• Thu. Sep 21st, 2023

ஹெராக்ளிட்டஸ் நதிக்கரையில், செழித்து வளர்ந்திருந்தது  காட்டுப் புல்!

ByGouthama Siddarthan

Jul 26, 2022

 

– கௌதம சித்தார்த்தன்

 

“A translation can never equal the original; it can approach it, and its quality can only be judged as to accuracy by how close it gets.”

– Gregory Rabassa

 

தினமும் ஒரு கவிதையை மொழிபெயர்ப்பது என்ற திட்டத்தில், இறங்கி நான் செயல்பட ஆரம்பித்த வரலாற்று நிகழ்வில், ஒரு பெரிய labyrinth -தே இருக்கிறது. இந்த சிறு கட்டுரையை labyrinth லிருந்தே துவங்கலாம்.

பலமொழிகளை உள்ளடக்கிய இந்தியாவின் தென் கோடியிலுள்ள, தமிழ் மொழி பேசும் எங்கள் தமிழ் நாட்டில் வாழும், 6 கோடி மக்கள் தொகையில், இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் அதிகபட்சம் 1000 பேர் தான். அதிலும், நவீன உலக இலக்கிய ஆர்வலர்கள் 500 தான். வெகுஜன சினிமாக்கள்தான் இங்கு முக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் மலினமான படைப்புகள்தான் இங்கு பிரசித்தம். உலக இலக்கிய அறிமுகம் கிட்டும் அரிதான சந்தர்ப்பங்களில், இணைய தொழில் நுட்பமே அறிமுகம் இல்லாத 1980 களில்தான், இந்தப்பெயர் எனக்கு அறிமுகமானது.

எனக்கு ஆரம்பத்திலிருந்தே, மொழிபெயர்ப்புப் படைப்புகள்தான் பிடிக்கும். நான் ஆசிரியப் பொறுப்பில் நடத்தி வந்த உன்னதம் சிற்றிதழில், முழுக்க முழுக்க மொழிபெயர்ப்புகளைத்தான் வெளியிட்டு வந்தேன். அந்தக்கட்டத்தில் நான் மொழிபெயர்ப்பில் ஈடுபடவில்லை. என்போன்ற அலைவரிசை கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்த்து அனுப்பும் கதை, கவிதை, கட்டுரைகளை, படித்து தேர்வு செய்து வெளியிடுவதே பெரும் ஆனந்தம்! மொழிபெயர்ப்பு படைப்புகளை, அவற்றின் மூலத்துடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதும், மூலம் இல்லாத படைப்புகளை ஒரு தேர்ந்த வாசிப்பிலேயே வாக்கியக் குளறுபடிகள் கண்டு பிடித்து சரி செய்வதும் பெரும் ஆனந்தமாகவும், சவாலாகவும் இருக்கும். இப்படி, பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், என் கால்ப்பாதங்கள் அமிழ, பயணம் செய்திருக்கிறேன்.

அந்தக்காலகட்டத்தில், உலக இலக்கியச் சூழலில் தற்போது என்ன நடக்கிறது என்பதெல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 1960 களில் வெளிவந்த படைப்புகள்தான் 80 களில் தமிழில் மொழியாக்கம் ஆகும். 20, 30 வருடம் கழித்து தமிழில் மொழியாக்கமாகி அறிமுகம் பெறும் படைப்புகள், ஒரு தீவிர தமிழ் வாசகனுக்கு கிடைத்ததற்கரிய பெரும் புதையல்! இப்படியான கால ஓட்டத்தில் உலகெங்கும் வெடித்த  Latin American Boom, 20 வருடங்கள் கழித்து எங்கள் தமிழ்ச் சூழலை வந்தடைந்தபோது, ஒவ்வொரு நவீன வாசகனும் ஆரவாரத்துடன் labyrinthக்குள் பயணம் செய்தான். கிரேக்கப் புராண காலத்திலேயே இந்த வார்த்தை தோன்றியிருந்தாலும், எங்களுக்கு இந்த வார்த்தையை ஒரு பெரும் மயக்கத்துடன் கொண்டு வந்து சேர்த்தவன் போர்ஹேஸ் தான்!

இதன் வேர்ச்சொல், அழிந்து போன,  Indo-European Anatolian மொழியான Lydian மொழியில் உருவாகி, கிரேக்கச் சொல்லாக மருவி, இன்று லத்தீன் அமெரிக்கப் படைப்புகளில் மாத்திரமல்லாது, உலகின் பன்மொழிப் படைப்புகளிலும்  labyrinth என்றே பயன்படுத்தி வந்தாலும், எங்கள், உலகின் மூத்த மொழி என்று வெட்டிப் பெருமை கொண்டிருக்கும் தமிழ்மொழியின் அறிவு ஜீவி தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், இந்த வார்த்தைக்கு, குறுக்கு வெட்டுப் பாதை, புதிர் வட்டப் பாதை,  சுழல் படிக்கட்டுப் பாதை, சக்கரப் பாதை.. என்று தங்கள் இஷ்டத்திற்கு பெயர்களை சூட்டினார்கள். எனக்கு சற்றும் இந்த வார்த்தைகள் பிடிக்கவில்லை. என்னுடைய இதழில், நான்  labyrinth என்றே தமிழ் எழுத்தில் எழுதி வந்தேன். அதனால், பெரும் விமர்சனத்திற்குள்ளானேன். ஆனாலும், நண்பர்களின் தொடர்ந்த அறிவுரையின் பேரில்,  அந்த வார்த்தைக்கு நிகரான அர்த்தத்தில் தமிழில் ஒரு பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

