- கௌதம சித்தார்த்தன்
கடந்த காலங்களில், தமிழ்ச் சூழலில் சக எழுத்தாளர்களினாலும், குழுவாத ஊடகங்களினாலும் எனக்கு ஏற்பட்ட கசப்பான உணர்வுகளால், மனம் குமைந்து ஒதுங்கி இருந்தவன், மெதுவாக ஆங்கில இலக்கிய தளத்தில் ஆர்வம் ஏற்பட்டு, சர்வதேச மொழிகளை நோக்கி நகர்ந்தேன். மெல்ல மெல்ல சர்வதேச தளத்தின் பல்வேறு மொழிகளில் என் படைப்புகள் மொழியாக்கம் ஆகி வெளிவரலாயின. இதற்குப் பெரிதும் துணை புரிந்தவர் என் மொழிபெயர்ப்பாளர் மஹாரதி. இவருக்கு முதல் வணக்கம். இவர்தான் என் வாழ்வியலை ஆங்கில மொழியை நோக்கி நகர்த்தியவர். எனக்குள் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியவர்.
என் வாழ்வு முழுவதும், மொழிபெயர்ப்புக்களைத் தேடித்தேடிப் படித்ததும், தமிழ் வெளியெங்கும் அலைந்து சேகரித்து, கிடைத்ததற்கரிய செல்வமாய்ப் பேணிக் காத்ததும் என் வாழ்வியல் இன்பங்கள்! என் பதின் பருவத்தில் துவங்கிய இந்தத்தேடல் என்பது, கடந்த 40 வருடங்களில் உன்னதம் இதழ் நடத்திய அனுபவங்களில் முதன்மையானது. இணைய வளர்ச்சி சற்றும் இல்லாத அன்றைய காலகட்டத்தில், இதழுக்கான மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தேர்வு செய்து, மொழிபெயர்ப்பாளர்களிடம் தந்து, அவைகளை வாங்கி, ஒப்பு நோக்கி உன்னதம் இதழில் வெளியிட்ட அனுபவம் முதன்மையானது.
2018 ஆம் ஆண்டிலிருந்து என் படைப்புகள் வேறு மொழிகளில் வெளிவர, என் செயல்பாடுகள் தீவிரம் பெற்றன. Alephi என்ற பெயரில் ஆங்கிலமொழியில் ஒரு இலக்கிய இணைய இதழ் ஆரம்பித்து நடத்தினேன். ஒரு இதழை அச்சுப் பிரதியாகவும் வெளியிட்டேன். அது பெருமளவில் சர்வதேச நண்பர்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த மூளை உழைப்பு சார்ந்த கடுமையான வேலைப்பளுவினால், என்னால் என் சொந்தப் படைப்புகளை எழுதமுடியாமல் போனது. அதை நிறுத்திவிட்டு, தமிழி என்கிற பெயரில் இணைய இதழ் ஆரம்பித்து, சர்வதேச படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட ஆரம்பித்தேன்.
இது எனக்குள் ஒரு மொழிப் பயிற்சி போல அமைந்தது. சர்வதேச நண்பர்களுக்கு இதழையும் படைப்புகளையும் அறிமுகப்படுத்தினேன். இந்த முயற்சியை பெருமளவில் வரவேற்றுக் கொண்டாடினார்கள்.
அந்தக் கட்டத்தில் நான் மொழிபெயர்த்திருந்த, தெட் ஹ்யூஸின் “தொலைபேசியை எடுக்க வேண்டாம்” கவிதையைக் கண்ணுற்ற என் பிரெஞ்சு நண்பர், “தெட் ஹ்யூஸின் கவிதையை பொறுத்தவரை இது சாதாரணமான கவிதைதான் என்றும், இது, உலகளவில் பரபரப்பு ஏற்படுத்திய கவிதையாக இருந்தாலும், நவீனத்துவம் சார்ந்த ஒரு இலக்கிய அழகியலோ, புத்தம் புதிய பார்வையோ அற்றது’ என்றார். மேலும், “தெட் ஹ்யூஸின் கவித்துவ ஆளுமையை நீங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமெனில், பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமெனில், அவரது உலகப் புகழ் பெற்ற கவிதையான “Hawk Roosting” ஐ தான் மொழியாக்கம் செய்ய வேண்டும்..” என்று கோரிக்கை வைத்தார்.
