• Thu. Sep 21st, 2023

இஸபெல் அலெண்டே உடன் ஒரு நேர்காணல்

ByGouthama Siddarthan

Jul 25, 2022
  • நேர்காணல் : கௌதம சித்தார்த்தன்
  • தமிழாக்கம் : பாஸ்கர்

 

இஸபெல் அலெண்டே, லத்தீன் அமெரிக்க இலக்கிய தளத்தில் பெரும் எழுச்சி அலை உலகம் முழுக்க பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் செயல்பட்ட மாபெரும் இலக்கிய ஆளுமை ஆவார். மற்றும் சிலி நாட்டு ஜனாதிபதி சால்வடார் அலெண்டேயின் மருமகள். அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. வின் ஆதரவுடன் சிலியில் 1973ல் நடந்த ராணுவப் புரட்சியின் விளைவாக சிலியின் அதிபர் சால்வடார் அலெண்டெ பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிறகு இஸபெல் அலெண்டெ தலைமறைவாகிப் போனார். பிறகு, 1982 -ல், The House of the Spirites, என்கிற படைப்பின் வழியாக இலக்கியத்தில் அவருடைய வருகை நிகழ்ந்தது. அது வரலாறும், தொன்மமும் ஊடாடும் வீரகாவியக் குடும்பக் கதை. ஒரு பத்திரிக்கையாளராகப் பயணம் செய்து Of Love and Shadows, Eva Luna, Of Love and Shadows, Eva Luna மற்றும் The Stories of Eva Luna முதலிய தனது எழுத்தாக்கங்களைப் படைத்தார். இன்று மிகவும் பரவலாக வாசிக்கப்படும் ஹிஸ்பானியப் பெண்ணிய எழுத்தாளர்.

1999 -ல் Daughter of Fortune என்கிற அவருடைய படைப்பு, ஒரு சிலியப் பெண் கலிஃபோர்னிய தங்க வேட்டையினூடாகப் பயணமாகி முதிர்ச்சியடைந்த பெண்ணாய் மீண்டு வருவதைக் கூறுகிறது; கவித்துவம் கூடிய நகைச்சுவையோடும், நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட மர்மம் மற்றும் சமூகம் பற்றிய பார்வை முதலியவற்றின் உதவியுடன் தனது நாவல்களில் தனிநபர்சார்ந்த மற்றும் வரலாற்று ரீதியான தொன்மங்களையும், ஞாபகங்களையும் மறு கட்டமைக்கவும், வெளிச்சமூட்டவும் முயல்கிறார். அவருடைய பாத்திரங்களெல்லாம் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கருணையின் மூலம் மீட்சிக்கும், விமோசனத்திற்குமான உத்தரவாதத்தைத் தாங்கியவர்களாக இருக்கின்றனர்.

சொந்த நாட்டை விட்டு வெளியேறி அவர் வாழ்ந்து கொண்டிருப்பது, லத்தீன் அமெரிக்க வரலாறு முழுவதும் காணப்படும் அவலமான நடப்புண்மையாய், அவரையும், அவரது குழந்தைகளையும் வலுக்கட்டாயமாய் வேரிலிருந்து பிடுங்கிப் போட்டுவிட்ட போதும் கூட தனது எழுத்துச் செயல்பாட்டில் பன்மடங்கு வீரியமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர் பெரிதும் நாவல் வகைமைகளில் மட்டுமே கவனம் செலுத்தியவர். PAULA என்கிற நாவல் உலகம் முழுக்க உள்ள இலக்கிய வாசகனின் நூலகத்தில் தவறாது இடம் பெற்றிருக்கும். Latin American Boom இலக்கியத்தின் கடைக் கொழுந்து இஸபெல் அலெண்டே என்று சொல்லலாம். சமீபத்தில் அவரது புதிய நூல் “In the Midst of Winter” வெளிவந்திருக்கிறது.

