• Fri. Nov 24th, 2023

ஆயுத வியாபாரத்தின் அரசியல்

ByGouthama Siddarthan

Jul 25, 2022
  • கௌதம சித்தார்த்தன்
சமீபகாலமாக டிஸ்கவரி சேனல் தமிழில் தனது ஒளிபரப்பைத் துவங்கியிருக்கிறது. டிஸ்கவரி உலகளவில் எல்லா நாடுகளிலும், எல்லாத் தரப்பினராலும் பாரட்டப்படுகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தொலைக்காட்சி நிறுவனம்.
 
மனிதக்காலடி படாத அடர்ந்த காடுகளையெல்லாம் ஊடுருவி ஆபத்தான விலங்குகளின் அன்றாடச் செயல்பாடுகளையும், அரிதான பறவைகளின் வாழ்நிலையையும், ஆழமான சமுத்திரநிலைகளில் ஊடுருவி மிக வினோதமான நீர்நிலைப் பிராணிகளைப் படம் பிடித்துக் காட்டுவதையும், அருகிக் கொண்டிருக்கும் மிக அரிய விலங்குகளின் வாழ்நிலையைக் கண்காணித்து, நமக்கு அறிமுகப் படுத்துவதையும் மிகவும் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது.
 
அதேபோல, உலகிற்குத் தெரியவராத ஆதிப்பழங்குடிமக்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும், மரங்களில் மட்டுமே வீடுகட்டி வசிக்கும் இனக்குடிமக்கள் போன்ற அரிதான விடயங்களை, சூரியக்கதிர்கள் உட்புகாத இடங்களிலெல்லாம் நுழைந்து, வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைமிக்க தொலைக்காட்சி என்றும் சொல்லலாம்.
(இந்த நிகழ்வுகள் குறித்து, பெரும்பான்மையான காட்சிகள் அதற்கென்று நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தங்களது ஸ்டுடியோக்களிலேயே எடுத்துக் கொள்வார்கள்’ என்று ஊடக நண்பர்கள் வைக்கும் விமர்சனங்களைக் கூட ஒதுக்கி வைத்து விடலாம்.)
 
ஆனால், இந்த அரிய விலங்குகளின் அடிப்படை உரிமைகள் (Animal Rights) பற்றி அது எப்போதும் பேசியதில்லை. ஒரு தட்டையான பறவைப் பார்வையில், வெகுஜன மக்களின் சுவாரஸ்யத்திற்கு மேலும் தீனிபோடுவது போல அந்தச் செயல்பாடுகளை அவ்வளவு அற்புதமான வடிவத்தில் வார்த்துக் கொடுக்கும். அந்த ஆதிக்குடிமக்களின் நலன்கள் குறித்தோ, அந்த அவலங்களுக்கான காரணம் பற்றியோ, அவரைச் சுரண்டி பிழைக்கும் அரசியல் செயல்பாடுகள் பற்றியோ, அவருக்கான உரிமைகள் (Tribal Rights) பற்றியோ அது ஒருபோதும் பேசியதில்லை.
 
சமீபத்தில் அதில் ஒளிபரப்பாகும் ‘எதிர்கால ஆயுதங்கள்’ என்னும் நிகழ்ச்சியைப் பார்த்து அதிர்ந்து போனேன். எதிர்காலப் போர்களுக்கான முன்னோட்டமாக அந்த நிகழ்வு வெடித்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காட்சிப் படுத்தப்படும் தொழில்நுட்பத்தை நேரிடையாகப் பரிசோதித்தல், முழுக்க முழுக்க உயிர்க்கொல்லி ஆயுதங்களின் அணிவகுப்பு. அதுபற்றிய விரிவான செயல்முறை விளக்கங்கள், ஆயுதங்களை அறிமுகப்படுத்தும் நாயகனின் வசீகரமான சொற்பொழிவுகள், அந்த ‘அற்புதங்களை’ தயாரிக்கும் தொழில் நுட்ப வல்லுனர் பெருமக்களோடு தமிழில் வடிவமைக்கப்பட்ட உரையாடல்கள், மற்றும் உண்மையான போர்க்கள நிகழ்வுகள் ஆகியவற்றையும் நாம் காணச்செய்கிறது. சுவாரஸ்யமான காட்சித் தொகுப்புகள் அந்த ஆயுதங்களின் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பையும், கவர்ச்சியையும், பிரியத்தையும் கலந்து கட்டியடித்துக் கொண்டிருந்தது.
 
இந்த நிகழ்வின் தொகுப்பாளர், மேக் மேக்கோவிஸ் என்ற முன்னாள் அமெரிக்கக் கடற்படை Seal. (United States Navy Sea, Air, and Land Forces) அவரது தொகுப்புச் சொற்பொழிவைக் கேளுங்கள்:
 
“அடுத்த கட்டம் ஆரம்பமாகி விட்டது, மிக மிக அபாயகரமான உயிர்கொல்லி ஆயுதங்களின் குவியல் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது..”
 
“ஒளிவதற்கு இடமே இல்லை; ஆம், சுற்றிச் சுற்றிச் சுடக்கூடிய துப்பாக்கிகள் முதல் உலகின் உச்சபட்சமாக முன்னேறிய தொழில்நுட்பம் வாய்ந்த ஸுப்பர்ஸானிக் ஜெட் ஃபைட்டர் விமானம் வரை – இந்த ஆயுதங்கள் எதிரிகளுக்கு ஒளிந்து கொள்ள எந்த விதமான இடமும் அளிப்பதேயில்லை. அதைவிட அற்புதம், தாக்குதல் எங்கிருந்து வருகிறதென்றே தெரியாத நிலையில் எதிரியால் தன்னை எவ்விதமாகவும் காத்துக் கொள்ள இயலாது! நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணினால் – ஒரு பதுங்கு குழியிலோ அல்லது கவசத்தகட்டின் கீழோ அல்லது ஒரு சுவரின் பின்னாலோ பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால் – அது குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம். குறிப்பாக, நீங்கள் இந்தப் பிரம்மாண்டமான Panzer Howitzer தொலைதூர இலக்குத் துப்பாக்கிக்கு எதிராக வர நேரும் பட்சத்தில்.”
 
“நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா? ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில் மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்ட மிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில் நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்ற ஆயுதங்களின் அறிமுகம்; இதோ..(Discovery.com/Future Weapons)
 
 
இதுவெல்லாம் யாருக்கு? என்று ஒரு கணம் குழம்பிப் போனேன். 
 
‘எதிர்கால ஆயுதங்கள்’ எதிரிகளின் கற்பனைக்கப்பாற்பட்ட மறைவிடத்தையும், இலக்கையும் கனகச்சிதமாக அடித்துத் தூள் தூளாக்கும் திறன் கொண்டவை. போரில் எவராலும் வெல்லமுடியாதவை. என்ற அருமை பெருமைகள் வழிந்தோடிக் கொண்டிருந்தன.
 
இவர்கள் சொல்லும் “எதிரி” என்பவர் யார்? இந்த அருமை பெருமை கொண்ட ஆயுதத்தை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்னும்போது இவர்கள் சொல்லும் எதிரிகள் என்கிற படிமம், இந்த ஆயுதம் இல்லாதவன்தான் என்றாகிறது. அப்படியானால், ஆயுதச்சந்தை விரித்திருக்கிறது டிஸ்கவரி சேனல்.
 
பதட்டத்துடன் இது குறித்த விடயங்களை டிஸ்கவரி சேனலின் ‘எதிர்கால ஆயுதங்கள்’ இணையதளத்தில் தேட ஆரம்பித்தேன். அங்கு ஒரு பெரிய ஆயுதத் தளவாடங்களுக்கான சுரங்கமே எதிர்ப்பட்டது.
 
http://dsc.discovery.com/tv/future-weapons/weapons/zone2/ என்ற இணைய தளத்தில் ‘எதிர்கால ஆயுதங்கள்’ பற்றிய தகவல் தொழில்நுட்பத்தை, தங்களது விசேஷ மென்பொருளின் உதவி கொண்டு, வடிவமைத்த ஒளித்திரையில் அங்குலம் அங்குலமாகக் காட்டுகிறார்கள். எக்ஸ்ரே போன்ற ஊடுருவிக் கதிர்களின் பார்வையில் ஆயுதங்களின் உள்ளே உள்ள கணினித் தொழில் நுட்பத் தகவல்களையும், நேர்த்தியையும் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.
 
அதன் நீள அகலங்கள், உயரம், எடை போன்ற கன பரிமாணங்களும், நேர்கோட்டுத் தோற்றத்தில், பக்கவாட்டுத் தோற்றத்தில், அடிபுறத்தில், மேற்புறத்திலென… ஆயுதத்தின் பல்வேறு 
தோற்றப் பரிமாணங்களும் விளையாடுகின்றன.
 
ஆயுதத்தை இயக்குவது பற்றிய கற்பித்தல், பல்வேறு மறைந்து மறைந்து தோன்றும் (dissolve) காட்சிகளின் வழியே, நாம் பரிபூரணமாகக் கற்று முடித்து, ஒரு தேர்ந்த ஆயுததாரியாக மாறிக் கொண்டு விட்ட முழுத்திருப்தியை மனமெங்கும் பரவவிடுகிறது.
 
அந்த ஆயுதத்தின் வீர தீர சூர விளையாட்டை, செயல்முறை விளக்கங்களாக நாம் பார்க்கும் போது, நமக்கேற்ற வாகான இடத்தைத் தேர்ந்து கொள்ளும் வசதி(!) அதிலும் நிலப்பகுதியா, நீர்ப்பகுதியா, ஆகாயப்பகுதியா எதைத் தேர்கிறீர்களோ, அதில் அதன் செயல்பாடுகள் மிக ‘அட்டகாசமாக’ உங்கள் கண் முன்னே தோன்றும்.
 
இவை, கணினியின் ‘வீடியோ கேம்’ நிழல் யுத்தம் அல்ல; ரத்தமும் சதையுமாக நடக்கும் நிஜயுத்தத்திற்கான அச்சாரம். ‘யாருடையதோ போலாக’ இல்லாமல் அதில் உங்களது ஆன்மாவைப் பொருத்தும் உளவியல் சாகசத் தந்திரம்.
 
இணையத்தில் என்னவோ நடந்து விட்டுப் போகட்டும்; ஆனால், மிக எளிதில் வசப்படும் தொலைக்காட்சியில் நடப்பதுதான் ஆட்சேபத்துக்குரியது.
 
மேலும் அந்த விடயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வம் மீதூரப்பெற்றேன். அதுமட்டுமல்லாது, ஒவ்வொருவரின் சிறுபிராயத்திலிருந்தே துப்பாக்கி பற்றிய அபரிமிதமான ஆர்வங்கள் கட்டமைந்திருக்குமல்லவா? அதன் அதிகபட்சத் தொழில் நுட்பத்தகவல்கள் கண்முன்னால் காட்சியாகக் கிடைக்கிறதென்றால்.. ஒவ்வொரு வாரமும் அதற்காகவே காத்திருந்து பரபரப்புடன் டிஸ்கவரி சேனலில் இத்தொடரைப்பார்க்க ஆரம்பித்தேன்.
 
