- கௌதம சித்தார்த்தன்
1.
வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதே கலை இலக்கியப் படைப்புகளின் சவால். வரலாறு முழுக்க அந்தச் சவால்களை எதிர்கொண்ட படைப்பாளிகளே வரலாற்றின் பக்கங்களில் கையெழுத்திடுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொள்றும் அமைப்பாக்கத்தில் ஓயாது தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது எழுத்து.
இன்றைய மனித வாழ்வு ஒற்றைப் பரிமாணத்தில் தட்டையாய் நெளிவதல்ல. அது பல்வேறு பரிமாணங்களில் கிளை வெட்டித் தாவும் எல்லைகளற்ற நீட்சியில் விரிந்து பரவுகிற பெருவெடிப்பு. அதன் எதிரெதிர் பிம்பங்களைக் கலாசிருஷ்டியின் நக இடுக்குகளில் சிறைப்பிடிக்க வேண்டுமெனில் இதுவரை ஊடகமாய் செயல்பட்ட வந்த மொழியிலிருந்து முற்றாக விலகி நவீன மொழியின் அத்தனை சாத்தியப்பாடுகளையும் முன் வைக்க வேண்டும்.
இதுவரையிலுமான எதார்த்தப் பிரதியினூடே விரையும் கதைமொழியின் நேர்கோட்டுப் பாதைக்கும். மனித வாழ்வின் தட்டையான உழுசால் தடத்துக்குமிடையில் இணைக்கிற இணைவுக்கோடாக படைப்பாளி செயல்பட்டுக் கொண்டிருந்ததை மூன்று கோடுகளாக இணைக்கலாம்.
// ப // வடிவத்தைப் பக்கவாட்டில் திருப்பி வைத்தாற்போல.
முதல் நேர்கோட்டை கதாபிரக்ஞையில் உழலும் படைப்பு மனத்திற்கும், அதன் கீழுள்ள நேர்கோட்டை மனித வாழ்வியல் கூறுகளுக்கும் பொருத்தலாம். இரண்டு நேர் கோடுகளையும் இணைக்கும் விதமாகச் செயல்படும் குறுக்குக் கோட்டை எழுத்தின் ஆற்றல்மிக்க வீச்சாகக் கொள்ளலாம். முழுமையற்ற கலை ஆளுமையாய்த் திறந்து கிடக்கும் நான்காவது கோடு.
கோடுகளின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கான பயணம்: வாழ்வின் விந்துத் துளிகளிலிருந்து கலாபூர்வத்தின் குழந்தைமைக்கு. பறந்து திரியும் ஆகாயத்திலிருந்து உஷ்ணம் பாய்ந்த காலடி மண்ணின் யதார்த்தத்திற்கு. மற்றும் அழுகையிலிருந்து மகிழ்ச்சிக்கு.
இந்த தரிசனத்தின் பாங்கை வெகுசீராக உள்ளடக்கத்தின் பிம்பத்திற்கேற்ப வலங்கை, இடங்கை வழக்காரமாக மாற்றி மாற்றி “தலித் கதையா.. இடங்கையா எழுது…” “சைவப் பிள்ளைமாரின் சிந்தாந்த நெடியா வலங்கையா எழுது..” என அடைக்கும் கதையமைப்பு.
காலங்கள் துருவேறுகையில் நிறம் மாறும் மனித வாழ்வு இந்த அடைப்புக் குறிக்குள் அடைபடாமல் நெளிகின்ற ஓட்டத்தில், எழுகிறது மேலும் ஒரு கோடு. அதுவே நவீன எழுத்து. யதார்த்த எழுத்தின் வீச்சு திகைத்துத் திணறும் கட்டத்தில். மேல் நோக்கி எழுகின்ற நவீன எழுத்தின் ஆற்றல். முழுமையடையாத கலை ஆளுமையின் சட்டகத்தை மற்றொரு கோடாக இணைத்து முழுமையாக்குகிறது. நான்கு பரிமாணங்களில் மிளிர்ந்து நிற்கிறது சட்டகம்.
2.