தமிழ் மொழிபெயர்ப்பு மேதைகள் சூட்டிய அந்தப் பெயர், அதன் அர்த்தத்தை சொல்லக்கூடிய வெகு சாதாரணப் பெயராக இருந்தது. அது ஒரு வினோதமான, உணர்வு பூர்வமான வார்த்தையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தமிழின் மொழிவளத்தை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று ஏங்கினேன். அந்த வார்த்தையைத் தூக்கிக்கொண்டு தமிழ் மொழி அறிஞர்கள், பேராசிரியர்கள்,  ஆய்வாளர்கள்… என்று தமிழ் நிலமெங்கும் அலைந்தேன். எனக்குத் திருப்திகரமான சொல் கிட்டவே இல்லை. எங்கள் புராண காவியமான மஹாபாரதத்தில் வரும் புகழ்பெற்ற பகுதியான குருட்சேத்திரப் போரில் வரும் “பத்ம வியூகம்” என்றும், “சக்கர வியூகம்” என்றும் அழைக்கப்படும் வார்த்தை என்னைக் கவர்ந்தது. அந்தப் போரில், ஒவ்வொரு நாளும் ஒரு வியூகம் அமைத்துப் போர் புரிவார்கள். அதில் பிரபலமான வியூக அமைப்புதான் பத்ம வியூகம். அது, யானைப்படை, குதிரைப்படை, வீரர் படை ஆகிய  போர்த்தளவாடங்களை தமக்குள் கொண்டு பல்வேறு புதிர் அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த வியூகத்தின் உள்ளே சென்று போரிடும் மாவீரன் அபிமன்யூ, சுழலும் அந்த வியூகத்திலிருந்து வெளியே வருவதற்கான புதிர் வழி தெரியாது, அதற்குள் மாட்டிக் கொண்டு இறந்து போவான் என்பது அதன் தொன்மம்!

ஆனாலும், அந்த வார்த்தை நவீன தமிழுக்கு பொருத்தமாக இருக்காது, இன்னும் தேடவேண்டும் என்று தீவிரமான தேடலில் இறங்கினேன். அப்பொழுது என் பார்வையில் பட்டவை, டச்சு ஓவியரான M.C.Escher ன் ஓவியங்கள்! தலை கிர்ரென்று சுற்றிச் சுழல, ஓயாததேடலில் மண்டைக்குள் வெடித்தது அந்த வார்த்தை, புதிர்வழிச் சுழல்!  தமிழின் நவீன இலக்கியத்தில், “புதிர்வழிச் சுழல்” என்கிற பெயரை coin செய்தேன். இந்தப்பெயர் தந்த மயக்கம் இன்றுவரை தீராமல், என் ஆங்கிலக் கவிதைத் தொகுப்புக்கு “Timebyrinth” என்று, ஒரு புதிய சொல்லாக்கத்தை, ஆங்கில இலக்கியத்திலும் coin செய்தேன்.

“The difference between the right word and the almost right word is really a large matter – it’s the difference between a lightning bug and the lightning” என்ற மார்க் ட்வைன் -ன் மேற்கோளை இங்கு நினைவு கூறலாம்.

இந்த புதிர்வழிச் சுழலில் சுற்றிக் கொண்டிருந்த கடந்த வருடத்தின் ஒரு நாளில், என் பழைய உன்னதம் இதழ்களை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பு ரீதியாக பல தவறுகள் கண்ணில் தென்பட ஆரம்பித்தன.  துணுக்குற்ற மனத்துடன் மிக நுட்பமாக இதழ்களில் வெளியிட்டிருந்த எல்லாவற்றையும் கவனமாக மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன்.

கடவுளே, என் பிரியமான  விஸ்லாவா சிம்போர்ஸ்கா வின் “In Heraclitus’ river” என்னும் கவிதை மிக மிக மோசமாக சிதைத்து சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தது. இணைய வளர்ச்சியற்ற 1980 களில் எவ்வித ஒப்பு நோக்கலும் இன்றி வெளியிடப்பட்டிருந்த அந்த மொழியாக்கம் எனக்குள் ரத்தக்கண்ணீரை வரவழைத்தது. உலகின் புகழ் மிக்க மெட்டாபர்களையும், படிமங்களையும், தத்துவத் தேட்டங்களாக, கவிமொழியின் அழகியலாகப் படைத்த அந்த கவி ஆளுமைக்கு நேர்ந்த காவிய சோகத்தை என்னால் ஆற்றமுடியவில்லை. நான் அழுதேன்! அழுதேன் என்பதை கவித்துவமாகச் சொல்லவில்லை – உண்மையாகவே படுக்கையில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதேன்.

பிறகு, ஒரு தீர்க்கமான முடிவுடன் படுக்கையிலிருந்து எழுந்தேன். ஒரு அட்டையில் சிம்போர்ஸ்காவின் பெயரை எழுதி, அதன் முன்னால் மண்டியிட்டேன். “a fish invented a fish beyond fish”, என்கிற மகத்தான வரிகளை எழுதிய அந்த கவி மேதமையின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினேன். அந்த மொழியாக்கப் பக்கத்தை இதழிலிருந்து கிழித்தெடுத்து, சுக்கல் சுக்கலாக கிழித்து வீசினேன். வரலாற்றின் பக்கங்களிலிருந்து  அழியும் சுழல்வுகளாக என் அறை முழுவதும் சுழன்று காற்றில் கரைந்தன காகிதக் கிழிசல்கள்!