சாதாரண எளிய மக்களின் ஆர்வத்தையும், அதேபோல் போர்/மோதல் என்பது குறித்து மர்மமான மேலோட்டமான அறிவும், ஆர்வமும் கொண்டிருப்பவர்களை சட்டெனக் கவர்ந்திழுப்பதாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. அந்தத் தொழில் நுட்பத்தின் பயன்களையும், அனுகூலங்களையும் விவரித்து தற்போதுள்ள ஆயுதங்களுக்கும்/போர்த் தளவாடங்களுக்கும் எதிர்காலத்தில் இருக்கப் போகும் ஆயுதங்களுக்கும் உள்ள வேற்றுமைகளையும் விளக்கமாக எடுத்துக் காட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட ஆயுதம், எந்த அளவுக்கு அழிவுத்திறன் கொண்டது, எந்த அளவுக்கு சேதமுண்டாக்க வல்லது, அல்லது சேதமாதலை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டது, எந்த அளவுக்கு அது தாக்க வல்லது எந்த அளவுக்கு தாங்குதிறன் கொண்டது என்பதை செய்முறை விளக்கத்தின் உதவியோடு எடுத்துக்காட்ட சேதமடைந்து விட்ட இலக்குகள் தரப்படுகின்றன. வெறும் எண்ணிக்கைகளையும், புள்ளிவிவரக் கணக்குகளையும் தருவதற்கு பதிலாக, தொகுப்பாளரும் மற்ற ‘எதிர்கால ஆயுதங்கள்’ உருவாக்குனர்களும் நேரடியான செயல் விளக்கங்களை வழங்கி, அந்த ஆயுதங்கள் தொடர்பாய் இடம் பெறும் பௌதீகவியலை விளக்கமாக எடுத்துரைக்கிறார்கள்.
 
தொகுப்பாளரின் வசீகரமான பேச்சு மேலும் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
 
“நவீனகால போர்த்திறம் என்பது உங்களுடைய இலக்கின் மேல் ஒருவருமறியாமல் ஊர்ந்து மேலேறுவது. யாராலும் வெல்லமுடியாதவராக இருக்க நீங்கள் யாராலும் காணவியலாதவராக இருக்க வேண்டும். Predator என்னும் இந்த அமைதியான வான்மார்க்கமாக வரும் கொலையாளி உலகளாவிய தனியிடத்தைத் தனதாக்கித் தரும்.
 
ஏறத்தாழ இரண்டு மைல்களுக்கு அப்பாலிருந்து – ஸ்னைப்பரைத் தோற்கடிக்கும் திறன் வாய்ந்த Barrett M107 ஐக் கையாளும்போது நடப்பதைப் பாருங்கள்..
 
உச்சபட்சத் தாக்கம் பிரமிப்பில் மூச்சடைக்க வைக்கும் வான வேடிக்கையில் இந்த வகை எதிர்கால ஆயுதங்கள் இன்னமும் வடிவமைக்கப்படாத, அளப்பரிய சக்தி வாய்ந்த மரபார்த்த ஆயுதங்களை வெளிப் படுத்துகின்றன. ஒரு நிமிடத்தில் 10,000 சுற்றுகளைக் கட்டவிழ்த்து விடக் கூடிய அளவில் அமைந்துள்ள Metal Storm இதுவரை உருவாக்கப்பட்ட தானியங்கித் துப்பாக்கிகளெல்லாவற்றையும் விட மிக அதிகமான அழிவுத்திறன் கொண்டது.
 
Multiple Rocket Launch System  எனப்படுவது தனது இலக்கை நோக்கிச் சரமாரியாகப் பல ஏவுகணைகளை ஒரேசமயத்தில் அத்தனை உக்கிரத்தோடும், வேகத்தோடும் அனுப்பி வைத்து முழு முற்றான அழிவுக்கு உத்திரவாதமளிக்கும். முன்பு ஒரு ராணுவம் நின்று கொண்டிருந்த இடத்தில் இப்பொழுது சாம்பல் குவியல் மட்டுமே எஞ்சியிருக்கும்.
 
ஒரு முன்னாள் கடற்படைத் தலைவர் என்ற அளவில், மேக் மேக்கோவிஸ் -க்கு களவாணித் தனமான தொழில்நுட்பத்தின் இருண்ட, ரகசிய உலகைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரியும். இனி வரக்கூடிய போர்களில் ராணுவப் படைப்பிரிவுகள் பயன்படுத்தவுள்ள ஆயுதங்களை வெளிப்படுத்துகிறார். முன்னெப்போதும் இல்லாத அளவு அழிவுத்திறன் வாய்ந்த இந்த ஆயுதங்கள் கண்ணிமைப்போதில் முழுமொத்த நகரங்களையும் அழித்து விடக் கூடியவை. EMP bomb  எனப்படும் புதுவகை உயிர்க் கொல்லி அணுகுண்டு கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அதிர்வுகளால் (electromagnetic pulse) (ஒரு நகரைச் செயலிழக்கச் செய்து மனித நாகரீகத்தை மீண்டும் இருண்ட காலங்களுக்குள் தள்ளிவிடும். வந்தாயிற்று எதிர்காலம்!”  (Discovery.com/Future Weapons) 
 
அவரது விரிவான சொற்பொழிவினூடே, எதிர்கால ஆயுதங்களின் தாக்குதல் காட்சிகள் பிரமிப்பாகவும், பிரமாதமாகவும் திரைமுழுக்க ஓடிப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகிறது.
எதிர்காலம் இவ்வளவு கொடூரமானதா? டிஸ்கவரியைப் பார்க்கும் பார்வையாளர்களில் 99% பேர் சிறுபருவத்தினர்.
 
குழந்தைகளைப் போராளிகளாக மாற்றுவதற்கு – போரில் ஈடுபடுத்துவதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி போன்றவர்கள் இது குறித்து தங்களது கருத்தைச் சொல்ல வேண்டும்.
 