“அது ஒரு அற்புதமான சொலிப்சிஸக் கவிதை…” என்று சிலாகித்துப் பேசினார். ஆனால், அதற்குப்பின் அவரது உரையாடலை நான் உள்வாங்கத் தயாராயில்லை. எனக்குள் “சொலிப்சிஸம்” என்கிற வார்த்தை பெரும் அலையாய் எனக்குள் சுழன்று சுழன்று அடிக்க ஆரம்பித்தது.
“சொலிப்சிஸம்..?”
அதன்பிறகு அவர் சொன்ன எதுவும் மனதில் நிற்கவில்லை. அந்த வார்த்தையைத் தேடி அலைய ஆரம்பித்தேன்.
இந்த இடத்தில் பொருத்தப்பாடு கருதி ஒருசில விஷயங்களைச் சொல்லவேண்டும் :
1980 களில் லத்தீன் அமெரிக்க BOOM அலை உலகமெங்கும் வெடித்தது. சர்வதேசம் முழுக்க செயல்பாட்டிலிருந்த அனைத்து மொழிகளிலும் – சிறுபான்மை, பெரும்பான்மை என அனைத்து மொழிகளிலும் – அந்த அலை பரவி பிரவஹித்தோடியது. தமிழில் இந்த அலையின் தாக்கம் இன்றளவிலும் தொடர்கிறது என்பதை இளம் வாசகர்கள் உணரலாம். இது முதல் கட்டம். இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்டமாக, பின் நவீனத்துவம் என்னும் அலை உலகெங்கிலும் – முக்கியமாக நவீன தமிழ் இலக்கியத்தளத்தில் ஒரு சூறாவளியாகச் சுழன்றடிக்க ஆரம்பித்தது. அந்தக் கட்டத்தில் தமிழ்ச் சூழலில் தோன்றிய பின்நவீனத்துவ விமர்சகர்கள், இந்தக்கோட்பாட்டை முன்வைத்து தமிழ் இலக்கிய தளத்தை பெரும் அதிகார மையமாக மாற்றினார்கள், அவர்களும் மாறினார்கள். அதிகாரத்திற்கு எதிராகத் தோன்றிய பின்நவீனத்துவ கோட்பாடு தமிழில் மட்டும் அதிகார மையமாக மாறிப்போனதுதான் பெரும் Irony!
கிளை வெட்டி வெட்டிப் பல்வேறு அலகுகளாய் பிரிந்த இந்த இலக்கியக் கோட்பாட்டை ‘குருடர்கள் பார்த்த யானை’ யாக முன்வைத்து, ஒவ்வொருவரும் சிலம்பமாடிக்கொண்டிருந்தனர். இன்றைக்கு இருப்பது போல, இணையத் துறை எதுவும் இல்லாத கையறு சூழல். பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் எழுதிய மூலக் கட்டுரைகளை, சிந்தனைகளை மொழியாக்கம் செய்து வெளியிடுவதில் பெரிதும் ஈடுபாடு காட்டாமல், பெயர் சொல்லியே அன்றைய சூழலை பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி அறியாமல், தெரியாமல், தமிழ் இலக்கிய உலகத்தில் செயல்படவே கூடாது என்கிற அழிச்சாட்டியம் நடந்தது. இந்தத் தாக்குதலில், பெரிதும் அடிபட்டுப்போன நபர் நானாகத்தான் இருக்க முடியும். இந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை எளிய முறையில் சொல்ல வேண்டும் என்னும் கருத்தில் பெரும் ஆவேசத்துடன், உன்னதம் இதழை ஆரம்பித்தேன்.
பின் நவீனத்துவம் குறித்து அதன் மூலக் கட்டுரைகளை மட்டுமே மொழியாக்கம் செய்து வெளியிடுவது, மற்றபடி, சொந்த சரக்கு வேண்டாம் என்று முடிவெடுத்தேன். பின்நவீனத்துவ மூலக்கட்டுரைகளைத் தேடி அலைந்த கட்டத்தில், டேவிட் லாட்ஜ் தொகுத்த, Twentieth Century Literary Criticism என்னும் நூலை தந்துதவினார் காலசுப்ரமணியம். அதிலுள்ள கட்டுரைகளை தக்க மொழிபெயர்ப்பாளர்களிடம் தந்து, ஒவ்வொன்றாக மொழியாக்கம் செய்து உன்னதத்தில் வெளியிட்டேன்.