கணினித் திரையை ஆன் செய்தேன். இனிமேல், நானே மொழியாக்கம் செய்வது என்கிற தீவிரம் ஒரு ஜுரமாக என் உடலெங்கும் பற்றி எரிந்து கொண்டிருந்தது.   சிம்போர்ஸ்காவின் “ஹெராக்ளிட்டஸின் ஆற்றில்” குதித்தேன்.  ஆனால், அதில், நீச்சல் பயில்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. அதில் ஒவ்வொரு முறை மூழ்கி எழும்போதும், வேறு ஒரு மனிதனாக எழுவது பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த நதியிலிருந்து எழும்போது மீனாக மாறியிருந்தேன். சக மீன்கள் என்னைக் கடித்துக் குதற ஆரம்பித்தன. மூழ்கி எழுந்து, மூழ்கி எழுந்து பெரும் மரணாவஸ்தையோடு நீச்சல் பயின்றேன்.  “ஒரு மீன் மீனுக்கு அப்பால் ஒரு மீனைக் கண்டுபிடித்தது” (“a fish invented a fish beyond fish”) போல,  இது ஹெராக்ளிட்டஸின் நதி  அல்ல,   சிம்போர்ஸ்காவின் நதி என்பதைக் கண்டுபிடித்தேன்.

ஒரு வழியாக அந்த ஆற்றிலிருந்து தப்பித்துக் கரையேறினேன். முதன் முதலாக நீச்சல் பழகும் ஒரு இளம் நீச்சல்காரன், ஹெராக்ளிட்டஸின் ஆற்றில் குதிக்கலாமா? என்று மனம் நொந்து கொண்டேன். முதலில், ஒரு சிறு குளத்தில், ஆற்றில், அலைகளற்ற நீர்நிலைகளில்தான் நீச்சல் பயிலவேண்டும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். சிக்கல் சிடுக்குகளற்ற எளிய கவிதைகளிலிருந்து தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன். மேலும், தகிக்கும் என் மனநிலையின் துரித ஓட்டத்திற்கு இணை கொடுக்கும் விதத்தில் தினமும் ஒரு கவிதையை மொழிபெயர்ப்பது என்றும் செயல்பட ஆரம்பித்தேன்.

இந்த மொழிபெயர்ப்புத் திட்டத்தில் தினமும் பல்வேறு உணர்வுகளைக் கண்டடைந்தேன். எண்ணற்ற சவால்களை சந்தித்திருக்கிறேன். எல்லையற்ற களிப்பில் துய்த்திருக்கிறேன். labyrinth ல் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் மூச்சுத் திணறி மாய்ந்து போயிருக்கிறேன். சொற்கள் மீன்களாக மாறி என் சொந்தக்கவிதையை எழுதும் உத்வேகத்தை அடைந்திருக்கிறேன். என் சொந்தக் கவிதை எழுதுவதற்காக சேமித்து வைத்திருந்த சொற்களை இழந்திருக்கிறேன். இன்னும் பலபல.

அப்படியான தருணத்தில்தான் Carl Sandburg’s  “Grass” கவிதை கிடைத்தது.  மிக எளிமையான 11 வரிக் கவிதை.  எனக்கு முற்காலங்களிலேயே அறிமுகமான கவிதைதான். அப்பொழுது வாசிப்பு ரசனைக்காக மட்டுமே  படித்த கவிதை. இப்பொழுது, மொழியாக்கம் செய்வதற்கு இறங்கினால், எளிமை கொஞ்சம் கொஞ்சமாக இறுகி பூடகமாக  மாறுகிறது.

அதன் வரிகளை மொழிபெயர்த்து அசைபோட்டுக்கொண்டிருந்த கணங்களில், “Translation is not a matter of words only: it is a matter of making intelligible a whole culture.” என்கிற  Anthony Burgess ன் வரி எனக்குள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக்கவிதைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்து, ஆஸ்டர்லிட்ஸிலும், கெட்டிஸ்பர்க்கிலும் கால்களை அழுத்தமாக ஊன்றி அந்த வதைமுகாம்களின் ஊடே நடந்து திரிய ஆரம்பித்தேன். போருக்கு எதிரான உலகப்புகழ்பெற்ற இக்கவிதை, இரண்டாம் உலகப் போரில் வதை முகாம்கள் செயல்பட்ட விதத்தையும்,  வரலாற்றை வாழ்க்கையின் புதிய அடுக்குகளுக்கு அடியில் துளிர்க்கும் தன்மையையும் முன்வைக்கிற நேர்த்தியை காலுக்கு அடியில் குத்தும் புல்லின் குத்தலில் காட்சிப்படுத்தியிருக்கும் அழகியல் கொண்டது.

கவிதையை ஆழ்ந்து வாசிக்க வாசிக்க, கவிதையின் பல்வேறு பரிமாணங்கள் புலப்பட ஆரம்பித்தன.

போர் என்ற பெயரில் சகமனிதனின் வாழ்வியலை அழிக்கும் காட்டுமிராண்டித்தனங்களை, எதிர்த்துக் குரல் எழுப்புகிறது இயற்கை. புல் என்பது எல்லாவற்றையும் மூடி மறைப்பது என்கிற படிமம் பொதுப்புத்தியில் படிந்து கிடக்கிறது. “அவனை புதைத்த இடத்தில் புல் முளைத்து விட்டது ” என்கிற எங்கள் தமிழ்மொழியில் பிரசித்தமான பேச்சு வழக்கை நினைவில் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் கவிதையின் வரிகள், தமிழ்க் கலாச்சாரத்தை உணர்வு பூர்வமாகத் தொடும் தன்மையில் இன்னும் நெருக்கமானது கவிதை. அருகில் நெருங்க நெருங்க, சுருங்கிக் கிடந்த கவிதை, பிரம்மாண்டமாய் தன் விஸ்வரூபத்தைக் காட்டியது.  ஜனங்களின் பொதுப்புத்தியில் படிந்து கிடக்கும் புல் பற்றிய  படிமத்தை, முற்றிலும் எதிரான பார்வையில் தனக்குள் வைத்திருக்கிறது கவிதை. “புல் செயல்படும் தன்மை”  என்பது எல்லாவற்றையும் மூடி மறைப்பதல்ல, மாறாக, எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துவது என்கிற பார்வையை முன்வைத்து, புல் என்பதை ஒரு மெட்டாபர்  ஆக மாற்றிப் போடுகிறார் சாண்ட்பர்க்.