அரசு அல்லாத தனிநபர்கள், எந்த வகையான ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிப்பது, அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் எப்படி, எந்தச்சூழலில் அவை பயன் படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த பல்வேறு விவாதங்கள் சர்வதேச நீதிமன்றங்களிலும், குற்றவியல் சட்டமுறை ஆய்வுகளிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
 
துப்பாக்கிகள் போன்ற மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்கள் குறித்தும், அதன் நெறிமுறைகள், நடைமுறைச் சட்டங்கள் குறித்தும் இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகள் கொட்டிக்கிடக்கின்றன. துப்பாக்கி வைத்திருப்பவருக்கும் துப்பாக்கி இல்லாமல் இருப்பவருக்கும் இடையேயான வாழ்வியல்கூறுகளை சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வறிஞர்கள் அலசி ஆராய்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த,  Martin killias, J.Vankestern, M.Rindlisbacher ஆகிய மூன்று ஆய்வாளர்களும் 21 நாடுகளில் பயணம் மேற்கொண்டு, தரவுகள் சேகரித்து ஒரு நீண்ட ஆய்வை வெளியிட்டிருக்கிறார்கள். (Guns, violent, crime and suicide in 21 countries, Canadian journal of criminology,october 2001.)  துப்பாக்கி சம்பந்தப்பட்ட வன்முறைகள், கொலைகள், தற்கொலைகள் ஆகியவற்றுக்கான மூலகாரணங்கள் துப்பாக்கி வைத்திருப்போரிடமிருந்தே தோன்றுகின்றன என்று வன்மையாகக் கண்டிக்கிறது இந்த ஆய்வு.
 
இறையாண்மை என்பதன் வழியாக ஒவ்வொரு நாடும் தமது நிலப்பரப்பைப் பாதுக்காத்துக் கொள்ளவும், தமது ஆட்சி அதிகாரங்களில் தலையீடு செய்து அதற்குக் குந்தகம் விளைவிக்கும் உள்அரசியல், உள்எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகள், மற்றும் புரட்சிகரச் செயல்பாடுகளிலிருந்து தங்களது ஆட்சி அதிகாரங்களைப் பாதுகாத்துக் கொள்ள, அடிப்படைஉரிமைகளாக இந்த ஆயுதங்களைப் பிரயோகிக்கின்றன. ஆனாலும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் கொண்ட சந்தர்ப்பங்களில் இந்த அடிப்படை உரிமைகளை, அதிகாரத்தை இழக்க வேண்டிய சூழலும் பல நாடுகளுக்கு நேருகிறது. சர்வதேச ஆயுதக்கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை மீறும் நாடுகள் மீதும், போரில் தோற்றுப்போகும் நாடுகள் மீதும், இன்னும் பல்வேறு ஆயுத சட்ட உரிமைகளை முன்வைத்து சர்வதேச ஆயுதத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், அந்தத் தடைகளும் தண்டனைகளும் செல்லாது என்றும், தங்களது இறையாண்மைக்கு உட்பட்டே தாங்கள் செயல்படுவதாகவும் தடைபெற்ற நாடுகள் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் தெரிவிக்கின்றன. 
 
துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பது சிவில் உரிமையெனக் கருதும் சிவில் உரிமை இயக்கங்கள் அமெரிக்காவில் நிறைய இருக்கின்றன. ஆனால், NAACP(National Association for the advancement of colored people) என்னும் இயக்கம், கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை ஆதரிக்கிறது. மேலும் அந்த அமைப்பு 2003 ல் துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்தது. 
 
‘இந்த நிறுவனங்கள் பொறுப்பற்ற வகையில் கைத்துப்பாக்கிகளை விற்பனைக்கு விடுவதன் மூலம், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கின்றன என்றும், கறுப்பினமக்கள் வசிக்குமிடங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலான நோக்கங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது என்பது வழக்கு. அதுமட்டுமல்லாது, சனிக்கிழமைகளில் ‘சிறப்புத்துப்பாக்கி’ என்கிற பெயரில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடனும், சலுகைகளுடனும் இன்றியமையாத ஒரு நுகர்வுப்பொருள்போல விற்பனை செய்யப்படும் நோக்கம் மிகவும் கொடூரமானதும், அவலமானதும்’ என்றார் NAACPயின் அப்போதைய தலைவர் Kweisi mfume. . 
 
இந்த ஆயுதத் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கறுப்பின மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களாகத் தேர்ந்தெடுத்து விற்பனை செய்வதன் மூலம் அடித்தட்டு மக்களின் உள்ளத்தில் ஸ்லீப்பர் செல் போன்ற ஒரு படிமத்தை உருவாக்குகிறார்கள். ஸ்லீப்பர்செல் என்னும் படிமம், இந்த அரசும் அதிகாரமும் உருவாக்கி வைத்திருக்கும் சமூகத்தால் ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டிருப்பவனாக இருப்பான். அவனது உளவியல் மனோபாவத்தில் ஆவேசமும் கோபமும், சமூகத்தின் மீதும் அரசின் மீதும் கனன்று கொண்டிருக்கும். அதை ஊதிஊதிப் பெரிதாக்கி அவனைத் தங்களது வாடிக்கையாளராக மாற்றும் வியாபார நுணுக்கத்தை அழுத்தமாகச் செய்கிறார்கள் இந்த ஆயுத வியாபாரிகள். 
 
இத்தகைய சூழலை “விருப்பப்படி ஆயுதம் வாங்கவும் அதைப்பிரயோகிக்கவும் மக்களை அனுமதித்த வகையில் வன்முறையும் வெறுப்பும் மலிந்துபோய்விட்ட ஒரு சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோம்…” என்று விமர்சித்தார் கறுப்பினத்தலைவர் மார்ட்டின் லூதர்கிங்.
 