மிஷேல் ஃபூக்கோ வின் – ‘What Is an Author? ‘, ரோலண்ட் பார்த் தின் ‘The Death of the Author ‘ போன்ற கட்டுரைகள் தமிழ்ச் சூழலில் பெரும் மாற்றத்தை உருவாக்கின. எதிர்வந்த காலங்களில், டேவிட் லாட்ஜின் முதல் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை ஒவ்வொன்றாக மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் மொழிபெயர்த்து முடித்தபோது எனக்குள் அவை ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கின. ஆம். ‘புதுவகை எழுத்து’ என்கிற ஒரு இலக்கியக் கோட்பாட்டை தமிழில் உருவாக்க முனைந்தேன். பின் நவீனத்துவக்கட்டுரைகள் தந்த சிந்தனை வெளிப்பாட்டிலும், மன உத்வேகத்திலும் இந்த சிந்தனை வேர் விட ஆரம்பித்தது. அந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை உள்வாங்கி அவைகளை வெட்டியும், ஒட்டியும் தமிழ்ச் சூழலின் தொன்மங்கள், சங்ககால சிந்தனைப்போக்குகள், தமிழின் நவீனத்துவம் நோக்கி நகர்ந்த நவீனப்போக்குகள் போன்றவைகளை முன்வைத்து ‘புதுவகை எழுத்து’ என்கிற சட்டகத்தில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். இந்தச் செய்கை, ஏற்கனவே வெந்து கொண்டிருந்த தமிழ் பின்நவீனத்துவ விமர்சகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
டேவிட் லாட்ஜின் முதல் தொகுப்பு முடிந்தபோது, கணிசமான கட்டுரைகள் சேர்ந்திருந்தன. இவைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால், இலக்கியக் கோட்பாடுகளின் ஆவணமாக மாறும் என்னும் மன ஓட்டம் எனக்குள் எழுந்தது. உலகம் முழுக்க இயங்கும் பின்நவீனத்துவ சிந்தனையாளர்களின் கட்டுரைகளை எல்லாம் தொகுத்து வெளியிட்டால் தமிழுக்கு பெரும் பொக்கிஷமாக இருக்கும் என்று இன்னும் விரிவான யோசனைகள் சேர்ந்து கொண்டன. இதுபோன்ற இலக்கியக் கோட்பாட்டுச் சிந்தனைகளின் துவக்கப் புள்ளிகளான, பெர்னாண் டி சசூர், லெவி ஸ்ட்ராஸ்.. லிருந்து, தெரிதா, லக்கான், தொட்டு.. தற்கால பின்நவீனத்துவ இளம் தலைமுறை ஹெரால்டு ப்ளூம், காயத்ரி ஸ்பீவக்.. என்று 50 கட்டுரைகளைக் கொண்ட 5 தொகுப்புகளாக வெளியிடலாம் என முடிவு செய்தேன்.
அதற்காக, மூலக்கட்டுரைகள் தேடி அலைந்தது குறித்து எழுதினால் பக்கங்கள் நீண்டுவிடும். டேவிட் லாட்ஜின் இரண்டாவது தொகுப்பு திருச்சியில் ஒருவரிடம் இருக்கிறது என்று அங்கு போய், அவர் கண்ணில் காட்டாமலேயே திருப்பி அனுப்பியது தனிக்கதை. மீண்டும் ஞாபகம் கொள்க : அந்தக்கட்டத்தில் இணையம் என்கிற துறையே இல்லை.
ஒரு வழியாக 50 கட்டுரைகளை மொழிபெயர்ப்பாளர்களிடம் தந்து மொழியாக்கம் செய்து வாங்கி விட்டேன். அத்தனை கட்டுரைகளையும் நானே கம்பியூட்டரில் தட்டச்சு செய்தேன். (அந்தக்காலத்தில் எழுத்தாளர்கள் காகிதத்தில்தான் எழுதித் தருவார்கள்) அதை பிரதி எடுத்து பிழைத்திருத்தம் செய்தேன். பிறகு படிக்கும்போது எந்தெந்த இடத்தில் நிரடுகிறதோ அந்த இடத்தை மூலக்கட்டுரையொடு ஒப்பு நோக்குவேன். இவ்வாறாக என் தலை, என் குருதியோட்டம், என் உணர்வுகள், சிந்தனைகள் என்று உடல் பொருள் உயிர் ஆவி முழுக்க அந்த எண்ணற்ற பின்நவீனத்துவச் சிந்தனைகள் ஒன்றறக் கலந்துபோயின.