கடந்த காலங்களில், இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டங்களில், பல லட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தது இலங்கை அரசு. இந்த பேரினவாதத் தாக்குதல்களில், நடந்த  இனப்படுகொலைகளில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையை சர்வதேச நீதிமன்றங்களும், சர்வதேச அமைதிக்கான அமைப்புகளும் ஏற்க மறுத்துவருகின்ற இந்நிலையில், அதன் நிஜத் தன்மையை உணர வேண்டுமெனில், அந்த மக்களின் புதைகுழிகளில் முளைத்திருக்கும் புற்களை வைத்துத்தான் எண்ணவேண்டும் என்று பாடுகிறான் ஒரு பெயரற்ற ஈழத்தமிழ்க் கவிஞன்.  

உலகில் எங்கெங்கெல்லாம், விடுதலைப் போர்களும், வதைமுகாம்களின் படுகொலைகளும் நடக்கின்றனவோ, அப்போதெல்லாம் கார்ல் சாண்ட்பர்க்கின் இந்தக்கவிதை உயிர்த்தெழுந்துகொண்டே இருக்கும் அமரத்துவம் பெற்றது.

எனக்கு Primo Levi யின் கட்டுரையான “On translating and being translated” லிருந்து ஒரு வரி ஞாபகம் வருகிறது :  “The translator is the only one who truly reads a text and reads it in its profundity, in all its layers, weighing and appraising every word and every image and perhaps even discovering its empty and false passages. When he is able to find or even invent the solution to a knot, he feels sicut deus [like god]… ”

இதன் தொடர்ச்சியாக, என்னை முதன் முதலில், பயமுறுத்தி,விரட்டியடித்த சிம்போர்ஸ்காவின் கவிதை நதி, தெளிந்த நீரோடையாய் எனக்குள் இறங்கியது. “ஒருமீன் இன்னொரு மீனை வெட்டிக் கிழிக்கிறது ” என்ற வரிகளின் பூடகத்தில் மாட்டிக்கொண்டு, அன்றைக்கு மிரள மிரள விழித்துக் கொண்டிருந்த எனக்கு, அதற்கான தெளிவு இப்போது கிடைத்தது. “ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வெட்டித் துண்டாடுகிறான்..”  என்கிற வரிகளாக, போர் எதிர்ப்புத் தன்மை கொண்ட பார்வையிலும், அந்தக்கவிதையை, வாசிக்கலாம் என்று தோன்றுகிறது. ஆக, நான் அன்றைக்கு  ஹெராக்ளிட்டஸ் நதியில் எடுத்து வைத்த காலடி, அதன் மைய நீரோட்டத்தில்தான் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்பதில் ஒரு மகிழ்ச்சி பற்றிக்கொண்டது.

அடுத்து, இந்தக்கவிதையின் மொழியாக்கத்தைப் பொறுத்தவரை அவரது வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வாரத்தை அசலாக  தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடும்போது, கவிதையின் அபாரமான வீரியம் நிலைகுலைந்து, நீர்த்துப்போய்விடுகிற அவலம் ஏற்படுகிறது. பொதுவாகவே, மொழிபெயர்ப்பாளர்கள் தங்களது மொழிக்கேற்ப, மூலத்தை சற்றே சேதப்படுத்தி, உள்ளூர்மயமாக்கித்தான் வெளியிடுவார்கள் என்பது, அவர்கள்மீது வைக்கும் காலங்காலமான விமர்சனம்.

நான் இங்கு முன்வைப்பது உள்ளூர்மயமாக்கல் என்னும் தன்மை குறித்து அல்ல, கவிதையின் மொழி அமைப்பு குறித்து.

ஆங்கிலத்தின் மொழி அமைப்பு வேறு, தமிழ் மொழியின் மொழி அமைப்பு வேறு. ஆங்கிலமொழிக்கு ஆயிரம் ஆண்டுகாலப் பின்புலம் இருந்தாலும், 17 ஆம் நூற்றாண்டின் நவீன ஆங்கிலமொழி உருவாக்கத்திலிருந்து உருவான மொழியமைப்பை கணக்கில் கொள்ளலாம். இலக்கிய மொழிநடை ஷேக்ஸ்பியரில் காலூன்றி, வேர்ட்ஸ் வொர்த், கோல்ரிட்ஜ் என்று நகர்ந்து 18 ஆம் நூற்றாண்டில், ஷெல்லி, கீட்ஸ், பைரன் போன்ற கவிஆளுமைகள் கலை இலக்கியங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய  Romantic era வை கணக்கில் கொள்ளலாம்.

ஆங்கில மொழியின் தற்கால நவீனக் கவிதை மொழியமைப்பின் வேர்கள் இந்த நூற்றாண்டுக் கவிகளிடமிருந்தே தோன்றுகின்றன. இந்த சாண்ட்பர்க் கவிதை மொழியாக்கத்தில் பொருத்தப்பாட்டுடன் முன்வைத்துப் பேசுவதற்கான கவிதையாக   வேர்ட்ஸ் வொர்த்தின் உலகப்புகழ் பெற்ற “The Solitary Reaper” கவிதையை, இங்கு எடுத்துக் கொள்ளலாம்.