ஆனால் புத்தமதத் தலைவர் தலாய்லாமா, “கையிலொருவன் துப்பாக்கியுடன் உன்னைக் கொல்ல வரும்போது உன் துப்பாக்கியால் நீ திருப்பிச் சுடுவதே சரியானது..” என்று சொல்கிறார். (2001மே மாதத்தில் மூன்று நாள் பயணமாக போர்ட்லேண்டுக்கு வந்திருந்த போது உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் மாணவியொருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். துப்பாக்கியை உங்களை நோக்கி உயர்த்தும்போது அதிலிருந்து தப்புவிக்க நீங்கள் சுடலாம். ஆனால் கை கால் போன்ற உயிருக்கு ஆபத்தில்லாத வேறு சில உடல் பகுதிகளில் காயத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொன்னதை பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை. http://www.snopes.com/politics/guns/dalailama.asp)
 
‘எதிர்கால ஆயுதங்கள்’ நிகழ்ச்சித் தொகுப்பாளரான மேக்மேக்கோவிஸ், ‘புத்தமதம் சார்ந்த ‘ஜென்’ தத்துவபுருஷராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்’ கூற்றை இதன் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.
 
இந்த நிகழ்வு பார்வையாளர்களான சாதாரண மக்களுக்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. நாடுகளைக் கட்டி ஆள்கின்ற அதிபர்களுக்கும், போர்த் தளபதிகளுக்கும், போர் ஆலோசகர்களுக்குமல்லவா இந்த நிகழ்ச்சியைப் போட்டுக் காட்ட வேண்டும்? போராயுதங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இதை வெளியிடுவதாக நிகழ்ச்சியாளர்கள் இதை நியாயப் படுத்தலாம். ஆனால், போராயுதங்கள் பற்றிய விழிப்புணர்வுக்குப் பதிலாக எதிர்காலம் பற்றிய அச்சமும், பதட்டமும் ஒவ்வொருவரின் நாடிநரம்புகளிலும் ஏற்றுவதைத்தான் இந்த நிகழ்ச்சி செய்கிறது.
 
இது விஞ்ஞானக் கற்பனைத் திரைப்படமல்ல; வெறுமனே பார்த்துவிட்டு மறந்து போவதற்கு. நிஜமான ஆயுதங்கள், ரத்தமும் சதையுமாக நம்முன் நீட்டப்படும் ஆவணங்கள். உண்மைத்தன்மையின் அவதானிப்போடு இது பார்வையாளர்களின் அடிமனசில் இறுக்கமாய்ப் படிந்து போய் விடுகிறது.
 
மேலும், அந்தத் தொழில்நுட்பம் தினசரி வாழ்க்கையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் சூழ்நிலைமைகளுக்கும் பொருத்தப்பாடுடையதாக இருக்கும் விதத்தையும் விளக்கமாக எடுத்துக் காட்டி அதன் மூலம் பார்வையாளர்கள் அந்த ஆயுதங்களையும், மற்ற உபகரணங்களையும் நடப்புப் பயன்பாட்டில் பொருத்திப் பார்க்க வழிவகுத்துத் தருகிறார்கள். தனியார் மற்றும் அரசால் நடத்தி வரப்படும் ஆய்வுக் கூடங்கள் குறித்த பிரத்யேக நுழைவுரிமையைப் பெற்று உள்ளே நுழைந்து விட்டதைப் போன்ற உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது. அமெரிக்காவின் வருங்கால ஆயுதத் தொழில் நுட்பத்தை உருவாக்குபவர்களின் பெயர்களைக் கூட பார்வையாளர்களால் அறிந்துகொள்ள முடிகிறது.
 
இதில் ஒரு ஆயுதத்தை வடிவமைப்புச் செய்த ஒரு பெண்மணி தன்னைப்பற்றிக்கூறும் போது, ‘தான் ஒரு வியட்நாமிய அகதி என்றும், போரின் பல்வேறு கொடூரங்களையும் அனுபவித்துத்தான் அதிலிருந்து மீண்டு வந்ததாகவும்’ தெரிவிக்கிறார். அதன்பிறகு தனது வாழ்நாள் லட்சியமாக இந்த ஆயுதத்தை வடிவமைப்புச் செய்ததாகவும், இப்போதுதான் தனது வாழ்வு ஒரு முழுமை அடைந்துள்ளதாகவும் பெருமை பொங்கக் கூறுகிறார்.
 
போரின் நினைவுகளிலிருந்து மீள்கிறவர்கள் அமைதியை நோக்கியும் சமாதானத்தை நோக்கியும் போவதாகத்தான் உலகக் கலைஇலக்கியங்களும், வாழ்நிலை ஆவணங்களும் தெரிவிக்கின்றன. ஆனால், அவரது கூற்று இதற்கு நேர்மாறாக இருக்கிறது. போர்த் தளவாடங்களின் சக்கரங்களின் அடியிலிருந்து மீண்டவரின் குரலாய் அது இல்லாமல் ஆயுத விற்பனைப் பிரதிநிதியின் சாகசக்குரலாய் ஒலிக்கிறது.
 