சொற்களும் மொழியும் சிதைந்து நீட்ட நீட்ட நெளி நெளியாய்ச் சுருளும் வாழ்நிலை வினோதத்திற்கும் – நேர்கோடு மற்றும் வளைகோட்டுப் பாதைகளாலான புதிர்வழியில் சுழலும் படைப்பின் செய் நேர்த்தித்திறனுக்கும் இடையில் தடுமாறுகிறது, நவீன கதைமொழியின் உயிர்த்துடிப்பு.
இந்த சமச்சீரற்ற நெருடலுக்கான காரணத்தைத் தீவிரமாய்ப் பரிசீலனைக்குட்படுத்தும் போது நம்மை முதலாவதாகத் தாக்கும் விஷயம்: தமிழ்ச் சூழலுக்குச் சற்றும் ஒவ்வாத கதைமொழியின் நவீனம். இரண்டாவதாக, எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்ற வார்த்தைகளின் தன்மையை. ஆங்கில மொழியிலிருந்து இடப்பெயர்வு செய்யும் பாணியில் வலிந்து புகுத்தும் போது, முற்றாகச் சிதைந்து போகிறது. அதாவது, ஒரே மாதிரியான எழுத்துச் சுழல்வுகளையே எல்லாப் படைப்புகளின் மையத்தின் மீது திணிக்கும் தன்மையையும், எழுத்தின் தீவிரம் முனை மழுங்கும் அவலத்தையும், தொடர்ந்த ஊடகங்களின் தொணதொணப்பில் நவீனம் என்று ஏற்றுக் கொண்டுவிட்ட சூழலாக உருமாறுகிறது.
மேலைநாட்டுக் கலாபூர்வமான பாணிகளை – உத்தி, நடை, வாக்கிய அமைப்பாக்கம் போன்ற ரீதியில் – காலங்காலமாய் பின்பற்றியே இயங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பின்பற்றுவது உயர்ந்தபட்ச எழுத்து என்று முத்திரை குத்தி விட்டார்கள் இலக்கிய பீடங்கள்.
இறக்குமதி செய்யப்படுகின்ற நவீன கதைமொழியில் துடிக்கின்ற நவீன வாழ்வுக்கும், தமிழ்மொழியின் நவீனத்தில் துடிக்கும் நவீன வாழ்வுக்கும் நிச்சயம் முரண்பாடுகள் இருக்கின்றன. இருந்துதான் தீரவேண்டும் என்பது தெள்ளத்தெளிவு. ஏனெனில், மேலைநாட்டு மண்ணில் வேர்பிடித்திருக்கும் நவீன வாழ்வின் ரத்தமும் சதையுமான நவீன கதைமொழியின் உயிர்ப்பு. தமிழின் நவீன வாழ்வில் இணையும் போது பல்வேறு பரிமாணங்களில் முரணடையவே செய்யும். உலக யுத்தங்களால் சிதிலப்பட்டுப்போன மனித வாழ்வின் சிதைவுகளை கலாசிருஷ்டியாக்கும் பல்வேறு பரிமாணங்களில் மேலைநாட்டின் நவீன கதைமொழி உருப்பெறுகிறது.
நாமும் அதை வாயைப் பிளந்து கொண்டு பின்பற்றும் போது நம்முடைய சுயத்தை இழந்து ஆகாசத்தில் தொங்கும் அவலங்களையே கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அப்படியெனில் இங்கு மனித வாழ்வு சிதையவில்லையா? வண்ணத்துப் பூச்சியின் குதூகலமான சிறகடிப்பிலும், பூக்களின் ஆனந்தமான மணத்தின் நுட்பமான அழகியலுடனும் தலை சுழித்துச் செல்கிறதோ என்று வண்ணதாசனின் பறவைப் பார்வையுடன் தட்டையாய்க் கேட்க வேண்டியதில்லை. கண்முன்னே விரிந்து கிடக்கிறது. மனித வாழ்வின் பரிமாணங்கள் நார்நாராய்க் கிழிந்து தொங்கும் அவலம். ஆனால், யாருடையதோ போல். இந்த “யாருடையதோ போல்” என்கிற Illusion ஒரு மிகப் பெரும் அற்புதம். கலையின் எல்லைகளைக் குறுக்கும் அவலமும் அதுதான், மற்றும் கலையின் பூரணத்துவம் தொடம் சிகரமும் அதுதான்.