அதற்குப் பிறகுதான் ஒரு பெரிய வன்மம் நடந்தது, இப்படி நான் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரிந்ததும், அதற்குரிய எதிர்வினைகள் மிகவும் மோசமாக, வஞ்சகமாக வெளிப்பட்டன.
மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர், “நான் உன்னதம் இதழுக்குத்தான் மொழிபெயர்த்துத் தந்தேன். ஆகவே, என் அனுமதி இல்லாமல் உங்கள் தொகுப்பில் வெளியிடக்கூடாது” என்றார். நான் திகைத்துப்போனேன். இதெல்லாம் கூட பரவாயில்லை. இதைவிடவும் பல்வேறு விஷயங்கள் நடந்தன. என்னை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை எழுதி வைத்திருக்கிறார் திருச்சி கானா பூனா என்பது தெரிந்ததும், ரயிலேறிப்போய் அதை வாங்கி வந்து அதற்காகவே ஒரு இதழ் ஆரம்பித்து அதை வெளியிட்ட பெருமாள் முருகன் என்பவரின் வன்மம், இப்படி ஒரு தொகுப்பு கையில் வைத்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து, தனது சாதிக்கார பதிப்பகத்துக்காரருக்கு செய்தி சொல்லி, சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தொலைபேசி செய்து அதை தாங்கள் வெளியிட ஆர்வமமாயிருப்பதாகவும், தங்களுக்கு அனுமதி வழங்குமாறும் ‘நற்காரியம்’ செய்த நபர்.. இப்படி இந்த தொகுப்பு வெளியீடு குறித்து எழுதினால் நீண்ட வரலாற்றுப் பதிவாக மாறிவிடும். ஆனால், க.பஞ்சாங்கம், என்னுடைய இந்தமுயற்சிகளைப் பார்த்துவிட்டு பெரும் ஆதரவு தந்தார் என்பதுவும், மற்றும், லதா ராமகிருஷ்ணன் பெருமளவில் என்னை உற்சாகப்படுத்தி, மொழிபெயர்ப்புகளை செய்து தந்தார் என்பதுவும் வரலாற்றுப் பதிவு.
அப்பொழுது, இலக்கிய நண்பர் துறையூர் சரவணன் சொன்னது : “இந்தத் தொகுப்பு நூல்கள் வெளியே வந்தால் நீங்கள் பெரும் இலக்கிய பீடமாக மாறிப்போவீர்கள் என்று எல்லோரும் வயிறு எரிகிறார்கள். இந்த நூல்கள் கொண்டு வருவதற்கான மனஉளைச்சலில், உங்கள் படைப்பு மனோபாவம் முடமாகிவிடும், இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு உங்கள் படைப்புகளை எழுதுங்கள், முக்கியமாக புதுவகை எழுத்து பற்றிய உங்கள் சிந்தனைகளை..”
இப்படி ஒரு தொகுப்பை கொண்டுவந்துதான் எனக்கான இலக்கிய அங்கீகாரத்தை அடைய வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை. மகத்தான சிந்தனையோட்டமும் படைப்புத்திறனும், என் குருதி ஓட்டத்திலேயே கலந்திருக்கிறது என்ற எண்ணம் எல்லையற்றுத் திமிர்த்தது.
அந்தக் கட்டுரைத் தொகுப்புகளை ஒதுக்கிவிட்டு என் படைப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
சந்தடி சாக்கில் இந்த சுய புராணத்தை இங்கே நான் சொல்வதாக என்ன வேண்டாம். விஷயம் இதுதான். உலகளவிலான பல்வேறு இலக்கியக் கோட்பாடுகளை தேடித்தேடிக் கற்றுத் தேர்ந்த என் அனுபவத்தில் “சொலிப்சிஸம்” என்கிற வார்த்தை கிராஸ் ஆகவேயில்லை.
பெரும் பதற்றத்துடன் அந்த பிரெஞ்சு நண்பரின் உரையாடலை முடித்துக் கொண்டு, தெட் ஹ்யூஸின் கவிதையைத் தேடிப் பிடித்தேன்.