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் மாட்டி உயிர்பிழைத்த திரு யாமகுச்சி, அணுவியலின் ஆபத்தான அரசியலின் தீவிர எதிர்ப்பாளராக தான் இறந்து போகும் வரை செயல்பட்டார் என்பதை உலகம் அறியும்.தனது நேர்காணல் ஒன்றில்,  “…ஆனால் உலகம் பாடம் கற்கவில்லை என்றே தோன்றுகிறது. 1945இலிருந்து இருபது நிமிடத்திற்கு ஒரு முறை ஹிரோஷிமா மீது தொடர்ந்து குண்டுகள் வீசிக்கொண்டே இருந்திருந்தால், எவ்வளவு குண்டுகள் வீசப்பட்டிருக்குமோ அவ்வளவு குண்டுகள் இன்று உலகெங்கும் உள்ளது என்றால் அதன் அர்த்தம் என்ன? அணு உலைகள், கதிர்வீச்சு விவசாயம் என இவர்கள் மனித பேரழிவு அறிவியலோடு அரசுகளின் முழு ஆதரவோடு இயங்குகிறார்கள். அமைதிக்கான அறிவியலை நாம் முன் வைக்க வேண்டும். இருமுறை அணுகுண்டு வீச்சை சந்தித்து அதன் சாட்சியாக எஞ்சியுள்ளவன் நான். மூன்றாவது என ஒன்று இருக்கவே கூடாது என்பதே எனது வேண்டுகோள்….”  என்கிறார்.
 
இன்றைக்கு உலகம் முழுக்க சிறுசிறு குழுக்களாக தார்மிக அற அடிப்படையில் போராடும் மனித உரிமைக்குழுக்களை, உளவியல் ரீதியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் தந்திரம் தான் இது. பெரிய பெரிய நாடுகள் மட்டுமே போர் செய்து வரும் சூழல் ஆயுத விற்பனையை மந்தமாக்குகிறது. போதாதற்கு ஐ.நா. மன்றம், அம்னஸ்டி சர்வதேச மன்னிப்பு சபை, போருக்கு எதிரான மனித உரிமைச் சாசனங்கள், நூரம்பர்க் விசாரணைகள், ஜெனிவா மாநாட்டு வரைவுச் சட்டங்கள், சர்வதேசக்குற்றவியல் நீதிமன்றங்கள், லொட்டு லொசுக்கு என்று ஏராளமான முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை. ஆயுதச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில் மூன்றாம் உலக நாடுகளின் சிறுசிறு குழுக்களைக் குறி வைக்க வேண்டும்.
 
இந்த நிகழ்ச்சியில் திட்டமிட்டு ‘வியட்நாமிய அகதி’ என்கிற படிமத்தை உள்மடிப்புகளாக சொருகப் பட்டிருப்பதை உணரலாம். இதன் நுண்ணரசியலை நுட்பமாக அவதானிக்க வேண்டும்: அமெரிக்க எதிர்ப்பு என்பது உலகளவிலான எதிர்ப்படிமம். ஆக, பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வெடித்தெழுந்த ஆற்றல்தான் இந்த ஆயுதம் என்கிற உருவகத்தைக் கனகச்சிதமாக ஏற்றுகிறார்கள்.
 
அது மட்டுமல்லாது, ‘ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் பயங்கரவாதிகள் மறைந்துள்ள இலக்குகளை எப்படித் தாக்கி அழிப்பது’ என்று செயல்முறை விளக்கம் தருகிறார்கள். முழுக்க முழுக்க இஸ்லாமியர்களையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் அந்த நுட்பத்தில், வெறுமனே ஆயுத விற்பனையை மட்டுமே நோக்கமாகக் கருதாமல் பதுங்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியத்தின் குரூர முகம் தலை நீட்டுகிறது.
 
இப்படிப் பல்வேறு பின்புலங்களில் இந்த நிகழ்வை கணிக்க வேண்டியிருக்கிறது. MOAB என்கிற ஆயுதத்தை அறிமுகப் படுத்தும் லட்சணத்தைப் பாருங்கள்: “அணுகுண்டுகளின் தாய் என்று கருதப்படும் MOAB, உலகிலேயே மிகப்பெரிய 18,000 கிலோ எடைகொண்டது. இதை நாம் வைத்திருந்தாலே எதிரிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். ஈராக் யுத்தத்தில் இதைப் பயன் படுத்துவதற்கு முன், சோதனை செய்து பார்த்தபோதே அந்த மாபெரும் சோதனை வெடிப்பின் அச்சுறுத்தலில் ஈராக் பின்னடைந்தது. சதாம் உசேன் வீழ்ச்சியடைந்தார்…” என்று பேசுவது தொகுப்பாளரின் குரல் அல்ல; காலம்காலமாய் மிரட்டியே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்தான் அது.
 
இந்தத் தொடர் நிகழ்ச்சியின் எல்லா அத்தியாயங்களையும் ஒருங்கு சேரப் பார்க்கும் போது இன்னும் பல்வேறு விடயங்கள் தென்படலாம்.
 
முதல் நிகழ்வு 1.No Place To Hide 2.Stealth 3.Maximum Impact 4.Future Shock 5.Smart Weapons 6.The Power Of Fear என 6 அத்தியாயங்களாகவும், இரண்டாம் நிகழ்வு 1. Search and Destroy 2. The Protectors 3. No Escape 4. Mission Invisible 5. Front Line 6. First Strike 7. Predators 8. Top Guns 9. Smart Destroyers 10. Close Quarter Combat 11. Immediate Action 12. Future Combat 13. Massive Attack என 13 அத்தியாயங்களாக வெளிவந்திருக்கின்றன.
 
வழக்கமான தகவல் அறிவிப்பு அல்லது ஆவணப்பட பாணியில் அமையாமல் கண்முன்னே விரியும் வாழ்நிலையை அப்படியே தருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும், அது பேச எடுத்துக் கொண்டுள்ள எதிர்கால ஆயுதத் தொழில் நுட்பத்தின் பல்திறனாற்றல் குறித்த பரபரப்பான கவனமும், அவதானிப்புமே முக்கியக் காரணமாகும். முடிந்த போதெல்லாம் போர்க்களத்தைக் காட்டுவதன் மூலம் அரிதான தரிசனத்தை முன்வைக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் போர்குறித்த புதிர் மிகுந்த கேள்விகளுக்கு பதிலைத் தருவதாகவும், அவர்களது ஆயுதத் தேடலுக்கு விடை தருவதாகவும் அமைகிறது. மனித வாழ்வின் பொருள் பொதிந்த நிகழ்வுகளில், எது விலை மதிப்பற்றதாக, மிகவும் மதிப்பார்ந்ததாக மாறுகிறது என்பதை தொகுப்பாளர் மிக விரிவாக விளக்குகிறார்.
 