உலகின் நவீன கதைமொழியில் கிளை விரித்தோடும் ரத்த ஓட்டத்தின் பிசுபிசுப்பு வேறு. தமிழின் ரத்த ஓட்டத்தின் பிசுபிசுப்பு வேறு. போர் நிகழ்வுகளின் கொடூர வன்மத்தினால் சிதிலமடைந்து போன மனிதனின் நவீன வாழ்வின் அம்சங்களையும், அணுப்புகை வீச்சம் பரவும் மண்ணின் நிற மாறுதல்களையும் எலெக்ட்ரான் யுகத்தின் யந்திர இயக்கங்களில் நெளியும் வினோத அசைவுகளையும் நவீன மொழியில் உணரலாம்.
காஃப்காவின் நாயகன் ஒருநாள் அதிகாலை பெரிய கரப்பான் பூச்சியாக மாறிப் போவதும், நீ கைது செய்யப்பட்டிருக்கிறா யென்று தகவல் தெரிவித்து விட்டு கைது செய்யாமலேயே வெட்ட வெளியைச் சிறைக்கூடமாக்குவதும், மார்க்வெஸ்ஸின் எரிந்திராவை. அவளது காதகிப்பாட்டி. இன்னும் பலநூறு வருடங்களுக்கு விபச்சாரம் செய்து சம்பாதித்தால் தான் உனது கடன் தீர்ந்து விடுதலையாவாய் என்று சொல்வதும். ஜாய்ஸின் நனவோடை உத்தியும். போர்ஹேஸின் புதிர்வழிச் சுழலும். கால்வினோவின் கதை முடிச்சுகளில் இணைந்து தாவும் கால விளையாட்டும்… என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழின் வேர்கள் வேறு. மதம் மொழி இனம் என்று கூர்மையான சவரக் கத்தியைத் தொண்டையில் சொருகி பீய்ச்சியடிக்கும் குருதியில் காய்கள் நகர்த்தும் அரசியல் வன்மத்தில் சிதிலமடைந்துள்ளது மனிதவாழ்வு. தங்களது வேர்களைக் கடைசிவரை அடையாளம் காட்டாமல் சரித்திரத் திரிப்புகளில் மனித உடலின் மீது தொடுக்கும் தாக்குதல். நாகரிகம் பின்னிய வலையில் இரையாகி விழுந்த இனக்குழு மனிதனின் வெறுமை. செழுமையான கதை சொல்லும் மரபில் புதைந்து கிடக்கும் ஜாலத்தன்மையை அழித்ததனால் மேலும் சிக்கலாகிப்போன உறவுகள் என்று நீள்கின்ற வேர்களின் பிரிகளை மொழிப்பின்னல்களாக உருமாற்ற வேண்டும்.
நமது நவீன மொழியை நமது மண்ணின் உயிர்ப்பிலிருந்து தான் உருவாக்க வேண்டும். தமிழுக்குச் சற்றும் ஒவ்வாத உலகின் நவீன மொழி சார்ந்த உத்திகளைப் புறம் தள்ளி தமிழின் ஜீவத்துடிதுடிப்பை மீட்டெடுக்கும் புதுவகை எழுத்து இங்கிருந்தே புதுமலர்ச்சியுடன் தோன்றுகிறது.
சமூகப் பிரக்ஞையும் கலாப்பிரக்ஞையும் ஒருங்கே இணைந்த தீவிரமான கலைஞனின் ஓயாத தஹிப்புணர்வுகளிலும், நவீன வாழ்வின் சிக்கல்கள் குறித்த தார்மிகமான தேடுகைகளிலும், மொழிசார்ந்த பண்பாடும் கலாச்சாரத்தின் வேர்வை நெடியும் கமழ இரண்டாயிரமாண்டு மொழி மரபை உடைத்துக் கொண்டு பிறப்பதே புதுவதை எழுத்து. அதன் வேர்களில் நவீன கதை கட்டமைக்கப்படும் போது உலக அளவிலான புதுவகை எழுத்து இந்த மண்ணிலிருந்தே சுயமாகப் பிறக்கும். மட்டுமல்லாமல், நவீன வாழ்வுக்கும் நவீன கலைக்குமிடையே உள்ள இடைவெளியைக் காத்திரமாக நிரப்பும்.