புதிய நூலின் பரபரப்பில் இருந்த அவரிடம் தொடர்புகொண்டு உங்களது நேர்காணல் வேண்டும் என்று அணுகியபோது, தான் ‘தனது புதிய நூல் அறிமுகம் பற்றிய சர்வதேசப்பயணங்களில் இருப்பதாக’ தயங்கினாலும் தமிழ் வாசகர்களின் லத்தீன் அமெரிக்க இலக்கியம் மீதான எனது ஈடுபாட்டை விவரித்தபோது ஆர்வத்துடன் ‘கேள்விகளை அனுப்புங்கள்’ என்றார்.

அனுப்பி வைத்த 6 மணிநேரத்தில் பதில்கள் வந்து சேர்ந்தன.

மின்னஞ்சல் மூலமாக இந்த நேர்காணல்  எடுக்கப்பட்டது. நாள்: வியாழக்கிழமை, செப்டம்பர் 28, 2017

இந்த நேர்காணல், தமிழ் இலக்கிய தளத்தில் செயள்படும் பத்திரிகைகளில் வெளியிட பெரும் முயற்சியும், பல தடைகளும் எதிர்கொண்டது. பெரும் போராட்டத்திற்குப் பின், தமிழ் இந்து நாளிதழில் – ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு – மார்ச் 4. 2018 அன்று வெளியாகியது.

 

****

லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சி (Latin American Boom) முன்வைத்த இலக்கிய போக்கு பின்நவீனத்துவக் கோட்பாடுகளிலிருந்து தோன்றியதா? அல்லது லத்தீன் அமெரிக்க நிலத்திற்கே உரிய சுயமான பார்வையா?

லத்தீன் அமெரிக்க இலக்கிய எழுச்சியின் முன்னோடி க்யூபாவின் அலெஜோ கார்பெண்டியராக (Alejo Carpentier ) இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் தன் வாழ்வின் பகுதி காலம் பிரான்சில் வாழ்ந்திருந்தார். அங்கு அவர் சர்ரியலிஸ்டுகள் சிலருடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். சாதாரண விஷயங்களை இணைத்து அசாத்தியமான நிகழ்வுகளை உருவாக்கும் இயக்கம் அது. உதாரணமாக, உடலைக் கூறு போட்டு ஆய்வு செய்யும் மேசையில் ஒரு தையல் இயந்திரமும் குடையும் இருக்கலாம். லத்தீன் அமெரிக்காவில் இது போல் இணைக்க வேண்டிய அவசியமில்லை, அவை ஏற்கனவே பிணைந்திருக்கின்றன என்றார் கார்பெண்டியர். ஐரோப்பிய அழகியலுக்குக் கட்டுப்படாமல் லத்தீன் அமெரிக்க நிதர்சனத்தைச் சொல்வதற்குரிய மொழியையும் பாணியையும் கண்டறிவதே சவாலாக இருந்தது. இப்படித்தான் மாய யதார்த்தம் உருவானது. அதன் சிறந்த பிரதிநிதி, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், அவரது “ஒரு நூற்றாண்டு தனிமை வாசம்” நாவல். எங்களுக்கு அது சர்ரியலிசமாக இருக்கவில்லை. பேதலிப்புக்கு ஆட்பட்ட எங்கள் நிதர்சனத்தை அது விவரித்தது.

 

உங்களுடைய புதிய நூல் எதை முன்வைத்துப் பேசுகிறது என்று சொல்லலாமா?

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூயார்க் மாகாணத்தில் வீசும் கடுமையான பனிப்புயல் என் புதிய நாவலின் களமாய் அமைந்துள்ளது. ப்ரூக்லினில் உள்ள ஒரு ப்ரௌன்ஸ்டோன் ஹவுஸில் கதை துவங்குகிறது. அது நியூ யார்க் பல்கலையில் உள்ள ஒரு பேராசிரியருக்குச் சொந்தமானது. அந்த வீட்டின் பேஸ்மெண்ட்டில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் சிலேயின் எழுத்தாளர் ஒருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர் பல்கலையில் சிறிது காலம் பணியாற்ற வந்தவர். வாழ்வா சாவா என்ற ஒரு நெருக்கடியான சூழலில் உள்ள ஒரு க்வாதமாலா தேசத்தின் பெண் ஒருத்தி பனிப்புயல் வீசும் அந்த இரவுப் பொழுதில், அவர்களிடம் உதவி கேட்டு வருகிறாள். அவள் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அங்கு குடியேறி வசிப்பவள். பேராசிரியரும் எழுத்தாளரும் காவல் துறையினரை அழைப்பதோடு நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு உதவ முடிவு செய்கிறார்கள். அப்போது, அவர்கள் வாழ்வை மாற்றும் சாகசம் துவங்குகிறது.