கவிதை படிக்கப் படிக்க ஒரு பெரும் இயற்கை சார்ந்த காட்சியியல் பிரமிப்பை ஏற்படுத்தியது. இயற்கைக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் போராட்டம், ஒரு அழகியல் காட்சியின் உருவகமாக கண்முன்னால் எழுந்தது.
கவிதையையும், கவிதை பற்றி ஒரு சில விமர்சனங்களையும் நிதானமாகப் படித்தேன். இப்பொழுது எனக்குள் எழுந்த காட்சிகள் கலைந்து, குழப்பமாக விரிந்தன.
இதைப்பற்றிய தெளிவு வேண்டுமெனில், முதலில், சொலிப்சிஸம் என்றால் என்னவென்று பூரணமாக அறிய வேண்டும் என்று முடிவு செய்தேன். சொலிப்சிஸம் என்பது, பின் நவீனத்துவம் போல ஒரு இலக்கியக் கோட்பாடு என்பதை நான் அறிவேன். இன்னும் அதன் விரிவான அர்த்தபூர்வமான மையப்புள்ளியை உணரவேண்டும் என்று, விக்கிப்பீடியாவிலிருந்து, உலகப் புகழ்பெற்ற பல்வேறு அகராதிகள் முழுக்கத் தேடியெடுத்துப் பார்த்தேன்..
சொலிப்சிஸம் – solipsism இந்த வார்த்தை குறித்து சென்னைப் பல்கலைக் கழக அகராதி இப்படிப் பொருள் சொல்கிறது : “ஆன்ம மைய நித்தியவாதம், ஆன்மா ஒன்றே அறியத்தக்கதும் நிலைபேறுடையதும் ஆகும் என்னும் கோட்பாடு.” இப்படிப் பல்வேறு தளங்களில் தேடி பிடித்து, ஒருவிதமாக அது சுட்டும் மையப் புள்ளியை அடையாளம் கண்டேன்.
அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன் சுருக்கமாக, தத்துவம் குறித்தும் அதன் கூறுகளையும், ஒரு பறவைப் பார்வை பார்த்து விடலாம்.
உலகத்தில், பொதுவாக முன்வைக்கப்படும் எண்ணற்ற தத்துவப்போக்குகள், பல்வேறு பிரிவுகளாகவும், அலகுகளாகவும், தனித்தன்மை கொண்டவையாகவும், ஒன்றிலிருந்து பிரிந்து செழுமையடைந்ததாகவும்.. இப்படிப் பல்வேறு பார்வைகளை, வியாக்கியானங்களை, பரிமாணங்களை முன்வைத்தாலும், ஒரு விரிந்த பொதுப்படையான பார்வை நோக்கில், இந்தத் தத்துவக் கண்ணோட்டங்களையெல்லாம் இரண்டுவிதமான பிரிவுக்குள் அடக்கிவிடமுடியும் என்று சொல்லும் மார்க்ஸியப் பார்வையை – ஒரு வசதி கருதி, இந்த இடத்தில் முன்வைக்கலாம். 1.கருத்து முதல் வாதம் (Idealism), 2.பொருள் முதல் வாதம் (Materialism).
பொருள் முதல் வாதம் – இந்த உலகம் பொருட்களாலேயே ஆனது, வானுக்கு கீழே நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் பொருட்களுக்கிடையான செயற்பாடே என இந்தவாதம் எடுத்துரைக்கிறது. பொருள் மட்டுமே முதன்மையானது. மனம் அல்லது கருத்து இரண்டாம் படியானது. (லௌகீக வாழ்வியல் சார்ந்த பார்வையை இதில் பொருத்தலாம்.)
