. அதற்கு, இலக்கியத்தை புறவயப்பொருள் என்பதாகப் பகுத்தறியும் ’மூடச்சிந்தனையே’ காரணம்.

இலக்கியம் என்பது குறித்த திசைவழிச் செல்லும் புறவெளி அன்று. அது திசைகளையும், திசை கடந்தவற்றையும் வியப்புடன் நோக்கும் அகவெளி. ஒரு படைப்பாளனுக்குக் கட்டுப்பட்டதல்ல இலக்கியம். கட்டுப்பட வைக்கும்போது இலக்கியவாதி அரசியல்வாதி ஆகிறான். அப்படைப்பு அரசியல் கருவி ஆகிறது. துடுப்பில்லாப் படகு இலக்கியம். துடுப்பு போடுமெனில் அது அரசியல்.

ஒரு படைப்பாளருக்கு அரசியல்தான் (குறிப்பிட்ட கருத்தியல்) நோக்கம் என்றால், அவர் சுற்றி வளைத்து முட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. யதார்த்த எழுத்தின் ஊடாகவே அவரது அரசியலை நிறுவவும் வலுப்படுத்தவும் இயலும். நடைமுறை வாழ்வின் அவலங்களைச் சொல்வதன் வழியாக அல்லது அவற்றை மாற்றி அமைக்கும் கனவுகளைக் கடத்துவதன் மூலமாகத் தனது தரப்பை ஒரு ஆசிரியரால் எளிமையாக்கிவிட இயலும். கூடுதலாய், அதைப் பெரும்பான்மையான மக்களுக்குக் கடத்தவும் முடியும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளின் அரசியல் இலக்கியச் செயல்பாட்டாளர்களால், நமது இலக்கிய ஆசிரியர்கள் அதிகம் கலங்கிப் போய் இருக்கின்றனர். ஒரு படைப்பை எழுதி விட்டு அதைத் தான் இதற்காகத்தான் எழுதினேன் என விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கும் ஆட்பட்டிருக்கின்றனர். இதைக் கவனத்தில் கொண்டே, நம் இலக்கிய முன்னோடிகள் இலக்கியம் என்றால் என்ன எனத் தொடர்ந்து பொதுச்சமூகத்துக்கு விளக்கங்கள் அளித்தபடியே இருந்திருக்கின்றனர். இன்றும் பலர் அப்பணியைச் சலிப்பின்றிச் செய்தும் வருகின்றனர்.

இலக்கியப்படைப்பு மனிதனைத் திருத்தி வாழ்வில் அவனை நல்லவனாக்கும் நோக்கில் எழுதப்படுதுவதல்ல. முதலில் ஒரு வாசகனுக்கு இத்தெளிவு வேண்டும். ஒரு படைப்பாளன் சமூகச்சீர்திருத்தவாதியோ, மடத்தலைவரோ அல்ல. அவன் நம்மைப் போன்ற எளிய மனிதன். சராசரி லெளகீக வாழ்விலேயே இருப்பவன். என்ன, அதை விசாரித்துக் கொண்டே இருப்பவன். அவன் விசாரிக்க முனையும் முயற்சிகளே படைப்புகள் ஆகின்றன.

நடைமுறை வாழ்வின் ’திரும்பச் செய்தல்கள்’ தெரிந்தும் அவற்றில் இருந்து நம்மைப் போன்றோரால் விடுபட முடிவதில்லை. நடைமுறை வாழ்வு எவ்வகையிலும் நம்மை நிறைவடையச் செய்யாது என நன்கு தெரிந்திருந்தும், அவ்வாழ்விலேயே இருக்கிறோம். ஒருகட்டத்தில், இது விளையாட்டு என்று தெரிந்து விடுகிறது. ஆனாலும் அதை விளையாட்டாய்க் கருதிக் கொள்ள முடிவதில்லை. விளையாட்டு இல்லை என்று சொல்லி நிற்கவும் இயல்வதில்லை.