ஆல்பர்ட் காம்யூவின் மேற்கோள் ஒன்று இந்தக் கதையின் சாரமாய் உள்ளது: குளிர்காலத்தின் மத்தியில் நான் வெற்றி கொள்ளவியலாத கோடையை என்னுள் கண்டேன். நாம் அனைவரும் எதிர்கொண்டாக வேண்டிய அந்த நீண்ட உறைபருவத்தில் என் பாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது, நம் உணர்வுகள் துவண்டிருக்கும் காலம். அது, முடிவே இல்லாமல் தொடரும் போல் தோன்றுகிறது. நம் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைகின்றன. அன்றாட பழக்கவழக்கங்களில் நாம் சிறைப்பட்டிருக்கிறோம். சலிப்பும் மன அழுத்தமும் நம் உள்ளத்தில் கவிந்திருக்கின்றன. திறந்த இதயத்தோடு ஆபத்துகளை எதிர்கொள்ள முடிவெடுக்கும்போது, நம் அனைவருக்குள்ளும் உள்ள “வெற்றி கொள்ளவியலாத கோடையை” அவர்களும் தம்முள் கண்டடைகின்றனர். ஆன்மாவின் கோடை எப்போதும் நம்முள் உள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நாம் அனுமதித்தால் போதும்.

 

நீங்கள் அரசு அதிகாரம் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் செயல்படும் எழுத்துச் செயல்பாடுகள் அதிகாரத்தைத் திறப்பதற்கான நிலையா? அதிகாரத்தை அடைவதற்கான யத்தனிப்பா?

என் எழுத்துக்கு அரசியலோடு எந்த தொடர்பும் இல்லை. என் கஸின் ஒருவர், இஸபெல் அலண்டே புஸ்ஸி (Isabel Allende Bussi ) சிலேயில் செனட்டராக இருக்கிறார். என்னையும் அவரையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள். நான் அரசியலில் பங்கேற்றதேயில்லை. அந்த மாதிரியான அதிகாரத்தில் எனக்கு ஆர்வமில்லை. என்றாலும், என் புத்தகங்களில் சமூக, அரசியல் பிரச்சினைகள் தொடர்ந்து எழுகின்றன. ஏனென்றால் இவை நம் யதார்த்தத்தின் உறுப்புகள், பாத்திரங்களின் விதியை பல சமயம் இவையே தீர்மானிக்கின்றன.

 

எங்கள் தமிழ் மொழி பெண்ணுக்கு முக்கியத்துவம் தருவது. தாய்வழிச் சமூகம் கொண்டது இந்தப் பார்வையில் இந்தக் கேள்வியை கேட்கிறேன்: மேஜிக்கல் ரியலிசம் என்கிற கதைச்சொல்முறை பெண்ணிடமிருந்துதான் பிறக்கிறதா?

நான் முன்னரே குறிப்பிட்டது போல், மாய யதார்த்தம் என்ற இலக்கிய மரபு ஐரோப்பிய சர்ரியலிஸ்ட்டுகளின் தாக்கத்தில் உருவானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். என்றாலும், கார்ஸியா மார்க்வெஸ் அடிக்கடி சொன்னது போல், அவர் எழுதிய அந்த அற்புதமான நாவல் அவரது பாட்டி பேசிய மொழியில் எழுதப்பட்டது. அதிலுள்ள பல கதைகளும் பாத்திரங்களும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவை. ‘The House of the Spirits’ என்ற என் முதல் நாவலும் அப்படித்தான். அது என் குடும்பத்தை அடிப்படையாய்க் கொண்டதுதான். அதிலும் குறிப்பாக, புத்தகத்தில் கிளாரா டெல் வால்லாக (Clara Del Valle) உள்ள என் பாட்டி. லத்தீன் அமெரிக்காவுக்கு மாய யதார்த்தம் இயல்பாய்ப் பொருந்தி வருகிறது. ரகசியம் எங்களைச் சூழ்ந்துள்ளது என்ற உணர்வு எங்களுக்கு உண்டு. அசாதாரணமானவற்றை விளக்க முற்படாமல் அவ்வாறே ஏற்றுக் கொள்கிறோம். தமிழிலும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட நோக்கு பார்வை பெண்மைக்கு மட்டும் உரியதல்ல, பல ஆண்களும் இவ்வாறுதான் உள்ளனர்.