இது ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்படும் தொடர் நிகழ்ச்சி. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு வகையான ஆயுத உபகரணங்களைப் பற்றி பல்வேறு பரிமாணங்களில் விரிவாக எடுத்துக் காட்டுகிறது. நிகழ்ச்சியின் பகுதிகள் கச்சிதமாக தற்காப்பு மற்றும் தாக்குதல் சார்ந்த தொழில் நுட்பங்களுக்குப் பிரத்யேகமான கவனம் தருகின்றன. அந்த ஆயுதங்களின் தன்மை குறித்து விவரிக்கும் போது, ஒரு தேர்ந்த கவிஞனின் கவித்துவச் சொற்களோடு விரிகின்றன காட்சிகள். உணர்ச்சியும், உள்ளுணர்வும் ததும்பும் மொழியைப் பயன்படுத்தி, பார்வையாளர்களின் மனங்கொள்ளுமாறு விவரிக்கிறது.
 
“நெருப்புப் பிழம்பு, அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றின் கலவையில் அமைந்த Thermobaric எனப்படும் உயிர்க்கொல்லி ஆயுதம், குகைகளின் பேராழத்தைத் துளைத்து எலும்பை நொறுக்கி விடும்படியான நெருப்புப் புயலில் அங்கிருக்கும் சகலமும் அழிந்துபோக, எரிந்து கரிந்த நிலப்பரப்பு மட்டுமே எஞ்சுகின்ற காட்சி..”
 
“அற்புதம்!”
 
“பிரமாதம்”
 
“அபாரம்”
 
“இரையைக் கவ்வும் ஒரு வேட்டை மிருகத்தின் கச்சிதமான பாய்ச்சல்”
 
“இந்தநூற்றாண்டின் ஈடிணையற்ற தோழன்”
 
இதுபோன்ற வசீகரமான மொழியின் சாகசத்துடன் ‘எதிர்கால ஆயுதங்கள்’ கண் சிமிட்டுகின்றன.
 
போரற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும்; எதிர்காலத் தலைமுறையை ஆயுதமற்ற ஒரு அமைதி இனமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உலகமக்களின் இலட்சியக் கனவுகளை இது சுக்கு நூறாக உடைத்தெறிகிறது.
 
இந்த நிகழ்வை உலகளவிலான ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன என்று இணையத்தில் ஒருபார்வை பார்த்தேன். பெரும்பான்மையான பத்திரிகைகள் இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரை சூப்பர் மேனாக சித்தரித்திருக்கின்றன. மேலும் ஒருசில பத்திரிகைகள் ‘ஜென்’ என்னும் நவீன வாழ்வியல் தரிசனம் கொண்ட தத்துவப்படிமத்தின் அளவிற்கு அவரைத் தரமுயர்த்துகின்றன.
 
“தன்னை மேக் (மேக்கொவிஸ்) என்று, அதாவது ஜென் என்பதாய் அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த மனிதனிடம் ஒரு தீவிரத்தன்மை தெரிகிறது. மேக் ஒரு வழக்கமான ஜென் துறவி என்ற பொதுவான பிம்பத்தோடு பொருந்திப் போவதில்லை. ஆனால், அப்படி ஜென் குறித்த ஒரு பொது பிம்பமே தவறு என்கிறார் மேக். தனது மாணவர்களை பகற் கனவுகளிலிருந்து அடித்து விரட்ட வேண்டி கையில் எப்பொழுதும் ஒரு கைத்தடியை வைத்துக் கொண்டிருந்த ஜென் மதத்தின் மிகச் சிறந்த துறவிகளில் ஒருவரான ரின்ஸாய் கதையை அவர் எடுத்துரைக்கிறார்.” என்று போலிஸ் பத்திரிக்கை எழுதுகிறது.
 
Man Institute என்ற ஒரு நிறுவனம், இது குறித்து மேற்கொண்ட விரிவான ஆய்வு: “மனிதர்கள் என்ற அளவில், எதையாவது அடித்து நொறுக்கி அழித்தொழிக்கவேண்டும் என்ற தேவையை நாம் பல நேரங்களில் உணர வேண்டி வருகிறது. பொருட்களை அடித்து நொறுக்குதல், வெடித்துச் சிதறடித்தல், பொருட்களுக்குத் தீயிட்டுக் கொளுத்துதல் போன்ற செயல்பாடுகளெல்லாம் பேராண்மை மிக்க ஆண்கள் காலங்காலமாக, தங்களுடைய வாழ்நாள் முழுக்கச் செய்து வந்தவையே. எறும்புகளை ஒரு பூதக்கண்ணாடியைக் கொண்டு சுட்டுப் பொசுக்குவது, விளையாட்டு பொம்மைக் கார்களையும், சுத்தியலையும் வைத்துக் கொண்டு ‘கார் விபத்து’ விளையாட்டை ஆர்வமாக விளையாடுவது, கட்டிடத்தை இடித்துத் தகர்க்கும் தொழிலில், அல்லது வான்மார்க்கத் தொழில் நுட்பத்தில் ஈடுபடுவது எல்லாவற்றிலுமே எல்லா மனிதர்களும் இனிமையான அழிவாக்கக் கிளர்ச்சிகளைக் கொண்டவர்களாகத்தான் விளங்குகிறார்கள்.
 
