- கௌதம சித்தார்த்தன்
இன்று காலையிலிருந்தே
ஆரஞ்சுப் பழம் சாப்பிடவேண்டும் என்ற ஆசை மீதூறுகிறது.
அதனுள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும்
விதைகளைப்போன்ற ஊணின் சுவை
நாவைச் சுழட்டுகிறது
இன்று எதனால் இந்த ஆசை எழுந்தது?
அன்பே
அன்று நம் முதல் புணர்ச்சிக்குப் பின்
படுக்கை முழுக்கக் கசிந்த மணத்தின்
ருசியை
அடங்காத தாபவேட்கையை
நீ தொளித்துத் தந்த சுளைகள் உடலெங்கும் ஏற்றுகின்றன.
அந்த ஆரஞ்சின் தொலியை பிய்த்து
உனது உடலின் நிர்வாணத்தை போர்த்துகிறேன்
உனது உடல் ஒரு பெரும் ஆரஞ்சுப் பழமாக மாறுகிறது
கானகமாக மாறிய படுக்கையறையில்
ஆரஞ்சு வாசனையை உருவி எடுத்து
உன் உடலைக் காணும் களைப்பில்
மற்றொரு உடலை
அடையாளப் படுத்தித் தருகின்றது ஆரஞ்சு.
ஒரு பழத்திலிருந்து இன்னொரு பழத்திற்கு
ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு….
இன்று
ஆரஞ்சுப் பழத்தின் நறுமணத்துடன்
வெயில் என்மேல் கவிகிறது
தலைக்கு மேலே கனிந்து தொங்குகிறது ஆரஞ்சு.
****
இங்கு வெளியிடப்பட்டுள்ள என்னுடைய இந்தக் கவிதை தமிழ் மொழி தவிர்த்து உலகின் பிரதான 10 மொழிகளில் பிரசுரம் பெற்ற கவிதை. (ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், இத்தாலி, ஜெர்மன், ரோமானியன், பல்கேரியன், கிரீக், ஹீப்ரு, ஸோனா, ஆகிய மொழிகள்)
இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் எஸ். பாலச்சந்திரன்.
************