 

லத்தின் அமெரிக்க இலக்கியம் உருவாக்கிய மேஜிக்கல் ரியலிசம் என்னும் உங்கள் கதைச் சொல்முறையில் பெண்ணுக்கான (அதாவது பெண் தன்மைக்கான) இடம் எது?

மாய யதார்த்தத்தை தன் தனிச்சிறப்பாய்க் கொண்ட லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் எழுச்சி, ஆண்களால் மட்டும் நிகழ்த்தப்பட்ட ஒன்று. எழுச்சி காலகட்டத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் பெண்கள் ஒருவரும் இல்லை. அந்த நாவல்களில் பெண்கள் வழமையான தாய், மனைவி, வேசி வேடங்கள் தரித்திருந்தனர். அந்த ஆண் எழுத்தாளர்களில் வெகு சிலரே தேய்வழக்காய் இல்லாத, நினைவில் நிற்கக்கூடிய, நம்பத்தகுந்த பெண் பாத்திரங்களைப் படைத்தனர். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே பெண்கள் லத்தீன் அமெரிக்காவில் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எழுச்சியில் ஒருவராய் அங்கீகரிக்கப்படவேயில்லை என்றாலும் அறுபதுகள் முதல் எண்பதுகள் வரை நிலவிய எழுச்சி காலகட்டத்திலும் அவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள், இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருபோதும் ஆண்கள் அளவு பெண்களுக்கு வாய்ப்பதில்லை என்றாலும், நல்ல வேளை, பெண்கள் இப்போது பதிப்பிக்கப்பட்டு, விமரிசிக்கப்பட்டு, மதிக்கப்படுகின்றனர்.

 

நீங்கள் ஒரு நேர்காணலில், ‘நான் எழுத்தை திட்டமிட்டு எழுதுவதில்லை அதுவாகவே எழுதிக் கொள்கிறது” என்று சொல்லியுள்ளீர்கள். அப்படியானால், இந்தக்கருத்தை Autofiction என்னும் எழுத்துமுறை பற்றிய பிரக்ஞயோடு சொல்கிறீர்களா? உங்களது மொழியின் தனித்துவம் கொண்ட மேஜிக்கல் ரியலிச எழுத்துமுறையிலிருந்து இது நேர்மாறானதல்லவா?

நான் எந்த முன்திட்டமும் இல்லாமல், பாத்திரங்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதித்து, கதை தன் போக்கில் போகட்டும் என்று நினைத்து எழுத முயற்சிக்கிறேன். “என் பாணி” என்று வைத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு கதையும் தனக்கென்றே சொல்லக்கூடிய பாணி கொண்டது, என் எழுத்தில் எந்த ஃபார்முலாவும் கிடையாது. என் புத்தகங்கள் அத்தனைக்கும் சுவை கூட்ட நான் மாய யதார்த்தத்தை உப்பு காரம் போல் பயன்படுத்துவதில்லை. கதையுடன் தொடர்புள்ளபோது மட்டுமே அதைப் பயன்படுத்துகிறேன். புனைவு நம்பத்தகுந்ததாய் இருக்க வேண்டும்.

 

சமகால லத்தீன் அமெரிக்க இலக்கியப் போக்கு குறித்து உங்களது பார்வை என்ன?

எழுச்சி முடிந்து விட்டது. லத்தீன் அமெரிக்க எழுத்தில் வாசகர்களுக்கு இருந்த ஆர்வம் விலகி விட்டது. ஆனால் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களில் பலர் பெண்கள். தம் இலக்கிய முன்னோடிகள் அளவுக்கு இவர்களும் சிறந்தவர்கள்தாம்.

 

*******

Leave a Reply

Your email address will not be published.

You cannot copy content of this page