கருத்து முதல் வாதம் – பொருள்முதல் வாதத்திற்கு மாறாக, மனத்தின் விழிப்புணர்வு அல்லது சிந்தனையே முதன்மையானது என்கிறது இது. தத்துவக்கருத்துக்களில் முதன்மை பெற்று விளங்கிய கிரேக்கம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து உருவாக்கம் பெற்ற மெய்யியல் கோட்பாடு (தான் யார் என்பதை தேடிச் செல்லும் உண்மையைத்தேடும் ஞானத்தைத் தேடும் தத்துவம்), 19ஆம்- நூற்றாண்டின் துவக்கத்தில் பெருமளவு ஆதிக்கத்திலிருந்தது. இந்தியாவின் புத்த, சமண, மாயாவாதச் சிந்தனையாளர்கள், கிரேக்க பிளேட்டோயியவாதிகள் போன்றோர் மெய்மை வாதத்தின் மையமாக விளங்கும் கடவுட் தன்மையை, ஆன்ம மைய வாதங்களை முன்வைத்தனர். இந்த மரபில் ஐரோப்பிய தத்துவவியலாளரான இம்மானுவேல் காண்ட் – ன் பங்கு மிக முக்கியமானது. இன்றுவரையிலும் இவரது சிந்தனையானது, மேற்கத்திய சிந்தனைப்போக்குகள் மீது, புதிது புதிதான தாக்கத்தையும், செல்வாக்கையும் ஆழமாக ஏற்படுத்தி வருகிறது. அந்தக்கால கட்டத்தில், இந்த மெய்யியல் சிந்தனைகள் ஜெர்மானியத் தத்துவவியலாளரான ஹெகல் வரை உலகம் முழுக்க கிளை வெட்டி வெட்டி மறுமலர்ச்சி அடைந்தன.
நவீன தத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும், 17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு தத்துவஞானியான டெஸ்கார்த்தேவின் சிந்தனைகள், பிற்காலங்களில் பல்வேறு சிந்தனைப் போக்குகளுக்கு வித்திட்டது. இந்திய தத்துவங்களில் பேசப்படும் உடல் – பொருள் – உயிர் – ஆன்மா ஆகியவற்றை அவரது சிந்தனைப் பள்ளியின் ஒரு அலகு, முன்வைத்துச் செயல்பட்டது. இந்தச் சிந்தனைப்பள்ளியின் தாக்கம், சொலிப்சிஸத்திற்கு உண்டு.
இந்தச் சிந்தனைகளின் நீட்சியாக, மறுமலர்ச்சி கொண்டதாக கருத்து முதல் வாதத்தை ஒப்பலாம். நவீன கலை இலக்கியம் சார்ந்த பெரும்பாலான கலைஞர்களின் அடிப்படைக் கண்ணோட்டமாக இருப்பது கருத்து முதல் வாதம் தான். இது மேலும் செழுமைப்பட்டு, இந்த முதன்மையான தத்துவப் பார்வை மையத்திலிருந்து இரு துணை அலகுகள் – அகநிலை, புறநிலை என்று பிரிந்து, இந்தப் பார்வைகளை இன்னும் ஆழமான விரிவான கண்ணோட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன.
விஷயத்திற்கு வருவோம் : இந்த சொலிப்சிஸம், கருத்து முதல்வாதத்தின் மையத்தில் காலூன்றி ஒரு அழகியல் பூர்வமான இலக்கியக் கோட்பாடாக மாறுகிறது.
இது, தான் என்கிற சுயத்தன்மையைப் பற்றி மட்டுமே சிந்திப்பது, அதன் ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே முன்வைப்பது. வேறு எந்தவிதமான பரிமாணங்களையும், வேறு எந்த சிந்தனையையும் அறிவதற்கு அக்கறையற்றது, மேலும் சுயநலம் பற்றிய சிந்தனை மட்டுமே வியாபித்து, அதற்கேற்ப, சுற்றியுள்ள எல்லாவற்றையுமே தன் சுயத்துக்கேற்ப வளைத்து, தனக்குள் ஆட்கொள்வது… என்று ஒரு பரிமாணத்தில் விளங்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது இன்னும் இது குறித்து பூரணமாக உணர்ந்து கொள்ள வேண்டுமெனில் கவிதையை மொழியாக்கம் செய்வது என்று முடிவு செய்தேன்.
ஒரு வழியாக கவிதை மொழியாக்கம் முடிந்து, தமிழ் மொழியில் கட்டமைந்தபோது எனக்குள் ஓராயிரம் சூரியன்கள் ஒளிர்ந்தன. நல்லது இப்பொழுது கவிதைக்கு வருவோம் :
ஒரு கழுகு தனக்கான இரையை வேட்டையாடுகிறது. தன் கூரிய அலகால் இரையைக் கொத்திக் கிழிக்கிறது. இந்த வேட்டையாடும் தன்மையை மிக அழகியலான கவித்துவப் பார்வையில் கட்டமைக்கிறார் கவிஞர். ஆனால், அந்த அழகியலின் கூறு, ஒரு பிரம்மாணடமான சொலிப்சிஸத் தன்மையில் விரிகிறது.