இலக்கிய ஆசிரியனுக்கும் வாசகனுக்குமான ஒருவகை விளையாட்டே இலக்கியம். ஆசிரியர்களும் வாசகர்களும் மாறலாம். விளையாட்டு மாறுவதில்லை. அது முடிவிலியாய்த் தொடர்வது. கெளதம சித்தார்த்தனின் பச்சைக்குதிரை விளையாட்டாக “இப்பொழுது என்ன நேரம் மிஸ்டர் குதிரை?” குறுநாவலைச் சொல்லலாம். சமூக வலைதளக் குறிப்புகளின் தொகுப்பைப் போன்று அமைந்திருக்கும் இந்நாவல், வழக்கமான இலக்கிய வடிவங்களில் இருந்து அந்நியமானது. நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் பின்நவீன வாழ்வின் சிதறல் மனநிலை இருளின் கொடுங்கண்களாய்ச் சிரிக்கிறது. அதன் ஆழத்தில் இருந்து தொன்மங்களின் ஒளிக்கண்கள் மிதந்து மேல் எழுகின்றன. இந்நாவலை அறிவியல் புனைவு என்பதை விட, பின்நவீனத் தொன்மம் எனச் சொல்வதே பொருத்தமாகப் படுகிறது.

மனிதனின் உலகு என்பது அவனாகவே புனைந்து கொண்டது. உலகு என்பதைக் காட்டிலும் உலகங்களே சரி. பொதுவாக அவற்றை புற உலகு, அக உலகு எனும் பகுப்புக்குள் கொண்டு வருவோம். என்னளவில், இருப்பது இரண்டு அக உலகங்கள் மட்டுமே (அகத்தின் நிலைகளை இரண்டாகப் புரிந்து கொள்வது). ஒன்று அறிவுஜீவி நவீன உலகு. மற்றொன்று, சாமான்ய மரபு உலகு.

இரு அக உலகங்களிலும் ஒருவன் என்னவாக இருக்கிறான் என்பதை கெளதம சித்தார்த்தன் வினவிக் கொண்டே இருக்கிறார். தன் வினவுதலை அவர் பல கோணங்களில் நிறுத்துகிறார். எல்லாக் கோணங்களிலும் பச்சைக்குதிரை ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. நாவல் முடிந்த பின்னும், பச்சைக்குதிரை ஓய்வதில்லை. ஒரு கட்டத்தில், வாசகனின் பச்சைக்குதிரை ஓடத்துவங்கி விடுகிறது. வாசகனும் அதன் பின்னால் ஓடியாக வேண்டி இருக்கிறது. அதைப்பிடித்து விட்டதாக நம்பிய ஒரு கணத்தில் அது தோற்றமே என வாசகன் உணரவும் நேர்கிறது. மீண்டும் விளையாட்டு தொடர்கிறது.

முதல் வாசிப்பில் புலப்படும் பச்சைக்குதிரை இரண்டாம் வாசிப்பில் வருவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு வாசிப்பிலும். ஆனால், அது ஓடிக்கொண்டே இருக்கிறது. அது ஓடும் வரை வாசகனும் ஓடிக்கொண்டே இருப்பான் என்பதால் இந்நாவல் காலாதீத விளையாட்டாகிறது. கெளதம சித்தார்த்தன் ஓடும் குதிரைகளையே தருகிறார். அவற்றைப் பிடிப்பதற்கு ஓடியாக வேண்டி இருக்கிறது. ஓடிக்கொண்டே இருக்கும் வாசகனுக்கு முன் பச்சைக்குதிரை முடிவிலியாய் ஓடிக்கொண்டே இருக்கிறது. வாசகன் தொடர்ந்தபடியே இருக்க வேண்டி இருக்கிறது.

பச்சைக்குதிரையைச் சாமான்யனாகவும், வாசகனை அறிவுஜீவியாகவும் கற்பனை செய்து ஒரு விளயாட்டைத் துவங்குகிறேன். விளையாட்டை சுவாரசியப்படுத்த நினைத்து.. வாசகன் பச்சைக்குதிரையையும், பச்சைக்குதிரை வாசகனையும் துரத்தும்படி செய்கிறேன். ஆச்சர்யம் பாருங்கள், வாசகனை விட பச்சைக்குதிரையின் வேகம் அதிகரிக்கிறது.

***

 

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page