1918 இல் சாண்ட்பர்க் எழுதிய Grass கவிதை முன்வைக்கும் போருக்கு எதிரான பார்வையை, 110 வருடங்களுக்கு முன்பே, 1807 இல் தனது, “The Solitary Reaper” கவிதையில் முன்வைத்திருக்கிறார் வேர்ட்ஸ் வொர்த்.

பிரெஞ்சு புரட்சிப் போர்கள், மற்றும் நெப்போலியனின் தொடர் போர்களின் போதான காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பதை மனதில் கொண்டு இக்கவிதையை அணுக வேண்டும்.

ஒரு ஸ்காட்டிஷ் வயலில்,  தனியாக ஒரு பெண் தானியக்கதிர்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறாள். மேலும், அந்த அறுவடையில் ஆழ்ந்து பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருக்கிறாள். இந்தக் காட்சியும், ஏகாந்தமான குரலின் தொனியும் மிகவும் பிடித்துப் போய்விடுகிறது கவிஞருக்கு. ஆனால், அந்தப்பாடலின் மொழி புரியவில்லை. அந்தப்பாடலின் இசை தொனி அவருக்குள் பல்வேறு  எண்ண அலைகளை மீட்டுகிறது. வயல்களெங்கும் அவளது துயரமான இசை  நிரம்பி வழிகிறது.  கடந்த காலப் போர்களின் துயரங்களை எண்ணி அவள் பாடுவதாகக் கவிஞர் சொல்கிறார்.

அரேபியப் பாலைவனத்தில் சோர்வடைந்த பயணிகளுக்கு எந்த நைட்டிங்கேலும் இதுவரை  பாடியதில்லை. ஸ்காட்லாந்து தீவுகளைச் சுற்றியுள்ள கடலின் மௌனத்தை உடைத்து, எந்த குக்கூ பறவையும் பாதிப்புக்குரிய குரலுடன் பாடியதில்லை என்றெல்லாம் அழகியலாக வர்ணித்துச் செல்லும் அவர், முடிந்த முடிவாகச் சொல்கிறார் :  “அந்தப் பெண்ணின் பாடலுக்கு முடிவே இருக்க முடியாது என்பது போல பாடிக் கொண்டிருக்கிறாள்” என்ற இந்த வாக்கிய அமைப்பில், என்றைக்கும் முடிவடையாத போர்களின் அவலநிலையை ஒரு தரிசனமாக முன்வைக்கிறார் வேர்ட்ஸ் வொர்த்.

கவிதையை நுட்பமாகக் கவனியுங்கள்! அந்த கதிர் அறுவடை செய்யும் இளம் பெண், தனது துயரமான குரலால் ஒரு பாடலைப் பாடுகிறார். அந்தத் துயரம் போர் குறித்ததுதான் என்பது யாருக்குத் தெரியும்? தனது வாழ்வியலில், துணை நின்ற தனது கணவன், இறந்துபோனதால், தான் தனிமையாக வயலில் அறுவடை செய்யும் விதிப்பயனை நொந்து பாடியிருக்கலாம், தனது சின்னஞ்சிறு மழலையை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்கு வந்துவிட்ட துயரமாக, அந்த மழலைக்கான மானசீகமான தாலாட்டாக இருக்கலாம்…

அப்படி அல்ல, அவளை “Maiden” என்று சொல்கிறார்  வேர்ட்ஸ் வொர்த் என்றால், அவள் திருமணமாகாத இளநங்கை என்பதை, தொலைவில் நின்று இந்தக்காட்சியை ரசித்துக் கொண்டிருக்கும் கவிஞரால் எவ்வாறு அனுமானிக்க முடிந்தது? சரி, ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொண்டாலும் கூட, அவளது துயரமான பாடல், தன்னைத் திருமணம் செய்வதாகச் சொல்லிவிட்டுப் போன தன் காதலனின் பிரிவுத் துயர் பற்றியதாய் இருக்கலாம். (பொதுவாகவே, இளநங்கைகளின் பதின் பருவ உணர்வுகள் காதலை மையமாக வைத்துதான் எண்ணமிடும். போர் பற்றிய சிந்தனைகளுக்குப் பெரிதும் வாய்ப்பில்லை.)

ஆனால், கவிஞர், அந்தப்பாடல் கடந்தகாலப் போரின் துயரத்தைப் பாடுவதாகக் கட்டமைக்கிறார். கவிமனம் என்பது போருக்கு எதிரானது, மனிதத்தை நேசிப்பது.

சாண்ட்பர்க்குக்கு,  Grass காலில் குத்தும்போது, போரின் கொடூர முகம் கொண்ட வரலாறு விழித்தெழுவது போல,  வேர்ட்ஸ் வொர்த்க்கு,  ஒரு பெண்ணின் மொழியறியாத துயரமான பாடலின் தொனி, போரின் நினைவுகளை உசுப்பிவிடுகிறது.

“And o’er the sickle bending / I listened, motionless and still ” என்ற வேர்ட்ஸ் வொர்த்தின் கவிதை வரிகள், ஒரு அற்புதமான கவிதை அழகியலை உருவாக்குகின்றன.  “And o’er the sickle bending” என்னும் வரி, நினைவுகளை அறுவடை செய்யும் விதமாக வளைந்து கொடுக்கும் தன்மையை, பூடகமாகச் சொல்கிறது. இன்னும் நுட்பமாகச் சொன்னால், அவள் பணி செய்து கொண்டிருக்கிற “அறுவடை” என்பதை, ஒரு மெட்டாபர் ஆக மாற்றிப்பார்க்கிறார் வேர்ட்ஸ் வொர்த்.

பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னரான, அரசியல் மற்றும் பொருளாதார எழுச்சியின் போது எழுதப்பட்ட இக்கவிதையில், தொழிற்துறை புரட்சி சார்ந்த கருவிகள் எதுவுமின்றி, பாரம்பரியமானமுறையில் அறுவடை செயல்படும் கவிதைக் காட்சியின் பின்புலத்தை இங்கு நினைவு கூர வேண்டும். விவசாயக்கருவியான அரிவாள், போர்க்கருவியாக வளைந்து மாறுவதையும், அதை மீண்டும், பாரம்பரிய விவசாயக்கருவியாக மாற்றும் அவளது கை லாவகத்தையும், இந்த வரி வாசகனுக்கு அற்புதமாக உணர்த்துகிறது.

சாண்ட்பர்க்கின் Grass செய்யும் பணியை, கதிர் அறுக்கும் அரிவாளும், அந்தப் பெண்ணின் சாதுரியமான கை லாவகமும், அறுவடையாகச் செய்கின்றன

இந்த அறுவடை மொழி, நூறாண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் மொழி அமைப்பில்தான், கார்ல் சாண்ட்பர்க்கின், I am the grass / Let me work.  என்கிற கவிதை வரியை ஆங்கில மொழி மிக எளிதாக சுவீகரித்துக் கொள்கிறது.

இந்த நூற்றாண்டுகள் பின்புலம் கொண்ட மொழி அமைப்புக்கு இந்த வரிகளின் பொருள், கவிதையின் மையப் பொருளைக் குறிப்புணர்த்துவதாக அமையும். ஆனால், அதை அப்படியே தமிழ் படுத்தினால், கவிதை புலப்படுத்த முயலும் உள்ளடக்கம் நிச்சயம் கைகூடாது, பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. “நான் புல் / என்னை பணி செய்ய விடுங்கள்” என்றோ, “என்னை வளர விடுங்கள்” என்றோ, “என்னை மறைக்க விடுங்கள்” அல்லது “எல்லாவற்றையும் மறைக்கிறேன்” என்றோ, மொழியாக்கினால், தமிழ் மொழி வாசகனுக்கு, சாண்ட்பர்க் சொல்ல வந்ததன் அர்த்தம், அனர்த்தமாகப் போய்விடும்!.

நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல, புல்லின் பணி என்பது எல்லாவற்றையும் மறைத்து விடுவது என்பது போலப் பொதுப்புத்தியில் கட்டமைந்திருக்கிறது. அப்படி அல்ல, புல்லின் தன்மை என்பது, மறைக்கப்பட்ட எல்லாவற்றையும் வெளியே கொண்டு வருவது, மறைக்கப்பட்ட வரலாறு, இனப் படுகொலைகள், மனித வாழ்வியல் துயரங்கள், அறம் வழுவிய அநீதிகள்.. இப்படி அனைத்தையுமே அடையாளம் காட்டுவது. புல்லின் தன்மை என்பது வெறுமனே புல் அல்ல, எல்லையற்ற பிரபஞ்சத்தின் காலஓட்டத்தில் நிகழும் வாழ்வின் மரணத்திலும், மரணத்தின் வாழ்விலும் ஒரு சாட்சியமாக நிறைந்திருக்கும் இயற்கையின் தன்மை. இப்படியான பார்வையில் துளிர்த்தெழும் செயல்பாட்டைத்தான் பணி செய்வது என்ற ஒற்றை வார்த்தையில் புலப்படுத்துகிறார் சாண்ட்பர்க்.

ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது இப்படியான, விளக்கமான அடிக்குறிப்புகள் ஏதும் இல்லாமலேயே அதன் ஆன்மாவை வாசகனுக்கு உணர்த்த வேண்டும். மேலும், மூலத்தை பெரிதும் சேதப்படுத்தாமல், அதன் உள்ளடக்கத்தை, கவிதையின் மையத்தை, மொழிபெயர்க்கும் மொழியின் வனப்புடன் இணைந்து செயல்படும் விதமாக மொழியாக்க மொழியின் அழகியலோடு முன்வைக்கவேண்டும்.

இந்த இடத்தில், தமிழின் மொழியமைப்பை சற்றே தெரிந்து கொள்ள வேண்டும் : 2000 வருடப் பாரம்பரியம் கொண்ட சங்க இலக்கிய மரபு கொண்டது தமிழ்மொழி. தமிழ் மக்களின் பண்பாடுகளும், வாழ்வியல் முறைகளும், சடங்குகளும், தொன்மங்களும், அறங்களும், நீதிபரிபாலனங்களும், போர்களும், காதலும், ரத்தமும் சதையுமாய்க் கொண்ட தமிழ் இனக்குழுவின் மானுட ஆவணம்! இந்த செழுமை மிக்க சங்க இலக்கியங்களில் கால் ஊன்றித்தான் இன்றைய நவீன இலக்கியம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. செம்மொழி அந்தஸ்து கொண்ட இந்த மொழி அமைப்பு மிக மிக ரொமாண்டிக் தன்மை கொண்டது.

தொன்மைமிக்க தமிழ் வாழ்வியலின் அம்சமான சங்க இலக்கியத்தை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதும், மிக மிகப் புகழ் பெற்றதுமான  Last month, under that white moon, என்ற பாடலை இங்கு விரிவாகப் பார்க்கலாம் : சாண்ட்பர்க்கின் கவிதை குறித்து பேசுவதற்கு வசதியாக இந்தக்கவிதை அமைந்தது மட்டுமல்லாது, வேர்ட்ஸ்வொர்த்தும், சாண்ட்பர்க்கும் கடந்த 100 வருடங்களில் பேசிய போர் எதிர்ப்புப் பார்வையை, 2000 வருடங்களுக்கு முன்பே பேசிய இந்தக் கவிதையை இங்கு கொண்டு வந்து பொருத்தமாக இணைத்ததற்கு, காலதேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

சங்க காலத்தில், பறம்பு நாட்டை சிறப்பாக ஆண்டு வந்த வேள் பாரி என்னும் குறுநில மன்னனுக்கும், மற்ற நாடுகளை ஆண்டுவந்த மூவேந்தருக்கும் கடுமையான போர் நடந்தது. போரில் பாரி மன்னன் கொல்லப்பட்டு, மூவேந்தர் பறம்பு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். பாரி மகளிர் என்னும் மன்னனின் இருமகள்கள், இந்தப் போரின் துயரத்தை கவிதையாகப் பாடினர் என்பது இதன் பின்புலம்.