தமிழில் நவீனத்துவ எழுத்து சரியான முறையில் வெளிப்படவேயில்லை. வாசகனை பயமுறுத்துதல், குழுசார்ந்த கும்பல்களில் பல்லக்குத் தூக்குதல். விமர்சனத் திலகங்களின் சுண்டுவிரல் நீட்சி இவைகளின் இடுக்குகளில் வீரியமான நவீனப் படைப்பு வெளிவர இயலாது. கருத்த படுதாவாய் விரிந்து பயமுறுத்துவதல்ல நவீனப் பிரதி.
மாறாக சாதாரணமான தொனியில் அசாதாரணமான எல்லைகளைத் தொடுவது. இவ்வசாதாரணங்களைக் கடந்து நவீனப் பிரதியில் நுழையும் வாசகன் சுற்றித்திரியும் எல்லைகளினூடே மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருக்கும் எழுத்தாளனின் உயிர்ப்பைப் பிடிக்க வேண்டும். அந்த கண்ணிமைக் கணத்தில் எழுத்தாளனின் பிரபஞ்சப் பிரக்ஞை வாசகனின் ரத்த ஓட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் குமிழிகளின் கண்ணாடிப் பரப்பில் பதிவாகிறது. இப்பொழுது ரத்த ஓட்டத்தின் வீச்சு வேறுவிதமாய்ச் சுழல்வதை உணரலாம். “பிரதியில் எழுத்தாளன் செத்துப்போய்விடுகிறான் ” என்று கணிக்கும் ரோலான்ட் பார்த்தின் கருத்தியலுக்கு மாறாக, புதுவகை எழுத்தில் எழுத்தாளன் சாவதில்லை. அவன், வாசகன் என்னும் கண்ணாடிச் சட்டகத்தில் பட்டுப் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து நிற்கமுடியும்என்பதே அதன்வெற்றி.
நவீன எழுத்தின் சிக்கல்களில் உருப்பெறும் Labyrinth என்னும் புதிர்வழிச் சுழலை இப்படிக் கட்டமைக்கலாம்:
இரண்டாயிரமாண்டு மொழி மரபில் சுழலும் முழுவட்டச் சுழல்வு. அரைவட்டமாய் அதைக் கிழித்துக் கொண்டு எதிர் விசையில் சுழலும் மண்சார்ந்த பண்பாடும் கலாச்சாரமும் இன்னொரு முழுவட்டச் சுழல்வு. எளிய சொல்லாடல்களின் இணைவுச் சிக்கல்களில் புதிர்மொழியாக மாறி நினைவிலி மனத்தில் கிடக்கும் அற்புதங்களைக் கிளைவெட்டி மேலெடுத்துச் செல்லும் சுழற்சி. எதிரும் புதிருமான இவ்விரு முழுவட்டச் சுழற்சிகளையும் குறுக்கு வெட்டாய்க் கிழித்துக் கொண்டு சுழலும் வாழ்வியல் வீச்சு. எழுத்தின் மைய அச்சில் சுழலும் மூன்று முழு வட்டங்களின் இணைவை அதீத சுழற்சியாக்குவதே நவீன எழுத்தின் ரகசியம். நேர்கோடாய் நீள நீள நெளியாய்ச் சுருண்டு சுருண்டு புதிர் வட்டக் கோடுகளில் வாசகனைக் கரைத்து முடிவற்ற சுழற்சியாக்கும் அற்புதம். இந்த சுருட் பிலத்தில் விரிகின்ற அபூர்வ தரிசனம் உலகளாவிய ஒரு பார்வையை (Universal Vision) உள்ளடக்கியதாக மாறுகிறது.