‘தான் மட்டுமே இந்த உலகில் முக்கியமானவன், வேறு எதைப்பற்றியும் அக்கறையில்லை’. என்று தன் அக மன மையத்தை முன்வைக்கிறது கழுகு. “நான் விரும்பும் இடத்தில் நான் கொலை செய்கிறேன், ஏனென்றால் அந்த இரை என்னுடையது” என்கிற வரிகளில், கழுகு தன்னை மகிழ்விப்பதில் தனது முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறதாய் அமைகிறது கவிதை. மேலும், கொலை செய்யும்போது இன்பம் துய்க்கிறது. பூமிக்கு கீழ் இருப்பவை அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான இயல்பான உரிமை அதற்கு இருப்பது போல் அமைகிறது.
இன்னும் சற்று நுட்பமாக அவதானித்தால், இந்த கவிதை தன்னைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் ஒரு கழுகின் கண் பார்வையை வழங்குகிறது. கவிதை சொல்லி, ஒரு சுயம் கொண்டலையும் தனிமனிதனின் ஆழ்மனத் தோற்றத்தை, தனது ஒற்றைத் தனிமையில் நமக்குத் தருகிறார். கவிதை விவரிப்பின் வேகம் ஒற்றை நிலைத்தன்மையுடனும், உலகியல் வன்முறைச் செயல்பாட்டை அம்பலப்படுத்துவதன் மூலமும் குறிக்கப்படுகிறது. “கொத்திக் கிழிப்பதே என் தன்மை / மரணப்பாதை”. இப்படியான சொற்கள், ஒரு பாசிசவாதியாகவோ அல்லது பயங்கரமான இனப்படுகொலை சர்வாதிகாரியின் அடையாளமாகவோ பிரம்மாண்டம் அடைகிறது. “எனது உரிமை நிலைக்கு எந்த வாதங்களும் அவசியமில்லை” என்னும் வரி அப்பட்டமாக, எவரொருவரையும் கொல்ல எனக்கு உரிமையுள்ளது என்று அறைகூவல் விடுக்கிறது. மேலும் “என் கண் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை.” என்றால், நான் ஏதொன்றையும் பார்க்கவோ, சிந்திக்கவோ தயாரில்லை என்று முடிந்த முடிவாய் கிரீச்சிடுகிறது. கவிதை அடிப்படையில் இரை தேடும் பறவையின் ஆக்ரோஷத்தன்மையின் வெளிப்பாடாக இருந்தாலும், எளிய மக்களை வேட்டையாடும் சக்தியாக, பாசிஸ்டுகளுடன் ஒப்பிடுவதாக உருமாறுகிறது.
இரை குறித்த எந்தவிதமான பார்வையுமில்லாமல், கழுகின் பிரம்மாண்டம், அதன் அழகியல் குறித்து மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கவிதை சொலிப்சிஸத்திற்கு அழகான சான்று.
இலக்கிய விமர்சனக் கோட்பாட்டு தளத்தில் இயங்கும் இதன் தமிழ்ப் பதமாக, ‘ஆன்ம மைய நித்தியவாதம்’ என்று சென்னைப் பல்கலைக் கழக அகராதி சுட்டுவதை, நாம், “அக மைய நித்தியவாதம்” என்று இனங்காணலாம்.
ஒடுக்கப்படும் அபலையின் குரல் என்பது சற்றும் முக்கியமில்லை என்று கவிதையின் தார்மிகத்தை காடாசித் தள்ளும் இந்தக் கவிதையின் மொழி, ஆணவமும் உக்கிரமும் நிறைந்ததாய் அமைந்துள்ளது. உலகில் எந்த மாற்றத்தையும் விரும்பாத, ஒரு மரத்தின் மிக உயர்ந்த கிளையில் கண்களை மூடிக்கொண்டுஅமர்ந்துள்ளது கழுகு. அதாவது, உயர்ந்தவராக இருப்பது என்பது ஒரு ஆதிக்கக் கண்ணோட்டம். அதனுடைய திண்மையான எலும்புகள் வழியாக அது ஒரு மரணப்பாதையை முன்வைக்கிறது. திண்மை என்பதை, வலிமை,உறுதி, கலங்காநிலைமை, உயர்வு என்று குறிக்கலாம். ஆக உயர் தன்மை கொண்ட கழுகு, அனைவருக்கும் எஜமானராகிறது. அதுமட்டுமல்லாது, கழுகு தன்னை படைப்பின் மையமாகக் காண்கிறது, தனது காலால் படைப்பை ஆளுகிறதாக சிருஷ்டிக்கிறார் கவிஞர். ஏகாதிபத்திய அணுகுமுறைக்கும் எளிய வாழ்வியல் இயல்புக்கும் இடையில் ஒரு அழகியலை நிறுவுகிறார். அது தன்னையே மையமாக கொண்டுள்ள, தான் மட்டுமே முக்கியம், தனக்காகவே – தன் பயன்பாட்டுக்காகவே அனைத்தும் படைக்கப்பட்டவை, அவைகளைக் கொல்லவும் அடிமைப்படுத்தவும் தனக்கு பூரண உரிமை உண்டு என்பது போன்ற மனநிலை கொண்ட அக மைய நித்தியவாதம் இதுதான்.