Puranānūru 112, Sang by Vēl Pāri’s daughters, Thinai: Pothuviyal, Thurai: Kaiyaru Nilai   

Last month, under that white moon,
we had our father,
and nobody had seized our mountain.
This month, under this white moon,
the kings with victory drums have
seized our mountain. We don’t have
have our father!

(Sangam Poems Translated by Vaidehi Herbert)

போர் குறித்த கொடுங்கனவுகள், சாண்ட்பர்க்குக்கு, காலில் குத்தும் Grass  என்றால், வேர்ட்ஸ் வொர்த்க்கு,  ஒரு பெண்ணின் மொழியறியாத துயரமான பாடலின் தொனி, தமிழின் பாரிமகளிருக்கோ, பூரணச் சந்திரமுகம் கொண்ட வெண்ணிலா!

இங்கே தமிழ் பாரி மகளிரும், வெண்ணிலாவை ஒரு மெட்டாபர் ஆக மாற்றியிருக்கிறார். அந்த மெட்டாபர், தமிழ் கலாச்சாரத்தின் வாழ்வியலோடு ரத்தமும் சதையுமாக பின்னிப் பிணைந்தது. அதாவது, பூரணமான வெண்ணிலாவைப் பார்க்கும்போதெல்லாம், போர் பற்றிய நினைவுகள் அலையடிக்கின்றன கவிஞருக்கு. அதாவது வெண்மை நிறம் கொண்ட வெண்ணிலா! கொடூரமான போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மரணமுறுவார்கள்.

தமிழ்க் கலாச்சாரத்தில், கணவன் இறந்து விட்டால், அடுத்த கணமே,  மனைவி, தனது பலவர்ணப் பட்டாடைகள் களைந்து, வெண்ணாடை உடுத்தி, தலை முடி களைந்து, அமங்கலி என்ற அவப்பெயருடன், வாழ்நாள் முழுவதும் கைம்பெண் கோலத்தைத் தழுவ வேண்டும். இந்த பண்பாட்டின் பாரம்பரியத்தில் காலூன்றியிருக்கும், தமிழ் நங்கைகள், போரில் தங்களது கணவன்மார் இறந்துவிட்டால், இந்த விதவைக்கோலம் பூணுவார்கள். இந்தப் பின்புலத்தில் இந்தக் கவிதையை அணுகும்போது, பாரிமகளிர், வெண்ணிலாவைப் பார்க்கும்போதெல்லாம் எழும் துயரத்தை, போர் எதிர்ப்புக் குரலாக முன்வைத்திருக்கிறார்.

பிரபஞ்சம் முழுக்க கவிஞர்கள் போருக்கு எதிராகத்தான் சிந்தித்திருக்கிறார்கள்!

2000 ஆண்டுகால இந்தக்கவிதைமொழி அமைப்பிலிருந்து வளர்ச்சி பெற்றிருக்கும் தமிழ் மொழிஅமைப்பு, அதன் கலாச்சாரமும், அழகியலும் கொண்ட நுட்பமான கவிமொழிக்குள், மொழியாக்கம்பெற்று உள்ளேவரும் கவிதையின் ஆன்மாவை மிக நெருக்கமாக உணர்த்தக் கோருகிறது. இந்தக் கோரிக்கைக்கான அர்த்தம்,  உள்ளூர்மயமாக்கலின் அவசியம் என்பதல்ல. மாறாக, மூலப் படைப்பு இயங்கும் பின்புலக் காட்சியை தமிழ் மொழியமைப்பின் பரிமாணங்களைக் கணக்கில் கொண்டு கட்டமைக்கவேண்டும் என்பதுதான்.

இப்பொழுது Grass கவிதை மொழியாக்கத்திற்கு,  இறுதிவடிவம் கொடுக்கலாம்:

மூன்று stanza களில் உள்ளடங்கிய 11 வரிகள் கொண்ட கவிதையின் வடிவ நேர்த்தியை வாசிப்பால் நீவிப் பார்த்தேன்.

முதல் stanza வில் ஒன்றும் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியான போர்களில் மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்ற பிறகு, அவர்கள் தங்கள் கொடூரமான வேலையை மறைக்க இயற்கையை அனுமதிக்கிறார்கள் என்பதை கவித்துவமாக விளக்குகிறது.

Pile the bodies high at Austerlitz and Waterloo.
Shovel them under and let me work-
I am the grass; I cover all.

2 வது stanza, வதைமுகாம்களின் நிலையையும், காலம் நகர்வதையும், புற்கள் வளர்ந்து,  பயணிகளின் கால்களில் குத்தும் கட்சியில் ஒரு சிறு மாறுதல் செய்ய விழைந்தேன். அதாவது ஆறு வரிகள் கொண்ட அந்த  stanzaவை

மூன்று வரிகளுக்குப் பின்னர், காலம் நகர்ந்திருக்கும் தன்மையை உணர்த்த, ஒரு இடைவெளி கொடுத்து, மீதி மூன்று வரிகளை இன்னொரு stanza வாக மாற்றினேன்.