3.
வாய்க்காலில் மீன்பிடிக்கும் சின்ன வயது ஞாபகக் குமிழிகள் உடைகின்றன. குட்டைக்குள் நீரிறைத்த பிறகு மதகுக்குள் தேங்கியுள்ள மீன்களை வெளியே வரச்செய்ய வேண்டும். மதகுக் கண்மாய்க்குள் ஒருபுறம் நுழைந்து, மீன்கள் சேறும் சகதியுமான செத்தைக் கூளங்கள் மற்றும் பாம்பு ஆகியவைகளை வைக்கோலால் தள்ளிக் கொண்டே மறுபுறத்தில் வெளியேற வேண்டும். குறுகலான இருட்குகையின் பிலத்துவாரத்தில் தவழ்ந்து தவழ்ந்து நீண்ட தூரம் செல்லும்போது வைக்கோற் பிரிகளில் நெளியும் புதிர்வழிச் சுழல், கதைக்காரனான என் அய்யா எனக்குச் சொன்ன மயில் ராவணங் கோட்டையின் சுற்று வழிகளாய்ச் சுழல்கிறது. நீண்டு திரும்பும் பாதை மச்சகன்னியின் செதில் மினுமினுப்பையும், செத்தைக் கூளங்களில் மினுங்கும் மந்திரக் குளிகைகளான கூழாங்கற்களின் மாயாஜால சிலிர்ப்பையும் என் உடலெங்கும் நிகழ்த்தியது. காலம் சமைந்ததை உணர்ந்தேன். பல மணி நேர நகர்வு என்னுள் ஒரு சில கணங்களாகச் சுருண்டிருந்த அற்புதப் பயணமாக, மாய யதார்த்தமாக மாறியிருந்தது.
இன்னும்அந்தச்சுழலுக்குள்ளேயேசுற்றிக்கொண்டிருந்திருந்தால் காலம் நகராமல் சிறுவனாகவே இருந்திருப்போமோ என்று பல நாட்களாக யோசித்திருக்கிறேன். அந்த அபூர்வ தரிசனம்தான் எழுத்தாக மாறும்போது, என் படைப்புகளில் உயிர்ப்புடன் செயல்படும் போது, வாசகனின் தலைக்கு மேலே காலத்தை திரைந்து நிற்க வைக்கிறது. 1001 அரேபிய இரவுகளில் மரணத்தைத் தள்ளிப் போடுகின்ற ஷெகர்ஜாத்தின் சொல்கதைகள் நிகழ்த்திய காலமற்ற தன்மை. முற்றிலும் புதுமலர்ச்சியாக வேறொரு பரிமாணத்தில் காலத்தை உறைய வைக்கின்ற நித்ய கணம்…
இந்த கணங்களில் செயல்படும் நினைவிலி மனத்தின் ஆற்றல் கால விளையாட்டின் பல்வேறு சாத்தியங்களை முன் வைக்கிறது.
ஆனால் கனவு மனம், நினைவு மனம், நினைவிலி மனம் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளையே பேசிக்கொண்டிருக்கிற நவீன மொழி உடல் சார்ந்த பிரச்னைகளைக் காத்திரமாக முன் வைப்பதில்லை. உடல் சார்ந்த வாழ்வின் கவிச்சைகளை யதார்த்த தளத்தில் அடைக்கும் அவலமே தொடருகிறது.
கீழ்த்தட்டு மக்களின் வாழ்வில் பிரதான பங்கு வகிக்கும் உடல் சார்ந்த இயக்கம் இதுவரை எழுதப்படாத பக்கங்களில் இலக்கியப் போக்கை உடைக்கும் ஆற்றலுடன் வருகிறது. இந்த உடல் சார்ந்த பிரச்னைகளை எதிர்க் கலையாக மாற்ற நவீன மொழியின் பரிமாணங்கள் போதவில்லையென்றே சொல்லலாம். இந்த வீரியமான உடல் சார்ந்த மொழி நவீன மொழியின் அழகியலில் இல்லை, புதுவகை எழுத்தின் வன்மத்தில் இருக்கிறது.