இப்படி நான் சொல்வதை நீங்கள் தவறாகப் பொருள் கொண்டு நாமெல்லோருமே கொலையாளிகள், நாசவேலைக்காரர்கள் அல்லது அப்படிப்பட்ட பண்புநலன் கொண்டவர்கள் என்று எண்ண முற்பட வேண்டாம். ஏனெனில், நாம் அப்படிப் பட்டவர்கள் இல்லை. நாம் மனிதர்கள் தான். மனிதர்களாக நாம் நம்மைச் சுற்றி இருப்பவைகளை அடித்து நொறுக்குவது குறித்து எப்பொழுதும் எண்ணியவாறிருக்கிறோம்.
 
இன்னமும் பரிசோதனைக் கட்டத்திலிருக்கும் இனிமையான புதிய ஆயுதங்களை/ போர்த்தளவாடங்களைக் கொண்டு இலக்குகளாக சிலவற்றைச் சுட்டுக் காட்டி அவற்றின் செயலாற்றலை வெளிப்படுத்தும் மேக் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?
 
மேக் – ஐப் பற்றிப் படிப்பதே உங்களுடைய பாலின்ப உயிர்ச்சாறைப் பீறிடச் செய்யும் என நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் மேக் அளவு அத்தனை ஆண்மை ததும்பியவராக இருந்தால் உலகம் எத்தனையோ மேலானதாக இருக்கும். ரிச்சர்ட் மாக்கோவிஸ் போன்ற அதி ஆண்கள் (Supermen) வாழ்க்கையின்/உலகிற்குத் தேவைப்படும் சமச்சீர்நிலையை எந்தவிதத்திலேனும் வழங்க மிகவும் இன்றியமையாதவர்களாயிருக்கிறார்கள். வாழ்த்துகள் மேக்.” (டிம்: Man Institute.com)
 
“டிஸ்கவரி சானலின் ‘எதிர்கால ஆயுதங்கள்’ எதிர்காலத்தின் தொழில் நுட்பத்தை எடுத்துக் காட்டுகிறது” என்று விரிவான ஒரு கட்டுரையை Associatedcontent.com இணைய இதழில் தாரா எம். க்ளாப்பர் என்பவர் எழுதுகிறார்.
 
வேறு ஊடகங்களும் இது குறித்து ஏதும் எதிர்க்குரல் எழுப்பியதா என்று தெரியவில்லை. நான் தேடிய அளவில் எதுவும் என் கண்களுக்குத் தென்படல்லை.
 
உலகளாவிய முற்போக்குச் சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்களும், போர் எதிர்ப்பாளர்களும், அமைதிப் போராளிகளும், மனித உரிமை பேசுபவர்களும், கலை இலக்கியவாதிகளும் இந்த ‘எதிர்கால ஆயுதங்கள்’ நிகழ்ச்சியில் உள் மடிப்புகளாக சொருகி வைக்கப்பட்டிருக்கும் நுண்ணரசியல் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்? ஒருவேளை என் போன்ற சாதாரண கிராமத்துக் காட்டுப்யலுக்குத்தான் இந்த நிகழ்ச்சியில் உள்ள ‘அற்புதங்கள்’ புரிபடாமல் போய்விட்டனவோ?
 

***

(2014 ஆகஸ்ட்)

2012 ஆம் வருடத்தில் உலகப் புகழ்பெற்ற சர்வதேச தொலைக்காட்சி மீடியாவான டிஸ்கவரி சேனல் மிக மிக நுட்பமான போர் வெறியைத் தூண்டும் நுண்ணரசியலுடன் (மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ ஒரு போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முற்போக்கு பார்வை என்ற விதத்தில்) ஒரு நிகழ்ச்சியை ஒளி பரப்பிக்கொண்டிருந்தது.

சர்வதேச அளவில் நடக்கும் ஆயுத வியாபாரங்களுக்குத் துணை போகின்ற Future Weapons என்னும் அந்த நிகழ்ச்சியில் நுட்பமாக மறைந்திருக்கும் ஆயுத வியாபாரத்தையும், ஏகாதிபத்திய அரசுகளின் வியாபார போர்த்தந்திரங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தி ‘ஆயுத வியாபாரத்தின் அரசியல்’ என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதை ஆங்கிலத்தில் புகழ்பெற்ற Truth out என்னும் இதழ் வெளியிட்டது. அதன்பிறகு இந்தக் கட்டுரை 100 க்கும் மேற்பட்ட சர்வதேச ஆங்கில இணைய இதழ்களில் Share செய்யப்பட்டு உலகம் முழுக்க வைரலாகப் பரவியது. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் பெற்று வெளிவந்தது. தமிழிலும் 50 க்கும் மேற்பட்ட இணைய இதழ்களில் வெளிவந்தது.

சம்பந்தப்பட்ட டிஸ்கவரி சேனல் இது சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட இணைய இணைப்புகளை dissable  செய்து வைக்குமளவிற்கு புகழ் அடைந்தது கட்டுரை. அந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட, யுனைடெட் ஸ்டேட் நேவியில் Zeal ஆகப் பணி புரிந்த மேக் மெக்கோவிஸ், என் முகநூலுக்கு நட்பழைப்பு அனுப்பினார். (சமீபத்தில் இறந்துவிட்டார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக) இப்படி, உலகளாவிய முற்போக்குச் சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்கள், போர் எதிர்ப்பாளர்கள், அமைதிப் போராளிகள், மனித உரிமையாளர்கள், கலை இலக்கியவாதிகள் என உலகம் முழுக்க கொண்டாடினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, 6 வருடங்கள் கழித்து, 2020 பிப்ரவரியில் ChristenUnie – Bunschoten என்கிற நெதர்லாந்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் Henk Lok என்னும் அரசியல் பிரமுகர் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, எனக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

****

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page