And pile them high at Gettysburg
And pile them high at Ypres and Verdun.
Shovel them under and let me work.
Two years, ten years, and passengers ask the conductor:
What place is this?
Where are we now?

கடைசி stanza பற்றியதுதான் இந்த முழுக்கட்டுரையின் சாராம்சமும்.

I am the grass.
Let me work.

 

கவிதையில் பிரதானமாக நிற்கும் “Let me work” என்கிற வாக்கியம் தான் மொழியாக்கத்தில் பெரும் டிஸ்டர்ப் செய்கிறது.

இக்கணத்தில், கண் சிமிட்டுகிறான் Gregory Rabassa :

“Translation is a disturbing craft because there is precious little certainty about what we are doing, which makes it so difficult in this age of fervent belief and ideology, this age or greed and screed.”

அவன் சொல்வது சரிதான்.  என்னை விடிய விடியத் தூங்கவிடாமல் இம்சித்துக் கொண்டிருக்கும் அந்த வாக்கியத்தை, இவ்வாறாக மாற்றினேன் :

இது சாண்ட்பர்க் : ” I am the grass / Let me work. ”

இது நான் : “நான் புல். / ஊசி முனைகளாக நீள்கின்றன என் தழல்கள்.”

ஹா! கவிதை அதன் நீண்ட  தர்க்கத்தில் பூரணத்துவம் பெற்று,  மிக மிக அழகியல் கொண்ட மொழியமைப்போடு கச்சிதமாகப் பொருந்திப் போய் நின்றது.  இங்கு மூலக்கவிதையை வைத்து, ஒரு மேலோட்டமான சரிபார்த்தலில், புல்லின் தன்மை miss ஆனது போல் தெரிந்தாலும், தமிழ் மொழி அமைப்பில், அது மூலப்பொருளின் பொருளாக்கத்துடன் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் என்பதை ஆழமான வாசிப்பில் உணரலாம். அவ்வளவு சுலபத்தில் திருப்தியுறாத எண்ணங்களுடன் உழன்று கிடந்த நான், அந்த மொழியாக்கத்திற்கு கீழே என் கையெழுத்தைப் பதிந்தேன்.

என் கையெழுத்தைச் சுழிக்கும் கணங்களில்தான் இன்னொரு அற்புதமான விஷயத்தைக் கண்டேன்.

இவை எல்லாமே,  ஹெராக்ளிட்டஸின் நதியில் முக்குளித்து எழும்பும் ஒரு அதிசயத்தை!

புற்கள் ஒவ்வொரு காலத்திலும் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அதே புற்கள் அல்ல. ஒவ்வொரு காலத்திலும் அறுவடைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன, அறுவடைப்  பெண்கள் பாடல் பாடிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால், அதே அறுவடை அல்ல.

அதேபோலத்தான், உலகப்புகழ்பெற்ற காவிய உவமையான, தமிழ் கலாச்சாரம் சார்ந்த வெண்ணிலவு.

இந்தப் படிமம் குறித்து,  ஹெராக்ளிட்டஸ் காலத்திற்கு முந்தைய காலத்தில் (கி.மு.300 – கி.பி.200) வாழ்ந்த தமிழ்க்கவி சொல்வதைக் கவனியுங்கள்: “அன்று பார்த்த அதே நிலவு தான், இன்றும் காய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அன்றைய நிலவின் கீழ் மகிழ்ந்திருந்த  மனித வாழ்வியல் இன்றைய நிலவின் கீழ், அழிந்து போய்விட்டது”  என்று மனிதவாழ்வியலின் நிலையாமை கொண்ட வாழ்வை முன்னிறுத்திப் பாடுகிறார். இந்தியத் தத்துவ இயலின் புகழ்பெற்ற தத்துவத் தேட்டமான, “நிலையாமைத் தத்துவத்தை” முன்வைக்கும் இந்தப்பாடலின் அடிநாதம் என்பது, ஹெராக்ளிட்டஸின் ஆன்மாதான் என்பதை, இந்தப்பாடலை ஒரு ஆழமான மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது உணர முடியும்.

இந்த கார்ல் சாண்ட்பர்க்கின் கவிதையை மொழிபெயர்த்தபோது,  ஒரு  ஹெராக்ளிட்டஸ் நதியில் குளித்த ஆனந்தத்தை அனுபவித்தேன். மொழிபெயர்ப்பை முடித்துக் கரையேறியபோது, ஹெராக்ளிட்டஸின் நதிக்கரையோரம், செழித்து வளர்ந்திருந்தது காட்டுப் புல்!

*************************************

 

மொழியாக்கத்தின் தமிழ் வடிவம் :

 

புல்
– கார்ல் சாண்ட்பர்க்

 

ஆஸ்டர்லிட்ஸிலும் வாட்டர்லூவிலும் உடல்களைக் குவித்து வையுங்கள்
திணித்த அக்குவியல்களுக்கு அடியில் துளிரும் என் தழல்கள்
எல்லாவற்றையும் மறைக்கிறது – நான் புல்

கெட்டிஸ்பர்க்கில் அவற்றை அம்பாரமாகக் குவியுங்கள்
இப்ரஸிலும் வெர்டனிலும் இன்னும் அதிகமாகக் குமியுங்கள்
திணிப்புகளை மறைத்து நீள்கின்றன இணுக்குகள்.

காலம், ஆண்டுகளாய் நகர,
கால்களில் குத்தும் புற்களைக் காட்டி பயணிகள் வழிகாட்டியிடம் கேட்கிறார்கள்:
இது என்ன இடம்?
நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம்?

நான் புல்.
ஊசி முனைகளாக நீள்கின்றன என் தழல்கள்.

(தமிழில் : கௌதம சித்தார்த்தன்)

*****************************

 

(2020, அக்டோபர்)

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page