எனில், நவீன மொழியில் சுழன்றோடும் புதிர் வழிச் சுழலை புதுவகை எழுத்தின் ஜீவாதாரமாக மாற்றும்போது, அதன் வட்டச் சுழல்வுகளை உடலின் வளை கோணங்களாக உருமாற்ற வேண்டும். உடல் சார்ந்த பிரச்னைகளில் உயிரோட்டமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொன்மங்களின் குறியீட்டுச் சட்டகங்களிலிருந்து புதுவகை எழுத்தின் கட்டமைவை எழுப்ப வேண்டும்.
கனவு மனம், நினைவு மனம், நினைவிலி மனம் ஆகிய மூன்று கோடுகளின் முக்கோண வடிவில் நவீன வாழ்வு இயங்குவதாகக் கொள்ளலாம். ஒரு புள்ளியிலிருந்து விரியும் கனவு மனம் நினைவு மனம் என்கிற இருசாய்வுக் கோடுகளில் பதுங்கியுள்ள Tale என்னும் சொல் கதைகளும் எழுத்துக் கதைகளும் மிளிர்கின்றன. இரு கோடுகளையும் இணைக்கும் நேர்கோட்டின் நினைவிலி மனத்தில் மறைந்திருக்கும் மொழி மரபின் வீச்சில் திரிகோண வடிவமாக மாற்றம் பெறுகிறது.
இதே போல இதற்கு நேரெதிர் நிலையில் இன்னொரு முக்கோணப் பார்வையில் உடல் சார்ந்த மொழியை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். ஒரு புள்ளியிலிருந்து விரிந்து கீழிறங்கும் இரு சாய்வுக் கோடுகளில் உடல் எதிர்கொள்ளும் நேரடியான பிரச்னையும், புலனாகாத பிரச்னையும் ஊடுருவுகின்றன. இந்த இரண்டு கோடுகளையும் இணைக்கும் நேர்கோட்டின் பரப்பில் உடல் எதிர் கொள்ளும் காலம் சார்ந்த பிரச்னை இருக்கிறது.. இப்பொழுது அந்தக் கோடுகளில் மறைந்துள்ள சொல் கதைகளும், எழுத்துக் கதைகளும்,மொழி மரபும், மற்றொரு திரிகோண வடிவமாக மாற்றம் பெறுகிறது.
இந்த இரண்டு முக்கோணங்களும் எதிரும் புதிருமாய் இணையும் அறுகோணத்தில், நமது தொன்மத்தின் குறியீடுகள் மலர்ச்சி பெறுகிற முற்றிலும் புதுவகையின் தனித்தன்மை.
ஒரு கட்டத்தில் உலக இலக்கியத்தின் போக்கை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது ரஷ்ய இலக்கியம். பிரெஞ்சு, ஜெர்மன் என்று நகர்ந்து இன்று அந்நிலை லத்தீன் அமெரிக்காவுக்கு. (இத்தாலியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாய் அறிவு ஜீவிகள் பகர்கிறார்கள்) லத்தீன் அமெரிக்காவின் தனித்தன்மையான மொழியும், ரத்தமும் சதையுமான அந்த மண்ணின் தொன்மங்களும் இணைந்து உருவான நவீன எழுத்து உலக இலக்கியத்தின் போக்கை நிர்ணயிக்கிறது.
நமது செழுமையான சொல்கதைகளினூடே சுருண்டிருக்கிற ஆழ்மனத்திரிபுகளில் காலூன்றி, உடல் சார்ந்த மொழியை இதுவரையான எழுத்தின் எதிரீடாக தொன்மத்தின் குறியீட்டு அமைவுகள் மாற்றுகின்றன. அதன் எழுதப்படாத தனித் தன்மையான புனைவாக புதுவகை எழுத்தை எழுதும்போது உலக இலக்கியத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழியாக தமிழின் புதுவகை எழுத்து மாறும்.
***
உன்னதம் 5 வது இதழில் வெளிவந்த இக்கட்டுரை 26 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட து. (1996, அக்டோபர்)