ஆனால், தான் அப்படியான பார்வையில் எழுதவில்லை என்று மறுக்கும் ஹியூஸ், “அந்தக் கவிதை வன்முறையைப் பற்றியது அல்ல, ஓயாது மலரும் இயற்கையின் ஆன்ம தரிசனம்; பறவையின் அற்புதமான உயிர்ச்சக்தியிலிருந்து வெளிப்படும் ஒரு வாழ்வியல் தனிமத்தைப் பிரதிபலிக்கும் அழகியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளது..” என்கிறார்.
இறுதியாக, ஒரு நல்ல அற்புதமான விஷயம் நடந்திருக்கிறது, மிக மிக அற்புதமான கவிதை ஒன்று நவீன தமிழுக்குக் கிடைத்திருக்கிறது, மேலும், அக மைய நித்தியவாதம் என்னும் இலக்கியக் கோட்பாட்டின் அபூர்வமான அறிமுகமும்.
ஒரு பெரும் மனத் திருப்தியோடு இந்தக் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறேன் : செம்மொழி மரபில் கால் பதித்து வரும் தமிழ் மொழியின் நவீன தளத்திற்கு ஒரு புதிய இலக்கியக் கோட்பாட்டை அடையாளப்படுத்திய அந்த பிரெஞ்சு நண்பருக்கு இந்தக் கட்டுரையைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
************
தெட் ஹ்யூஸின் கவிதை :
கழுகின் வாழ்நிலை
– தெட் ஹியூஸ்
தமிழில் : கௌதம சித்தார்த்தன்
நான் மரத்தின் உச்சியில் அமர்ந்துள்ளேன், கண்களை மூடியவாறு.
தியானித்த தன்மையில், தேவையற்ற கனவேதும் இல்லை
கொக்கியின் கூரிய அலகிலிருந்து கொக்கி விரல்கள் வரை:
மூளை ஒரு சரியான வேட்டையை ஈர்க்கிறது.
உயர்ந்த மரங்களில் இந்நிலை மிகவும் வசதியானது!
காற்றின் மிதப்பு மற்றும் சூரியக் கதிர்கள்
எல்லாம் எனக்குச் சாதகமானது; பூமியின் முகம்
என்னிடம் திரும்பியது – நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் கால் நகங்கள் கரடுமுரடான மரப் பட்டைகளுக்கேற்ப உள்ளன.
இது முழுமையான படைப்பின் சூல் திறன்.
என் நகங்களையும் ஒவ்வொரு இறகையும் உருவாக்கும் திறன்
என் காலில் வைத்திருக்கிறேன் இப்போது அந்த சிருஷ்டிப்பை.
மேலே பறந்து திசையெங்கும் மெதுவாகச் சுழலுகிறேன்
நான் விரும்பும் இடத்தில் கொலை செய்கிறேன், ஏனென்றால் எல்லாம் என்னுடையது.
என் உடலில் ஏமாற்று வாதம் இல்லை:
கூறிய அலகால் கொத்திக் கிழிப்பதே என் தன்மை.
மரணத்தைப் பகிரும்
எனது பயணப் பாதை ஒரே நேரடியானது
திண்மையான எலும்புகள் வழியாக.
எனது உரிமை நிலைக்கு எந்த வாதங்களும் அவசியமில்லை
சூரியன் எனக்குப் பின்னால் இருக்கிறான்.
நான் தோன்றியதிலிருந்து எதுவும் மாறவில்லை.
என் கண் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை.
எல்லாவற்றையும் அப்படியே தொடர்ந்து வைத்திருக்க விரும்புகிறேன்.
*******